Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேண்டுதல்

Featured Replies

வேண்டுதல்

 

சிறுகதை: விமலாதித்த மாமல்லன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

p68a.jpg

கிழவர் படுத்த படுக்கையாகி அன்றோடு ஆறாவது நாள். பாத்ரூம் போகக்கூட எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே இருந்துவிட்ட அன்றே, எல்லோருக்கும் சொல்லிவிடுவது எனப் பெண்ணும் மாப்பிள்ளையும் முடிவுசெய்துவிட்டார்கள்.

கிழவரைப் பார்த்துக்கொண்டது என்னவோ இளைய பெண்தான் என்றாலும், அவள் இருந்தது அவர் வீட்டில். இளையவள் சொந்தத்திலேயே மணமுடித்து இருந்ததால், அவர் வீட்டிலேயே சுவாதீனமாய் மாப்பிள்ளையும் தங்கிவிட்டார். அவர் பார்க்கும் வேலைக்கு அதைப்போல இரண்டு வீடுகளை வைத்துக்கொள்ள முடியும் என்பதால், அக்கம்பக்கத்தில்கூட பெரிய வம்பு எதுவும் எழவில்லை. இன்னும் இருந்த இரண்டு மகள்களில் பெரியவள் கல்கத்தாவிலும், நடுவுள்ளவள் பம்பாயிலும் இருந்தார்கள்.

`உடம்பு சுகமில்லாமல்தானே இருக்கிறார்... எமெர்ஜென்சி எதுவும் இல்லையே?' என, கல்கத்தாக்காரி திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். `என்னதான் அப்பா என்றாலும், குறுகிய அவகாசத்தில் புறப்பட வேண்டும் என்றால், விமானத்துக்கு சொளையாக அழுதாக வேண்டுமே' என்கிற கவலை அவளுக்கு. அவள் கணவர் இருந்த, அரசு நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த தனியார் கம்பெனியை, முழுக்கவும் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததில் திடீரென `தங்கக் கைகுலுக்கல்' என ஒரு தொகையைக் கொடுத்து மாலையும் பூங்கொத்துமாக அனுப்பிவைத்துவிட்டார்கள். முந்தி மணந்தாலும் பிந்திப் பிறந்த மகன்களோ +1, +2-வுமாக கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் மதிப்பெண்கள் எடுத்தாலும் எஃப்.சி-க்குக் காசை அவிழ்க்காமல் பொறியியல் கல்லூரி என்பது கானல் நீர். கைகுலுக்கிக் கொடுத்து அனுப்பியதை வைத்துக்கொண்டு, இன்னும் நான்கைந்து வருடங் களுக்கு நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிட்டாக வேண்டும். இதற்கு இடையில் ஆண்டவன் புண்ணியத்தில் யாருக்கும் உடம்புக்கு ஒன்றும் வராமல் இருக்க வேண்டும் என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு மலைப்பாக இருந்தது.

அதுநாள் வரை, அப்பா இருந்த மெட்ராஸ் வீட்டைப் பற்றியோ, அதன் மதிப்பைப் பற்றியோ, அப்பாவுக்குப் பிறகு அதை விற்க நேர்ந்தால் அதில் தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றியோ அவள் கனவில்கூட எண்ணிப்பார்த்தது இல்லை. அப்பா படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து, இப்படி ஓர் எண்ணம் தலைக்குள் தட்டாமாலை சுற்றத்தொடங்கிவிட்டது. அந்த நினைப்பை அகற்ற அவ்வப்போது `சீ... தூ' என அவளையும் மீறி வாய்விட்டுச் சொல்லிக்கொண்டி ருந்தாள். `இவளுக்கு என்ன ஆயிற்று?' என கணவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் தயிர்சாதம் சாப்பிடத் தொடங்கியதும் தன் தட்டை எடுத்து வைத்துக்கொண்டவளுக்கு, இரண்டு வாய் உள்ளே போவதற்குள் குமட்டிக்கொண்டு வந்தது. புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு வாஷ்பேசினுக்குப் போய் வாந்தி எடுத்த பின்னரே சற்று ஆசுவாசம் ஆகிற்று. கணவர், அவள் முதுகையே பார்த்தவண்ணம் இருந்தார். திரும்பியவள், `ஒன்றும் இல்லை... அஜீரணம். கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்' எனச் சொல்லி விட்டு, போட்டது போட்டபடி படுக்கையறைக்குப் போய்ப் படுத்துவிட்டாள். அப்பாவின் உடல்நிலை மோசம் எனத் தெரியவந்தால், எந்தப் பெண்ணால்தான் சகஜமாக எடுத்துக்கொள்ள முடியும். இருந்தாலும் இதில் அவர் செய்ய என்ன இருக்கிறது, ஆறுதல் சொல்வதைத் தவிர. அவளுக்குப் பிறத்தியார் ஆறுதல் சொல்வதா? அவள் இல்லை என்றால், தம் கதியே அதோகதி அல்லவா என்றும் அவருக்குத் தோன்றியது.

