Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவத்தகன்னி

Featured Replies

செவத்தகன்னி - சிறுகதை

சிறுகதை:சிவக்குமார் முத்தய்யா, ஓவியங்கள்: ஸ்யாம்

 

p74a.jpg

காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெள்ள ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாகக் கொட்டித்தீர்த்த வெயில் குறைந்து, தெற்கே இருந்து மெல்லிய காற்று வேப்பம்பூக்களின் வாசனையோடு வீசியது. சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டும், ‘முக்கூட்டில்’ இருக்கும் சலீம்பாய் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டும் வரவேண்டும் எனக் கிளம்பியிருந்தாள். முக்கூட்டுக்கும் ஓர்ச்சேரிக்கும் மூன்று மைல் தூரம். இதைக் கடந்துதான் டவுனுக்குப் போக வேண்டும் என்பதால், முக்கூட்டில் இருந்துதான் நாலு ரோட்டுக்கு பஸ் பிடித்து, 20 மைல் தொலைவில் உள்ள தஞ்சாவூருக்குப் போக முடியும். அவை எல்லாம் உடனே நடந்துவிடும் காரியம் அல்ல. ஒருநாள் பொழுதும் செலவாகிவிடும். அதோடு குறைந்தது ஒரு ஐந்நூறாவது வேண்டாமா... தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டாள்.

நடைவேகத்தில் அவள் அணிந்திருந்த ஆடை சரக் முரக் என ஓசை எழுப்பியது. இருபுறங்களிலும் தரிசாகக்கிடந்த வயல்களில் நெற்தாள்கள் மக்கிக் கிடந்தன. பயிரெடுப்பு முடிந்திருந்தது. தூரத்தில் ஒருவர் ‘கிளுக்கி’வைத்து நண்டு பிடித்துக் கொண்டிருந்தார். வளராத இளம் வெள்ளை நத்தைக்கூடுகளை ஆற்றுமணலில் பொறுக்கி யெடுத்து சிறு துளையிட்டு மெலிதான இரும்புக் கம்பியில் கோத்து ஆட்டினால், சலங்கைபோல சத்தம் எழும். இதையே சணலில் கோத்துக் கட்டிக்கொண்டு சிறுவர்கள் குறவன் - குறத்தி ஆட்டம் ஆடி மகிழ்வார்கள். கம்பியில் கோத்த சலங்கையை மூங்கில் குச்சியில் வளைத்துக் கட்டி, வரப்பில் இருக்கும் நண்டு வளைகளில் உள்ளே விட்டு, குச்சியை முன்னும் பின்னுமாகத் திருப்ப வேண்டும். அப்போது எழும் சத்தத்தைக் கேட்டு உள்ளே இருக்கும் நண்டு, மழை பெய்கிறது என வெளியே வரும். முகப்பவுடர் டப்பாவில் இருக்கும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்க வேண்டும். மழைதான் என்று நம்பி, நண்டு மேலே வரும்போது கிடுக்கிக் குச்சியால் பிடித்து, சாக்குப்பையில் போட்டுக் கொள்ளலாம். இது இந்தப் பகுதிக்கான நண்டுபிடி நுட்பம். அதுவும் வைகாசி மாதத்து நண்டுக்கு அப்படி ஒரு சுவை. தை மாதத்தில் இருந்து மழை குறைவு என்பதால், ‘வளை’யில் நீர் தேங்குவது அரிது. தொடர்மழையும் மிக மிகக் குறைவுதான் என்றாலும், ஆடி மாதம் வரைக்கும் நீரைத் தேக்கிவைக்கும் திறன்கொண்டவை நண்டுகள். பங்குனி மாதம் கர்ப்பக்காலம் என்பதால், அதற்கான நீரை உடம்பிலும் வளையின் பள்ளத்திலும் சேமித்துக்கொள்ளும். இப்போது அங்கே நண்டு பிடிப்பது பூசாரி தாத்தாவாகத்தான் இருக்க வேண்டும். அவர் இதுபோன்ற வேலைகளில் அபார நுட்பம்கொண்டவர். கோடைக்காலத்தில் தினம் நண்டு பிடித்து, 200 ரூபாய்க்காவது விற்றுவிடுவார். மீண்டும் உற்றுப்பார்த்தாள். அவரைப்போலத்தான் தெரிந்தது.

எதிரே பைக்கில் வேட்டி சட்டையில் வந்த ஒருவன், செவத்தகன்னியை இடுப்புக்கு மேலாக ஒரு மாதிரி பார்த்து உதட்டைப் பிதுக்கினான். சட்டெனப் பார்த்தவள், விலகிக்கிடந்த தாவணியை எடுத்துப் போட்டுக்கொண்டாள்.

“நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு எவ கிடைப்பானு அலையுறானுங்க.”

நடை வேகமானது.

