Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் நகரம்

Featured Replies

தன் நகரம்

 

 

white_spacer.jpg
தன் நகரம் white_spacer.jpg
title_horline.jpg
 
இரா.முருகன்
white_spacer.jpg

p58c.jpg ‘‘இ ன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’

சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். படுக்கையை அசுத்தம் செய்திருந்தாள். இருட்டில் சூழ்ந்து நின்ற ஈரமும், சிறுநீருமாக வாடை மூக்கைக் குத்தியது. நாள் முழுக்கத் துர்வாடைக்கு நடுவே இருந்து பழகியிருந்ததால், அது பெரிதாகப்படவில்லை சாராவுக்கு. ஆனாலும், சுத்தம் செய்ய வேண்டிய இன்னொரு அறை.

சாராவுக்கு அலுப்பாக வந்தது. அம்மா மேல் பரிதாபமாகவும் இருந்தது. பழைய புரட்சிக்காரி. ஓய்ந்துபோன எழுத்துக்காரியும்கூட. நாடு விட்டு நாடு வந்து, சித்தம் தடுமாறிப் போனவள். அவள் வளர்த்த, அவளோடு வளர்ந்த கட்சியும் ஆட்சியும் ஒரு பகல் நேரத்தில் காணாமல் போயின. நாடு முழுக்க அந்தக் கட்சி உறுப்பினர்கள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். உயிர் இன்னும் மிச்சமிருந்தவர்கள் ஓடி ஒளிய வேண்டி வந்தது. சாரா அம்மாவைக் கூட்டிக்கொண்டு இங்கிலாந்துக்கு வந்தது அகதி யாகத்தான்!

ஓடி வரும்போது, பல்கலைக் கழகத்தில் பாதி முடித்திருந்த படிப்புச் சான்றிதழை வாங்கி வர முடியாது போனதால், சாரா இப்போது லண்டன் ஓட்டல்களில் கழிவறைகளைச் சுத்தம் செய்துகொண்டு இருக்கிறாள். செங்கல் சூளை சந்துப் பிரதேசத் துக்கு அடுத்த ஒற்றை அறையில் குளிரும், அரை இருட்டும், தண்ணீர் கசியும் சுவருமாக வாழப் பழகிவிட்டாள். அம்மா படுத்தபடிக்கே நனைக்க, துவைத்துப் போட வேண்டிய விரிப்புகளின் ஈரமும் வாடை யும்கூடப் பழகிவிட்டது.

இங்கிலாந்துக்குக் கிளம்புவதற்கு முன்பே அம்மாவின் மனநிலை சிதைய ஆரம்பித்திருந்தது. வேரோடு கெல்லி எறியப்பட்டதும், அவளுடைய உலகம் அவள் மனதில் மட்டுமாகச் சுருங்கிக் குழம்பிப் போனது. லண்டன் அகதி முகாமில் குடியேற்ற உரிமைக்காக மௌனமாக வரிசையில் காத்திருந்தபோது, முகாம் அதிகாரியான வெள்ளைக்காரன் கேட்டான்... “இந்தக் கிழவி படிச்சிருக்காளா?”

தடுமாறும் ஆங்கிலத்தில், ‘இது என் அம்மா. பெரிய எழுத்தாளர்’ என்றாள் சாரா. அவனுக்கு என்ன போச்சு? எத்தனையோ கிழக்கு ஐரோப்பிய நாடுகள். பிழைப்புக்காக அங்கேயிருந்து பிரிட்டனுக்கு ஓடி வரும் பெருங்கூட்டத்தில் இந்த அழகான பெண்ணும், அந்தக் கிழவியும் வெறும் இரண்டு பேர். அம்மா நிதானமாகச் சுவரை வெறித்தாள். அவன் அழுக்கு ஜீன்ஸில் நின்ற சாராவை ஏற இறங்கப் பார்த்தான்.

“இப்போதைக்கு ஆறு மாசம் தாற்காலிக அனுமதி. மீதியை அப்புறம் பார்க்கலாம். சரி, ராத்திரி மில்னே பார் பக்கம் வாயேன். எல்லாத்தைப் பத்தியும் விளக்கமாச் சொல்றேன்...” என்ற அந்தக் கிழட்டு வெள்ளைக்காரன், சாராவின் டி-ஷர்ட் மத்தியில் விரலைக் காட்டி, “இதுக்கு உங்க நாட்டுலே என்ன பேர்?” என்று கேட்டான். கோபத்தை அடக்கிக்கொண்டு “டி-ஷர்ட்னுதான் சொல்றது” என்றாள்.

பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி வாங்கிக்கொண்டு வெளியே போகும்போது, அம்மா சொன்னாள்... “போன வாரம் நம்ம வீட்டு வாசல்ல கண்ணாடி போட்ட ரெண்டு பசுமாடு சிகரெட் குடிச்சபடி ஷைக்கோவ்ஸ்கி சிம்பொனி பத்திப் பேசினதை உன்கிட்டே சொன்னேனா? கழிவறைப் பீங்கானில் தேநீர் குடிக்கிற ஓவியமாக்கும்! மாஸ்கோ இசைக் குழு வரைஞ்சபோது, உங்க அப்பாதான் கல்யாண உடுப்போடு பியானோ வாசிச் சார். அவர் நரகத்துக்குப் போயிட்டார் கையெல்லாம் சிவப்புச் சாயத்தோட.!”

நாட்டைவிட்டு வந்த பிறகு அம்மா இத்தனை நேரம் தொடந்து பேசியது அப்போதுதான். வார்த்தைகள். வாக்கியங்கள். எதிலும் தவறு இல்லை. ஆனால், எந்த அர்த்தமும் இல்லாமல் பேச்சுக் குழம்பி இருந் ததை சாரா கவலையோடு கவனித்த போது, ‘மில்னே பார், தெருக்கோடி, ஸ்கர்ட் போட்டுட்டு வா!’ எனப் பின்னால் அகதி முகாம் அதிகாரி குரல் துரத்தியது. “இவன் மேசை மேலே ஏறி, ஃப்யூஸ் ஆன பல்ப் வழியா சொர்க்கத்துக்குப் போவான். நகக் கண்ணுலே நரகல் வழிய வழிய, நீல நிறத்துலே பியர் குடிப்பான் அங்கே!’’ - அம்மா சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள் அப்போது.

சாரா விளக்கு சுவிட்சைப் போட்டபோது, அம்மா திரும்பவும் மீசைக்காரனைப் பற்றிப் பேசிய படியே படுக்கையைக் காட்டினாள். ‘‘சட்டமா உள்ளே வந்து படுக்கையை நனைச்சுட்டுப் போய்ட்டான் அவன். நாளைக்கு ரேஷன்லே மூணு மாசம் நீடிப்பும், நாலு கிலோ மீட்டர் துணியும் கிடைக்கும்னு சொல்லிட்டுப் போனான்.”

ரேஷன். இங்கே இல்லாத சமாசாரம். அவள் நாட்டிலிருந்தும் எப்போதோ விடைபெற்றுப் போய்விட்டது. சாராவின் அப்பா ரேஷன் அதிகாரியாக இருந்தவர். அம்மாவைக் கல்யாணம் செய்துகொண்டபோது, அவரும் கட்சியில் இருந்தாராம். சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பதக்கம் என்று அவர் இறந்ததும் சர்க்கார் கொடுத்ததை அம்மா ரொம்ப நாள் பத்திரமாக வைத் திருந்தாள். ஆட்சி மாறி, குடும்ப பென்ஷன் எல்லாம் நின்றுபோன பிறகு, அதை விற்று ஒரு வாரம் கோதுமை வாங்கிச் சாப்பிட வேண்டி வந்தது. சாரா பகலில் கல்லூரிக்குப் போனபடி, ராத்திரியில் மதுக் கடையில் வேலைக்குப் போனதும் அப்போதுதான்! கல்யாண உடை தைக்கிற கடை என்று அம்மாவிடம் சொல்லியிருந்தாள். ஆட்சி மாறாமல் இருந்தால், சாரா பொய் சொல்லியிருக்க மாட்டாள். படித்து முடித்துக் கல்லூரியிலேயே வேலைக்குப் போயிருப்பாள். உடை தைக்கிற கடையில் கல்யாண உடுப்பு வாங்கியிருப்பாள். நிச்சயித்திருந்தபடி மேத்யூவைக் கல்யா ணம் செய்திருப்பாள். கண்ட கிழவனும் அவள் மார்பைப் பற்றி கேட்க மாட்டான். மதுக் கடைக்கு குட்டைப் பாவாடையில் வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்க மாட் டான்.

அவளைத் தேடி அந்த அகதி முகாம் கிழவன்தான் வந்திருப்பானோ? இரண்டு, மூன்று தடவை தெருவில் பார்த்து நாய் போல் பின்தொடர்ந்தபோது, தப்பித்தாகிவிட்டது. விலாசம் தெரிந்திருக்கும். காசு சேர்த்துப் போன மாதம் அவள் வாங்கிய மொபைல் தொலைபேசி எண்ணும்கூட! அரசாங்க கம்ப் யூட்டரில் எல்லாமே பதிந் திருக்கும்.

