Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் எழுதிய கவிதை!

Featured Replies

கடவுள் எழுதிய கவிதை!

 

 

white_spacer.jpg
கடவுள் எழுதிய கவிதை! white_spacer.jpg
title_horline.jpg
 
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
white_spacer.jpg

p58c.jpg வள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச் சுருக்கியபடி... தன் சிவந்த விரல்களால் வண்ணத்துப் பூச்சியை மெள்ள மெள்ளப்

பிடிக்க முயன்றபோது, எனக்குத் தெரிந்துவிட்டது... அவள் கடவுள் எழுதிய கவிதை!

ஈஸ்வரன் கோயில் வெளிப் பிராகார சுற்று மண்டபத்தில் அமர்ந்தபடி, அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

யாரிவள்? கோயில் சிற்பங்களில் உறைந்து கிடந்த தேவ கன்னிகை ஒருத்தி, வண்ணத்துப்பூச்சி பிடிக்க இறங்கி வந்துவிட்டாளா என்ன?

எனது 24 வருட வாழ்க்கையில், இப்படி ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததில்லை. என்னை அறியாம லேயே எழுந்து, அவளை நோக்கிச் சென்றேன். தலைக்குக் குளித்து, காதோர முடிகளைப் பிரித்து, தண்ணி ஜடை போட்டிருந்தாள். கூந்தல் ஈரம், அவளுடைய முதுகுப்புற ஜாக்கெட்டை நனைத்திருந்தது

‘‘எனக்கு ஒரு வண்ணத்துப்பூச்சி பிடிச்சுத் தரீங்களா?’’ என்றேன்.

‘‘ஐயே...’’ என்று மலையாளப் பெண்கள் போல் சிணுங்கியபடி நிமிர்ந்தவளை அவ்வளவு நெருக் கத்தில் பார்த்ததும் எனக்கு மூச்சு முட்டியது.

சற்று முன் மொட்டு வெடித்த பூவைப் போன்று பளிச்சென்ற முகம். அந்த முக அழகைவிட, என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது அவளுடைய கண்கள்தான். கண்கள் சிரிக்கும். அழும். ஒளிருமா என்ன? கண்ணுக்குள் கார்த்திகை தீபங் களை ஒளித்து வைத்தது போல ஒளிர்ந்துகொண்டு இருந்தன அந்தக் கண்கள்.

வெள்ளை நிறத் தாவணியும், கறுப்பு நிறப் பாவாடையும் அணிந்துகொண்டு இருந்த அவளுக்கு அதிகபட்சம் 18 வயது இருக்கலாம். அவளுடைய அழகு ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து விடுபடாமல், ‘‘பாவாடை, தாவணியோடு பட்டாம்பூச்சி பிடிக்கிற பெண்ணை இன்னிக்குதான் பார்க்கிறேன்’’ என்றேன்.

‘‘வண்ணத்துப்பூச்சின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்றாள் அவள்.

‘‘பிடிச்சு என்ன செய்வீங்க?’’

‘‘சும்மா, கொஞ்ச நேரம் அதன் அழகை ரசிச்சிட்டு, அப்புறம் விட்டுடுவேன்.’’

‘‘நல்ல பழக்கம்!’’

‘‘நீங்க ஊருக்குப் புதுசா?’’

‘‘ஆமாம். போன வாரம்தான் வந்தோம். அப்பா போஸ்ட்மாஸ்டர். திடீர்னு இங்க டிரான்ஸ்ஃபராயிடுச்சு!’’

என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, ‘‘காலேஜ்ல படிக்கிறீங்களா?’’ என்றாள்.

‘‘இல்லை. படிச்சு முடிச்சுட்டேன். இங்கே சும்மா தனிமையில கதை புக் படிக்கலாம்னு வந்தேன்.’’

‘‘இது படிக்க அருமையான இடம். ஒரு ஈ, காக்கா கண்ணுல படாது.’’

‘‘இந்தக் கோயிலுக்கு ஜனங்களே வரமாட்டாங்களா?’’

‘‘பிரதோஷத்தன்னிக்கு சாயங்காலம் கொஞ்சம் கும்பல் இருக்கும். மத்த நாளெல்லாம் யாரும் வரமாட்டாங்க. கடவுளுக்கும், ஜனங்க வர்றதுக்கு அதிர்ஷ்டம் வேணும். திருநள்ளாறு, ஆலங்குடினு நவகிரக தலங்களுக்குதான் ஜனங்க கும்பல் கும்பலா போறாங்க.’’

