Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் (காணொளி இணைப்பு )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக் கழகத்துக்கு முதன் முதலாக வரும் புதிய மாணவர்களை வரவேற்பதென்பது தவறான காரியம் அல்ல. நாங்கள் மொரட்டுவைப் பலகலைக் கழகத்தில் சேரும்போது அந்த வரவேற்பு இருந்தது. ஆனால், அங்கே வந்திருந்த தமிழ் மாணவர்களுக்காக தமிழில் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமான எந்த நிகழ்வும் இருக்கவில்லை 100% சிங்கள பெளத்த கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வே இடம்பெற்றது. தமிழ் விரிவுரையாளர்கள் பலர் அங்கே இருந்தும்கூட மருந்துக்குத்தன்னும் தமிழிலே சிற்றுரை கூட ஆற்றப்படவில்லை. ஒன்றில் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில்தான் எல்லாச் சம்பிரதாயங்களும் இருந்தன. அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஏதோ அந்நிய நாட்டிற்கு வந்துவிட்டோம், அவர்களது நடைமுறைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற மனப்பான்மையே அனைத்துத் தமிழ் மாணவரிடத்திலும் இருந்தது.

மொரட்டுவையைப் போலல்லாமல் பல மடங்கு தமிழ் மாணவர்கள் அனுமதிக்கப்படும் பலகலைக் கழகம் பேராதனைப் பலகலைக் கழகம். ஆனால் அங்கு கூட தமிழில் வரவேற்பு இருப்பதில்லை என்பதுதான் நான் அறிந்தது.

கொழும்பில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவிதத்திற்கும் பிறகு மொரட்டுவையில் தமிழ் மாணவர்கள் தக்கப்பட்டதும், பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதும், தமிழ் மாணவர்களின் விடுதி அறைகள் சூறையாடப்பட்டு புத்தகங்கள், ஒப்படைகள் என்பன திட்டமிட்டு எரிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால், இவை எதன்பொழுதும் தமிழ் மாணவர்கள் திருப்பித் தக்கவோ அல்லது வாதம் செய்யத்தன்னும் முன்வரவில்லை. இது அவர்களின் நாடு என்பதே என்னைப் போன்ற பலரின் நிலைப்பாடாக அன்று இருந்தது.

ஆனால் யாழ்ப்பாணத்தில் இப்போது நடப்பதை வெறுமனே ஒரு நிகழ்வாகப் பார்த்துவிட்டு கடந்துபோக நினைப்பது முட்டாள்த்தனம் என்றுதான் நினைக்கிறேன்.

தமிழ்ப் பிரதேசங்களின் பல்கலைக் கழகங்கள் என்பது சிங்கள பெளத்த இனவாதத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெரும் பிரச்சினையாகவே பார்த்து வருகின்றது. முதலாவதாக அதன் கல்வி வளர்ச்சியும், தமிழ் சமூகத்திற்கான அரசியல் ரீதியான தலமைத்துவமும் அங்கிருந்தே பிறக்கிறதென்பதும். தொடர்ச்சியான சிங்கள பெளத்த அடக்குமுறைகளுக்கு பின்னரான தமிழ் மக்களின் எழுச்சியே பலகலைக் கழகத்திலிருந்துதான் ஆரம்பித்ததென்பதும், போராட்டம் ஆயுத ரீதியான பரிணாமத்தை எடுத்தபொழுதுகூட பலகலைக் கழகம் அதற்கு உறுதுணையாக இருந்தது என்பதும் கண்கூடு.

யாழ்ப்பாணம் முற்றுமுழுதான சிங்கள் ராணுவ ஆக்கிரமிப்பினுள் அகப்பட்டிருந்த காலத்திலும் கூட பொங்குதமிழ் நிகழ்வு, மாவீரர் நினைவெழுச்சி என்று பல்வேறான போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை முன்னின்று நடத்தியது யாழ் பலகலைக் கழகம்தான் என்பதும், இன்றுவரை எந்த அழுத்தத்திற்கு பணியாது மாவீரர் நிகழ்வினை தொடர்ச்சியாக அனுசரிப்பதுவும் அதே பலகலைக் கழகம் தான் என்பதும் சிங்களத்தைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாவே இருந்து வருகிறது. தமிழ்ப்பிரதேசங்களில் அமைந்திருக்கும் பலகலைக் கழகங்கள் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியத்துக்குக்க் கொடுத்து வரும் ஆதரவினையும், தலமைத்துவத்தையும் எப்படியாவது தடுத்துவிடும் நோக்கில்த்தான் இப்பல்கலைக் கழகங்களில் திட்டமிட்ட ரீதியில் சிங்கள மாணவர்களை அரசு அனுப்பி வருகிறது. அதிகரித்துவரும் சிங்கள மாணவர்களுக்காக சிங்களத்து விரிவுரையாளர்கள், பீடங்கள், அவற்றுக்கான பாதுகாப்பிற்கு சிங்கள ராணுவம் பொலீஸ் என்று ஒரு திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்புக் குடியிருப்புக்கு நிகரான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இன்று 65 % ஆக இருக்கும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை நாளடைவில் 100 % ஆக மாறும் என்பதும் நடக்கக் கூடியதுதான். ஏனென்றால் எவரை எங்கு அனுமதிப்பது என்கிற முடிவை எடுப்பதே சிங்கள பெரும்பான்மை பல்கலைக் கழக மாணியம்தான்.

