Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீன் - சிறுகதை

Featured Replies

மீன் - சிறுகதை

பவா செல்லதுரை - ஓவியங்கள்: ஸ்யாம்

 

70p1.jpg

வுல் வாத்தியாரை, `வாத்தியார்' என அவரே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஓர் ஒல்லிக்குச்சி உடம்பும், முழங்காலுக்குமேல் தூக்கிக் கட்டிய கட்டம் போட்ட லுங்கியும், கைவைத்த வெள்ளை பனியனுமாகத்தான் எப்போதும் திரிவார்.

இவர் ஸ்கூலுக்கு எப்போது போவார், அப்போதாவது உடைமாற்றிக்கொள்வாரா... என்பது எல்லாம் மாயவித்தைகள்போல மறைந்துவிடும். முனிசிபல் பாய்ஸ் ஹைஸ்கூலில், பத்தாவதுக்கு மாறியபோதுதான் பவுல் வாத்தியாரின் நீளமான அந்தத் தூண்டிலில் நானும் மாட்டிக்கொண்டேன்.

என் வீட்டில் இருந்து நடை தூரத்தில்தான் எல்லுக்குட்டை இருந்தது. அதை சிலர் `குளம்' என்றும் தப்பாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். எப்போதும் பாசி படர்ந்து, அழுக்கு சேர்ந்து, அதில் இருந்து பச்சைப்பசேல் என நீர் வழிந்தோடும் நடைபாதையே ஓடை என மாறிப்போய், மக்களும் அதனூடே நடக்கப் பழகிக்கொண்டார்கள்.

எத்தனை அசுத்தம் எனினும், நீரில் கால் நனைப்பது மனதைச் சில்லிடவைக்கும்தானே? உலர்ந்த மனிதர்களுக்கு எப்போதுமே அப்படி ஒரு சில்லிடல் தேவையாக இருக்கிறதுபோலும். வழிந்தோடும் அந்தப் பச்சை நீரில், வழிநெடுக ஜிலேபிக் குஞ்சுகள் புரளும். அவற்றைக் கையில் ஏந்தி, ஹார்லிக்ஸ் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்தமான நீரில் வளர்க்கிறேன் என்ற பேரில் சாகடிக்கிற பழக்கம், நான் பத்தாவது வந்த பின்னரும் தொடர்ந்தது.

டைஃபாய்டில் கிடந்த அப்பாவைப் பார்ப்பதற்காக, சகவாத்தியார் வாங்கிவந்த ஹார்லிக்ஸை மொத்தமாக முறத்தில் கொட்டிவைத்துவிட்டு, புது காலி பாட்டிலில் ஜிலேபி பிடித்து, அம்மாவிடம் தொடப்பக்கட்டை அடிவாங்கியது பத்தாவது வந்த பின்னரும் வெட்கம் இன்றி நீடித்தது.

நாம் பவுல் வாத்தியாரிடம் இருந்து வெகுதூரம் நடந்து, பச்சைத் தண்ணி ஓடைக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன்.

ன்றும் அவர் தோளில் சுமந்த நான்கைந்து தூண்டில்களோடு அந்தப் பச்சை ஓடையில் நடந்துவரும்போது, என் புது பாட்டில் நிறைய மீன்குஞ்சுகள் நிறைந்திருந்தன. மீனாலான ஒரு முதியவரும், மீன்குஞ்சுகளாலான ஒரு சிறு பையனும் இணைவது இயற்கையின் முதல் விதிதானே! அதுதான் எங்கள் இருவருக்கும் அன்று நிகழ்ந்தது.

என் கூரை வீட்டில் இருந்து ஐந்தாவது வீடு அவருடையது. அதுவும் மண்சுவரும் மஞ்சள் புல் கூரையும்தான். முன்பக்கம் விசாலமான காலியிடம் இருந்தது. சிமென்ட் பூச்சு சில்லிட்ட அவர் வீட்டுத்திண்ணையில், நான் வந்து உட்கார்ந்து அரை மணி நேரம் ஆகியும் அவர் என்னைக் கவனிக்காமல் தன் தூண்டிலைச் சரிசெய்துகொண்டிருந்தார். வீணையின் நரம்பை அவிழ்த்துக் கட்டும் வேணி அக்காவின் லாகவத்தை அது மிஞ்சியிருந்தது.

