Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக் குழந்தை!… பித்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக் குழந்தை!… பித்தன்.

October 14, 2018
 

சிறப்புச் சிறுகதைகள் (15) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – காதர் மொகைதீன் மீரான் ஷா எழுதிய ‘பாதிக்குழந்தை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

thumbnail_pithan.jpg?zoom=3&resize=251%2

“உலகமெல்லாம் தேடினேன். ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராது சொன்னால், அவனைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலம் முடிவு கட்டும். ஆனால், மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும மறுக்க மாட்டார்கள்.

நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத்து ஆடுகிறான்? இதுதான் இன்றைய உலகத்தால் முற்றுப்பெறாமல் விடப்பட்ட வசனம், அல்லது வசனம் முடிவு பெறாத முற்றுப்புள்ளி. இது ஆண்டவனுக்குப் புரியவில்லை. மனிதர்கள் எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

ஏன் மனிதனுக்குப் பகுத்தறியும் தன்மை கிடையாதா? விஷத்தை விடக் கொடியவர்கள் மனிதன் என்ற போர்வையில் நடமாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே! ஏன் உலகம் அத்தகையவர்களை மதித்து மரியாதை செய்கிறதே ஏன்…?

உருவம் இல்லாத ஆண்டவனைப் போல், உண்மையும் உருவமற்றுப் போய்விட்டதோ? எல்லாமே பைத்தியக்காரத்தனம் சீ…!

சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, குடிசைக்குள் இருந்த படியே பாதி திறந்திருந்த கதவிடுக்காய் உலகத்தை எட்டிப் பார்த்தாள் சுபைதா. அவள் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. உலகம் இருண்டு கிடந்தது.

இரவுப் பெண் அன்னநடை போட்டுக் கொண்டிருந்தாள். தென்றல் அவள் முந்தானையை இழுத்துப் பிடித்தாள். கறுப்பு முந்தானை விரிந்து பரந்த உலகத்தை மறைத்தது. அந்தத் திரை மறைவிலே எத்தனையோ அற்புத அக்கிரமங்கள்! இன்று மட்டுமா? யுகம் யுகங்களாக நடந்து கொண்டிருக்கும் சம்பவம் இது. சுபைதாவின் குடிசைக்குள்ளும் இருட்டுப் புகுந்து விட்டது. “விளக்கேற்ற வேண்டும்” என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதைச் செய்ய அவளால் முடியவில்லை. கால்கள் இரண்டையும் நீட்டிய படி அந்தக் களிமண் சுவரிலே சாய்ந்து கொண்டிருந்தாள் சுபைதா. ‘அந்த வேதனை! அது என்ன வேதனையோ!’

வயிற்றுக்குள் தொங்கும் மற்றொரு உயிர் வெளியே குதிப்பதற்காக வழி செய்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்புதான் ஆரம்பமாகியது அந்த வேதனை. ஆரம்ப வேதனையையே அவளால் தாங்க முடியவில்லை.

அப்பொழுது இரவு ஏழு மணி இருக்கும். இருட்டு அவள் குடிசைக்குள் புகுந்து வெகு நேரமாகி விட்டது. இன்னும் விளக்கேற்ற முடியவில்லை. காரணம் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. சுவரில் சாய்ந்த படியே உட்கார்ந்திருந்தாள்.

அது புது அனுபவம் அவளுக்கு. தெரிந்து கொள்ள முடியாத ஒரு பயம் அவள் மனதைத் துவைத்துக் கொண்டிருந்தது. என்ன நேரப் போகிறது என்று அவள் உள்ளத்தில் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அவளுடைய துடிதுடிப்பு காலத்திற்குத் தெரியுமா? தொழிலாளியின் துன்பம் தெரியாத முதலாளியைப் போல் மெத்தையில் புரண்டு கொண்டிருந்தது அந்த இரவு, உடல் வேதனையும் உள வேதனையும் ஒன்று சேர்ந்து அவளைப் பேயாட்டம் ஆட்டியது. நோவு அவள் உள்ளத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது.