பரபரப்பாக இருந்த கடைத்தெருவில் பன்னீர் சைக்கிள் கம்பெனியில் இரண்டு ஆட்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். சைக்கிள் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. உட்கார்ந்த நிலையில் சைக்கிளுக்கு பெண்டு எடுத்துக்கொண்டிருந்தார்.

இவளைப் பார்த்ததும், “வாம்மா... சைக்கிள் போட்டு எத்தினி நாளாச்சு? ஆள் சொல்லி அனுப்பிச்சாதான், அம்மா வருவீங்களோ?” என்றார்.

``இல்லிங்க. காசு இல்லாமப்போச்சு, அதான்'' என முனகினாள். எதிர்த்துப் பேசினால் அவ்வளவுதான். கோபக்காரர்; ஆனால், நல்ல தொழிற்காரர்.

அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு சைக்கிள் பின் டயர் காற்றை அழுத்திப்பார்த்தாள். நங்கென்று அழுத்தமாக இருந்தது. குயில்தோப்பு பக்கம் சைக்கிளை விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்கே மண் சாலையில் ஈச்சம் முட்கள் நிரவிக்கிடக்கின்றன. காட்டுக்கருவை முட்கள் வேறு கொத்தாக டயர்களைப் பதம்பார்த்துவிடுகின்றன.

பாய் கடையில் சாமான் வாங்கும்போது கடையில் நாலைந்து பேர் நின்றிருந்தார்கள். பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களும் கைலியைத் தூக்கிக் கட்டியிருந்தது அவர்களின் உள்ளாடை தெரியும் அளவுக்கு இருந்தது.

அவர்களில் ஒருவன் செவத்தகன்னியிடம் நெருங்கிவந்து நின்றான். அழுகிய பழவாசனை வீசியது. அந்த வாசனையை அவள் எப்போதோ எவரிடமோ உணர்ந்த வாசனை. சட்டென
பின்வாங்கினாள். அவர்கள் வாங்க வந்த பொருளை வாங்காமல் இவளையே உற்றுப்பார்ப்பதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது.

“சொல்லுங்கப்பா... உங்களுக்கு என்ன வேணும்?'' - சலீம்பாய் அவர்களைப் பார்த்துக் கடிந்துகொண்டார்.

“சிகரெட் குடுங்க...”

அவர் எடுத்துக்கொடுத்தார்.

ஒருவன் நெருங்கிவந்து செவத்தகன்னியிடம் “உன் பேர் என்ன?” என்றான்.

பதில் சொல்லாமல் சலீம்பாயைப் பார்த்தாள்.

“பொழப்பைக் கெடுக்காதீங்கடா சாமீகளா! வட்டிக்கு வாங்கிப்போட்டு, வியாபாரம் பண்ணிக்கிட்டுக் கெடக்கேன்''

அவர்கள் விலகிப்போனார்கள்.

பொழுது ஏறிவிட்டிருந்தது. அந்த இருவரும் பாண்டியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லை என்றால், இவ்வளவு துணிச்சலாக கடைத்தெருவில் நடந்துகொள்ள மாட்டார்கள்.

பொழுது இருள்கொண்டது. கடைத்தெருவில் ஆட்களின் சலசலப்பு, குடிகாரர்களின் வாக்குவாதங்கள், டீக்கடைகளில் சுடப்படும் பஜ்ஜி, அந்தியில் விற்கப்படும் குரவை மீன், கீச்சலான குரலில் கருவாடு விற்கும் பாட்டி, மேற்கே இருக்கும் சாராயக் கடையில் இருந்து மது அருந்திவரும் மனிதர்கள், சற்று தூரத்தில் இருந்த இரும்புப் பட்டறையில் அழுத்தமாக அடிக்கப்படும் கம்பிகளின் சத்தம், துருத்திகளில் சுத்தப்படும்போது எழும் தீப்பொறிகள், கரை வேட்டிக்காரர்கள் பூட்டிய அரிசிக் கடையில் உட்கார்ந்து அடிக்கும் அரட்டை, அங்கங்கே நிற்கும் நடுவயதுக்காரர்கள் இடுப்புக்கு மேலே செலுத்தும் கூர்மையான பார்வை, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் அறிமுகம் இல்லாத பயணிகள், பஞ்சர் ஒட்டுவதில் தீவிரம்கொண்டிருக்கும் சைக்கிள் கம்பெனிக்காரர்... இப்படியாக ஓர் ஒழுங்கமைவில் குடியிருந்தாலும், சற்று தூரத்தில் யாரோ தன்னைக் குறிப்பார்ப்பதைப்போல உணர்ந்த செவத்தகன்னிக்கு, உள்ளுக்குள் அச்சம் துளிர்த்தது. சைக்கிளில் ஏறினாள். கூட்டமாகவும் தனித்தும் கூடு திரும்பும் பறவைகள், குரலிட்டு அங்கும் இங்கும் அலைந்தன.

