Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகேலுவின் கதை

Featured Replies

எகேலுவின் கதை - சிறுகதை

 

p26a_1534850357.jpg

ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம்.

p26b_1534850301.jpg

ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படாமல், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட குட்டி நாடு. ஃபிரெடரிக்கின் மனைவி அமெரிக்கக்காரி, பெயர் மார்த்தா. சோமாலிலாண்டில் குடிவகை தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஃபிரெடரிக் ரகசியமாக வீட்டிலேயே சோளத்திலிருந்து பீர் தயாரித்து இரவு நேரத்தில் அருந்துவார். ஒரு வருடமாக வாழ்க்கை நிம்மதியாகப் போனது. ஒருநாள் போலீஸ் எப்படியோ இதைக் கண்டுபிடித்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

ஃபிரெடரிக் தம்பதியின் வேலைக்காரி, அதிகாலை சந்தைக்குப் போனவள் அலறிக்கொண்டு திரும்பி வந்தாள். அழுதபடியே மார்த்தாவிடம் ஏதோ சொன்னாள். மார்த்தாவும் அவளுடன் சந்தைக்கு ஓடினாள். அங்கே வழக்கத்திலும் பார்க்க ஜனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. 100, 200 பேர் சுற்றிவர நின்றார்கள். மார்த்தா இடித்து முன்னேறி எட்டிப்பார்த்தார். அவர் இதயத்தை யாரோ பிய்த்துப் போட்டதுபோல இருந்தது. சாக்குத்துணியில் சுற்றி அப்போதுதான் பிறந்த சிசு ஒன்று வீதியிலே வீசப்பட்டிருந்தது. எறும்புகளும் ஈக்களும் மொய்த்தன. கண்கள் மூடியிருந்தாலும் குழந்தை முனகும் சத்தம் கேட்டது. மூன்று குட்டி விரல்கள் வெளியே நீட்டி இருந்தன. பார்ப்பவர்கள் மனதை உருக்கும் காட்சி அது. ஊர்த்தலைவர் கட்டளையிட்டிருந்த படியால், ஒருவராலும் சிசுவை அணுக முடியவில்லை.p26c_1534850378.jpg

மார்த்தாவிடம் டெலிபோன் வசதி கிடையாது. ரேடியோவில் கணவரைத் தொடர்புகொண்டார். நீண்ட தாடி இருந்ததால் ஊர்த் தலைவருக்கு அவரிடம் மரியாதை இருந்தது. ஆனால், சிசுவை ஒருவரும் தொடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஃபிரெடரிக்கின் மேலதிகாரிகள் ஜெனீவாவைத் தொடர்புகொண்டு, அவர்கள் மூலம் அரசாட்சியில் இருந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ரோட்டில் கிடந்த குழந்தையை மார்த்தா மீட்டபோது பின்மதியம் 3 மணி. ஊர்த்தலைவரும் மக்களும் அவரை வெறுப்புடன் பார்த்தார்கள். வீடு வரை தொடர்ந்து மிரட்டினார்கள். அவர் பொருட்படுத்தவில்லை; பயந்ததாகக் காட்டிக்கொள்ளவுமில்லை. வீடு வந்த பிறகுதான் குழந்தை ஆண் என்பதைக் கண்டுபிடித்தார். ‘எகேலு’ என்று பெயர் சூட்டினார். ஹாவாய் மொழியில் அதன் பொருள் மூன்று. கணவர் கேட்டதற்குச் சொன்னார், ``இன்று தேதி மூன்று. நேரமும் மூன்று. குழந்தை மூன்று விரல்களைக் காட்டி என்னை அழைத்தது.’’