துன்பத்திலேதான் மறைந்து போன நாட்களின் மறந்து போன சம்பவங்கள் வந்து மனதில் வட்டமிட ஆரம்பிக்கின்றன. இந்த அனுபவம் சுபைதாவுக்கு எப்படி ஏற்பட்டது? அவளுடைய எண்ணம் வந்த வழியே திரும்பிச் செல்கிறது.

சுபைதா அந்தக் குடிசைக்கு வரும் போது தனிமையாகத்தான் வந்தாள். சுபைதா வந்த சில நாட்களில் கிழவி காலை நீட்டி விட்டாள். இப்பொழுது சுபைதா தனிமைக்கும் அந்தக் குடிசைக்கும் சொந்தக்காரியாகி விட்டாள். இன்று இரவோ அல்லது நாளைக்கோ அவள் தனிமை போக்க வயிற்றிலிருக்கும் குழந்தை பிறந்து விடும். இதை நினைத்த பொழுது அவளது முகத்தில் சந்தோஷ ரேகை மின்வெட்டியது. மறுகணம் கிழவியின் முகம் போலாகிவிட்டது அவள் முகம். பிறக்கப் போகும் குழந்தை அவளுடையதுதான். ஆனால் அதை அவள் விரும்பவில்லை. உள்ளம் விரும்பாத போது, உடல் விரும்பாத போது, அந்தக் குழந்தை அவள் வயிற்றுக்குள் உருவாகி விட்டது! அப்படியானால் மனம் எப்படித் தாவியது ஆரம்ப காலத்திற்கு.

சுபைதா இந்த உலகத்துக்கு வந்து பதினாறு வருடங்களாகி விட்டன. என்றாலும் எட்டு வருட வாழ்க்கைதான் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. தாய் தந்தையைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் இருந்தாள் அவள். தாயின் மடியில் உறங்கிய குழந்தை கண் விழிக்கும் பொழுது தொட்டிலில் கிடப்பதை உணர்வதைப் போல, சுபைதாவுக்கு ஞாபகம் தெரிந்த பொழுது, ஹாஜியார் உமறுலெப்பையின் வீட்டில் வேலைக்காரியாக இருந்தாள்.

ஹாஜியார் உமறுலெப்பை அந்தக் கிராமத்திற்கே பெரிய மனிதர். பாவமும் பணமும் அவரைப் பெரிய மனிதராக்கி விட்டது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பது போல, செய்த பாவங்களைத் தீர்ப்பதற்காக ஒரு முறை மக்காவுக்குப் போய் வந்தார். பிறகு திரும்பவும் அகரத்தில் ஆரம்பித்துக் கொண்டார் தனது சுபாவத்தை.

பாவ மூட்டைகளைத் தாங்கிக் கொண்ட மக்கா என்றதொரு சுமை தாங்கியை அமைத்துக் கொண்ட பிறகு, பணக்காரன் பாவஞ்செய்யப் பயப்பட வேண்டியதில்லை அல்லவா? இந்த தைரியத்தில் கண் மூடிக் காலம் கழித்தார் ஹாஜியார்.

வீட்டிலே மனைவி. தென்னந்தோட்டில் ஒரு ஆசை நாயகி – ஊருக்குக் கடைசியிலே ஒரு கள்ளக் காதலி. இவைகளையெல்லாம் விட, சந்தர்ப்பத்திற்கேற்ப பகல் காட்சிகள் பல. அவருடைய பணத்துக்கும் பருத்த உடம்புக்கும் பணிந்து போகாத பருவப் பெண்களே இருக்க முடியாது அந்த வட்டாரத்தில். இப்படிச் செய்வது தவறு என்று அவர் கருதவில்லை. நாலு கல்யாணமும் நாற்பது கள்ளக் காதலும் வைத்துக் கொள்ள மார்க்கம் இடமளிப்பதாக அவர் கருத்து.

பணமென்றால் ஹாஜியாரின் உயிர் என்று அர்த்தம். ஏழைகளின் வயிற்றில் இருக்க வேண்டியது ஹாஜியாரின் பணப்பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான வயற் பூமிகளை மிகவும் சுலபமாக சொந்தமாக்கிக் கொண்டார் அவர். எவ்வளவுக்கெவ்வளவு பணம் அதிகரித்தது, அவ்வளவுக்கவ்வளவு சந்தானமும் குறுகிக் கொண்டே போயிற்று. பிறந்தது ஒரே குழந்தை. அதுவும் இறந்து போயிற்று.