70p2.jpg

தூண்டில் முள்ளையும் நரம்பையும் இணைக்கும் இடம் கவனக்குவியலின் உச்சம்; விரல்களின் தோழமையின் கூடுகை. நான் கவனமாக அதை அவதானித்துக்கொண்டிருந்தேன். கட்டி முடித்ததும் தன் கையால் பலம்கொண்ட வரை இழுத்துப் பார்த்துக்கொண்டார்.

அவரே தனக்குள் சிரித்துக்கொண்டார். அப்போதுதான் எதிரே ஒரு ஜீவன் இருப்பதைக் கவனித்து, அதே சிரிப்பைக் கொஞ்சம் நீடித்தார். எனக்கு பேச்சே வரவில்லை. அவர் என் அப்பாவைவிட நான்கைந்து வயது மூத்தவர். அவரிடம் போய் நான் என்ன பேசுவது? ஆனால், நான் அவரிடம் என் கண்களால் யாசித்தேன் என்பதை உணர்ந்துகொண்டவர்போல, அந்தத் தூண்டிலை என் கைகளுக்கு மாற்றித் தந்தார். நான் வேணி அக்கா வீணையை மடியில் கிடத்துவது மாதிரியே, என் மடியில் அதை வைத்ததைக் கவனித்து மெள்ளச் சிரித்து, “சும்மா எடுத்துப் பாரு, பிரிச்சு வீசு, உடைச்சுடாத...” என என்னைத் தளர்த்திவிட்டு, வீட்டுக்குள் போனார்.

“வேற வேலை இல்லை உனக்கு? நீ கெட்டதும் இல்லாம படிக்கிற புள்ளையை வேற கெடுக்குற…’’ என வாத்தியாரம்மாவின் குரல் அடுக்களையில் இருந்து சத்தமாகக் கேட்டது.

வாத்தியாரம்மாக்கள் எல்லா வீடுகளிலும் ஒன்றுபோலத்தான் இருப்பார்கள் என்பதை, அந்த அம்மாவின் குரலை என் அம்மாவின் குரலோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். அந்த அம்மாவின் முதுகுக்குப் பின்னால் நின்று, வாத்தியார் எனக்கு சைகைக் காட்டினார். அது ‘பாலையா கடை மூலையில் போய் நில்’ என்ற சொல்லின் உடல் அசைவு.

நான் பாலையா கடை வாசலில் காத்திருந்த நிமிடங்களில், வரிசையாக அடுக்கிவைத்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் மீன்குஞ்சுகளுக்குப் பதில், தேன்மிட்டாய்களும் கமர்கட்டுகளும் பொரி உருண்டைகளும் இருந்தன.

அடுத்த சில நொடிகளில் எங்கள் ரகசியச் சந்திப்பு ஓரிரு வார்த்தைகளில் முடிந்தது. இன்று மாலை மூணு மணிக்கு பெரிய ஆலமரத்தடிக்கு நான் வந்துவிடவேண்டும். செருப்பு போட்டுக்கொண்டு வர வேண்டாம். அவ்வளவுதான்.

நான் மத்தியானம் இரண்டு மணிக்கே, பெரிய ஆலமரத்தடியில் விழுந்துகிடந்த ஆலம்பழங்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தேன். பவுல் வாத்தியாரும் மூணு மணிக்கு முன்னரே தூரத்தில் வருவது வெண்கோடு மாதிரி தெரிந்தது. என் உற்சாகத்தில் கையில் இருந்த ஆலம்பழங்களை மரத்தை நோக்கி மேலே எறிந்தேன். கீழே கொட்டியவற்றை மீண்டும் இரு கைகளாலும் அள்ளி, சாலையில் வீசினேன். பெரும் குரலெடுத்து ஹோவென அந்த மரம் அதிரும்படி கத்தியதில், இரண்டு மூன்று மைனாக்கள் மட்டும் பறந்தன.

