Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணும் முகம் தோறும்

Featured Replies

காணும் முகம் தோறும் - சிறுகதை

 
நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில்

 

ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது. அந்தச் செயினில் சிலுவை டாலர் கோத்திருந்தார்கள். அது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். டீச்சர் தினமும் காலையில் விழித்ததும், அந்தச் சிலுவையைக் கண்களில் ஒற்றிக்கொள்வாள்.

ஜெனிஃபர் வேலை செய்யும் பள்ளியின் மைதானத்தில் அந்தத் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டதாக, தனது தலைமை ஆசிரியரிடம் அவள் புகார் செய்தாள். சில மாணவர்களும், கூடவே பள்ளிக் காவலாளிகளும் தேடினார்கள். நாள் முழுக்கத் தேடியும் சங்கிலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜெனிஃபரின் தங்கச் சங்கிலி காணாமல்போவது, இது இரண்டாவது முறை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, முதல் தடவை காணாமல்போய், அவள் கைக்கு சங்கிலி கிடைத்தது இப்படித்தான்...

ஜெனிஃபர் டீச்சர் ஒரு ஞாயிறு மாலையில் தன் மகளுக்குக் கரடி பொம்மை வாங்கிக்கொண்டு வீடு திரும்ப ஆட்டோ ஏறியபோது, தனது கழுத்தில் இருந்த செயினை ஒருவன் அறுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகக் கத்தினாள். ஆட்டோ டிரைவர் செல்வம் செல்போனில் யாருடனோ பேசியபடி, ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்தான். 'அய்யோ ஏசப்பா... அய்யோ ஏசப்பா...’ என்று ஜெனிஃபர் டீச்சர் கத்தத் தொடங்கியதும், செல்வம் வண்டியைவிட்டு கீழே இறங்கி, 'என்னாச்சு டீச்சர்?' என்று பதற்றமானான்.

ஜெனிஃபர் டீச்சர் தனது கழுத்தைத் தடவியபடி, 'யாரோ செயினை அறுத்துட்டுப் போயிட்டாங்க' என்று தொண்டை கமறியபடி கத்தினாள். செல்வம், பதறி எதிர் திசையில் ஓடினான். ஓடியவன் திரும்பி வந்து மூச்சுவாங்கியபடி, 'யாரும் இல்லியே டீச்சர். நீங்க வண்டியிலே ஏறி உட்காருங்க' என்றான் படபடப்பாக. 'டீச்சர்... செயினை அத்துட்டுப் போனவனை உங்களுக்கு அடையாளம் தெரியுமா?' என்று கேட்டான் செல்வம்.

'நான், கரடி பொம்மையை ஆட்டோவிலே வெச்சிட்டு நிமிர்ந்து நின்னேன். அப்போதான்...' என்று டீச்சர் சொன்னாள்.

p78d.jpg

செல்வம், சற்றுத்தொலைவில் திறந்திருந்த டீக்கடையின் முன் ஆட்டோவை நிறுத்தினான். 'அண்ணே... யாராவது இந்தப் பக்கம் ஓடினாங்களா?' என்று கேட்டான்.

டீக்கடையில் இருந்தவர் ஆட்டோவில் இருந்த டீச்சரைப் பார்த்துவிட்டு, ''இல்லையே'' என்றார்.

செல்வம் வண்டியை நேராக ஓட்டினான். அந்தச் சாலையில், வேறு கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. மருத்துவமனையில், சிறிய விளக்கின் வெளிச் சத்தைப் பார்க்க முடிந்தது. அந்தப் பக்கமாக இருந்த டீக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள், ரெடிமேட் கடைகள்... யாவும் ஷட்டரை இழுத்து மூடி ஞாயிறு விடுமுறையில் இருந்தன.

செல்வம், ''ஞாயித்துக்கிழமையும் அதுவுமா இந்தப் பக்கம் யாரும் இல்லை... எந்தப் போலீஸ்காரங்களும் இல்லை'' என்றவன், 'நீங்க தாஸ் சாருக்கு போன் போட்டுச் சொல்லிடுங்க'' என்று ஆட்டோவைக் கிளப்பினான்.