குழந்தையின் சுவாசப்பை மெள்ள மெள்ள மூச்சுவிட தானாகவே கற்றுக்கொண்டது. எகேலு திடீரென விக்கி, ஒரு கணம் விழித்தான். அந்தக் கணத்தில் மார்த்தாவுக்கு அந்த விழிகள் நன்றி சொன்னதுபோலப் பட்டது. ஆரம்பத்தில் இருந்தே எகேலு வித்தியாசமானவன் என்ற நினைப்பு மார்த்தாவுக்கு இருந்தது. அவன் சிரிப்பது கிடையாது. பசிக்கு அழுவதும் இல்லை. பலவந்தமாகப் பாலை ஊட்டினால்தான் உண்டு. அவன் பார்வை, எதையும் பார்க்காத பார்வை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல இருக்கும். நடுச்சாமத்தில் சிலவேளை மார்த்தா விழித்துக்கொண்டு குழந்தையைப் பார்ப்பார். அது தூங்காமல் நெடுநேரம் கிடக்கும். அந்தக் கண்கள் எங்கோ தூரத்தில் நிலைத்திருக்கும்.

p26d_1534850412.jpg

தவழத் தொடங்கியதும் குழந்தை வீடு முழுக்க நகர்ந்து ஆராய்ந்தது. ஃபிரெடரிக்கிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன. எகேலு, புத்தகங்களை ஒவ்வொன்றாக இழுத்துப் பார்ப்பான். கிழிக்காமல், கசக்காமல் பக்குவமாக ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத் தேவையேயில்லை. ஒரு புத்தகத்தைக் கொடுத்தால் போதும். அதனுடனேயே அன்று முழுவதும் கழிப்பான்.

ஒன்றரை வயது வரை அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியது கிடையாது. சோமாலிலாண்டின் தலைநகரமான ஹர்கீசாவுக்குச் சென்று அங்கே அவனை மருத்துவரிடம் காட்டலாமா எனக் கணவனும் மனைவியும் ஆலோசித்தார்கள். ஆனால், அதற்கு அவசியம் இருக்கவில்லை. ஒருநாள் இரவு, வழக்கம்போல மூவரும் மேசையில் அமர்ந்து உணவருந்தினார்கள். உயரமான நாற்காலியில் உட்கார்ந்த எகேலு, கரண்டியால் உணவை எடுத்து வாயில் வைத்தான். அவன் கண்கள் மட்டும் எங்கோ தூரத்தில் சஞ்சரித்தன. ஃபிரெடரிக் நெஞ்சுவரை வளர்ந்துவிட்ட தாடியைத் தன் மேல் சட்டைக்குள் நுழைத்துவிட்டு, மாட்டிறைச்சியை வெட்டி வாயில் வைத்தார். பிறகு வாழைப்பழத்தைக் கடித்துக்கொண்டு மேசையில் தாளம்போட்டு மகனுக்கு விளையாட்டு காட்டினார். ``நிறுத்து. நான் சிந்திக்கிறேன் அல்லவா?’’ என்று சுத்தமான ஜேர்மன் மொழியில் எகேலு வாயைத் திறந்து பேசினான். ஃபிரெடரிக்கின் கை அரை அடி உயரத்தில் மேசைக்குமேல் அப்படியே நின்றது. மார்த்தா, தன்  வாயில் வைத்த உணவை விழுங்கவில்லை. ``என்ன சொன்னாய் மகனே?’’ என்று அதிர்ச்சி நீங்காமல் ஃபிரெடரிக் கேட்டார். மறுபடியும் எகேலு அதையே சொன்னான்.

அன்று மார்த்தாவும் ஃபிரெடரிக்கும் நீண்ட நேரம் எகேலு பற்றி விவாதித்தார்கள். மேற்கொண்டு என்ன செய்வது என்று மட்டும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த நாளில் ஜேர்மன் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் அவன் தடங்கல் இல்லாமல் பேசுவது தெரியவந்தது. மற்ற குழந்தைகள்போல வார்த்தை வார்த்தையாக அவன் பேசவில்லை. வசனங்களை இலக்கணச் சுத்தமாக அமைத்து நிதானமாகப் பேசினான். இவன் அபூர்வமான குழந்தை என்று உணர்ந்தபிறகு, ஃபிரெடரிக் இன்னும் அதிக கவனம் எடுத்தார். எழுத்துகளையும் அவற்றின் உச்சரிப்பையும் சொல்லிக்கொடுத்தபோது முதல் தடவையாக எகேலுவின் முகத்தில் மகிழ்ச்சி விளையாடியது. புத்தகப் பக்கங்களை சும்மா திருப்புவதுபோய், எழுத்துக்கூட்டித் தானாகவே அவற்றைப் படிக்க ஆரம்பித்தான்.

