Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குள்ளன் பினு

Featured Replies

குள்ளன் பினு - சிறுகதை

 
சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன்

 

11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான்.

பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்தில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை உங்களுக்கு மறக்காதிருப்பதற்கான காரணம் அவனது உயரம். வண்டியை நிறுத்தி, காலை ஊன்றுவதற்குத் தோதாக இடம் தேடுவான். மூன்று ரவுண்டு அடித்து அங்கும் இங்கும் தேடி ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பான். அவன் இடத்தைத் தேடுவது, நீரோட்டம் பார்க்கிறவர்கள் தண்ணீர் தேடுவதுபோலிருக்கும். அந்தத் தேடுதல் கோட்டயம் மார்க்கெட்டில் பிரசித்தம்.

48p1_1531823679.jpg

பினு என்பது, அவனை வீட்டில் கூப்பிடும் செல்லப்பெயர். பதிவேட்டில் `வர்கீஸ் டொமினிக்.’ நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் `பினுவேட்டன்.’ கோட்டயத்தில் பல்வேறு பினுக்கள் உண்டு. கஞ்சிக்குழி பினு, துபாய் பினு, மோரீஸ் பினு, வெல்டர் பினு, தடியன் பினு. மற்றவர்களிலிருந்து இவனை வேறுபடுத்திக்காட்ட, கோட்டயத்துக்காரர்களுக்கு இவன் `குள்ளன் பினு.’ நேரில் யாரும் சொல்வது கிடையாது. ஆனால், அதுதான் தன் முதுகுக்குப் பின் சொல்லப்படுகிறது என்பது  பினுவுக்குத் தெரியும்.

பினுவின் அப்பா டொமினிக் வகையறாவிலும், அம்மா குன்னங்குளம் தெரசா வகையறாவிலும் உயரம் குறைந்தவர்கள் என்று யாரும் கிடையாது. டொமினிக் மத்தாயி குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக எல்லோரும் உயரம்தான். மாம்பழமோ, முருங்கையோ பறிக்க அந்தக் குடும்பத்துக்குத் தொரட்டியே வேண்டியதில்லை என்பது கோட்டயத்தின் சொல்வழக்கு.

பினுவின் தாத்தன் மத்தாயி, இடுக்கியில் கஞ்சா விவசாயத்தில் சம்பாதித்த காசோடு கோட்டயம் திரும்பியவர், தன் உறவுக்குள் இருப்பதிலேயே உயரமான பேபி கொச்சம்மாளைத் திருமணம் செய்துகொண்டு உயரமான குழந்தைகளை உற்பத்திசெய்யத் தொடங்கினார். அதேசமயம் மர வியாபாரத்தையும் தொடங்க, பிள்ளைகளும் கடையில் நிற்கும் மரத்துக்குப் போட்டியாக உயரமாய் வளர்ந்தார்கள். ஐந்து ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். பஞ்சபாண்டவருடன் மூன்று அம்பைகளும் அங்கு சேர்ந்து பிறந்திருப்பதாக ஸ்ரீகண்ட நாயர் சொல்லிச் சிரிப்பார்.

உயரம், அந்தக் குடும்பத்துக்குக் கோட்டயத்தின் சட்டாம்பிள்ளை அந்தஸ்தை வழங்கியிருந்தது. திருவிழாவில் சப்பரத்துக்கு முன்னால் புனித சிலுவையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களாகவும், சவ ஊர்வலத்தில் பாதிரியார்களுக்குப் பக்கத்தில் குடை பிடித்துக்கொண்டு போகிறவர்களாகவும், அடிதடியில் முதலில் கை நீட்டுகிறவர்களாகவும் அவர்கள் குடும்பம் இருந்தது. பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உயரமாய் வளர்ந்திருந்தார்கள். அவர்கள் உயரத்துக்குத் தோதாக மாப்பிள்ளை தேடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