வழி நெடுக சாலை விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. எதிர்ப்புறத்தில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று, வேகத்துடன் அவர்களைக் கடந்து போனது. காற்று, சீற்றத்துடன் டீச்சர் முகத்தில் விசிறியடித்தது. ஜெனிஃபர் டீச்சர் செல்போனை எடுத்து தன் கணவனுக்கு அழைத்துப் பேசும்போது அழுதேவிட்டாள். அவளது முகத்தில் பயம் படர்ந்து இருந்தது. வியர்வைத் துளியும், கண்களில் தெரியும் அச்சமும் அவளை வேறு ஆளாகக் காட்டின. அவள் அழுவதைப் பக்கவாட்டுக் கண்ணாடி வழியாக சங்கடமாகப் பார்த்தான் செல்வம்.

ஜெனிஃபர் டீச்சர் வீடு, பாரதியார் நகர் மூன்றாவது தெருவில் இருந்தது. தினமும் காலையில் ஆட்டோவில்தான் டீச்சரும், அவளது மகள் நிர்மலாதேவியும் பள்ளிக்குச் செல்வார்கள்; மாலையில் பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் வீடு திரும்புவார்கள்.

பாரதியார் முதல் தெரு முக்கில், டீச்சரின் கணவர் ஆரோக்கியதாஸும் குழந்தை நிர்மலாதேவியும் நின்றிருந்தனர். நிர்மலாவின் மூக்கும் டீச்சரின் மூக்கும், ஒரு குடைமிளகாயை ரோஸ் கலரில் செய்து வைத்ததுபோல இருந்தன. டீச்சர், கரடி பொம்மையைத் தூக்கிக்கொண்டு ஆட்டோவைவிட்டு கீழே இறங்கியதும், நிர்மலா, தனது குடைமிளகாய் மூக்கை முன்னால் நீட்டிக்கொண்டு, 'ஹய்யா பொம்மை... கரடி பொம்மை...' என்று தன் இரு கைகளையும் விரித்தபடி, ஆட்டோவையே கட்டிக்கொள்வது போல ஓடி வந்தாள்.

ஆரோக்கியதாஸ், ''எப்படி அத்துட்டுப் போனான்... யாருடி அத்துட்டுப் போனது? பக்கத்திலே வந்து செயினை இழுக்கிற வரைக்கும் என்னடி செஞ்சிட்டு இருந்தே?'' என்று சத்தமாகக் கேட்டார்.

ஜெனிஃபர் டீச்சர், தனது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து செல்வத்துக்குக் கொடுத்தாள். ஆரோக்கியதாஸ், செல்வத்தின் அருகே சென்று, ''செயினை அத்துட்டுப் போனது யாருனு பார்த்தீங்களா?' என்று கேட்டார்.

''இல்லை சார். நான் போன் பேசிட்டு இருந்தேன். ரோட்ல யாரும் இல்லை. ஒரே இருட்டு. டீச்சர்தான் ஓடுறதைப் பார்த்திருக்காங்க' என்றவன், 'போலீஸ்ல ஒரு புகார் குடுத்துடுங்க. இப்போ வந்திருக்கிற எஸ்.பி உடனே கவனிக்கிறாராம்' என்று சொன்னான்.

ஜெனிஃபர் பயந்துபோய் நின்றிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதோ ஞாபகம் வந்தவள்போல, அவள் ஆட்டோவுக்குள் சென்று தேடிப் பார்த்தாள்.

ஆட்டோவுக்குள் ஒரு மூலையில், மஞ்சள் நிறப் பூச்சியைப்போல கழுத்துச் சங்கிலி சிலுவை டாலருடன் சுருண்டுகிடந்தது. அவளையும் அறியாமல், 'ஏசப்பா... ஏசப்பா...' என்று இரு முறை கூவினாள். அவளது சத்தம் கேட்டு ஆரோக்கியதாஸ் திரும்பிப் பார்த்தார்.

ஆரோக்கியதாஸுக்கு செயினைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. தெரு என்றும் பாராமல் ஜெனிஃபரைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தார். நிர்மலாதேவி, பொம்மையை வாங்கிக்கொண்டு தெருவில் இருந்து வீட்டுக்கு ஓடினாள். கரடி பொம்மையைத் தூக்கிக்கொண்டு அவள் ஓடுவதைப் பார்த்த டிரைவர் செல்வம் சிரித்துக்கொண்டான். அவனுக்கும் சந்தோஷமாக இருந்தது. ஆட்டோவைத் திருப்பிக்கொண்டு சென்றான். டீச்சர், தனது கழுத்தில் சங்கிலியைப் போட்டுக்கொண்டு நடந்தாள். வீட்டுக்குள் சென்றதும் 'ஓ..’வென அழத் தொடங்கினாள். அவள் எதற்கு அழுகிறாள் என்று ஆரோக்கியதாஸால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஜெனிஃபரும் ஆரோக்கியதாஸும் காதலித்து திருமணம் செய்துகொண்ட வர்கள். அவர்களது திருமணத்துக்கு வீட்டார் சம்மதிக்கவில்லை. செல்லம் மாளும் நாகராஜனும்தான் அவர்களது திருமணத்தை நடத்திவைத்தார்கள். செல்லம்மாளும் நாகராஜனும் காதலித்துத் திருமணம் செய்து, எட்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.

