Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நவ திருப்பதிகள் – காலத்துக்கும் கடவுளுக்கும் இடையே!


Recommended Posts

 1.  
   
   
   
   
   
  puliankudi.JPG
  நம்பவே முடியவில்லை, அரை நாளில் ஒன்பது கோவில்களையும் பார்த்து, ஒன்பது கோவில் தெய்வங்களையும் தரிசித்துவிட்டோம், எல்லாம் சுருக்கமாக, பரபரப்பாக, விறுவிறுப்பாக.
  விடியுமுன் நல்ல மழை பெய்து முடிந்த நாள் காலையில் மீண்டும் எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் மழையோ தூரலோ பிடித்துக்கொள்ளலாம் என்ற துடியான சூழலில்தான் திருச்செந்தூரிலிருந்து புறப்பட வாய்த்தது.
  மரங்கள் நிறைந்த சாலைகள், நீர் நிரம்பிய குளங்கள், வாய்க்கால்கள், வயல்வெளிகள், சின்னச் சின்னக் கோவில்கள். தேநீர்க் கடைகள். பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது இந்தப் பக்கம் பார்ப்பதா, அந்தப் பக்கம் பார்ப்பதா, ஏதாவது விடுபட்டுவிடுமோ என ஒரே பதற்றம். சென்னையில் நீருக்கும் நிழலுக்கும்  சாகிறவர்களுக்கு மட்டும்தான் இந்தப் புவிக்கோள சொர்க்கத்தின் அருமை விளங்கும்.
  முதலிலேயே நடத்துநரிடம் சொல்லிவைத்துவிட்டேன், தென் திருப்பேரை நெருங்கும்போது சொல்லுங்கள். 1 – 3 பேருந்து என்று பெயர். திருச்செந்தூரில் புறப்பட்டால் திருநெல்வேலி செல்லும் வழியில் மூன்று இடங்களில்தான் நிற்கும் என்றார்கள். ஆனால், அதுவென்னவோ வழியெங்கும் நினைத்த இடத்திலெல்லாம் நின்றுதான் சென்றது. பேருந்தில் ஏறுகிற ஒவ்வொருவரும் நடத்துநருக்கு அல்லது ஓட்டுநருக்கு அல்லது இருவருக்கும் சேர்த்து வணக்கம் வைத்துக் கொண்டார்கள். எல்லாரும் பல்வேறு வேலைகளுக்குச் செல்பவர்கள்போல. என்ன நல்ல உறவு!
   
  தென் திருப்பேரை வந்தது. பேருந்து நிறுத்தம், என்ன, எல்லாம் நெடுஞ்சாலையோரம்தான், வந்திருந்தார் நண்பர் சரவணன். தொடங்கியது மோட்டார் சைக்கிள் பயணம். ஒரு தேநீர் அருந்துவதுகூட நேரத்தைக் குடித்துவிடலாம் என்கிற அளவுக்கு விறுவிறுப்பான பயணம். ஊருக்குள் செல்லும் சாலையில் புகுந்து தென் திருப்பேரைக்கோவிலுக்குச் சென்றோம்.
  நல்ல வானிலை. நீண்ட, விசாலமான சன்னதித் தெரு. கோவில் இருக்கும் வீதி என்றாலும் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரேஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து குப்பையைக் கொட்டிவிட்டுத் திரும்பினார். அமைதி அப்படியே உறைந்து கிடந்தது. முதலிலேயே நண்பர் சொல்லிவிட்டார், களவாணிப் பயமே இல்லாமல் இங்கேயெல்லாம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் செருப்பைக் கழற்றிவிடலாம், கவலைப்படாதீர்கள் என்றார். வெளியேயிருந்து பார்க்கும்போதே இறைவனின் கருவறைத் தீபம் தெரிந்தது. ஆனால், அழைத்தால் பெருமாளுக்கே கேட்காது, அவ்வளவு நீண்ட தொலைவு.
  thiruperai.jpg
  கோவிலுக்கு உள்ளே சென்றுகொண்டிருக்கும்போதே பூசகர் குரல் கொடுத்தார், ‘அப்படியே பிரகாரம் வலம் வந்துவிடுங்கள், பிறகு சுவாமியை சேவித்துக்கொள்ளலாம், உள்ளே ஒரே புழுக்கம், சற்று காற்றாடிவிட்டு வந்துவிடுகிறேன்’. உண்மைதான், அவரும் எவ்வளவு நேரம்தான், உள்ளேயே நின்றுகொண்டிருப்பார்?
  ஆனால், வலம் வந்தபோது அவரும் வந்துவிட்டார். இன்னும் சில பக்தர்கள் இருந்தனர். எல்லாரையும் எங்கேயிருந்து வருகிறீர்கள், என்ன வேலை பார்க்கிறீர்கள் என்றெல்லாம்  விசாரித்தார். எந்தெந்த வழியே சென்றால் நவ திருப்பதிகளையும் ஒரே நாளில் தரிசிக்கலாம் எனத் தெரிவித்தார். வடக்கே ஏதோ நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர், இப்போது ஓய்வாகப் பெருமாள் சேவைக்காக வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார், துணிச்சல்தான்.
  கோவில்களில் மந்திரங்கள் சொல்வதைப் பற்றியெல்லாமும்கூட விவரித்தார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளைத் தரிசித்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை என்றபோது, அடடா, அவசியம் அவரைப் போய்ப் பாருங்கள் என்று பரிந்துரைத்தார்.
  … திருப்பதி பெருமாள் எல்லாம் காசுக்கு மயங்குகிறவர், அவருக்குக் கொண்டுபோய்க் காசைக் கொட்டினால் செய்துகொடுத்துவிடுவார், அல்லது காசு கொடுக்கிறேன் என்று உறுதி கூறினாலும் செய்துகொடுத்துவிடுவார். ஆனால், காஞ்சி வரதர் அப்படியெல்லாம் இல்லை, ஏழை பணக்காரன் எல்லாம் பார்க்க மாட்டார். காசுக்குக் கொஞ்சமும் மயங்க மாட்டார். பிரியமானவன், முகத்தில் உமிழ்ந்தாலும் ரசிப்பார், பிடிக்கவில்லை என்றால் கோடி கொடுத்தாலும் கண்டுகொள்ள மாட்டார், காசை வைத்து இவரைக் குளிப்பாட்டிவிட முடியாது. அதேபோல, திருவண்ணாமலை அருணாசலேசுவரரையும் போய்த் தரிசியுங்கள், எங்கிருந்தாலும் அவரை நினைத்தாலே முக்தி (சொல்லிக்கொண்டிருப்பவர் வைணவர்). அவர் அக்னி. அக்னிதான் அனைத்துக்கும், அனைவருக்கும் குரு… அற்புதமான, மறக்க முடியாத மனிதர். அவர் பேசப் பேச நாள் முழுக்கக் கேட்டுக்கொண்டிருக்கலாம் போல.