தாத்தன் மத்தாயின் மரக்கடை, குமரகம் போகும் சாலையில் இருந்தது. அந்தக் காலத்தில் கோட்டயத்தில் மர வியாபாரத்துக்கு நல்ல மவுசு. ரப்பர் வியாபாரத்தில் கிடைத்த பெரும் வருமானத்தில் கோட்டயத்தின் பணக்காரர்கள், வீடுகளைப் புதுப்பிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

தரகன் பவுல் குடும்பம், மரக்கடை ஒன்றைக் கஞ்சிக்குழி ஜங்ஷனில் தொடங்கியது. மதியவேளை ஒன்றில் மத்தாயியும் அவரின் ஐந்து மகன்களும் வெறும் கைகளாலேயே அந்தக் கடையை அடித்து நொறுக்கித் தீயிட்ட கதை, இப்போதும் கள்ளுக்கடையில் பேசப்படுவதுண்டு.

48p3_1531823696.jpg

விஷயம் ஃபாதர் பிரான்சிஸ் சைமனுக்கு முன் பஞ்சாயத்துக்குப் போக, திருச்சபைக்குக் கோட்டயம் - குமுளி சாலையில் களத்தம்படியில் உள்ள மூன்று ஏக்கர் நிலம் மத்தாயி குடும்பத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஃபாதர் சைமனும் கர்த்தனும் சமாதானப்பட்டார்கள். ``தங்கள் விரோதிகளிடமும் அன்பாய் இருக்க வேண்டும்’’ என, தரகன் பவுல் குடும்பத்துக்கு ஃபாதர் சைமன் அருளாசி வழங்கினார். தரகன் பவுல் குடும்பம், தொழிலை மாற்றி ஜவுளிக்கடையைத் தொடங்கியது. அது பின்பு பெரும் ஜவுளி சாம்ராஜ்ஜியமாய் விரிவடைந்தது வேறு கதை.

பினு பிறந்த ஒரு வருடம் கழித்தே, தாத்தன் மத்தாயி அவனைப் பார்க்க வந்தார். அவருக்கு இடுக்கியில் வேறொரு குடும்பம் இருப்பது ஊரறிந்த ரகசியம். ``இவன், நம் குடும்பத்தின் சாபம்!’’ எனச் சொல்லி, பினுவைத் தொட்டிலில் இட்டார். பினு, தன் இரண்டு அக்காக்களுடன் வளர்ந்தான். உயரத்தில் அல்ல, வயதில். மத்தாயி தாத்தன், கடைசிவரை அவனைக் கொஞ்சவேயில்லை; அப்பன் டொமினிக்கும்.

குடும்ப விசேஷங்களில் பெரியப்பன், சிற்றப்பன் குடும்பத்தின் பிள்ளைகள் உயர உயரமாய் வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்கும் ஓட, அவர்களுக்குப் பின்னால் ஒரு சித்திரக்குள்ளனைப்போலத் தொடர்வான் பினு. அம்மா தெரசா மட்டுமே அவனுடன் அன்பாய் இருந்தாள். பள்ளிக்கூடத்துக்குப் போய்த் திரும்பும் பினு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் பையைக் கடாசிவிட்டு ``அம்மா பால்..!’’ என, ஸ்டூலை எடுத்துப் போட்டு அம்மா ஜாக்கெட்டை விலக்கி சாவதானமாய் பால் குடிப்பான். `டொமினிக்குக்குப் பொறந்த ஒரு ஆம்பளப்புள்ளையும் கீரிப்புள்ளையா போச்சே!’ என, ஞாயிற்றுக்கிழமையில் சர்ச்சில் அவர் காதுபடவே பேசினார்கள்.