p78c.jpgஜெனிஃபரும் செல்லம்மாளும் முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். ஜெனிஃபருக்கு ஏதாவது என்றால், செல்லம்மாவால் தாங்க முடியாது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே ஜெனிஃபருக்குப் பெண் குழந்தை பிறந்தது. செல்லம்மாள், தனது தோழியின் பிரசவக் காலத்தில் ஒரு தாயைப் போல அருகில் இருந்து கவனித்துக்கொண்டாள். குழந்தைக்கு 'நிர்மலா’ என்று பெயர் வைத்தவளே செல்லம்மாள்தான்.

செல்லம்மாளுக்கு, குழந்தை எதுவும் உண்டாகவில்லை. நாகராஜனுக்கு, திருமணம் செய்த புதிதில் அடிக்கடி காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது. புதிய ஊர், புதுத் தண்ணீர் என்று செல்லம்மாள் விட்டுவிட்டாள். இத்தனைக்கும் நாகராஜன், மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதி. ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்குத் தெரிந்த மருந்து மாத்தி ரைகளை வாங்கிச் சாப்பிட்டான். ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நாகராஜனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பலவீனமடைந்துவிட்டன என்பது தெரியவந்தது. 'இப்போதைக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தவோ, அறுவைசிகிச்சை செய்துகொள்ளவோ தேவை இல்லை. தினமும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, வாரம்தோறும் பரிசோதனை செய்துகொண்டால், ஒருவேளை குணமாகலாம்’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

நாகராஜனுடன் மருத்து, மாத்திரை, மருத்துவமனை என அலைந்துகொண்டிருந்ததால்... செல்லம்மாளுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஆகிவிட்டது. அவள்,  குழந்தைக்காக ஏங்கினாள். ஒவ்வொரு முறையும் நிர்மலாவைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் வடிப்பாள்.

ஜெனிஃபரின் கழுத்துச் சங்கிலி, இரண்டாவது முறையாகக் காணாமல்போனதும் செல்லம்மாள் துக்கம்கொண்டாள். பள்ளியில் இருந்து செல்லம்மாள் வருத்தத்துடன் வீட்டுக்குச் சென்றாள். அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளது கணவன் நாகராஜனுக்கு, அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என 1,48,000 ரூபாயை, டாக்டர் இரண்டு தினங்களுக்குள்ளாகச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக அறுவைசிகிச்சைக்குத் தேதி குறித்துத் தந்தார்கள். அவளால் பணத்தைத் தயார் செய்து தர முடியவில்லை. செல்லம்மாள், தன் கணவனின் சகோதரனிடம் கேட்டுப் பார்த்தாள். அவர், அவளுடன் பேசவே இல்லை. 'வீட்டைவிட்டு வெளியே போ’ என்று விரட்டிவிட்டார். செல்லம்மாளுக்கு உதவி செய்வதற்கு அவளது தோழி ஜெனிஃபரைத் தவிர, வேறு யாரும் இல்லை. ஜெனிஃபர் ஒரு வாரத்துக்குள் அவளுக்குப் பணத்தை ஏற்பாடுசெய்து தருவதாகச் சத்தியம் செய்திருந்தாள். அந்தச் சமயத்தில்தான், ஆட்டோவில் அவளது கழுத்துச் சங்கிலி காணாமல்போய் திரும்பவும் கிடைத்தது. ஜெனிஃபர், இந்நேரம் வீட்டில் என்ன செய்துகொண்டிருப்பாளோ... ஆரோக்கியதாஸ், அவளைத் திட்டிக்கொண்டிருப்பானோ... அவளது குழந்தை அழுதுகொண்டிருக்குமோ என்று செல்லம்மாள் தன் தோழியின் நினைவாகவே இருந்தாள்.

