Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராதிகா

Featured Replies

 

 19th Sepதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள்.




சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்கவே பாவமா இருந்துச்சு என்றாள். பாவம் என்ன செய்யுறது என்று சொல்லியபடியே வெளியே கிளம்பினேன்.



பிறந்த ஊர் என்றாலும் நாங்கள் இப்போது இருக்கும் பகுதி அவ்வளவாக எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று. எதிர்ப்படுபவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கால் போனபடி நடந்து கொண்டிருக்கும் போது ராதிகாவின் நினைவு வந்தது.



ராதிகா, நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் குடியிருந்த பெண். சுற்று வட்டாரத்தில் பிரபலமான ரைஸ்மில் ஒன்றை ராதிகாவின் அப்பா நடத்தி வந்தார். நானும் ராதிகாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆறாம் வகுப்பின் போது அவள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாறினோம். அவளது அண்ணன் அவளைவிட ஏழு வயது மூத்தவன், அவன் அப்போது வெளியூர் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் தந்தையும் அவரது பங்காளி வகையறாக்களும் பெரிய ஆசாடபூதிகள். வீட்டு விலக்கான பெண்கள் கையால் தண்ணீர் வாங்கிக்கூட குடிக்க மாட்டார்கள்.



அவர்கள் வீட்டிலேயே கொல்லைப்புறம் அருகே ஒரு பெரிய அறையையே அந்த நாட்களில் தங்குவதற்காக கட்டி வைத்திருப்பார்கள். தட்டு டம்ளர் முதல் போர்வை தலையணை வரை கிட்டத்தட்ட ஒரு லாட்ஜ் அறையைப் போலவே அது இருக்கும். அந்த அறையில் உபயோகப்படுத்தவென்றே ஒரு ட்ரான்ஸிஸ்டர் கூட பிரத்யேகமாக அங்கே இருக்கும்.



எனவே ராதிகாவின் அம்மா வீட்டு விலக்கான நாட்களில் ராதிகாவின் அண்ணன் தான் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிக்கொண்டு வருவான். அவன் ஹாஸ்டலுக்குச் சென்ற பின்னால் அந்த வேலை என் தலையில் விழுந்தது. கொண்டு செல்லும் பாத்திரங்களை வைத்தே ரைஸ்மில் காரருக்கா என ஹோட்டலில் கேட்டு பார்சல் தருவார்கள். ராதிகா சகஜமாக, எங்க அம்மா, லாங் என்று சொல்வாள். இது சில வருடம் நீடித்தது, எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவில் ராதிகா பெரிய பெண் ஆனாள். அதன்பின் எனக்கு அந்த வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.



பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள், டியூசனில் இருந்து வீடு திரும்பியவுடன், அம்மா என்னிடம் “ரைஸ்மில் காரம்மா வந்திருந்தாங்க, ஏதோ நோட்ஸ் எல்லாம் ராதிகாவுக்கு வேணுமாம்” என்றார். அவள் தந்தை அவளை டியூசனுக்கு அனுமதிப்பதில்லை மேலும் மாத விலக்கான நாட்களில் அவள் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதால் என்னுடைய டியூசன் நோட்ஸை கேட்டிருந்தாள். என் தங்கையின் மூலம் நோட்ஸ் அவள் வீட்டிற்குச் சென்றது.



இந்நாட்களில் ராதிகாவின் அண்ணன் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத நாட்களில் வேறுவழியில்லாமல் கடைகண்ணிக்குச் செல்ல என்னையே மீண்டும் அவர்கள் நம்பவேண்டியிருந்தது. தொடர்ந்து ராதிகாவிற்கும் பிளஸ்2 நோட்ஸ், ரெக்கார்டு நோட் என என் தயவு பெரிதும் தேவைப்பட்ட்து. தெருப்பையன்கள் எல்லாம் அவளுக்கு உன்மேல லவ்வு என்றெல்லாம் ஏத்தி விடுவார்கள். சொந்த ஜாதியில் இருக்கும் ரைஸ்மில் வேலைக்காரர்களை கூட வீட்டில் அனுமதிக்காத ராதிகாவின் அப்பா என்னை அங்கே புழங்க விட என் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என்பதால் நான் அதை சிரித்துக் கொண்டே கடக்க பழகியிருந்தேன்.