பினுவுக்கு, கூட்டாளிகளே இல்லை. அக்காக்களுக்குத் திருமணம் ஆகும்வரையில் அவர்களுடனேயே விளையாடினான். அவர்கள் திருமணம் செய்துகொண்டு போன பிறகு, சுவர்களில் அடர்பாசி படிந்திருக்கும் தோட்டத்துக்குள் அவனாக ஓடி ஓடி ஒரு விளையாட்டை உருவாக்கிக்கொண்டான். வீட்டின் மேல்புறத்துக் குன்றில் குடியிருக்கும் பாருக்குட்டி, மாலைவேளைகளில் தலை சீவும்போது பினுவைப் பார்த்து ``பால் வேணுமாடா?’’ எனக் கேட்பாள். பினு வெட்கப்பட்டு வீட்டுக்குள் ஓடிவிடுவான்.

அவர்கள் வீடு, திருனக்காரா அம்பலத்திலிருந்து பழைய போட் ஜெட்டி போகும் பாதையில் இருந்தது. பழைய காலத்தில் அந்த போட் ஜெட்டி வழியேதான் ஆலப்புழையிலிருந்து எல்லாச் சரக்குகளும் படகில் கோட்டயம் வந்து இறங்கும்.

தாத்தன் மத்தாயி இறந்தபோது மற்ற அண்ணன்கள், ``ஒரே ஆம்பளப் புள்ளைய வெச்சிருக்க. அதுவும் குள்ளன். அவன வெச்செல்லாம் மர வியாபாரம் பண்ண முடியாது. வேற ஏதாவது செஞ்சிக்க’’ என மரக்கடையிலிருந்து டொமினிக்கைப் பிரித்துவிட்டார்கள். டொமினிக், போட் ஜெட்டி பாதையில் இருக்கும் வீட்டைத் தனது பங்காக வாங்கி, ஒரு மெஸ்ஸைத் தொடங்கினார். பெயர்ப்பலகை எதுவும் இல்லாவிட்டாலும், அது `தெரசா மெஸ்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டயத்தில் புகழ்பெற்ற மெஸ்ஸாக மாறியது. வேலைக்கு வெளியாள்கள் என யாரும் கிடையாது. தெரசா, மகள்கள், பினு, உறவுகளில் பாவப்பட்ட இருவர் என வேலைசெய்தனர். டொமினிக், மெஸ்ஸுக்குத் தேவையான பொருள்களை வாங்கிப்போடுவது மட்டுமே அவரது வேலையாக வைத்துக்கொண்டார்.

48p2_1531823711.jpg

12 மணிக்குக் கடை தொடங்கி 3 மணிக்கு முடியும். ஞாயிற்றுக்கிழமையில் கர்த்தனுக்கு அச்சப்பட்டு, கடை திறப்பது கிடையாது. கடை தொடங்கும்போது, வராந்தாவின் திண்டில் அமர்ந்து பீடி குடிக்கத் தொடங்குவார் டொமினிக். வீட்டின் முன்னறையையே சாப்பாட்டுக் கூடமாக மாற்றியிருந்தார்கள். போட் ஜெட்டி பக்கத்தில் இருப்பதால், நிறைய லோடுமேன்களும் டிரைவர்களும் வருவார்கள். வம்புச்சண்டையை சாப்பாட்டோடு தொடுகறியாகத் தொட்டுச் சாப்பிட மிகவும் விரும்புவர். தெரசா மெஸ்ஸில் அது எதுவும் சாத்தியமில்லை. சாப்பாட்டுக்கூடத்தில் சத்தம் மிகுந்தால் டொமினிக் லேசாகச் செருமுவார். பிறகு, தண்ணீர் குடிப்பதைத் தவிர வேறு சத்தம் வராது.

மூன்று மணி நேரம் அசையாது, உறைந்த ஒரு சித்திரம்போல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பார். சாப்பாட்டுக்கூடத்தைக் கழுவத் தொடங்கும்போது சட்டை போட்டுக்கொண்டு வெளியே போகிறவர், இரவு 7 மணிக்குத் திரும்புகையில் கையில் கள் போத்தல் இருக்கும்; வயிற்றிலும்.