கணவனின் கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்காமலோ, அல்லது பணத்தின் பாரம் தாங்காமலோ ஒரு நாள் அவரின் மனைவியும் இறந்து விட்டாள். அவள் இறந்தது ஒரு பாரம் கழிந்தது மாதிரி அவருக்கு. வீட்டில் தட்டிப் பேச ஆளில்லை. அவளுடைய தாயார் உலகமே தெரியாது மூத்துப் போனவள். முடங்கிக் கிடந்தாள் ஒரு மூலையில் தனது கடைசி நாளை எதிர்பார்த்த வண்ணம்.

சுபைதாவுக்கு அப்பொழுது பதினாறு வயது பூர்த்தியாகி விட்டது. இளமையின் பூரிப்பில் இன்ப மணம் பேசிக் கொண்டிருந்தது. அவள் மேனி! இளம் பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் அழகு கொஞ்சம் அதிகமாகவே ஆட்கொண்டிருந்தது அவளை. என்ன இருந்தும் என்ன, அவள் உமறுலெப்பை ஹாஜியாரின் வேலைக்காரி. அவ்வளவோடு திருப்தி அடைய வேண்டியதுதான்.

நாளடைவில் ஹாஜியாரின் போக்கு, கலக்கத்தை உண்டாக்கியது சுபைதாவுக்கு. எனவே, எப்படி அங்கிருந்து விடுதலை பெற வேண்டும் என அவள் நினைத்தாள். பலன்? முதலை வாயிலிருந்து மீண்டும் புலியை நாடிய கதையாகத்தான் முடியும் என்று உணர்ந்தாள். இந்தச் சமூகம் அப்படித்தான் காட்சியளித்தது அவளுக்கு. இளமை ஒரு காந்தம். அது உமறுலெப்பை ஹாஜியாரைப் போன்ற கம்பியாணிகளை இலகுவாக இழுத்துக் கொள்ளும். துருப்பிடித்துப் போன அவரது இரும்பு உள்ளத்துக்கு சுபைதாவின் பருவம் பாயும் மின்சாரம். ஆனால், அவளது அடக்கமும் அமைதியும் அவரை அண்டவிடவில்லை.

தங்கம் சொக்கத் தங்கமாக வேண்டுமானால் அதை நெருப்பில் புடம் போட வேண்டும். ஆனால், மனிதன் தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட பிறகு, காலமும் மனிதனைப் புடம் போட்டுப் பார்க்கிறது. மனிதன் அதை விடுத்து, ஆண்டவன் விதி என்ற குப்பை கூழங்களை தலையில் அள்ளிக் கொண்டு திரும்பவும் சீரழிந்து போகிறான். யாத்திரை போனால் மனிதனாகலாம் என்பதை விடுத்து கடமையாலும் நேர்மையாலும் மனிதனாகலாம் என்ற சூழலைப் புரிந்து கொள்ள முடியாத சூழலில் உமறுலெப்பை ஹாஜியார் குற்றமற்றவர். ஆனால் மனச்சாட்சி மரக்கட்டையாகி விட்ட ஹாஜியாரின் வீட்டில் ஒரு நாள்!

இரவு எட்டு மணி இருக்கும். ராச்சாப்பாட்டை தயார் செய்து விட்டு ஹாஜியாரின் வரவை எதிர்பார்த்திருந்தாள் சுபைதா. மணி ஒன்பது அடித்தது வரவில்லை. வீட்டிலுள்ள ஏனைய பகுதிகளையெல்லாம் சாத்தி விட்டு கட்டிலில் உடம்பை சாய்த்தாள் அவள். நேரம் ஆக ஆக அவள் கண்களை தூக்கம் கவ்வியது. அப்படியே உறங்கி விட்டாள்.