இன்று வந்தாறுமூலை பலகலைக் கழ்கத்தில் தமிழ் மாணவர்கள் சிறுபான்மையாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், தமிழ் மாணவர்களை பாதுகாப்பாக சிங்களப் பொலீசே அனுப்பி வைக்கவேண்டி ஏற்பட்டதும் பலருக்கு மறந்திருக்கலாம். அப்படியொரு நிலையைத்தான் யாழ் பலகலைக் கழகத்திலும் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் இரு இன நிகழ்வையும் வைத்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் 65% ஆன மாணவர்கள் சிங்களவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வை நடத்தியும், அதேபோல பல்கலைக் கழகம் அமைந்திருக்கும் மண்ணின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் கலாசார நிகழ்வையும் நடத்தியிருந்தால் சகலருக்கும் ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால், கண்டிய நடனம் மட்டும்தான் இங்கே வைக்கமுடியும், ஏனென்றால் இது எங்களது நாடு, நாமே அதன் மக்கள் என்கிற ஆக்கிரமிப்பு மனோபாவதுடனான சிங்கள் மாணவர்களின் அடாவடித்தனம்தான் இங்கே சிந்திக்க வைக்கிறது.

போரில் வென்றுவிட்டோம், நீங்கள் எமது அடிமைகள், நாம் சொல்வதே சட்டம் என்கிற மமதையும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மனோபாவமுமே இன்றைய கலகத்திற்குக் காரணம். கலகத்தின்போது சிங்கள மாணவர்கள் நடந்துகொண்டவிதமும், அவர்களுக்கு பக்கதுணையாக சிங்கள் பொலீஸ் மற்றும் சிவிலுடை அணிந்த ராணுவ புலநாய்வாளர்கள் அக்கறையுடன் செயற்பட்ட விதமும் கூறுவது ஒன்றைத்தான். அதாவது, சிங்கள் அரசும்,ஆதன் இயங்கு சக்தியும், ராணுவமும் அதனோடிணைந்த அனைத்துப் பாதுகாப்புப் பிரிவுகளும் இருப்பதே சிங்களப் பெளத்த பேரினவாதத்தைக் கட்டிக் காப்பதற்காக மட்டுமே. ஏனென்றால், இன்று யால் பலகலைக் கழகத்திலிருந்து சிங்கள மாணவர்களை பாதுகாப்பாக வவுனியா வரையிலும் கொண்டு சென்று இறக்கிவிட்ட சிங்கள ராணுவமும், பொலீஸும், அன்று சிங்கள மாணவர்களால் தக்கப்பட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்ட எம்மை தமது டிரக் வண்டிகளில் மந்தைகளைப் போல் ஏற்றிச் சென்று எமது வீடுகளில் இறக்கிவிடவில்லை, மாறாக தமது பொலீஸ் நிலையத்திற்கு இழுத்துசேன்று தமது பங்கிற்கும் தாக்கினார்கள். இதுதான் அவர்களது மனநிலை.

இதைப் புரிந்துகொள்ளாது, சிங்கள மாணவர்களைத் தாக்கிவிட்டார்கள், இன ஒற்றுமையைக் குலைத்துவிட்டார்கள், பலகலைக் கழகமும் நாடும் நன்றாக இருப்பது இங்கே பலருக்குப் பிடிக்கவில்லை என்பதெல்லாம் ஒன்றில் நடப்பது என்னவென்பதை அறிந்துகொள்ளாமல் அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல் இருப்பவர்களாலேயே கூறமுடியும்.

 

இப்போது புலியில்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் சிங்களப் பெளத்த பேரினவாதம் ! முடிந்தால்ப் புரிந்துகொள்ளுங்கள் அல்லது எக்கேடோகெட்டுப் போங்கள் !

  • Replies 60
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ragunathan said:

 

 

இப்போது புலியில்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் சிங்களப் பெளத்த பேரினவாதம் ! முடிந்தால்ப் புரிந்துகொள்ளுங்கள் அல்லது எக்கேடோகெட்டுப் போங்கள் !

மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ..... கண்டியன் நடனம் ஆடினால் தான் நல்லிணக்கம் என்று சனம் சொல்லுது

5 hours ago, ragunathan said:

 

 

  • தொடங்கியவர்
யாழ் பல்கலைக்கழக விவகாரம்: வலிந்த திணிப்பு
 
 

article_1468992055-xsd.jpgமுருகவேல் சண்முகன்
shanmugan10@gmail.com

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்களை, இரண்டாமாண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சம்பவமே, இனி வரும் சில காலங்களுக்கு பல்வேறு மட்டங்களிலும் பேசு பொருளாக நிச்சயம் இருக்கும்.

