Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சப்பாத்தும் ஓர் உயிரும்...

Featured Replies

சப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை

சிறுகதை: மாத்தளை சோமு, ஓவியங்கள்: செந்தில்

 

ருள் கலைந்து வெளிச்சம் வருவதைச் சொல்வதைப்போல் வெளியே சேவல் தன் சிறகுகளை அடித்து உரத்துக் கூவும் சத்தம், குடிசையில் படுத்துக்கிடந்த நாதனுக்குக் கேட்டது. ஒரு விநாடி, அந்தச் சேவலை தன் மனக்கண்ணால் மீட்டுப்பார்த்தான்.

வவுனியாவில் இருக்கும் மணியம், குஞ்சாகக் கொடுத்த சேவல். இன்று அது வளர்ந்து ஒரு குட்டி மயிலைப்போல் இருக்கிறது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மனைவி கௌரியைக் கேட்டபோது, ``ஆமிக்காரன் போட்ட குண்டுகளால கோழி, குருவி, ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் செத்திட்டுது. மனுஷரே சிதறிப்போறப்ப பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்? எத்தனை கோழிகள் இருந்த வீடு... இப்ப வெளியில வாங்கவேண்டி வந்திட்டுது’’  என்றாள்.

p103a_1515575623.jpg

அதைக் கேட்ட நாதன், `இவள் என்ன சொல்லவருகிறாள்?’ என்பதுபோல் அவளைப் பார்த்தான். அப்போது கௌரி சொன்னாள், ``உது மணியத்தார் குடுத்த சேவல்தானே! இனி `மணியத்தார் சேவல்’ எண்டு சொல்வோம்.’’

அன்றிலிருந்து அந்தச் சேவல் `மணியத்தார் சேவல்’ ஆனது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்கு முன்னர், கோழிப்பண்ணைபோல் நாற்பதுக்குமேல் சேவல்களும் கோழிகளும் வீட்டைச் சுற்றி நின்றன. ஒரு நாளைக்கு இருபது முட்டைகளாவது கிடைக்கும். அவற்றை வாங்கிச் செல்ல பலரும் வருவார்கள். அந்தக் கோழிகளோடு ஆடுகள் நான்கும், மாடுகள் நான்கும் குடும்பத்தைச் சுற்றி சுகம் தந்தன. ஆனால் இன்றோ, ஆடு மாடுகளைத் தேடவேண்டியிருக்கிறது. நடந்த யுத்தம், மண்ணைப் புரட்டிப் போட்டதோடு மனிதர்களைச் சிதைத்து, கால்நடைகளையும் அழித்துவிட்டது.

ஊருக்குள் ராணுவம் வருகிறது என்று முள்ளியவளை அம்மனுக்கு நேர்த்திவைத்த ஆட்டை இழுத்துக்கொண்டு பங்கருக்குள் போனபோது, அது பங்கரை விட்டுத் தாவி வெளியே ஓடியது. அதற்கு மனிதனின் யுத்தவெறி தெரியுமா என்ன? மறுநாள் பார்த்தபோது ஷெல் அடித்ததில் ஆடு சிதறிக்கிடந்தது.

யுத்தம் முடிந்து முகாமில் அகதியாய்ச் சிறைப்பட்டுக்கிடந்து, பல மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி ஊருக்கு வந்தபோது, அவன் வீடு இருந்த இடமே நாதனுக்குத் தெரியவில்லை. மாவு ஆட்டும் உரலை வைத்துத்தான் இடத்தைக் கண்டுபிடித்து, சிதறிக் கிடந்ததை அள்ளி எடுத்து, அந்த இடத்தில் ஒரு மண்குடிசை போட்டு வாழ்க்கையைத் தொடங்கினான்.

அப்போது மண்ணில் யுத்தம் இல்லாதுபோனாலும், அன்றாடம் வாழ்வதற்கே யுத்தம் செய்யவேண்டியிருந்தது. விட்ட மண்ணைக் கொத்தி விவசாயம் செய்ய அவனிடம் எதுவுமே இல்லை. தினமும் கூலி வேலைக்குப் போனான். அந்த வேலைக்குச் சம்பளமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் கிடைத்தன. எப்போதாவதுதான் காசு கிடைத்தது.