  நவக் கிரகங்களில் சுக்கிரனுக்கு அதிபதியாக வணங்கப்படுகிறார், தென் திருப்பேரையில்  கருவறையில் வீற்றிருக்கும் மகர நெடுங்குழைக்காதர். உற்சவர் நிகரில் முகில்வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம். குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என இரு நாச்சியார்களும் இங்கே தனிக் கோவில் கொண்டுள்ளனர்.
  வேறெங்கும் இல்லாத வகையில், இந்தத் திருக்கோவிலில் கருவறைக்கு நேரெதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருக்கிறது கருடன் சன்னதி. பக்தர்கள் வேதம் ஓதுவதையும் குழந்தைகள் விளையாடுவதையும் கண்டுகளிப்பதற்காகக் கருடாழ்வாரைப் பெருமாள் ஒதுங்கியிருக்கச் சொன்னதாக நம்பிக்கை.
  திருப்பேரையின் மூலவரும் சரி, உற்சவரும் சரி, அவ்வளவு அழகு. உற்சவரைக் காணக் கண் கோடி வேண்டும். ஸ்ரீரங்கத்தில் உற்சவரான நம்பெருமாள் அழகும் ஆளுமையும் கலந்த  திருமேனி என்றால் இங்கே நிகரில் முகில் வண்ணனுக்கு அழகே பிரதானம். பெயருக்கேற்ப நிகரற்ற அழகு. கருவறையில் மகர நெடுங்குழைக்காதருக்கு முன்னிருந்து இவரும் தரிசனம் தருகிறார்.
  தாயும் தோழியரும் தடுத்தும் கேளாமல் எம்பெருமானை அடைந்தே தீருவேன் என்ற பராங்குச நாயகியின் கூற்றாக இருக்கின்றன, நம்மாழ்வாரின் மங்களாசாசனப் பாடல்கள்.
  யாவரும் தடுத்தும் தலைவி, தலைவனைச் சேரத் துணிகிறாள், நான் திருப்பேரை சேர்வேன், எம் மனம் கண்ணன் செங்கனிவாயின் சிறந்தது, தோழி என் மனம் நாணும் நிறையும் இழந்தது, அன்னைமீர் என் மீது சினம் எதற்கு?அன்னைமீர், தென் திருப்பேர் நகரைக் காட்டுங்கள், திருப்பேர் நகர்க்கு என்னை உடனே அழைத்துச் செல்லுங்கள், தோழி, என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன், தோழி, திருப்பேரையில் சென்று சேர்வேன், என்னைத் தேற்றாதீர்கள், திருப்பேரைதான் சேர்வேன், திருப்பேரையான் என் மனத்தைக் கவர்ந்துவிட்டான் என்றெல்லாம் கூறுகிறாள் பராங்குசநாயகி.
  பேரெயில்சூழ்கடல்தென்னிலங்கைசெற்ற பிரான்வந்துவீற்றிருந்த
  பேரையிற்கேபுக்குஎன்நெஞ்சம்நாடிப் பேர்த்துவரவெங்கும்காணமாட்டேன்
  ஆரைஇனிஇங்குடையம்? தோழீ! என்னெஞ்சம்கூவவல்லாரும்இல்லை
  ஆரைஇனிக்கொண்டுஎன்சாதிக்கின்றது? என்நெஞ்சம்கண்டதுவேகண்டேனே (3365)
  திருப்பேரை என்றால் என்ன? இது தென் திருப்பேரை என்றால் வட திருப்பேரை என்றெதுவும் இருக்கிறதா? இருந்தால் இவற்றுக்கு இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
  ‘தென் திருப்பேரை என்பது ஸ்தலப் பெயர் என்று சிலர் கருதுகிறார்கள். லட்சுமியின் பிரார்த்தனைப்படி, துருவாச மஹரிஷி, பூமிதேவியை லட்சுமியைப் போல ஆக என்று சபித்ததாகவும் பூதேவியும் துருவாசர் உபதேசித்த அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டு, தவம் இருந்து ‘ஸ்ரீபேரை’ (லட்சுமியின் உடல்) என்னும் நாமத்தைத் தரித்துப் பங்குனிப் பூர்ணிமையில் தாமிரபரணித் தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்ய முயன்றபொழுது, மகாராக்ருதியான (மின்போல் வடிவமுள்ள) இரண்டு குண்டலங்களைக் கண்டு பகவானுக்குச் சமர்ப்பிக்க ‘மகர நெடுங்குழைக்காதன்’ என்ற திருநாமம் பூண்டதாகவும் ஸ்ரீபேரை நாமத்தை பூதேவி தரித்ததனால், இத்தலத்துக்கு ஸ்ரீபேரை (திருப்பேரை) என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஐதீகம்.’
  ஆனால், ஊர்ப் பெயர் தென் திருப்பேரெயில்தான். தேன்மொய்த்த பூம்பொழில்தண்பணைசூழ் தெந்திருப்பேரெயில், கனிந்தபொழில் திருப்பேரெயில், கோலச்செந்நெற்கள் கவரி வீசும்கூடுபுனல் திருப்பேரெயிற்கே… என்றெல்லாம்தான் திருவாய்மொழியில் நம்மாழ்வார் குறிப்பிடுகிறார், காலப்போக்கில் பாடபேதமாக திருப்பேரை என்றாகிவிட்டிருக்கலாம் என்று அறிஞர் ந. சுப்பு ரெட்டியார் குறிப்பிடுகிறார்.
  tirukolur%2Btower.jpg
  அடுத்தது, திருக்கோளூர். பேச்சுவழக்கில் எல்லாருமே திருக்களூர் என்கிறார்கள். ஒற்றைச் சாலை. சிறிய கோவில்தான். ராஜகோபுரம் கட்டத் தொடங்கி, இடையில் நின்று, மொட்டைக் கோபுரமாக இருக்கிறது. மதுரையில் ராயர் கோபுரம், திருச்சி திருவெள்ளறைக் கோபுரம் போல. தமிழகத்தில் இவ்வாறு குறையாக, பெரும்பாலும் கல் கட்டுமானத்துடன்,  நிற்கும் கோபுரங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
  பார்வதியின் சாபத்தால் அனைத்தையும் இழந்து, விகாரமாகிவிட்ட குபேரன், இங்கிருக்கும் வைத்தமாநிதிப் பெருமாளிடம் வேண்டி மீண்டும் செல்வங்களையும் செல்வாக்கையும் பெற்றதாக நம்பிக்கை. கோவிலுக்கு வரும்போது வாசலில் ஒரு காஸ்ட்லி கார் நின்றுகொண்டிருந்ததன் பொருள் புரிந்தது. செல்வம் வேண்டுவோர் எல்லாரும் இங்கே வந்து செல்கிறார்கள் என்றார்கள்.