p26e_1534850436.jpgஅவனுக்குப் பேச்சு வந்தாலும் அவன் தொடர்ந்து பேசுவது கிடையாது. நீண்ட மௌனம்தான். இன்னது செய்வான், இன்னது செய்ய மாட்டான் என்றும் சொல்ல முடியாது. தினம் தினம் ஆச்சர்யப்படுத்தினான். ஒருநாள் மதியம் அகாசியா மரத்தின் கீழ் நின்றபோது ``அம்மா’’ என்றான். மார்த்தாவுக்கு திக்கென்றது. ``புறப்படு. மழையைப் பார்க்கப் போவோம்.’’ ``மழையா, அது என்ன?’’ என்றார் மார்த்தா.

``அதற்கு, உருவம் கிடையாது; நிறம் கிடையாது; எல்லை கிடையாது; திசை கிடையாது. தொடலாம். ஆனால், பிடிக்க முடியாது. மிருதுவானதும் அழகானதும். ஆகாயத்தின் மணம் அதில் இருக்கும்.’’ ``அப்படியா?’’ என்றார் மார்த்தா. அவரால் வேறு பதில் தயாரிக்க முடியவில்லை.

இன்னொரு நாள் ``அம்மா’’ என்றான். மார்த்தா அதிர்ச்சியை ஏற்பதற்குத் தயாராக முகத்தை மாற்றிக்கொண்டு நின்றார். ``ஒருமுறை நீ எனக்கு சூடான பால் தந்தாய். எனக்கு வாய் வெந்துவிட்டது. நான் கதறிக் கதறி அழுதேன்’’ என்றான்.

``ஆமாம். தவறுதலாய்ச் செய்துவிட்டேன். உனக்கு அப்போது மூன்று மாதம். எப்படித் தெரியும்?’’ என்றார். ``எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனால், அப்போது என்னால் பேச முடியவில்லை. நீ பாலைப் புகட்ட வரும்போது நான் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டுவது அதனால்தான். எங்கே சூடான பாலைத் தந்துவிடுவாயோ என்ற பயம்தான்.’’ ``மன்னித்துவிடு எகேலு’’ என்றாள் மார்த்தா. அவன் பார்வை, பல மைல்கள் தூரத்துக்குப் போய்விட்டது.

ஒருநாள் எகேலுவை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். அவர் சோதனைகள் செய்து முடித்த பிறகு கூறினார், ``இவன் அபூர்வமான குழந்தை மேதை. அதுதான் இவன் மனம் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையின் வசம் இருக்கிறது. அதைக் கெடுக்கும்விதமாக ஏதாவது செய்யவேண்டாம். நீங்கள் ஒன்றுமே கற்பிக்கத் தேவையில்லை. அவனாகவே கற்றுக்கொள்வான். வசதிகளை மட்டும் செய்துகொடுங்கள். இசைமேதை மோஸார்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அந்தக் காலத்தில் பிரபல இசை மேதையாக இருந்தவர் பெயர் கிரிகோரியோ. அவர் அபூர்வமான இசைக்கோவை ஒன்று தயாரித்து அதை போப்பாண்டவர் முன்னிலையில் இசைத்துக்காட்டினார். அந்தக் கூட்டத்தில் சிறுவன் மோஸார்ட்டும் இருந்தான். அன்று வீட்டுக்குத் திரும்பிய மோஸார்ட்டால் இரவு தூங்கவே முடியவில்லை. அவன் கேட்ட இசை காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த இசையின் குறிப்புகளை ஞாபகத்திலிருந்து அப்படியே மீட்டு இரவிரவாக எழுதினான். காலை ஆனபோது அந்த அற்புதமான இசைக்கோவை முழுவதையும் திரும்பவும் படைத்துவிட்டான். உங்கள் மகனும் பெரிய மேதை. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவன் வழியிலேயே விடுங்கள்’’ என்றார்.