`அறுபதைத் தொடப்போகிற வயதில் வேலையில்லா பட்டதாரி ஆகிவிடுவாய்' என்று எந்த ஜோசியரும் சொல்லியிருக்கவில்லை. அவர் வீட்டிலேயே உட்காரத் தொடங்கிய பின்னர் ஒருநாள் தயங்கித் தயங்கி, `வெளியில் ஏதாவது வேலைக்குப் போகலாமே!' என்ற பேச்சை எடுத்தாள். `கெளரவமாக வகித்த பதவிக்குத் தகுந்தாற்போல் வேலை தேடி, வெளியில் அலைந்தால் வீண்செலவுதான் மிஞ்சும். வாழ்நாள் முழுவதும் லஞ்சம் வாங்காமல் கெளரவமாக வாழ்ந்துவிட்டதற்கு, வட்டியும் முதலுமாக `கன்சல்டன்ட்' என்ற பந்தாவான பெயரில், முன்பின் தெரியாதவர்களுக்கு எல்லாம் லஞ்சத்தை வாங்கிக்கொடுக்கும் மாமா வேலை பார்க்க வைத்துவிடுவார்கள்’ என, பிள்ளைகள் எதிரிலேயே வாய்விட்டுச் சொல்லிவிட்டார். அன்று முதல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூடக் குறைந்துவிட்டது.

அப்பா பற்றிய செய்தியை தங்கைதான் கைபேசியில் தெரிவித்தாள்.

``என்னடீது... இருந்தாப்ல இருந்து குண்டத் தூக்கிப் போடறே?''

``ஆமாங்க்கா... நேத்து ராத்திரிகூட நன்னாதான் இருந்தார். எப்பையும்போல உச்சுக்கொட்டி உச்சுக்கொட்டி சூப்பர் சிங்கர்லாம்கூட படுத்த வாகுலையே நன்னா பாத்துண்டிருந்தார். படுக்கிறதுக்கு மின்ன பாத்ரூமுக்குப் போனதுதான் கடைசி. காத்தால கட்டில்லயே போயிட்டார். அப்பா அப்பாங்கிறேன், கண்ணுலேர்ந்து தாரைத் தாரையா ஜலம்தான் வழியறது. வாயைத் தொறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிறார்'’ என்று சொல்லிக்கொண்டே போனவள், உடைந்து அழத் தொடங்கிவிட்டாள்.

``என்னடீ சொல்றே. டாக்டர் வந்து பார்த்தாரா?''

``டாக்டர்லாம் டெய்லி வந்து பார்த்துட்டு போயிண்டுதான் இருக்கார். ஒரு இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லை.''

``உங்காத்துக்காரர் என்ன சொல்றார்?''

``அவர்தான்க்கா, `டிக்கெட் கிடைக்கிறது கஷ்டம். கல்கத்தாக்காவுக்கு மொதல்ல சொல்லிடு'ன்னார்.''

``அவ என்னடி பண்றா. அவளுக்கு நியூஸ் தெரியுமோ?''