“என்ன பண்ற?” - வாத்தியாரின் குரல் என்னை உரசியது.
 “ஒண்ணும் இல்லை சார்.”
மீதி வார்த்தைகள் என் உதட்டிலேயே ஒட்டிக்கொண்டன.
“வா.”

இடைவெளிவிட்டுப் பின்தொடர்ந்தேன்.

அதே கட்டம்போட்ட லுங்கி, கைவைத்த வெள்ளை பனியன், செருப்பு இல்லாத கால்கள், வலது தோளில் ஏறிய சின்னதும் பெரியதுமான ஐந்தாறு மூங்கிலில் ஆன தூண்டில்கள். எப்போதும் பேச்சற்ற பின்தொடர்தல்கள் அவதானிப்பை அதிகரிக்கும்போல. நான் இரு பக்கங்களிலும் இருந்த எல்லாவற்றையும் கண்களாலும் மோப்பத்தினாலும், எனக்குள் உள்வாங்கிக்கொண்டே அவர் பின்னால் நடந்தேன்.

நாங்கள் போய் நின்ற இடம், ஓர் இடிந்த பம்புசெட் கொட்டாயின் பின்புற ஈரத் தரை. அவர் குத்துக்காலிட்டு உட்கார்ந்து, பையில் இருந்த உடைந்த கொட்டாங்குச்சியைக் கையில் எடுத்தார். மூடிபோட்ட பிளாஸ்டிக் டப்பா ஒன்றை, அருகே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

70p4.jpg

மண் ஈரம், கொட்டாங்குச்சியின் இழுப்புக்கு வளைந்து தந்தது. நான்காவது இழுப்புக்கு மண்ணில் ஆறு ஏழு மண்புழுக்கள் நெளிவதைப் பார்த்தேன். பவுல் வாத்தியாரின் முதுகு லேசாக விரிந்தது. வேட்டைக்காரர்களுக்கு உபபொருட்களின் கிடைத்தல் அரிதிலும் அரிது.

அவர் இப்போது இரு கைகளாலும் இயங்கினார். மண் தோண்டுதல், புழுக்களை மண்ணோடு சேர்த்து அள்ளி டப்பாவில் போடுதல்... என, தான் கூட்டிவந்த ஒரு பையன் அருகே நிற்கிறானே என்ற எந்த உணர்வும் இல்லாமல், அவர் தனியே இயங்கிக்கொண்டி ருந்தார். எல்லா வேட்டைக்காரர்களுக்குமே துணை என்பது பெரும் இழுக்குத்தான்.

நான் எதிர்பார்த்ததற்கு முன்பே டப்பா நிறைந்தது. மேல் மண்ணை எடுத்து அதன்மேல் போட்டு, பழந்துணியைக் கிழித்து அதைக் கட்டிக்கொண்டார். மூடியைத் தனியே எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு என்னை ஏறெடுத்தார்.

`செத்துப்போன புழுக்களை மீன்கள் விரும்பாது’ என, எனக்கு அவர் சொன்னதுபோல் இருந்தது. ஆனால், அவர் எப்போது வாய் திறந்து பேசியிருக்கிறார்?

“போலாம்.”

இப்போது எங்கள் முன்னர் நீண்டுகிடந்த ஒற்றையடிப் பாதையில் முந்தியும் பிந்தியுமாக நடந்தோம். பேச்சு இல்லை. விலங்கு வேட்டைகள் மூச்சு சத்தத்தையும் உறிஞ்சக் கேட்கும். பவுல் வாத்தியார், மீனுக்கும் அதே விதிதான் என்பதுபோல நடந்தார். இப்போதைய நடையில் ஓர் ஆவேசம் இருந்தது. வெயில் முற்றாகத் தணிந்து பாதை எங்கும் வெதுவெதுப்பாக இருந்தது.

நான் எதிர்பார்க்காத ஒரு சமயத்தில், தன் தோளில் இருந்த தூண்டில் கட்டை என்னிடம் தந்தார். நான் எதிர்வீட்டு மெர்சி குட்டிப் பாப்பாவைத் தூக்குவதுபோல, அவற்றைத் தூக்கி என் தோளில் ஏற்றிக்கொண்டேன். அதன் பின்னர் என் நடை பவுல் வாத்தியாரின் நடை மாதிரியே மாறியிருந்ததை, அவரும் கவனித்திருக்க வேண்டும்.