சாலையின் இருபுறங்களிலும் வேலிக்கு அரணாக கிளுவை, உதயன், கல்யாணமுருங்கை, வாதமடக்கி மரங்களும் அடர்கொண்ட நல்லகாட்டாமணிகளும், பிண்ணாக்குச் செடிகளும் வளர்ந்து நின்றன. இடைவெளியிட்டு இருந்த இந்த மரங்கள் இடையே ஓரிரு பனை மரங்களும் இருந்தன. அதில் குலைதள்ளிக் கிடந்த காய்கள், தாகம்கொண்டவர்களைக் கூவி அழைத்துக்கொண்டிருந்தன. பொருட்களை பாலித்தீன் பையில் வைத்து ஹேண்டில்பாரில் மாட்டியிருந்தாள். நடைப்பயணமாக வரும் ஆட்கள் பொழுதுபோகும் முன்னே வந்து சென்றுவிட்டார்கள்போல. இருள்கொண்ட சாலை வெறிச்சோடிக்கிடந்தது. சைக்கிள் இருக்கைக்கு ஒரு ஸ்பாஞ்ச் வைக்கச் சொல்லியிருக்கலாம். பாறாங்கல் போல இறுக்கமாக இருந்தது. இருந்தாலும், இருள்கொண்ட அந்தியில் தவழ்ந்து வரும் காற்று, சித்திரை மாதத்தின் வெக்கையைத் தணித்தது. வேகமாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்தாள். பின்னால் வேகமாக வெளிச்சமிட்டு பைக் சீறிவரும் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்க்கும் முன்னர் செவத்தகன்னியைக் கடந்து, சில அடிகள் தள்ளி நின்றது. இதை எதிர்பார்க்காத அவள் பதற்றத்துடன் பிரேக் பிடித்து சைக்கிளை நிறுத்தினாள். பைக்கில் இருந்து இறங்கிய ஒருவன், இவள் அருகில் வந்தான். அவன் முகம் துல்லியமாகத் தெரிந்தது. இவள் பிடித்திருந்த சைக்கிள் ஹேண்டில்பாரைப் பிடித்த அவன், ``உனக்கு என்ன ஊரு?'' என்றான்.

“ஓர்ச்சேரி”

“ஐந்நூறுவா இந்தா... வாங்கிக்கோ.”

“வேண்டாம்... போங்க.”

“ஒரு அரை மணி நேரம் எங்கிட்டே பேசிட்டுப் போ...” - உடல் நடுங்கியது செவத்தகன்னிக்கு. வார்த்தை குழறியது. சைக்கிளில் ஏறி ஓடிவிடலாம் என முயற்சித்தாள்.

மற்றொருவனும் இவள் அருகில் வந்து தொடக் கூடாத இடத்தில் தொட்டான். காறி `தூ'வெனத் துப்பினாள். வடக்கே இருந்து ஒரு ‘பைக்’ வந்ததும், இவளைவிட்டு விலகி, பைக்கை எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். வியர்வையில் நனைந்துவிட்டது உடல்.

குலதெய்வம் நொண்டிவீரனைக் கூப்பிட்டுக் கொண்டே சைக்கிளில் ஆக்ரோஷமாக மிதிக்கத் தொடங்கினாள். எதிரே வந்த பைக்கில் மூன்று பேர் முண்டியடித்துக்கொண்டு உட்கார்ந்து போனார்கள். ஊர் எல்லைக்கு அருகே இருந்த சுடுகாட்டு வாய்க்கால் மதகில் உட்கார்ந்து, இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைக் கடந்துபோகும்போது, ஒற்றை நாய் தெற்கு பார்த்து அழுதுகொண்டிருந்தது. ஓர்ச்சேரி மெலிதான வெளிச்சத்தில் இருந்தது. காட்டாற்றின் கரையில் கிழக்கும் மேற்குமாக படுகையில் மூன்று தெருக்களில் குடிவந்து இருந்தார்கள்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ‘கல்’வைத்து கட்டிய மூன்று வீடுகளைத் தவிர அத்தனையும் மண்ணால் சுவர் எழுப்பி, பனை ஓலையால் கூரைவேய்ந்த வீடுகள். வடக்குப் பார்த்து காட்டாற்று கரையில் இருந்த வீட்டில் வந்து இறங்கியபோது, துகில் உரியப்படும் முன்னர் துரியோதனன் சபையில் இருந்து தப்பிக்க முயலும் திரௌபதியின் முனைப்பு ஞாபகத்துக்கு வந்தது செவத்தகன்னிக்கு. இலவச குண்டு மின்சார பல்பு வீட்டுக்குள் வெளிச்சமிட்டுக்கொண்டிருந்தது. வாசலில் ஆடுகள் படுத்திருந்தன. சைக்கிளில் இருந்து இறங்கி உள்ளே குரல்கொடுத்தாள். இவளது அம்மா முனியம்மா முறத்தில் கொட்டிய அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்தாள். இவள் வருவதைப் பார்த்ததும், “ஆச்சி... ஏன் இம்புட்டு லேட்டு?” என்று கேட்டாள்.

