Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கு மீன்

Featured Replies

சங்கு மீன்

 

 

'கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு உண்டான கோபத்தில் கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவளால் கிழிக்க முடியவில்லை. கோமதியின் கடிதம் அவளுக்குப் பதற்றத்தை உண்டாக்கியது. தன் கணவன் சண்முகத்திடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டாள். கடிதத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தார் சண்முகம். அவரது தங்கை கோமதியின் கையெழுத்துதான். அவளின் கையெழுத்து அவருக்கு நன்றாகவே தெரியும்.

கோமதி, 10 வருடங்களுக்கு முன்னர், தேர்த் திருவிழாவின்போது சரஸ்வதியிடம் இருந்து தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு போனாள். மீனாட்சி திருக்கல்யாணம் அன்றுதான், அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அன்று மாலை அவள் வத்தலகுண்டுக்குப் புறப்பட்டுப்போகும்போது இரவலாக வாங்கிக்கொடுத்து அனுப்பியது சொர்ணத்தம்மாதான். அவள் தன் மருமகள் சரஸ்வதியிடம், 'கழுத்து நிறைய என் மகளுக்கு நகைகள் தெரியட்டும். உன்னோட சங்கிலி கொடுத்து அனுப்பு. மறுவீட்டுக்கு வரும்போது வாங்கிக் குடுத்துர்றேன்’ என, வாங்கிப் போட்டு அனுப்பினாள். கோமதியை அதற்குப் பிறகு சரஸ்வதி பார்க்கவில்லை.

சண்முகத்துக்கு மூன்று தங்கைகள். மூவரில் கோமதிக்கு மட்டும் படிப்பு வரவில்லை. ஆறாம் வகுப்புக்கு மேல், அவள் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டில் இருந்துகொண்டாள். படிப்பும் வராமல் வீட்டில் இருந்தவளுக்கு, திருமணம் தாமதமாகத்தான் நடந்தது. தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு போனவள், குடும்பத்துடன் காணாமல்போய்

10 வருடங்கள் ஆகிவிட்டன. இவ்வளவு காலத்தில் அவளிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அவளைத் தேடி, சண்முகமும் சரஸ்வதியின் அப்பா பொன்னம்பலமும் மாதக்கணக்கில் அலைந்து ஓய்ந்திருந்தார்கள்.

கோமதி காணாமல்போன இந்த 10 வருடங்களில், சரஸ்வதி வெற்றிலையில் மை தடவிப் பார்க்கும் காரியத்தில் தொடங்கி, காணாமல்போன பொருட்கள் கிடைக்கச்செய்யும் கிரகத்துக்கும் தேவதைகளுக்கும் கடவுளுக்கும் பேய்- பிசாசுகளுக்கும் சாமியார்களுக்கும் பரிகாரம் செய்ததோடு, அந்தக் காரியங்களில் தேர்ச்சியும் அடைந்திருந்தாள்.

ஊரில் இருக்கும் உறவினர்கள் ஏதாவது தொலைந்துவிட்டது என்றால், சரஸ்வதியிடம் வந்து யோசனை கேட்கும் அளவுக்கு, இந்த விஷயத்தில் அவளுக்கு ஞானம் வாய்த்திருந்தது. இதையெல்லாம்விட, ஊருக்கு வரும் புதிய ஜோசியர்களும் சாமியார்களும் சரஸ்வதி பெயரைச் சொல்லி வீட்டுக்கு வருவதும், காணாமல்போன பொருள் கிடைக்க மந்திரித்து தாயத்து தருகிறோம் என, பணத்தை வாங்கிக்கொண்டு செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

p76a.jpg

'சரஸ்வதியின் கண்ணீருக்காக இல்லையென்றாலும் சண்முகத்தின் தியாகத்துக்

காகவாவது கோமதி திரும்ப வரவேண்டும்’ என அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் பேசிக்கொள்வார்கள். சண்முகத்தின் துயரத்தைக் கேட்பவர்கள் கண்ணீர்விடுவார்கள்.

சண்முகம், வேலைக்குச் சேரும்போது அவருடைய சம்பளம் 218 ரூபாய். இந்தச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்த சண்முகத்தை, அவரது அம்மா திட்டாத நாள் இல்லை. இந்தச் சம்பளத்தில்தான் அவருடைய மூன்று தங்கைகள், ஒரு தம்பி, அவரது அம்மா என ஆறு நபர்கள் உணவருந்தி, வீட்டுக்கு வாடகை கொடுத்து, மின்சாரம் - தண்ணீர் கட்டணங்கள் செலுத்தி, இந்தத் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள்.

சண்முகம், தன் தம்பிக்கு வேலை கிடைத்ததும் குடும்பத்தின் சிரமங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என நம்பினார். வேலை கிடைத்ததும் பெட்டிப் படுக்கையைத் தூக்கிக்கொண்டு பெங்களூர் சென்று குடியேறிய தன் தம்பியின் மீது, சண்முகம் இப்போதும் கோபமாகத்தான் இருக்கிறார். அந்தக் கோபத்தை எல்லாம் வீட்டில் இருக்கும் கோமதியிடம்தான் அவர் காட்டுவார்.