இயேசு படத்தின் முன் சிறிய மின்விளக்கு பதற்றமாய் மினுங்கிக்கொண்டிருக்க, மறுபடியும் ஸ்டூலில் அமர்வார். பக்கத்தில் சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்கும். எப்போது சாப்பிடுவார் என யாருக்கும் தெரியாது. அப்பா நடுராத்திரியிலும் ஸ்டூலில் உட்கார்ந்திருப்பதாக பினுவுக்குத் தோன்றும். அவர் வந்த பிறகு சாப்பாட்டுக்கூடம் பக்கம் யாரும் வரவே மாட்டார்கள். வீட்டுக்கு இன்னொரு வாசல் இருந்தது.

கோட்டயத்தில் வெள்ளம் வரும் என எல்லோரும் பயந்துகொண்டிருந்த ஒரு பெரும் மழைநாளில் டொமினிக் மரித்துப்போனார். போட் ஜெட்டியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் தண்ணீர் வரும் எனக் காத்திருக்கையில், டொமினிக்கின் சவ ஊர்வலம் மார்த்தோமா ஆலயத்தை நோக்கிப் போகத் தொடங்கியது.

பினு 25 வயதைக் கடந்திருந்தாலும், ஒரு சிறுவனுக்கான தோற்றத்தோடு மழையில் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தான். டொமினிக்கின் சவப்பெட்டியைத் தூக்கும்போது பினுவும் தூக்குவதற்கு முன்னால் போக, அவன் பெரியப்பன் பிரான்சிஸ் அவனைப் பிடித்துத் தள்ளினார். ``போடா அந்தப் பக்கம்... வந்துட்டான் குள்ளன், சவப்பெட்டியைத் தூக்க!’’ - டொமினிக்கைக் குழியில் இறக்கும்போது பினு மிகவும் பிரயத்தனப்பட்டு அப்பன் சவப்பெட்டியைப் பார்க்க முயன்றான். பாதிரியாரின் அங்கியைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. பினுவின் அழுகையை மழை மறைத்தது.

48p4_1531823730.jpg

அப்பன் போன பிறகு, அப்பன் செய்த காரியங்களை பினு செய்யத்தொடங்கினான். திருமணமாகிப் போன அக்கா மார்த்தா தன் மகள் பிளஸியுடன் திரும்பி வர, தெரசா மெஸ் உள்கூடத்தில் நிறைய பெண்கள் இங்கும் அங்கும் பரபரப்பாய் அலைய, எப்போதும்போல் இயங்கியது.

நடிகர் கொச்சி ஹனீபாவைக் குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்ததைப்போல, கட்டம் போட்ட கைலியும் கைவைத்த பனியனுமாய் இடுப்பில் தடித்த பெல்ட்டுமாய் பரபரப்பாய் வேலைசெய்வான் பினு. உயரம் இல்லை என்பதால், பெண் கிடைக்கவில்லை.

வியாபாரம் தொடங்கும் முன், அப்பன் உட்காரும் இடத்தில் இரண்டு பீடிக்கட்டுகளையும் தீப்பெட்டியையும் வைப்பான்.

3 மணிக்கு சாப்பாட்டுக்கூடம் கழுவப்பட்டதும், பினு வேறு ஆள். ஒருநாள் டென்னிஸ் பேட் எடுத்துக்கொண்டு கோட்டயம் க்ளப்புக்கு விளையாடப் போவான். இன்னொரு நாள், அக்காடியா ஹோட்டல் பார் அல்லது சஜியின் ரப்பர் தோட்டம் அல்லது பிரத்யேகமானவர்கள் மட்டும் கூடும் சக்காரியாவின் முன்னிரவுச் சபை. எல்லா இடங்களிலும் பினு மௌனன்தான். யாருடனும் பேச மாட்டான். குடிப்பான், கூடிப்போனால் ஒரு புன்னகை. அவன் எங்கு இருந்தாலும் உமரின் ஆட்டோ 9:15 மணிக்கு அவனைச் சந்திக்கும். அவன் அம்மா ஸ்தோத்திரம் சொல்லத் தொடங்குகையில், வீட்டுப்படிக்கட்டில் ஏறுவான். இந்த நிகழ்ச்சிநிரலில் மாற்றமே கிடையாது. உறவினர் வீட்டுத் துக்கங்களுக்கோ, விசேஷங்களுக்கோ அவன் போவதே இல்லை. எல்லாவற்றுக்கும் அம்மாதான்.