நாங்கள் இருவரும் ஓர் இலுப்பை மரத்தடியில் குந்திக்கொண்டோம். எங்கள் எதிரே சலனமற்று மெள்ள நகர்ந்துகொண்டிருந்தது ஓலையாறு. அது நகர்கிறது என்றால், கொம்பாதிக் கொம்பனும் நம்ப மாட்டான். பவுல் வாத்தியார் ஒருவரைத் தவிர, அதன் அசைவை அறிந்தவர் இல்லை.

என்னிடம் இருந்த தூண்டிலை வாங்கி ஈரத் தரையில் வைத்துவிட்டு, லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டிக்கொண்டார். பையில் இருந்த வெள்ளைத் துண்டால் தலையைப் போத்திக்கொண்டார். காக்கி நிறத்தில் அதற்காகவே தைக்கப்பட்ட பையில் இருந்து, வெற்றிலைபாக்கு புகையிலையை வாயில் அதக்கிக்கொண்டு, இரண்டு தூண்டில்களை தனியே பிரித்து, துள்ளும் புழுக்களை அதன் கொக்கிக்குக் கொடுத்தார்.
எல்லாமே கச்சிதம்.

தெற்கில் இருந்து வடக்கு நோக்கி தூண்டில் நரம்பு விழுந்தது. துத்தநாகத் தக்கையின் பளீர் வெள்ளையில் விழுந்தவுடன் அதன் அசைவு தெரிந்தது. நான் அவர் பார்வையில்படும்படி நின்று, ‘`நானும் உன்கூடத்தானே வந்திருக்கேன். என்னையும் பார்றா கிழவா!'’ என உள்ளுக்குள் கேவியது, அவருக்குக் கேட்டிருக்க வேண்டும்.

தக்கையை நிதானித்துக்கொண்டே அளவில் சின்னதாக இருந்த மூணாவது தூண்டிலில் புழு நிரப்பி என் பக்கம் திரும்பாமலே, ‘`அங்க போய் போடு'' என்ற கணம், என் முன் நின்றசையும் நீரில், ஒரு கோடி துள்ளும் விரால்களின் வெளிச்சத் துள்ளலை உணர்ந்தேன். தூண்டிலை லாகவத்தோடு தெற்கில் இருந்து வடக்காக வீசினேன்.

உடனே தக்கை அலைபாய்ந்தது.

“அது குஞ்சுகுசுமான் ஏமாந்துடாத.”

பவுல் வாத்தியாரின் தூரத்துக் குரல் சன்னமாகக் கேட்டது. ஆனால், தக்கை நீருக்குள் முழுக்க அமிழ்ந்துவிட்டது.

``இனிமேலும் ஏமாந்தால், ஒரு மீன் வேட்டையாடிக்கு அழகு அல்ல மகனே... இழு!’

நான் மூங்கிலை தூக்கி அசைத்துப் பார்த்தேன்.

லேசாகக் கனத்த அது, நீரை நோக்கி இழுப்பதை உணர்ந்தேன். அதன் போக்கில்விட்டு எதிர்பாராத நேரத்தில் நானே மேலே இழுத்தேன். என்னை அப்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும். என் தூண்டில் முள்ளில் மஞ்சள் நிறத்தில் துள்ளிக்கொண்டு, ஒரு பெரிய மீன் ஆட்டம் போட்டது. கவனத்தோடு அதை என்னிடம் இழுத்தேன். அதன் உடல் மஞ்சள் மினுமினுப்பு ஏறி, என் அருகே இன்னும் துள்ளியது. தூண்டிலோடு என் ஆசானை நோக்கி ஓடினேன். அவர் இன்னும் மீன் மாட்டாத அந்தத் தூண்டில்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

`முதுமை வேட்டைக்கு உதவாது’ என நான் என் ஆழ்மனதில் நினைத்த கணத்தின்போது, கிழவன் ஒரு நொடி... ஒரே நொடி என்னைத் திரும்பிப் பார்த்தது. முகத்தில் எந்த மலர்ச்சியும் இல்லாத திரும்புதல் அது.
“சார் வெரால்...”