ஜெனிஃபர் டீச்சர், பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது இரவாகியிருந்தது. எப்போதும் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுகிறவள், இன்று ஏன் தாமதமாக வந்திருக்கிறாள் என்று ஆரோக்கியதாஸ் அவளிடம் விசாரித்தார்.

'ஆரோக்கியம்... என்னோட கழுத்துச் சங்கிலி காணாமப்போச்சு. ஸ்கூல் கிரவுண்டுல காணாமப்போயிருக்கும்னு நினைச்சுத் தேடினோம்... கிடைக்கலை'' என்றாள் ஜெனிஃபர்.

'உனக்கு இதே வேலையாப்போச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் ஒருத்தன் அத்துட்டுப் போகப் பார்த்தான். உன்னோட அதிர்ஷ்டம்... கர்த்தரோட ஆசீர்வாதம்... அந்தச் செயின் ஆட்டோவுலயே கிடந்தது. இப்போ ஸ்கூல் கிரவுண்டுல தொலைச்சிட்டு வந்திருக்கே' என்று திட்டினான்.

ஜெனிஃபர் ஓவென அழத் தொடங்கினாள். அவளால் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆரோக்கியதாஸ் அவளை சமாதானப்படுத்த முயன்றான். ஜெனிஃபர் தனது கண்களைத் துடைத்துக்கொண்டு தற்செயலாக தலை நிமிர்ந்து பார்த்தபோது, அவளுக்கு எதிரே ஆரோக்கியதாஸின் அப்பா-அம்மா அமர்ந்திருந்திருந்தார்கள். வாசலில் கரடி பொம்மையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்த நிர்மலாவையும், அவளிடம் இருக்கும் பொம்மையையும் அவர்கள் பார்த்தார்கள். நிர்மலா அவர்களிடம் ஓடிப்போய் பொம்மையைக் காட்டினாள்.

ஆரோக்கியதாஸின் அப்பா-அம்மா, ஜெனிஃபருடன் பேசுவது இல்லை. ஆரோக்கியதாஸை மாதத்துக்கு ஒரு முறை வந்து பார்த்துவிட்டு, அவனிடம் செலவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஜெனிஃபர் வேலைக்குப் போன பிறகுதான், அவர்கள் ஊரில் இருந்து வீட்டுக்கு வருவார்கள். இன்று தான் வீட்டில் இருக்கும்போது ஏன் வந்திருக்கிறார்கள் என்று, அவள்          சஞ்சலத்துடன் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

ஆரோக்கியதாஸ் அவள் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்து, 'ஊரில் இருந்து அப்பா-அம்மா வந்திருக்காங்களே... ஒரு வார்த்தை 'வாங்க’னு கூப்பிடக் கூடாதா?' என்று மெதுவாகக் கேட்டான். அவள், முறைத்தாள். 'சரிசரி... உன் இஷ்டம்' என்று அறையைவிட்டு வெளியே வந்தான்.

ஆரோக்கியதாஸ், 'அப்பா... இப்பவே ஊருக்குக் கிளம்புறீங்களா?' என்று கேட்டான். அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. தங்களது மடியில் அமர்ந்திருந்த நிர்மலாவுக்கு முத்தம் வைப்பதும், மிட்டாய் கொடுத்துத் தின்னச் சொல்வது மாக இருந்தார்கள். ஆரோக்கியதாஸ் அறைக்குள் சென்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்தான்.

'இந்தாங்க...' என்று பணத்தை தன் அப்பாவிடம் கொடுத்தான். அவர் அதை வாங்கி எண்ணிப்பார்த்து, உள்பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆரோக்கியதாஸின் அம்மா, நிர்மலாவுக்கு டாட்டா காட்டிவிட்டுப் புறப்பட்டாள். அவர்கள் இருவரும் வீட்டைவிட்டுச் சென்றதும், ஜெனிஃபரின் அறைக்குள் சென்றான் ஆரோக்கியதாஸ்.

நிர்மலா தனது கரடி பொம்மையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்தாள். பொம்மையைக் காட்டி அவளோடு ஜெனிஃபரை விளையாட அழைத்தாள். அவளோ செயினைப் பறிகொடுத்த கவலையிலும் பதற்றத்திலும் நிர்மலாவை ஏறிட்டுகூடப் பார்க்கவில்லை. நிர்மலா தன் அப்பாவிடம் சென்று ஒட்டி நின்றுகொண்டு, அவரது முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கரடி பொம்மையைக் கொஞ்சுவதும் அதற்கு முத்தம் கொடுப்பதுமாக இருந்தாள். பிறகு, அறையின் மூலைக்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.