கொஞ்ச நாளாக அவனிடம் புகார் சொல்லத் தொடங்கியிருந்தாள் அக்கா. அவர்கள் வீட்டுக்கு எதிரே கோட்டயம் முனிசிபாலிட்டியின் குடோன் இருந்தது. முன்பெல்லாம் அங்கே மலையாளப்பட ஷூட்டிங் நடக்கும். பிரேம் நசீர்கள், ஜெயன்கள், மம்மூட்டிகள், மோகன்லால்கள் வில்லன்களை அங்கேவைத்து நையப்புடைப்பர். பழைய காலத்தில் அது பரபரப்பான வியாபார ஸ்தலம். போட் ஜெட்டி அங்கிருந்து செறியங்காடிக்கு மாறிய பிறகு, அது கைவிடப்பட்ட கட்டடமாய்... வழி இல்லாதவர்களுக்கு முனிசிபாலிட்டி குறைந்த வாடகைக்குவிடும் கட்டடமாய் மாறியிருந்தது.

அங்கு தங்கியிருக்கும் நான்கைந்து திருவனந்தபுரத்துப் பையன்கள், மாலையானால் பினுவின் அக்கா மகளை விசில் அடித்துக் கூப்பிடுவதும், `கூகூகூ...’ எனக் கத்துவதுமாய் இருந்தனர். ``ரோட்டில் போனால் பின்னாலேயே வருகிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. எவ்வளவோ  சொல்லியும் அவர்கள் கேட்பதுபோல் தெரியவில்லை’’ என்றாள் அக்கா.

48p5_1531823752.jpg

பினு, மாறாத தனது நிகழ்ச்சிநிரலை மாற்றி அன்றைக்கு வீட்டில் காத்திருந்தான். 5 மணியானதும் அவர்கள் அறையிலிருந்து விசிலும் கூச்சலும் தொடங்கியது. பால்கனியில் ஏறி நின்று இவர்கள் வீட்டைப் பார்த்துக் கை காட்டினார்கள். பினு விறுவிறுவென குடோனை நோக்கி நடந்தான். குடோன் பாழடைந்து கிடந்தது. நாய்களும் பெருச்சாளிகளும் குறுக்கும்நெடுக்கு மாய் ஓட, பினு தூசி நிறைந்த மரப்படிக்கட்டு வழியாக மேலேறி அவர்கள் அறை முன்னால் நின்றவன், மெதுவாக மரக்கதவைத் தட்டினான். அது கூடுதலாய் அதிர்ந்தது.

உள்ளேயிருந்து கதவைப் படக்கெனத் திறந்து வெளியே வந்தவன், ``டேய், குள்ளன்டா!’’ என உள்பக்கம் திரும்பிக் கத்தினான். பினு பார்க்க முடிந்த கதவின் இடுக்கின் வழியே மதுக்குப்பிகள் தெரிந்தன. உள்ளேயிருந்து மற்றொருவன் கொச்சையாகக் கிண்டலடிக்க, அறை சிரிப்பில் அதிர்ந்தது. பினு மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மிக நிதானமாக தன்முன்னால் இருப்பவனை விலக்கி அறைக்குள் நுழைந்து ``இதை நிறுத்திக்கிட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது. இல்லைன்னா கஷ்டம்’’ என்று சொல்லிவிட்டு, படக்கென அறையை விட்டு வெளியே வந்தான். ``போடா குஞ்சக்கூனா!’’ என யாரோ கத்தினார்கள்.