'தெண்டச்சோறு... வட்டி வட்டியா திங்கத் தெரியுது. ஒழுங்கா சமைக்கத் தெரியுதா?’ என, தினமும் திட்டுவார். இத்தனைக்கும் சண்முகத்தின் அம்மாதான் சமையல் செய்வாள். கோமதி, ஒத்தாசையாக வெங்காயம் நறுக்கித் தருவாள்.

சண்முகம் தன் மூன்று தங்கைகளின் திருமணம் முடிகிற வரையில், தான் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தார். அவரது அம்மாவின் தீர்மானமும் அதுவாகத்தான் இருந்தது.

'உனக்குக் கல்யாணம் நடக்கணும்னா, முதலில் நீ உன் தங்கைகளுக்குக் கல்யாணத்தை முடிச்சு வை’ என அவள் தினந்தோறும் சண்முகத்தைத் திட்டிக்கொண்டிருப்பாள். தங்கைகளுக்கு மாப்பிள்ளை பார்க்க, வாரந்தோறும் தரகருடன் அலைந்தார் சண்முகம்.

சொர்ணத்தம்மாவின் குணம் அறிந்த பலரும், சண்முகத்துக்கும் பெங்களூரில் வேலை பார்க்கும் சுந்தரத்துக்கும் பெண் தர முன்வரவில்லை. பொன்னம்பலம் தைரியமாக முன்வந்து சண்முகத்துக்கு, தன் மகள் சரஸ்வதியைக் கல்யாணம் செய்துதந்ததோடு, சண்முகத்தின் மூன்று சகோதரிகளின் திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார். மூன்று பெண்களும் ஒவ்வொருவராகத் திருமணம் முடிந்து, கணவன் வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை சரஸ்வதிக்கும் சொர்ணத்தம்மாவுக்கும் தினமும் சண்டை சச்சரவு வரும். மாமியாரும் மருமகளும் ராகு-கேது போல எதிரெதிர் நின்றார்கள். மூன்று குமரிப்பெண்கள் வீட்டில் இருந்தபோது, 'நான் ஒருநாள் ஒருபொழுது நிம்மதியாக உணவு உண்டு, கணவனுடன் உறங்கியது இல்லை’ என, தன் அம்மாவிடம் புலம்புவாள் சரஸ்வதி.

கடைசியாக கோமதியின் திருமணம் முடிந்து மணமக்கள் ஊருக்குப் புறப்பட்டுப் போனதும், திருமண மண்டபத்தில் இருந்து நேராக வீட்டுக்கு வந்தாள் சரஸ்வதி. மூன்று டம்ளர் பொன்னி அரிசியும் நான்கு டம்ளர் தண்ணீரும் குக்கரில் வைத்துவிட்டு, (அப்போதுதான் குக்கர் வந்த புதிது. தெருவில் அவர்களது வீட்டில்தான் குக்கர் இருந்தது. சரஸ்வதி, தன் மாமியாருக்குத் தெரியாமல் பரண் மேல் ஒளித்து வைத்திருந்ததை எடுத்து, சமையல் செய்யத் தொடங்கினாள்.) கதவைப் பூட்டிவிட்டு கட்டில் மேல் படுத்து உறங்கினாள். தன் தங்கச்சங்கிலியை இரவலாகக் கொடுத்திருக்கிறோமே, தன் மாமியாக்காரி திருப்பிக்கொடுப்பாளா... மாட்டாளா என்ற சிந்தனைகூட அவளிடம் இல்லை.

அன்றுதான் முதன்முதலாக தன் அப்பா வாங்கிக்கொடுத்த கட்டிலின் மேல் படுத்தாள். மூன்று நான்கு தடவை புரண்டு புரண்டு படுத்துக்கொண்டாள். குக்கரில் இருந்து விசில் சத்தம் வந்ததும், எழுந்து தலை வழியாக நீரை ஊற்றிக்கொண்டு, தலையைத் துவட்டிவிட்டு, பழைய குழம்பை சுடுசோற்றில் ஊற்றி மனதாரச் சாப்பிட்டாள். பிறகு வாசற்படியில் உட்கார்ந்து, தெருவை வேடிக்கை பார்த்தாள்.

வீட்டுக்கு வந்த கணவனிடம், 'ராத்திரிக்கு சூடா தோசையும் கெட்டிச் சட்டினியும் உமையாள் விலாஸில் வாங்கிட்டு வாங்க’ எனச் சொன்னாள். சண்முகமும் அன்றில் இருந்து ராத்திரியானதும் உமையாள் விலாஸில் முறுகலான ஸ்பெஷல் தோசை பார்சல் வாங்கிவரத் தொடங்கினார்.

