Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இலை உதிர்வது போல் நாம் சாகக் கூடாதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலை உதிர்வது போல் நாம் சாகக் கூடாதா?

அபிலாஷ்

death.jpg

ஜூலை 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் கருணைக்கொலையை சட்டபூர்வமாய் ஏற்கும் விதியை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க அரசாங்கத்தை கேட்டது. இதை ஒட்டி ஒரு கருணைக்கொலை தேவையா என்கிற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. தூக்குத்தண்டனை விவாதத்தை இது மிகவும் நினைவுபடுத்துகிறது. ஏனெனில் கருணைக்கொலை ஆதரவாளர்களின் வாதங்கள் கிட்டத்தட்ட அதே வகையானவை. இன்று நம்மிடம் பரவி வரும் ஒரு எதிர்-வாழ்க்கை, பாஸிச, கேளிக்கை மனநிலை நோயுற்றவர்களையும், குறைபாடனவர்களையும் சகிக்க முடியாத மனநிலைக்கு இவர்களை தள்ளி விட்டது. வாழ்க்கையை ராட்சத ராட்டினத்தில் கூவியபடி பயணிக்கும் ஒன்று மட்டுமேயாக நாம் ஒற்றைபட்டையாய் நம்ப துவங்கி இருக்கிறோம். விளைவாக நிறைய படித்தவர்கள் எந்த ஈரமும் இன்றி கூசாமல் ஒருவரை கொல்லுவது பற்றி புறநிலையாக, வறட்டு தர்க்கத்துடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று வாழ்க்கை பற்றியும் மரணம் பற்றியும் வேகமாய் பரவி வரும் மேலோட்டமான நம்பிக்கைகள் கருணைக்கொலை விசயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே ஒரு ஆபத்தான சிவில் சமூகமாக நாம் மாறி வருவதை காட்டுகிறது.

மனவளர்ச்சி குன்றின தன் குழந்தையை பார்த்துக் கொள்ள வசதி இல்லை என்றும், அவரை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு அம்மா தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கிறார். என் நினைவில் முன்பு கருணைக்கொலைப் பேச்சு மீடியாவில் எழுந்த போதும் ஒருமுறை அவர் இதே போல் கோரினார். அவருடையது உண்மையில் தன் மகளை வளர்ப்பதற்கான உதவிக்காக சமூக மனசாட்சி நோக்கி விடுக்கப்பட்ட ஒரு வேண்டுதல். இமாச்சலத்தை சேர்ந்த ஒரு பெண் பல வருடங்களாய் முட்டி அழற்சியால் அவதிப்படுகிறார். அவரால் நடக்க இயலவில்லை. அவர் தன்னைக் கருணைக்கொலை செய்யும் படி வேண்டுகிறார். இது போல் ஆயிரக்கணக்கான கோரிக்கைகள் அரசாங்க மேஜைகளில் குவிகின்றன. இவர்கள் வலியை, ஊனம் மற்றும் நோய்கள் ஏற்படுத்தும் செயலின்மை மற்றும் பணச்செலவை தாங்க இயலாமல் மரணத்தை கோருகிறார்கள். ஆனால் இவர்களும் மரணத்தை நெருங்கும் இறுதி நொடிகளில் தாம் நினைத்தது போல் மரணம் உண்மையில் ஒரு இனிப்பு மருந்தல்ல என புரிந்து கொள்வார்கள்.

மூன்றாவதாய் ஒரு தரப்பு உள்ளது. இது தீரா வியாதிகளால் துவண்டு போன நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் சேர்ந்து உருவாகும் கூட்டணி. இது ஆபத்தான தரப்பு. இவர்கள் தாம் கருணைக்கொலையை மிக அதிகமாய் வலியுறுத்துபவர்கள். அதற்காக விநோதமான குதர்க்கமான காரணங்களை கூறுபவர்கள். தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறவர்களை கொன்று விடலாம் என கூறுபவர்கள். இக்கூற்றை முதலில் ஆய்வோம்.

ஒருவர் மிகக்கடுமையான வலியால் துடிக்கும் போது அவரை விட பார்க்கிற நமக்கே இவர் பேசாமல் செத்துப் போகட்டுமே எனத் தோன்றும். அவரும் கூட தன்னைக் கொல்லும்படி கேட்கலாம். ஆனால் இதன் பின்னால் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அது வாழ்வு என்பது வலியற்றது, ஆரோக்கியமானது என்பது. இந்த நூற்றாண்டில் மருந்துத் துறையின் கவனம் முழுக்க வலிநிவாரண மருந்துகளில் இருக்கிறது. இத்துறை மிக விரிவாக ஆய்வுக்குள்ளாகி வலி மேலாண்மை பற்றி பல நூல்கள் வெளியாகின்றன. நோயாளிகள் மருத்துவர்களிடம் இறைஞ்சுவது உடனடியாக இந்த வலியை போக்குங்கள் என்று தான். வலியில் இருந்து தப்பிக்க எவ்வளவு செலவழிக்கவும் எப்படியான சிகிச்சைகள் மேற்கொள்ளவும் நாம் இன்று தயாராகி விட்டோம்.

