Jump to content

எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு!

nk_ragunathan23.jpg

'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன்.  என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை.
இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்' சிறுகதை பற்றி மேலதிகத் தகவல்களைப்பெற முடிகின்றது.

அக்கதையை என்.கே.ரகுநாதன் மதுவிலக்குப பிரச்சாரம் செய்யும் இயக்கமொன்றின் பத்திரிகைக்கு அனுப்பியபோது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரனுக்கு அனுப்பியபோது 1951ம் ஆண்டில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. நூலுக்கான அ.ந.க.வின் முன்னுரை மூலம் இதனை அறிய முடிகின்றது.  மேலும் என்.கே.ரகுநாதனின் 'சில வார்த்தைகள்'  மூலம் அ.ந.க மேற்படி முன்னுரையினை ஆஸ்பத்திரியில் நோய்ப்படுக்கையிலிருந்துகொண்டு எழுதியுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது.

என்.கே.ரகுநாதனின் மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அவர் நினைவாக 'நிலவிலே பேசுவோம்' தொகுப்புக்கு அ.ந.கந்தசாமி எழுதிய முன்னுரையினையும், 'நூலகம்' தளத்திலுள்ள 'நிலவிலே பேசுவோம்' தொகுப்புக்கான இணைய இணைப்பினையும் ( http://www.noolaham.net/project/03/252/252.pdf )  இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.


என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்' நூல் முன்னுரை! - அ. ந. கந்தசாமி -

'நிலவிலே பேசுவோம்"-என்ற அழகிய தலைப்புடன் கூடிய இச்சிறுகதைத் தொகுதியைத் தரும் என். கே. ரகு நாதன், ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.

முதன்முதலில் இவருடைய சிறுகதையொன்றினை நான், 1951ம் ஆண்டில் வாசித்தேன். "சுதந்திரன்" பத்திரிகையில் நான் கடமையாற்றி வந்த காலம் அது. வாரந்தோறும் பிரசுரத்துக்கேற்ற கதைகளை நானே வாசித்துத் தெரிந்தெடுப்பது வழக்கம். இது அவ்வளவு இன்பமான பொழுதுபோக்கல்ல. நல்லது, கெட்டது, இரண்டும் கெட்டான் என்ற நிலையிலுள்ள சகல கதைகளையும் வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒரு மூடை பதரை நாள் முழுவதும் துழாவி ஒரு நெல்லைப் பொறுக்கி எடுப்பது போன்ற வேலை. சில சமயம் ஒரு முழுநாள் வேலைகூட வியர்த்தமாகிவிடலாம். இப்படி, நான், ஒரு நாள் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது ஒரு  குண்டுமணி கிடைத்தது. அதுதான் "நிலவிலே பேசுவாம்" என்ற இப்புத்தகத்தின் தலைப்புக்குரிய சிறுகதையாகும்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிக்கொடுமை, எப்பொழுதுமே என் மனதை வருத்திவரும் ஒரு விஷயமாகும். அக்கொடுமையைப் புத்தம் புதிய கண்ணோட்டத்துடன், கலையழகோடு, சோகம் ததும்பும் ஒரு நையாண்டி நடையில் சிறுகதையாகச் சித்திரித்திருந்தார் ஆசிரியர். தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கு, நன்மை செய்வதாகப் பசப்பிக்கொண்டு வரும் "பெரிய ஜாதித் தலைவர்கள் சிலரின் உள்ளத்தின் இருண்ட மூலைகளில், சாதியுணர்ச்சி என்ற விரியன் பாம்பு இன்னும் சுருண்டு கிடக்கிறதென்பதை, ஏளனத்தோடு அவர் சுட்டிக்காட்டியிருந்த முறை எனது மனதைக் கவர்ந்தது. "மதுவிலுக்கு என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கூட, தம் சாதிவெறிக்குச் சாதகமாக உபயோகிக்கலாம்" என்ற அவரது கருத்து என் சிந்தனையைத் தூண்டியது. முடிவில், 'வெள்ளி நிலவில், பால் மணலில் பேசுவோம்" என்று கதையில் வரும் பெரியவர் சொல்லும்போது, "என் வீட்டுக்குள் நீங்கள் புகமுடியாது" என்ற அவரது சாதித்திமிரின் தடிப்பு அப்படியே பளிச்சிடுகிறது. நல்ல கருத்து அதை அவர் சிறுகதைக்குரிய அமைதியுடன் கையாண்டிருந்த முறையும் சிறப்பாய் இருந்தது .