தினமும் சண்முகம் ஸ்பெஷல் தோசை வாங்கி வருவதைப் பார்த்து 'ஸ்பெஷல் தோசை சண்முகம்’ எனத் தெருக்காரர்கள் அவரை அழைக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகுதான் சரவணனும் ராஜியும் பிறந்தார்கள். ராஜி பிறந்ததும் சரஸ்வதி என்ன நினைத்தாளோ தெரியவில்லை... 'உமையாள் விலாஸ் ஸ்பெஷல் தோசை வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டாள். அப்புறம் சண்முகம் பார்சல் எதுவும் வாங்கி வருவது இல்லை.

கல்யாணம் முடிந்து மூன்று-நான்கு நாட்களுக்குப் பிறகும், கோமதி தனது சங்கிலியைத் தராதது சரஸ்வதிக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. தன் மாமியார்தான் தனக்கு ஏதோ கெடுதல் செய்கிறாள் என நினைத்தாள். அதன் பிறகு அவள் மை ஜோசியம் பார்ப்பது என முடிவுசெய்தாள். பொன்னம்பலத்தின் உதவியுடன் ஊருக்குப் புறப்பட்டாள். மை ஜோசியத்துக்குக் காணிக்கை வெறும் 1 ரூபாய் 25 பைசாதான். ஆனால், மை ஜோசியருக்கு சுருட்டு ஒரு பாக்கெட்டும், பிராந்தி பாட்டில் ஒன்றும், பார்சல் பிரியாணிப் பொட்டலம் என, ஒரு மஞ்சள் பை நிறைய சாமான்களை வாங்கிப் போக வேண்டும்.

'தங்கச் சங்கிலி தெரிந்ததா... தங்கச் சங்கிலி தெரிந்ததா?’ என சரஸ்வதியிடம் அவளது அம்மாவும் அப்பாவும் கேட்டதற்கு அவள், 'பெரிய தேர் ஒன்று நகர்ந்து வருவதுபோலவும் அந்தத் தேரில் இருந்து மாலைகளை யாரோ உருவி உருவிப் போட்டார்கள் என்றும், ஒரு மாலை தன் கழுத்தில் விழுந்தது’ என்றும் சொன்னாள்.

'பொன்னம்பலம் உழைத்துச் சம்பாதித்த பணம் உண்மையாக இருந்தால், தனக்குச் செய்துபோட்ட சங்கிலியில் அப்பாவின் உண்மையான அன்பு இருந்தால், திரும்பி வரட்டும். இல்லைன்னா தொலைஞ்சு அதோடு போகட்டும்... பீடை’ என கோமதியைத் திட்டினாள். அதற்குப் பிறகு கொஞ்சம் நாட்கள் கோமதியைப் பற்றி, யாரும் எதுவும் பேசிக்கொள்வது இல்லை. எல்லோருக்குமா கோமதி இருக்கும் இடம் தெரியாமல்போகும்? நிச்சயமாக யாருக்காவது தெரிந்திருக்கும். தன்னிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள் என சரஸ்வதி நினைத்தாள்.

p76b.jpgபங்குனி உத்திரம் முடிந்த நேரத்தில், கோமதியை திருப்பரங்குன்றத்தில் பார்த்ததாக உறவுக்காரர்கள் சொன்னார்கள். சண்முகமும் சரஸ்வதியும் பஸ் ஏறிக் கிளம்பினார்கள். மதுரையில் ஒரு சத்திரத்தில் தங்கி, தினமும் தெருத்தெருவாக அலைந்தார்கள். திருவிழாவில் கோமதியைத் தேடினார்கள். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் போய், ஒவ்வொரு சிலையாகப் பார்த்து, 'கோமதி ஒளிந்திருக்கிறாளா?’ என சரஸ்வதி கவலையோடு தேடினாள்.

கோயிலில் பொற்றாமரைக்குளத்தில் அமர்ந்திருந்த வேளையில் சண்முகம், 'விடு சரசு... உனக்கு அதைவிட நல்லதா ஒரு செயின் 10 பவுன்ல எடுத்துத் தர்றேன். என்னாலே அலைய முடியலை; செலவும் செய்ய முடியலை...’ எனக் கண்ணீர்விடாத குறையாகச் சொன்னார். அதை, அவள் கேட்டுக்கொள்ளவில்லை.

'நகையை அவள் வெச்சுக்கிடட்டும். எனக்கு வேணாம். ஆனா 'இத்தனை நாளா ஏன் திருப்பித் தரலை?’னு, நான் அவகிட்டே கேட்கணும். உங்க அம்மா சொல்லி அவ எனக்குத் தரலையா... இல்லை என்ன, ஏது விஷயம்னு நான் தெரிஞ்சுக்கிடணும். பொன்னம்பலம் மக என்ன உங்க அம்மாவுக்கு அரைக்கீரையா... கிள்ளிப்போடறதுக்கு?’ என முறைத்துப் பேசினாள்.

