Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனா கண்டேனடி..!

Featured Replies

கனா கண்டேனடி..! - சிறுகதை

ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஹாசிப்கான்

 

அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் 'பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் கூட்டமாக வந்து பொரிகளைத் தின்னும் காட்சி அற்புதமாக இருந்தது.

'உன் பேர் என்ன?' என்றபடி ஜெமினி பொரி உருண்டை ஒன்றை என்னிடம் நீட்டுகிறார்.

நான், ''ஸ்ரீராம்' என்றபடி வேகமாகப் பொரி உருண்டையை வாங்கி வாயில் வைத்துக் கடிக்கிறேன்.

''நீ திங்கிறதுக்கு இல்லை. மீனுக்குப் போடு. பறக்காவெட்டி...' என்று ஜெமினி கடுமையான குரலில் கூற... நான், ''ஸாரி...' என்றபடி பொரி உருண்டையை உடைத்து மீன்களுக்குப் போடுகிறேன்.

''உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?' என்கிறார் ஜெமினி.

''ஆயிடுச்சு சார்.'

''எத்தனை பொண்டாட்டி?' என்று ஜெமினி கேட்ட கேள்வியை நான் சரியாக உள்வாங்காமல், ''ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் ப்ளஸ் ஒன் படிக்கிறான்; பொண்ணு நைன்த்...' என்கிறேன்.

''முட்டாள்... நான் 'உனக்கு எத்தனை பொண்டாட்டி?’னு கேட்டேன்' என்று ஜெமினி தன் குரலை உயர்த்த, நான் அதிர்ச்சியுடன், ''ஒரு பொண்டாட்டிதான்...' என்கிறேன்.

''ம்ஹ்ம்...' என்று என்னைக் கேவலமாகப் பார்த்த ஜெமினி, ''வாழ்நாளெல்லாம் ஒரே பொண்டாட்டிகூட வாழ்றது போரடிக்கலையா?' என்கிறார்.

p76b.jpg

அவ்வளவுதான். சட்டென்று விழிப்புத் தட்ட, எழுந்தேன். 'இதென்ன கனவு?’ என்று யோசித்தபடி என் மொட்டைமாடி அறையை விட்டு வெளியே வந்தேன். மாடியில் என் மனைவி மாலதி, சரக்சரக் என்று துணிகளை உதறிக் காயவைத்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன், ''என்ன... இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் முழிச்சிட்டீங்க?'  

''வித்தியாசமா ஒரு கனவு கண்டேன். முழிப்பு வந்துருச்சு' என்று நான் கனவைச் சொல்ல ஆரம்பித்தேன்.

இந்த சமயத்தில் என் மனைவியைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. மாலதி, ஒரு கிராமத்து வாத்தியாரின் மகள். இந்தக் காலத்திலும் அவளுக்குத் தீர்க்கமான சில நம்பிக்கைகள் இருக்கின்றன. எந்த நவீன விஞ்ஞானமும் கேள்விக்குட்படுத்த முடியாத நம்பிக்கைகள் அவை.

கதவில் சட்டையை மாட்டினால், கடன்காரனாவோம், நகத்தைக் கடித்துத் துப்பினால், வீட்டில் சண்டை வரும், சாப்பிடும்போது தும்மினால், சுண்டுவிரலைக் கழுவிவிட்டுச் சாப்பிட வேண்டும், இரவில் தெருநாய் ஊளையிட்டுக்கொண்டே இருந்தால், அருகில் எங்கோ சாவு கன்ஃபர்ம், விக்கல் எடுத்தால் உடனே ஊரில் இருக்கும் அவள் அம்மாவுக்கு போனைப் போட்டு, 'என்னம்மா... என்னை நினைச்சிட்டிருந்தியா? காலைலேர்ந்து ஒரே விக்கல்’ என்பாள்.

எந்தத் தாய் தன் மகளிடம் நான் உன்னை நினைக்கவில்லை என்று கூறுவாள். 'ஆமாம்மா... இப்பத்தான் உன்னைப்பத்தி நினைச்சேன். நீ போன் பண்ணிட்ட’ என்பார். உடனே என்னிடம், 'நான் சொன்னேன்ல?’ என்பாள்.