“அது வெரால் இல்ல; உளுவை. மெள்ள முள்ளில் இருந்து அதைக் கழற்றி, அந்தப் பையில போட்டுடு... அடுத்த புழுவை மாட்டு.”

அதையும் அந்த அசைவற்ற தக்கையைப் பார்த்துக்கொண்டே சொன்னது.

என் முதல் வேட்டை வெரால் இல்லை என்பதில், அதற்கு ஓர் அற்ப சந்தோஷம்.

`இரு கிழவா... அடுத்து செனை வெராலா பிடிச்சுக் காட்டுறேன்.’

அவர் காட்டிய தூரத்தையும் தாண்டிப்போய் தூண்டில் போட்டேன். இப்போது அவரிடம் கேட்காமலேயே இன்னொரு நீளமான தூண்டில் ஒன்றும் என் கையில் இருந்தது. வெற்றி அடைந்தவனின் அத்துமீறல் அது. இப்போது என் கவனம் ஒரு விராலின் மீது மட்டுமே குவிந்திருந்தது. நீரின் சத்தம் கேட்டுத் திரும்பி, பவுல் வாத்தியாரின் தூண்டிலில் துள்ளும் ஒரு கரிய மீனின் இழுபடலை இங்கு இருந்தே பார்த்தேன்.
அது ஒரு பெருவிரால்.

70p5.jpg

கிழவன் அதை அமுக்கமாக தன் பையில் திணிப்பதைக் கவனிக்காதது மாதிரி கவனித்தேன். என் தூண்டிலில் அதன்பின் நாலைந்து கருஞ்ஜிலேபிகளும் இரண்டு குரவைகளும் மட்டும் மாட்டின. கொஞ்சம் ஏமாந்தால் குரவையை, விரால் என பவுல் வாத்தியாரே நம்ப வேண்டிவரும். விரால் கருநிறமும்... நேர்மாறாக குரவை செந்நிறமும். மற்றபடி உருவ அமைப்பு ஒன்றுபோலவே இருக்கும்.

தொண்டை செருமும் சத்தம் கேட்டுத் திரும்பியவனை, எல்லாவற்றையும் எடுத்து மூட்டை கட்டச் சொல்லி, சைகை செய்தார் பவுல் வாத்தியார். அடுத்த விநாடியே அதைச் செய்தேன். முள்ளில் மாட்டித் தொங்கிய ஒரு வெளிச்சிக் கெண்டையை எடுத்து, மீண்டும் நீரிலேயே விடுவித்தேன்.

வாத்தியாரின் பை கனத்திருந்ததைக் கவனித்தேன். சுருக்கிடப்பட்ட பையினுள் அசையும் உயிரினங்களின் எண்ணிக்கைதான் அவரின் அன்றைய வெற்றி. மதியம் தோன்றியதுக்கு நேர்மாறாக, `முதுமைதான் வேட்டைக்கு உகந்த காலம்’ என இப்போது தோன்றியது.

நாங்கள் வீட்டை அடைந்தபோது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. வரும் வழியில் நான் மட்டும் பம்புசெட் நீரில் மீன் கவிச்சிப்போக தேய்த்துத் தேய்த்துக் குளித்தேன். அந்நேரம் வாத்தியார் அடுத்த நாளுக்கான புழுக்களைத் தோண்டினார்.

ஒன்றுமே தெரியாதது மாதிரி நான் வாத்தியார் வீட்டைத் தாண்டி என் வீட்டுக்குப் போனபோது, அப்பா வாசலிலேயே என்னை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்ததையும், அவருக்குப் பக்கத்தில் உடைக்கப்பட்ட ஒரு மூங்கில் கழி கிடந்ததையும் கவனித்தேன்.