திருவிழாவுக்கு இல்லை என்றாலும், பூப் பல்லக்கு ஊர்வலத்தில் எப்படியாவது கோமதியைப் பார்த்துவிடலாம் என, கூட்டத்தோடு கூட்டமாக நின்று சரஸ்வதி தேடினாள். தன்னை மறந்து நின்று, பூப் பல்லக்கில் வந்த மீனாட்சியம்மனையும் சுந்தரேஸ்வரரையும் பார்த்து வணங்கினாள். பல்லக்கில் இருந்து மாலை ஒன்று, அவள் கரத்தில் வந்து விழுந்தது. கண்களில் ஒற்றி வைத்துக்கொண்டாள். அன்று இரவு ஊருக்கு வந்து உறங்கி எழுந்தவள், அதிகாலையில் அழுத கண்ணீரோடு, 'கோமதி எங்கே இருந்தாலும் எங்க அப்பா செய்து கொடுத்த சங்கிலியோடு நல்லா இருக்கட்டும். எனக்கு மீனாட்சி தாய் கண் திறந்து பார்த்ததே போதும்’ என சண்முகத்திடம் சொன்னாள். ஒருநாள் ராத்திரியில் அவளுக்கு என்ன மாற்றம் நடந்தது. ஏதேனும் 'கனா கண்டாளா?’ என சொர்ணத்தம்மாவுக்குக் குழப்பம்.

சரஸ்வதி யாரிடமும் பேசாமல், வீட்டுச் சமையல் வேலைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தாள். தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதில் அவள் கண்ணும்கருத்துமாக இருந்தாள். பகலில் அவள் அயர்ந்து உறங்கும்போது அவளை அறியாமல் தனது கழுத்தைத் தடவிக்கொள்வாள். அது மட்டும் அல்லாமல் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென, தனது கழுத்தையும் தொங்கிக்கொண்டிருக்கும் தாலிச்சரடையும் தடவிக்கொள்வாள்.

கோமதியிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்ததும், அவளை அறியாமல் தனது கழுத்தைத் தடவிக்கொண்டாள். அவளுக்கு அந்தக் கடிதம் உண்மையிலே பயத்தைத் தந்தது. இந்த 10 வருடக் காலத்தில், காணாமல்போன தங்கச் சங்கிலியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆவேசம், அவளை எதற்கெடுத்தாலும் அச்சப்படவைத்தது. சமையல் அறையில் தட்டு, டம்ளர் என ஏதாவது தவறி கிழே விழுந்தாலும், 'கோமதி வந்துட்டாளா... யாரு... யாரு..?’ என பயந்துபோய் பேசினாள். அந்தப் பயத்தோடுதான் அவள் அந்தக் கடிதத்தை கையில் வைத்திருந்தாள். அந்தப் பயத்தோடுதான் கடிதத்தை சண்முகத்திடம் கொடுத்தாள்.

சண்முகம் தன் தங்கை கோமதியின் கடிதத்தைப் பிரித்தார். கோடுபோட்ட காகிதத்தில் எழுதியிருந்தாள். அந்தக் கடிதம் ஒரு புத்தகத்தின் அளவு பெரியதாக இருந்தது. கடிதத்தில் இருந்த வரிகளைப் பார்த்ததும், அவருக்குக் கண்களின் கீழ் இமையில் திரண்ட துளி நீர், அவருடைய அனுமதி இல்லாமல் கன்னத்தில் வழியப் பார்த்தது. ஆனால், அதை அவர் அனுமதிக்கவில்லை. சண்முகம் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார்...

அன்புள்ள அண்ணனுக்கும் அண்ணிக்கும் வணக்கம். கோமதி எழுதும் கடிதம்...

நான் ஆறாம் வகுப்பு படித்தப் பெண். எனக்கு அவ்வளவாக எழுதப் படிக்கத் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் கடிதத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

அண்ணி என் மேல் கோபமாக இருப்பார்கள் என எனக்குத் தெரியும். இரவலாக வாங்கிப்போன நகையை, திருப்பித் தராமல் இருப்பது பெரிய குற்றம்தான். உங்களுக்கு ஏதாவது நல்ல காரியம் செய்ய நினைக்கிறேன். உங்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவளாக இருக்க விரும்புகிறேன். உங்களிடம் இருந்து வாங்கிய நகை காணாமல்போய்விட்டது எனப் பொய் சொல்ல, எனக்கு மனம் வரவில்லை. என்னிடம்தான் பத்திரமாக இருக்கிறது.

பொன்னம்பலம் மாமா எவ்வளவு கஷ்டத்தில் இந்த நகையைச் செய்து தந்திருக்கிறார் என எனக்குத் தெரியும். அதைவிட அண்ணி இந்த நகையின் மேல் எவ்வளவு பிரியமாக இருந்தார்கள் எனவும் தெரியும். அந்த நகை உங்களுக்கு வேண்டாம். பதிலாக வேறு ஏதேனும் நகையை வாங்கிக்கொள்ளுங்கள். அந்த நகைக்கான பணத்தை உங்களது பெயருக்கு செக் எடுத்து, இத்துடன் அனுப்பியிருக்கிறேன். 10 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று என்ன விலைக்கு அந்த நகையைச் செய்ய முடியுமோ, அதே விலைக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறேன். இது கணக்கை நேர்செய்ய அல்ல... உங்களுக்கு நல்லது செய்யவே. நீங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவே இதைச் செய்திருக்கிறேன்.