“கடையில ஒரே கூட்டம்.”

வரும் வழியில் நடந்த விஷயத்தைச் சொன்னால், ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடும் என, நடந்ததை வெளிக்காட்டாமல் பாலித்தீன் பையில் இருந்த பொருட்களைக் கீழே கொட்டிப் பிரித்து வைத்தாள். கொடாப்பில் அடைபடாத கோழிகள், சுவரில் உட்கார்ந்து செவத்த கன்னியைப் பார்த்தன. பொழுது ஏறிவிட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் போதும் என இருந்தது. எதிர்காலம் குறித்த பயம் உருவானது.

சுடரும் மின்மினிகள் இல்லாத இந்த இரவைப்போல, பௌர்ணமி தேயும் வெளிச்சத்தைத் தருவதைப்போல வாழ்வு குறித்த எல்லா கணிப்புகளும் பொய்யாகிக் கொண்டிருந்தன. எல்லாம் அவனால் அப்போது எடுத்த முடிவு, பெரும் தோல்வியைத் தந்துவிட்டது. மஞ்சள் வெளிச்சத்தைப் படரச்செய்யும் அந்த பல்பை நிறுத்தலாம்போல் இருந்தது. அம்மா உடல் வலியால் முனகுவது ேகட்டது.

பருத்தி வயல்களில் பொழுதுக்கும் பஞ்சு எடுப்பது சற்று சிரமமான வேலை. தகிக்கும் வெயில் ஒருபுறம் என்றாலும், காய்ந்த பஞ்சுகளை எடுக்கும்போது, கண்களுக்குத் தெரியாத தூசிகள் பறந்து கண்களில் படியும். வயலில் சற்று ஈரம் இருந்தாலும் குளிர்ச்சி கிடைக்கும். அது இல்லை என்றால், புழுங்க வேண்டியதுதான். ஒரு வாரமாக கீழ்கட்டளையில் அம்மாவும் மகளும் பஞ்சு எடுத்ததால், கையில் கொஞ்சம் பணம் சேர்ந்து இருந்தது.

சட்டியில் இழையும் உயிர் நண்டுகளைப் பிடித்து, தேவை இல்லாத பகுதிகளை நீக்கிக்கொண்டிருந்தாள் அம்மா.  பேசிக்கொள்ள வார்த்தைகள் தீர்ந்துபோனதுபோல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தெருக் கடைசியில் இருந்த அமுதா வந்தாள்.

“ரெண்டு, மூணு நாளா நாக்குக்கு ஒனக்கையே இல்லாமபோச்சு. துக்கினிக் கொழம்பு குடு கன்னி.”

“ம்.”

“ஆமா வாங்கடி... நீங்க நல்ல கறி பொல்ல கறி ஆக்கினா மட்டும், கதவை அடைச்சுக்கிட்டுத் துன்னுங்க. நாங்க ஆக்கினா மட்டும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு வாங்க” என்றாள் செவத்தகன்னியின் அம்மா.

“என்ன அத்தே இப்படிச் சொல்லிபுட்டே,

நீ என்னத்தக் கேட்டு நான் இல்லைனு சொன்னேன்?”

பூண்டு வாசத்துடன் அடுப்பில் குழம்பு கொதித்துக்கொண்டிருந்தது.

“கொதிக்கட்டும் ஒக்காரு அண்ணி” - அமுதாவின் கையைப் பற்றி நீள்வாக்கில் கிடந்த பெஞ்சில் அமர்த்தினாள் செவத்தகன்னி. சில மணி நேரத்துக்கு முன்னர், நடந்த அந்த விஷயத்தைச் சொல்லலாமா எனத் தோன்றியது. வேண்டாம் என நிறுத்திக் கொண்டாள்.

p74b.jpg

அமுதா தனது வீட்டுக்காரன் பற்றிய குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கினாள். இது கேட்டுக் கேட்டு அலுத்துப்போன விஷயம். ஆனாலும், அவள் சொல்லச் சொல்ல ‘ம்’ போட்டு கேட்டுக்கொண்டிருந்தாள். முனியம்மாள் கிண்ணத்தில் குழம்பையும் நண்டு துண்டங்களையும் போட்டுக் கொடுத்தாள். கிளம்பிப் போனாள் அமுதா. சாப்பிட்டுவிட்டுப் படுத்தபோது இரவாகிவிட்டது.

நாளைக்கு யாருக்கு பஞ்சு எடுக்கப்போவது என தெரியவில்லை. பார்த்துக்கொள்ளலாம் எனப் படுத்தாள்.

கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்தபோது மடித்தக் கோரைப்பாயின் வாசனையில் இருந்து அறிவழகனின் ஞாபகம் சடுதியில் வந்து, செவத்தகன்னியைத் துன்புறுத்தியது. எப்படியாவது அந்த நினைவுகளில் இருந்து விடுபட நினைத்தாலும், ஏற்படும் அனுபவங்கள் கசப்பின் சுவையைத் தருவதாக இருந்தன. அதனால் ஒவ்வொன்றையும் எளிதாகக் கடந்துவிட வேண்டும் என, ஒவ்வொரு முறையும் முயற்சித்தாள். இந்த உடல் இல்லை என்றால், என்னைப் பின்ெதாடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும் என நினைத்துக்கொண்டாள். இப்போது தன்னை வசீகரிக்க நினைப்பவனும், முன்னால் தன்னோடு வாழ்ந்தவனும் கிட்டத்தட்ட ஒரு முகம் கொண்டவர்களா? வேறு வேறு முகமூடிகளும் ஒப்பனைகளும் கொண்டவர்களா? ஒவ்வொரு முறையும் உடலை ஒப்புக்கொடுத்துதான் அவர்களின் சுயத்தைக் கண்டறிய வேண்டுமா? அனுபவம் அவள் மீது இடைவிடாத ரணங்களைப் பதித்திருக்கிறது. நினைவுகள் சுழன்றன.

த்தாம் வகுப்பு வரை மட்டுமாவது எப்படியாவது செவத்தகன்னியைப் படிக்கவைக்க வேண்டும் என்பதில், அவளின் அப்பா தங்கவேலு உறுதியாக இருந்தார். இரண்டு மகன்களும் உதவாக்கரையாக இருக்கிறார்கள் என்பது அவர் கணிப்பு. பெரியவன் கேரளாவுக்கு மாட்டுக்கறிக் கடைக்குப் போனவன் உயிரோடு இருக்கிறானா... இல்லையா எனத் தெரியவில்லை. அடுத்தவன் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைசெய்து எப்போதோ பணம் அனுப்பினான். இப்போது இல்லை. ஆனால், இந்த இருவருக்கும் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிறந்தவள் செவத்தகன்னி.
இவள் பிறந்த சில மாதங்களில் தங்கவேலுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. மாடுகளைத் தோலுரிப்பதில் மகா கெட்டிக்காரன் தங்கவேலு. சுற்றுவட்டாரக் கிராமங்களில் காணியாச்சிப் பார்க்கும் ஆட்களோடும் நல்ல உறவு இருந்தது. அதேபோல விசேஷக் காலங்களில் ஆடு உரிக்க இவனுக்கு ஏக கிராக்கி. செத்த மாட்டையே ஒரு மணி நேரத்தில் உரிப்பவன் என்றால், ஆட்டுக்கு அரை மணி நேரம்கூட ஆகாது. அப்படி ஒரு லாகவம் அவன் கையில்.

சூரி கத்தியைப் பிடிக்கும்போது அப்படி ஒரு நுட்பம்.

செத்த மாட்டை தரையில் கிடத்தி, கழுத்து மேல்புறமாகத் தாடையைக் கீறி, கீழ்பாகத்தில் இருந்து மெள்ள நகர்ந்து வயிறு, பின்புறம் எனக் கீறி, கைகளை உள்நுழைத்து அழுத்தி, விரல்களைத் தள்ளி, நெம்பி வரும் அழகே அழகு. அப்படி ஒரு நேர்த்தி.

மாட்டுத் தோல் விலையில் கிடைக்கும் பணத்தில், இவனுக்கு முக்கால் பாகம், காணியாச்சிக்காரனுக்கு கால் பாகம் என்பதே ஊதியம். ஆனால், ஆட்டுத் தோல் உரிப்பில் அப்படி அல்ல. உரிப்பவனுக்கே தோல் சொந்தம். தோல் விற்ற வகையில் ஓர் ஏக்கர் நிலமே வாங்க முடிந்தது. அது எல்லாம் செவத்தகன்னி பிறந்த பிறகு என்பதால், அவளைச் செல்லமாக வளர்த்தான். அதனால், இவள் படித்து ஏதாவது ஒரு வேலைக்குப் போகவேண்டும் என்பதிலும், தீவிரம்காட்டினான் தங்கவேலு. ஆனால், பத்தில் தேறி பதினொன்றில் படித்துக்கொண்டிருந்த அந்த மழைக்காலத்தில்தான் தங்கவேலுக்கு காமாலை முற்றி, உடல் சொடிந்துபோனது. தினமும் குடித்த சாராயமும் பீடியும் நோயின் தீவிரத்தன்மையை அதிகரித்திருந்தன. இறுக்கமான நிறத்தில் கடும் வலிமைகொண்டிருந்த உடம்பு, ஓரிரு மாதங்களில் சுணங்கிப்போனது. நாட்டுமருந்துகளும் பத்தியங்களும் பயன் அளிக்கவில்லை. காற்றும் மழையும் கடும்சீற்றம்கொண்ட அந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், தங்கவேலு உயிர் அணைந்தது. அதுவரை சீராகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கை, குழப்பமாகவும் கோளாறாகவும் மாறியது.  இரண்டு அண்ணன்களும் திசைதெரியாமல் போய்விட்டார்கள். அம்மா அவர்களைப் பெற்றிருக்க வேண்டாம் எனச் சொல்லி அழுதாள். பன்னிரண்டில் தோல்வி யடைந்து மேற்கொண்டு படிக்க முடியாமல்போனது.