``அவளாவே சித்த நேரம் மின்ன யதேச்சையா போன் பண்ணி, `அப்பா என்ன பண்றார்? அவராண்ட போனைக் குடு, பேசணும் போல இருக்கு'னு கேட்டாக்கா.''

``என்னடீ சொல்றே?''

``ஆமாங்க்கா. விஷயத்தைச் சொன்னதும், `என் நாக்குல சனிடீ'னு துடிச்சுப் போயிட்டா. மத்தியானம் ஃப்ளைட்டைப் பிடிக்கிறதா சொல்லியிருக்கா.''

இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந் திருந்தால், மெட்ராஸ் தங்கை அவளாகவே விமான டிக்கெட் புக் பண்ணிக்கூடக் கொடுத்திருப்பாள் என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏற்கத்தான் மனம் வரவில்லை. இதெல்லாம் அவளுக்கு ஒரு பணமே இல்லை. என்றாலும், ஏற்றுக்கொள்வது நன்றாகவா இருக்கும் எனத் தோன்றியது.

சட்டென ஏதோ தோன்றிற்று. விலுக்கென படுக்கையில் இருந்து எழுந்து ஹாலுக்கு வந்தாள். அவர் செருப்பைக் காணவில்லை. உள் தாழ்ப்பாள் போடப் படாமல் மூடப்பட்டிருந்த கதவு வெறிச்சென இருந்தது. அவர்தான் கதவுப் பூட்டைப் பூட்டிக்கொண்டு போயிருக்கிறார். இன்னொரு சாவி டி.வி பக்கத்தில் இருந்தது. கண் அனிச்சையாக அந்தப் பக்கம் பார்த்து, சாவி இருப்பதை உறுதிசெய்து கொண்டது. ட்ரெய்னுக்கு டிக்கெட் புக் பண்ணத்தான் போயிருப்பார். அவர் வீட்டில் இருக்க ஆரம்பித்தது முதலாகவே, பசங்க படிப்பு கெடும் என்ற காரணத்தை வைத்து, இன்டர் நெட்டைத் துண்டித்தாயிற்று. இந்த இழவெடுத்த சூப்பர் சிங்கர் மட்டும் இல்லை என்றால், டி.வி-யையும் துணி போட்டு மூடிவைத்துவிடலாம். சின்ன வயதில் பாட்டு கற்றுக்கொண்ட பாவத்துக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

அப்பாதான் `அவள் பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும்' என ஒற்றைக்காலில் நின்றார். அவள் பாட்டுக் கச்சேரி அரங்கேற்றம், தெருக்கோடிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் விமர்சையாக நடந்தது. அதைப் பார்க்க அம்மாவுக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை. அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டாள். மூன்று பெண் குழந்தைகளையும், அம்மாவுக்கு அம்மாவாக இருந்து அப்பாதான் வளர்த்தார். இதே மாதம் விஜயதசமி அன்றுதான் அம்மா போய்ச் சேர்ந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் விஜயதசமி என்பது நினைவுக்கு வர, வயிற்றில் பந்து சுருண்டது. அவருடைய அம்மாப் பாட்டியின் சாயலில் அவள் இருப்பதால்தான் பாட்டியைப் போலவே, அவளுக்கும் பாட்டு நன்றாக வருகிறது என வாய்க்கு வாய் சொல்லி மாய்ந்துபோவார் அப்பா. பெண் பார்க்க வந்தபோது பாடியதுதான் கடைசி. கல்யாணம் முடிந்து கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த பின்னர் `குழந்தை... குழந்தை!' என 10 வருடங்கள் கண்ட கண்ட மருந்து மாத்திரைகளைத் தின்று, பிள்ளைப்பேறுக்கு முன்பே உடல் பெருத்து, குரல் முரடாகிப்போனது.