ரகுநாதன், இலக்கிய யாத்திரையில் இன்று அதிக தூரம் முன்னேறி விட்டாலும், நான் படித்த அவரது முதலாவது கதை, என் மனதில் மிகவும் அழுத்தமாகப் பதிந்து கிடக்கிறது. என் முன்னே விரிந்து கிடக்கும் அவரது சிறுகதைத் தொகுதியில் அவரால் எழுதப்பட்ட பதினொரு கதைகள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு விரிவாகத் தனித்தனியாக விமர்சிப்பது எனது நோக்கமல்ல. அது இங்கு அவசியமுமல்ல. ஆனால், அவரது கதைகளின் பொதுவான சிறப் பியல்புகள் இவைதான் என்றுமட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முதலாவதாக, அவரது கதைகளில் நாம் காண்பது அவரது சமுதாயப் பிரக்ஞையாகும். எந்த மனிதனும் சமுதாயத்தின் ஒரு அங்கமாகத்தான் விளங்குகிறான், எழுத்தாளனும் விதிவிலக்கல்வ. அவனும், தான் அங்கமாயிருக்கும் சமு தாயத்திற்குத் தனது கடமையைச் செய்யவேண்டியவனே! ரகுநாதனின் பல கதைகள்-ஏன்? அனேகமாக எல்லாமே என்று கூடச் சொல்லிவிடலாம்-சமுதாயப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முற்போக்குத் கதைகளாகவே இருக்கின்றன. தீண்டாமை ஒழிப்பு, வகுப்பொற்றுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்படும் இன்னல்கள், கூட்டுறவியக்க ஊழல்கள், பிரஜா உரிமைச் சிக்கல்கள் போன்ற சமுதாய விஷயங்களை  பிரசாரத் தொனியற்ற, உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த சிறுகதைகளாகப் படைத்து இந்நூலில் தந்துள்ளார்.

இரண்டாவதாக, இவர் கதைகளில் நான் காணும் பண்பு, அவர் தாம் வாழும் சமுதாயத்தில் அன்றாடம் காணும் பாத்திரங்களை வைத்துத் தமது கதைகளைப் புனைந்திருப்பதாகும். இந்த இடத்தில் ஈழநாட்டில் சமீபகாலமாகக் கிளம்பியுள்ள தேசிய இலக்கியம் என்ற கோஷத்தைப்பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் தமது நாட்டின் சூழலைப் பிரதிபலிக்கும் கதைகளை எழுத வேண்டும் என்பது, இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் இக் கோஷம், வலுவுள்ள இலக்கிய இயக்கமாக மலர்ந்துள்ளதென்றாலும், இக்கோஷம் எழும்புவதற்கு முன்னரே, விரல் விட்டு எண்ணக்கூடிய சில எழுத்தாளர், இந்தத் துறையில் தாமாகவே முயன்று வந்தனர். ரகுநாதன் கதைகளில் அன்று தெர்ட்டு இன்று வரை இவ்வம்சம் தலை தூக்கி
நிற்கிறது என்பதை இக்கதைத்தொகுதியை வாசிப்பவர்கள் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

நான் இங்கு கூறிய இந்த இரு அம்சங்களையும் ஒரு சேர எடுத்து ரகுநாதன் கதைகளைப்ப்ற்றிக் கூறுவதானால், அவர் சமுகப் பிரக்ஞை கொண்ட தேசிய இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் என்று கூறலாம்.

