Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோமசுந்தரம் செய்த கொலைகள்

Featured Replies

சோமசுந்தரம் செய்த கொலைகள் - சிறுகதை

 

சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ரமணன்

 

``நீங்க ஏங்க அக்யூஸ்ட் மாதிரி கை கட்டிக்கிட்டு ஓரமா நிக்கிறீங்க? இங்க வந்து ஒக்காருங்க.’’ சோமசுந்தரம் அங்கு இருந்த நாற்காலியில் அமரும் முன், தான் குற்றவாளி அல்ல என்பதிலிருந்த மன நெருடலைத் தீர்க்க முனைந்தான். இரண்டு போலீஸ்காரர்களுடன் இந்தக் கிராமத்துக்கு வரும் முன்னரே மனதுக்குள் ஊனச்சந்தேகம் நகர்ந்தபடியிருந்தது. அவர்கள் மூவரும் காத்திருந்த அந்த வீட்டுவாசலில், மரம் ஒன்று வெள்ளைப் பூக்களை உதிர்த்திருந்தது. மரத்தின் பெயர் தெரியவில்லை. வெயில் தன் கொதிப்பை இளஞ்சூடாக மாற்றியிருக்க, ஒரு காகம் வெயில் நனைத்தபடி பறந்தது.

சோமசுந்தரத்துக்கு, தன்னை யாரும் `டிரைவர்’ எனச் சொல்வது பிடிக்காது. ``நான் என்ன பஸ் ஓட்டுறேனா, லாரி ஓட்டுறேனா, இல்ல கார் ஓட்டுறேனா... ரயில். பைலட்டுன்னு சொல்றதுல ஒங்களுக்கு என்ன பிரச்னை?’’ மூக்கு நுனிக் கோபத்துடன் சண்டைக்குச் செல்வான். தன் அப்பா டூட்டி முடிந்து வரும்போதெல்லாம் ஏன் குடித்துவிட்டு வருகிறார் என்று நீண்ட நாள்களாகவே சோமுவுக்குத் தெரியாமலிருந்தது. அவனுக்குக் காரணம் தெரிந்தபோது, சோமுவின் அப்பா சம்பத் உயிரோடு இல்லை. தன் அம்மா வனஜாவிடம் சோமு ஒருமுறை கேட்டான், ``அப்பாவுக்கு எவ்வளவு நல்ல பேர் இருக்கு. ரயில் பைலட்டுன்னா என்னா மரியாதை! பின்ன ஏம்மா குடிக்கிறாரு?’’

p45a_1517376542.jpg

வனஜா சிரிப்புடன், ``அவர் குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கெடக்குறாரா, இல்ல யார்கிட்டயாவது வம்பிழுத்திட்டு வர்றாரா... எவ்ளோ குடிச்சாலும் வீட்டுக்குத்தானே வர்றார். காலையில குளிச்சிட்டு டூட்டிக்குப் போறாரா இல்லியா? அவர் எனக்குப் புருஷனாவும் ஒனக்கு அப்பாவாவும் சரியாத்தான்டா இருக்கார். இது எல்லாத்தையும் மீறிக் குடிக்கிறார்னா...’’ பெருமூச்சு விட்டு சிரிப்பை நிறுத்திய வனஜாவுக்கு, காரணம் தெரியாமலில்லை. அந்தக் குடி, சம்பத்தின் உயிரைக் காவு வாங்கியபோது அவளால் அழத்தான் முடிந்தது. மஞ்சள் காமாலையென்று ஓய்வெடுத்தவருக்கு, நீர் சரிவரப் பிரியாமல்போக, டாக்டரிடம் சென்றபோது, ஸ்கேன் ரிப்போர்ட்டில் கிட்னி மொத்தமும் ஃபெயிலியரானது தெரிந்தது மட்டுமல்லாமல், கூடுதலாக லிவரும் தன் இறுதிமூச்சில் இருக்க, கண்களில் நிறைந்த நீரோடு வனஜாவின் கைகளைப் பிடித்தபடி செத்துப்போனார் சம்பத். டிகிரி முடித்திருந்த சோமுவுக்கு, அப்பாவின் வேலை வீடு தேடி வந்தது. வனஜாவுக்கு மனமில்லை என்றாலும், குடும்பத்தை உத்தேசித்து மகனை அதே வேலைக்கு அனுப்பத் தலையாட்டினாள்.