இரவு மணி பன்னிரண்டு இருக்கும். ஹாஜியார் வீட்டுக்கு வந்தார். மண்டபக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவர் கண்கள், தூக்கத்தில் கிடந்த சுபைதாவைப் பார்த்து விட்டன. வேலை செய்த களைப்பால் தன்னிச்சையாக உறக்கத்தில் கிடந்த சுபைதாவின் சேலை, அங்குமிங்குமாக விலகிக் கிடந்தது. காலத்தின் வரவால் கன்னியின் பூரிப்பில் தலைநிமிர்ந்து நின்ற அவளது மார்பகம் ஹாஜியாரின் உள்ளத்தைக் கிள்ளி விட்டது. உழைப்பின் மிகுதியால் உரமேறிப் போன அவளது அவயங்கள் நிலையழிந்த ஒரு வித போதையை ஏற்படுத்தி விட்டன அவருக்கு. நடு இரவும் சுடுகாட்டமைதியும் இச்சையின் சுறுசுறுப்பும் எல்லாமாகச் சேர்ந்து சுபைதாவின் எதிர்காலத்தைப் பாழ்படித்து விட்டன. அவள் அநாதை. சாப்பிட்ட எச்சிலை விட்டு விட்டு எழுந்து போகும் முதலாளியைப் போல ஹாஜியார் நடந்தார் கிணற்றடியை நோக்கி. வாயில் உமிழ்ந்ததை கையால் வாரியெடுக்கும் தொழிலாளியைப் போல, தன் சேலையை வாரி எடுத்துக கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள் சுபைதா. பணக்கார வீட்டில் இதுவும் ஒரு வேலைதானோ என்னவோ? அந்த அனுபவம் அன்று ஏற்பட்டது அவளுக்கு.

ஹாஜியார் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டார். நீண்ட காலச் சுமையை இறக்கி வைத்த மன நிம்மதி அவருக்கு. சுபைதாவுக்குத் தூக்கம் வரவில்லை. உள்ளம் விம்மிக் கொண்டிருந்தது. கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. வெட்கமும் பயமும் கலந்த துன்ப வேதனை அவளைக் கசக்கிப் பிழிந்தது.

காலத்திற்கு யாரைப் பற்றியும் கவலையில்லை. அதிகாலை மணி ஐந்தடித்தது. ஹாஜியார் அவசர அவசரமாக எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு வழக்கத்திற்கு மாறாக, அதிக நேரம் காலை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார். அவள் வேலைக்காரி. அடிமை. தன் கடமைகளைச் செய்ய வேண்டுமல்லவா? வெட்கத்தையும் வேதனையையும் அடுப்பங்கரைச் சாம்பலுக்குள் புதைத்து விட்டு வேலையில் ஈடுபட்டாள்.

ஹாஜியாரின் வீட்டிலிருந்த அரபி மாதக் காலண்டரில் மூன்று தாள்கள் கிழிக்கப்பட்டு விட்டன. சுபைதாவின் அடி வயிறும் பெருத்து விட்டது. ஒரு குழந்தைக்காக ஓராயிரம் தவம் புரிந்தும் கிட்டாது மனம் ஒடிந்து போனோர் எத்தனை பேர் இந்த உலகத்தில்? வேண்டாமென்று சொல்லும் போது வேண்டுமென்றே வாய்க்குள் திணிப்பது போல் அவள் உடலுக்குள் உருவாகிக் கொண்டிருந்தது ஒரு புது ஜீவன். அதன் உற்பத்திக்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் இருந்த அந்த இரத்தம் அநீதி என்ற அழுக்கேறி அசுத்தப்படுத்தப்பட்ட கிழட்டு இரத்தம், சீ! அவள் தேகம் குலுங்கியது. சிந்தனையும் கலைந்தது.

மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள் சுபைதா. பாதி திறந்திருந்த கதவின் வழியாக வானத்தில் சிதறிக் கிடந்த நட்சத்திரங்கள் தெரிந்தன அவளுக்கு. பிரசவ வேதனை அதிகரித்துக் கொண்டே இருந்தது. உடல் மெதுவாக அசைந்தது. “உம்மா!” என்று முனகினாள் அவள். அதேசமயம் கதவோரத்தில் யாரோ மூச்சுவிடும் சத்தம் கேட்டது. மெதுவாகத் தலையைத் திருப்பி, வாசலைப் பார்த்தாள். அங்கே அந்த கிழட்டு நாய் வாலை ஆட்டியபடி படுத்துக் கொண்டிருந்தது.