ரகுநாதன் கதைகளிலே ஒரு கனவு ஊடுருவிக் கிடக்கிறது. இனபேதம், சாதிபேதம், மதபேதம், வர்க்கபேதமற்ற ஒரு "உலகத்தைப் பற்றிய கனவுதான் அது. உலகத்தின் சிறந்த சிந்னையாளர் சகலரும் கண்ட அந்தப் பூங்கனவு இவ்எழுத்தாளர் உள்ளத்திலும் வியாபித்துக் கிடப்பதை நாம் காண்கிறோம். . அந்தக் கனவுக்கே தம் கலையை அர்ப்பணித்திருக்கிறார் அவர். அவரது அழகிய தமிழ்நடை, இக்கனவுகளை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

கனவு என்றதும், நடவாதது என்று அர்த்தம் கொள்வார்கள் சிலர். ஆனால்  "கனவுகளைவிட யதார்த்தமானது வேறொன்றுமில்லை" என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுவார்கள். "ஒரு மனிதனின் உண்மையான உருவத்தை, அவன் காணும் கனவுகளேப் போல வேறொன்றும் காட்ட மாட்டாது" என்பது, நவீன மனஇயலின் முடிவு. தினம் தினம் நனவாகிக்கொண்டுவரும் மனிதகுலத்தின் இப்பெருங்கனவுதான் ரகுநாதனின் கனவும்.

முன்னுரையை நீட்டி முழக்குதல் அவர் கதைக்கும் வாசகர்களுக்குமிடையே சுவர் எழுப்புவதாகும். முன்னுரை எழு துபவர், வாசகர்களை வாசலிலே காக்கவைத்து விடக்கூடாது என்ற கருத்துடையவன் நான். முன்னுரையால் சலிப்படைந்த வாசகர், மாளிகையுள் புகாமலே திரும்பிவிடலாம் என்ற அச்சமல்ல. புத்தக முன்னுரையைப் பொறுத்தவரையில், இந்த ஆபத்துக்கு இடமில்லே, சலிப்படைந்த வாசகர் இரண்டு பக்கங்களேத் தட்டிவிட்டு உள்ளே புகுந்துவிடலாம்.

அனேகமாக எனது வாசகரும், அப்படியே ஏற்கனவே புத்தகத்துள் புகுந்திருக்கக்கூடும். அப்படிப் புகுந்த வாசகருக்கு, அங்கே சிந்தனேயைத் தூண்டும் சிறந்த சிறுகதை விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லே.

கொழும்பு, 10-8-62,

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4583:2018-06-12-06-06-13&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்!… முருகபூபதி.

அகரன்June 13, 2018
என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்!… முருகபூபதி.

வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி

நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி

முருகபூபதி.

யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள்.

தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும் அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம்.

1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு, ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில், அதற்கு முதல் நாள் இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார்.

வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, ” தரையிலிருந்து பேசுவோம்” என்றேன்.

 

thumbnail_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E

 

அவர் உரத்துச்சிரித்துக்கொண்டு அமர்ந்தார். அன்று நெடுநேரம் பேசினோம். அவரது சிரிப்புக்கு காரணம் இருந்தது. அவர்தான் கனடா டொரன்டோவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். அந்தச்சிரிப்பை இனிமேல் நாம் காணமுடியாது.

அன்றைய சந்திப்பில் அவர் உரத்துச்சிரித்தமைக்கு அவர் 1960 களில் எழுதிய நிலவிலே பேசுவோம் சிறுகதைதான் அடிப்படைக்காரணம். எனது புத்தகங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் அரியாலையிலிருந்து நண்பர் புதுவை ரத்தினதுரை எடுத்துச்சென்றார். கதிரைகளையும் மேசையையும் மல்லிகை ஜீவா எடுத்துச்சென்றார்.