டிரெய்னிங் முடித்த சோமு, முதலில் சரக்குப்பொருள்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டியில்தான் பைலட்டாகச் சென்றான். விபரீதம் அப்போது முளைக்கவில்லை. தொடர் புரமோஷனில் லோக்கல் பாசஞ்சரில் பைலட் ஆனான். தண்டவாளங்களில் சக்கரங்கள் அவனால் நகரத் தொடங்கிய மூன்றாவது மாதம் அந்தத் தற்கொலையை அவன் சந்திக்க நேர்ந்தது. கண்கள் விரியப் பார்த்தவாறு வெளிவந்த சோமுவின் அலறல், ரயிலின் `பாங்ங்ங்...’ சத்தத்தில் கரைந்தது.

மறுநாள் உடல் கொதிப்புடன் ஜுரத்தில் வீழ்ந்தான். கண்களை மூடினால் அந்தப் பெரியவரின் முகம் பளீரென வெளிச்சமாக இமையின் மீது படிந்தது. முதியவர் மிகவும் தளர்ந்திருந்தார் என்பதையும் மீறி, ரயிலின் அத்தனை வெளிச்சத்தையும் துளி மறுப்புமின்றி எதிர்கொண்ட அவரின் கண்கள் சோமுவின் மூளையில் உச்ச அதிர்வை நிகழ்த்தின. அந்தப் பெரியவர் உடல்மீது தன் கால்களால் மிதித்துக் கடந்தபோது பாதி செத்திருந்தான் சோமு.

பெரியவரின் சாவுச் சூடு ஆறுவதற்குள் அடுத்த கொடூரம் நிகழ்ந்தது, அதிகாலையில் சோமசுந்தரத்தின் முதல் ட்ரிப்பில். விடிந்தும் விடியாத நிறத்தில் தண்டவாளத்தின் மீது படிந்திருந்த பனி விலகும் முன்னரே ஒருவர் வீழ்வதைப் பார்த்தான். நீளமான மரக்கட்டையைத் தன் கக்கத்தில் தாங்கியபடி நின்றிருந்தவர், ரயில் நெருங்கியதும் ஊன்றுகோலை நழுவவிட்டு தண்டவாளத்தில் படிந்தார். உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது சோமசுந்தரத்துக்கு.

p45g_1517376572.jpg

ஸ்டேஷன் அடைந்ததும் இறங்கி ஓடியவன், ரெஸ்ட் ரூம் சென்று வாந்தியெடுத்தான். முகம் கழுவியதும் யாரோ தந்த டீயில் படபடப்பு அடங்கியது. அன்று மாலை பேப்பரில் செய்தி வந்திருந்தது. காட்டாங்குளத்தூர் அருகே ரயில் மோதி ஊனமுற்ற முதியவர் பலி. சோமுவுக்கு, கண்ணீர்த் திரையை மீறி ஏதோ தெரிந்தது. `ரயில் மோதி’ என்றுதான் இருந்ததே தவிர, `ரயிலை ஓட்டிய சோமசுந்தரம் மோதி’ என்றில்லை. சோமு கண்ணீர் விலக்கி மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்தான். அப்படியேதான் இருந்தது. `எவ்வளவு அவமானம், வலியை அனுபவித்திருந்தால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்!’ என்ற சிந்தனையில் சரியாக உணவு செல்லாமல் தூக்கமில்லாமல் காய்ச்சலில் விழுந்தான் சோமு. அரை மயக்கத்தில் பிதற்றியபோது தன் அப்பா ஏன் வேலை முடிந்து வரும்போதெல்லாம் குடித்துவிட்டு வந்தார் என்பது புரிந்துபோனது.
ஸ்டேஷன் மாஸ்டரின் வார்த்தைகளில் தண்டவாள இடுக்கில் செடி முளைக்க, சோமு பச்சையம் பார்த்தான்.