என்னைத் திருமணம் செய்துகொண்டு வந்த பிறகு, என் அம்மாவோடு பழகி ஜோதிட நம்பிக்கையும் சேர்ந்துகொண்டது. வருடத்துக்கு ஒரு முறை அம்மாவும் மாலதியும் வீட்டிலுள்ள அனைவரின் ஜாதகங்களையும் எடுத்துச் சென்று ஜோசியரிடம் காண்பித்து, ஜோசியர் சொல்லும் பரிகாரப் பூஜைகளைச் செய்து வக்கிரக் கிரகங்களுக்கு கவுன்டர் அட்டாக் கொடுப்பார்கள்.

இவ்வளவு நம்பிக்கைகள் உள்ள என் மனைவியிடம், நான் அந்தக் கனவைச் சொல்லியிருக்கக் கூடாது. சட்டென்று துணி காயவைப்பதை நிறுத்திய மாலதி என்னைத் திகிலுடன் பார்த்தபடி, ''ஏங்க இப்படிக் காலங்காத்தால தலையில் கல்லைத் தூக்கிப் போடுறீங்க?' என்றாள்.

''நான் எங்கடி கல்லைப் போட்டேன்? கனவைத்தானே சொன்னேன்.'

''எப்ப கனவு கண்டீங்க?'

''இப்பத்தான் விடியக்காத்தால. அதுல பியூட்டி என்னன்னா... கனவுலயும் விடியக்காத்தாலதான்.'

''விடியக்காத்தாலயே விடியக்காத்தால கனவா? கட்டாயம் பலிச்சிடும். கற்பகாம்பா தாயே... ஏம்மா என்னை இப்படிச் சோதிக்கிறே?' என்றபடி கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தை நோக்கி நியாயம் கேட்டாள்.

''ஏய்... சும்மா பைத்தியம் மாதிரிப் பேசாதே!'

''போன வருஷம், இப்படித்தானே உங்களுக்குக் கனவுல அடிக்கடி நாய் வந்துக்கிட்டேயிருந்துச்சு..?'

''ஆமாம்... அதுக்கு என்ன இப்ப?'

''அப்ப ஜோசியருகிட்ட கேட்டதுக்கு, தேய்பிறை, அஷ்டமி அன்னைக்கி பைரவருக்கு உங்களை நெய் விளக்கு போடச் சொன்னாரு. நீங்க, 'அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை... முடியாது’னு சொல்லிட்டிங்க. நான் போய்ப் போட்டுட்டு வந்தேன். ஆனாலும், நீங்க வந்து விளக்கு ஏத்தாததால உங்களை நாய் கடிச்சதுல்ல?'

''ஆமாம்...'

''அப்புறம்... ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்க கனவுல அடிக்கடி பாம்பு வந்துக்கிட்டேயிருந்துச்சு. அதே மாதிரி நம்ப தோட்டத்துல பாம்பு வந்துச்சுல்ல?'

''ஆமா...'

''ஜெமினி கணேசனுக்குப் பல தாரம். அவரு உங்க கனவுல வந்து, 'ஒரே பொண்ணோட வாழ்றது போரடிக்கலையா?’னு கேட்டா என்ன அர்த்தம்? கட்டாயம் இன்னொருத்தி உங்க வாழ்க்கையில வரப்போறா...' என்று கூறியபோது மாலதியின் தொண்டை அடைத்துக்கொண்டது.

''ஏய்... லூஸு' என்று கூறிய என்னைக் கண் கலங்கப் பார்த்த மாலதி, ''அத்தை...' என்று என் அம்மாவை அழைத்தவாறு படிக்கட்டுகளில் இறங்கினாள்.

நான் பல் விலக்கி, முகம் கழுவிவிட்டு கீழே இறங்குவதற்குள், மாலதி என் அம்மாவிடம் எனது கனவைச் சொல்லி முடித்திருந்தாள். வீட்டினுள் நுழைந்த என்னை, என் அம்மாவும் பிள்ளைகளும் இரண்டாம் மனைவியுடன் வீட்டுக்கு வந்தவனைப் பார்ப்பதுபோல முறைத்தார்கள்.

என்னை நெருங்கிய அம்மா, ''இந்த வயசுல ஏன்டா உனக்குப் புத்தி இப்படிப் போவுது? ஜெமினி கணேசன் உன் கனவுல வந்து உன்னை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாராமே...' என்றவுடன் நான் அதிர்ந்துபோய் மாலதியைப் பார்த்தேன்.

சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்து அறையில் இருந்து வந்த அப்பா, ''என்ன இங்க காலையிலயே சத்தம்?' என்றார்.

''உங்க பையன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டானாம்' என்று அம்மா சொல்ல... எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

அப்பா சிரிப்புடன், ''பொண்ணு யாருடா?' என்றார்.

''நீங்க வேறப்பா. கனவுல ஜெமினி கணேசன் வந்து, 'ஒரே பொண்டாட்டிகூட வாழ்றது உனக்கு போரடிக்கலையா?’னு கேட்டாருப்பா. அவ்ளோதான். இவங்க ஏத்தி, ஏத்தி சொல்றாங்க...'

''அது எனக்குத் தெரியும்டா. எப்பவும் பொம்பளைங்க சொல்றதுல 50 பர்சென்ட்தான் உண்மை இருக்கும்.'

''என்ன மாமா நீங்க? ஜெமினி கணேசன் கேட்டதுக்குக் கிட்டத்தட்ட அதானே அர்த்தம்' என்றாள் மாலதி.

''கனவுல அவன் ரெண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டானா?'

''இல்லை. ஆனா, போன வருஷம் அவரு கனவுல அடிக்கடி நாய் வந்துச்சு. கனவுல நாய் அவரைக் கடிக்கலை. ஆனா, நிஜத்துல கடிச்சிருச்சு. அந்த மாதிரி இதுவும் நடக்கும். இவரு வேற உயரமா, சிவப்பா, அழகா இருக்காரு...'

''உயரமா, சிவப்பாத்தான்டி இருக்கேன். நான் எங்கடி அழகா இருக்கேன்?' என்றேன் நான்.

''சரி... இப்ப என்ன பண்ணணுங்கிற?' என்றார் அப்பா.

''நம்ம ஜோசியரைப் போய்ப் பாப்போம். அவரு ஏதாச்சும் பரிகாரம் சொல்வாரு...' என்றாள் அம்மா.

''ஒரு நாள்தானே கனவு வந்துச்சு. மறுபடி வந்தா பார்ப்போம். எல்லாரும் போய் வேலையைப் பாருங்க...' என்ற அப்பா, அம்மாவிடம் ''நான் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தை ஏழெட்டுத் தடவை பார்த்திருக்கேன். என் கனவுல ஜெமினி கணேசன் வரல. இவன் கனவுல வந்துருக்காரு பாரேன். ம்ஹ்ம்... எல்லாத்துக்கும் ஒரு யோகம் வேணும்...' என்றபடி அப்பா என்னைப் பொறாமையாகப் பார்த்தார்.

p76a.jpg

''காலம்போன காலத்துல ஆசையைப் பாரு...' என்றபடி மாலதியுடன் சமையலறைக்குச் சென்றாள் அம்மா.

ன்றிரவு மாடி அறைக்கு தலையணையுடன் மாலதி வர... நான் ஆச்சரியத்துடன், ''என்னடி... எப்பவும் கீழதானே படுப்ப..?' என்றேன்.

''உங்கம்மா இனிமே என்னைக் கீழே படுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. 'மேல தனியாப் படுத்திருக்கான்ல... அதான் கண்ட கண்ட கனவெல்லாம் வருது. இனிமே நீயும் மேல் ரூம்லயே படுத்துக்க’னு சொல்லிட்டாங்க' என்ற மாலதி என் தோளில் சாய்ந்துகொண்டு, ''என்னங்க... நான் உங்களுக்குப் போரடிச்சிட்டேனா?' என்றாள்.

''ச்சீ... பைத்தியம்...' என்றேன் அவள் தலைமுடியைக் கோதியபடி.

''40 வயசுக்கு மேல ஆம்பளைங்களை ஷார்ப்பா வாட்ச் பண்ணணுமாம். அப்ப ஆம்பளைங்களுக்குப் புதுசா ஒரு லைஃப் ஸ்டார்ட் ஆவுதாமே. ஏதோ புக்குல போட்டிருந்ததா அத்தை சொன்னாங்க.'

''இங்கே பாரு... என் மேல உனக்குச் சந்தேகம் ஏதாச்சும் இருக்கா?'

''இல்ல... ஆனா, கொஞ்ச நாளா உங்க நடவடிக்கையே சரியில்லை...'