பக்கத்தில் கால்களை நீட்டிப் படுத்திருந்த மகனைப் பார்த்தான் நாதன். இடுப்போடு ஒட்டிய கால்சட்டை. மேலே சட்டை இல்லை. அழுக்கான கால்கள். அது அவன் குற்றமல்ல. வெறுங்கால்களோடுதான் போகிறான்.  தரை அழுக்குப் படாமல் என்ன செய்யும்? சப்பாத்து (ஷூ ) வேண்டுமென்று கேட்கிறான். வாங்கிக் கொடுக்கப் பணம் வேண்டுமே!

மகனுக்குப் பக்கத்தில் மனைவி... வற்றிப்போன உடல். திருமணத்தின்போது `கொழு கொழு’வென இருந்தாள். முள்ளியவளையில் பிறந்தவள். பத்து வரை படித்தவள். வயலிலே கால் பதித்து வாழ்ந்தவள். பிறப்பிலே மாநிறமானபோதும், சூரிய வெளிச்சம் அவளின் நிறத்தில் கறுப்பைக் கலந்தது. ஆனால், அதிலும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவளை `மனைவி’யாக்கினான் நாதன். இருபது பேரோடு வீட்டிலேயே திருமணம். மணவறை இல்லை, ஐயர் இல்லை, விருந்தினர் இல்லை. அப்போது அங்கு யுத்தம் நடக்கவில்லையென்றாலும், `யுத்த வளையத்துக்குள் எப்போது யுத்தம் வருமோ!’ என்ற எச்சரிக்கையோடு வாழ்ந்த காலம்.

கௌரி மனைவியாக வீட்டுக்கு வந்த பத்தாவது நாள், `கோழி வளர்க்க வேண்டும்’ என்றாள். அவளுக்காக சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்குப் போய் நாட்டுக்கோழிகளை வாங்கி வந்தான். அவற்றைத் தன் `பிள்ளை’களைப்போல் வளர்த்தாள். அவை வளர்ந்ததும் தினமும் முட்டைகள் விழுந்து காசு வரத்தொடங்கியது. அப்போதுதான் அவளது கோழி வளர்ப்பு ரகசியத்தைப் புரிந்துகொண்டான் நாதன்.

கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதும் வாழ்க்கை ஆட்டம்காணத் தொடங்கியது. அவள் இல்லையென்றால் அவன் உயிரோடு இருப்பானா தெரியாது. ராணுவத்தின் கைக்குக் கிளிநொச்சி போனதும், `வவுனியாவுக்கு வா’ என்று அவளின் அண்ணன் கூப்பிட்டதை நிராகரித்துவிட்டு இங்கேயே இருந்தாள். துன்பங்களே சுமையாக மிஞ்சியிருக்கும் இந்த நேரத்தில்கூட மகனைப் பள்ளிக்கூடம் அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள். அதற்காகத்தான் மறுபடியும் கோழி வளர்க்கத் தொடங்கினாள்.

ஒருநாள் குடிசையைத் தேடி இரண்டு பேர் சைக்கிளில் வந்தார்கள். கௌரி, யாரோ எவரோ என பயத்தில் நின்றாள். நாதனுக்கும் அதே பயம்தான். யுத்தம் நின்றுபோனாலும் யார், யாரோ அங்கு வருகிறார்கள். ராணுவத்தினரும் சாதாரண உடையில் வந்து போவதாகச் சொல்கிறார்கள். இவர்கள் யாரோ?

நாதன் ``நீங்கள்..?’’ என்று மெதுவாகக் கேட்டான்.

வந்தவர்களில் ஒருவர் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுச் சொன்னார், ``நாங்கள் முள்ளியவளை ஸ்கூலிலிருந்து வருகிறோம். உங்களுக்குப் படிக்கிற வயசில் ஒரு பிள்ளை நிக்கிறதாக் கேள்விப்பட்டோம்.”

p103b_1515575647.jpg

உள்ளே இருந்த கௌரி, வெளியே வந்தாள். அவளின் பின்னே மகன் நின்றான்.

அவர்களைப் பார்த்து கௌரி பேசினாள், ``உங்க ஒரு மகன் நிற்கிறான். வயசு பத்து இருக்கும். பிறந்த குறிப்பு எங்கயெண்டு தெரியல. அவன் படிக்க வேணும். அவன எப்புடிப் பள்ளிக்கூடம் அனுப்புறது எண்டு யோசிச்சனான். அம்மனே உங்கள அனுப்பிப்போட்டுது.”