``ஒங்கப்பா லோக்கல்ல பைலட்டா போன காலத்துலேர்ந்தே எனக்குத் தெரியும். அத்தனை வருஷப் பழக்கம். அவர் சர்வீஸ்ல பார்க்காததா... ஒரு பிரேக் போட்டா, ரயிலையும் அந்தச் சாவையும் நிறுத்திடலாம். ஆனா, அதுக்கெல்லாம் வழியே இல்லைங்கிறப்போ, ஒண்ணு... கண்ண மூடி வேண்டிக்க. இல்லையா, திரும்பி நின்னுக்க. எதுக்கும் நீ சாட்சியா இருக்கவேணாம். டிராக் மாறி வந்த எத்தனையோ மாடுகளை, பகல்ல மோதி அடிச்சித் தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கு. தொண்ணூறு, நூறுன்னு வண்டி போற வேகத்துல என்ன பண்ண முடியும் சொல்லு.

இந்த பீச் டு காஞ்சிபுரம் வண்டி ரூட்டுல ஒங்கப்பா காலத்துல வாரம் ஒரு சம்பவம் நடக்கும். அப்புறமா சிட்டி பெருசாச்சு. காட்டை அழிச்சு மக்கள் குடிவந்ததும் சாவு கொறஞ்சிடுச்சு. உன் வண்டியில வந்து விழுந்த அந்தப் பெரியவருக்கு, பக்கத்து ஊர்தான். வீட்டுல மருமகள்கிட்ட சண்டை போட்டுட்டு லெட்டர் எழுதி வெச்சுட்டு வந்து விழுந்துட்டார். அந்த ஹேண்டிகேப்டு... கோயில் வாசல்ல பிச்சை எடுத்தவர். வாழ்ந்தது போதும்னு தோணியிருக்கும், விழுந்துட்டார். நாம என்ன பண்றது? ஜெயில்ல எல்லாம் தூக்குல போடுறதுக்குன்னு ஒரு ஆளு இருப்பார். அது அவர் பார்க்கிற வேலைதானே! கொலைக்குத்தம் இல்லீல்ல?’’
வனஜாதான் பயந்துபோனாள். தினம் டூட்டிக்குக் கிளம்பும்போது சோமுவின் நெற்றியில் விபூதி பூசி, குலதெய்வத்தை அவனுடன் இருக்கும்படி வேண்டிக்கொண்டு மகனை வேலைக்கு அனுப்பிவைத்தாள். சோமு ரயில் ஓட்டும்போது, அருகில் மீசையை முறுக்கியபடி குலதெய்வம் அமர்ந்திருந்தது. பகலில் சில சமயங்களில் தண்டவாளம் ஓரமாக மேய்ந்துகொண்டிருக்கும் ஆட்டுக்குட்டிகள், என்னதான் ஹாரன் அடித்தாலும் கடைசி நிமிடத்தில் துள்ளிக்குதித்து சக்கரம் பக்கம் நெருங்கும். சோமுவின் கண்களுக்கு ஆட்டுக்குட்டி சிதைவது தெரியாது. சக்கரங்களில் அப்பிய எல்லா ரத்தத்தையும் ஏதோ ஒருநாள் பெய்யும் பெருமழை கழுவிச் செல்லும்.

p45b_1517376558.jpg

இரண்டு மரணங்களும் நிகழ்ந்த இடம் நெருங்கினாலே ரயிலில் இருக்கும் சோமுவின் இதயத்தில் தடக் தடக் அதிகரிக்கும். கடந்து, அடுத்த ஊரில் நின்று புறப்பட்டதுமே ஆசுவாசமடைவான். அந்த ஐந்து நிமிட இருளைக் கடப்பதற்குள் ஐம்பது முறைக்குமேல் செத்துப் பிழைத்தான். கால்களில் ஒட்டிய ரத்தச் சேற்றுடன் தண்டவாளம் எங்கும் கனவுகளில் அலைந்தான். அடுத்த ரத்தம் தெறித்தது பொங்கல் நாளில்.