புத்தகங்களும் கதிரை , மேசைகளும் என்னவாயின? என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது ? என்பதும் தெரியாது. அக்காலப்பகுதியில் என்னைப்பார்க்க வந்த டானியல் தமிழ்நாட்டில் மறைந்தார். மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு முதலிலும் ரகுநாதன் அதன்பின்னர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். புதுவை காணாமல் போனார். எங்கள் இலக்கியவட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே!

நாமெல்லாம் இலக்கியவாதிகளாக இருந்தபோதிலும் இஸங்களினால் பிளவுபட்டிருந்தோம். சிலர் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்தும் பேசாதிருந்தனர். டானியலும் ஜீவாவும் ரகுநாதனும் அரசியலிலும் ஒன்றிணைந்திருந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். எனினும் மாஸ்கோ – பீக்கிங் என அரசியல் கோட்பாடுகளில் பிளவு தோன்றியவேளையில் ஜீவா மாஸ்கோ சார்பு நிலையெடுத்தார். புதுவை உட்பட ஏனைய இருவரும் பீக்கிங் அணியில் இணைந்திருந்தனர்.

நான் வெளிப்பிரதேசத்தைச்சேர்ந்திருந்தாலும் இவர்கள் அனைவருடனும் தோழமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் உறவுகொண்டிருந்தேன். அதனால் அவர்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் உரசல்களை போக்குவதற்கும் அவ்வப்போது முயன்றேன்

.thumbnail_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0

ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் – டானியலின் பஞ்சமர், ஜீவாவின் மல்லிகை – புதுவை, வரதபாக்கியான் என்ற

புனைபெயரில் எழுதிய கவிதைகள் – இவைதான் எங்கிருந்தோ என்னை இவர்களுடன் இணைத்தது. ஆலயப்பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் புதுவை தவிர ஏனையோர் ஈடுபட்டு முன்னணியில் நின்ற காலத்தில் நான் வடக்கிலிருக்கவில்லை. அங்கு படிக்கச்சென்ற பருவத்தில் எனக்கு 12 வயதுதான். இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் (1972 முதல்) இந்த மூத்தவர்களுடன் எனக்கேற்பட்ட உறவுக்கு என்றைக்கும் விக்கினங்கள் வரவில்லை.

ரகுநாதன் மறைந்தார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது கடந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ரகுநாதன், இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையிலும் அங்கம் வகித்திருந்தார். தோழர் ரோகண விஜேவீராவின் மைத்துனர்தான் எச். என். பெர்ணான்டோ. யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் ரகுநாதனை சந்திப்பது வழக்கம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தபோதும் ரகுநாதனை அங்கு சந்தித்தேன். அதன்பின்னர் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் அவருடன் கடிதத்தொடர்புகள் இருந்தன.

அவருக்கும் டானியலுக்கும் இடையே நீடித்த முரண்பாடுகள் குடும்பப் பகையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் எழுதும் கடிதங்களில் சமாதானத் தூதுவராகியிருந்தேன். 22-07-1997 ஆம் திகதி ரகுநாதன் எனக்கு எழுதிய நீண்ட கடிதமும் எனது கடிதங்கள் நூலில் இடம்பெற்றுள்ளது.

அந்தக்கடிதமும் ஒரு இலக்கியக்கடிதம்தான் என்பதனால் அவரது நினைவாக இங்கு பதிவுசெய்கின்றேன்.

அன்புள்ள முருகபூபதிக்கு வணக்கம். உங்கள் கடிதம் 28-05-97 இல் கிடைக்கப்பெற்றேன். பதில் எழுதச்சுணங்கியதற்கு மன்னிக்கவும். நண்பர் ராஜஶ்ரீகாந்தனும் உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பிவைத்தது மகிழ்ச்சிக்குரிய விடயம். நண்பர்கள் மாறி மாறிப் படிக்க வசதியாயிருக்கும்.