முன்பு நாம் இந்த வலிகளை பொறுத்து சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதை மறந்து விடுகிறோம். இன்று ஒருவித மேலோட்டமான கேளிக்கை கலாச்சாரம் உலகம் முழுக்க பரவுகிறது. இது சிறந்த வாழ்க்கை என்பது முடிவற்ற கேளிக்கை, புலன் நுகர்ச்சி, நீடித்த இளமை என நம்மை நம்ப வைக்கிறது. விளைவாக இம்மூன்று துறைகளும் – கேளிக்கை துறை, வயதை நீட்டிப்பதற்கான சிகிச்சைகள், அழகுசாதன பொருட்கள், அழகு சிகிச்சைகள் துறை, மற்றும் வலி மேலாண்மை துறை– பெரிதாய் வளர்ந்துள்ளன. இதன் ஒரு கிளைத்துறை தான் வலியை மறைத்து, நோய்க்குறிகளை ஒத்திப் போடும் மருத்துவத் துறை. இன்று நோயை நிரந்தரமாய் தீர்க்கும் ஆர்வமும், அதற்கான ஆய்வுகளும் பெருமளவில் குறைந்து விட்டன. நமது மருத்துவத் துறை பதிலுக்கு அப்பழுக்கற்ற வாழ்க்கை தரமான வாழ்க்கை எனும் போலி பிரச்சாரத்தை மேற்கொள்ளுகிறது.

உடல் பல்வேறு கோளாறுகளுடன் நீண்ட காலம் இயங்கும் ஒரு அபாரமான எந்திரம். பெரும்பாலான மோசமான மருத்துவர்கள் தம்மிடம் வருபவர்களின் சின்ன சின்ன கோளாறுகளை கண்டுபிடித்து அவற்றை உடனடியாய் தீர்ப்பதற்கு மருந்தும், சிகிச்சையும் பரிந்துரைப்பவர்கள். தயங்கினாலும் உங்களை அச்சுறுத்தி ஏற்க வைப்பார்கள். எனக்கு சமீபமாக பல்லுக்குள் உணவுப்பொருள் நுழைந்து வீங்கி விட்டது. மருத்துவர் நான் உடனடியாய் பத்தாயிரம் ரூபாய்க்கு பல்லை எலும்போடு வெட்டிக் கொள்ள வேண்டும் என அடம்பிடித்தார். இல்லாவிட்டால் அடிக்கடி இது போல் ஆகும் என்றார். நான் பரவாயில்லை, எவ்வளவோ கோளாறுகளுடன் இருக்கிறேன், இதையும் சகித்துக் கொள்கிறேன் என்று விட்டு வந்தேன். பல மருத்துவர்களிடம் இப்படியான மனப்பான்மை இன்று வந்து விட்டது. நம் உடம்பை முழுக்க முறுக்கி திருகி கச்சிதமாக்க வேண்டும் என துடிக்கிறார்கள். இன்னொரு புறம், தம் வாழ்நாள் முழுக்க எந்த மருத்துவரையும் பார்க்காமல் வாழ்ந்த ஆட்களை என் ஊரில் பார்த்திருக்கிறேன். ஆனால் நாம் இன்று தினமும் ஓட்டலுக்கு போவது போல் ஆஸ்பத்திரிக்கு போய்க் கொண்டிருக்கிறோம். இதனால் நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டதாய் எண்ணுகிறோம். அது ஒரு மாயத்தோற்றம். நம் வாழ்க்கை நீண்டிருக்கிறது. ஆனால் அதனாலே நாம் திருப்தியாய் மகிழ்ச்சியாய் இல்லை. நோய், வயோதிகம் மற்றும் வலி குறித்த பயம் நம்மை இன்னும் கடுமையான நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது. நோயும், அது தரும் துக்கங்களும் இன்றி நம் வாழ்க்கை இன்று அதன் ஆழத்தையும் அர்த்த்தையும் இழந்து விட்டது என்று கூட கூறலாம்.

வாழ்க்கையை மகிழ்ச்சி – துயரம், நல்லது – கெட்டது என எதிரிடையாய் பார்க்கும் மனோபாவம் ஐரோப்பிய பண்பாட்டில் இருந்து தான் வருகிறது. அங்கிருந்து தான் மேற்சொன்ன பயமும், அதன் ஒரு தீவிர நிலையான கருணைக்கொலை கோரிக்கைகளும் உருவாகின்றன. ஐரோப்பியன் மரணத்தை ஒரு தண்டனையாக பார்க்கலாம். அவன் அத்தண்டனையை எப்படி தள்ளிப் போடலாம் அல்லது தப்பிக்கலாம் என நினைக்கலாம். ஆனால் கீழைத்தேய பண்பாடுகள் வலியை, நோய்மை, மரணத்திற்கான காத்திருப்பை வாழ்வின் ஒரு பகுதியாகவே பார்த்தன. ஒரு இலை தளிராக தோன்றி, வளர்ந்து, சூரியனை நோக்கி முகம் விகாசித்து, மெல்ல மஞ்சளித்து, சிவப்பாகி கனிந்து, உலர்ந்து, உதிர வேண்டும். இலை இலையாகவே இருப்பது அல்ல வாழ்க்கை. மஞ்சளித்த இலைக்கு பச்சையம் பூசி பாசாங்கு காட்டுவதும் அல்ல. இலை பச்சையாக ஜொலிப்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவு அது பழுத்து காய்வதும் முக்கியம். வயோதிகமும் நோய்மையும் வலிகளும் நமக்கு கற்றுத் தருகிற உண்மைகள் தனியானவை. வலியும் துன்பமும் வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாய் ஆழம் கொண்டதாக்குகின்றன. அதனால் தான் கீழைத்தேய பண்பாடு ஐம்பது வயதுக்கு பின்னான காலத்தில் நாம் செய்ய வேண்டியதை வகுத்தது. வாழ்க்கையை கவனிப்பது, கடந்து போகிற நிலைகளுடன் ஒழுகிப் போவது, நோய்மையில் கனிந்த புரிதலுடன் அல்லது ஞானத்துடன் மரணத்தை நோக்கி ஒவ்வொரு காலடியாய் வைப்பது என.