உறவுக்காரர்கள் எப்போதாவது பார்க்கும்போது நலம் விசாரிப்பதோடு நிறுத்திக்கொண்டார்கள்.
அம்மாவோடு நாற்று நட வயலில் இறங்கினாள்.வயலும் வீடும் அம்மாவும் என, கிராமத்தின் அழிஞ்சை காடுகளில், வயல்வெளிகளில், திடல்களில், பறவைகளின் பாடல்களைக் கேட்கும் முனைப்புகளில், வாசனையோடு பூக்கும் காட்டுமல்லிச் செடியின் தேடல்களில், தோட்டங்களில் வைக்கும் கனகாம்பரம் நட்டுப் பூப்பறித்து கட்டி விற்கும் ஆர்வத்தில், இளமை தரும் இனம்புரியாத மகிழ்ச்சியின் நெகிழ்வுகளில், ஏதோ ஒன்றை அடைய விரும்பும் விருப்பங்களில் திளைத்துக்கொண்டிருந்தாள். வட்டமான முகத்தில் பூக்கும் பருக்களில் உடலில் வழியும் வியர்வை வாசனையில், முகத்தில் மினுங்கும் பொலிவில் ஒரு புதிய மனுஷியாக, தான் இருப்பதையும் தனக்குள் மிளிரத் தொடங்கியிருக்கும் மார்பைப் பார்க்கும்போது ஒருவிதப் பெருமிதம் பொங்கிவழிந்தது.

தங்களது ஒரு ஏக்கர் நிலத்தில் புழுதியடிக்க டிராக்டர் வருவதாக அம்மா முனியம்மா சொல்லி இவளையும் அழைத்தாள். அது ஒரு ஆடி மாதம். ஆனி மாதத்தில் ஒருநாள் கனத்த மழை பெய்ந்தது. அதற்குப் பிறகு எல்லோரும் கோடை உழவு தொடங்கிவிட்டார்கள். வடக்குப் புறமாக நீண்டுகிடக்கும் வயல்வெளிகளில் இடையே ‘துண்டக்கட்டளை’ என அழைக்கப்படும் தங்களது வயல் நல்ல செழுமையான நிலம். இரண்டு போகம் நெல்லும் ஒருபோக காலத்தில் புஞ்சைப் பயிர்களை உளுந்தோ, பயிரோ, எள்ளோ வஞ்சனை இல்லாமல் விளையக்கூடியது. நல்ல வாய்க்கால் பாசனம், ஓடம்போக்கியாற்றில் மதகைத் திறந்தால் போதும்... ஓர்ச்சேரியான் வாய்க்கால் உடைத்துக்கொண்டு ஓடும். ஒரு ஏக்கரும், ஒரு மணி நேரத்துக்குள் பாய்ந்துவிடும். நல்ல வாசனையுள்ள மண். நுகர்ந்து பார்த்தால் பீர்க்கம்பூ வாசனையடிக்கும். வயலின் வரப்புகளில் மூன்று வேப்பமரங்களும் ஒரு கருவேலமரமும் நின்றன.

தாயும் மகளும் வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தூரத்தில் இருந்து வயல்வெளிகளில் ஊர்ந்துவரும் டிராக்டரைப் பார்த்தார்கள். வெயில் சுதி இழந்து கிடந்தது. ஆடிக்காற்று மரங்களை அசைத்து ஆட்டிக்கொண்டிருந்தன. அவன் சிவப்பு சட்டையும் நீலநிற லுங்கியும் அணிந்திருந்தான்.