``பள்ளிக்கூடம் திறந்து ஆறு மாசமாச்சு. பிள்ளைய ஏன் படிக்க அனுப்பல்ல?”

``அய்யா...” என்று நாதன் இழுத்தான். அதற்குள் கௌரி உள்ளத்தில் இருந்ததைக் கொட்டினாள். ``ஒழுங்கான உடுப்பில்ல. புத்தகம் வாங்கக் காசில்ல. எப்புடிப் படிக்க வருவான் அய்யா? யுத்தத்தால எங்கட உசிர் மட்டும்தான் இப்ப மிச்சமா இருக்கு.”

``யுத்தக் கதைய எத்தன நாளைக்குச் சொல்லிக்கொண்டு இருப்பது? யுத்தம் முடிஞ்சி பல வருஷமாச்சு. சரி, இனியாவது பிள்ளையப் படிக்கவையுங்கோ. புத்தகம் தரலாம். இப்போதைக்கு இருக்கிற உடுப்போட அனுப்புங்கோ. பேந்து (பிறகு) உடுப்புத் தரலாம். சரி, மகன்ர பேர் என்ன?” வந்தவர்களில் ஒருவர், பெயரை எழுதத் தயாரானார்.

``மகன்ர பெயர் சத்தியன்.”

``தகப்பன் பெயர்?”

``நாதன்.”

பெயரை எழுதியவர், ``இன்டைக்கி வெள்ளிக்கிழமை. வர்ற திங்கள் மகனைப் பள்ளிக்கூடம் அனுப்புங்கோ. பள்ளிக்கூடம் எங்கயெண்டு தெரியும்தானே! பழைய இடம் இல்லை. தற்காலிகமாக சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கு.”

நாதன் தலை அசைத்தான். கௌரி வெகுநாள்களுக்குப் பிறகு புன்னகைத்தாள். நாதனின் நெஞ்சுக்குள்ளோ எண்ண அலைகள். மகன் எப்போதும் கோழிகளோடேயே இருக்கிறானே! அதிலும் மணியத்தார் சேவல் என்றால் அவனுக்கு உயிர். படுக்கையை விட்டு எழுந்ததுமே அந்தச் சேவலைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவானே! அதற்கு அவன் வைத்த பெயர் `மயில் சேவல்.’ அவன் எப்பம் அந்தச் சேவலை விட்டுப் போவான்? ஆனால், அதைப் பற்றி மனைவியிடம் எதுவும் கேட்காமல், ``இன்னும் ரெண்டு நாள் இருக்கு. உடுத்தியிருக்கிற கால்சட்டையைத் துவைத்துப்போட வேண்டுமே!” என்று கேட்டான்.

``அதைப் பத்தி நீங்கள் யோசிக்க வேண்டாம். முதலில் டவுனுக்குப் போயிட்டு வாங்கோ. பழைய துணிகள் விக்கிறாங்களாம். முப்பது கோழிகள் இருக்கு. நூறு ரூபா காசும் இருக்கு. சத்தியனையும் கூட்டிக்கொண்டு போங்கோ” என்றாள் கௌரி.

நாதனுக்கு ஆச்சர்யம், `காசு கேட்டால் இல்லை என்பாள். எப்படி நூறு ரூபா வைத்திருக்கிறாள்! எல்லாம் கோழி முட்டைகள் விற்ற காசாக இருக்கும்.’

டவுனுக்கு மகனோடு போன நாதன், மகனுக்கு இரண்டு செட் கால்சட்டை, ஷேர்ட்டோடு திரும்பினான். கௌரி அந்த உடுப்புகளை மகனுக்குப் போட்டுப் பார்த்தாள். அளவு எடுத்துத் தைத்ததுபோல் இருந்தது.

அவள் முகத்தில் வெளிச்சம். ``சொல்லிவைச்சுத் தைச்சதுபோல இருக்கே! என்ன விலை?”

``ரெண்டு செட்டும் எம்பது ரூபா. விடுதியில் விற்றார்கள். காசு விடுதிக்காம். உடுப்பு வெளிநாட்டிலிருந்து வந்ததாம்” என்ற நாதன், கையில் இருந்த மீதிப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, ``குளத்து மீனும் வாங்கியிருக்கிறேன்” என்றான்.