அம்மாவின் தலையைச் சுவரோடு அழுத்திப் பிடித்தபடி அவளுடைய நனைந்த உடுப்புக்களை சாரா கழற்றியபோது, அம்மா சிரிக்க ஆரம்பித்திருந்தாள். படுக்கை ஈரம் தொடாத இடத்தில் வைத்த மொபைல் தொலைபேசி சிணுங்கியது. ‘‘மீசைக்காரனா இருக்கும். வெங்காயச் சாகுபடி பற்றி ரேஷன் கடையிலே கவிதை வாசிக்கக் கூப்பிடறான். சோயா மொச்சையும் நகச் சாயமும் உங்க அப்பாவுக்குத் தரப் போறாங்களாம். உள்ளே உடுத்த உலர்ந்த துணி இல்லாம ஊர்வலத்திலே எப்படிப் பஸ்ஸைத் தள்ளிக்கிட்டுப் பாட முடியும்?’’ -அம்மா குறைபட்டுக்கொண்டாள்.

தொலைபேசியில் யாரோ செய்தி அனுப்பியிருக்கிறார்கள். சாரா பயந்தது போல், அவள் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து கூப்பிடவில்லை. ‘இன்னொரு ஓட்டலில் வேலைக் குப் போக வேண்டிய பெண் வரவில்லை. நீ போக முடியுமா? ஓவர் டைம் தருகிறோம்’ என்று ஆரம்பித்து, போகாவிட்டால் அடுத்த மாதம் வேலையிலிருந்து நீக்குவது பற்றிய எச்சரிக்கையில் முடியும் அழைப்பு அதெல்லாம். இது அது இல்லை.

வேலை? ஓட்டலில் அறை அறையாகப் போய் கலைந்து கிடக்கும் கட்டில் துணிகளைச் சீராக விரிக்க வேண்டும். கட்டில் அடியில் ஆணுறை கிடந்தால், அசிங் கப்படாமல் எடுத்து, குப்பைக் கூடையில் போட வேண்டும். மது நாற்றமும், வாந்தியோடு படுத்த அடையாளமுமாக ஈர வட்டத்தோடு கிடக்கும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும். அப்புறம் கழிவறைகள். மனிதக் கழிவு உலர்ந்தும், தரையில் அசுத்தம் சிந்தியும் கிடக்கும் அந்த நரகக் குழிகள் ஒவ்வொன்றையும் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்டது ஐந்து நிமிடங்கள்தான். கடைசியாக தேநீர்க் குவளைகளைச் சோப்புத் தண்ணீரால் அலம்பி, குப்பையை வாரியெடுத்து வெளியில் வைத்துவிட்டு, அடுத்த அறைக்கு ஓட வேண்டும்.

முந்தா நாள் அவள் வேலை முடித்த அறையில் இருந்து சூப்பர்வைசர் கூச்சல் கேட்டது. சாரா “மேடம்” என்றபடி ஓடினாள். மேடம் அவளைக் கழிவறைக்குதான் கூட்டிப் போனாள். வாஷ்பேசினைக் காட்டி, “அதை எடு” என்றாள். உத்தரவுப்படி குனிந்து கையால் எடுத்தாள் சாரா. ஒற்றை இழையாகத் தலைமுடி. “என்ன வேலை பார்க்கிறே? சரியாக் கழுவத் துப்பில்லே. தினக் கூலியிலே ரெண்டு பவுண்ட் இன்னிக்கு கட்!”

ஒவ்வொரு பவுண்ட் வருமானமும் வேண்டியிருக்கிறது. வாஷ்பேசினில் பிடிவாதமாக ஒட்டியிருக்கிற தலைமுடியோ, கழிப்பறை பீங்கானில் நரகல் துணுக்கோ அதைத் தட்டிப் பறித்துவிட்டால், குடியிருப்புக் கூலி கொடுக்க முடியாது. வேலைக்குப் போகும்போது உடுத்த என்று வைத்திருக்கும் இரண்டு உடுப்பையும், அம்மாவின் நனைந்த பாவாடைகளையும் சுத்தம் செய்ய சோப்புக்கட்டி வாங்க முடியாது. நிறையத் தலைமுடி இழைகள் ஒன்று சேர்ந்தால் சாப்பாடுகூட இல்லையென்று ஆகிவிடலாம்.

தொலைபேசிச் செய்தியைப் படித்தாள் சாரா. நிக்கோலா அனுப்பியிருந்தாள். முக்கியமான விஷயமாம். பொதுத் தொலைபேசியிலிருந்து பிறகு கூப்பிடுகிறாளாம்.