அந்த நாய் அந்தக் குடிசையைத்தான் தனது இராப்படுக்கைக்கு இடமாக்கிக் கொண்டிருந்தது. கிழவிக்கு அந்த நாய்தான் தோழன். அவள் அந்த நாயை அன்பாகத் தடவியபடி சொல்வாள், “இந்த உலகத்தில் மனிதனை விட எவ்வளவோ மேல்” என்று. அந்த உண்மை சுபைதாவுக்கு இப்போதுதான் தெரிந்தது. தனிமையில் தவித்துக் கொண்டிருந்த அவளுக்கு அந்தக் கிழ நாயின் கூட்டு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது.

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார். ஏன் உமறுலெப்பை கூடத்தான் இருக்கிறார். அவருக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய இரத்தத்திலிருந்து ஒரு புது ஜீவன் உருவாகப் போகிறது என்று, ஆனால்! அவர் என்ன செய்து விட்டார்? இந்தக் கிழ நாயை விட அவ்வளவு கிழமாகி விட்டாரா? இல்லையென்றால் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி இருப்பாரா? அவர் என்ன செய்வார்? அவர் குடியேறியிருக்கும் உலகம் அப்படி. ஏன் இந்த சமூகமும் அப்படித்தான்.

ஒன்றுக்குப் பதில் இரண்டு உயிர்களைத் துன்புறுத்துவதைத் தவிர வேறு நல்ல காரியம் இந்த உலகத்துக்குத் தெரியாது. உயிரும் உண்மையும் அற்றுப் போன இந்த சமூகம் எனது இன்றைய நிலையைத்தான் ஆதரிக்கும். இவைகளையெல்லாம் நினைத்து நடக்கப் போவது என்ன? அவள் ஒரு முட்டாள்!

முடிவில்லாத அந்த இரவு நீண்டு கொண்டேயிருந்தது. உள்ளத்திற்கும் உடலுக்கும் வேதனையைத் தந்து கொண்டே அந்த இரவு நீண்டது. விடிந்து விட்டால், எப்படியாவது அந்த வெட்ட வெளியில் படுத்துக் கொள்வாள். அங்கே சூரியனின் சுடுவெயிலும் சோலைக்காற்றும் அவளுக்கு ஆறுதலளிக்கக் கூடும்.

பிரசவ வேதனை நிமிசத்துக்கு நிமிசம் முன்னேறிக் கொண்டிருந்தது. மார்பின் மேல் ஒரு கல்லைத் தூக்கி வைத்தது போல் இருந்தது அவளுக்கு. வாயைத் திறந்து மூடினாள். உடலை அசைக்க முடியவில்லை. எண்ணங்கள் தடைப்பட்டன. பிணம் போலக் கிடந்தாள். இருதயம் துடித்துக் கொண்டிருந்தது துண்டிக்கப்பட்ட புழுவைப் போல.

மெல்ல மெல்ல உலகம் தெளிவடைந்து கொண்டிருந்தது. இருள் மங்கை தன் முந்தாணையை இழுத்து தன்னை மறைத்துக் கொள்ள முயன்றாள். குடிசை வாசலில் படுத்துக் கொண்டிருந்த நாய் தனது நாலு கால்களை நீட்டி உடம்பை நெளித்தது. அப்பொழுது அதற்கு ஒரு புது வாசனை மூக்கு வரை வந்து மோதியது. மோப்பம் பிடித்துக் கொண்டே சுபைதாவை நெருங்கியது அந்த நாய். சுபைதாவின் படுக்கை நீரால் நனைந்திருந்தது. நாயே முகத்தைத் தாழ்த்தி முகர்ந்து பார்த்தது. அதற்கு என்ன தோன்றியதோ! உறுமிக்கொண்டே தன் இடத்தில் படுத்துக் கொண்டது. சுபைதா மரக்கட்டையாகிக் கொண்டிருந்தாள். அவளது வேதனைக்கும் நீண்ட இரவுக்கும் காரணமாக இருந்த அந்த புது ஜீவன், உதயமாகிக் கொண்டிருந்தது.