``நல்ல நாள், பெருநாளுக்குக்கூட வீட்டுல தங்க முடியாத வேலைக்குதான் எம் புள்ளைய தத்துக்குடுத்திருக்கேன். நல்லபடியா பாத்துக்க சாமி’’ என்று விபூதி பூசி அனுப்பிவைத்தாள். அந்த ட்ரிப்போடு அவனின் அன்றைய டூட்டி முடியும். முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பவேண்டியதுதான். மணி பத்தைத் தாண்டியிருந்தது. அந்த இடமும் கடந்திருந்தது. மிகத் தளர்வான மனதுடன் முன் விழுந்த வெளிச்சத்தைக் கவனித்துக்கொண்டிருந்தவன், திடீரென்றுதான் உணர்ந்தான், முக்காடு இட்டிருந்த ஓர் உருவம் தன் கண் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுவதை. சக்கரத்தில் துண்டான உயிரின் சத்தத்தை சோமுவால் உணர முடிந்தது. மறுநாள் டூட்டியில்லை என்றாலும், ஸ்டேஷனுக்கு வந்தான். சிவப்பேறிய கண்களைப் பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர், புரிந்துகொண்டு அவன் தோள்மீது கை வைத்தார்.

``நேத்தும் தூங்கலியா? கவலப்படாத. இதுவும் உன் பாவப் பட்டியல்ல வராது. செத்த பொம்பள, ஒடம்ப வித்துப் பொழச்சவ; பக்கத்து ஊர்க்காரி. பஞ்சாயத்துப் பண்ணி தொரத்தி விட்டுட்டாங்கன்னு வந்து விழுந்திட்டா. ஃபைலை க்ளோஸ் பண்ணிடுச்சு போலீஸ். நீ வீட்டுக்குப் போய் கறிச்சோறு வெச்சு சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்கு. மாட்டுப்பொங்கல் அதுவுமா இப்படி நிக்காத.’’

தான் பெரிதும் தப்பு பண்ணிவிட்டதாக அழுத வனஜாவுக்கு ஆறுதல் சொன்னான். மிக நிதானமாக நகர்ந்த நாள்களில் சோமுவுக்கு ரயிலின் தடக்தடக்கும் இதயத்தின் தடக்தடக்கும் சீராகி இரண்டுமே லப்டப் எனத் துடிக்கத் தொடங்கின. இரவுகளில் தன்முன் நீளும் வெளிச்சப் பாதையில் படுத்துறங்கினான். ரத்தம் பூசிக்கொள்ளாத சக்கரங்களில் சோமுவின் ரயில் விரைந்துகொண்டிருந்த நாளில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

p45c_1517376603.jpg

இருவர் நின்றிருந்தனர். நிகழவிருக்கும் கொடுமையை எதன் நிமித்தமும் நிறுத்த முடியாத கையறுநிலையில் சோமு நீளமாக ஹாரன் ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரையும் சோமு மிக அருகில் கடந்தான். இருவரின் வயதும் இளமையும் இதயத்தில் உறைந்த நொடி சோமுவின் கண்களில் கண்ணீர் தானாகத் தன்னை வரைந்தது. கதறிக் கதறி அழுதவன், கடைசி நிறுத்தத்தில் வண்டி நின்றதும் அங்கு இருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்றான். அவனை ரூமில் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு, அடுத்த முறைக்கான பைலட்டை அனுப்பினார். போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க, ஸ்பாட்டுக்கு போலீஸ் வந்தது. கபாலம் சிதறிக்கிடந்த ஓர் இளைஞனின் உடலையும் எந்தவிதக் காயமுமின்றி மயங்கிய நிலையில் தண்டவாளத்தையொட்டிய புதரில் கிடந்த ஓர் இளம்பெண்ணையும் கண்டனர். சோமு மிகப்பெரிய சாட்சியானான்.பெண்ணைக் காணவில்லை என்று ஒருவர் தந்த கம்ப்ளெயின்ட் இந்த விபத்தைக் கொலையாக்கியது.

``ஃபார்மாலிட்டியான விசாரணைதான். அந்தக் கிராமத்துக்கு வந்து நடந்ததைச் சொல்லுங்க. போதும். பொண்ணோட அப்பா கொஞ்சம் வசதி. கிராமத்துல பெரிய பேரு. அதுவுமில்லாம, அவர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாராம்’’ பட்டும்படாமல் பேசிய போலீஸ்காரருடன் இன்னொரு கான்ஸ்டபிளும் சேர, சோமசுந்தரம் அவர்களுடன் அந்தக் கிராமத்துக்குப் பயணப்பட்டான்.