நடுத்தரமான உயரத்தில் கொஞ்சம்போல வெளுப்பாக இருந்தான். கண்கள் செண்பகப் பறவையின் கண்களைப் போல அவ்வளவு சிவப்பு. அதற்குப் பிறகு அவனைத் தொடர்ந்து சந்திக்கவேண்டி இருந்தது. வயல்வெளிகளில், தெருக்களில், சாலைகளில் ஏதோ ஒன்றைத் தேடி அலைபவன்போல் தெரிந்தான். அவனைப் பார்க்கும் ஒவ்வொரு சந்திப்பிலும் அவன், இவளை வெறித்துப் பார்த்துக்கொண்டே, ஈர்த்துக்கொண்டே இருந்தான். ஒருநாள் வடக்குவெளியில் நடவுக்குச் சென்றுவிட்டு தனியாக வந்தபோது, கொல்லுருரான் வாய்க்கால் மதகடியில், நீண்ட வரிசையிலான பனைமரங்களின் இடையே வந்து கொண்டிருந்தான். எதிரே வந்தபோது கண்ணடித்து அழைத்தான். போவதா... வேண்டாமா எனத் தயங்கி நின்றாள். ஆனாலும் நடுக்கத்துடன் அருகே போனபோது வெடுக்கென கையைப் பற்றி உள்ளங்கையில் அழுத்தமாக உதடு பதித்தான். உதறியடித்துவிட்டு, வேகமாக ஓட்டம் பிடித்தாள்.

இரவு எல்லாம் உறக்கம் இல்லை. பார்த்த சினிமா படங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. பிறகான பொழுதுகள் மரங்கள் அடர்ந்த தோப்புகளிலும் புதர்கள் மண்டிய திடல்களிலும் அந்திக் கருக்கலிலும் நிழல்களைப்போல அவனோடு ஊடாடிக்கிடந்தாள். பல உச்சிவெயில் பொழுதுகளில் முனியம்மா, மகளைத் தேடி அலைந்தாள். தெருப் பெண்கள் ஜாடைமாடையில் அவளிடம் ஏதோ சொன்னார்கள். எதுவும் புரியாத புங்கன்கட்டையாகக் குழம்பித் தவித்தாள்.

குறுவை சாகுபடி முடிந்து, சம்பா நடவு தொடங்கியிருந்த முதிர்வெயில் கொண்ட புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில், ஒரு மஞ்சள் பை நிறையத் துணிகளை எடுத்துக் கொண்டு முக்கூட்டு பக்கம் செவத்தகன்னி போவதைப் பார்த்த ஊர் தலையாரி தங்கையன், வந்து முனியம்மாவிடம் சொன்னான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை... டிராக்டர் டிரைவர் அறிவழகனோடு, செவத்தகன்னி ஓடிப்போன விஷயம் ஊர் எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கு அறுக்கப்பட்ட ஆட்டைப்போல வீட்டின் வாசல்படியில் அமர்ந்து பிதற்றிக்கொண்டிருந்தாள் முனியம்மா. சிறுவர்களும் வயதான பெண்களும் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள். தெரு ஆட்கள் வந்து கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். ஓர்ச்சேரி மூன்று தெருக்களை உள்ளடக்கிய மொத்த ஜனக்கட்டும், மையமான பொது புளியமரத்தடியில் இரவில் கூடி விவாதித்தார்கள். நாட்டாமை, பஞ்சாயத்து உள்ளிட்டவர்கள் இது கிராம கௌரவப் பிரச்னை என்றும், அந்த டிராக்டர் டிரைவர் அறிவழகன் பத்து மைலுக்கு அப்பால் இருந்து வந்தவன் என்றும், உடனே அவன் கிராமமான குழிக்காட்டுக்கு ஆள் அனுப்பி விபரத்தைச் சொல்லவும் எங்கே இருந்தாலும் தேடவும் முடிவெடுக்கப்பட்டன. இதற்கான செலவுக்கு முனியம்மாவுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தையும் அடகுவைத்து, ஊரே இருவரையும் பிடிக்க ஆகும் செலவைப் பார்த்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

அவர்கள் குழிக்காட்டுக்குப் போனபோதுதான் அறிவழகனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அறிவழகன் மனைவி கைக்குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு ஒப்பாரிவைத்து அழுவதாலும், அந்த ஊர்க்காரர்கள் திரண்டு நாளை வரப்போவதாகவும் செய்தி சொல்லிப்போனவர்கள் முனியம்மாவிடம் வந்து சொன்னார்கள். ஆனால், எவரும் வரவில்லை. சிவப்புக் கட்சிக்காரர் மூலமாக 27 நாட்கள் தேடி, திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இருவரையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்தார்கள். இரண்டு கிராமங்களும் கூடி சர்வ கட்சிகளில் உள்ள ஒன்றிய அளவிலான பிரமுகர்கள் முன்னிலையில், கிராமத்தில் கூட்டம் கூட்டப்பட்டது.