நோய்மை வாழ்க்கையை எவ்வளவு ஆழமுள்ளதாக ஆக்குகிறது என்பதை சித்தரித்த நாவல் “முள்”. அந்நாவலின் நாயகிக்கு சிறுவயது குஷ்டம் வர ஒரு விடுதியில் தங்கி சிகிச்சை எடுக்கிறாள். அவளது இளமைக்காலம் இப்படி வலியில், அதற்கான சிகிச்சையில், சமூகத்திடம் இருந்து ஒடுங்கின தனிமையில் கழிகிறது. ஒரு மருத்துவரிடம் கேட்டால் அவளது தரமற்ற வாழ்க்கை என்பார். ஆனால் அப்படி அல்ல. நோய் முழுக்க குணமாகி அவள் வெளிவரும் போது அவள் மனம் ஒரு பூவைப் போல் முழுக்க விரிந்திருக்கிறது. வாழ்க்கை என்றால் இன்ப, துன்பம் என்கிற எதிரிடையை கடந்த ஒரு இருப்பு என அறிந்து கொள்கிறாள். ஊரில் விட்டு வந்த அவளது தோழிகள் உணர்ச்சிகளின் பால் பட்டு வாழ்க்கையை ஒரு உத்வேக பாய்ச்சலாக மட்டும் பார்க்கிறவர்கள். அவர்கள் ஒவ்வொருவராக தம் முதிர்ச்சியின்மையால் அழிகிறார்கள். ஆனால் அவள் தன் இளமையிலேயே வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எனும் புரிதல் கொண்டவளாக இருக்கிறாள். நோயும் வலியும் எப்படியான வரம் என இந்நாவல் பேசுகிறது.

நோயையும் அதன் துன்பங்களையும் நாம் நாடிப் போக வேண்டியதில்லை. அதுவாகவே நம் வாழ்வில் அமையும் போது தப்பித்தும் ஓட வேண்டியதில்லை. அது மரண வேதனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறவன் தான் உண்மையில் வாழ்கிறான். என்னதான் தன்னை கொன்று விடும் படி ஒருவன் கோரினாலும் அவனுக்கு தன் வாழ்க்கை வலிக்கு அப்பாற்பட்டது, எல்லாவற்றுக்கும் மேலானது என தெரியும்.

ஆனால் வலியில் துடிப்பவர்களை பார்க்கிற நாம் ஒருவித தன்னிரக்கம் அடைகிறோம். இதை நோயாளி மீதான கருணையாக மாற்றி அவரை கொல்ல வேண்டுகிறோம். என்ன மாதிரியான கருணை இது? பாஸிசமும் போலி கருணையும் இணையும் புள்ளி தான் கருணைக் கொலை.

கடுமையான வலியில் துடிப்பவரை அப்படியே வாழ விடலாமா? இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று மிகக்கடுமையான வலியில் இருப்பதும் வாழ்க்கை தான். நல்ல வாழ்க்கை, கெட்ட வாழ்க்கை என்று ஒன்றில்லை. சரி, இன்பமும் துன்பமும் ஒன்று என்றால் வாழ்க்கையை எப்படி விளக்குவது? வாழ்க்கை என்றால் இருப்பது. இருப்பது என்றால் நாம் “இது” என உணர்வது. நான் ஆன்மீக தரிசனத்தை குறிக்கவில்லை. இருப்பு ஒரு பிரக்ஞை. அதற்கு வலியோ உணர்வோ அறிவோ நம்பிக்கைகளோ இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் அதன் முன் காட்டினால் பிரதிபலிக்கும் அவ்வளவு தான். ஆனால் இவை நாம் அல்ல. நமக்கு வெகு ஆழத்தில் இந்த உண்மை தெரியும். அதனால் தான் மாபெரும் மனித அழிவுகள் நடந்து அத்தனை நம்பிக்கைகளை இழந்தாலும் மிச்சமுள்ள மனிதர்கள் வாழ்வில் இருக்கிறார்கள். இருப்பதன் ஒரே நியாயம் இருப்பது தான் என அவர்களுக்கு உள்ளுணர்வு உள்ளது.

இருத்தலுக்கு உண்மை பொய்யோ, சரி தவறோ, வலி, இன்பமோ கிடையாது. அதனால் தான் நீங்கள் பார்க்கிற உல்லாச வாழ்க்கையில் உள்ளவர்கள் ஆழத்தில் ஏதோ ஒரு வேதனையில் தத்தளிக்கிறார்கள். அவஸ்தை அதிகமாகும் போது கொண்டாட்டமும் கூடுதலாகிறது. அதே காரணத்தினால் தான் அகநெருக்கடியோ உடல் வலியோ தாளாமல் ஒரு பக்கம் பத்து பேர் தற்கொலை பண்ணினால் அதே நிலையில் உள்ள நூறு பேர் சாதாரணமாய் தயிர் சாதம் தின்று செய்தி வாசித்து வாழ்கிறார்கள். மருத்துவர்கள் இவர்களுக்கு வலியை தாங்கும் சக்தி உண்டு என்பார்கள். ஆனால் அப்படி அல்ல. அவர்கள் தம் வலியை வேறொங்கோ வடிகாலாக்குகிறார்கள். வாழ்க்கை உண்மையில் ஒரு நீண்ட வலி அனுபவம். உண்மையில் இங்கு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பெரிய கசப்பின் மீது நின்று புன்னகைக்க கற்றுக் கொள்கிறோம். பிறகு நாம் கசப்பாக இருக்கிறோம் என்பதை மறந்து சிரிக்கிறோம்.