குளத்து மீன்கறி என்றால் அவனுக்குப் பிடிக்கும். அவளுக்கும் பிடிக்கும். திருமணமான புதிதில் குளத்து மீன்களைக் கொடுத்துவிட்டு ``உம்மட பக்குவத்தில் கறி வையுமேன். குளத்து மீன்கறி எண்டால் எனக்குப் போதும்” என்றான்.

அவன் கொடுத்த குளத்து மீன்களைப் பார்த்தாள். அப்போது அவன் சொன்னான், ``குளத்து மீன் சின்னது எண்டு பார்க்கிறீரோ? உமக்கு ஒரு விடுகதை சொல்லட்டோ! குளத்து மீன் சிறுத்ததேன்?” என்றவன், அதற்கு அடுத்த வார்த்தையை அவளின் காதில் சொல்லிவிட்டு, ``பெருத்ததேன்?” என்று சொல்லிவிட்டு அவளின் மார்பைப் பார்த்தான் கௌரி அவன் பார்வையால் உணர்த்தியதை உணர்ந்து வெட்கத்தில் தலை குனிந்தாள். அவளிடமிருந்து விடுகதைக்குப் பதில் வராது என்பதை அறிந்த நாதன், ``மீனை அடிக்கடி பிடிக்கிறதால அது பெருக்காது. சின்னதாகவே இருக்கும். மற்றதை அடிக்கடி பிடிக்கிறதால பெருசாகும். இதுதான் பதில்” என்றான். கௌரி முகம் சிவந்து மறுபடியும் வெட்கப்பட்டாள்.

p103c_1515575667.jpg

திங்கட்கிழமை மகனை இருவரும் அழைத்துச் சென்றார்கள். சத்தியனுக்கு, பள்ளிக்கூடம் போக விருப்பமில்லை. அம்மாவுக்கு பயந்துதான் போனான். போவதற்கு முன் மணியத்தார் சேவலைப் பிடித்துக் கொஞ்சி, அதன் சொண்டில் முத்தம் கொடுத்துவிட்டுப் போனான்.

சத்தியனுக்கு, பள்ளிக்கூடம் புது உலகமாய் இருந்தது. வீட்டில் ஐந்து நிமிடத்துக்குமேல் ஓர் இடத்தில் இருக்க மாட்டான். ஆனால், பள்ளிக்கூடத்தில் ஒரே இடத்தில் இருப்பது என்னவோபோலிருந்தது. அவனைப் போன்று 20 பிள்ளைகள் அந்த வகுப்பில் இருந்தார்கள். கீழே மணல் தரையில் உட்கார்ந்தே படித்தான்.

தொடக்கத்தில் பள்ளிப்பாடம் கசந்தது அவனுக்கு. ஆனால், அம்மாவுக்கு பயந்தும், தன் வயதுடையவர்கள் அங்கு வருவதால் அவர்களைப் பார்க்கவும் பேசவும் மட்டுமே போனான். அப்படிப் போனபோது, அவனுக்கு நண்பனானான் சந்திரன். அவன் சத்தியனைப் ``படி’’ எனத் தூண்டினான்.

ஒருநாள் சந்திரன் ``எங்கட சித்தப்பா அடுத்த கெழம சிட்னியிலிருந்து உங்க வரப்போறார். அவர் நல்லா படிச்சதால உந்த ஊரவிட்டுப் போயிட்டார்” என்று சொன்னபோது, அவன் முகத்தில் மகிழ்ச்சி குடியேறியதைக் கண்டான் சத்தியன்.

“உம்மட சித்தப்பா உமக்கு ஷேர்ட், கால்சட்டை, சொக்லெட் எல்லாம் கொண்டுவருவார்.”

``நான் ஒண்டும் கேட்கவில்லை. ஆனால், அப்பாவிடம் என்ர வயசை, உயரத்தைக் கேட்டவராம் சித்தப்பா! அது சரி, உமக்குச் சித்தப்பா, பெரியப்பா இல்லியோ?”

``சித்தப்பா மட்டும்தான். அவரும் இயக்கத்தில சேர்ந்து யுத்தத்தில செத்திட்டார்” என்றான் சத்தியன்.

பத்து நாள்களுக்குப் பிறகு சந்திரன் புதுச்சட்டை, புதுக் கால்சட்டையோடு பள்ளிக்கூடம் வந்தான். சத்தியன், அவனைத் தலையிலிருந்து கால் வரை பார்த்தான். காலில் புத்தம் புதிய ஷூ. அதற்குள் சாக்ஸ்.
``உந்த சப்பாத்து என்ன விலை?”