  திருக்கோளூரில் கருவறைத் தெய்வமாக விளங்கும் வைத்தமாநிதிப் பெருமாள், செவ்வாய்க்கு அதிபதியானவர்.புஜங்க சயனத் திருக்கோலம், கிழக்கே திருமுகம். செல்வத்தைப் பாதுகாத்து மீண்டும் அளந்து தந்ததால் பெருமாள் இங்கே மரக்காலைத் தலைக்கு வைத்துப் பள்ளிகொண்டிருக்கிறார். குமுதவல்லி, கோளூர்வல்லி என இரு நாச்சியார்கள்.
  இங்கேயும் கோவிலில் கூட்டமில்லை. பூசகர் மிக அன்பாகப் பேசினார், அதிசயமாகத்தான் இருந்தது. பெருமாளைப் பார்த்துவிட்டுப் புறப்படும்போதே வெளியே திருமஞ்சனம் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். சென்றால், ஒரு சின்னஞ் சிறுவன், மஞ்சள் தந்தான். பள்ளிக்கூடம் விடுமுறையாக இருக்க வேண்டும். பள்ளிகொண்ட பெருமாள் சேவைக்கு வந்துவிட்டிருக்கிறான்.
  கோவிலுக்கு உள்ளே புறச் சுவர் முழுவதும் கல்வெட்டுகள், என்னென்ன தகவல்கள் இருக்கின்றனவோ, இவற்றையெல்லாம் படித்திருப்பார்களா? படியெடுத்திருப்பார்களா? இவற்றிலிருந்து கிடைக்கும் செய்திகள் என்ன? தெரியவில்லை.
  tirukolur%2Bkalvettu.jpg
  நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். பராங்குசநாயகியான தம் மகளுடன் தாய் படுத்திருக்க, சற்றுக் கண் அயர்ந்து விழித்துப் பார்த்தால் மகளைக் காணவில்லை. பதைத்துப் போகிறாள், தேடுகிறாள், ஆஹா, மகளுக்குத் திருக்கோளூர் எம்பெருமான் மீது பெரும் பற்று, அங்கேதான் சென்றிருப்பாள் என்று முடிவுக்கு வருகிறாள். தாயின் கூற்றாகப் பாடல்களைப் பாடியிருக்கிறார் நம்மாழ்வார்.
  என் மகள் திருக்கோளூர்தான் சென்றிருப்பாள், திருக்கோளூர்க்குப் போயிருப்பாளோ, திருக்கோளூரில் என் மகள் என் செய்வாள்? திருக்கோளூர்க்கா என் மகள் செல்ல விரும்பினாள், திருக்கோளூரை என் மகள் எப்படி ரசிக்கின்றாளோ?திருக்கோளூர்க்கு என் மகள் எப்படி நடந்திருப்பாள்? என் மகள் கண்ணீர் தளும்பச் செல்வாளோ? என் மகள் என்னை நினையாமல் சென்றுவிட்டாளே, பழி வருதலை நினையாமல் என் மகள் போய்விட்டாளே என்றெல்லாம் பாடிப் புலம்புகிறார் தாயாக நம்மாழ்வார்.
  காரியம்நல்லனகளவைகாணில் என்கண்ணனுக்கென்று
  ஈரியாயிருப்பாள் இதெல்லாம்கிடக்கஇனிப்போய்,
  சேரிபல்பழிதூயிரைப்பத் திருக்கோளூர்க்கே,
  நேரிழைநடந்தாள் எம்மைஒன்றும்நினைத்திலளே. (3301)
  இது மதுரகவியாழ்வார் அவதரித்த தலமும்கூட. எண்பது வயதினராக இருந்த மதுரகவியாழ்வார், திருக்குருகூரில் பதினாறு வயதேயான நம்மாழ்வாரைக் குருவாக ஏற்று, அவருடைய அருளுக்குப் பாத்திரமாகி, அவரைப் பற்றி பதினோரு பாடல்களைப்  பாடியவர். பெருமாளைப் பற்றி பாடவில்லை. என்றாலும் குருபக்தியின் சிறப்பால் ஆழ்வார்களில் ஒருவரானார்.
  தொடர்ந்து ஆழ்வார்திருநகரி. ஆழ்வார்திருநகரியின் பழைய பெயர் திருக்குருகூர். குருகு என்றால் நாரை, கோழி, குருக்கத்தி என்று பொருள். பறவையின் பெயராலான பதி என்று கூறலாம்.
  நவ திருப்பதிகளில் ஆழ்வார்திருநகரியும் ஸ்ரீவைகுண்டமும் (தென் திருப்பேரை ஓரளவு) பெரிய கோவில்கள், இவ்விரண்டு கோவில்களிலும்தான் மெலிதான சலசலப்பும் கொஞ்சம் பக்தர்களின் நடமாட்டமும் இருந்தது. கோவில் வளாகத்திலேயே நியாயவிலைக் கடைகூட இருக்கிறது. உள்ளே கோவில் கருவறைச் சுவர்களின் புறத்தே ஏராளமான கல் தூண்கள், எல்லாம் அழகான வேலைப்பாடுகளுடன், கடைந்தெடுத்தாற்போல.
  alwar%2Bkaruvarai%2Bpillers.jpg
  நம்மாழ்வார் அவதரித்த தலம். உண்மையிலேயே பெயரைப் போலவே, இங்கே பெருமாளுக்கு இணையாக அல்லது கொஞ்சம் கூடுதலாகவே நம் - ஆழ்வாருக்கு மதிப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. நம்மாழ்வாருக்குத் தனியே கோவிலும் இருக்கிறது. நாங்கள் சென்ற நேரம், ஏதோ பூஜை, நம்மாழ்வாருக்கு நைவேத்தியம் முடிந்த பிறகுதான் பெருமாளுக்காம். பிறகுதான் தரிசிக்கவே முடியும் என்று கூறிவிட்டார்கள். நம்மாழ்வாருக்கு ஆராதனை முடிந்ததும் வெளியே வந்து வளைய நின்றுகொண்டிருந்த பக்தர்கள் அனைவரின் அருகிலேயே வந்து சடாரி சாத்தினார்கள், அவரவர் இடத்துக்கே வந்து பிரசாதமாக தயிர்ச் சோறும் (வடசொல், ததியோதனம்!) வழங்கினார்கள். காத்திருந்து முடிந்த பிறகே பெருமாளைத் தரிசித்தோம்.