சென்னைக்கு மிக அருகில் சற்றே உள்ளடங்கியபடி இப்படி ஒரு கிராமமா என்பதே மிகப்பெரிய ஆச்சர்யமாயிருந்தது. ஜீப்பிலிருந்து இறங்கி அந்தக் கிராமத்தின் மண்ணை மிதிக்கவே மனம் கூசியது சோமுவுக்கு. `எப்படி இரண்டு பெற்றோர்களின் முகத்தையும் எதிர்கொள்ளப்போகிறேன்? அதிலும் பெண்ணுக்கு அம்மா கிடையாதாம்.’ தகப்பனின் அன்பில் வளர்ந்தவள் என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்தே சலனமின்றி உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தான்.

p45d_1517376620.jpg

நாட்டாமை வீட்டில் சந்திப்பு நடப்பதாக ஏற்பாடு. பையனின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருப்பதாலும் பெண்ணின் தந்தை பக்கத்து ஊருக்குச் சென்றிருப்பதாலும் மூவருமே மாலைதான் வருவார்கள் என்பதால், இரண்டு போலீஸ்காரர்களுடன் சோமு நாட்டாமை வீட்டில் காத்திருந்தான். நாட்டாமையோ மூவரையும் வரவேற்று அமரவைத்தவர், தனது மில்லுக்கு மூட்டைகள் வந்திருப்பதாகச் சொல்லி விலகிப் போனார். மதியம் 3 மணிபோல் பக்கத்து டீக்கடையிலிருந்து ஒரு பையன் டீ தந்துவிட்டுப் போனான்.

கைகளைப் பிசைந்தபடி வியர்வையைத் துடைத்துக்கொண்டு மிக இறுக்கமாக இருந்த சோமுவைப் பார்த்து, ``கேஸ் அல்ரெடி முடிஞ்சிருச்சு தம்பி. சூசைட்டுக்கான மோட்டிவ் தெரிஞ்சிடுச்சு. வயசுக்கோளாறு, லவ்வு. ரெண்டு பேர் வீட்டுலயும் ஒப்புக்கல. விழுந்துட்டாங்க. இது ஃபைனல் என்கொயரி. அவங்க எதுவும் கேட்டாங்கன்னா பதில் சொல்லுங்க. நாங்க எழுதிக்கிறோம்.’’ ரெக்கார்டு செய்த குரலில் போலீஸ்காரர் ஒப்பித்தாலும், சோமுவுக்கு அது மட்டுமே போதுமானதாயில்லை.

4 மணி போல் ஒருவர் யமஹாவில் தடதடத்தபடி வந்து, அந்த வீட்டுவாசலில் நிறுத்தினார். இறங்கியவர் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் இருந்தார். தங்கநிற ஃபிரேம்கொண்ட கண்ணாடி அணிந்திருந்தார். மாலைச் சூரியன் அவரின் தோல்மீது பிரதிபலித்துக்கொண்டிருந்தான். வேட்டி நுனியை ஒரு கையால் உயர்த்திப் பிடித்தபடி நடந்து வந்தவர், இரண்டு போலீஸ்காரர்களையும் பார்த்து, பொதுவாக வணக்கம் வைத்துச் சிரித்தார். அருகில் நெருங்கும்போதுதான் தெரிந்தது, அவரின் சட்டைப் பாக்கெட்டில் அரசியல் தலைவர் ஒருவர் பளிச்செனச் சிரித்துக்கொண்டிருப்பது.