குழந்தை பிறக்கும் வரை, சுபைதா காத்துக் கொண்டிருக்கவில்லை. அவளால் முடியவில்லை. குழந்தையின் உதயத்திற்காக உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள். ஆனால்! உயிர் அவள் பிடியிலிருந்து பாய்ந்து விட்டது! சுபைதா பிணமாகி விட்டாள். குழந்தை கழுத்தை நீட்டி உலகத்தை எட்டிப் பார்த்தது. இந்த உலகத்தைப் பற்றி என்ன நினைத்ததோ? பாதி வழியிலேயே தங்கி விட்டது. பூமியில் குதிக்காத குழந்தை வந்த வழியே போக முடியாமல் தத்தளித்து. முடிவு…. ? பிறப்பதற்கு முன்பே பிணமாகி விட்டது அந்தப் பாதிக் குழந்தை.

சிருஷ்டி தத்துவத்தின் சீர்கேட்டைப் பார்த்து சிரித்திருக்க வேண்டும் அந்த நாய். அது தன் தலையைத் தூக்கி, ஆகாயத்தைப் பார்த்து ஊளையிட்டது. அந்த நாயின் குரலோடு ஒரு மோட்டார் காரின் ஊது குழல் சத்தமும் வந்து கலந்து கொண்டது.

சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நாலைந்து கார்கள் அந்த வழியே பறந்தன. அதில் முதலாவது காரில் உமறுலெப்பை ஹாஜியார் இரண்டாவது முறை மக்கத்துக்குப் போகிறார்.

(1952, சுதந்திரன்)

 

 

http://akkinikkunchu.com/?p=65452

  • கருத்துக்கள உறவுகள்

அன்று me  too வும் டுவிட்டரும் இல்லை இருந்திருந்தால் உமறுலெப்பையை குமுறி எடுத்திருப்பார்கள்.....ஹாஜியார் மக்கம் போக மாட்டார் மக்கித்தான் போயிருப்பார்......!  tw_blush:

நன்றி கிருபன்.......!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்னைப் பிறப்பதே சாபம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்னைப் பிறப்பதே சாபம்

என் தாய் ஒரு பெண்.
காலமாகி விட்டார்.
நான் கவலைப்படவில்லை.

ஏனெனில் அது இயற்கையின் நியதி.
ஆனால்....
என் தாயை தினமும் நினைவுகூர்கின்றேன். வணங்குகின்றேன்.

தாயெனும் பெண் தெய்வம் போன்றவள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர்....ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி...ஏற்பட்டது!

கிருபனுக்கு....விசேட நன்றிகள்!

எழுத்துக்கள் ..நகர்ந்து செல்லும்..விதம் மிகவும்..அருமையாக இருந்தது!

கதை எழுதப்பட்டு....எழுபது ஆண்டுகள்...கடந்து விட்ட போதிலும்....மனித வாழ்வோ...அல்லது நாகரீகமோ...எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை...என்னும் போது...சுபைதாவுக்கு வலித்ததை விடவும்....அதிகமாக வலிக்கின்றது!

அந்தக் குழந்தை....அதிர்ஷ்டசாலி..என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா, இலங்கையின் மூத்த படைப்பாளிகளின் கதைகளை அவுஸில் இருந்து இயங்கும் இணையத்தளம்தான் வெளியிடுகின்றது. அவர்களின் செயலுக்குப் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

புங்கை அண்ணா, இலங்கையின் மூத்த படைப்பாளிகளின் கதைகளை அவுஸில் இருந்து இயங்கும் இணையத்தளம்தான் வெளியிடுகின்றது. அவர்களின் செயலுக்குப் பாராட்டுக்கள்.

தகவலுக்கு நன்றி, கிருபன்! தொடர்ந்தும் இணையுங்கள்! மிகவும் வரவேற்கத் தக்க முயற்சி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.