நகையை ஏன் உங்களுக்குத் தரவில்லை எனச் சொல்லியாக வேண்டும். நகையை இரவலாக வாங்கிப்போன மூன்றாவது நாளில், மலேசியாவில் இருந்து என் கணவரின் சித்தியும் சித்தப்பாவும் வத்தலகுண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து கொண்டுவந்த நகையை விற்று பணமாக்க விரும்பினார்கள். அந்தப் பணத்தைக்கொண்டு ஊரில் இடம்வாங்கிப் போடலாம் எனத் திட்டமிட்டிருந்தார்கள். காலி இடத்தைப் பார்க்க மாமாவும் மலேசியாக்காரரும் காலையில் புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். அப்படி ஒருநாள் இடம் பார்த்துவிட்டுத் திரும்பிவரும்போது, வயதான ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தனர். அவருக்கு நீண்ட தாடியும் முறுக்கிய மீசையும் இருந்தன. அடிக்கடி மூக்குப்பொடி போட்டுக்கொண்டார். அவருடைய வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் அழுக்காக இருந்தன. உடலில் விபூதி வாசனை அடித்தது. வயதானவர் ஏதோ மந்திரம் கற்றவர்போல தெரிந்தார். மலேசியாவில் இருந்து தாங்கள் கொண்டுவந்த நகையை, அவருக்கு முன்பாகப் பிரித்து இருவரும் வைத்தார்கள்.

'இந்த நகையை விற்கவே முடியவில்லை. ஏதாவது பரிகாரம் செய்தால் விற்க முடியுமா?’ எனக் கேட்டார்கள். வயதானவர் நகையை கையால் எடுத்துக்கொள்ளவில்லை. நாற்காலியில் அமர்ந்தபடி மேஜையில் இருந்த நகையை முகர்ந்துபார்த்தார். மூக்குப்பொடியை உறிஞ்சுவதுபோல நகையையும் உறிஞ்சி விடுவார் எனத் தோன்றியது. அவ்வளவு வேகமாக உறிஞ்சினார். உறிஞ்ச உறிஞ்ச அவருடைய மூக்கு விடைத்துக்கொண்டதோடு, மார்பும் விரிந்தது. பிறகு, மூச்சை சிறிது சிறிதாக வெளியேற்றினார். அப்படி வெளியேற்றும்போது கண்களை மூடிக்கொண்டார். அவருடைய முகம், தன் முன்பாக அமர்ந்திருக்கும் ஒருவரின் பேச்சைக் கேட்பதுபோல் இருந்தது.

வயதானவர், மலேசியாக்காரர்களைப் பார்த்து, 'நகையில ரத்தவாடை வீசுது. ரத்தக் கவுச்சி இருக்கு. அந்தக் கவுச்சி விபத்தா... கொலையா...னு தெரியலை. இந்த நகையை உடுத்திக்கிட்டவங்க ஆணா இருந்தா, ஆகாரம் இல்லாம செத்துப்போகணும். பெண்ணாக இருந்தா, புத்தி பேதலிச்சுச் செத்துப்போகணும்’னு சொன்னார்.

மலேசியாவில் இருந்து வந்த அந்தப் பெண் தன் முகத்தைப் பொத்தி அழத் தொடங்கினாள். நான் அவளைச் சமாதானப்படுத்தினேன். அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

p76c.jpg

மலேசியாக்காரர், 'நேரா பார்த்த மாதிரி சொல்றீங்களே... நீங்க சொன்னது நிஜம்தான். நிஜம்தான்’ என தலையில் அடித்துக்கொண்டு அழுதார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினோம்.

'நகையையும் உடுத்திப்போட்ட உடுப்பையையும் மோந்து பார்த்து, அதுல வர்ற வாசனையை வெச்சு நோக்காட்டையும் குத்தம்குறையையும் கண்டுபிடிக்கிறது எங்க பரம்பரையிலே இருக்கிறவங்களுக்கு கைவந்த வித்தை. இது வித்தைனும் சொல்லலாம்; இல்லை வைத்தியம்னு சொல்லலாம். ஆனால் இதுக்குப் பரிகாரமும் இல்லை; நிவாரணமும் இல்லை. விதி விட்ட வழி’ என்றார்.