இருவரையும் புளியமரத்தில் கட்டிவைத்து புளியம்சிம்புவால் ஆளுக்கு நாலு அடி கொடுத்து, செவத்தகன்னியின் கழுத்தில் கட்டியிருந்த தாலியை அறுத்து, ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் கிராமத்துக்குக் கொடுக்கவும் இருவரையும் பிரித்துவிடவும் முடிவெடுக்கப்பட்டது. செவத்தகன்னி முகத்தில் கிராம முக்கியஸ்தர்கள் காறி உமிழ்ந்தார்கள். இப்படித்தான் அப்பாவின் நிலமும் அவளின் தன்மானமும் பறிபோயின. அப்படி ஒரு தவறைச் செய்திருக்காவிட்டால், இப்படி ஒரு நெருக்கடியும் கஷ்டமும் வந்திருக்காது.

p74c.jpg

அறிவழகன் ஏமாற்றினான். நாம் ஏமாந்தோம். அவன் வார்த்தைகள் பிடித்திருந்தன. அவன் சொல்லில் ஏதோ ஒரு சக்தி இருந்தது. அவன் பேச்சை மீற முடியாமல் அவன் பின்னால் போனாள். அந்த வலி நிரம்பிய அனுபவத்துக்குப் பிறகுதான் இந்தக் கிராமத்தின் ஆண்களின் பார்வை இவள் மீது படரத் தொடங்கியது. வயல்வெளிகளில் தனித்திருக்கும் பொழுதுகள் மிகவும் அபாயம் நிறைந்தவையாக மாறின. ஒவ்வொன்றிலும் மிகக் கவனமாக அடியெடுத்து வைத்தாள். காதல் குறித்த பிடிமானம் நழுவிப்போனது. ஆண்கள் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல்போனது. அதன் பிறகு சூழலின் நெருக்கடியில் உருவான காதல்கள் எல்லாம் வெறும் உடலின் உணர்ச்சியின் பிதற்றல்கள் என உணர்ந்தபோது, உடல் பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டது.

டுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள் செவத்தகன்னி. வயிறு உப்பியது. யாரோ வெளியே கனைப்பது கேட்டது. கொட்டடியில் ஆடுகள் கட்டிக்கிடந்தன. கீழத்தெருவில் நாய்கள் குரைத்தன. அது கிழக்குப் பார்த்த வீடு. கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். ஆடுகள் போட்ட பச்சைப் புழுக்கைகளின் வாசம் எழுந்தது. இவள் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் ஆடுகள் கத்தின. நெற்றி வெள்ளை ஆடு மடி தளர்ந்துகிடந்தது.

`குட்டி போட்ருக்கோ...' என முணுமுணுத்துக் கொண்டாள். உள்ளே எட்டிப்பார்த்தாள். ரவி நின்றுகொண்டிருந்தான்.

“யாரு..?”

“நாந்தேன் கன்னி'' - அருகில் வந்தான்.

“சொல்லு...”

“முக்கூட்டுல சாயந்தரம் கறிகொண்டார் பேரன் உன்னைப் பார்த்தானாம். பிடிச்சுப் போச்சாம். `எவ்வளவு பணமுன்னாலும் தர்றேன். ஒரு தடவை அழைச்சிக்கிட்டு வா'னு சொல்றான். உன்னைப் பத்தி நம்மூர்க்காரனுவோ தப்பா சொல்லியிருப்பானுவபோல இருக்கு. நான் அவன்கிட்டே டிராக்டர் ஓட்டுறதுனால ஒண்ணும் பதில் சொல்ல முடியல. என்ன சொல்ற. எவ்வளவு பணமுன்னாலும் வாங்கித் தர்றேன்” - கெஞ்சலுடன் சொன்னான். அவனிடம் இருந்து அழுகிய பழவாசனை வீசியது.

வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் சுடர்ந்தன. மெல்லிய தென்றல் தவழ்ந்தது. மரங்கள் மெள்ள அசைந்தன. ஆந்தை ஒன்று அலறிக்கொண்டு வேகமாக கிழக்குப் பக்கம் பறந்தது. விசிலடிக்கும் பறவையின் சீழ்க்கையொலி விட்டுவிட்டுக் கேட்டது.

“அவரு எங்க நிக்கிறாப்புள்ள. மணி என்னாச்சு?''

“ஆத்தங்கரை மேட்டுல... மணி 12 இருக்கும்.”

“சரி... முன்னே போ. நான் பின்னே வர்றேன்.”

“கட்டாயம் வர்றியல்லே.”

“ம்...”

வீட்டுக்குள் நுழைந்தாள். அம்மாவின் குறட்டை ஒலி தீவிரமாகக் கேட்டது. குதிர் இடுக்கின் மறைவில் இருந்த அப்பாவின் சூரி கத்தியை எடுத்தாள். விரலால் சுனை பார்த்தாள். மிகக் கூர்மையாக உள்ளிறங்கியது.

அப்பா செத்த மாட்டைத் தோலுரிக்கும்போது கழுத்தில் இருந்து தொடங்குவது ஞாபகத்துக்கு வந்தது. கூந்தலை முடிந்து இருளில் நடக்கத் தொடங்கினாள்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.