பிளஸ் 2 முடித்ததும் கல்லூரிக்கும் அனுப்ப ராதிகாவின் தந்தைக்கு இஷ்டமில்லை. ஆனால் அவரின் உறவினர்கள், நம்ம ஆட்கள்ல இப்ப படிச்ச பிள்ளைகளைத்தான் கட்டுறாங்க எனச் சொல்லி கல்லூரிக்கு அனுப்ப வைத்தனர். எங்கள் ஊரில் கல்லூரி இல்லாததால் வெளியூர் கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்,அங்கே விடுதியில் தங்கிப் படித்தாள். இன்னொரு கல்லூரியில் நானும்.



ராதிகா இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவள் அண்ணனுக்கு ஒரு மிகப்பெரிய இடத்து சம்பந்தம் வந்தது. அவள் அப்பா கூட, முதல்ல பொண்ணு கல்யாணம் அப்புறம் தான் பையனுக்கு என்று பிடிவாதம் பிடித்துப் பார்த்தார். ஆனால் அவரின் உறவினர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தின் போது பச்சைப் பட்டுப்பாவாடையும், மாம்பழக் கலர் தாவணியும், ஒற்றை ஜடையுடன், நீண்ட மெல்லிய டாலர் செயினுடன் வளைய வந்த அவளைக் கண்ட உறவினர்கள் எங்க பையனுக்குத்தான் உங்க பொண்ணைக் கொடுக்கணும் என்று சண்டையே போட்டார்கள். பந்தி பரிமாறுதலில் ஈடுபட்டிருந்த என்னை அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தாள் என நண்பர்கள் சொல்ல அதை வழக்கம் போல நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.



ராதிகாவின் அண்ணன் சென்னையில் செட்டில் ஆகியிருந்தான். நானும் படிப்பு முடிந்து சென்னையில் ஓராண்டு போராடி ஒரு வேலையில் அமர்ந்தேன். என்ன இன்னும் ராதிகாவின் திருமண செய்தி வரவில்லையென யோசிக்கத் தொடங்கியிருந்தேன். ஊருக்கு வந்தபோது, ஸ்வீட் வாங்கிக் கொண்டுபோய் வேலை கிடைத்த விபரத்தை ராதிகா வீட்டாரிடம் சொன்னேன். வீடே களையிழந்து கிடந்தது. அம்மாவிடம் கேட்ட போது அதெல்லாம் உனக்கெதுக்கு என்று கடிந்து கொண்டார்,



பின்னர் விஷயம் தெரியவந்தது. ராதிகாவிற்கு மாதவிலக்கானது மூன்று, நான்கு நாட்களில் முடியாமல் ஒரு வாரம் பத்து நாள் வரை நீண்டதாம். அதனால் உடல்நிலை தளர்ந்து போனாளாம். தொடர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.



இன்னும் ஒரு வருடம் போனது. ராதிகாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் இளைத்துப் போயிருந்தாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது லாங்,லாங்கர், லாங்கஸ்ட் ஆயிடுச்சுடான்னு விரக்தியாகச் சிரித்தாள்.



இந்த விசயம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்ததால் அவர்களுக்கு ஈடானவர்கள் யாரும் சம்பந்தம் பேசவரவில்லை. வசதி குறைவானவர்களோ மாசம் பாதிநாள் அவ படுத்துக்கிட்டானா யாரு வேலையெல்லாம் பார்க்கிறது, தங்க ஊசின்னு கண்ணுல குத்திக்க முடியுமா என ஒதுங்கிக் கொண்டார்கள். ராதிகாவுக்கு 25 வயது ஆன நிலையில் அவர் அம்மா தெருவில் ஒருநாள் எந்த ஜாதின்னாலும் பரவாயில்லை, கேட்டா முடிச்சிடலமுன்னு இருக்கோம் என்று ஜாடை மாடையாக்கூட சொல்லிக் கொண்டிருந்தாராம்.