ஆரோக்கியதாஸின் முகத்தைப் பார்த்த ஜெனிஃபர், 'உங்க அப்பா- அம்மா கிளம்பிப் போயிட்டாங்களா?' என்று கேட்டாள்.

'ம்...'

'இப்போ ராத்திரி சாப்பாடு எதுவும் செய்யலை. கடையிலே போய் வாங்கிட்டு வந்துடுங்க' என்று ஆரோக்கியதாஸிடம் சொன்னாள்.

''சரி'' என்றவன், ''நிர்மலாவுக்குச் சாப்பிட என்ன வேண்டும்?'' என்று கேட்டான். அவள் சொன்னாள். உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டுச் செல்லும்போது, 'பாப்பாவையும் தூக்கிட்டுப் போங்க. நான் டாய்லெட் போகணும்' என்றாள். நிர்மலாவைத் தூக்கிக்கொண்டுப் புறப்பட்டான் தாஸ்.

அவர்கள் வீட்டைவிட்டுச் சென்றதும் ஜெனிஃபர் வாசல் கதவைச் சாத்திக்கொண்டாள். பிறகு செல்லம்மாளுக்கு போன் செய்தாள்.

'நாளைக்குக் காலையிலே பணம் ரெடியாகிடுமா செல்லம்மா?'

'நகைக் கடைக்காரங்க தர்றேன்னு சொல்லியிருக்காங்க ஜெனி. உனக்கு எதுவும் பிரச்னை இல்லையே?'

'அதெல்லாம் ஒண்ணும் இல்லை.'

'ஆரோக்கியம் என்ன சொன்னார்?'

'இப்போதான் அவங்க அப்பா- அம்மா ஊருக்குப் போறாங்க. அவர் கடையிலே டிபன் வாங்கப் போயிருக்கார். சரி... நாகராஜனுக்கு இப்போ எப்படியிருக்கு?'

'மூச்சு விடுறதுல சிரமம் இருக்கு ஜெனி. காலையிலே டாக்டர் வந்து பார்க்கிறேன்னு சொல்லியிருக்காரு. காய்ச்சல்தான் விட்டுவிட்டு வருது.'

'நீ ஸ்கூலுக்கு லீவு போடேன்...'

'பார்ப்போம். ஏற்கெனவே சி.எல் எல்லாம் போட்டு முடிச்சிட்டேன். நாளைக்கு ஸ்கூலுக்கு வந்துடுறேன்.'

'ஓ.கே நாளைக்குப் பார்க்கலாம்.'

'ம்...'

ஜெனிஃபர் உடை மாற்றி, முகம் கழுவிக்கொண்டாள். மெத்தையில் படுத்தவள், சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் இருந்தாள். பிறகு, தனது மேஜையில் இருந்த ஏசுவின் படத்தின் முன்பு நின்று கண்ணீர் வடியப் பிரார்த்தித்தாள். வெளியே வாசலில் ஆரோக்கியதாஸும் நிர்மலாவும் படியேறி வரும் சத்தம் கேட்டதும், கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

மேஜையின் முன்பாக அமர்ந்து பார்சலைப் பிரித்தாள் ஜெனிஃபர். கரடி பொம்மை தனியாக அறையின் மூலையில் கிடந்தது. நிர்மலா தன் பொம்மைக்கு பரோட்டாவை ஊட்டிவிடச் சென்றாள்.

'பக்கத்து வீட்டு தனசேகரன் சார்கிட்டே சொன்னேன். அவர் 'காலையிலே ஸ்டேஷனுக்கு வாங்க. செயினை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்’னு சொல்லியிருக்கார்.'

'நீங்க ஏன் அவர்கிட்டே எல்லாம் சொன்னீங்க? போய்த்தொலையுது, விடுங்க' என்றாள் சாப்பிட்டபடியே.

'சும்மா இல்லை. 80 கிராம், 10 பவுன் தங்கம். இன்னிக்கு என்ன விலை தெரியுமா? ரொம்ப ஈஸியாச் சொல்லிட்டே. உனக்குக் கவலை இல்லையா ஜெனி?' என்றான்.

p78b.jpg'ரொம்பக் கவலையாத்தான் இருக்கு. என்ன செய்றது?' என்றவள், சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள்.

