Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேவதையைத் தரிசித்த மனிதன்

Featured Replies

தேவதையைத் தரிசித்த மனிதன்

 
ஜீ.முருகன், ஓவியங்கள்: செந்தில்

 

“அவரின் இறுதித் திரைப்படமாக ‘ரயில்’ இருந்திருக்கலாம்” என அவன் சொன்னான். இத்தகவல் எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி ஒரு படத்தைக் குறித்து அவருடைய பேட்டிகளிலோ, அவரோடு பணியாற்றிய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளிலோ, கட்டுரைகளிலோ, வேறு வகைகளிலோகூட, படித்ததாகவோ கேள்விப்பட்டதாகவோ ஞாபகம் இல்லை. ஜெர்மன் கலைஞரான இ.டி.எ.ஆஃமேனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘ஆஃப்மேனியானா’ என்ற படத்துக்குத் திரைக்கதை எழுதியும் அவரால் இயக்க முடியாமல் போனது தெரியும். ஆனால் இது?

முழு அளவு இஞ்சித் தேநீர் நிரம்பிய கோப்பையை, காலி கோப்பை ஒன்றால் தாங்கிப் பிடித்துச் சுவைத்தபடி, அவன் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டான்.  அது அவனுடைய கனவாக இருந்திருக்கும் என்பதே என் அனுமானம். அவன் அதை விவரித்தபோது, ‘நிஜமாகவேவா?’ என நானும் சந்தேகம் எழுப்பவில்லை. அது அவனுடைய கனவாகவோ, கற்பனையாகவோ எதுவாக இருந்தால்தான் என்ன? அந்த அந்நியன் என்னிடம் இரண்டுக் கோப்பை இஞ்சித் தேநீரைக் காலி செய்யும் கால அளவில் தார்க்கோவஸ்கி பற்றிப் பேசினான் என்பதே என்னளவுக்குப் போதுமான தாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது.

சிவகிரியில், கோபாலரின் ஆசரமத்துக்கு எதிரே உட்கார்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்த நான், உடன் கொண்டு வந்திருந்த ‘டைம் வித்தின் டைம்: தி டைரீஸ்’ புத்தகத்தை என் எதிரே இருந்த மேஜையின்மேல் வைத்திருந்தேன். அப்போது அவன், தான் கையில் ஏந்தி வந்த தேநீர்க் கோப்பைகளை மேஜைமேல் வைத்துவிட்டு எதிரே அமர்ந்தான்.

p51_1535699742.jpg

சிவந்த நிறம், பாதி நரைத்த தாடி, நீண்ட தலைமுடி, ஆழ்ந்த வெள்ளை நிறத்தில் தளதளத்த ஜிப்பா, கால்சராய் என அவனது தோற்றம் அங்கே சகஜமாகத் தென்படும் வெள்ளைக்காரர்களில் ஒருவனே என எண்ண வைத்தாலும், அவன் முகத்தில் ஒரு ஆன்மிகக்களை படர்ந்திருந்ததாகவே தோன்றியது. ஆமாம், அவன் ஏதோ தேவாலயத்திலிருந்து வெளியே உலாவ வந்த ஏசுவைப்போலத் தெரிந்தான்.

இஞ்சித் தேநீரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பருகியபடி, புத்தகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். பிறகு ‘இதைப் பார்க்கலாமா?’ என ஆங்கிலத்தில் கேட்டான். நான் ஒரு பெருமிதச் சிரிப்புடன் “தாராளமாக” என்றேன். அவன் இரண்டு கையிலும் புத்தகத்தை எடுத்து பவ்யமாகப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தவன், “நல்ல புத்தகம்” என்று அதைத் திரும்பவும் எனக்கு முன்பு வைத்தான். பிறகு, அமைதியாகத் தேநீரைச் சுவைக்கத் தொடங்கினான்.