இரவு ஏழு மணிக்கும் எட்டரை மணிக்கும் இடையே என்ன நடந்தது என்பது எனக்கும், அப்பாவுக்கும், தடுத்தாண்ட சாட்சியாக இருந்த அம்மாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகட்டும். அப்போதுதான் மீசை துளிர்விட்ட ஒரு பத்தாம் வகுப்புப் பையனுக்கு ஏற்பட்ட அவமானம், அவனோடு மட்டுமே மக்கி மண்ணாகும்.

இது ஏதும் அறியாத பவுல் வாத்தியார், ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் ஏந்திப் பிடித்த மீன் குழம்போடு வீட்டுப் படி ஏறிக்கொண்டிருந்ததை, முழந்தாளிட்டு, கைகள் இரண்டையும் நெஞ்சுக்கு நேராகக் கட்டிக்கொண்டு அழுதழுது வழிந்த கண்ணீரைக்கூட துடைக்க அனுமதி இல்லாமல், உள்ளுக்குள் கதறிக் கன்றிப்போன மனதோடு அவரை நான் ஏறெடுத்தேன்.

அப்பாவின் எதிர்பாராத ஒரு தட்டுதலில் மீன்குழம்புக் கிண்ணம் எகிறி நடுவீட்டில் விழுந்தது. அதற்காகவே காத்திருந்ததுபோல அப்பா ஆரம்பித்தார். ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரிடம் இருந்து இவ்வளவு கெட்ட வார்த்தைகளை, பவுல் வாத்தியார் அன்றுதான் கேட்டிருக்கக்கூடும். அது எனக்கும், எங்க வீட்டு வாத்தியாரம்மாவுக்கும் பழகிவிட்டிருந்தது.

`‘நீயெல்லாம் ஒரு வாத்தியாராயா? உனக்கு எவன்யா உத்தியோகம் குடுத்தான். படிக்கிற பையனை இப்படிக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கூட்டிட்டுப் போறியே. இதுக்கு நீ வேற எதனா செய்யலாம்.’'
பவுல் வாத்தியாரின் உடல் உதறல் ஏறிக்கொண்டேபோனது. அதனூடே அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார்.

“அவனை ஏன்யா பார்க்குற... மயிரு.”

அவர் நிதானமாகத் திரும்பி நடந்தார். வாழ்வில் அவர்பட்ட அதிகபட்ச அவமானம் இதுவாகத்தான் இருக்கும்.

சிதறிய மீன் வாசனையால் நிறைந்திருந்தது வீடு. முனகிக்கொண்டே அம்மா அவற்றைச் சுத்தம்செய்தாள். என் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அதற்குப் பிறகும்கூட பல நாட்கள் பாலையா கடை வாசலில் பவுல் வாத்தியாரும் நானும் சந்தித்துக்கொண்டோம். மீன்படுதல் பற்றி ஓரிரு வார்த்தைகளில் வாத்தியார் சொல்வார். அப்பா ஊரில் இல்லாத நாட்களில் பள்ளிக்கொண்டாப்பட்டு ஆற்று மதகு வரை நாங்கள் தூண்டிலோடு நடந்திருக்கிறோம்.

அம்மாவும் ஊரில் இல்லாத நாட்களில் குட்டையைப் பாத்திகட்டி நீர்வடித்து ஆறாவையும் அசரையையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம். வாத்தியாரம்மா திட்டிக்கொண்டே போடும் மீன்குழம்பை அந்த வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.

பெற்றவர்களின் மூர்க்க எதிர்ப்பால் எந்தக் காதலாவது தன் சந்திப்புகளை நிறுத்தியிருக்கிறதா என்ன? காதலுக்கே அப்படி என்றால், இது மீன் சம்மந்தப்பட்டது.

அப்பாவுக்கு என்னைத் திட்ட, அடிக்க, துரத்த எப்போதுமே நேரம் காலம் தெரிந்தது இல்லை. எந்தப் புத்தியுள்ள அப்பனாவது, நாளைக்கு அரசாங்கக் கணக்குப் பரீட்சை எழுதப்போகும் ஒரே மகனை பித்தாகரஸ் தியரம் பிடிபடவில்லை என மூங்கில் கழியால் சாத்துவானா? என் அப்பா சாத்தினார்.