எமது உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் ஓர் அணியின் வீரருக்கு மத்தியஸ்தரினால் சிவப்பு அட்டை காட்டப் பெற்றாலோ அல்லது ஓர் அணியின் 'ஓஃப் சைட்' மத்தியஸ்தரினால் கண்டு கொள்ளப்படவில்லையென்றோ மத்தியஸ்தருடன் அடுத்த அணி வீரர்கள் முரண்பட்டுக் கொள்ளுதல் அல்லது அணியின் ஆதரவாளர்கள் மத்தியஸ்தருடன் முரண்பட்டுக் கொள்ளுதல், அதனைத் தொடர்ந்து இரண்டு அணியின் ஆதரவாளர்கள் முரண்பட்டுக் கொள்ளுதல் வகையறாவான சம்பவமே யாழ்.பல்;கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இலகுவாகப் பேசித் தீர்க்கப்படக் கூடிய விடயத்தை, வெளிப்புற சக்திகள், தாம் குளிர் காய்ந்து கொள்வதற்காக பெரிதாக ஊதிப் பெருப்பிக்க முற்படுவதோடு, தாமும் கருத்து சொல்கிறோம் பேர்வழி என்று, எம்மிடையே நல்லிணக்கவாதிகளாக (‚) தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரும் இவ்விடயத்துக்கான அதிக வெளிச்சத்தை வழங்கி எந்தெந்த மட்டங்களுக்கு குறித்த விடயம் செல்லக் கூடாதோ, அவ்விடத்துக்கெல்லாம் இந்த விடயத்தைக் கொண்டு செல்லும் பணியில் செம்மையாக ஈடுப்பட்டிருக்கின்றனர்.

எனவே, எங்கு இவ்வாறான முரண்பாடு தோன்றும் அதை வைத்து தமது இருப்புக்கான காரணங்களை உறுதிப்படுத்தி, ஏனைய தேவையான விடயங்களை மழுங்கடிக்கச் செய்து தாம் நகர்ந்து கொண்டிருக்கலாம் என்று நினைப்போருக்கு, குறித்த யாழ். பல்கலைக்கழக விவகாரம், அல்வா போல கிடைத்திருக்கிறது. ஆகவே, இவர்கள் இப்படியானதொரு சம்பவத்தை ஏற்படுத்துவதற்கு, மறைமுகமாக பின்னால் உதவினார்களா என்பதும் சந்தேகத்துக்குரியதொன்றாகவே இருக்கின்றது.

மேற்குறித்த வகையானோரை தவிர்த்தாலும், ஏனையவர்களும் இந்த விடயத்தை தத்தமது நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டே நோக்குகின்றனர். நமது நாட்டில் கடந்த ஒரு வருடமாக அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லான பொறுப்புக்கூறலை, இந்த விடயத்தில் பிரயோகித்துப் பார்க்க எவரும் விரும்பவில்லை. அல்லது அவ்வாறு பிரயோகித்தால், அது, அவரவர் நலன்களை பாதிக்கும் என்ற படியால் அவர்கள் அதற்குள் செல்ல விரும்பவில்லை. எல்லோருக்கும் தற்காலிக போலி இணக்கம் ஒன்றே தேவையாக இருக்கிறது தவிர, குறித்த விடயத்தை ஆழ்ந்து நோக்கி, குறித்த சம்பவத்துக்கான அடிப்படை காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் அல்லது குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு காரணமாக நிகழ்வுகளையொத்த வேறு நிகழ்வுகள் ஏனைய பல்கலைக்கழகங்களில் எவ்வாறு இடம்பெறுகின்றது என்று நோக்க எவரும் விரும்பவில்லை. ஏனெனில், அவற்றையெல்லாம் நோக்கினால், யதார்த்தத்தின்படி ஒரு தரப்பின் நியாயங்கள் சரியாகிவிடுவதோடு அடுத்த தரப்பின் செயற்பாடுகள் பிழை போன்றதாகி விடும். ஆனால்,  நம் போலி நல்லிணக்கவாதிகளுக்கு இத்தகையதொருநிலை பிரதிகூலமாய் அமைந்து விடும். எனவே, எவ்வாறு பூசி மெழுகலாம் என்றே அவர்கள் நோக்குகின்றனர்.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவமானது, திடீரெனவே ஏற்பட்டது என்றே அனைவரும் அடித்துக் கூற முற்படுகையில், சம்பவம் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வையொட்டி மற்றும் அதன் முன்னர் நடந்த ஒரு சில சம்பவங்களை மட்டும் நோக்கினாலே குறித்த சம்பவமானது திடீரென தோன்றியதா அல்லது பல நிகழ்வுகளின் தொடர்ச்சியா என்பதை ஊகிக்க முடியும்.