''என்ன சரியில்லை?'

''ஏழெட்டு மாசமா நீங்க ஸ்லிம் ஃபிட் சட்டை, ஜீன்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டு சின்னப்பையன் மாதிரி ஆபீஸ் போறீங்க. முன்னாடி எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தான் ஷேவ் பண்ணுவீங்க. இப்பெல்லாம் ஒரு நாள்விட்டு ஒரு நாள் ஷேவ் பண்றீங்க. 'திடீரென்று உங்கள் கணவர் தங்கள் தோற்றத்தில் மிகுந்த அக்கறை காட்டினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’னு ஒரு புக்ல போட்டிருந்தான்.'

''மாலு... தோற்றத்துல திடீர்னு அக்கறை காட்டுறேன்தான். அதுக்குக் காரணம்... வயசாகிறதை நம்ப மனசு ஏத்துக்கிறது இல்லை. அதனால சின்னப்பையன் மாதிரி காமிச்சிக்கிறதுக்காக இந்த மாதிரி டிரெஸ் பண்றேன். நரைமுடி எல்லாம் தெரியுது. அதனால ஒரு நாள்விட்டு ஒரு நாள் ஷேவ் பண்ணிக்கிறேன். எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடப் பார்க்காத மாலு.'

சமாதானமாகாமலே திரும்பிப் படுத்துக்கொண்டாள்!

விடியற்காலையில் மீண்டும் அந்தக் கனவு. இந்த முறை ஜெமினி கணேசன் மாமி மெஸ்ஸில் என்னோடு பொடி தோசை சாப்பிட்டுக்கொண்டே பேசினார். இப்போது 'பாட்டுப் பாட வா...’ ஜெமினி கணேசன் இல்லை; 'உன்னால் முடியும் தம்பி’ ஜெமினி. தெப்பக்குளத்தில் விட்ட இடத்தில் இருந்து பேச ஆரம்பித்தார்.

''மிஸ்டர் ஸ்ரீராம்... ஒரே பொண்ணுகூட வாழ்க்கை நடத்திக்கிட்டு, ஒரே பொண்ணுக்குப் புடவை வாங்கிக் கொடுத்துக்கிட்டு, ஒரே சாம்பாரைச் சாப்பிட்டுக்கிட்டு... ச்சே... அதெல்லாம் ஒரு லைஃபா?' என்றார்.

''எனக்குப் புரியுது சார். ஆனா, இப்பெல்லாம் பெண்களைப் பாதுகாக்க நிறையப் புதுப் புதுச் சட்டம் வந்திருச்சு. ஒரு பெண்ணோட மனசுல நெருடல் ஏற்படுற மாதிரி உத்து உத்துப் பார்த்தாக்கூட அவனை ஜெயில்ல தூக்கிப் போடலாம்னு சட்டம் சொல்லுது. அப்புறம்... குடும்ப வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்னு ஒண்ணு இருக்கு. அதுப்படி, மனைவி மனம் புண்படும்படி நடந்துக்கிட்டா, கணவனை உள்ளே தூக்கிப் போடலாம்.'

''ஆத்தாடியோவ்... இருந்தாலும் சொல்றேன் கேளு. 40 வயசுக்கு அப்புறம் நமக்கு வயசான மாதிரியே ஃபீலிங் வரும். நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணிப் பாரு. சின்னப் பையனாட்டம் ஆயிடுவ...' என்று கூறியபோது கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். என் உடல் அசைவில் என் தோளில் சாய்ந்திருந்த மனைவியும் விழித்துக்கொண்டாள்.

''ஏன் உங்களுக்கு இப்படி வேர்க்குது? ஜெமினி மறுபடியும் கனவுல வந்தாரா?'

''ஆமாம்...'

''என்ன சொன்னாரு?'

சொன்னேன்.

''இந்த ஜெமினி கணேசனுக்கு வேற ஆளே கிடைக்கலியா? கடவுளே... ஏன்டாப்பா இப்படி என்னைச் சோதிக்கிற? இந்தத் தடவை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோனே சொல்லிட்டாரா?'

''ஆமா...'

''அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?'

''நான் ஒண்ணும் சொல்லல.'