சந்தோசமாக இருப்பது இல்லை என்றால் நாம் வாழ்வதற்கு என்ன அர்த்தம், நோக்கம்? உண்மையில் நாம் இதைப் பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. வாழ்வின் வலைப்பின்னலில் நம் இருப்புக்கு ஒரு தேவை உள்ளது. இத்தேவையை வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்து கொள்ள இயலும். அதன் பின்னர் நாம் வலியை, இழப்புகளை, ஏமாற்றங்களை வெறுக்க மாட்டோம். நீண்ட காலமாய் பேச்சு அசைவில்லாமல் மருத்துவமனையில் “காய்கறி” நிலையில் தக்க வைக்கப்பட்டுள்ள அருணா ஷென்பக்குக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. வாழ்க்கை என்பது செயல் மட்டும் அல்ல. செயலின்மையும் தான். முழுக்க செயலற்றவர்களை நோக்கி நாம் பச்சாதாப்படுகிறோம். அவர்களை கொன்று விடலாம் என கருணைக்கொலையாளர்கள் நினைக்கிறார்கள். நாம் மேலே சொன்ன இரண்டாவது கேள்வி இவர்களைப் பற்றியது.

செயலற்று சமூக பயனின்றி இருப்பவர்களை கொன்று விடலாமா? அப்படி கொல்வதென்றால் நாம் ஒரு பெரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். படித்த வேலை பார்க்காத பிள்ளைகள், அறிவில்லாதவர்கள், சோம்பேறிகள், வேலையில்லா குடிகாரர்கள், வேலைத்தகுதி இல்லா ஊனமுற்றவர்கள், வேலை செய்யாத அரசு ஊழியர்கள், காவலர்கள், அரசியல்வாதிகள் என நாம் கொன்றொழிக்க வேண்டியவர்களின் பட்டியல் மிக மிக நீண்டதாக இருக்கும். எந்த சமூக பயனும் இல்லாத ஏகப்பட்ட பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். இவர்களை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் வீண் அல்ல. மொத்த சமூக இருப்பில் இவர்களும் முக்கியமானவர்களே. இவர்களைப் போலவே அரசாங்கம் நோயால் ஊனமுற்று செயலற்றவர்கள், காய்கறி ஆனவர்களையும் ஆயுள் முழுக்க பாதுகாக்க வேண்டும். இது ஒரு கடமை. இதை ஒரு கால, பண விரயமாக பார்ப்பது முட்டாள்தனம்.

இறுதியாய் இன்னொருவரை வாழ வைக்கிறோம், இன்னொருவர் உயிரை பறிக்கலாம் என்பது போல் நம்மிடம் பல கற்பிதங்கள் உள்ளன. யாரையும் வாழ வைக்கவோ வாழாமல் தடுக்கவோ நம்மால் முடியாது. அது நம்மைக் கடந்த ஒன்று. எல்லா மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டும் நம் கண்முன்னே சாகிற, வாழ்கிற மக்கள் கூட்டத்தை வரலாற்றில் போர் எனும் பெயரிலான இன அழித்தொழிப்புகளில் கண்முன்னே பார்க்கிறோம். இந்த போர்களை நடத்துறவர்களால் கூட அது பல சமயங்களில் நிறுத்த முடிவதில்லை. எதிர்ப்பவர்களாலும் முடிவதில்லை. ஆனால் மனிதனுக்கு ஆழத்தில் தான் வாழ்வை கொடுக்கிறவன் எனும் கிளுகிளுப்பும், தன் இன்னொரு கையில் வாழ்வை பறிக்கிற ஒரு கொலைவாள் உள்ளது என மதமதப்பும் உள்ளது. இது இரண்டும் தருகிற அதிகார மமதை அலாதியானது. நமது அத்தனை சட்டங்களும் விதிமுறைகளும் தண்டனைகளும் சிகிச்சை மையங்களும் மனிதனின் இந்த அகங்காரத்தை தூண்டி எரிய வைக்கின்றன. கருணைக்கொலை ஆதரவாளர்களிடம் இந்த வேடிக்கையான மனநிலை தான் தெரிகிறது. பகுத்தறிவாளர்கள் என அறிவித்துக் கொள்ளும் இவர்கள் ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் கடவுளின் நிலைக்கு உயர்வதாய் நம்புகிறார்கள். அதற்காக இன்னும் எத்தனை கொலைகள் செய்யவும் தயங்க மாட்டார்கள்.

கருணைக்கொலை ஆதரவாளர்கள் ஒருவேளை தாமாக மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு வந்தால் இப்படி பேச மாட்டார்கள். கருணைக்கொலை என்பது மட்டுமல்ல கொலை என்பதே ஒரு அபத்தம் என அவர்களுக்கு அப்போது விளங்கும்.

ஒரு மனிதன் கடும் வலியிலோ, உடல் அழுகியோ, மனம் பேதலித்தோ, காய்கறியாகவோ எப்படியும் இருக்கலாம். அவன் இருப்பது, அதன் மூலம் அவன் இருப்பு, தான் முக்கியம். மிகுந்த செயலூக்கத்துடன் இருப்பவனும் படுக்கையில் செயலற்று கிடப்பவனும் இந்த உலகுக்கு ஒரே ஆள் தான். விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்தவர்கள் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

“மரணம் நம் எதிரி அல்ல

ஏனெனில் அது நம் இருப்பின் ஒரு பகுதி

இருப்பு நம்மை பெற்றெடுத்தது

இருப்பு நமக்கு முலையூட்டுகிறது” என்றார் ஓஷோ. நமக்கு பாலூட்டுகிற முலையில் இருந்து மனிதனை பறித்து எடுக்க ஏன் இவ்வளவு பிரயாசைப்படுகிறீர்கள்? உங்களால் அது முடியாது.