``மன்னிக்கணும். கட்சிக்காரங்க கல்யாணம். போகாம இருக்க முடியாது. நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சும் கழிச்சிக்கட்ட முடியலை. தம்பிதான் அந்தத் தம்பியா?’’ அவரின் நடை, உடை, சிரிப்பு, பேச்சு என எல்லாவற்றிலும் பணத்தின் தன்மை மிகக் கனமான நெடியுடன் வீசிக்கொண்டிருந்தது.  ``வணக்கம் தம்பி’’ என்றார் சோமசுந்தரத்தின் அருகில் வந்து. முன்னரே பழக்கமான போலீஸ்காரர்களிடம் பேசிய அதே இயல்பு, முதன்முறையாகப் பார்க்கும் தன்னிடமும் வெளிப்படுவதை ஆச்சர்யமாகக் கவனித்தான். அங்கு இருந்த இன்னொரு நாற்காலியில் அவர் அமர, வீசிய மிகச்சிறிய காற்றில் வாசல் மரம் இன்னும் கொஞ்சம் பூக்களை உதிர்த்தது. போலீஸ்காரர்களிடம் சென்று ஏதோ பேசியவர், இவனிடம் வந்து ``தம்பி, கொஞ்சம் அந்தப் பக்கம் வர்றீங்களா... பேசலாம்’’ என்றார்.

தயங்கியவாறு எழுந்து அவருடன் சென்றான். வாசல் மரத்துக்குப் பின்புறம் அவர் நின்றிருந்தது தெரிந்தது. ``தம்பி, தப்பா நெனைக்காட்டி நீங்க என்ன சாதின்னு தெரிஞ்சுக்கலாமா?’’ என்றார் சோமுவின் கண்களைப் பார்த்தவாறு.

`என்ன மனிதன் இவர். மகள் எவ்வளவு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்திருக்கிறாள்.  நடந்த குற்றம் குறித்துக் கொஞ்சம்கூடக் கவலைகொள்ளாமல், சாதி பற்றி விசாரிக்கும் இவரெல்லாம் ஒரு மனிதனா?’ என்ற ஆத்திரத்தை அடக்கியபடி ``ஒங்களுக்கு எந்தச் சாதி வசதியோ அதையே வெச்சிக்குங்க’’ என்றான்.

p45e_1517376635.jpg

``அட... கோபப்படாதீங்க. தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க ஒரு பெரிய காரியம் பண்ணியிருக்கீங்க. நானா இருந்தாக்கூட யோசிச்சிருப்பேன். ஆனா நீங்க...’’ புன்னகையை அகலப்படுத்தியவர் முகம் மாறாமல், ``அவன்லாம் என்ன சாதி தம்பி, நம்ம பொண்ணுமேல ஆசப்பட? ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சா காதல் வந்திடுமா? என் பொண்ண அதட்டிப்பார்த்தேன், அடிச்சிப்பார்த்தேன். கேக்கல. என் ரத்தம்தானே அவளுக்கும். பிடிவாதத்துல பாதியாவது இருக்காது? அதான் அந்தப் பையன்கூட போனா. மறுநாளு பார்த்தா, கடவுள் மாதிரி ஒரு காரியம் பண்ணிருக்கீங்க. அந்தப் பயல பொலி போட்டுட்டு என் பொண்ணக் காப்பாத்திட்டீங்க. நெஞ்சுல பாலை வார்த்திருக்கீங்க தம்பி. ஒங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தர்றேன். சொல்லுங்க. இல்ல... கட்சியில சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணட்டுமா? நான் ஒங்களுக்குப் பண்றது, நீங்க எனக்குப் பண்ணின பெரிய உதவிக்கு சின்ன நன்றி. அவ்வளவுதான். இது அந்த போலீஸ்காரங்களுக்கும் தெரியும். நீங்க ஒண்ணும் பயப்பட வேணாம். என்ன சொல்றீங்க?’’

சோமசுந்தரம், மிக நிதானமாக அந்தக் காரியம் செய்தான். தன் எச்சில் முழுவதையும் திரட்டி அவர் முகத்தில் துப்பினான். ``த்தூ!’’ எச்சில் தெறித்து, சட்டைப் பாக்கெட் மீதும் படிந்தது. ``நீயெல்லாம்  ஒரு மனுஷனா... அந்தப் பையனையும் ஒன் பொண்ணையும் ஒருசேர பார்த்தேன்யா... கை கோத்துக்கிட்டு நின்னது என் கண்ணுலயே நிக்குது. தப்பே பண்ணாட்டியும், எத்தனை நாள் அதை நினைச்சு தூங்காம இருந்திருப்பேன் தெரியுமா! ஒன்ன மாதிரி சாதிவெறி புடிச்சவனுக்குப் பொண்ணா பொறந்துட்டு இன்னும் உயிரோடு இருக்கிறதே உன் பொண்ணு செஞ்ச பாவம்தான்’’ மூச்சிரைத்தது. கோபமாகத் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்தான். முகத்தைத் துடைத்துக்கொண்டவர், யாரும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்து இயல்பான சிரிப்புடன் அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