அந்நேரம் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தோம். லோன் மூலம் வீடுகட்டி முடித்திருந்த நிலையில் நாங்கள் இப்போதிருக்கும் வீட்டிற்கு மாறியிருந்தோம். அதன்பின் தங்கை கல்யாணம், என் கல்யாணம், பிள்ளைகள், சென்னை வாழ்க்கை என அந்த தெருவில் இருந்தே ஒதுங்கி விட்டோம்.



வீடு திரும்பிய பின்னரும் ராதிகாவின் நினைவுகளால் மனம் அலைந்தது. அவள், ஹாலில் மாட்டியிருந்த தன் அண்ணனின் திருமணத்தில் எடுத்த போட்டோவை வெறித்தபடியே என்னிடம் பேசியது ஞாபகம் வந்தது. மாடி காலியிடத்தில் நிலை கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்த போது தங்கை வந்தாள். சில நிமிடம் மௌனமாய் இருந்த அவள், நீ அவள கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஏன் நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை? என்றாள். உங்கண்ணன் மகனான்னு கேட்டு அர்ஜூன் தலையை பாசமா தடவிக் கொடுத்தா, உன் பேரைச் சொல்லும் போது அவ கண்ணுல இன்னும் காதலப் பார்த்தேன் என்றாள்.



இல்ல, அப்ப உன் கல்யாணம்தான் எனக்கு பெரிசாப் பட்டுச்சு. பணத்துக்காக வேற ஜாதியில கல்யாணம் பண்ணிட்டான்னு இல்ல ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்னு உன் புகுந்த வீட்டுல நீ பேச்சுக் கேட்கக்கூடாதுன்னு நெனச்சேன் என்றேன். கண்கள் பனிக்க என்னைப் பார்த்தபடி இறங்கிப் போனாள் என் தங்கை. இரவில், மனைவி, என்னிடம் திவ்யா சொல்றதுல்லாம் உண்மையா? எனக் கேட்டாள்.



சேச்சே, சும்மா அவள திருப்திப்படுத்த சொன்னேன். உண்மையச் சொல்லணும்னா எனக்கு சின்ன வயசில இருந்தே என் மனைவி இந்த உயரம் இருக்கணும், முகம் இப்படி இருக்கணும், இந்தக் கலர் இருக்கனும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். அப்படியே நீ இருந்த, அதனால தான் உன்னைய கட்டிக்கிட்டேன் என்றேன். காதலாய் பார்த்தாள்.



காலையில் வாக்கிங் போகும் போது அப்பாவும் உடன் வந்தார், என்னடா திவ்யா சொன்னது உண்மையாடா? உனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தா சொல்லி இருக்கலாமேடா? என்றார். நான் உடனே அப்பா நீங்க எங்களுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க, நோயாளி பொண்ணக் கட்டி உங்களுக்கு இன்னும் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதப் பத்தியே யோசிக்கலை என்றேன். என்னை பெருமையாகப் பார்த்தன அவர் கண்கள்.



வீடு திரும்பி, குளிக்கும் போது, பாத்ரூம் கண்ணாடியில் தெரிந்த என் முகம், ஆளுக்கு தகுந்த படி பொய் சொன்னாயே, காமுகா, மாதம் பாதி நாளு தூரமாகிரவளால எவ்ளோ சுகம் கிடைச்சிடும்னு கணக்குப் பண்ணித்தான அவாய்ட் பண்ணுன? எனக் கேட்க, மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன்்

-முரளிகிருஸ்ணன் ட்விட்டர் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....அபராஜிதன்!