''ஏன்... வாயைத் திறந்து அதுல்லாம் முடியாது. தப்புனு சொல்ல வேண்டியதுதானே. வாயை மூடிக்கிட்டு அமுக்குணி மாதிரி கேட்டுட்டு இருந்தீங்களா? உங்க மனசுக்குள்ள அந்த ஆசை இருக்கு. அதான் திரும்பத் திரும்ப ஜெமினி கணேசன் கனவா வருது. உள்மன ஆசைகள்தான் கனவா வரும்னு ஒரு புக்ல போட்டிருந்தான்.'

''ஏய்... புக்கு, புக்குனு சொல்லி ஏன்டி என் உயிரை எடுக்குற..? அறிவுகெட்ட முண்டம்...' என்றேன் கோபத்துடன்.

''ஐயோ..! முன்னாடி எல்லாம் நான் என்ன சொன்னாலும் பிடிச்சுவெச்ச பிள்ளையார் மாதிரி கம்முனு உட்கார்ந்திருப்பீங்க. இப்ப திட்ட ஆரம்பிச்சிட்டீங்க. அத்தை...' என்று சத்தமாக அழைத்தபடி மாலதி எழுந்து வேகமாகக் கதவைத் திறந்துகொண்டு சென்றாள்.

ந்தியா-பாகிஸ்தான் எல்லையில் படைத் தளபதிகள் தீவிரமாக மேப்பைப் பார்ப்பது போல், ஜோசியர் எனது ஜாதகக் கட்டங்களை நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர், என் முகத்தையும் ஜாதகத்தையும் மாறி மாறி உற்றுப் பார்த்தார்.

நான் மனதுக்குள், 'இந்தாளு என்ன குண்டைத் தூக்கிப் போடப்போறானோ...’ என்றபடி திகிலுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்த ஜோசியர், ''உங்களுக்கு எத்தனை நாளா இந்த மாதிரி கனவு வருது?' என்றார்.

''இப்பதான் சார்... ரெண்டு நாளா...'

''ம்... ரெண்டு நாளைக்கு முன்னாடி, கல்யாணம் ஆகாத பொண்ணு யாராச்சும் உங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்துருக்காங்களா?'

''ஆமா சார்...'

ஜோசியர் 'எப்பூடி...’ என்பது போல் என் அம்மாவையும் மனைவியையும் பார்த்துக்கொண்டே, ''அந்தப் பொண்ணு பேரு என்ன?' என்றார்.

p76.jpgநான் வெள்ளந்தியாக, ''சாவித்திரி...' என்று கூற, ''சாவித்திரியா?' என்று ஜோசியர், அம்மா, மாலதி மூவரும் கத்திய கத்தலில் எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அப்புறம்தான் சாவித்திரியும் ஜெமினி கணேசனின் மனைவி என்பது நினைவுக்கு வந்தது.

ஜோசியர், ''அந்தப் பொண்ணு அழகா இருக்குமா?' என்றார்.

நான் தயக்கத்துடன் மாலதியைப் பார்த்தேன்.

''பரவாயில்ல சொல்லுங்க. டாக்டர்கிட்டயும் ஜோசியர்கிட்டயும் உண்மையை மறைக்கக் கூடாது.'

''அட்டகாசமா இருப்பா சார்... அதுலயும் மூக்குல ஒரு மச்சம் இருக்கும் பாருங்க... சான்ஸே இல்ல சார். அந்த மச்சத்தைப் பார்த்த அத்தனை பேரும் ஆளுக்கொரு கவிதை எழுதி சட்டை பாக்கெட்ல வெச்சுக்கிட்டுத் திரியுறாங்க.'

அப்போது என் மனைவி பார்த்த பார்வையில், என்னை உயிரோடு எரிப்பதற்குப் போதுமான அளவு நெருப்பு இருந்தது.

''ஸோ... இதான் பிரச்னை' என்றபடி என் ஜாதகத்தை உற்றுப் பார்த்தவர், ''ஐ காட் இட்...' என்று என் அதன் மீது நங் என்று குத்தினார்.

''என்ன ஜோசியரே?' என்றாள் மாலதி பதற்றத்துடன்.

''உங்க கணவர் சிம்ம லக்னம். உத்திராடம் நட்சத்திரம். ஜெமினி கணேசனும் அதே சிம்ம லக்னம், உத்திராடம் நட்சத்திரம்தான்' என்று ஜோசியர் கூறியவுடன் நாங்கள் மூவரும் ''வாட்?'' என்று அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டோம்.