‘ஸ்கல்ப்டிங் இன் டைம்’ படித்திருக்கிறீர்களா? அவருடைய என்னென்ன படங்களைப் பார்த்திருக்கிறீர்கள்? எந்தெந்த படங்கள் பிடிக்கும்? ‘மிரர்’ பார்த்துவிட்டு முதன்முதாலாக எப்படி உணர்ந்தீர்கள்?’ இப்படி அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் எனக்குள் வரிசைகட்டி நின்றன. ஆனால், தயக்கமாக இருந்தது. என் அறிதல் பற்றிய ஒரு தாழ்வுமனப்பான்மை தடையாக நின்றது. தார்க்கோவஸ்கி பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் அவன் அதிகம் அறிந்திருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவனிடம் நடத்தப்போகும் உரையாடல் என்னை ஒன்றுமில்லாமல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இந்த அல்ப கெளரவத்துக்காக தார்க்கோவஸ்கி பற்றித் தெரிந்த ஒருவனைச் சந்தித்தும், பேசும் வாய்ப்பைத் தவிர்ப்பது எவ்வளவு முட்டாள்த்தனம்!

தயக்கத்துடன் கேட்டேன், “உங்களுக்கு தார்க்கோவஸ்கியின் படங்களைப் பிடிக்குமா?”

அவன் சிரித்தான், “ஆமாம், அவர் ஒரு ஜீனியஸ்” என்றான்.

பிறகு ஓர் ஆழ்ந்த யோசனைக்குள் சென்றுவிட்டான்.

‘அவர் ஜீனியஸ் என்று எனக்கும் தெரியும், உலகத்துக்கே தெரியும். எப்படி என்று சொல்லுடா’ என மனம் தவித்தது.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் என் தவிப்பைப் புரிந்துகொண்டவன்போலச் சொன்னான், “அவரும் கோபாலர்போல ஒரு ரிஷிதான். தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கும் மனித குலத்துக்கு மீட்சிக்கான பாதையைக் காட்ட நினைத்தவர்...”

இப்போது, அவன் தன் ஜிப்பா பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்து, ஓர் உறிஞ்சிதலை நிகழ்த்திவிட்டு சொன்னான், “அவரின் கடைசித் திரைப்படங்களான  ‘நோஸ்டால்ஜியா’, ‘சேக்ரிபைஸ்’ இரண்டிலும் அதை ஆழமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். முதன்முதலாக  ‘சேக்ரிபைஸ்’ பார்த்தபோது, நான் அழுதேன். மனிதர்கள் மீதும், பிற உயிர்கள் மீதும் அவருடைய கவலை அளவிட முடியாதது”

சிறிது நேரம் அவன் எதுவும் பேசவில்லை. இஞ்சித் தேநீரையும் அவன் மறந்திருந்தான். பிறகு, வெட்கத்துடன் புன்னகைத்தபடி சொன்னான், “நான் இத்தாலி தேசத்தவன். டோனினோ குவாராவின் இலக்கிய நண்பர்களில் ஒருவன்.”

டோனினோ குவாரா – இப்பெயர் எனக்குப் பரிட்சயமாகியிருக்க வேண்டும் என நினைத்து அவன் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், எனக்குச் சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் கேட்டேன், “அவர்...?”

“ஆந்த்ரேயின் நண்பர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர். ‘நோஸ்டால்ஜியா’வில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அவர் வீட்டில் ‘வாயேஜ் ஆஃப் டைம்’ எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு இருந்திருக்கிறேன், தார்க்கோவஸ்கியைச் சந்தித்திருக்கிறேன். அப்போது நான் கவிதை எழுதும் முயற்சியில் இருந்ததால் குவாராவைப் பார்க்கச் செல்வேன்.”