'அந்தச் செயினை செல்லம்மாளும் நாகராஜனும் எவ்வளவு கஷ்டத்திலே நமக்குச் செஞ்சு கொடுத்தாங்கனு நினைச்சுப்பார்த்தியா? நமக்கும் பயன்படாம, அவங்களுக்கும் பயன்படாமப்போயிருச்சு. செயினை அவங்களுக்குக் கொடுத்திருந்தாக்கூட, ஹாஸ்பிட்டல் செலவுக்கு ஆகியிருக்கும்' - ஆரோக்கியதாஸ் சொன்னதும், அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.

'சரி... சாப்பிடும்போது அழாதே. சாப்பிடு' என்றான் ஆறுதலாக.

ஜெனிஃபர் சாப்பிட்டு முடித்தவுடன் நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டாள். நிர்மலா இன்னும் பரோட்டாவைத் தின்னாமல் கரடி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு பரோட்டாவைப் பிய்த்து ஊட்டிவிட்டாள். அவள் தின்றதும், காகிதங்களை மடித்துக் குப்பை டப்பாவில் போட்டாள். ஆரோக்கியதாஸ் விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கையறைக்கு வந்தான்.

ஜெனிஃபருக்கு உறக்கம் வரவில்லை. அவள் இரவு முழுக்க உறங்காமல் புரண்டு புரண்டு படுத்தாள். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி அவளது கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தன. மைதானத்தில் தென்னை மரங்களுக்குப் பின்புறம் தன்னுடன் செல்லம்மாள் பேசிக்கொண்டிருந்தது அவளது ஞாபகத்துக்கு வந்தது. கண் சிமிட்டும் நேரத்தில், செல்லம்மாளின் உள்ளங்கையில் சத்தியம் செய்துகொடுத்ததும், தனது சங்கிலியைக் கழற்றி அவளுக்குக் கொடுத்ததும் ஞாபத்துக்கு வந்தன. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். தான் செய்தது தவறா... சரியா... எதுவும் புரியவில்லை. தவறாக இருந்தால், கர்த்தரே... என்னைத் தண்டியும். சரியாக இருந்தால், என் தோழியின் கணவனை உயிர்ப்பித்துத் தாரும் என்று பிரார்த்தித்தாள்.

ஜெனிஃபர், ஆரோக்கியதாஸைப் பார்த்தாள். அவன் வழக்கம்போல கால்களைப் பின்னலிட்டு, இரு கைகளையும் மார்பு மேல் வைத்துக்கொண்டு படுத்திருந்தான். அவளுக்கு இன்னமும் உறக்கம் வரவில்லை. காலையில் என்னென்ன செய்ய வேண்டும். மதிய உணவுக்கு டிபன் பாக்ஸில் என்ன வைத்துக் கொடுத்துவிட வேண்டும் என அவள் யோசித்தாள். எதுவும் அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை. குழப்பமாக இருந்தது.

ஜெனிஃபர் அதிகாலையில் எழுந்து குளித்தாள். கர்த்தரின் சிலைக்கு முன்பாகப் பிரார்த்தித்தாள். பிறகு, காலை உணவைத் தயாரிப்பதற்காகச் சமையலறைக்குச் சென்றாள். தனது வழக்கமான வேலைகளை அவள் ஓர் இயந்திரத்தைப்போல செய்யத் தொடங்கினாள்.

அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் தனசேகர், வீட்டுக்குள் வந்து ஆரோக்கியதாஸை அழைப்பது கேட்டது. ஜெனிஃபர்,  சமையலறையைவிட்டு வெளியே வந்தாள்.

'ஜெனிஃபர், ஸ்டேஷனுக்கு என்னோட நீங்களும் ஆரோக்கியமும் வாங்க... ஒருத்தனைப் பிடிச்சுவெச்சுருக்காங்க. ராத்திரியிலே அவன் எங்கேயோ போய் நகைகளை எடுத்துட்டு வந்திருக்கான். நான் இன்ஸ்பெக்டர்கிட்டே சொல்லி ஏதாவது ஏற்பாடு செய்து தர்றேன்' என்றார்.