தற்போது, யாழ். பல்கலைக்கழகத்தின் சில பீடங்களில், சிறுபான்மையின மாணவர்களுக்கு சரிக்குச்சமனாக பெரும்பான்மையின மாணவர்களும் காணப்படுகின்ற நிலையில், இந்த வருட வெசாக் பண்டிகையின்போது, யாழ். பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் பெரும்பான்மையின மாணவர்கள், வெசாக் கூடுகளால் அலங்கரித்திருந்தனர். அதன்போது எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெற்றிருக்கவில்லை. அவரவர் மதத்திற்குரிய பண்டிகைகளை நடாத்துவதற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே சகிப்புத்தன்மை இல்லை என தற்போது கூறுவோர் இதனையும் சற்று நோக்க வேண்டும். இதேவேளை, குறித்த வெசாக் கொண்டாட்டங்களின்போது தமிழில் காணப்பட்ட பதாதைகளில் எழுத்துப் பிழைகள் காணப்பட்ட நிலையில், தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நிலை காணப்பட்டது, சிறிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பதாதைகளை, பொது மொழியான ஆங்கிலத்தில் வைப்போம் என்று தமிழ் மாணவர்கள் கூறிய நிலையில், தமிழ், சிங்கள மொழிகளில்தான் பதாகை வைக்க வேண்டும் என பெரும்பான்மையின மாணவர்கள் அடம் பிடித்த நிலையில், இறுதியாக அந்தக் கோரிக்கையும் தமிழ் மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இது தவிர, கடந்த வருடம் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் இடைநடுவிலேயே அந்த நிகழ்வினை புறக்கணித்து வெளியேறிய அப்போதைய இறுதியாண்டு பெரும்பான்மையின மாணவர்கள், இம்முறை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிருந்த நிலையிலும், சம்பவம் இடம்பெற்ற இவ்வருட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர். தவிர, சம்பவம் இடம்பெற்ற நிகழ்வுக்காக குறித்த தொகைப் பணம் சேர்க்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையின மாணவர்களிடையே எக்கச்சக்கமான பணம் புழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, சம்பவம் இடம்பெற்ற நிகழ்வினையொட்டி மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற மேற்கூறப்பட்ட சில சம்பவங்களை உற்று நோக்குவீர்களானால், இடம்பெற்ற சம்பவமானது, திடீரெனத்தான் இடம்பெற்றதா அல்லது வேறு பல நிகழ்வுகளின் கோர்வையா அல்லது திட்டமிடப்பட்டதா என நிச்சயம் உங்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்திருக்கும்.

அடுத்து, குறித்த புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், கடந்த ஐந்து வருடங்களாக, அரங்கத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கண்டிய நடனம் இடம்பெற்றே வந்திருக்கின்றது. இந்நிலையிலேயே, தமிழர் பண்பாட்டின் மையமாகத் திகழும் யாழ்ப்பாணத்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில், பாரம்பரிய கலாசாரமான, மேளதாள வாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்படுகையில், கண்டிய நடனத்தையும் வரவேற்பில் இணைக்க வேண்டும் என குறித்த நிகழ்வுக்கு முந்தைய தினமே பீடத்தலைவரிடம் கோரிக்கை விடப்பட்டு, அந்த கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையிலும் கண்டிய நடனத்தை வலிந்து திணிக்க முற்பட்ட நிலையிலேயே கலகமாகியிருக்கிறது.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று காலையிலிருந்தே சம்பவம் இடம்பெற்ற இடம் கொதிகளம் போலவே இருந்த நிலையில், வரவேற்பின்போது கண்டிய நடனத்தை நடத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, முன்னர் கூறப்பட்ட, பல்கலைக்கழகத்துக்கு வெளியே சென்ற மாணவர்கள், வேறு பீட மாணவர்களுடன் பெரும்பான்மையின மாணவர்கள் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, பெரும்பான்மையின மாணவர்களுடன் பேசச் சென்ற பேராசிரியருடன் கடுமையான வார்த்தை பிரயோகங்களுடன் பெரும்பான்மையின மாணவர்கள் முரண்பட்டதுடன், அவரின் முன்னால் ஆவேசமான நடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே மாணவர்களிடையே மோதல்கள் இடம்பெற்றதுடன், சிறுபான்மையின மாணவர் ஒருவரே கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் கல் வீச்சில் மாறி மாறி ஈடுபட்டதுடன், அதனைத் தொடர்ந்து விரிவுரை அரங்குகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதிலேயே பெரும்பாலான பெரும்பான்மையின மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்குறித்த சம்பவங்கள் மதியம் ஒரு மணிக்கு முதலே இடம்பெற்று நிலைமை அமைதியாகியிருந்தது. அதற்கு பின்னர் சம்பவ இடத்தில் எதுவுமே இடம்பெற்றிருக்கவில்லை என்பதுடன், மேலும் முறுகல்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டே, விடுதிகளிலிருந்த பிற மாவட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதில், பெரும்பான்மையின மாணவர்களுடன் இணைத்து, பிற மாவட்டங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுமே வெளியேற்றப்பட்டிருந்தனர்.

எவ்வாறெனினும், பெரும்பான்மையின மாணவர்கள் கட்டாயமாக பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என பிரபலம் தேடும் இணையத்தளங்களும் இனத்துவேஷம் கக்கும் தரப்புக்களும் கருத்திடவே குறித்த சம்பவம் தீயாக பற்றிக் கொண்டதுடன், தற்போது இலகுவாக தமக்கேற்ற கருத்துக்களை பரப்பக்கூடிய சமூக ஊடகங்களில் மோசமான இனப்பிளவு போன்றதான கருத்துக்கள், குறித்த சம்பவத்தின் காணொளிகள், புகைப்படங்களுடன் பரப்பப்பட்டன. வெறுப்புப் பேச்சுத் தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லாத நமது நாட்டில், மேற்கூறப்பட்டவாறான கருத்துக்களை தடுப்பது கடினமே, எனவே வெறுப்பு பேச்சு தொடர்பான பரிசீலனை அவசியம் ஆகும்.