‘வாயேஜ் ஆஃப் டைம்’ என்றதும் எனக்கு டோனினோ குவாராவின் உருவம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. கூடவே, குவாரா தன் கவிதை ஒன்றைப் படிக்க, அதை ஆழ்ந்த அக்கறையுடன் கேட்டுப் பாராட்டும் தார்க்கோவஸ்கியின் அந்த முகம்... உப்பிய கன்னங்களைக்கொண்ட ஒரு குழந்தையைப்போல எல்லாத் திசைகளிலும் வியாபித்து நின்ற அதை எப்படி மறக்க முடியும்?

அவன் அந்த ஆறிப்போன இஞ்சித் தேநீரை அதே நிதானத்தோடு கொஞ்சம் சுவைத்துக்கொண்டான். பிறகு சொன்னான், “குவாராவின் மேஜைமேல் இருந்த ஆந்த்ரேயின் ஒரு நோட்டுப் புத்தகத்தை அவரின் அனுமதியுடன் எடுத்துப் பார்த்தேன். அதில்தான் ஏராளமான வரைவுகளையும் ரஷ்ய மொழியில் குறிப்புகளையும் எழுதிவைத்திருந்தார். எல்லாமே விதவிதமான ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு...”

அவற்றையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக்கொள்ளவோ என்னவோ சிகரெட்டைப் புகைத்து முடிக்கும் வரை சிறிது நேரம் எடுத்துக்கொண்டான்.

நானோ எதிர்பாராத அந்தச் சந்திப்பையும் அவன் சொன்ன விஷயங்களையும் நம்ப முடியாத திகைப்பில் உட்கார்ந்திருந்தேன்.

அவன் சொன்னான், “அதெல்லாம் அரங்க வடிவமைப்புகளுக்கான வரைவுகள். ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு தலைப்பு, ஓவியர்கள், இசைமேதைகள், சிற்பிகள், எழுத்தாளர்கள், தத்துவமேதைகள், பறவைகள், பாம்புகள், யானைகள், செடிகள், மரங்கள்... ஓவியர்களுக்கான பெட்டி ஒருவிதம், இசைமேதைகளுக்கான பெட்டி இன்னொருவிதம். பறவைகளுக்கு ஒருவிதம் செடிகளுக்கு ஒருவிதம்... ஓவியர்கள் அதிலேயே தங்கி, ஓவியம் வரையவும் அவற்றைப் பத்திரப்படுத்தவுமான ஏற்பாடுகளோடு. எழுத்தாளர்கள் என்றால் எழுதவும் புத்தகங்களை அடுக்கிவைக்கும் அலமாரிகளோடு. இசைமேதைகளுக்கு நிகழ்த்து அரங்குடனான வசதி. பறவைகள், மரங்களுக்கென்றால் அவை வானத்தோடு தொடர்புகொள்ள மேல் திறப்புடன்...”

நான் வியப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தேநீரைக் குடித்து முடித்திருந்தான். அவனைக் கேட்காமலேயே அவனுக்காக நான் இன்னொரு தேநீர் தரும்படி கடைக்காரனிடம் கையசைத்தேன்.

அந்த இத்தாலியன் சொன்னான், “உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இப்படி வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்ட மீக நீண்ட ரயில்... அதில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள், கலைஞர்கள்...”

நான் சொன்னேன், “சந்தகமே இல்லை, இது மிகப் பெரிய கற்பனைதான். அதில் விஞ்ஞானிகளுக்கு நிச்சயம் இடமிருந்திருக்காது...”

நான் அர்த்தத்துடன் சிரித்தேன். அவனும் சிரித்தான். பிறகு சொன்னான், “அதை ‘சோலாரிஸ்’போலப் பெரிய பொருட்செலவில் திரைப்படமாக்க அவர் யோசித்திருக்க வேண்டும். சோவியத் அரசாங்கமே அதையும் தயாரித்திருந்தால் ஒருவேளை அது சாத்தியமாகியிருக்கலாம். பிறகு, அவர்தான் இத்தாலிக்கு அகதியாக வந்துவிட்டாரே...” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியபடியே சொன்னான்,

“ ‘சேக்ரிபைஸு’க்குப் பிறகு அதை எடுக்கும் திட்டம் அவருக்கு இருந்ததோ என்னவோ, ஒரு இறுதி நம்பிக்கையாக...”

p51a_1535699725.jpg

“இறுதி நம்பிக்கையா? எனக்குப் புரியவில்லை!” என்றேன்.