ஒவ்வொரு நாளையும் எகேலு புதிய நாளாக மாற்றினான். ஒரு விடுமுறை நாள் வீட்டுத் தோட்டத்தில் உட்கார்ந்து மூவரும் வேடிக்கை பார்த்தார்கள். பெற்றோரின் சம்பாஷணையில் அவன் கலந்துகொள்வதில்லை. வழக்கம்போல புத்தகம் ஒன்றின் பக்கங்களைத் திருப்பியபடி இருந்தான். வீட்டிலே உள்ள புத்தகங்கள் முடிந்துவிட்டதால், வெளிநாட்டிலிருந்து நூல்களை வரவழைத்துக் கொடுத்தார் ஃபிரெடரிக். எதைப் படித்தாலும் அதை அவன் மறப்பதில்லை. இன்ன புத்தகம் வேண்டும் என்று அவன் கேட்பதுமில்லை. அன்றும் அப்படித்தான் ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் வைத்து, பக்கம் பக்கமாகப் புரட்டிக்கொண்டிருந்தான்.

மஃரிப் தொழுகைக்கான அழைப்பு, காற்றில் வந்தது. ஓர் அம்பு எய்தால் அது விழும் இடம் தெரியவேண்டும். அதுதான் மஃரிப் தொழுகைக்கான நேரம். பகல் முடியவில்லை, இரவு தொடங்கவில்லை. பிரமாண்டமான பறவை ஒன்று சத்தமிட்டபடி மேலே பறந்துபோனது. எகேலு ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு ``அது கோரிபஸ்டார்ட் பறவை. எங்கேயோ பக்கத்தில் நிலத்திலே குழிபறித்து முட்டை இடப்போகிறது. உலகிலேயே அதிக எடைகொண்ட பறவை இதுதான்’’ என்றான். இத்தனைக்கும் அவன் அந்தப் பறவையை இதற்கு முன்னர் கண்டது கிடையாது. எல்லாம் எங்கேயோ புத்தகத்தில் படித்தவைதான்.

அடுத்து நடந்த சம்பவத்துக்குப் பிறகுதான் நைரோபிக்கு மாற்றல் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தம்பதிக்குத் தோன்றியது. வருமானவரிக் கணக்கு சம்பந்தமாக ஃபிரெடரிக் ஏதோ எழுதியவர் பாதியில் மார்த்தாவை அழைத்து ``எங்கள் கூட்டு வருமானத்தில் 23 சதவிகிதம் எவ்வளவு?’’ என்று கேட்டார். மார்த்தா கேல்குலேட்டரைத் தேடியபோது ஏதோ சிந்தனையிலிருந்து விடுபட்ட எகேலு, சரியான விடையைச் சொன்னான். அவனுக்கு 1, 2, 3 என எண்களை யாரும் கற்றுக்கொடுத்தது கிடையாது. தானாகவே எங்கேயோ படித்து, கணித அறிவை வளர்த்திருந்தான். ‘எப்படித் தெரியும்?’ என்றெல்லாம் கேட்க முடியாது. ‘எப்படியோ தெரியும்’ என்றுதான் பதில் வரும்.