  குருகூரில் குறுநில மன்னர் காரியார்க்கும் உடைய நங்கைக்கும் பிறந்தவர் சடகோபர். பிறந்ததிலிருந்தே அழவில்லை, கண் விழித்தல், பால் அருந்துதல் இல்லை, கவலையுற்று,  ஆதிநாதர் திருக்கோவிலுக்குப் பெற்றோர் சென்றபோது, குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்த புளிய மரத்தடியில் அமர்ந்துகொண்டான். உணவில்லை என்றாலும் உடல் வளர்ச்சியில் பிரச்சினையில்லை. பதினாறு ஆண்டுகள் மரத்திலும் மரத்தடியிலும் கழித்தார் நம்மாழ்வார். திருக்கோளூர்ப் பிறந்து வட நாடுகளுக்குச் சென்றிருந்த மதுரகவியாழ்வார் தென் திசையில் தெரிந்த ஒரு பேரொளியைப் பின்பற்றி வந்து புளியமரப் பொந்தில் சடகோபரைப் பார்க்கிறார். அவரைச் சோதித்த போது அளித்த விவரங்களிலிருந்து மகா ஞானி அவர் என உணர்கிறார். பின்னாள் நம்மாழ்வாரான அவருக்கே - சடகோபருக்கே - சீடராகிவிடுகிறார் மதுரகவியாழ்வார்.
  நம்மாழ்வார் உறைந்த புளியமரமே புனித மரமாக இன்றும் வணங்கப்படுகிறது. உறங்காப்புளியமரம் என்கிறார்கள். இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் உலகைக் காப்பதாக நம்பிக்கை. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இப்போதும் நல்ல நிலையில் இருக்கிறது இந்த உறங்காப்புளி.
  pulhi.JPG
  ம்மாழ்வாரின் பூதவுடல், இந்தப் புளிய மரத்தடியிலேயே  இடப்பட்டு, அவ்விடத்திலேயே ஆழ்வாரின் கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறுகிறார்கள்.  கோவிலில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் விளங்குகிறார் நம்மாழ்வார். நவ திருப்பதிகள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன.
  ஆழ்வார்திருநகரியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் கருவறைத் தெய்வமான ஆதிநாதர், நவ கோள்களில் குருவுக்கு அதிபதி. தாயார் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (ஊரில் ஆதிநாயகி, குருகூர்நாயகி என்கிறார்கள்), தாயார்களுக்குத் தனித்தனி சன்னதிகள், உற்சவர் பொலிந்து நின்ற பிரான்.
  கோவிலுக்குள் பிரகாரத்தில் ஒரே ஓர் உதவியாளருடன் தனியே அமர்ந்திருந்தார் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர். குழந்தைகள் அதிகாலையில் எழுந்து கற்பதைப் பற்றி, மிகுந்த உற்சாகத்துடன் விளக்கினார்.
  கோவிலுக்கு வெளியே புற மதிலில் வடகிழக்கு மூலையில் பட்சிராஜர் இருக்கும் இடத்துக்குக் கீழே (வேறெங்கும் இவ்வாறிருப்பதாகத் தெரியவில்லை) சன்னதியைப் போல மக்கள் எல்லாம் வணங்குகிறார்கள். பூச்சி பொட்டு கடிக்கக் கூடாதென்பதற்காக வேண்டிக் கொள்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை விழாவும் நடைபெறுகிறது.
  ஆதிநாதரைப் பதினொரு பாடல்களில் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.  (மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்). இத்தலத்து இறைவனின் மேன்மையை விளக்கிச் சொன்னால், அறிந்து, பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்வார்கள் என்று அருளுரை செய்கிறார் நம்மாழ்வார்.
  ஆயிரம் இருக்கப் பிற தெய்வங்களைத் தேடுகிறீர்களே, திருக்குருகூரைப் போற்றி வணங்குங்கள், திருக்குருகூர்ப்பரனே மாபெருந்தெய்வம், எல்லாத் தெய்வங்கட்கும் நாயகன் நாரணனே, நாராயணனே எல்லாத் தெய்வங்களுமாக விளங்குகிறான், மாயையில் சிக்காதீர், பரமனை நாடி ஓடுமின், ஆதிநாதர்க்கே அடிமையாக இருங்கள், மற்றைத் தெய்வங்களை விடுத்து ஆதிபிரானைப் போற்றுக, திருக்குருகூரைச் சிந்தியுங்கள் உய்யலாம், குடக்கூத்தனுக்கு அடிமை செய்வதே ஏற்றது, இவற்றைப் பாடுக, வைகுந்தம் எளிதில் கிட்டும் என்றெல்லாம் பாடுகிறார் நம்மாழ்வார்.
  பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்
  நாயகன்அவனே கபாலநன்மோக்கத்துக் கண்டுகொண்மின்,
  தேசமாமதிள்சூழ்ந்தழகாய திருக்குருகூரதனுள்
  ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதுஇலிங்கியர்க்கே?” (3109)
  விடிந்தபோது ஒரு காபி குடித்தது, நம்மாழ்வாரின் தயிர்ச் சோறு தாண்டி ஒரு பொட்டுத் தண்ணீர்கூட வாயில் படவில்லை. ஏதோ ஒரு காபிக் கடை, நன்றாக இருக்கும் என்றார் சரவணன், ஆனால், டீ, காபிக்காக நின்றால் ஏதேனும் கோவில் விடுபட்டுப் போய்விடுமோ என்ற யோசனை காபியைக் கைவிடச் செய்தது. அடுத்தது, ஸ்ரீவைகுண்டம். தாமிரவருணியைத் தாண்டி வடக்கே செல்ல வேண்டும்.
  பாலமாக இருக்கும் அணையின் மீதுதான் சென்றோம். ஏதோ இரண்டு முறை திருச்செந்தூர் சென்றபோது பார்த்தது, பாலத்தின் மீது செல்ல வாய்க்கும் என நினைத்ததில்லை. பாலம் தாண்டிய பிறகும் மறைந்த பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவுதான். ஒருகாலத்தில் இந்த ஸ்ரீவைகுண்டம் அணை (தாமிரவருணிக்குக் குறுக்கே இருக்கும் அணைகளில் இதுவொன்றுதான் பிற்காலத்தில் – பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டது, மற்றவையெல்லாம் மிகப் பழையன) வலு குன்றிவிட்டதாகத் தெரிவித்து இடித்துவிட்டு இதே இடத்தில் புதிய அணை கட்டுவதென முடிவு செய்திருக்கிறார்கள் (இடித்தாலும் காசு, கட்டினாலும் காசு!). இதுபற்றிய பரிந்துரைகள் வந்தபோது, பொதுப் பணித் துறையில் தொழில்நுட்பப் பகுதியில் இருந்த முனைவர் பழ. கோமதிநாயகம்தான், நேரில் ஆய்வு நடத்தி, அணை வலுவாக இருக்கிறது, இடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அறிக்கையளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் தப்பிப் பிழைத்து இப்போதும் கெட்டியாக நிற்கிறது ஸ்ரீவைகுண்டம் அணை.