அவன் சிரித்தான்.

பையன் வந்து வைத்துவிட்டுப்போன சூடான இஞ்சித் தேநீரை எடுத்து சுவைத்துவிட்டுத் திரும்ப வைத்தான்.

பிறகு சொன்னான், “நோவாவின் கப்பல்போல”

“நோவா?”

“மனிதர்களால் பூமி எதிர்கொள்ளப் போகும் பேரழிவிலிருந்து இந்த அற்புதங்களைக் காப்பாற்ற இப்படியான ரயிலை அவர் கற்பனைசெய்திருக்கலாம்...”

அந்தக் கற்பனை கிளறிய சிந்தனையிலும் வியப்பிலும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன்.

அவன் சொன்னான், “நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவுக்குமுன், ஆந்த்ரேய் போன்ற ஒரு கலைஞன் என்ன செய்வான்? மனிதர்களின் உள்ளார்ந்த விருப்பங்கள் நிறைவேறும் அறை ஒன்றை கற்பனை செய்யலாம், சதுக்கத்தின்முன் நின்று அந்த அழிவை உரக்க அறிவித்துவிட்டுத் தன்னையே தீயிட்டு எரித்துக்கொள்ளலாம், குளத்தின் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு எரியும் மெழுகுவத்தியை அணையாமல் எடுத்துச் செல்லும் ஒரு சடங்கைச் செய்யலாம், புதிரான தன் வேலைக்காரியோடு படுக்கையைப் பகர்ந்துகொள்ளலாம், கடவுளிடம் சரணடைந்து தன் வீட்டை எரிக்கலாம், இறுதி நம்பிக்கையாக நோவாவின் கப்பல்போல ரயில் ஒன்றை வடிவமைக்கலாம்...”

அவன் சொல்லச் சொல்ல, அந்தத் திரைப்படக் காட்சிகள் எனக்குள் படர்ந்துகொண்டே வந்தன.

ஆனாலும், ‘ரயில்’ கற்பனையில் சாத்தியக் குறைபாடு ஒன்று முக்கியமாக இடறியதால் தயக்கத்துடன் கேட்டேன், “பேரழிவுக்குப் பின் பூமியே சிதைந்துவிடுமல்லவா... பிறகு இந்த ரயிலை எங்கே இயக்குவது? நோவாவின் கப்பலுக்காவது கடல் இருந்தது...”

அவன், கிண்டல் தொனிக்கச் சிரித்தான். பிறகு கேட்டான், “அது ஏன் வானத்தில் பறக்கும் ரயிலாக இருக்கக் கூடாது? ட்ராகன்போல மிகப் பெரிய சிறகுகளைக்கொண்ட ரயில்...”

பிறகு நான் எதுவும் பேசவில்லை. புத்திசாலித்தனமான என் கேள்விக்காக வெட்கப்பட்டேன். அவனும் கருமமே கண்ணாக அந்த இஞ்சித் தேநீரைக் காலி செய்தான். பிறகு எழுந்து, ‘பை’ சொல்லி விடைபெற்று நடந்தான்.

சாலையைக் கடந்து, ஆசிரமத்துக்குள் சென்று மறையும் வரை அவனையே  பார்த்துக்கொண்டிருந்தேன்.

குறிப்பு: ‘தேவதையைத் தரிசித்த மனிதன்’ என்ற தலைப்பு, தார்க்கோவஸ்கியின் கல்லறை வாசகம். இது அவருடைய மனைவி லாரிசா தார்கோவஸ்கியால் முன்மொழியப்பட்டது.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.