மேற்குறித்தவாறாக சம்பவங்கள் இடம்பெற்று முடிந்திருக்கையில், அனுமதி வழங்கப்பட்டிருக்காத கண்டிய நடனத்தை, வரவேற்பின்போது வலிந்து திணித்தமையே இதற்கான பிரதான காரணியாகும். மொரட்டுவை பல்கலைக்கழகத்திலோ அல்லது பேராதனைப் பல்கலைக்கழக்திலோ இடம்பெறும் விழாக்களின் வரவேற்பின்போது கண்டிய நடனமே பயன்படுத்தப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட  எண்ணிக்கைகளில் காணப்படும் மாணவர்கள், வரவேற்பின்போது மேளதாள வாத்தியங்கள் இடம்பெறவேண்டும் என்று தமிழ் மாணவர்கள் அடம்பிடிப்பதில்லை. அவர்கள் அவ்வாறு கோரினாலும் ஒரு போதும் மேளதாள வாத்தியங்கள் ஒருபோதும் வரவேற்பிலும் இடம்பெறப்போவதில்லை. வீண் முரண்பாடே ஏற்படும். எனவே இடம், பொருள், ஏவல் அறிந்தே அம்மாணவர்கள் நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், தமிழ் பண்பாட்டு கலாசாரத்துடன் இருக்கின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிகழ்வொன்றின் வரவேற்பில் கண்டிய நடனத்தை கோருவது எவ்வாறு நியாயமாகமுடியும். அதுவும் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் அதை வலிந்து திணிப்பதை எவ்வாறு நோக்குவது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பல வகையான மாணவர்கள் பயிலுகின்ற நிலையில், அந்தந்த மாணவர்கள், அவரவர் சமூகம் சார்ந்த நிகழ்ச்சியினை தனித்துவமாக நிகழ்த்துகின்றனர். அதற்குள் எவரும் மூக்கை நுழைப்பதில்லை. பின்னர் பொதுவான நிகழ்வொன்றில், குறித்த பல்கலைக்கழகத்தில் பாரம்பரியமாக காணப்படும் வழங்கங்களை, தமக்கேற்றவாறு மாற்றி வலிந்த திணிப்புக்களை மேற்கொள்வது எப்போதும் பொருத்தமாகாது. இங்கே ஆரம்பிக்கும் சிறிய முரண்பாடுகளே, பின்னர் பாரிய அதிர்வலையாக மாறுகின்றது. எனவே, தாமிருக்குமிடம் அறிந்து அனைவரும் செயற்பட்டால் நன்று.   

- See more at: http://www.tamilmirror.lk/177501/ய-ழ-பல-கல-க-கழக-வ-வக-ரம-வல-ந-த-த-ண-ப-ப-#sthash.43Attqjy.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
புத்திஜீவிகளுக்கு பொருத்தமற்ற மோதல்
 
20-07-2016 09:33 AM
Comments - 0       Views - 11

article_1468987444-aube.jpgயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், கடந்த சனிக்கிழமையன்று, சிறுபான்மையின மற்றும் பெரும்பான்மையின மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலால், மஹிந்த ராஜபக்ஷ அணியினர் வெகுவாக மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிகிறது. வழமைபோல, வட மாகாணத்தைப்  புலிகள் கைப்பற்றிக் கொண்டனர் என்றவாறு, அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற பெரும்பான்மையின மாணவர்கள் தாக்கப்பட்டமையையும் அவர்களும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தமையையும் சிறிய விடயமாகக் கருத முடியாது என்றும், தமது ஆட்சிக் காலத்தின் போது, வட பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறத் தாம் இடமளிக்கவில்லை என்றும் அந்த வகையில், உண்மையான நல்லிணக்கம் தமது ஆட்சிக் காலத்தில் தான் நாட்டில் நிலவியது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

மஹிந்தவின் முக்கிய சகாவான முன்னாள் வீடமைப்பு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவும், வடக்கில் படுபயங்கர நிலைமை உருவாகியிருப்பதாகக் கூறியிருக்கிறார். பிரபாகரன் போராடிய காலத்தில் கூட, இதுபோன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவில்லை என அவர் கூறயிருக்கிறார்.

தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்ற அமைப்பும், பெரும்பான்மையின மாணவர்கள் தாக்கப்பட்டமை பாரதூரமான விடயம் என்றும் இது நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் என்றும், எனவே அரசாங்கம், வட பகுதியிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறவோ, வட பகுதியில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவோ கூடாது என்றும் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி, இந்தப் பிரச்சினையை வேறு விதமாக அணுகுகிறது. இந்த மோதலைப் பாவித்து, சமூகங்களுக்கிடையே கலவரங்களை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் உரிமைகளை வென்றெடுக்க, குறிப்பாக கல்வித் துறையில் மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்க மாணவர்களும் தொழில்சார் அமைப்புக்களும் சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்து வரும் நிலையில், மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது மாணவர்களுக்கு மட்டுமன்றி உரிமைகளுக்காக போராடும் அனைவரினதும் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் என, அக்கட்சியின் மாணவர் அமைப்பான சோசலிச மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற முன்னணி சோசலிசக் கட்சியும் இதே கருத்தை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்தச் சம்பவத்தைப் பாவித்து, இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் பேச்சுக்களைப் பார்க்கும் போது, தென் பகுதியிலுள்ள ஒரு சிலர் இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்த விரும்பாவிட்டாலும், சிலர் இதனைப் பாவித்து வடக்கில் அடக்குமுறையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, மஹிந்த ஆதரவாளர்கள் அதனைத் தான் கூறுகிறார்கள்.

தமது ஆட்சிக் காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தீவிரவாதிகள் செயற்படவில்லை என மஹிந்த கூற முற்படுவது முற்றிலும் தவறானதாகும். அக்காலத்திலும் தென் பகுதிப் பல்கலைக்கழகங்களில் பெரும்பான்மையினத் தீவிரவாதிகள் இருந்ததைப் போலவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், தமிழ்த் தீவிரவாதிகள் இருந்தனர். அவர்கள், புலிகளின் ஞாபகார்த்த தினங்களில் ஞாபகார்த்த நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருந்தன. போர் முடிவடைந்ததன் பின்னரும் இது போன்ற சம்பவங்களுக்காகச் சிலர் கைது செய்யப்பட்டனர். எனவே, இதைப் புதிய நிலைமையாகச் சித்தரித்து பெரும்பான்மையின மக்களைத் தூண்ட மஹிந்த எடுக்கும் முயற்சி, மிகவும் மோசமான அரசியல் என்றே கூற வேண்டும்.

பிரபாகரன் பேராடிய காலத்தில் கூட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறவில்லை என விமல் வீரவன்ச தெரிவிக்கும் கருத்தும் அதே நோக்கத்தில் முன் வைக்கும் கருத்தாகும். புலிகள் போராடிய ஆரம்ப காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அவர்களது கோட்டையாக விளங்கியது என்பதை ஒன்றில் விமல் மறந்திருக்க வேண்டும் அல்லது அது அவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது அதனை மூடி மறைத்து, தற்போது யாழ்ப்பாணத்தில் பயங்கரமானநிலை உருவாகியிருப்பதாகக் கூறி, பெரும்பான்மையின மக்களைத் தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்ட அவர் முயற்சிக்கிறார்.

நாட்டில் இனக் கலவரங்கள் உருவாவதையே இந்தக் கும்பல் விரும்புகிறது போலும். ஏனெனில், அதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக பெரும்பான்மையின மக்களைத் தூண்டி, அதன் மூலம் மக்கள் ஆதரவைத் தம் பக்கம் திருப்பிக் கொண்டு மீண்டும் தாம் பதவிக்கு வர முடியும் என அவர்கள் நினைக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து தற்கொலை அங்கியொன்று கண்டெடுக்கப்பட்ட போதும், மஹிந்த அணியினர் இது போலவே, இதோ பிரபாகரன் உயிர்பெற்று எழும்பிவிட்டார் என்பதைப் போன்று, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி அதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக பெரும்பான்மையின மக்களைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்தார்கள். அப்போதும் தமது ஆட்சிக் காலத்தில் அது போன்ற பயங்கர நிலைமையொன்று உருவாகியிருக்கவில்லை என்றே அவர்கள் கூறினர். ஆனால், மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும், போர்க் காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தின் பின்னால் வெளிச்சக்திகள் செயற்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி வசந்தி அரசரட்ணமும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் கூறினர் என, செய்திகள் கூறுகின்றன. இருவரும், பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பானவர்கள். அவர்கள், வதந்திகளை நம்பி அவ்வாறு கூறியிருப்பார்கள் என நம்ப முடியாது. அவ்வாறாயின், அந்த வெளிச்சக்திகள் யார் என்பதை அவர்கள் அம்பலப்படுத்த வேண்டும். அதேபோல், அச்சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கவும் கூடாது. ஏனெனில், இவ்வாறு மாணவர்களிடையே மோதல்களைத் தூண்டக் கூடிய சக்திகளை விட்டு வைத்தால், அது எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படக் காரணமாகலாம்.

பல்கலைக்கழகத்தில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்பதற்கான வைபவத்தில், பெரும்பான்மையின மாணவர்கள் கண்டிய நடனத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தாலேயே இந்தக் கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற, பல்வேறு கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட மாணவர்கள் இருக்கும் ஓரிடத்தில் இடம்பெறும் நிகழ்ச்சியொன்றின் போது, அந்தக் கலாசார பன்மைத்தன்மை பிரதிபலிப்பதில் தவறில்லைதான். பரஸ்பரம் அவரவரது கலாசார அம்சங்களை மதிப்பதானது, சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்க்கவும் உதவலாம்.