'நடுரோட்டிலே கிடந்த அநாதைப் பிரேதத்தின் நகைகள் இவை. நடுராத்திரி நேரம். யாரும் இல்லைனு எடுத்துவெச்சோம். யாருக்கும் தெரியாம வித்துட்டு, ஊருக்கு வந்து சேர்ந்துருவோம்னு ஆசைப்பட்டுட்டோம். நகைகளை இவங்ககூட வேலை பார்க்கிறவங்களுக்கு வித்தோம். வாங்கினவங்க வீட்டில இருக்கிற பொம்பளைங்க மூணு பேரும், மறுநாள் ராத்திரியிலே தூக்குமாட்டிக்கிட்டுச் செத்துப்போயிட்டாங்க. என்ன காரணம்னு இன்ன வரைக்கும் தெரியலை. நகையை வாங்கினவர், சம்சாரம் செத்த துக்கத்திலே நகையை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்துட்டார்.

p76f(1).jpgரெண்டாவதா ஒருத்தருக்கு வித்தோம். அவர் மகள் கல்யாணத்துக்கு ஆசையா வாங்கினார். கல்யாணம் முடிஞ்ச மறுநாளே மாடியில் இருந்து குதிச்சுச் செத்துப்போச்சு அந்தப் பிள்ளை. நகையை கண் முன்னாலே வெச்சுப் பார்த்துட்டே இருக்கோம். ஒருநாள் ஒருதடவைகூட உடுத்தி அழகு பார்க்க முடியலை. ஏதோ பிசாசுகூட இருக்கிற மாதிரி இருக்கு. ஆசையா ஒருநாள் நகையைப் போடலாம்னு எடுத்தேன். கை-கால் நடுக்கம் எடுத்து, தரையிலே நிக்க முடியலை. உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பிச்சது. நகையை பெட்டியிலே போட்டதும் ஐஸ் மாதிரி உடம்பு ஜில்லுனு மாறிப்போயிருச்சு. ஆச்சர்யமா இருக்குது. இந்தா இந்த நகைதான்... மான் ஒண்ணு நிக்கிற மாதிரி இருக்குல, அதை என் மகளுக்கு ஆசையாப் போட்டுவிட்டேன். விடிகாலை எழுந்து பார்த்தா, என் மகளைக் காணோம். பூட்டின வாசல் கதவு எல்லாம் அப்படியே இருக்கு. 'எங்கே போனா?’னு தெரியலை. இன்னைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியலை. எங்களுக்குப் பயமா இருக்கு சாமி. பயந்துபோய் மலேசியாவை விட்டுட்டு ஊருக்கு வந்திருக்கிறோம். வெச்சிருக்கவும் மனசு இல்லை; விற்கவும் முடியலை. என்ன செய்யுறதுனு தெரியலை’னு அழத் தொடங்கினார் மலேசியா சித்தி.

'நீங்க அவ்வளவு சுலபமா இந்த நகையை வித்துட முடியாது; அனுபவிக்கவும் முடியாது. இந்த நகையை எங்கே எடுத்தீங்களோ, அந்த இடத்துலயே போய் புதைச்சு வைங்க. 10 அடி ஆழத்துல குழி தோண்டி அதுல நவதானியத்தைப் போட்டு, 10 வகையான எண்ணெய் ஊற்றி, இந்த நகையை அதுல போடுங்க. நகைக்கு மேலே 10 வகையான துணிகளைப் போட்டு குழியை மூடுங்க. மறு நிமிஷத்தில் இருந்து உங்களைப் பிடிச்ச பீடை, நோவு, அசௌகரியம் உபாதை... எல்லாம் மாயமா மறைஞ்சிரும்’னு அந்தப் பெரியவர் சொன்னார். அவர்களும் அந்த வார்த்தைகளை நம்பி மலேசியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதாகச் சொன்னார்கள். அதோடு பிரச்னை முடிந்தது என்றால் பரவாயில்லை.

என்னதான் இருந்தாலும் நான் படிக்காத முட்டாக்கழுதைதானே. வாயை மூடிக்கிட்டு இருந்திருக்க வேண்டும். அண்ணியின் நகையைக் காட்டி, 'இந்த நகையைப் பாருங்கள்’ எனக் கோட்டித்தனமாக அவரிடம் கேட்டுவிட்டேன். என் வீட்டுக்காரர் என்னைத் திட்டியதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. அப்படிக் கேட்டதுதான் இவ்வளவு பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. ஆனால் அப்படிக் கேட்காமல் இருந்து மறுநாள் ஊருக்கு வந்து உங்களிடம் நகையைக் கொடுத்திருந்தால், உங்கள் வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கும். எங்களுக்காக உழைத்த அண்ணன், எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். நல்லவேளையாக நகையைத் தராமலேயே இருந்ததை நினைக்கும்போது, மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

பெரியவர் தனது கைக்குட்டையால் முகத்தைப் பொத்திக்கொண்டு ஆழமாக ஏதோ ஒன்றை, தனக்குள் வாங்கிக்கொள்வதுபோல மூச்சை இழுத்தார். மூச்சை இழுக்க இழுக்க, அவரது முகமும் மார்பும் காற்று நிரம்பும் பந்தைப்போல விரிந்தபடியிருந்தது. பிறகு, வெற்றுப் பலூனைப்போல சுருங்கத் தொடங்கியது. அவர் இன்னொரு முறை, தனது நாசியால் காற்றை உள்ளிழுத்துக்கொண்டார். அந்த வீட்டின் இடுக்குகளின் வழியாக ஒளிந்திருக்கிற காற்றைக்கூட முகர்ந்து, தனது உடலில் நிரப்பிக்கொள்வதுபோல துரிதம்கொண்டிருந்தார்.