  ஸ்ரீவைகுண்டம், பெரிய கோவில். சூரிய தலமான ஸ்ரீவைகுண்டத்தில் அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோவிலில்கருவறைத் தெய்வம் வைகுண்ட நாதர். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார், தனித்திருக்கிறார். தாயார் வைகுண்டவல்லி. வைகுண்டவல்லித் தாயாருக்கும் சோரநாத நாயகிக்கும் தனித்தனி சன்னதிகள். உற்சவர்,சோரநாதர் என்ற கள்ளபிரான், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
  கள்ளபிரானின் திருமேனியை வார்த்த சிற்பி, அவருடைய பேரழகில் மயங்கிப் போய், அவருடைய கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினானாம். அவன் கிள்ளிய தடம், கள்ளபிரான் கன்னத்தில் பதிந்திருப்பதாகப் பிறகு சொன்னார்கள். தரிசித்தபோது அவர் அழகைக் கண்டும் கன்னத்துக் கிள்ளல் பற்றித் தெரியாததால் கவனிக்கத் தவறிவிட்டேன். இன்னொரு முறை செல்லும்போது கவனிக்க வேண்டிய எத்தனையோ விஷயங்களில் இதுவுமொன்று.
  thayar%2Bmandapam.jpg
   
  சித்திரை ஆறாம் நாளும் ஐப்பசி ஆறாம் நாளும் கோபுர வாயில் வழியே சூரியன், கருவறை வைகுண்டநாதர் திருமேனியின் மீது பரவி ஆராதிக்கிறான்.
  தாயார் சன்னதி முன் ஒரு கல் மண்டபம் இருக்கிறது, அடடா, என்ன அழகு, என்ன வேலைப்பாடு. மரத்தில் செதுக்கியதைப் போலவே இருக்கிறது. கோலமிட்டாற்போல கல்லிலேயே செதுக்கியிருக்கிறார்கள். நம்முடைய மக்களின் ‘திருப்பணி’க்கு அஞ்சி, தற்போது கம்பிக் கூண்டில் அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
  chithira%2Bsuvar.jpg
  கருவறை சுற்றுப் பிரகாரத்துச் சுவர் முழுவதும் முழு அளவில் ஓவியங்கள், எந்தக் கவனிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. அத்தனையும் உதிர்ந்தும் சாயம் துறந்தும் அழிந்துகொண்டிருக்கின்றன. ஏதாவது பெருங்கதையின் சித்திரங்களாக இருக்க வேண்டும். அவற்றைப் பார்த்த பிறகு இடத்தைவிட்டு நகரவே முடியவில்லை. பெருந் துயரம்.யாரையாவது ஓங்கி இறுக்க வேண்டும் போலிருந்தது. கோவிலுக்கு உள்ளே உயரக் குறைவான, ஆனால் விஸ்தாரமானஅகலகல மண்டபங்கள்.
  thiruvengada%2Bsannathi.jpg
  கோவிலைவிட்டு வெளியே வரும்போது இடப்புறத்தில் இருக்கிறது திருவேங்கடமுடையான் சன்னதி, சம்பந்தமேயில்லாமல் எங்கேயோ இருந்து கொண்டுவந்து இறக்கிவைத்ததைப் போல! சன்னதியென்ன, பெரிய மண்டபம், நுழை வாசலில் தூண்களுடன் தூணாக நான்கு பெரும் சிற்பங்கள், இரண்டு வில்லேந்திய ராமர்கள், அருகே அனுமன்கள் இருக்கிறார்கள். மற்ற இருவரைத் தெரியவில்லை.
  yazhi%2Bpillers.jpg
  உள்ளே மண்டபத்தைத் தாங்கி இருபுறமும் யாளிகளுடன் பிரம்மாண்டமான தூண்கள். திருவேங்கடமுடையானைப் பார்க்க முடியவில்லை, சன்னதி சாத்தியிருந்தது. ராஜகோபுரத்தில் ஒரு சிற்பத்தைப் பார்த்தேன், குரங்கு என்றார்கள். ஆனால், அது தேவாங்காகத்தான் இருக்க வேண்டும். விசாரித்தறிய முடியவில்லை, நேரமும் இல்லை. ஆனால், இருந்து காண வேண்டிய விஷயங்கள். இன்னும் என்னவெல்லாம் இப்படி இருக்கின்றனவோ?
  thevangu.jpg
  என்னை ஆள்பவனே, நாங்கள் காண நீ வா என்றும் வைகுந்தா, பூமியில் எங்களுக்கும் காட்சி தந்திடு என்றும் இரண்டே பாடல்களில் கள்ளபிரானை மங்களாசாசனம் செய்திருக்கிறார் நம்மாழ்வார்.
  எங்கள்கண்முகப்பேஉலகர்களெல்லாம் இணையடிதொழுதெழுதிறைஞ்சி
  தங்களன்பாரத்தமதுசொல்வலத்தால் தலைத்தலைச்சிறந்துபூசிப்ப
  திங்கள்சேர்மாடத்திருப்புளிங்குடியாய்! திருவைகுந்தத்துள்ளாய்!தேவா!
  இங்கண்மாஞாலத்திதனுளும்ஒருநாள் இருந்திடாய்வீற்றிடங்கொண்டே (3575)
  அடுத்தடுத்த கோவில்கள் யாவும் துண்டு துண்டுகளாகக் கிராமங்களையொட்டி, அல்லது வெளியே தள்ளிஇருக்கின்றன. பெருமாள் பெரியவர்களாக இருந்தபோதிலும் திருக்குளந்தை தவிர மற்ற நான்கும் சிறிய கோவில்கள்தான்.
  tiruvaraguna.jpg
  திருவரகுணமங்கை என்றால் ஒருவருக்கும் தெரியாது, நத்தம் என்றால்தான் அப்படி விளங்குவதைப் போல சொல்லுங்கள் என்கிறார்கள் (திருக்குளந்தையும் அப்படித்தான்).
  சிறு சாலையையொட்டி நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கையின் திருக்கோவில். சந்திரனுக்குரிய தலம். இங்கே கருவறைத் தெய்வமோ, ஆதிசேஷன் குடை பிடிக்க அமர்ந்திருக்கும் விஜயாசனப் பெருமாள், கிழக்கு நோக்கியிருக்கிறார். தாயார் வரகுணவல்லி. உற்சவரோ எம்இடர் கடிவான்.
  கோவில் வாசலில் இங்கு கல்கண்டு, திராட்சை வாங்கி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்றும் இத்திருத்தலத்தில் நெய் தீபம் ஏற்றினால் நினைத்த காரியம் நடக்கும் என்றும் யோகநரசிம்மருக்கு இளநீர் அபிஷேகம் செய்ய இளநீர் கிடைக்கும் என்றும் அறிவிப்புகளாக எழுதிவைத்திருக்கிறார்கள்.