அவர்கள் மாற்றல் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ‘ஒரு மாதம் முன்னர் நைரோபியில் அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர். சில அமெரிக்கர்கள் வீடு திரும்பிவிட்டார்கள். அங்கே தொண்டு நிறுவனத்துக்கு ஆள்கள் தேவை. உங்களுக்கு அங்கே போகச் சம்மதமா?’ என மேலதிகாரி எழுதிய கடிதம் வந்தது. உடனேயே சம்மதம் தெரிவித்து ஃபிரெடரிக் எழுதினார். நைரோபி வந்ததும் முதல் வேலையாக தாடியை மழித்தார். எகேலுவுக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடிய சில நாளில் பிரபலமான மனநல மருத்துவர் ஒருவரைப் போய்ப் பார்த்தார்கள். சோமாலிலாண்ட் மருத்துவரைப்போலவே அவரும் ``ஒன்றுமே செய்யவேண்டாம். பையன் அவன் வழியிலேயே வளரட்டும். அவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு’’ என்று நம்பிக்கையூட்டினார்.p26f_1534850455.jpg

மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து கீழே இறங்கி வரவேற்பறையைத் தாண்டியபோது பெரும்சத்தம் கேட்டது. அந்தக் காட்சியைக் கண்டு மூவரும் செய்வதறியாது உறைந்துபோனார்கள். தரையிலே ஒரு பெண் உருண்டுகொண்டிருந்தாள். நீள முரட்டுத் துணியால் உடம்பைச் சுற்றியிருந்ததால் அவள் ஒரு சோமாலியப் பெண் என யூகிக்க முடிந்தது. அவள் ஏன் கத்துகிறாள், என்ன மொழியில் பிதற்றுகிறாள் என்பது ஒருவருக்கும் புரியவில்லை. மருத்துவமனைக் காவலாளி,  ``சத்தமிட வேண்டாம்’’ என அவளை அதட்டினான். அவளுடைய ஓலம், ஆஸ்பத்திரியை நிறைத்தது.

மார்த்தாவின் கையை உதறிவிட்டு, அந்தப் பெண்ணிடம் ஓடினான் எகேலு. அவளிடம் ஏதோ கேட்டான். அவள் பதில் சொன்னாள். மீண்டும் ஏதோ கேட்டான். அவர்கள் சம்பாஷணை தொடர்ந்தது. காவலாளி அதைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றான். எகேலு வரவேற்பறைப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் அந்தப் பெண் சொன்னதை விவரமாகச் சொன்னான். ``அந்த அம்மாவின் கணவர் ரோட்டிலே வலியில் துடித்து மயங்கிக் கிடக்கிறார். உடனே உதவி கிடைக்கா விட்டால் அவர் உயிர் போய்விடும். அவசர கவனிப்பு தேவை.’’

அடுத்த நிமிடம் ஆஸ்பத்திரி பரபரவென இயங்கியது. மனிதரை உள்ளே கொண்டுவந்து அவசர சிகிச்சை அளித்தார்கள். மருத்துவர் சொன்னார் ``இன்னும் ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கவே முடியாது.’’ அடுத்த நாள் பத்திரிகைகள், அந்தச் சம்பவம் பற்றி எழுதின. சில பத்திரிகையாளர்களும், டிவி சேனல்களும் எகேலுவைப் பேட்டிகண்டன. எகேலு ஜேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஸ்வாஹிலியிலும் எந்தவிதத் தயக்கமுமின்றிப் பேட்டி அளித்தான். ஒரே நாளில் எகேலு நாட்டில் மிகப் பிரலமாகிவிட்டான்.

எகேலுவுக்குப் பள்ளிக்கூடம் தேவையில்லை, அவன் வீட்டிலேயே படிக்கலாம் என்பதில் பிடிவாதமாக இருந்தார் மார்த்தா. அவன் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவனுக்கு எழுத்து வராது. தன் பெயரைக்கூட எழுதத் தெரியாது. வீட்டிலேயே எழுதப் படிப்பிக்கலாம் என மார்த்தா நினைத்தார். மனநல மருத்துவர் வேறு மாதிரி அபிப்பிராயப்பட்டார். ``அவன் சமுதாயத்தில் வளர வேண்டியவன். பள்ளிக்கூடத்தில் அவன் புதிதாக ஒன்றையுமே கற்கப்போவதில்லை. ஏற்கெனவே கற்றுக்கொண்டதைத்தான் கற்பிப்பார்கள். ஆனாலும் வகுப்பிலே மற்ற மாணவர்களோடு பழகுவது அவனுக்கு உலகத்தைக் கற்றுக்கொடுக்கும்’’ என்றார்.