‘‘ஆனா, அந்தக் கோயில்களைவிட, இது அழகான கோயில்!’’

‘‘ஆமாம்...’’ என்றபடி, நந்தி மண்டபத்தை நோக்கி நடந்தாள். நான் மௌனமாகப் பின் தொடர்ந்தேன்.

நந்தி மண்டபப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே, ‘‘நான் வரேன்’’ என்று விடைபெற்றுக்கொண்டாள். மண்டபத்தின் மேலேறி, நந்திக்கு அருகில் சென்றவுடன், ‘‘உங்க பேரு என்ன?’’ என்றேன். ‘ஸ்வர்ண சித்ரா’’ என்று சத்தமாகக் கூறிக்கொண்டே, சட்டென்று கையை உயர்த்தி அந்த வண்ணத்துப்பூச்சியைப் பறக்கவிட்டாள். அப்போது அவளுடைய மேல்நோக்கிய கண்களில், ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது.

முதன்முதலாக, என் மனதுக்குள் கவிதை போன்ற ஏதோ தோன்றியது.

‘பெண்ணே... நீ யார்? நிலாப்பெண், நீண்டநாள்
கருத்தரித்துப் பிறந்தவளோ?’

p58a.jpg மறுவாரம் சனிக்கிழமை... ஈஸ்வரனை வணங்கிவிட்டுப் பிறகு படிக்கலாம் என்று சுற்று மண்டபத்துக்குச் செல்லாமல், கோயிலினுள் நுழைந்தேன்.

இரண்டாவது வாசலைக் கடந்தவுடன், தட்சிணாமூர்த்தி சந்நிதி அருகில் ஸ்வர்ணசித்ராவைப் பார்த்தேன். மனதுக்குள் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.

நீல நிறப் பட்டுப் பாவாடையும், பட்டுச் சட்டையும் அணிந்துகொண்டு இருந்தாள். அவள் கையில் வைத்திருந்த தாம்பாளத்தில், ஏராளமான நெய் விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன. தாம்பாளத்திலிருந்து ஒரு விளக்கை எடுத்து தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்பு ஸ்வர்ணசித்ரா வைத்தபோது, எரிந்துகொண்டு இருந்த விளக்குகளின் வெளிச்சம் அவள் முகத்தில் பரவ... மேலும் அழகாகத் தோன்றினாள். மனசுக்குள் இன்னொரு கவிதை... ‘ஒளி ஒன்று, ஒளியை ஏற்றுகிறது!’.

‘‘ம்க்கும்...’’ என்று நான் தொண்டையைக் கனைக்க, ஸ்வர்ணசித்ரா நிமிர்ந்து பார்த்தாள். என்னை அடையாளம் கண்டு, புன்னகைத்தாள்.

‘‘கடுமையான வேண்டுதல் போல, தாம்பாளத்தில் ஏகப்பட்ட விளக்கு’’ என்றேன்.

‘‘ம்...’’

‘‘என்ன வேண்டுதல்? பாஸாகணும்னா?’’

‘‘இல்லை. படிப்பெல்லாம் முடிச்சு ரொம்ப நாளாச்சு. நான் ப்ளஸ் டூ ஃபெயில்.’’

‘‘வேறென்ன வேண்டுதல்?’’ என்று நான் கேட்டபோது, தூரத்தில் மூவர் சந்நிதியிலிருந்து, நாகஸ்வரம் ஒலிக்கும் ஓசை மெதுவாகக் கேட்க ஆரம்பித்தது.

இன்னொரு விளக்கை எடுத்து விநாயகர் சந்நிதி முன் வைத்தபடி... ‘‘போன டிசம்பர் மாசம் வெள்ளம் வந்துச்சுல்ல?’’

‘‘ஆமாம்...’’