சந்திரன் சிரித்துவிட்டுச் சொன்னான்.. ``உது சித்தப்பா சிட்னியிலிருந்து வாங்கி வந்தது.”

சத்தியன், அழுக்கடைந்த தன் கால்களைப் பார்த்தான்.

அப்போது சந்திரன் ஆவலோடு, ``ஒரு விஷயம் சொல்லட்டோ... எங்கட சித்தப்பா கொழும்பில இருந்து 200 சோடி சப்பாத்துக் கொண்டுவந்து ஸ்கூல் பிரின்சிபாலிடம் உங்க படிக்கிற பிள்ளைகளுக்குக் குடுக்கச் சொல்லியிருக்கார். நேத்து சப்பாத்துக் குடுத்தாங்களே... உனக்குக் குடுக்கலியோ? ஒப்பிசில போய்க் கேளும்” என்றான்.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போவதற்கு முன்னர் பிரின்சிபால் அறைக்குப் போனான். அவனைக் கண்டதும் பிரின்சிபால் ``என்ன?” என்றார்.

சத்தியன் ``சேர்...” என்று இழுத்தான். அவரைப் பார்த்ததும் பயம் வந்துவிட்டது அவனுக்கு.

``என்ன வேணும் சொல்லும்” என்றார்.

சத்தியன் மெல்லிய குரலில் ``எனக்கும் சப்பாத்து வேணும் சேர்” என்றான்.

``சப்பாத்தோ... உமக்கு அப்பா இருக்கிறாரோ?”

``ஓம் சேர்..”

``அப்படியெண்டால் உமக்குச் சப்பாத்து இல்லை. அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருத்தர் இல்லையெண்டால்தான் சப்பாத்துத் தரலாம். நீர் உம்மட அப்பாட்டச் சொல்லி வாங்கும்.”

பிரின்சிபாலின் பதிலைக் கேட்ட சத்தியன், கவலையோடு வீட்டுக்குப் போனான். வீட்டுக்குள் போனதுமே கையில் இருந்த புத்தகங்களைத் `தொப்’பெனப் போட்டுவிட்டு, தரையில் சுருண்டு அழுதான். அதைக் கண்ட கௌரி, என்னவோ... ஏதோவெனப் பதறிப்போய் அவனருகே உட்கார்ந்து அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு, ``என்ன நடந்தது குஞ்சு?” என்றாள் கவலையோடு.

சத்தியன் அழுகையை நிறுத்திவிட்டு, ``எனக்கு அம்மா, அப்பா இருக்காங்கள் எண்டு சப்பாத்துத் தர மாட்டேன் எண்டு சொல்றாங்கள். யாராவது ஒருத்தர் இல்லையெண்டால்தான் தருவாங்களாம். எனக்கு சப்பாத்து வேண்டும். என்ர காலப் பார் அம்மா” என்றான்.

அவளுக்குக் கோபம் வந்தது. ``இது என்ன நியாயம்? அம்மா, அப்பா இருந்தால் உங்க காசு புரளுதோ? யாரோ குடுத்தாலும் உவன்கள் ஒரு நியாயம் கதைக்கிறாங்கள். சரி, நீ அழாதே... மணியத்தார் சேவலை வித்து, சப்பாத்து வாங்கித்தாரன் குஞ்சு!”

அவளின் பதிலைக் கேட்ட சத்தியன் சடாரென எழுந்து உட்கார்ந்து, ``மணியத்தார் சேவல்ல கை வைக்கக் கூடாது. அத வித்து சப்பாத்து வாங்க வேணாம்” என்றான்.

சத்தியனுக்கு `எப்படியாவது சப்பாத்து வாங்க வேண்டும்’ என்று நினைத்த நாதனால், படுக்கையிலிருந்து எழும்ப முடியவில்லை. வாயெல்லாம் கசந்தது. கால்கள் வலுவிழந்ததுபோல் இருந்தன. கண்கள் சிவந்திருந்தன. ``கௌரி... இங்க வாருமென், என்னைக் கொஞ்சம் தொட்டுப்பாரும்.”

கௌரி, கணவனின் தேகத்தைத் தொட்டுப்பார்த்தாள். நெருப்பாய்க் கொதித்தது.