ஆனால், நல்லிணக்கத்தை பலாத்காரமாகத் திணிக்கவும் முடியாது. எனவே, வழமைக்கு மாறான கலாசார அம்சங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளின் போது அறிமுகப்படுத்தப்படுவதானால், அது சகல சமூகக் குழுக்களினது இணக்கத்துடனேயே நடைபெற வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவத்தின் போது, கண்டிய நடனம் அறிமுகப்படுத்தப்படுவதானால், அது அங்கு கல்வி பயிலும் சகல மாணவர்களினதும் இணக்கத்துடன் இடம்பெற்றால் மட்டுமே நல்லிணக்க நோக்கம் நிறைவேறும்.

நல்லிணக்கத்தின் பெயரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வைபவங்களில் பெரும்பான்மையினக் கலை அம்சங்களும் இடம்பெற வேண்டும் என ஒருவர் வாதிடலாம். அந்த வாதம் சரியாகவும் இருக்கலாம். அதேவேளை, தமிழ் மாணவர்கள் வழமைக்கு மாறாக அறிமுகப்படுத்தப்படும் பிற சமூகக் கலாசார அம்சங்களை விரும்பாமல் இருக்கலாம். அவர்களது நிலைப்பாடும் சரியாக இருக்கலாம். இங்கு யார் சரியென்பதல்ல பிரச்சினை. யார் சரியாக இருந்தாலும் ஒரு சாரார் விரும்பாத நிலையில் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் மற்றொரு சாராரது கலையம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது முறுகல் நிலையிலேயே முடிந்துவிடும். மேலாதிக்க மனப்பான்மையிலன்றி, உண்மையிலேயே நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு, அவ்வாறு பெரும்பான்மையின கலாசார அம்சமொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த முயற்சித்தாலும், தமிழ் மாணவர்கள் அதனை விரும்பாவிட்டால் அங்கு நல்லிணக்கம் ஏற்படப ;போவதில்லை. இது பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயம்.

மாணவர்களுக்கிடையிலான மோதலின் காரணமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பெரும்பான்மையின மாணவர்கள் தற்காலிகமாகவேனும் வெளியேறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில், தீவிரப் போக்குள்ளவர்கள் இருப்பது வடக்கில் மட்டுமல்ல. தென்பகுதித் தீவிரவாதிகளும் தென் பகுதிப் பல்கலைக்கழகங்களில் வேண்டுமென்றே பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். தென் பகுதியின் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமொன்றே கடும் தொனியில் விட்டிருந்த அறிக்கையொன்றை நாம் இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தோம். அவ்வாறானவர்கள் மிக இலகுவாகவே மாணவர்களைத் தவறான வழியில் தூண்டலாம். அது பல்கலைக்கழகங்களை மட்டுமன்றி முழு நாட்டையுமே பாதிக்கலாம்.

தமது கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியுமானால், அதேவேளை பிற கலாசாரங்களை மதிக்கும் பக்குவம் இருக்குமானால், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைத்தளங்கள் ஆகியவற்றில பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாய் வாழ்வதும் கடமையாற்றுவதும் சமபந்தப்பட்ட அனைவருக்கும் பயன்தரக் கூடியதாகும். ஏனெனில், அவ்வாறு வாழ்வதனால் பரஸ்பரம் அனுபவம் மற்றும் அறிவு பரிமாறப்படுகிறது.

ஆனால், இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கும் மிகச் சிலரைத் தவிர ஏனையவர்கள் பிற மதங்களை, கலாசாரங்களை, நடைமுறைகளை மதிப்பதில்லை. எனவே, பிற கலாசாரங்களைச் சிலர் வெறுக்கின்றனர். வேறுசிலர், தமது கலாசாரத்தை மற்றவர்கள் மீது திணிக்கின்றனர். உலகின் பல இடங்களில் போர்கள் வெடிக்கக் காரணமாக இருப்பது, இது போன்ற நிலைமைகளே.

பல்கலைக்கழகங்கள், புத்திஜீவிகளைத் தோற்றுவிக்கும் நிலையங்களாகவே கருதப்படுகின்றன. அவ்வாறான இடங்களில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாவது கவலைக்குரிய விடயமாகும், புத்திஜீவிகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இதை விட நாகரிகமான முறைகள் இருக்க வேண்டும்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தமோதல் தொடர்பாக விடுத்த அறிக்கை மிகவும் பொருத்தமானதாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்லினத்தன்மையை குழப்பக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறக் கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, கூட்டமைப்பு, பெரும்பான்மையின மாணவர்களை மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்திருப்பதோடு, அவர்களை வரவேற்குமாறு தமிழ் மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

சுற்றுச் சூழலில் இடம்பெறும் சம்பவங்களைப் பார்த்தே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நாடு பாரதூரமான சட்டத் தொகுதியொன்றை, அதாவது புதியஅரசியலமைப்பொன்றை தற்போது எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. மோசமான சம்பவங்களால் அந்த விடயத்திலும் பாதிப்புக்கள் இடம்பெறலாம்.   