கொஞ்சம் வித்தியாசமான கதை தான்!

மனதை வருடிச் செல்லாமல் ...நெருடிச் செல்வது...கதையின் சிறப்பு!

பெரும்பாலோரின் வாழ்வு இப்படித்தான்!

அதனால் தானோ என்னவோ....தங்கள் மன அழுத்தங்களைக் கொட்டுவதற்காகவே .....கோவில்களையும் தெய்வங்களையும் தேடுகிறார்களோ எனப் பல தடவைகளில்....சிந்தித்தும்...இருக்கிறேன்!

அவளிடம்....காதல்...இன்னமும்...மிச்சமிருக்கின்றதே...என்று நினைக்கையில்....அவள் பாவம் என்று மட்டும்...நினைக்கவே இல்லை!

தொடர்ந்தும்  இணையுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்றாலே சிலது ஜெயிக்கிறதும் பலது தோற்கிறதும் சகஜம்தானே.அந்தப்பெண் மட்டும் ஆரோக்கியமாய் இருந்தால் உடனே அவங்கப்பா இவருக்கு கட்டிக் குடுத்துடுவாராக்கும்....... தொடருங்கள் அபராஜிதன்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
On 9/20/2018 at 2:52 PM, புங்கையூரன் said:

நன்றி....அபராஜிதன்!

கொஞ்சம் வித்தியாசமான கதை தான்!

மனதை வருடிச் செல்லாமல் ...நெருடிச் செல்வது...கதையின் சிறப்பு!

பெரும்பாலோரின் வாழ்வு இப்படித்தான்!

அதனால் தானோ என்னவோ....தங்கள் மன அழுத்தங்களைக் கொட்டுவதற்காகவே .....கோவில்களையும் தெய்வங்களையும் தேடுகிறார்களோ எனப் பல தடவைகளில்....சிந்தித்தும்...இருக்கிறேன்!

அவளிடம்....காதல்...இன்னமும்...மிச்சமிருக்கின்றதே...என்று நினைக்கையில்....அவள் பாவம் என்று மட்டும்...நினைக்கவே இல்லை!

தொடர்ந்தும்  இணையுங்கள்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புங்கையூரான் அண்ணா.:)

On 9/23/2018 at 11:48 PM, suvy said:

காதல் என்றாலே சிலது ஜெயிக்கிறதும் பலது தோற்கிறதும் சகஜம்தானே.அந்தப்பெண் மட்டும் ஆரோக்கியமாய் இருந்தால் உடனே அவங்கப்பா இவருக்கு கட்டிக் குடுத்துடுவாராக்கும்....... தொடருங்கள் அபராஜிதன்.....!  tw_blush:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா சொன்னமாதிரித்தான் நானும் நினைத்தேன்!

முகமுடிகள் போட்டு உலவினாலும் மனிதன் அடிப்படையில் ஒரு விலங்குதான்.

  • தொடங்கியவர்
On 9/27/2018 at 3:31 AM, கிருபன் said:

சுவி அண்ணா சொன்னமாதிரித்தான் நானும் நினைத்தேன்!

முகமுடிகள் போட்டு உலவினாலும் மனிதன் அடிப்படையில் ஒரு விலங்குதான்.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் 

என் மனமும்  லாங், லாங்கர், லங்கஸ்ட் ஆயிட்டு என்று அறிந்த போது மாசத்துல பாதி நாள் இப்படி என்றால் பிறகு எத்தனை நாளுக்கு சுகம் கிடைக்கும் என்றதை தான் யோசித்து கணக்கு பார்த்தது.

கிருபன் சொன்ன மாதிரி முகமூடி போட்ட விலங்குகள் நாம். விலங்குகளுக்கு முகமூடி என்றால் என்னவென  தெரியாது. மனிதர்களுக்கு தாம் முகமூடி போட்டு இருக்கின்றோம் என்பது தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.