பத்து நிமிடம் கழித்து இருவர் வந்தனர். வயதான தம்பதி. கடும் உழைப்பாளிகள் என்பது உடம்பில் இருந்த இறுக்கமான உறுதியில் தெரிந்தது. ஆனாலும், துக்கத்தின் ஒட்டுமொத்த உருவங்களாக நின்றனர். இருவரும் போலீஸ்காரர்களைப் பார்த்து ``வணக்கங்க’’ என்றனர். வெள்ளைச் சட்டை எழுந்து நிற்க, சோமுவும் எழுந்தான். போலீஸ்காரர்கள் மட்டும் அமர்ந்திருக்க, சோமசுந்தரம் அனல்மீது பாதம் பதித்திருந்தான்.

``சொல்லுங்கம்மா... ஒங்க பையன் விழுந்து இறந்த ரயில்வண்டியை ஓட்டினது இந்த சார்தான். உங்க பையனும் தப்பு பண்ணியிருக்கான். நீங்க எதுவும் சொல்லணும்னா சொல்லுங்க. நாங்க வழக்கு பதிவு செஞ்சிக்கிறோம்’’ என்றார் கறுப்பாக தடித்த உருவத்துடன், அதைவிட தடிமனான குரலுடன் ஒரு போலீஸ்காரர்.

p45f_1517376648.jpg

``இல்லீங்கய்யா... நாங்க எதுவும் சொல்லலை. என்ன பண்ணி என்ன ஆகப்போகுது? போன உசிரு திரும்பியா வரப்போகுது? ஒரே புள்ள எனக்குக் கொள்ளி வெப்பான்னு நெனைச்சேன். அவனுக்கு நானே வெச்சிட்டேன். நாங்க யார் மேலையும் எந்தப் பிராதும் குடுக்கலைய்யா’’ என்றார் இளைஞனின் தந்தை.

``இதை அப்படியே ஃபைல் பண்ணிக்கலாம்ல. ஒங்க தரப்புல ஏதும் சொல்றீங்களா?’’ என்றார் வெள்ளைச் சட்டையைப் பார்த்து.

முகத்தைத் துடைத்தபடி ``கேஸ்லாம் ஒண்ணும் வேணாம். விடுங்க’’ என்றார் பெருந்தன்மையான குரலில்.

சோமு, பெற்றோர் அருகில் வந்து நின்றான். இரு கைகளையும் குவித்து ``என்ன மன்னிச்சிடுங்க’’ என்றான்.

குரல் உடைந்து சிதறியது. கண்ணீர் வழிய நின்றிருந்தவனை ஏறிட்டுப் பார்த்து, ``எம்புள்ளையப் பத்தி எனக்குத் தெரியும். அந்தப் பொண்ணு தன்னை விரும்புதுன்னு தெரிஞ்சதும் எங்ககிட்ட `நல்லபடியா வாழவைப்பேன்’னுதான் சொன்னான். ஜோடியா போயிட்டு அந்தப் பொண்ணு மட்டும் எப்படி உயிர்பொழச்சுதுன்னு எங்களுக்குத் தெரியும். எம்புள்ள, சின்ன உசுருக்குக்கூடத் தீங்கு நெனைக்க மாட்டான். எம்மவன் சாவுக்கு நீங்க காரணமில்ல தம்பி. நீங்க போங்க’’ விம்மலுடன் வந்த குரலின் மன்னிப்புக்கு முன்னால் நிற்க முடியாமல் வழியும் கண்ணீரைத் துடைக்காமலே, நின்றிருந்த ஜீப்பை நோக்கி நடந்தான் சோமசுந்தரம்.

பெயர் தெரியாத மரம் இன்னும் சில பூக்களை உதிர்த்தது.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் மனிதம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.