``உந்தக் காச்சலோட எங்கயும் போக வேண்டாம். கொத்தமல்லி அவிச்சி குடிக்கத் தாரன். பேந்து (பிறகு) கடைக்குப் போய் பெனடோல் வாங்கிக்கொண்டு வாரன்” என்ற கௌரி, கொத்தமல்லியை வறுத்துக் கஷாயம் வைக்கத் தொடங்கினாள்.

மூன்று நாள்களாகியும் நாதனின் காய்ச்சல் குறையவில்லை. அவன் உடல் நலிந்துபோனது. அக்கம்பக்கத்தவர்கள் உதவியோடு நாதனை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார்கள். கிளிநொச்சியில் இரண்டு நாள்கள் வைத்திருந்தும் காய்ச்சல் குறையாததால், ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸில் வவுனியா பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஏழு நாள்கள் இருந்து உயிரை விட்டான் நாதன். அவன் செத்த பிறகுதான் ``அந்த நெருப்புக் காய்ச்சல் உயிரை வாங்கிவிட்டது’’ என்றார்கள்.

அப்பா செத்த பிறகு சத்தியன் பள்ளிக்கூடம் போகவேயில்லை. கௌரியும் அவனைப் `போ’ எனச் சொல்லவில்லை. கணவனின் சாவு, தலையில் இடி விழுந்ததைப்போல் ஆகியது. இனி யாருக்காக வாழ்வது என நினைக்கிறபோது, சத்தியனின் நினைவுவரும். சத்தியன் இல்லையென்றால், அவள் தற்கொலை செய்திருப்பாள். சத்தியன், அம்மாவின் பக்கத்திலேயே இருந்தான்.

நாள்கள் ஓட ஓட, சோகத்திலிருந்து கௌரி விடுபடத் தொடங்கினாள். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து சந்திரன் வந்திருந்தான். அவன் செத்த வீட்டுக்கும் வந்திருந்தான். அவனோடு ஸ்கூல் மாஸ்டரும் வந்தார்.

``நடந்ததையே நினைச்சுக்கொண்டிருந்தால் மகன்ர எதிர்காலம் என்ன ஆகும்? படிக்கிற வயசு. அவனை ஸ்கூலுக்கு அனுப்புங்கோ. நான் உங்கட குடும்பத்துக்கு வெளிநாட்டு உதவி எடுத்துத் தரப் பார்க்கிறேன்” என்றார் மாஸ்டர். அவரிடம் `சப்பாத்தே எனக்குத் தரவில்லையே!’ என்று கேட்க நினைத்தான் சத்தியன். ஆனால், கேட்கவில்லை.

சில நாள்களான பிறகு சத்தியன் பள்ளிக்கூடம் போனான். இடைவேளையில் பிரின்சிபால் இருக்கும் அறைக்குப் போனான். அங்கு அடுக்கி வைத்திருந்த சப்பாத்துப் பெட்டிகளைப் பார்த்தான். அப்போது ``உமக்கு என்ன வேணும்?” என்ற குரல் கேட்க, நிமிர்ந்தான் சத்தியன். அவர்தான் `அம்மாவோ, அப்பாவோ உயிரோடு இருந்தால் சப்பாத்து இல்லை’ என்று சொன்னவர்.

``எனக்கு இப்ப அப்பா இல்லை. அவர் காய்ச்சலில் செத்துப்போனார். இப்ப எனக்கு சப்பாத்துத் தருவியளோ? முந்தி கேட்டனான். அம்மா, அப்பா இருந்தால் இல்லையென்று சொன்னனீங்கள், இப்ப சப்பாத்து” என்றான் சத்தியன்.

அவனுடைய வார்த்தைகள், புதுச் சப்பாத்தால் தன்னை அடிப்பதுபோல் உணர்ந்தார் பிரின்சிபால். பதில் வராமல் அவர் வாயிதழ்கள் மூடிக்கொண்டன.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி...நவீனன்!

மாத்தளை சோமு அவர்களின் கதை கூட.....விகடனுக்குப் போய்த் தான்..யாழுக்கு வரவேண்டிக் கிடக்குது என்று நினைக்க மிகவும் கவலையாக உள்ளது!

மறு முறை அவரைச் சந்திக்கும் போது கேட்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உணர்ச்சிகரமான கதை.....!

ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி எடுத்து இணைத்துள்ளீர்கள் நன்றிகள்.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.