நன்றி: உயிர்மை ஆகஸ்ட் 2014

http://thiruttusavi.blogspot.in/2014/08/blog-post_14.html

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்களின் பின் யாழை சற்று அமைதியாக  இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போது இது என் கண்ணில் பட்டது.இணைப்பிற்கு நன்றி கிருபண்ணா..மேலே சொல்லப் பட்டு இருப்பது போல் நோயையும் அதன் வலிகளையும் நாமாக தேடிப் போவதில்லை,அதுவாக நம்மை வந்தாள நினைக்கும்  போது அதிலிருந்து மீளவும் முடியவில்லை..மனிதனை,மனிதனே தரம் பிரித்துப் பார்த்து நீ வாழ்வுக்கு சரி பட்டு வர மாட்டாய் என்று ஓரமாய் ஒதுக்கும் போது ஏதும் அறியாத உயிர்கள் என்ன தான் செய்ய முடியும்..???

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி நீங்கள் அண்மையில் ஒரு சிலரால் பாதிக்கப்பட்டு இருக்கிறீங்கள் என்று நினைக்கிறேன்.ஏழை/பணக்கார,படித்தவன்/படிக்காதவன்,ஜாதி வேறுபாடு என்பன அந்தக் காலம் தொட்டு இருக்கிறது.ஊனம் இல்லாதவர்கள் பலரைக் கூட இந்த சமூகம் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒதுக்கி வைத்து இருக்கிறதை நான் கண்டு இருக்கிறேன்.ஊனமோ,இல்லையோ ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கைக்கு,அதன் வெற்றிக்கு அவர்களே போராட வேண்டும்.மற்றவர்கள் ஆலோசனை தருவார்கள்,வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் ஒரு சிலரே ஓடி வந்து தூக்கி விடுவார்கள்.அந்த ஒரு சிலரும் வந்து தூக்கி விட வேண்டும் என நினைக்காமல் நாங்களாகவே எழும்பி நிற்க வேண்டும்.

மற்றவர்கள் உங்களை ஒதுக்க அவர்கள் யார்?...நீங்கள் அவர்களை ஒதுக்குங்கள்.வாழ்ந்து காட்டுங்கள்.திருமணம் முடித்து குழந்தை,குட்டிகளோடு வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லை.தனியாகவும் இருந்து சாதித்து காட்டலாம். உங்கள் சொந்தக் காலில் நில்லுங்கள்.பெற்றோரோ,சகோதரங்களோ ஆகவும் அடி பணிய வேண்டாம்.சுய நலமாய் இருங்கள்.முடிவுகளை நீங்களே எடுங்கள்,எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள்.பந்த,பாசத்திற்கு அடிமையாக வேண்டாம்.உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.சாதித்துக் காட்டுங்கள்.எல்லாவற்றிக்கும் மேலாக மிகவும் முக்கியமானது யாரையும் வாழ்க்கையில் நம்பவே வேண்டாம்

நீங்கள் கோவிச்சாலும் பரவாயில்லை என்று தான் எழுதுகிறேன்.அன்பாக பேசுகிறேன்,ஆறுதல் சொல்கிறேன் என யார் வந்தாலும் நம்பாதீர்கள்.மிகவும் மோசடிக்காரர்கள் அவர்கள் தான்.

Edited by ரதி

அருமையான ஆறுதல்  மற்றும் பிழைக்கவழி சொல்லும்  எழுத்து

இத்துடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

இவை அனைத்தையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டதாக அவர்களுக்கு காட்டிக்கொள்ளாதீர்கள்.... :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ! பச்சை இலை மரத்துடன் இருக்கும்வரை இலையும் பிரிவதில்லை , மரமும் விடுவதில்லை ,

கனிந்து பழுத்துவிட்டால் மரமும் விட்டுவிடும் , இலையும் உதிர்ந்து விடும்...!  :)

நன்றி கிருபன் !

பல நாட்களின் பின் யாழை சற்று அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போது இது என் கண்ணில் பட்டது.இணைப்பிற்கு நன்றி கிருபண்ணா..மேலே சொல்லப் பட்டு இருப்பது போல் நோயையும் அதன் வலிகளையும் நாமாக தேடிப் போவதில்லை,அதுவாக நம்மை வந்தாள நினைக்கும் போது அதிலிருந்து மீளவும் முடியவில்லை..மனிதனை,மனிதனே தரம் பிரித்துப் பார்த்து நீ வாழ்வுக்கு சரி பட்டு வர மாட்டாய் என்று ஓரமாய் ஒதுக்கும் போது ஏதும் அறியாத உயிர்கள் என்ன தான் செய்ய முடியும்..???

அக்கா, அண்மைக்கால உங்கள் பதிவுகளை வைத்து நான் உங்களுக்கு கூற விரும்புவது.

1) யாரும் என்னென்றாலும் கூறி விட்டு போகட்டும். நீங்கள் முதலில் உங்களை தாழ்வாக நினைப்பதை நிறுத்துங்கள். யாரும் கூறுவதற்காக உங்கள் உரிமையை சுயத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களால் சாதிக்க முடியும் என நம்புங்கள்.

2) எதிர்த்து நில்லுங்கள். யாழிலேயே பார்க்கிறேன். நீங்கள் ஒவ்வொரு சிறு சிறு கருத்துக்கும் யாரும் ஏதும் சொல்லி விட்டால் மற்றவர்களுக்கு பிடிக்காத எதையும் நான் எழுத மாட்டேன் என கூறி உங்கள் கருத்திலிருந்து விலகுகிறீர்கள். அதை விடுத்து அனைவருக்கும் உங்கள் நியாயத்தை புரிய வையுங்கள். எத்தனை நண்பர்கள் பகையாளியானாலும் பரவாயில்லை என்று உங்கள் நியாயத்துக்காக வாதாடுங்கள். சரியான விமர்சனத்தை மட்டும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளலாம்.