அதன் பிறகு கொஞ்ச காலம் அவர்கள் அடங்கியிருந்தார்கள். பழைய போட் ஜெட்டியை பார்க் ஆக்கும் வேலையில் முனிசிபாலிட்டி இறங்க, போட் ஜெட்டியில் இருக்கும் வெங்காயத்தாமரைகள் நீள் இரும்புக்கைகள்கொண்ட வாகனங்களால் அள்ளப்பட்டுக்கொண்டிருக்க, வேலைவெட்டியில்லாதவர்கள் மதியவேளையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். திருனக்காரா அம்பலத்திலிருந்து போட் ஜெட்டிக்குப் புதிய தார் ரோடு போடும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. வடகிழக்கு வேலையாள்கள் மும்முரமாய் இந்தியும் பான்பராக்குமாய்க் கலந்து வேலை செய்துகொண்டிருக்க, பினு தன் பேட்டை எடுத்துக்கொண்டு க்ளப்புக்குப் போக ரோட்டில் இறங்கினான். சாலையின் மறுமுனையில் அக்கா மகள் பிளஸி, கல்லூரியிலிருந்து வந்துகொண்டிருந்தாள்.

பினு பார்த்துக் கொண்டிருக்கையி லேயே குடோனில் தங்கியிருப்ப வர்கள் அவளைக் கடந்து முன்னால் வந்து பயமுறுத்துவதற்காக சடக்கெனத் திரும்பி, தன் கையில் இருக்கும் பந்தை வீசுவதுபோல ஒருவன் பாவனை செய்தான். மற்றவன், அந்தப் பந்தைப் பிடுங்கி நிஜமாகவே அவள் மார்பை நோக்கி எறிந்தான். பிளஸி பயந்து, பின்னால் ஓடினாள். பினு பேட்டோடு அவர்களை நோக்கி ஓடினான். பினுவைப் பார்த்த அந்த நால்வரில் ஒருவன் ``டேய் குள்ளன்டா!’’ எனக் கத்த, பினு வடக்கத்தியத் தொழிலாளிகளைத் தள்ளிக்கொண்டு அவர்கள் ரோட்டில் கொட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்புத்தட்டுகளைத் தட்டிவிட்டு நால்வரில் முன்னால் இருந்தவன் மீது பாய்ந்தான்.

வடக்கத்தியத் தொழிலாளர்கள் பீகாரியில் கத்த, பினு குவித்துவைக்கப்பட்டிருக்கும் ஜல்லியின் மீது நின்று முதலாமவன் முகத்தில் குத்தினான். ``மாரோ... மாரோ..!’’ என்று யாரோ இந்தியில் கத்த, வெங்காயத்தாமரை அள்ளுவதை வேடிக்கை பார்த்துச் சலிப்படைந்திருந்த கூட்டம், சண்டையை நோக்கி ஓடிவந்தது. பினு சன்னதம் வந்தவனாய் நால்வர்மீதும் பாய்ந்து பாய்ந்து அடித்தான். அவன் குள்ளமாய் இருப்பது சண்டைக்கு மிக ஏதுவாய் இருந்தது. அவர்களால் அவன் முகத்தில் குத்த முடியவில்லை. அவன் சடக்கெனக் குனிந்து அவர்கள் கவட்டைக்குள் புகுந்து நிலைகுப்புற அவர்களைக் கீழே தள்ள முடிந்தது. வீட்டிலிருந்து தெரசாவும் மார்த்தாவும் மற்றவர்களும் ஓடிவர, பிளஸி ஓரமாய் நின்று அழுதுகொண்டிருந்தாள்.