சில விநாடிகள் என்னைக் கண்கலங்கப் பார்த்த மாலதி, ''நான் உங்களுக்கு என்னங்க குறை வெச்சேன்?' என்றாள்.

''ஒண்ணுமே நடக்கலையேடி. நீ ஏன்டி நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த மாதிரியே பேசற?' என்றேன்.

''அதான் ஜாதகம் சொல்லுதே...'

''ஒருத்தர் ஜாதகத்தைப் பார்த்து, அவருக்கு ரெண்டாம் கல்யாணம் இருக்குமானு சொல்ல முடியுமா ஜோசியரே?' என்றாள் அம்மா.

''பேஷா சொல்லலாம். 'சுக்கிர நாடி’ங்கிற புத்தகத்துல இதைப் பத்தி டீட்டெய்லா சொல்லியிருக்காங்க. ஒருத்தரோட ஜாதகத்துல ஏழாவது இடம்தான் லைஃப் பார்ட்னருக்கான இடம். ஏழுக்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ, அவனுக்கு அத்தனை தாரம்னு சொல்வாங்க.'

நான் ஆர்வத்துடன், ''என் ஏழாம் கிரகம், எத்தனை கிரகங்களோட சேர்ந்திருக்கு சார்?' என்று கேட்க... ஜோசியர் என்னை முறைத்தார். மாலதி, என் தொடையில் கிள்ள, நான் வலியோடு ஜோசியரைப் பார்த்து அசடு வழிய சிரித்தேன்.

ஜோசியர், ''கோச்சாரரீதியாப் பார்த்தா...' என்று ஐந்து நிமிடங்கள் ஜாதகத்தின் டெக்னிக்கல் டீட்டெய்ல்ஸைச் சொல்லி இறுதியாக, ''உங்க புருஷன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான அறிகுறி எல்லாம் தெரியுது' என்றார்.

''இதுக்குப் பரிகாரம் இருக்கா?'

''நிச்சயமா இருக்கு. கைல என்ன மோதிரம் போட்ருக்கீங்க?' என்றார்.

நான் கையை நீட்டினேன். மோதிரத்தைப் பார்த்து முகம் மாறிய ஜோசியர், ''ரெண்டு கல்லு மோதிரம் போட்டிருக்காரு. அதான் பிரச்னை. ஒரு கல்லு மோதிரம் போடுங்க. எல்லாம் சரியாயிடும். ஆனா, வெளியில வாங்கி விக்கிற கல்லுல தோஷம் இருக்கும். தோஷ நிவர்த்தி பண்ணின கல்லுல நானே மோதிரம் செஞ்சி ரெடிமேடா வெச்சிருக்கேன். அதைப் போடுங்க. 5,000 ரூபாய் செலவாகும்...' என்று கூற, நான் அதிர்ச்சியுடன் மாலதியை நோக்கினேன்.

''அது பரவாயில்ல. கனவுல ஜெமினி கணேசன் வராம இருக்கிற மாதிரி நல்லா பூஜை பண்ணித் தாங்க' என்றாள் அவள்.

ன்றிரவு மாலதி அந்த மோதிரத்தை என் விரலில் மாட்டிவிட்டு வானை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு, ''கடவுளே... இனிமே இவரு கனவுல ஜெமினி கணேசன் வரக் கூடாது' என்று வேண்டிக்கொண்டாள்.

மறுநாள் காலையில் நான் எழுந்தபோது, ஏற்கெனவே விழித்திருந்த மாலதி ஆர்வத்துடன், ''கனவுல ஜெமினி கணேசன் வந்தாரா?' என்றாள்.

''வரல...' என்றேன்.

''அப்பாடா... கடவுளே...' என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

''நல்ல மோதிரம் மாலு. ஜெமினி கணேசன் வராதது மட்டுமில்ல, கடவுளே கனவுல வந்துட்டாரு...'

''அப்படியா?' என்றாள் மாலதி முகம் மலர.

''வள்ளி, தெய்வயானையோட சாட்சாத் முருகப்பெருமானே வந்துட்டாரு. என்னா ஒரு தரிசனம்...' என்றேன் நான்.

அடுத்த விநாடியே என் மனைவி மயக்கம் போட்டு பொத்தென்று கீழே விழுந்தாள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.