3) யாழ் இணையம், முகநூல், நிஜ வாழ்க்கை என ஒவ்வொன்றிலும் உங்களை விட்டு விலகுவோரை பற்றி கவலைப்படாதீர்கள். இருப்பவர்கள் இருக்கட்டும் விலகுவோர் விலகட்டும் என்ற மனநிலையை உருவாக்குங்கள்.

4) எவ்வளவு வேண்டுமானாலும் யாருடனும் அரட்டை அடிக்கலாம். அதற்காக அவர்கள் வலையில் விழுந்து விட கூடாது.

5) யாழ் இணைய திண்ணையில் எவ்வளவு வேண்டுமானாலும் அரட்டை அடியுங்கள். இங்கு அடிக்கும் அரட்டை பாதுகாப்பானது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் புதிது புதிதாக இணையும் உறவுகள் message போட்டால் பதிலளிக்காதீர்கள். பதில் போடாவிட்டால் ஏதும் நினைத்து விடுவார்களோ என யோசிக்காதீர்கள். நீங்கள் பதில் போடவில்லை என்று யாரும் உங்களை remove பண்ணினாலோ block பண்ணினாலோ அதற்காகவும் கவலைப்படாதீர்கள்.

6) உங்கள் கவலைகள் தெரிந்தால் உங்களுக்கு பலர் ஆறுதல் கூறுவார்கள். உதவி தேவையா எனவும் கேட்பார்கள். தாமும் மிகவும் கஷ்டப்படுவதாக கூறுவார்கள். சிலர் உண்மையாக கூறினாலும் பலர் உங்களை தம் பக்கம் ஈர்க்கவே அவ்வாறு கூறுவதுண்டு. நல்லவர்கள் யார் நடிப்பவர்கள் யார் என தெரியாமல் வலையில் வீழ்ந்து விடாதீர்கள். ஆனால் அனைவருக்கும் நன்றி கூறுங்கள்.

7) அனைவருக்கும் உங்களை பற்றிய சொந்த விபரங்களை சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

8) போரில் பாதிக்கப்பட்ட சிலருக்கு நீங்கள் பண உதவி செய்வதாக முன்னர் சாந்தி அக்கா ஒரு திரியில் கூறியிருந்தார். எத்தனையோ பேர் சுயநலமாக உள்ள போது இப்படி உதவி செய்யும் நீங்கள் உயர்வானவர். இப்போதைக்கு வேறு குறிக்கோள் இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையே உங்கள் குறிக்கோள் ஆக்குங்கள். இலக்கு இருந்தால் இடையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள மனம் தயாராகும்.

9) ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள். ஏமாற்றுவோரை திருத்த முடியாது. (உலகத்தை திருத்த முயற்சித்தால் எம்மை பைத்தியமாக்கி விடுவார்கள். :o) ஆனால் ஏமாறுவோர் விழிப்புணர்வு மூலம் தாம் ஏமாறுவதை தடுக்க முடியும்.

10) உங்கள் இளகிய மனதை கல் மனதாக மாற்றுங்கள். பல பிரச்சினைகள் தானாக தீர்ந்து விடும்.

நான் மனக்கவலையில் இருந்த போது சில யாழ்கள உறவுகள் எனக்கு ஆறுதல், ஆலோசனை கூறினார்கள். இப்பொழுது நான் உங்களுக்கு கூறுகிறேன். கொஞ்ச நாளில் நீங்கள் வேறு யாரும் துன்பத்திலுள்ளவர்களுக்கு ஆறுதல், ஆலோசனை கூறுவீர்கள். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி நீங்கள் அண்மையில் ஒரு சிலரால் பாதிக்கப்பட்டு இருக்கிறீங்கள் என்று நினைக்கிறேன்.ஏழை/பணக்கார,படித்தவன்/படிக்காதவன்,ஜாதி வேறுபாடு என்பன அந்தக் காலம் தொட்டு இருக்கிறது.ஊனம் இல்லாதவர்கள் பலரைக் கூட இந்த சமூகம் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒதுக்கி வைத்து இருக்கிறதை நான் கண்டு இருக்கிறேன்.ஊனமோ,இல்லையோ ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கைக்கு,அதன் வெற்றிக்கு அவர்களே போராட வேண்டும்.மற்றவர்கள் ஆலோசனை தருவார்கள்,வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் ஒரு சிலரே ஓடி வந்து தூக்கி விடுவார்கள்.அந்த ஒரு சிலரும் வந்து தூக்கி விட வேண்டும் என நினைக்காமல் நாங்களாகவே எழும்பி நிற்க வேண்டும்.

மற்றவர்கள் உங்களை ஒதுக்க அவர்கள் யார்?...நீங்கள் அவர்களை ஒதுக்குங்கள்.வாழ்ந்து காட்டுங்கள்.திருமணம் முடித்து குழந்தை,குட்டிகளோடு வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லை.தனியாகவும் இருந்து சாதித்து காட்டலாம். உங்கள் சொந்தக் காலில் நில்லுங்கள்.பெற்றோரோ,சகோதரங்களோ ஆகவும் அடி பணிய வேண்டாம்.சுய நலமாய் இருங்கள்.முடிவுகளை நீங்களே எடுங்கள்,எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள்.பந்த,பாசத்திற்கு அடிமையாக வேண்டாம்.உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.சாதித்துக் காட்டுங்கள்.எல்லாவற்றிக்கும் மேலாக மிகவும் முக்கியமானது யாரையும் வாழ்க்கையில் நம்பவே வேண்டாம்

நீங்கள் கோவிச்சாலும் பரவாயில்லை என்று தான் எழுதுகிறேன்.அன்பாக பேசுகிறேன்,ஆறுதல் சொல்கிறேன் என யார் வந்தாலும் நம்பாதீர்கள்.மிகவும் மோசடிக்காரர்கள் அவர்கள் தான்.