மார்த்தா மழலையர் பள்ளிக்கூடத்தை நோக்கி எகேலுவுடன் நடந்தார். விண்ணப்பப்படிவத்தை ஏற்கெனவே நிரப்பியிருந்தார். அனுமதி பொறுப்பாளர், எகேலுவைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்திருந்தார். ``வருக, வருக’’ என்று வரவேற்றார். ``எகேலு என்றால் பொருள் மூன்று அல்லவா? இப்போது உனக்கு மூன்று வயது நடக்கிறது. அப்ப சரி. நான்கு வயது நடக்கும்போது உன் பெயரை ‘நான்கு’ என்று மாற்றுவாயா?’’ ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார். மார்த்தாவுக்கு எரிச்சலாக வந்தது, ``இதுவா பள்ளிக்கூடம்? குழந்தையிடம் ஒரு ஆசிரியர் இப்படியா பேசுவது?’’ நிலத்தைப் பார்த்துக்கொண்டு எகேலு பேசினான், ``உங்களுடைய பெயர் பாட்ரு என்று வெளியே கதவில் எழுதியிருக்கிறது. பாட்ரு என்பது ஸ்வாஹிலி அல்ல, அரபு வார்த்தை. பூரணச்சந்திரன் என்று பொருள். உங்கள் முகம் சந்திரன்போலவும் இல்லை. பிரகாசமும் கிடையாது. வெறும் இருட்டுதான்’’ என்றான். யாரோ ‘கெக்’ எனச் சிரித்தார்கள். எகேலு கையைப் பறித்துக்கொண்டு வெளியே ஓட, மார்த்தா அவனைத் தொடர்ந்தார்.

வீடு திரும்பும் வழியில் எகேலு பேசினான். ``அம்மா, சாக்கிலே சுற்றி வீதியிலே வீசப்பட்டு கவனிப்பாரின்றிக் கிடந்த என்னை எடுத்து நீ வளர்த்தாய்.’’

``உனக்கு அது தெரியுமா?’’

``தெரியும் அம்மா. முழுக் கிராமமும் என்னைக் கொல்ல நினைத்தது. நீ தன்னந்தனியாக எதிர்த்து நின்று காப்பாற்றினாய். நீ எனக்குக் கொடுத்த அந்தப் பெரிய அன்பை, என்னால் திருப்பித் தரவே முடியாது. நான் எத்தனை ஆயிரம் புத்தகம் படித்து அறிவைப் பெருக்கினாலும் என்ன பிரயோஜனம்? அன்புக்கு நிகர் ஒன்றுமே கிடையாது. இந்த உலகத்தில் ஆகப்பெரியது அன்புதான். அது உன்னிடம் இருக்கிறது’’ என்றான்.

``மகனே, நாளைக்கு நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம், தத்துவவாதி ஆகலாம், படைப்பாளி ஆகலாம். அதெல்லாம் பெரிதல்ல. ஓர் ஏழை சோமாலிப் பெண்ணின் கணவரை, சாவிலிருந்து காப்பாற்றினாய். அதுதான் பெரிது. அந்த நேயம் உன்னிடம் இருக்கிறதே. நான் பெருமைப்படுகிறேன்’’ என்றார் மார்த்தா.

உருவம் இல்லாத, நிறம் இல்லாத, எல்லை இல்லாத, திசை இல்லாத, தொட மிருதுவான, ஆனால் பிடிக்க முடியாத ஆகாய மணம்கொண்ட மழையை,  எகேலுவின் கண்கள் முதன்முறையாகக் கண்டன.

அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: ஸ்யாம் 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.