இளைய பத்மநாதன், புத்தகத்திலுள்ள கதைகளை – விசேடமாக முன்னுரையைப்பற்றி ஏதாவது குறிப்பிட விரும்பினால் அன்புடன் வரவேற்பேன். அவரை எனக்கு எழுதச்சொல்லுங்கள். நீங்கள் ” படித்தோம் சொல்கின்றோம்” பகுதியில் ஏதாவது எழுத இருந்தால் எழுதி, அதன் நறுக்கினை எனக்கு அனுப்புங்கள்.

East or west home is the best என்று எழுதியிருக்கிறீர்கள். எந்த மனிதனுக்கும் தான் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழ்வது போன்ற இனிய வாழ்வு அமையாது. பல்லுக்குப்பல் சில்லுக்குச்சில் என்று இணைந்துபோக வேண்டிய யந்திர வாழ்க்கைதான். காலமாற்றத்தால் அதன் கடும்போக்கு இறுகிக்கொண்டு போகிறது. யாரும் விலகிப்போக முடியாத கொடுமை.

எழுதமுற்பட்டால், நிறைய எழுதவேண்டிவரும் என்றுதான் இழுத்தடித்துக்கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இன்று காலை எழுதத்தொடங்கு முன் அருட்டலுக்காக உங்கள் கடிதத்தை ஒரு தடவை மேலோட்டம் விட்டபோது, மேலும் பின்தள்ளப்பட்டேன். எனினும் உற்சாகத்தை கைவிடாமல் இப்போது ( மாலையில்) இதனை எழுதுகிறேன்.

பழைய பகைமைகள் மறைந்திருக்கும் என ஒரு வரி எழுதியுள்ளீர்கள். எனக்கு, அதற்கு என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை.

அரியாலையில் சந்தித்து சற்று நீண்டு உரையாடிய ஞாபகம் எனக்குண்டு. அன்று அவற்றை விரித்துரைத்திருப்பேன் போலும்.

எழுத்தாளன் நேர்மையானவனாய் இருக்கவேண்டும் என்று என் ‘தசமங்கல’ வெளியீட்டு விழாவில் கொதிப்படைந்து பேசிவிட்டேன். இப்போது கொழும்பில் அது முக்கிய பிரச்சினையாகிவிட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன் ‘பொன்னீலன்’ என்ற தமிழக எழுத்தாளர் இங்கு வந்து, ( இ.மு. எ.ச. கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டு) ” எழுத்தாளன் எழுதும்போதுதான் இலட்சியவாதி. எழுதாதபோது அவன் சாதாரண மனிதன்” என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

நான் அதைகக்கண்டித்து வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை ‘ குமுதம்’ பிரசுரித்து பொன்னீலனுக்கு தொல்லை கொடுத்தது. குமுதம் 3 இதழ்களில் – அந்த விவாதம் நடந்தது. அந்த வேகத்தில்தான் நான் என் கூட்டத்திலும் பேசவேண்டி ஏற்பட்டது.

அதுசம்பந்தமான பத்தி எழுத்தாளரின் கண்ணோட்டத்தை அனுப்புகிறேன். படித்துப்பார்க்கவும். நீங்கள் எங்கே நிற்கிறீர்களோ தெரியாது. ஆனால், இந்தக்கட்டுரையாளர் தன்னையே தோலுரித்து, நிர்வாணக்கோலத்தை காட்டுகிறார்.

Intelligentsia – களை மட்டமாக மதிப்பிடக்கூடாதாம். கடைசி வரி: ஒழுக்கம் எது, நேர்மை எது, எது சரி, எது பிழை என்பதனை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம்.

இந்த எழுத்தாளர் மனையாட்டியுடன் வீதியில் செல்லும்போது எதிரே வருபவன், அவளைத்துகிலுரிந்து பலாத்காரம் செய்யும்போது – அப்போது அவர் உரைகல்லைத்தேடி ஓடுவார். சரி எது? பிழை எது? ஒழுக்கம் எது? என்று தெரியாத மேதையல்லவா அவர்!