நான் எப்போதும் கோவக்காறியாக இருப்பதில்லை ரதி...ஆகவே யாரும் கருத்துக்களை சொல்வதில் தப்பில்லை...நான் மற்றவர்களுக்கு அடி பணியாமல் வாழ்வது கூட கண்ணுக்கை குத்தும் விடையம் தான் ரதி...இப்படி நிறைய காரணம் இல்லாத குற்றச் சாட்டுக்கள் விழும் போது தான் அட இது எல்லாம்  அவர்களுக்கு உதாரணமாயிருக்கிறதே என்று நினைத்து கவலைப்படத் தோணுது.என்னைக் கை கழுவி விட்டு செல்பவர்கள் அனைவருக்கும் எல்லாம் இன்பம் தான்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, அண்மைக்கால உங்கள் பதிவுகளை வைத்து நான் உங்களுக்கு கூற விரும்புவது.

1) யாரும் என்னென்றாலும் கூறி விட்டு போகட்டும். நீங்கள் முதலில் உங்களை தாழ்வாக நினைப்பதை நிறுத்துங்கள். யாரும் கூறுவதற்காக உங்கள் உரிமையை சுயத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களால் சாதிக்க முடியும் என நம்புங்கள்.

2) எதிர்த்து நில்லுங்கள். யாழிலேயே பார்க்கிறேன். நீங்கள் ஒவ்வொரு சிறு சிறு கருத்துக்கும் யாரும் ஏதும் சொல்லி விட்டால் மற்றவர்களுக்கு பிடிக்காத எதையும் நான் எழுத மாட்டேன் என கூறி உங்கள் கருத்திலிருந்து விலகுகிறீர்கள். அதை விடுத்து அனைவருக்கும் உங்கள் நியாயத்தை புரிய வையுங்கள். எத்தனை நண்பர்கள் பகையாளியானாலும் பரவாயில்லை என்று உங்கள் நியாயத்துக்காக வாதாடுங்கள். சரியான விமர்சனத்தை மட்டும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளலாம்.

3) யாழ் இணையம், முகநூல், நிஜ வாழ்க்கை என ஒவ்வொன்றிலும் உங்களை விட்டு விலகுவோரை பற்றி கவலைப்படாதீர்கள். இருப்பவர்கள் இருக்கட்டும் விலகுவோர் விலகட்டும் என்ற மனநிலையை உருவாக்குங்கள்.

4) எவ்வளவு வேண்டுமானாலும் யாருடனும் அரட்டை அடிக்கலாம். அதற்காக அவர்கள் வலையில் விழுந்து விட கூடாது.

5) யாழ் இணைய திண்ணையில் எவ்வளவு வேண்டுமானாலும் அரட்டை அடியுங்கள். இங்கு அடிக்கும் அரட்டை பாதுகாப்பானது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் புதிது புதிதாக இணையும் உறவுகள் message போட்டால் பதிலளிக்காதீர்கள். பதில் போடாவிட்டால் ஏதும் நினைத்து விடுவார்களோ என யோசிக்காதீர்கள். நீங்கள் பதில் போடவில்லை என்று யாரும் உங்களை remove பண்ணினாலோ block பண்ணினாலோ அதற்காகவும் கவலைப்படாதீர்கள்.

6) உங்கள் கவலைகள் தெரிந்தால் உங்களுக்கு பலர் ஆறுதல் கூறுவார்கள். உதவி தேவையா எனவும் கேட்பார்கள். தாமும் மிகவும் கஷ்டப்படுவதாக கூறுவார்கள். சிலர் உண்மையாக கூறினாலும் பலர் உங்களை தம் பக்கம் ஈர்க்கவே அவ்வாறு கூறுவதுண்டு. நல்லவர்கள் யார் நடிப்பவர்கள் யார் என தெரியாமல் வலையில் வீழ்ந்து விடாதீர்கள். ஆனால் அனைவருக்கும் நன்றி கூறுங்கள்.

7) அனைவருக்கும் உங்களை பற்றிய சொந்த விபரங்களை சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

8) போரில் பாதிக்கப்பட்ட சிலருக்கு நீங்கள் பண உதவி செய்வதாக முன்னர் சாந்தி அக்கா ஒரு திரியில் கூறியிருந்தார். எத்தனையோ பேர் சுயநலமாக உள்ள போது இப்படி உதவி செய்யும் நீங்கள் உயர்வானவர். இப்போதைக்கு வேறு குறிக்கோள் இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையே உங்கள் குறிக்கோள் ஆக்குங்கள். இலக்கு இருந்தால் இடையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள மனம் தயாராகும்.

9) ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள். ஏமாற்றுவோரை திருத்த முடியாது. (உலகத்தை திருத்த முயற்சித்தால் எம்மை பைத்தியமாக்கி விடுவார்கள். :o) ஆனால் ஏமாறுவோர் விழிப்புணர்வு மூலம் தாம் ஏமாறுவதை தடுக்க முடியும்.

10) உங்கள் இளகிய மனதை கல் மனதாக மாற்றுங்கள். பல பிரச்சினைகள் தானாக தீர்ந்து விடும்.