நிக்கோலாவும் அகதியாக இங்கே வந்தவள்தான். முகாமில் பழக்கமானவள். சரளமாக ஆங்கிலம் பேசினாள். நாடக நடிகை. அம்மாவைத் தெரியுமாம். அவள் எழுதிய நாடகத்தில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு அலைகிற, சபிக்கப்பட்ட தேவதையாக நடித்திருக்கிறாளாம். அம்மா பாராட்டி னாளாம். அம்மாவுக்கு எதுவும் நினை வில்லை.

மேத்யூ கூட நிக்கோலாவின் ஊர்தான். பழக்கமான குடும்பமும்கூட. “நீலக் கண் அழகியைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்னு சொன்னானே அந்தத் தடியன், நீதானா அது?” நிக்கோலா சிரித்தபடி கேட்டபோது, சாரா நாலு நாள் குளிக்காத கோலத்தில் இருந்தாள். ஆனால், ஓட்டல் சுத்தப்படுத்தி, நகக் கண்ணில் அழுக்கோடு இல்லை. நகத்தில் பவளச் சாயமும் கண்ணில் நீலமும் பாக்கி இருந்த நேரம் அது.

அகதி முகாம் கிழவன், நிக்கோலாவையும் மதுக்கடைக்கு வரச்சொல்லி யிருந்தான். குட்டைப் பாவாடையில் அவள் போயிருந்தாள். சிவப்பு ஒயின் வாங்கிக் கொடுத்து நெருங்கிப் பழகத் தொடங்கியவன் விரலெல்லாம் ரத்தம் வழிய அலறியபடி வெளியே ஓடியபோது, நிக்கோலா மிச்சம் ஒயினை நிதானமாகக் குடித்துக் கொண்டு இருந்ததாக சாராவிடம் அப்புறம் சொன்னாள். சவர பிளேடைக் காலுக்கு நடுவே வைத்துப் போகிற தற்காப்பு வழிமுறை, அகதியாக வருவதற்கு முன்பே அவளுக்குத் தெரிந்த ஒன்று. ‘‘கால் மேல் ஊர முற்படும் கைகளுக்கு நாட்டு வித்தியாசம் கிடையாது’’ என்றாள் அவள்.

“குளிருது” - அம்மா பரிதாபமாக விழித்தபடி சொன்னாள். சாரா அவசரமாக அவளுக்கு உடை அணிவித்தாள். படுக்கை விரிப்பை மாற்றி, நனைந்ததை எல்லாம் குளியலறைக்குத் துவைக்க எடுத்துப் போகும் போது, அம்மா பாட ஆரம்பித் திருந்தாள். கட்சி ஊழியர்களை ஊர்வலமாக அணிவகுத்து நடக்கச் சொல்லி உற்சாகப் படுத்தும் பாட்டு. மேத்யூவுக்குப் பிடித்தது இந்த மெட்டு. கிதாரில் இதைச் சரளமாக வாசிப்பான். என்ன செய்துகொண்டு இருப்பான் இப்போது மேத்யூ? இருக்கிறானா?

இருப்பான். எப்போதும் போல் கல்லூரி நூலகத்தில் புத்தகம் அடுக்கிக்கொண்டு, புதுப் புத்தகங்களுக்கு எண் எழுதிய அட்டைகளை மர அலமாரியில் செருகிக்கொண்டு இன்னும் அங்கேதான் இருப்பான். நீலக் கண் பெண்கள் புத்தகம் கேட்டு வரும்போது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அலமாரிக்குப் பின்னே வைத்து முத்தம் கொடுப்பான். அணைத்தபடி, பவள நிறத்தில் சாயம் பூசிய விரல் நகத்தால் பின் கழுத்தில் மெள்ள வருடும் போது சிலிர்ப்பான். டி-ஷர்ட் பரிசளிப்பான். பிக்னிக் வரச் சொல்வான். டி-ஷர்ட்டை அவசரமாக அவிழ்ப்பான். உடல் முழுக்கக் கை பரவும். படுக்கையைப் பகிர்ந்துகொள்வான். பெரிய ஓட்டல் அறை. உலர்ந்த விரிப்பு கொண்ட படுக்கை. அங்கே சுத்தமான வாஷ்பேசினும் கழிப்பறையும் இருக்கும். ஆணுறையை ஞாபகமாகக் குப்பைக் கூடையில் போடுவான். மேத்யூவுக்கு அசுத்தம் பிடிக்காது.