‘‘அப்ப, பக்கத்து ஊர்ல எல்லாம் கரை உடைஞ்சு, ஆத்து வெள்ளம் ஊருக்குள்ள பூந்துடுச்சு. இங்கேயும் வெள்ளம் ஜாஸ்தி ஆகிட்டே இருந்துச்சு. கரை உடைஞ்சுதுன்னா, அறுவடைக்கு இருக்கிற பயிரெல்லாம் பாழாப் போயிடும்னு ஊரே கலங்கிப் போயிடுச்சு. விறுவிறுன்னு கரைல மணல் மூட்டையை அடுக்கினாங்க. தண்ணி மட்டம் கூடிக்கிட்டே இருந்துது. மணல் மூட்டைங்களும் தீர்ந்து போச்சு. சரி... கடவுள் விட்ட வழினு ஓய்ஞ்சு உட்கார்ந்துட்டாங்க. அப்ப நான் வேண்டிகிட்டேன்.’’

‘‘என்னன்னு?’’

‘‘கடவுளே... கரை உடைஞ்சுடாம காப்பாத்து! ஒவ்வொரு சந்நிதியிலும், நெய் விளக்கேத்துறேன்னு வேண்டிக்கிட்டேன். மழை குறைஞ்சு, கரை உடையல! அதான், வேண்டுதலை நிறைவேத்தறேன்.’’

‘‘உங்கப்பாவுக்கு வயக்காடு இருக்கா?’’

‘‘இல்ல. அவர் ஸ்கூல் டீச்சர்!’’ என்ற ஸ்வர்ண சித்ராவை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

‘‘உங்க மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருக்கிறதாலதான், இந்தத் தேசத்துல இன்னும் மழை பெய்யுது’’ என்று நான் கூற, அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள். சில விநாடிகள் கழித்து, தலையை நிமிர்த்தாமல் விழிகளை மட்டும் லேசாக உயர்த்தி, ‘‘தேங்க்ஸ்’’ என்றாள். அந்தக் கண்கள் என்னை மீண்டும் வீழ்த்தின.

‘‘சரி, நான் வரேன்’’ என்று நான் நகர, ‘‘ஒரு நிமிஷம்...’’ என்றாள் ஸ்வர்ணசித்ரா.

‘‘சொல்லுங்க’’ என்று நின்றேன்.

‘‘திடீர் திடீர்னு வந்து பேசிட்டுப் போறீங்க. உங்க பேரு?’’

‘‘பாபு.’’

‘‘தி.ஜானகிராமனோட ‘மோகமுள்’ கதாநாயகன் பேருகூட பாபுதான்!’’

‘‘என்னங்க... என்னை ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங் களா? அழகா, வண்ணத்துப்பூச்சி பிடிக்கிறீங்க, கரை உடைஞ்சுடக்கூடாதுன்னு வேண்டிக் கிறீங்க, தி.ஜானகிராமன் படிக்கிறீங்க...’’ என்று நான் சொல்ல, ஸ்வர்ணசித்ரா தன் உதடுகளை மெதுவாக விரித்து, அழகாகச் சிரித்தாள்.

‘‘ஒரு விஷயம் கவனிச்சீங்களா? ஒரே ஊர்ல இருக்கோம். ஊர்ல, வேற எங்கேயும் நாம சந்திக்கிறது இல்ல. மறுபடி மறுபடி கோயில்ல தான் சந்திக்கிறோம்’’ என்றாள்.

‘‘ஆமாம்’’ என்றேன். ‘கடவுள் எழுதிய கவிதையை, கடவுளின் சந்நிதானத்தில்தானே பார்க்க முடியும்!’ என்று மனதுக்குள் மீண்டும் ஒரு கவிதை!

எங்களுடைய அடுத்தடுத்த சந்திப்புகளும் கோயிலிலேயே நிகழ்ந்தன. தெப்பக்குளத்தின் பாசி படர்ந்த படிக்கட்டுகளில் காலை நனைத்தபடி, ‘‘என்ன படிச்சிருக்கீங்க?’’ என்று கேட்டாள்.

‘‘எம்.டெக்.,’’

‘‘ஐயோ... பெரிய படிப்பா இருக்கே? வேலைக்கு எதுவும் போகலையா?’’

‘‘கேம்பஸ் இன்டர்வ்யூல ஒரு வேலை கிடைச்சிருக்கு. ஆர்டருக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன். வந்ததும் சென்னைல ஜாயின் பண்ணணும்!’’