நான் மனக்கவலையில் இருந்த போது சில யாழ்கள உறவுகள் எனக்கு ஆறுதல், ஆலோசனை கூறினார்கள். இப்பொழுது நான் உங்களுக்கு கூறுகிறேன். கொஞ்ச நாளில் நீங்கள் வேறு யாரும் துன்பத்திலுள்ளவர்களுக்கு ஆறுதல், ஆலோசனை கூறுவீர்கள். :)

நான் செய்யக் கூடாத குற்றம் ஏதாச்சும் செய்து தண்டிக்கப்பட்டால் கவலைப்பட மாட்டேன்...பிரச்சனை இல்லை....அவர்கள் சந்தோசம் மட்டும் தான் முக்கியம் என்றால் என்னைத் தண்டிப்பது சரி என்று பட்டால் யார் தான் என்ன செய்ய முடியும்..எல்லாம் ஏதோ ஒரு வித நம்பிக்கையில் தானே இருக்கிறது..ஆனாலும் யாரையுமே நம்ப முடியாத உலகம்.

Edited by யாயினி

பிறப்பதை தீர்மானிப்பதோ இறப்பதை தீர்மானிப்பதோ மனிதருக்கு மறுக்கப்பட்டவை.. !! அவை இயற்கையாலும் இறைவனாலும் நிர்மானிக்கப்பட்டவை..!!

வருத்தமாக இருக்கும் யாயினிக்காக ஒரு கதை....

------------

ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று... ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது...

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

"
கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?"

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது...

"
ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?"

"
ஆமாம்" என்று நான் பதிலளித்தேன்.

"
நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.

புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை" என்றார் கடவுள்.

"
மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.
 
ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன" என்றார்.
"இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை...  
தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை" எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், "உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்.மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இறுதியாக, "உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்"

நான் கேட்டேன், "என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?"

"
மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்" என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

"
எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்" என்று கேள்வி எழுப்பினேன் நான்.

"
அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்" என்றார் அவர்.

"
அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?" என்று வியந்தேன் நான்.

"
ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்" என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்தில் வாழும் எனது நெருங்கிய உறவினருக்குப் புற்று நோய்.
குணப்படுத்தும் வருத்தமல்ல. மிகுந்த வலி. பாவிக்கும் மருந்து அவரின் வலியைத் தன் வசப்படுத்திவிட்டது. மாதம் தோறும் உட்கொள்ளும் மருந்தின் அளவு அதிகரிக்கப்பட்டும் வலி அதனையும் மீறி அதிகரிக்கின்றது.அவரைப் பார்க்கச் சென்ற எங்களுக்கே அவர் என் இப்படி இருக்கின்றார் எனத் தான் தோன்றியது

அந்தளவிற்கு அவருடைய வலியின்  ஓலம் இருக்கும்.
சாப்பாடு நீராகாரம் தான் அதுவும் பல  முறை வாந்தியெடுத்து விடுவார்.

இத்தனைக்கும் 50  வயது
வலி தாங்க முடியாதது. முள்ளந்தண்டுக்குள்ளே புற்று நோய்
சிறிதளவு உணவருந்தினால் வலி இன்னும் அதிகரிக்கும்.
கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்த வலியை அனுபவித்த அவர் வைத்தியர்களால் கருணைக் கொலைக்கு ஊக்குவிக்கப்பட்டு  விண்ணப்பித்தார். வைத்தியர்களும் மனைவியின் விருப்பத்தைக் கேட்டனர். மனைவி தன் அக்காவை ஆலோசனை  கேட்டார். அக்கா என்னிடம் கேட்டார்.
நான் கூறியது கருணைகொலை என்பது மரணதண்டனைக்குச் சமனானது. கையெழுத்து வைக்க வேண்டாம் எனவும்,  ஒரு உயிரை வைத்தியர்கள் எதற்காகப் பறிக்க வேண்டும்.பணம் இருப்பவர்களிடம் அவர்களின் உயிரைக் காப்பாறும் பேர்வழியில் பல வருடங்களாக அவர்களின் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு அரை உயிராக அவர்களைப் பராமரிக்கும் வைத்தியர்கள், பணம் இல்லாத சாதாரணக் காப்புறுதி வைத்திருப்பவர்களைக்  கருணைக் கொலைக்கு ஊக்குவிப்பதன் நோக்கம் என்ன? எனக் கேட்டேன். அவரும் சம்மதிக்கவில்லை.
இப்போது 1 வருடங்கள் கழிந்தும் அவர் உயிருடனும் வலியுடனும் தான் இருக்கின்றார்.அவருடைய  பதின்மவயதுப்  பிள்ளைகளுக்கு இன்னும் ஒரு அப்பா வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்ற சந்தோசம்.
ஆனால் அவருடைய மனைவி ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கின்றார்.
 
Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களுக்கு இருக்க கூடிய உடல் வலிகள் விலகிப் போவதும்; நிரந்தரமாககுவதும்  தனித்து அந்த மனிதர் கையில் மட்டும் தங்கியில்லை..ஒரு வைத்தியராலயே உயிரை தக்க வைத்துக் கொள்ள முடியாத மனோ நிலை என்றால் அன்றாடம் சாதரணமாக பழகுபவர்களிடம் அவர்களது சொற்களால்,செயல்களால் எவ்வளவு வேதனைகளை அனுபவிக்க கூடியதாக இருக்கும் என்பதை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது...அப்படி ஒரு நிலை தான் இங்கும் சிலருக்கு..என்ன செய்வது ....இப்படித் தான் பிறப்போம் என கர்பபத்திலயே நாமே அறிந்து கொள்ளும் திறனை கடவுள் கூடவே தந்திருந்தால் இந்த நேரம் இதை எழுதிக் கொண்டு இருக்க வேண்டிய தேவை கூட இருந்திருக்காது..இந்த நேரத்தில் சிந்து பைரவி படத்தில் வந்த பாடல் ஒன்று தான் நினைவிற்கு வருகிறது......கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ragam: thodi- adathaaam

திருவருட்பா

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவுவேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று

பேசுவார் உறவுகலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்

மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்

தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.