இந்தியா-சீனா உறவு பற்றி அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை கூறுவது என்ன?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.
3 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவருவது குறித்தும் சில கருத்துகள் வெளியாகியுள்ளது.
'சீனக் குடியரசு தொடர்பான ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள்' என பெயரிடப்பட்டுள்ள ஆண்டு ஆய்வறிக்கை, அமெரிக்க செனட் அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது.
மேலும், சீனா புதிதாக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளுடன் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சேர்த்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதற்கு சீன வெளியுறவு அமைச்சக கண்டனம் தெரிவித்துள்ளது. "அமெரிக்கர்களிடமிருந்து இதே போன்ற கதையை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம்," என சீனா தெரிவித்துள்ளது.
மற்றொருபுறம், தென் சீன கடல் , சென்காகு தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேசம் தொடர்பாக, சீனா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவு தொடர்ந்து ஆழமாகி வருவதாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு விதமான போர் விமானங்களை சீனா வழங்கியுள்ளது.
இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, ஷி ஜின்பிங்குக்கும் பிரதமர் மோதிக்கும் இடையே நடந்த சந்திப்பு குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க செனட் அவை தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ராணுவ திறன்கள் மற்றும் உத்தி ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் அதன் அண்டை நாடுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் இந்த அறிக்கை அலசுகிறது.
உதாரணமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக நிலையற்றதாக உள்ளது என்றும் ஆனால் சமீபமாக உறவு மேம்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு துறையின் அறிக்கை உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது. அதில், "2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையேயான சந்திப்புக்கு இரு தினங்களுக்கு முன்பாக, இந்திய நிர்வாகம் எல்ஏசி பகுதியில் சீனாவுடனான சிக்கலை தீர்ப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ஷி ஜின்பிங் - மோதி இருவரின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான மாதாந்திர உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது, இதில் இரு தரப்பினரும் எல்லை நிர்வாகம் குறித்தும் நேரடி விமானங்கள், விசா வசதிகள், கல்வி மற்றும் பத்திரிகையாளர்கள் ரீதியான பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் குறித்தும் ஆலோசிப்பார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், "எல்ஏசி பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது. மேலும், அமெரிக்கா - இந்தியா உறவுகள் மேலும் வலுவடைவதை தடுக்கவும் சீனா விரும்புகிறது. எனினும், சீனாவின் நோக்கங்கள் குறித்து இந்தியாவுக்கு சந்தேகம் நீடிக்கிறது. தொடர்ச்சியான பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் மற்ற கவலைக்குரிய பிரச்னைகள் ஆகியவை இருநாட்டு உறவுகளை கட்டுப்படுத்துகின்றன." என தெரிவிக்கப்பட்டுள்ளது
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்த அறிக்கையின்படி, சீனா 2020 முதல் பாகிஸ்தானுக்கு 36 ஜே-10சி விமானங்களை வழங்கியுள்ளது. எகிப்து, உஸ்பெகிஸ்தான், இந்தோனீசியா, இரான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்த விமானங்களின் மீது ஆர்வம் தெரிவித்துள்ளன. (கோப்புப் படம்)
அருணாச்சல பிரதேசம் குறித்து குறிப்பிட்டுள்ளது என்ன?
சீனா சமரசம் செய்துகொள்ளாத அதன் "முக்கியமான விருப்பங்கள்" என, அந்த அறிக்கை மூன்று விஷயங்களை குறிப்பிடுகிறது. முதலாவது, சீன கம்யூனிச கட்சியின் கட்டுப்பாடு, இரண்டாவதாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய பகுதிகளுக்கு உரிமை கோருவதை விரிவாக்கம் செய்தல் ஆகியவை.
"சீனாவின் தலைமைத்துவம் 'முக்கிய நலன்கள்' என்ற சொல்லின் வரையறையை தைவான் மீதான சீனாவின் இறையாண்மை உரிமைகோரல்கள் மற்றும் தென் சீனக் கடல், சென்காகு தீவுகள், மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள பிராந்தியப் பிணக்குகளையும் அதில் சேர்த்துள்ளது." என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2049-ஆம் ஆண்டுக்குள் 'சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை' அடைவதே சீனாவின் தேசிய உத்தி என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையின்படி, "ஒரு 'புதிய சீனா' தனது செல்வாக்கு, மற்றும் நிகழ்வுகளை வடிவமைக்கும் திறனை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும்", மேலும், 'போரிட்டு வெற்றிபெறக்கூடிய' மற்றும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை 'உறுதியுடன் பாதுகாக்கக்கூடிய' ஒரு 'உலகத் தரம் வாய்ந்த' ராணுவத்தை அது உருவாக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. டிரம்பின் தலைமையின் கீழ், அமெரிக்கா-சீனா உறவுகள் "பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவாக உள்ளன" என்றும், இந்த முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவளிக்கும் என்றும் அது குறிப்பிடுகிறது.
"மக்கள் விடுதலை ராணுவத்துடன் (PLA) ராணுவ ரீதியான ஒத்துழைப்பின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலமும், மூலோபாய நிலைத்தன்மை, மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் பதற்றத்தைக் குறைப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலமும், நாங்கள் இதைச் செய்வோம். எங்களின் அமைதியான நோக்கங்களைத் தெளிவுபடுத்துவதற்கான பிற வழிகளையும் நாங்கள் ஆராய்வோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் குறித்து கூறப்பட்டுள்ளது என்ன?
சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நன்றாக அறியப்பட்டதே, அதுவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனா எந்தெந்த நாடுகளுக்கு உதவி செய்துவருகிறது, என்ன மாதிரியான ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளன என்பது குறித்தும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், அந்த அறிக்கையில், தன்னுடைய மூன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளில் சீனாவிடம் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாகவும் இது இது சீனாவின் 'முன்கூட்டியே எச்சரித்து பதிலடி கொடுக்கும்' திறனை மேம்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், "அமெரிக்கர்களிடமிருந்து இதே கதையை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுவருகிறோம். அமெரிக்க அணு சக்தியை வேகமாக மேம்படுத்தி வருவதை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். உலகளாவிய மூலோபாய நிலைத்தன்மையில் தாக்கத்தை செலுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சர்வதேச சமூகம் இதுகுறித்து கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்காவும் அணுசக்தி வல்லரசாக விளங்குகிறது. அணு ஆயுதங்களை நீக்குவதற்கான தன்னுடைய கடமையை அமெரிக்கா பூர்த்தி செய்ய வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளதாகவும் அதில் நான்கு போர்க்கப்பல்கள் கடந்த தசாப்தத்தில் வழங்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சீனா ஏற்றுமதிக்காக மூன்று முக்கிய போர் விமானங்களை வழங்குகிறது: ஐந்தாம் தலைமுறை FC-31, நான்காம் தலைமுறை J-10C பல்நோக்கு போர் விமானம், மற்றும் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்படும் JF-17 இலகுரக போர் விமானம் ஆகியவை ஆகும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2025ம் ஆண்டு மே மாதத்தின்படி, எந்தவொரு FC-31 விமானமும் எந்தவொரு நாட்டுக்கும் விற்கப்படவில்லை என்றும் ஆனால் எகிப்து, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அதனை பெறுவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை, தஜிகிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மற்ற சில நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பது குறித்து சீனா அநேகமாக பரிசீலித்துவருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலாக்கா நீரிணை, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற கடல் தொடர்பு வழிகளை அணுகுவதற்கும் சீன ராணுவம் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c2k4we7k8jgo
By
ஏராளன் ·