மூன்று மாத காலம் ஓடியதே தெரியவில்லை. ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும், ஸ்வர்ணசித்ராவின் மீதான எனது மதிப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. மனதுக்குள் மெலிதாக ஒரு காதல் அரும்பி, விஸ்வரூபமெடுத்துக்கொண்டு இருந்தது. சொல்லிவிடவேண்டும் என்று மனசு துடித்தது.

வேலைக்கான அப்பாயின்ட் மென்ட் ஆர்டர் கிடைத்து, ஒரு வாரத்துக்குள் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்கிற நிலையில், ஸ்வர்ணசித்ராவிடம் எனது காதலைச் சொல்லிவிடும் தவிப்போடு, சுற்று மண்டபத்தில் ஸ்வர்ணசித்ராவின் வருகைக்காக, ஆவலோடு காத்துக்கொண்டு இருந்தேன்.

என் தேவதை வந்தாள். ‘‘உங்களுக்கு வேலைக்கான ஆர்டர் வந்துடுச்சுன்னு போஸ்ட்மேன் சொன்னாரே, அப்படியா?’’ என்றாள்.

‘‘ஆமாம்.’’

‘‘இனிமே பார்க்க முடியாதா?’’ என்றபடி தூணில் சாய்ந்துகொண்டாள்.

‘‘நீ நினைச்சா தினம் பார்த்துட்டிருக் கலாம்’’ என்றேன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

‘‘எப்படி?’’ என்றாள்.

சட்டென்று வார்த்தைகள் வராமல் வெளியே பார்த்தேன். பிராகாரப் புல்வெளி, நந்தி மண்டபம், ராஜ கோபுரம் எல்லாம் அரையிருட்டில் அழகாகக் காட்சியளித்தன.

‘‘தன்னை மறந்தான்னு கதைகள்ல படிச்சிருக்கேன். அது எப்படின்னு முன்னாடியெல்லாம் தெரியாது. உன்கூடப் பழகிய பிறகுதான் அதை நான் உணர்ந்தேன். உன்கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு உலகமே மறந்துபோய், உன் கண்கள் மட்டும்தான் மனசுல இருக்கும். அந்தக் கண்களோட பார்வையிலேயே காலம் முழுசும் இருக்கணும்னு ஆசைப்படறேன். நேரடியாவே கேக்கறேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமா?’’ என்றேன்.

சட்டென்று ஸ்வர்ணசித்ராவின் கண்களில் ஒரு வெளிச்சம் பரவ, வெட்கத்துடன் என் மார்பில் தன் தலையைச் சாய்த்தாள். அதே நேரம்...

கோயில் வாசலிலிருந்து, ‘‘ஸ்வர்ணா’’ என்ற குரல் சத்தமாகக் கேட்டது. அடுத்த சில விநாடிகளில் தடதடவென்று எங்களை நெருங்கினார் ஸ்வர்ணாவின் அப்பா.

‘‘ஊர்ல தலை நிமிர்ந்து வாழ்ந்துட் டிருக்கேன். இப்படி என் மானத்தை வாங்கறியேடி!’’ என்றபடி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட... நிலைகுலைந்து போனாள் ஸ்வர்ணா. என்னை முறைத்துப் பார்த்தபடி, வேகமாக தன் மகள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார். அதன் பின், அவளைப் பார்க்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவிலை. ஒரு வார காலத்துக்குள் ஸ்வர்ணாவுக்கு வேறொரு இடத் தில் திருமணம் நிச்சயமானது. நான் காதல் தோல்வியில் துவண்டு... தாடி வைத்துக்கொண்டு...

ஸாரி ஃப்ரெண்ட்ஸ்... இப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை. எங்களைப் பார்த்த ஸ்வர்ணாவின் அப்பா, பதற்றப்படாமல் நான் யார் என்று விசாரித்து, என் குடும்பப் பின்னணி பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஒரு சுபயோக சுப முகூர்த்தத்தில் எங்கள் திருமணத்தை அவரே முன்னின்று நடத்தி வைத்தார். எல்லாக் காதல்களுமே தோற்றுப் போவதில்லை. ஒரு சில ஆசீர்வதிக் கப்படவும் செய்கின்றன!

கடவுள் எழுதிய கவிதைகள் கஷ்டப்படுவதில்லை.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.