48p6_1531823768.jpg

பினுவைக் கூட்டம் ஆதரித்து, ஆரவாரமாய்க் கூச்சல் எழுப்பியது. பினுவை விலக்க வந்த இரண்டொருவரை பினு அப்படியே தள்ளிவிட்டான். நால்வரும் பினுவின் தாக்குதலால் அயர்ந்துபோயிருந்தார்கள். பினு, கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர்களை அடித்தான். அப்போதுதான் போடப்பட்டிருக்கும் தார் ரோட்டில் பைத்தியமாய் குறுக்கும்நெடுக்குமாய் பினு ஓடினான். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பில் வந்து இறங்கும் வரை, பினுவை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், டொமினிக் குடும்பத்துக்குப் பரிச்சயமானவர். பினுவை ஆச்சர்யத்துடன் பார்த்தார். சிறு வயதிலிருந்து பினு அவர் பார்த்து வளர்ந்த பையன்தான். பினுவிடம் ஒன்றும் கேட்கவில்லை. அந்த நால்வரையும் உள்ளே அழைத்துச் சரமாரியாக அடித்தார். உடனடியாக அவர்கள் குடோன் அறையைக் காலிசெய்யவேண்டும் என்று சொல்லி, `இனி வம்பு ஏதும் செய்ய மாட்டோம்!’ என எழுதி வாங்கிக்கொண்டு, பினுவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். நால்வரும் பினுவிடம் மன்னிப்பு கேட்க, பினு சலனமில்லாமல் அவர்களைப் பார்த்தான். நால்வரும் வெளியேற சுகுமாரன் பினுவைப் பார்த்து ``என்னடா, ஆள்களை அடிச்சவுடனே உயரமாயிட்டியா நீ?’’ எனக் கேட்க, பினு அப்போதுதான் கவனித்தான், அவனுடைய இரண்டு கேன்வாஸ் ஷூக்களிலும் அரையடிக்குத் தார் அப்பியிருப்பதை.

அடுத்த மூன்று நாள், கோட்டயம் வீதியெங்கும் பினு நடந்தே திரிந்தான். உமரின் ஆட்டோவை வேண்டாம் எனச் சொல்லிவிட்டான். எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் அவனைப் பார்க்க, ஷூவும் தாருமாய்த் திரிந்தான். உறவினர் வீடுகளின் வாசல் வரை போய் உள்ளே போகாமல் வாசலோடு நின்று பேசிவிட்டு வந்தான். வழியில் ஃபாதரைப் பார்த்தவன் மரியாதையாக ஸ்தோத்திரம் சொன்னான். பினுவின் வாழ்வில் முதல்முறையாக ஃபாதர் குனியாமல் அவனுக்குப் பதில் ஸ்தோத்திரம் சொன்னார். ஃபாதர், திரும்பித் திரும்பி அவனைப் பார்த்தபடி நடந்தார். பினு வீட்டுக்கே போகவில்லை. அக்காடியா ஹோட்டலில் ரூம் எடுத்தான். வீட்டில் இருக்கும் ஒரே வெஸ்டர்ன் டாய்லெட்டை அம்மா மட்டுமே பயன்படுத்துவாள். இண்டியன் டாய்லெட் போனால் காலில் தண்ணீர் படும். இந்த மூன்று நாளில் மூத்திரம் இருக்கும்போது அவன்மீது தெறிக்கவேயில்லை. பாரில் உயரமான ஸ்டூலில் ஏறி அமர்ந்து குடித்தான். அம்மாவும் அக்காவும் ஹோட்டல் ரூமில் வந்து அவனைப் பார்த்தபோது, பினு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

மீனச்சல் ஆற்றோரமாக, தனியே அமர்ந்திருந்தான் பினு. ஆற்றுக்கு அவனை ஒற்றையாய்ப் பார்த்துதான் பழக்கம். ஆள்கள் வராத பொழுதில்தான் பினு குளிக்க வருவான். பினு எழுந்து தண்ணீர் அருகே போனான். தூரத்தே சூரியன் மறைந்துகொண்டிருக்க, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டெனப் பின்வாங்கினான் பினு.

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.