'என்ன சொல்லப்போகிறார். அதுவும் பொன்னம்பலம் மாமா செய்துகொடுத்த நகையில் என்ன குற்றம் குறையைக் கண்டுபிடிக்கப்போகிறார்’ என பரமார்த்தமாக இருந்துவிட்டேன். அவர் சொன்னார். 'இந்த நகை உன்னோடது இல்லை தாயி... நிசம்தானா?’ எனக் கேட்டார்.

நானும் 'ஆமாம்’ என்றேன்.

'இது யாரோடதா வேணா இருக்கட்டும். இந்த நகை இருக்கிற வீட்டிலே புருஷனும் பொண்டாட்டியும் இணைஞ்சிருக்க முடியாது. ஒருத்தருக்கு ஒருத்தர் எட்டிக்காய் மாதிரி கசந்துபோய்க் கிடப்பாங்க. சங்கிலி கழுத்திலே இருக்கிற பொம்பளைக்கு வயிற்றிலே பிள்ளை உதிக்காது. வம்சவிருத்தி தராமல் இருக்கிற பால் இல்லாத எட்டிக்காய் மரத்தோட நிழலில் உட்கார்ந்து, இந்த நகையைச் செய்திருக்காங்க. அந்த மரத்தோட பால் இந்த நகையிலே கலந்திருக்கு. நகையைப் போட்டதும் உடம்பு எல்லாம் கசந்துபோய் எரிச்சலாகிப்போயிரும். இனிப்பு தெரியாது. குடும்பத்திலே இருக்கிற சந்தோஷமான விஷயமும் தெரியாது. இந்தச் சங்கிலியிலே இருக்கிற மீன் கசப்பான நீரைக் குடிச்சுச் சாகக்கிடக்கு. கறுத்துப்போன மீன் இன்னும் கொஞ்ச நாளிலே செத்துப்போய் தானா அறுந்து உதிர்ந்திரும். சங்கில் இருந்து வர்ற ஓசை, ஏதோ சாவு வீட்டில் இருந்து வர்றது மாதிரி என் காதுக்குக் கேட்குது. நீ வாங்கினவங்ககிட்டயே திரும்பவும் கொடுத்திரு தாயி’ என்றார்.

'சாமி இந்த நகை என்னோட அண்ணன் சம்சாரத்தோடது. அவங்ககிட்டே இருந்து இரவலா வாங்கிட்டு வந்திருக்கேன். திருப்பி தந்தா, அவங்க வீட்டிலே நல்லது எதுவும் நடக்காதா?’

'கழுத்துச் சங்கிலி எங்கெங்கே இருக்கோ, அங்கே நான் சொன்னது நடக்கும். பரிகாரம் எதுவும் இல்லை. பரிகாரத்தைத் தேடிப்போய்ச் செய்றதுக்கு, சங்கிலியைக் கழுத்திலே உடுத்தாமலே இருக்கலாம்’ என்றார்.

அன்றில் இருந்து நான் அந்த நகையை உங்களுக்குத் தரக் கூடாது என்பதில் முடிவாக இருந்தேன். என் கணவர் 'உடனே கொடுத்துவிட்டு வந்துவிடு’ எனத் தினமும் தொந்தரவு செய்தார். அவருக்குத் தெரியாமல், ஒருநாள் ஊருக்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு, இரண்டு சினிமா படங்கள் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன். நகையைக் கொடுத்துவிட்டோம் என அவர் நிம்மதியாக இருந்தார். நகை இருக்கும் வீட்டில்தான் வாழ்க்கை எட்டிக்காய்போல கசக்கத் தொடங்கிவிடுமே. எதற்காக எனத் தெரியவில்லை. அவர் தினமும் குடித்துவிட்டு வர ஆரம்பித்தார். அவருக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், எனக்கு படுக்கையறை வெறுப்பாக மாறியது. எரிச்சலாக இருந்தது. உடல் பெரும் சுமையாகத் தெரிந்தது. நான் விலகவும் அவர் என்னை வெறுக்கவுமாக, தினமும் சண்டை.

இத்தனைக்கும், நகையை சாணி உருண்டையில் போட்டு உருட்டி பந்துபோல செய்து காயவைத்து பரணில் பழைய பொருட்களோடுப் பொருட்களாக ஒளித்து வைத்திருந்தேன். இன்று வரை நாங்கள் பிரிந்துதான் இருக்கிறோம். நான் குழந்தை பெற்றுக்கொள்ளாததைப் பற்றி பலரும் திட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதையும் புது வீடு, வாசல், இரண்டாவதாக ராஜி பிறந்தது என எல்லாவற்றையும் கேள்விப்பட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. இந்தச் சந்தோஷம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.