இவற்றை நினைத்தால், இந்த அயோக்கியர் எழுதும்போது நமக்கேன் பேனா? என்ற எண்ணம்வரும். என்றாலும் நான் சோர்ந்துபோய்விடவில்லை.

சந்தோஷமாக இருக்கிறேன். அமைதியாக இருக்கிறேன். எதிர்நீச்சல்களும் தழும்புகளும் அந்தந்த நேரத்தில் என்னைத் தொல்லைப்படுத்தினாலும் அதன் பலன்களை இப்போது குடும்ப ரீதியாகப் பெருமையோடு அனுபவிக்கிறேன்.

பிள்ளைகள் – திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி, கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப்பெண் இங்கு தனியார் நிறுவனத்தினில் பணிபுரிகிறாள். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது எனக்கு மகிழ்ச்சியான விடயமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலை.

எனது ‘ கட்டை விரல் ‘ கதையில் நான் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

பதிலை எதிர்பார்ப்பேன். அன்புடன் ரகுநாதன்.

இக்கடிம் எழுதப்பட்டு இரண்டு வருடகாலத்தில் 1999 ஆம் ஆண்டு இலங்கை சென்றவேளையில், தெஹிவளையில் மிருகக்காட்சி சாலைக்கு பின்னாலிருந்த வீதியில் அவரது வீட்டுக்குச்சென்று ரகுநாதன் தம்பதியரின் அன்பான உபசரிப்பில் திளைத்தேன்.

1929 ஆம் ஆண்டில் வடமராட்சியில் வராத்துப்பளை என்ற கிராமத்தில் ஒரு அடிநிலைக்குடும்பத்தில் பிறந்து, அக்கால கட்டத்தின் சமூக ஒடுக்குமுறைக்கு மத்தியில் படித்து, ஆசிரியராகவும் படைப்பிலக்கிய வாதியாகவும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் நின்ற போராளியாகவும் திகழ்ந்திருக்கும் ரகுநாதன், தனது “கட்டை விரல் ” சிறுகதையில் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் தன்னை முழுமையாகவே வெளிப்படுத்தியிருந்தது, 2004 இல் அவர் எழுதியிருந்த ” ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி” நவீனத்தில்தான்.

சுயசரிதையையும் ஒரு நாவலாக விரித்து எழுதமுடியும் என்பதை நிரூப்பித்திருப்பவர் ரகுநாதன். காலம் காலமாக அவரது சமூகம் செய்துவந்த தொழிலிருந்து தன்னை விடுவித்து படிக்கவைத்து உருவாக்கி மானுடனாக்கிய தனது அருமை அண்ணன் தம்பிப்பிள்ளைக்கும் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்புத்தாய் வள்ளியம்மைக்கும்தான் அந்த நாவலை சமர்ப்பணம் செய்திருந்தார்.

அவர் அந்தக்கடிதத்தில் எழுதியிருந்தவாறே எதிர்நீச்சலையும் தழும்புகளையும் கடந்துவந்தவர்தான். எல்லாம் கடந்துபோகும் என்பார்கள். வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து நிலவிலே பேசுவோம் என்ற கதையை எழுதிய 1960 காலப்பகுதிக்கும் இன்று அவர் கனடாவில் மறைந்திருக்கும் 2018 காலப்பகுதிக்கும் இடையில் சமூகத்திலும் அவரது சிந்தனைகளிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம்.

அன்று அவர் தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

கந்தன் கருணை என்ற நாடகத்தையும் எழுதி, வடபிரதேசம் எங்கும் அதனை கூத்துவடிவிலும் அரங்காற்றுகை செய்வதற்கு தூண்டுகோலாகத் திகழ்ந்தார்.

கனடாவில் தமிழ் ஓதர்ஸ் இணையத்தளத்தின் அகில் சாம்பசிவத்திற்கு வழங்கிய நேர்காணலில், “அன்றிருந்த நிலை இன்றில்லை” என்ற சாரப்பட சொல்லியிருக்கிறார்.