  மணவாள மாமுனிகளும் நம்மாழ்வாரும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
  புளிங்குடிக்கிடந்துவரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
  தெளிந்தஎன்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்!எனக்கருளி
  நளிந்தசீருலகம்மூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
  பளிங்குநீர்முகிலின்பவளம்போல் கனிவாய்சிவப்பநீகாணவாராயோ (3571)
  என்றழைத்திருக்கிறார் நம்மாழ்வார்.
  tirupuliangudi.jpg
  திருப்புளியங்குடியும் அப்படித்தான், சின்ன கிராமம், சிறிய கோவில். குறையாக நிற்கும் கோபுரம். திருப்புளிங்குடி நவக்கிரகங்களில் புதனுக்கு அதிபதியானவராகப் பெருமாள் அருள்புரியும் தலம், கருவறைத் தெய்வம், கிழக்கு நோக்கியவாறு, தென்புறம் தலைவைத்து ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருக்கோலத்தில் இருக்கிறார். காய்சினவேந்தர் என்று திருநாமம். தாயார் மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார். உற்சவர் எம் இடர் களைவான், தாயார் புளியங்குடிவல்லி.
  நாங்கள் சென்ற நேரம், ஒரு சிறுவன்(ர்)தான் பெருமாளைக் கவனித்துக் கொண்டிருந்தான்(ர்). பட்டனைத் தட்டிவிட்டாற்போல பெருமாளைப் பற்றிச் சொன்னான்(ர்). வெளியே சுற்றிவரும்போது வடப்பக்கமுள்ள சிறு சாளரம் வழியே பெருமாளை முழுவதுமாகத் தரிசியுங்கள் என்றும் தெரிவித்தான்(ர்). காய்சினவேந்தரை அந்தக் கோணத்தில் தரிசிக்கும்போது இன்னமும் அழகாக, ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது. நல்ல ஏற்பாடுதான்.
  எல்லா உறவுமுறைகளையும் கொண்ட சிறந்த உறவினராக இருக்கும் எம்பெருமான், நமக்கு நன்மை செய்வதற்காகவே, திருப்புளியங்குடி என்ற திவ்விய தேசத்தில் கண் வளர்கிறான். நாம் அங்கே சென்று அவனை அணுகினால் நமக்கு உறவினர்கள் செய்யும் உதவிகளையெல்லாம் செய்வான் என்றே திருப்புளியங்குடி சென்று இறைவனை அடைகிறார் ஆழ்வார்.
  தமக்கு அருள் செய்யுமாறு பரமனை வேண்டும் நம்மாழ்வார், திருப்புளியங்குடியானே, என்னை நோக்குக, நின் திருவடிகளை என் தலையில் வை, பள்ளிகொண்டானே எழுந்து அமர்க, என்னை ஆள்பவனே, நாங்கள் காண நீ வா, கருணை வாகனா, எங்களுக்குக் காட்சி தா, புளியங்குடியாய் எம் இடர்களை அகற்று, பெருமானே, எம் கண்முன் ஒருநாள் இருந்திடு, வைகுந்தா, பூமியில் எங்களுக்குக் காட்சி தந்திடு, எங்கள் கண்குளிரத் தரிசனம் தா, அமுதே, உன் திருவடியை நான் பற்ற ஒரு நாளாவது வா என்றெல்லாம் புளியங்குடியோனைப் பாடுகிறார் நம்மாழ்வார்.
  எம்மிடர்கடிந்துஇங்குஎன்னையாள்வானே! இமையவர்தமக்குமாங்கனையாய்!
  செம்மடல்மலரும்தாமரைப்பழனத் தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்!
  நம்முடையடியர்கவ்வைகண்டுகந்து நாம்களித்துளநலங்கூர
  இம்மடவுலகர்காணநீஒருநாள் இருந்திடாய்எங்கள்கண்முகப்பே. (3574)
  இந்தக் கோவிலில் மிகச் செல்லமாக நிறைய வேண்டுகோள்களை வைக்கிறார். ஒரு நாள் எங்கள் கண் முன்னால் வந்து செல் என்ற நம்மாழ்வார், சும்மா, எப்பவும் படுத்திருக்காதே, எழுந்து உட்கார் என்றும் கேட்டுக்கொள்கிறார்.
   “கிடந்தநாள்கிடந்தாய்எத்தனைகாலம்கிடத்தி? உன்திருவுடம்புஅசைய
  தொடர்ந்துகுற்றேவல்செய்து தொல்டிமைவழிவரும்தொண்டரோர்க்கருளி
  தடங்கொள்தாமரைக்கண்விழித்து நீஎழுந்துஉன்தாமரைமங்கையும்நீயும்
  இடங்கொள்மூவுலகும்தொழஇருந்தருளாய் திருப்புளிங்குடிக்கிடந்தானே” (3570)
  (நம்மாழ்வார் பாசுரங்களுக்காக மீண்டும் ஒருமுறை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் புரட்டவும் ஆங்காங்கே சில பாடல்களை வாசிக்கவும் வாய்த்தது, அடட, என்ன தமிழ்! எழுத்துவிடாமல் ஒருமுறை படித்து ரசிக்க வேண்டும்!).
  இரட்டைத் திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகிற ராகு – கேது தலங்கள் எனப்படும் அடுத்திருந்த இரு தலங்களும் காட்டுக் கோவில்கள் என்றார்கள். ஒரு காலத்தில் காடாக இருந்திருக்கும் போல. ஊர்ப் பெயர் இப்போது தொலைவில்லிமங்கலம், திருத்துலைவில்லிமங்கலம் என்று சொல்ல வேண்டும். ஆனால், யாருமே அவ்வாறு சொல்லவில்லை.