ரொட்டியையும் மாமிசத்தையும் சூடு செய்து அம்மாவுக்கு ஊட்டிவிட்டாள் சாரா. நிக்கோலா என்ன பேசக் கூப்பிட்டிருப்பாள்? போன வாரம், அவளுக்கு வாய்ப்புக் கிடைத்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டாள். குரலை மட்டும் விற்கிற சந்தர்ப்பம். நூறு பவுண்ட் வருமானம். நிகழ் கலை சிற்பி ஒருத்தருக்காகப் பேசும் கழிப்பறையாகக் குரல் கொடுக்க வேண்டி வந்ததாம். யாராவது உட்கார்ந் ததும், ‘உங்கள் அற்புதமான பின்புறம் என் மேல் ஆரோகணித்து இருப்பது எத்தனை சுகமாக இருக்கிறது’ என்று கவர்ச்சியாகச் சிணுங் கும் கழிப்பறைப் பீங்கான். “என் குரலைத் தாராளமா அசுத்தம் செய்யுங்க. காசு கொடுக்கறதை மட்டும் குறைச்சுடாதீங்க” என்றாளாம் நிக்கோலா.

“தூக்கம் வருது. அடுப்புக்குள்ளே கல்யாண உடுப்பு வெச்சிருக்கேன். குளிச்சுட்டு உடுத்திக்கோ! விடிஞ்சதும் மீன் கடையிலே கல்யாணம்!” அம்மா நாற்காலியிலேயே தூங்க ஆரம்பித்தாள். அவளைக் குழந்தை போல் தூக்கிப்போய்ப் படுக்கையில் விடும்போது மொபைல் மறுபடி சிணுங்கியது. நிக்கோலாதான்.

“ஊருக்குப் போகணும்” என்றாள் நிக்கோலா எந்த உணர்ச்சியும் இல்லாமல். “ஏன், அலுத்துப்போச்சா லண்டன் அதுக்குள்ளேயும்?” சாரா விசாரித்தாள்.

“இங்கே இனி இருக்கவோ, குடியேற்றத்துக்கோ அனுமதி கிடை யாதுன்னு கவர்மென்ட் கடிதம் வந்திருக்கு. உள்ளாடையிலே சவர பிளேடு செருகிக்காம, இல்லே... உள்ளாடையே இல்லாம கிழவனோடு போய் உட்கார்ந்தா, தொடர்ந்து இருக்க முடிஞ்சிருக்குமோ என்னமோ”- நிக்கோலா உறங்காத தேவதைக் குரலில் சிரித்தாள்.

“மேத்யூவைப் பார்த்தா என்ன சொல்ல?”-அவள் ஏனோ ஆங்கிலத்தில் கேட்டாள்.

‘‘போன வாரம் கழிப்பறை கழுவும்போது யாரோட முடியோ வாஷ்பேசின்லே இருந்து சம்பளத்தைப் பறிச்சுக்கிட்டதுன்னு சொல்லு. அம்மாவைப் பார்க்க இன்னிக்கு மத்தியானம் கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்னு சொல்லு. அவ எனக்காக கல்யாண உடுப்பு வாங்கி அடுப்பிலே பத்திரமா வெச்சிருக்கான்னு சொல்லு.’’

அம்மா படுக்கையிலிருந்து முனகும் குரல். சாரா தொலைபேசியைக் காதோரம் அணைத்தபடி அருகே போனாள். “மதியம் வந்தவன் ஸ்கர்ட்லே சுற்றி கல்யாண கேக் கொண்டு வந்தான்!” அம்மா ஜன்னல் பக்கம் இருந்து எதையோ எடுத்து நீட்டினாள்.

குடியேற்ற உரிமை அளிக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் என்று முத்திரையிலேயே தெரிந்தது. மனம் படபடத்தது. இங்கே இந்தக் கழிப்பறை நகரத்தில் இருக்கலாமா, அல்லது தன் நரகத்துக்கே திரும்ப வேண்டியிருக்குமா? போனால் அம்மா உயிருக்கு என்ன விலை தர வேண்டி வரும்? இருக்க வேண்டுமென்றால்? மதுக் கடைக்குக் கிழவனோடு போக வேண்டி வரலாம். உலராத உள்ளாடையோடு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தால், கை நகம் ஏன் அழுக்காக இருக்கிறது என்று கேட்பான். அது நரகல் என்று பதில் சொல்வாள்.

உறையைப் பிரிப்பதைத் தள்ளிப் போட்டாள் சாரா. ஒரு விநாடி சுவாசம். “அப்புறம் சொல்லு, நிக்கோலா!” - மொபைலைச் செல்லமாகக் காதோடு அணைத்தபடி கை விரல் நகங்களைப் பார்த்துக்கொண்டாள். நாளைக்கு அவை சுத்தமாக இருக்கும்!

 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.