குளித்துவிட்டு உள்அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்த ஆரோக்கியதாஸ், குரல் கேட்டு வாசலுக்கு வந்தான். தனசேகர் அவனிடம், 'ஸ்டேஷனுக்கு வந்து ஒரு பெட்டிஷன் கொடுங்க. சார், இன்னைக்கு நல்ல மூடுலே இருக்கிறார். ஏதாவது ஏற்பாடு செய்யலாம்' என்று சொன்னார்.

'ஸ்டேஷனுக்கு ஜெனியும் வரணுமா?'

'கண்டிப்பா வரணும் ஆரோக்கியம்' என்றார் தனசேகர். ஆரோக்கியதாஸும் ஜெஃனிபரும் தயங்குவதைப் பார்த்துவிட்டு, 'பயப்படாதீங்க. பெரிசா ஒண்ணும் இல்லை. நானும் உங்ககூடத்தானே இருப்பேன். ஸ்டேஷனில் நகையைக் காட்டுவாங்க. உங்க அதிர்ஷ்டம், அந்த நகை உங்களோடதா இருந்தா... அடையாளம் காட்டி எடுத்துங்க. இல்லைன்னாலும் ஒண்ணும் குத்தம் இல்லை. உங்களுக்குப் பிடிச்ச நகையைக் கை காட்டுங்க. நான் மத்த ஏற்பாடுகளைப் பார்த்துக்கிறேன். ஸ்டேஷன்ல 9 மணிக்கு இருக்கிற மாதிரி வாங்க' என்று சொன்னார்.

p78.jpg'ஜெனி, நாம போகலாம். நம்ம நகை கிடைக்கலைனாலும், வேற ஏதாவது நகையை வாங்கித் தர்றதா சொல்றார். நமக்கு ஒரு சான்ஸ்தானே?' என்றான் ஆரோக்கியதாஸ். ஜெனிஃபருக்கு என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை; ஸ்டேஷனுக்குச் செல்வதற்கும் மனம் இல்லை.

அவர்களது வீட்டிக்கு முன் ஆட்டோ வந்து நின்றது. செல்லம்மாள் கீழே இறங்கி வருவதை ஜெனிஃபர் பார்த்தாள். அவளுக்குப் பயமாக இருந்தது. அவளால் தனது பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஜெனிஃபர் கண்ணீர் வடிய நின்றிருந்தாள். செல்லம்மாள் அவளருகே வந்து, 'நேத்து நீ போனதுக்குப் பின்னாடி செயினைக் கண்டுப்பிடிச்சு எடுத்துட்டோம் ஜெனி. தென்னை மரத்துக்குப் பின்னாடி இருந்த தண்ணித்தொட்டி பக்கத்துல கிடந்தது. இந்தா...' என்று அவளிடம் செயினைத் தந்தாள்.

ஜெனிஃபருக்கு கண்ணீர் வடியத் தொடங்கியது. 'இது ரெண்டாவது முறை செல்லம்மா. இப்படியே இன்னும் எத்தனை தடவைதான் செயின் காணாமப்போகும்னு தெரியலை' என்று சலிப்புடன் சொன்ன ஆரோக்கியதாஸ், 'நாகராஜனுக்கு இப்போ எப்படி இருக்கு?' என்று கேட்டான். ஜெனிஃபர், ஆர்வத்துடன் செல்லம்மாள் முகத்தைப் பார்த்தாள்.

செல்லம்மாள் கண்களில் திரண்ட நீர்த்துளி, அவளது கீழ் இமைகளைத் தொட்டு நின்றது. செல்லம்மாள் சொல்லப்போகும் சொற்களை அறிந்தவள் போல ஜெனிஃபர் ஓவென அழத் தொடங்கினாள். செல்லம்மாளின் கீழ் இமைகளில் இருந்த நீர், இப்போது கன்னத்தில் வழிந்தது. கழுத்துச் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருந்த சிலுவை ஆடிக்கொண்டிருந்தது.

'தாஸ், இந்தச் சிலுவை எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? செல்லம்மாள்தான் வரைஞ்சு இதே மாதிரி செய்யச் சொன்னா’ என்று தன்னிடம் நாகராஜன் முன்பு ஒருமுறை சொல்லியது, இப்போது ஆரோக்கியதாஸுக்கு ஞாபகம் வந்தது. தனது கண்களில் நீர் திரண்டு வருவதை உணர்ந்தவன், முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான்!

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.