  அத்திரேயசுப்பரவர் என்கிற முனி இந்தத் தலத்தில் யாகசாலை ஏற்படுத்தி, ரித்விக்குகளுடன் , யாகசாலையைச் சோதித்தபோது, அவ்விடத்தில் ஒளியுடன் கூடிய தராசையும் வில்லையும் கண்டு, வியந்து அதனை எடுத்தபோது, தராசு ஒரு பெண்ணாகவும் வில் ஓர் ஆணாகவும் குபேர சாபத்திலிருந்து விடுபட்டதாகவும் இங்கே துலைவும் வில்லும் முக்தி பெற்றதனால் துலைவில்லிமங்கலம் எனத் தலத்துக்குப் பெயர் என்பதாகப் புராண வரலாறு. ஒவ்வொரு திருப்பதிக்குமே இதேபோன்ற நிறைய புராணங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
  aravindha%2B2.JPG
  அருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோவிலுக்குத்தான் முதலில் சென்றோம். திருக்கோவிலில் கருவறைத் தெய்வம்அரவிந்தலோசனர். நவக் கிரகங்களில் கேதுவுக்கு அதிபதி. கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம். தாயார் கருந்தடங்கண்ணி நாச்சியார் (என்னென்ன அழகிலெல்லாம் தமிழ்ப் பெயர்கள்!) உற்சவர் செந்தாமரைக் கண்ணன். கூட்டம் இல்லை என்று சொல்லக் கூடாது, ஆளே இல்லை. வயது முதிர்ந்த பூசகர் ஒருபுறம் படுத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் எழுந்துவந்து, அரவிந்தலோசனருக்குத் தீபாராதனை காட்டி, எங்களை ஆசீர்வதித்தார், கொஞ்சமும் சங்கடமில்லாமல், நல்ல மனிதர்.
  devapiran%2Bkoil2.JPG
  அடுத்து மிகக் குறைந்த தொலைவிலேயே தாமிரவருணிக் கரையில் அமைந்திருக்கிறது நவக் கிரகங்களில் ராகுவுக்கு அதிபதியான தேவர்பிரான் திருக்கோவில். அருள்மிகு தேவபிரான் திருக்கோவிலில் கருவறைத் தெய்வம் தேவர்பிரான்.நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் உப நாச்சியார்கள், தனிக் கோவில் இல்லை. மார்கழி மாதம் என்பதால், ஏதோ வழிபாடு, சிறிது நேரம் காத்திருந்தோம், இங்கே கொஞ்சம் பக்தர்கள் இருந்தார்கள். வெள்ளைத் துணியைப் பிழிந்து தீர்த்தமாகத் தந்தார்கள், இறைவன் திருமேனியைத் துடைத்ததாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.
  அரவிந்தலோசனர் திருக்கோவிலுக்கு முன்னால் இந்தக் கோவில்களின் பராமரிப்பில் பெரும் அக்கறை செலுத்தும் டி.வி.எஸ். அறக்கட்டளை அலுவலகமும் சில தங்குமிடங்களும் இருக்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் இங்கே வந்து சில நாள்களாவது தங்கியிருக்க வேண்டும். இந்த ஊருக்குப் பெயரையுங்கூட தொல்லையில்லா மங்கலம் என்று மாற்றி வைத்துவிடலாம். ஆள்கள் நடமாட்டமே இல்லை. நிம்மதியாக இருந்துவிடலாம்.
  இந்தக் கோவில்களை மணவாள மாமுனிகளும் நம்மாழ்வாரும் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். இந்த்த் தலத்துப் பெருமாள் மீது நாயகி கொண்டிருந்த காதலைத் தாய்க்குத் தோழி கூறுவதைப் போல (தம்மையே நாயகியாகப் பாவித்துக்கொண்டு) இந்தப் பாசுரங்களைப் பாடியிருக்கிறார் நம்மாழ்வார்.
  அன்னையீர், தலைவியை அவள் போக்கில் விட்டுவிடுங்கள், தேவர்பிரான் பெயரைச் சொல்லி இவள் கரைகின்றாள், கண்ணன் பெயர் கூற இவள் கண்ணீர் சிந்துகிறாள், கண்ணன் பெயர் கூறி இவள் மகிழ்கிறாள், தொலைவில்லிமங்கலம் நோக்கி இவள் தொழுகிறாள், இவள் மணிவண்ணன் பெயர்களையே சொல்கிறாள், தொலைவில்லிமங்கலம் பற்றியே கேட்க விரும்புகிறாள் இவள், அரவிந்தலோசனா என்று கூறி இரங்குகிறாள், தொலைவில்லிமங்கலத்தைத் தலையால் வணங்குகிறாள் என்றெல்லாம் தோழியாகப் பாடுகிறார் நம்மாழ்வார்.
   குமுறுமோசைவிழவொலித் தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு
  அமுதமென்மொழியாளை நீர்உமக்குஆசையின்றியகற்றினீர்
  திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள்தேவதேவபிரானென்றே
  நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க நெக்கொசிந்துகரையுமே. (3272)
  திருந்துவேதமும்வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்
  திருந்துவாழ்பொருநல் வடகரைவண்தொலைவில்லிமங்கலம்
  கருந்தடங்கண்ணிகைதொழுத அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும்
  இருந்திருந்துஅரவிந்தலோசன! என்றென்றேநைந்திரங்குமே. (3278)
  இன்னும் ஒரே ஒரு கோவில் - திருக்குளந்தைதான் தரிசிக்க வேண்டியது. 12 மணிக்கு மேலாகிவிட்டது. இங்கிருந்து நீண்ட தொலைவு வேறு. பெருங்குளத்தில் சீக்கிரமே நடை சாத்திவிடுவார்களாம். கோவில் நடை சாத்துவதற்குள் சென்றடைந்துவிட முடியுமா எனத்  தெரியவில்லை. கேட்டவர்கள் ஒவ்வொருவருமே சாத்தியமில்லை என்றுதான் சொன்னார்கள், முதலில் பெருங்குளம் போய்விட்டு இங்கே வந்திருக்கலாமே என்றும் குறிப்பிட்டார்கள். சரவணன், அங்கே செல்வோம், கோவில் திறந்திருந்தால் தரிசனம், இல்லாவிட்டால் வெளியிலிருந்து ஒரு கும்பிடு. நாம் இவ்வாறு திட்டமிடுவோம், தெய்வம் என நினைக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறி மறுபடியும் மோட்டார் சைக்கிளை விரட்டினோம்.
  tirukulanthai.jpg
  ஊருக்கு வெளியே கோவில், பெரிய வளாகம். கோவிலில் யாரும் இல்லாததைப் போலவும் கதவு சாத்தியிருந்ததைப் போலவும்தான் இருந்தது. கோவிலின் இடதுபுறத்தில் நிழலில் வாகனத்தை நிறுத்தச் செல்லும்போதே, விரைவாகச் செல்லுங்கள், பூஜைகள் நடந்துகொண்டிருக்கின்றன, பெருமாளைத் தரிசித்துவிடலாம் என்று அனுப்பிவைத்தார் ஒரு பூசகர். யாரோ காரில், எங்கிருந்தோ வந்திருந்தார்கள், எனவே, எல்லாம் தாமதத்திருக்கிறது போல. எப்படியோ ஒன்பதாவது கோவிலையும் பெருமாளையும் தரிசித்தாகிவிட்டது.