அந்த இரவில் நான் வழக்கம்போல ஏழாவது முறையாக வீட்டைவிட்டு ஓடினேன். ஜார்ஜ் டிக்கன்ஸ் வீட்டுக்கு அருகிலேயே, குட்டிச்சுவராக நின்ற வீட்டில் மறைந்திருந்தேன். என்னைத் தேடி அப்பாவும் அம்மாவும் ஆளுக்கு ஒரு திசையில் அலைந்த இரவை, அருகில் இருந்தபடியே அலட்சியப்படுத்தினேன்.

விடியும் முன்னர் பாலையா கடை வாசலில் இருந்தேன். கருப்பட்டி வெல்லமும் காபித்தூளும் வாங்க நின்ற யாருக்கும் நேற்றிரவு எனக்கும் அப்பாவுக்கும் இடையே நடந்த அடிதடி தெரியாது.

வெற்றிலைபாக்கையும் புகையிலையையும் வாங்கி தன் ப்ரியமான காக்கிப்பையில் அடைக்கும்போது, பவுல் வாத்தியார் என்னைப் பார்த்துவிட்டார். புளியமரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தூண்டில்கள் பரவசம் ஏற்படுத்தியது எனக்கு. அதன் அருகே நின்று அவற்றை கையில் எடுத்தேன்.

`நான்கு மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு நடக்கப்போகிறது. அதுவும் எனக்குப் பிடிக்காத கணக்குப் பரீட்சை. நடந்தால் நடக்கட்டும். எனக்கு என்ன? ஆட்டம் காட்டின விரால்களின் திருட்டுத்தனங்களை, இன்று என் தூண்டில் முட்களில் மாட்டிவிட வேண்டும்' என தூண்டில்களை எடுத்துக்கொண்டு நான் அவருக்கு முன்னர் நடக்கத் தொடங்கினேன்.

அன்று இரவு நான் ஆற்றங்கரையிலேயே கையும் களவுமாக என் அப்பாவால் பிடிபட்டேன். தூண்டில்களை அங்கேயே விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடின பவுல் வாத்தியாரை, தூர இருந்தே பார்த்தேன். எதிரில் வந்த பஸ்ஸில் ஏறி திருக்கோவிலூருக்கு, தன் கொழுந்தியாள் வீட்டுக்குப் போய்விட்டதாக யாரோ காற்று வாக்கில் சொல்லக் கேட்டேன்.

அவர் மரணம் நிகழும் வரை அப்பாவிடம் பிடிபடாமல் மறைந்து திரிந்த கிழவன் ஆனார் பவுல் வாத்தியார்.

சாரோன் உத்தானத் தோட்டத்தில், என் அப்பாவின் உடல் அந்தக் கறுப்புப் பெட்டியில் கிடத்தப்பட்டு உள்ளே இறக்கப்பட்டபோது அப்பாவைக் கடைசியாக ஒருமுறை பார்த்தேன். அதே கோபக்கார முகம். மரணம்கூட மனித முகத்தை மாற்றாதா?

 மண்வெட்டியில் ஏறியிருந்த ஈர மண்ணோடு சர்ச் ஃபாதர் செபாஸ்டின், ``நீ மண்ணில் இருந்து எடுக்கப்பட்டாய். மண்ணோடு மண்ணாய்ப் போகிறாய். மறுபடியும் மண்ணில் இருந்து உயிர்த்தெழுவாய்’' என அந்தப் பெட்டியின் மீது மூன்று முறை மண்ணைக் கொட்டியபோது, நான் யதேச்சையாக பக்கத்துக் கல்லறையைப் பார்த்தேன்.

எம்.பவுல்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
பிறப்பு: 25.11.1927
இறப்பு: 26.12.1983
என சிலுவையில் இருந்தது.

‘அய்யோ பவுல் சார்... உங்களுக்கு மூன்றடி பக்கத்தில் என் அப்பா.’

பதற்றத்தில் என் வாய் முணுமுணுத்ததை அந்த மரணச் சத்தத்தையும் மீறி, எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஃபாதர் செபாஸ்டின் என்னை விநோதமாகப் பார்த்தார்!

http://www.vikatan.com/anandavikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.