ஆனால், ரகுநாதன் மறைந்திருக்கும் இந்தவேளையிலும் தென்மராட்சியில் வரணி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் அதே அடிநிலை சமூகத்தவர்களும் தேரின் வடம்பிடிக்க அனுமதிக்கமுடியாது என்று மேட்டுக்குடி சமூகம் தடுத்து, பெக்கோ (ஜேசிபி) எனப்படும் இயந்திரத்தின் மூலம் தேரை நகர்த்தியிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது.

ரகுநாதன், டானியல், ஜீவா , செ. கணேசலிங்கன், மு. தளையசிங்கம் உட்பட பல எழுத்துப்போராளிகளும் , அன்றைய சமூக விடுதலைப் போராளிகளும் தத்தமது கிராமத்தின் எழுச்சிக்காக தொடர்ச்சியாக எழுதி வந்திருந்தபோதிலும், இடையில் வடபிரதேசம் எங்கும் இனவிடுதலைக்காக ஆயிரக்கணக்கில் இளம் குருத்துக்கள் களமாடி மடிந்தபோதிலும் இன்னமும் அங்கு இதுவிடயத்தில் மாற்றம் இல்லை என்பதை காணாமலேயே நண்பர் ரகுநாதனும் தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.

துப்பாக்கி ஏந்திய ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பயந்து சாதிவேற்றுமை பார்ப்பது குறைந்துவிட்டது எனச்சொன்னாலும், அந்த இயக்கங்களின் துப்பாக்கிகளுக்குப் பின்னால்தான் அந்த வேற்றுமை மறைந்திருந்தது என்ற உண்மையையும் ரகுநாதன் ஏற்றுக்கொண்டிருந்தவர்.

அவர் 1960 களில் எழுதியிருந்த நிலவிலே பேசுவோம் சிறுகதையை வெளியிட்டது, தந்தை செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் பத்திரிகை. அதனை தெரிவுசெய்து பதிவேற்றியவர் அச்சமயம் அங்கு ஆசிரிய பீடத்திலிருந்த மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி. இவர்தான் எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீதத்தையும் இயற்றித்தந்தவர்.

சுயசரிதைப்பாங்கில் ரகுநாதன் எழுதியிருக்கும் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி நூலை, வரலாற்றுச்சித்திரம் எனக்கூறியபோதும், “இது ஒரு நாவலாக அமைந்துள்ளது” என்றுதான் அதனை வெளியிட்டிருக்கும் குமரன் பதிப்பகம் செ. கணேசலிங்கன் சொல்கிறார்.

1929 இல் பிறந்திருக்கும் ரகுநாதன் தனது 31 வயதில் சாதிக்கொடுமையை பிரசார வாடையின்றி அழகியலுடன் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதி, ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருப்பவர்.

எனினும் அதன்பின்னர் பல வருடங்கள் கடந்து 1991 ஆம் ஆண்டில்தான் – இனவிடுதலைப்போரும் தொடங்கியபின்னர்தான் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி என்ற நவீனத்தை எழுதுகிறார். அதனை ” ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை” என்ற தலைப்பில் எழுதியிருந்தால் அந்தத் தலைப்பில் அழகியல் இருந்திருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை. ” எழுச்சி” என்றவுடன் படைப்பிலக்கியத்தின் அழகியல் மங்கி, பிரசாரம் மேலோங்கிவிட்டது என்பதே எனது பார்வை.

எனினும் அந்த நாவலின் உள்ளடக்கம், வடபிரதேசத்திற்கு அப்பால் வாழ்ந்த என்போன்ற வாசகர்களுக்கு பல செய்திகளைச் சொல்கிறது. அவர்களின் எதிர்நீச்சலை, பெற்ற ஆழமான தழும்புகளை, ஒடுக்குமுறைகளை, பாடசாலைகளிலும் தேநீர்க்கடைகளிலும் நிகழ்ந்த பாகுபாடுகளை, அடிநிலை மக்களதும் மேட்டுக்குடியினரதும் இயல்புகளை பதிவுசெய்கிறது.