எனக்கு 10 வருடங்களாக குழந்தை பிறக்காததன் ரகசியமும் இதுதான். யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? நான் நம்பினேன். சங்கிலியை உங்களிடம் தந்துவிட்டு, சாமியார் சொன்னதைச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். நான் இரண்டு மூன்று குழந்தை பெற்றிருப்பேன். புதிதாக ஒரு வீடுகூட வாங்கியிருப்பேன். ஆனால், அண்ணி நிச்சயமாக என் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.

கல்யாணத்துக்கு முன்பு நான் கத்திரிக்காய் வாங்கிக்கொண்டு வந்து, புளிக்குழம்பு வைக்க வேண்டும் எனச் சொன்னால், அவர்கள் வேண்டும் என்றே துவரம் பருப்பை வேகவைத்து சாம்பார் வைப்பார்கள். என்னைக் கண்டால் அவருக்கு எட்டிக்காயைப்போல கசக்கும். வேண்டும் என்றே நான் ராத்திரியில் சாப்பிடுவதற்கு முன்பு சோற்றில் நீரை ஊற்றிவிடுவார்கள். 'கோமதி நீ சாப்பிட்டேன்னு நெனைச்சேன்’னு சொல்வார்கள். நான் தண்ணியைப் பிழிந்துவிட்டு ரசத்தை ஊற்றிச் சாப்பிடுவேன். நான் படிக்காத பெண் என்கிற இளக்காரம் எல்லோரிடமும் இருக்கிறது. அண்ணிக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்காமல்போனது ஏன் எனத் தெரியவில்லை. அண்ணா உங்களுக்கும்தான். அண்ணி... நீங்கள் என்னை நம்பாவிட்டால் பரவாயில்லை. எங்களுக்காக எங்கள் அண்ணன் எவ்வளவோ சிரமப்பட்டிருக்கிறார். நீங்களும் அண்ணனும் எங்கள் மூன்று பேர் திருமணம் முடிகிற வரை சரியாகப் பேசிக்கொண்டதுகூட கிடையாது.

நீங்கள் தினமும் இரவு எங்களுடன் வந்து படுத்துக்கொள்வதை இப்போது நான் நினைத்துக்கொள்கிறேன். நீங்கள் எங்களைப் பெற்றெடுக்காத அம்மா. எங்களுக்காக தாம்பத்ய வாழ்க்கையை ஆறு வருடங்கள் தள்ளிவைத்திருந்தது எவ்வளவு தியாகமான செயல். அந்த வாழ்க்கை இனிமேற்பட்டு உங்களுக்குத் தொடரக் கூடாது என்பதற்காகத்தான் அண்ணி, நான் சங்கிலியைத் தரவில்லை. மன்னிக்கவும். இத்துடன் செக் அனுப்பியிருக்கிறேன். மனதளவில் எந்தக் கெட்ட எண்ணமும் என்னிடம் இல்லை. தையல் வேலையில் எனக்குக் கிடைத்த பணத்தைச் சேகரித்துவைத்து, உங்களுக்குப் பணத்தை அனுப்பியிருக்கிறேன்.

அண்ணன் எத்தனையோ தடவை என்னை 'நாசமாகப் போ... நாசமாகப் போ...’ எனத் திட்டியிருக்கிறார். 'வட்டி வட்டியாக மூணு நாலு வாட்டி சோத்தைப் போட்டுத் திங்கத் தெரியுது’ எனத் திட்டியிருக்கிறார். ஒழுங்காகப் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலே இருந்து அண்ணனுக்கும் உங்களுக்கும் சுமையாக இருந்துவிட்டேன். அண்ணா உங்களது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு இதைவிட வேறு ஏதேனும் நல்லது செய்ய நினைக்கிறேன். நல்லது செய்யும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறேன்.

எப்போதும் நன்றியுடன் உங்களது சகோதரி கோமதி.

பின்குறிப்பு: இதில் உள்ள விலாசம், தற்காலிகமானதே; நிரந்தரமானது அல்ல. என்னைத் தேடி வர வேண்டாம். என் கணவர் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வீடு மாற்றிக்கொண்டிருப்பார். வேறு வீட்டுக்குப் போனால், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆசையில் இப்போது வரை இருக்கிறார். நான் சாண உருண்டையை பண்டப்பாத்திரங்களுடன் பாத்திரங்களாகப் போட்டு ரகசியமாகக் கொண்டுபோகிறேன். அந்த நகை உங்களுக்கு மட்டும் அல்ல. வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

சண்முகம் கடிதத்தைப் படித்து முடித்தார். சரஸ்வதி தன் கணவனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை முதன்முதலாகப் பார்த்தபடி நின்றிருந்தாள். பிறகு கணவனிடம் இருந்து கடிதத்தை வாங்கியவள், 'கழுதை படிக்கலைனாலும் கதை கதையா எதையாவது உளறுவா. நகை காணாமப்போச்சுனு ஒரு வரியிலே சொல்லவேண்டியதுதானே...’ எனத் திட்டினாள். அவள் காலடியில் காசோலை ஒன்று, பச்சை நிறத்தில் விழுந்துகிடப்பதை அவள் கவனிக்கவில்லை! 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.