- See more at: http://www.tamilmirror.lk/177473/ப-த-த-ஜ-வ-கள-க-க-ப-ர-த-தமற-ற-ம-தல-#sthash.oZhXtadx.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

  தமிழனின் கல்வி மேலும், பல்கலைக்கழகத்தின் மேலும் எதிரிக்கு எப்பவுமே ஒரு பெறாமை உண்டு. கல்வித் தரப்படுத்தல் சடடம், அப்பப்ப மாவீரர் தினம் வரமுதலே துண்டுப்பிரசுரங்கள் ஒட்டி மாணவர்களை உசுப்பேற்றி, ஆமி, போலீஸ் ரோந்து, கலவர பூமியாய் சித்திரித்து கருத்து வெளியிட்டு சிங்கள மக்களிடம் வரவேற்பு பெறுவது. இதுவெல்லாம் தடைபட்டு, அமைதி நிலவுவதை சகிக்காதவர்கள். பல்கலைக்கழகத்தைக் குறிவைத்து திட்டம் தீட்டி காவல் இருந்திருக்கிறார்கள் என்பது  பிரச்சனை ஆரம்பித்தவுடன் ஒன்றோடொன்று முடிச்சுப்போட்டு அவரவர்  வெளியிடும் கருத்துக்களிலிருந்து தெளிவாகப்புரிகிறது. எதற்காக, எப்படி, யார் என்பதெல்லாம் தெளிவாகத்  தெரிந்தாலும் பழி சுமப்பதும், தண்டிக்கப்படுவதும் என்னவோ தமிழ் இளைஞர்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைகளகத்தை அநுராதபுரத்துக்கு அங்காலை கொண்டுபோய் வைச்சிட்டால் ஒரு பிரச்சனையுமில்லை எண்டு இஞ்சை கொஞ்சப்பேர் கதைக்கினம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தன் அண்ணா. ஆம், நீண்ட நாளைக்குப் பிறகுதான் சந்திக்கிறோம் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/07/2016 at 2:47 AM, ragunathan said:

இப்போது புலியில்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் சிங்களப் பெளத்த பேரினவாதம் ! முடிந்தால்ப் புரிந்துகொள்ளுங்கள் அல்லது எக்கேடோகெட்டுப் போங்கள் !

இதைத்தான் தொடர்ந்து எழுதி வருகின்றோம்.

அடிக்கடி தடுமாற்றம்???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணோய், விமர்சனம் வைக்கிறதால என்னையும் நீங்கள் அந்தப் பட்டியலில் சேத்துவிட்டீங்கள் எண்டு நினைச்சன். மனசில நான் எப்போதும் தமிழன்தான், உங்கள மாதிரி. சாகும்வரை அதை மாத்த ஏலாது. என்ன, அப்பப்ப ஆர் விட்ட பிழையால இப்படி இருக்கிறம் எண்டு நினைக்கேக்கெதான் பாழாய்ப்போன மனசு விமர்சிக்குது ! என்ன செய்ய ?

  • கருத்துக்கள உறவுகள்
On 20.7.2016 at 2:47 AM, ragunathan said:

 

போரில் வென்றுவிட்டோம், நீங்கள் எமது அடிமைகள், நாம் சொல்வதே சட்டம் என்கிற மமதையும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மனோபாவமுமே இன்றைய கலகத்திற்குக் காரணம். கலகத்தின்போது சிங்கள மாணவர்கள் நடந்துகொண்டவிதமும், அவர்களுக்கு பக்கதுணையாக சிங்கள் பொலீஸ் மற்றும் சிவிலுடை அணிந்த ராணுவ புலநாய்வாளர்கள் அக்கறையுடன் செயற்பட்ட விதமும் கூறுவது ஒன்றைத்தான். அதாவது, சிங்கள் அரசும்,ஆதன் இயங்கு சக்தியும், ராணுவமும் அதனோடிணைந்த அனைத்துப் பாதுகாப்புப் பிரிவுகளும் இருப்பதே சிங்களப் பெளத்த பேரினவாதத்தைக் கட்டிக் காப்பதற்காக மட்டுமே.

. இதுதான் அவர்களது மனநிலை.

இதைப் புரிந்துகொள்ளாது, சிங்கள மாணவர்களைத் தாக்கிவிட்டார்கள், இன ஒற்றுமையைக் குலைத்துவிட்டார்கள், பலகலைக் கழகமும் நாடும் நன்றாக இருப்பது இங்கே பலருக்குப் பிடிக்கவில்லை என்பதெல்லாம் ஒன்றில் நடப்பது என்னவென்பதை அறிந்துகொள்ளாமல் அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல் இருப்பவர்களாலேயே கூறமுடியும்.

 

இப்போது புலியில்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் சிங்களப் பெளத்த பேரினவாதம் ! முடிந்தால்ப் புரிந்துகொள்ளுங்கள் அல்லது எக்கேடோகெட்டுப் போங்கள் !

பதிவுக்கும் நேரத்தக்கும் நன்றி.
அனைவரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயம். எங்க சம்பந்தரையாவும் இப்ப சிங்கள தேசிய ஜோதியில் கலந்தபடியால் இதெல்லாம் அவருக்கு ஆக்கிரமிப்பாகத் தெரியாது. அதோட அவருக்கு வலியனுபவம் இல்லைத்தானே. 

19.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.