கற்பகத் தருவின் பயன்பாட்டையும் பண்பாட்டுக்கோலத்தில் அதன் வகிபாகத்தையும் புனைகதையாக ரகுநாதன் சிறப்பாக சொல்லியிருக்கிறார். இந்த நூலின் பின்னிணைப்பில், பனஞ்சோலைக்கிராமத்தின் சமூக அமைப்பையும் பனைமாதாவின் அருட்கொடைகளையும் விளக்குகிறார்.

“ஈழத்து இலக்கியத்தில் இடம்பெறும் மொழிவழக்குகள் தமக்குப்புரியவில்லை” என்று கூறிவரும் தமிழக எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு இந்த நவீனத்தின் ஊடாக

வடக்கின் ஆத்மாவை அம்மக்களின் மொழிவழக்குகளை அடிக்குறிப்புகளாக பின்னிணைப்பில் விளக்கியுள்ளார் ரகுநாதன். இந்த நூல் தமிழகத்தில்தான் முதலில் வெளியானது!

1970 காலப்பகுதியிலேயே ரகுநாதனின் கந்தன் கருணையே காத்தவராயன் பாணிக்கூத்தாகி, அம்பலத்தாடிகளின் மேடையில் அரங்கேறியது எனவும், ரகுநாதனின் கந்தன் கருணை அப்படியே அச்சொட்டாக கூத்துவடிவம் பெற்றுவிடவில்லை. சாதிக்கொடுமைகள் பற்றிய பல விளக்கங்களும் மா ஓவின் சிந்தனைகளும் சேர்க்கப்பட்டன என்றும் 1997 இல் எனக்கு வழங்கிய நேர்காணலில் அண்ணாவியார் இளை பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

ரகுநாதனும் தனது மூலப்பிரதியை சிறுபிரசுரமாக வெளியிட்டுள்ளார்.

ரகுநாதனின் தென்னிலங்கை இலக்கிய நண்பர் கே. ஜி. அமரதாசவுக்கு ஒரு துயரச்செய்தி கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றில் ரகுநாதனின் புதல்வன் காயப்பட்டுவிட்டதை அறிந்திருக்கும் அமரதாச தனது குடும்பத்தினரிடம் சொல்லி மிகவும் கவலைப்பட்டுள்ளார். இதுவிடயத்தை அமரதாசவின் மரணச்சடங்கின்போது அவரது மகன் அமர அமரதாச ( தற்போது லேக்ஹவுஸ் பொது முகாமையாளர்) என்னிடம் தெரிவித்தார். இந்தத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியிருந்தேன். அதனை யாழ்ப்பாணத்திலிருந்து படித்துவிட்டு, கொழும்புக்கு வந்த ரகுநாதன், என்னை சந்தித்து முகவரி பெற்று அமரதாசவின் வீடு சென்று குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.

நெஞ்சத்துக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்கள் மறையும்வேளையில் அவர்கள் பற்றிய நினைவுகளே மனதில் அலைமோதும். ரகுநாதனுக்கு இந்த மண்ணிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால், அவர் எந்த மக்களுக்காக தனது எழுத்தையும் வாழ்வையும் அர்ப்பணித்தாரோ, அந்த மக்களுக்கு இன்னமும் பூரண விடுதலை கிடைக்கவில்லை என்பதற்கு அவர் மறைந்திருக்கும் காலத்தில் தென்மராட்சி சம்பவம் ஒரு சான்றாதாரம்.

நண்பர் என். கே. ரகுநாதனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. அவரது குடும்பத்தினரின் துயரிலும் பங்கேற்று இந்த நினைவுப்பதிகையை சமர்ப்பிக்கின்றேன்.

 

http://akkinikkunchu.com/?p=58492

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.