அவர் டிக்கெட் புக் பண்ணியாயிற்று என போன் பண்ணுவதற்குள், அப்பா எழுந்து உட்கார்ந்துவிட்டார் என்ற செய்தி வந்துவிடட்டும் என்று, ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து சுவாமி முன்பாக வைத்தாள். பக்கத்தில் இருந்த பித்தளைப் பெட்டியில் கல்யாணம் ஆனது முதல் முடிந்துவைத்தவை வேண்டிய மட்டுக்கும் இருந்தன. சில பிரார்த்தனைகள் நிறைவேறியிருந்தன; பல நிறைவேறியது இல்லை என்ற எண்ணம் மின்னல் கோடாக நெளிந்து மறைந்தது. `தெய்வக் குத்தம்' என, கை அனிச்சையாக மோவாயைத் தொட்டுக்கொண்டது.

ப்பாவைக் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. பார்த்ததும் முதலில் தோன்றிய நினைப்பே, எப்போது வேண்டுமானாலும் போய்விடுவார் என்பதுதான். சகோதரிகளிடம் வாய்விட்டுச் சொல்லியேவிட்டாள்.

p68b.jpg

``என்னடீது, இப்படி இருக்கார்? நாளைக்குத் தாண்டுவாரான்னே தெரியலையேடீ.''

``ஒரு வாரமாவே இப்படிதான்க்கா இருக்கார். எவ்ளோ மாத்திரை மருந்து குடுத்தும் ஜுரம் இறங்கவே மாட்டேங்கறது.''

நெற்றியில் இருந்த ஈரத் துணியைத் திருப்பிப் போட்டாள் இளையவள்.

``இப்படித்தான்டி ஒரு விஜயதசமியன்னைக்கு அம்மா போய்ச் சேர்ந்தா...'' என்றாள்.

``வாய அலம்புடீ'' என்றபடி பம்பாய்க்காரி விசுக்கென இடம்விட்டு அகன்றாள்.

மாப்பிள்ளை, டாக்டர் மாமாவைக் கூட்டிக்கொண்டுவந்தார். அவர், அப்பாவின் பால்யகால சிநேகிதர். அப்பாவும் அவரும் ஒரே தெருவில் ஒன்றாக விளையாடியவர்கள் என்று, அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.

``என்னைக் கூப்பிடணும்னு உங்களுக்கெல்லாம் இப்பதான் தோணித்தா?'' என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார்.

அப்பாவின் அருகில் சென்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், ``டேபிள் ஃபேன், பெடஸ்டல் ஃபேன்னு பக்கத்தாத்து அக்கத்தாத்துல இருக்கிறதை எல்லாம் கொண்டாந்து சுத்திவைங்கோ. அனல் இங்க அடிக்கறது'' என்று உருட்ட ஆரம்பித்துவிட்டார்.

``மாமா... பொழச்சுப்பாரா?'' என்றாள் பெரியவள் மெல்லிய விம்மலுடன்.

``என்னை எதுக்குக் கூப்ட்ருக்கேள். அவ்ளோ சுலபத்துல இவனைப் போகவிட்ருவேனா?''

``மாமா, ஏதோ எங்க ஆறுதலுக்காகச் சொல்றேள். எனக்கென்னவோ நம்பிக்கையே இல்லை.''

``நீ எப்ப வந்தே?''

``நீங்க வர்றதுக்கு அரை மணி மின்ன.''

``இப்பதான வந்தே. ஒரு வாரமா இவனோடயே இருந்தா மாதிரி பேசறே.''

``அதுக்கு இல்லே…'' - புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டாள்.

டாக்டர் மாமா போன் போட்டார். யார் யாரோ வந்தார்கள். ஆம்புலன்ஸ் வந்தது. அப்பா ஆபத்தான கட்டத்துக்குப் போய்கொண்டிருக் கிறார். ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துக்கொண்டு போகப்போகிறார் என பெரியவள் நினைத்தாள். கிசுகிசுத்தக் குரலில் சகோதரிகளிடம் அரற்றவே ஆரம்பித்துவிட்டாள், ``அவ்ளதான்போல. நேக்கென்னவோ பயமா இருக்குடீ'' என்று.