  பெருங்குளம் எனப் பரவலாக அழைக்கப்படும் திருக்குளந்தையில் கருவறைத் தெய்வம் ஸ்ரீநிவாசன். சனிக்கு அதிபதி.நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். உற்சவரின் பெயர், சோரநாதன் என்ற மாயக்கூத்தன்.அலர்மேல்மங்கைத் தாயார், குளந்தைவல்லி என இரண்டு உப நாச்சியார்கள். உற்சவராகப் பெருமாள் அருகிலேயே கருடனும் எழுந்தருளியுள்ளார். இங்கே சனீசுவரருக்கு எனத் தனி சன்னதி இருக்கிறது. தொடக்கத்திலிருந்தே இருக்கிறதா, பிற்காலத்தில் இணைக்கப்பட்டதா, தெரியவில்லை.
  இந்தத் தலத்துப் பெருமாளை ஒரே பாடலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
   சதுரமென்றுதம்மைத்தாமே சம்மதித்துஇன்மொழியார்
  மதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர்
  அதிர்கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு
  எதிர்கொளாளாய்/உய்யலல்லால் இல்லைகண்டீர்இன்பமே (3561)
  காலை ஒன்பது மணிக்குத் திருப்பேரையில் தொடங்கி ஒரு மணிக்குப் பெருங்குளத்தில்  நிறைவு பெற்றது நவ திருப்பதிகளின் விரைவு தரிசனம்.
  kulam.jpg
  கோவிலையொட்டித் தார்ச் சாலையையே கரையாகவும் கொண்டு, ஊரின் பெயருக்கேற்ப பெருங்குளம். தண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. நாரைகள், நீர்க்கோழிகள் எனக் கூட்டங்கூட்டமாக அலைந்துகொண்டிருந்தன. சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தோம். ஒரு பேருந்துகூட கடந்துசெல்லவில்லை. அனேகமாக நண்பகல் ஒரு மணி. சாப்பாடுகூட முக்கியமில்லை, உடனடியாக தேநீர் அருந்தியே தீர வேண்டும் என்றாகிவிட்டது. நண்பரோ, சார், வந்தது வந்தோம், வன திருப்பதியும் போய்ப் பார்த்துவிடலாம், அங்கேயே சாப்பிட்டும் விடலாம் என்றார்.
  (பொதுவாகவே புதிது புதிதாகக் கட்டியெழுப்பும் கோவில்களில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. எத்தனையோ நூறுநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, எத்தனையோ தலைமுறைகளாக, எத்தனையெத்தனையோ லட்சம் பேர் தரிசித்த கோவில்களும் தெய்வங்களும் பராமரிப்பின்றிக் கிடக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டுப் புதிதாகக் கோவில்கள் கட்டி என்ன செய்யப் போகிறோம்?)
  இடையில் மங்கலக்குறிச்சி என்ற கிராமத்தில் வாய்க்காலோரத்தில் ஒரு சின்னக் கடையில் தேநீரும் வடையும். ஆறிப் போயிருந்த வடையும் லேசாக புகை வாசனை அடித்த தேநீரும் இணையற்றவையாக இருந்தன. இவ்வளவு தொலைவு இந்தக் கிராமங்களுக்குள் அலைந்ததில் இங்கேதான் முதன்முதலாக ஒரு (தனியார்) பேருந்து வந்தது. இணைக்கும் போக்குவரத்து!
  வன திருப்பதியும் சென்றோம், பார்த்தோம். அங்கேயே உணவகமும் இருந்தது. சாப்பிட்டோம். தனியார் கோவில். வேறெதுவும் எழுத வேண்டாமே எனத் தோன்றுகிறது.
  நவ திருப்பதிகள் எனப்படும் இந்த ஒன்பது கோவில்களிலும் அருள்பாலிக்கும் பெருமாள்களை ஒரே நாளில் பக்தர்கள் தரிசிப்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது. நாங்கள் வலம்வந்த நாள் வியாழக்கிழமை என்பதால் கோவில்களில் வழக்கத்தைவிட மிகக் குறைவான பக்தர்களே இருந்தனர். சில கோவில்களில் நான், நண்பர், பூசகர், தெய்வம் அவ்வளவுதான். என்ன, நிம்மதியாக இறைவனைத் தரிசிக்க முடிந்தது.
  வைணவத் தலங்களான இவை யாவும் நவக் கிரகங்களுக்கான தலங்களாகவும் பெருமாளே நவ கோள்களாகவும் காலங்காலமாகச் சோதிடர்களால் கூறப்படுகிறது. ஆனால், ஒரேயொரு சந்தேகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நவக்கிரகங்கள் என்பதெல்லாம் திட்டவட்டமாக சைவ - சிவன் கோவில்கள் சம்பந்தப்பட்டவை. ஆனால், இங்கே மட்டும் எவ்வாறு வைணவ - பெருமாள் கோவில்களைக் கோள்களின் தெய்வங்களாகக் கூறுகின்றனர்? அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும்? எப்போதிருந்து இப்படியாகத் தொழப்படுகிறது? வேறு எங்காவது வைணவ தலங்களில்(மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டும் நவக் கிரகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்) இவ்வாறு தொழப்படுகிறதா? நவ திருப்பதிகள் என்பதாகக் கோள்களைக் குறிக்கும்படியாக மங்களாசாசனங்களில் ஏதேனும்தகவல்கள் இருக்கின்றனவா? திருநெல்வேலி – தூத்துக்குடி (நெல்லைச் சீமையில்) மாவட்டங்களில் நவ கயிலாயங்கள் என்றழைக்கப்படும் நவ கோள்களுக்கான சிவத் தலங்கள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இவற்றில் இரண்டு, ஸ்ரீவைகுண்டத்திலும் தென்  திருப்பேரையிலும் (இவை திருப்பதிகளும்கூட) இருக்கின்றன. நவ கோள்களின் மீதான ஈடுபாட்டில் வைணவக் கோவில்களை விடுத்து சிவன் கோவில்களுக்கு யாரும் சென்றுவிடக் கூடாது என்று தக்க வைப்பதற்கான ஏற்பாடாக இருக்கலாமோ? தெரியவில்லை.
  கண்களற்ற மூடர்களிடம் விட்டுச் சென்றதைப் போல இத்தனை கோவில்களை, இத்தனை பெரும் கலைக் கருவூலங்களையெல்லாம்விட்டுச் சென்றுவிட்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
  நவ திருப்பதிகளிலும் ஒன்றேபோல காணப்பட்டது ஒன்றே ஒன்றுதான், அமைதி, அமைதி, பேரமைதி.
  *
  ஐதிக, புராண தகவல்கள் மறு உறுதி - நவத் திருப்பதிகளும் ஆழ்வார்களும் / ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.
  நம்மாழ்வார் பாசுரங்கள் – நாலாயிர திவ்ய ப்ரபந்தம் / பதிப்பாசிரியர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்.
  திருப்பேரெயில் விஷயம் – பாண்டிநாட்டுத் திருப்பதிகள் / டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்.
   
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான தரிசனம் .....நன்றி நுணாவிலான்....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......!   🌺

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணாவில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.