ஹாலில் வேட்டியை விரித்து அப்பாவைக் கட்டிலில் இருந்து அப்படியே தூக்கிக் கீழே படுக்கவைத்தார். ஃபேன் காற்றில் அசைந்த நான்கு முழம் வேட்டியைத் தவிர ஒற்றை அசைவு இல்லாது பொம்மைபோல நடுக்கூடத்தில் படுக்கவைக்கப்பட்டிருந்தார் அப்பா. டாக்டர் மாமா என்ன செய்கிறார் என யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஆம்புலன்ஸில் இருந்து ஆளுயரத்துக்கு நீள நீளமாக இரண்டு ஐஸ் பார்களை நான்கைந்து பேர் கொண்டுவந்து, அப்பாவுக்குப் பக்கவாட்டில் வைத்தார்கள். ஸ்கூல்விட்டு வந்த குழந்தைகள் இரண்டும் யூனிஃபார்மைக்கூடக் கழற்றாமல் விதிர்த்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

அப்பா பக்கத்தில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார் டாக்டர் மாமா. ஒருத்தர் ஒரு வார்த்தை பேசவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தவர் நெற்றியைத் தொட்டுப்பார்த்தார். அப்பாவின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்துவிட்டு, ``அரை மணி கழிச்சு போன் பண்ணுங்கோ'' என்று மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டு, ``பயப்பட ஒண்ணும் இல்லை, எழுந்துடுவான். கொஞ்சமா கஞ்சி ரெடி பண்ணி வெச்சுக்குங்கோ'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போயேவிட்டார்.

``என்னடீது... இந்த மனுஷன் ஏதோ ஜோசியக்காரராட்டமா இப்படிச் சொல்லிட்டுப் போயிட்டார். அவர் நிலைமை எழுந்திருக்கிறா மாதிரியா இருக்கு?'' என்று புலம்பத் தொடங்கிவிட்டாள் பெரியவள்.
இரண்டு சகோதரிகளும் எவ்வளவு சொல்லிப் பார்த்தும், அவள் வாய் ஓய்வதாக இல்லை. ஏதோ பிரமை பிடித்தவள்போல, ``அவர் எழுந்திருக்க மாட்டார். எனக்கு நம்பிக்கையே இல்லை'' என்று வறண்ட கண்களும் கம்மிய தொண்டையுமாகச் சொன்னதையே, திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

விளக்கு வைக்கும் நேரம் ஆகிவிட்டது. அப்பாவிடம் எந்த அசைவும் இல்லை. கஞ்சி ஆடைகட்டிவிட்டிருந்தது. பெரியவளின் அரற்றல் வேறு, எல்லோரையும் மிக மோசமான இரவை எதிர்நோக்க வைத்துக்கொண்டிருந்தது.

அப்பாவின் கட்டைவிரல் ஆடியதை முதலில் பெரியவள்தான் பார்த்தாள். பார்த்தவள், மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த பீதியில் மிரண்டவர்களாக, மற்றவர்கள் அப்பாவைப் பார்த்தார்கள். அவர் மெள்ள கை - கால்களை அசைக்கத் தொடங்கியிருந்தார். குதூகலத்தில் வீடே திமிலோகப்பட்டது.

பெரியவள், அப்பாவையே வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். அவளை யாரும் கவனிக்கக்கூட இல்லை.

டாக்டர் மாமா கூறியதுபோல கொஞ்ச நேரத்தில் அப்பா எழுந்து உட்கார்ந்துவிட்டார். இளையவள் ஸ்பூனில் ஊட்டிய கஞ்சியை சப்புக்கொட்டி சாப்பிட்டபடி அவளைப் பார்த்து, நெஞ்சுக்கூட்டில் மூச்சிளைக்க, ``என்னடீ, எப்படி இருக்கே, எப்போ வந்தே, மாப்ள செளக்யமா இருக்காரா, பசங்க எல்லாம் எப்டி இருக்கா?'' என்றார்.

அவள் வெடித்து அழுதாள். ஏன் அழுகிறாள் என அவர் உள்பட யாருக்கும் புரியவில்லை. எல்லோரும் அவளை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.