Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் முதல் மொழி தமிழ் மொழி

Featured Replies

தமிழ்மொழி நமது தாய்மொழி. பல்வேறு சிறப்புக்களைக்கொண்ட பண்பட்ட மொழி. அமிழ்தினும் இனியது தமிழ்மொழி என்று பலமொழிகளைப் பயின்ற அறிஞர்கள் பாராட்டுகின்றார்கள். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார். உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கணனித் தொடர்புகளுக்கும் மிகவும் இசைவான, இலகுவான மொழியும் தமிழே என்று இன்றைய அறிஞர்கள் இயம்புகின்றார்கள்.

இவ்வாறு நமது தாய்மொழி பழமைக்குப் பழமையாக இருக்கிறது. புதுமைக்குப் புதமையாகவும் இருக்கிறது. என்றும் இளமையாக இருக்கிறது. அதனால் நமக்குப் பெருமையாக இருக்கிறது.

இன்றைக்கு எங்கெங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு ஒன்பது கோடித் தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலே வாழ்கிறார்கள்.

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தாம் வாழுகின்ற இடங்களிலெல்லாம் தமிழ்மொழியை வளர்த்தார்கள். பண்பாட்டைப் பேணினார்கள். இனப்பற்றை இழக்காமல் வாழ்ந்தார்கள். ஆனால் நாளாக நாளாக எல்லாமே நலிவடைந்து போகின்றன. வாழுகின்ற நாடுகளில் வழங்குகின்ற மொழிகளிலே படிக்கவும், எழுதவும், பேசவும் வேண்டியது அவசியமாகிவிட்டது. அதனால் அந்நிய நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்துவிட்டது. அதனால் தாய்மொழி ஆர்வம் குறைந்துவிட்டது.

முன்னாளில், நமது தாயகத்திலே அந்நியரின் ஆக்கிரமிப்பால் தமிழ்மொழி சிதைந்தது பின்னாளில், ஆட்சியாளரின் புறக்கணிப்பால் பயன்பாடு குறைந்தது. இந்நாளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உளம் பெயர்ந்த காரணத்தால் மொழி மறைந்து போகின்றது.

இந்த நிலை நீடிக்கக்கூடாது. இனத்தால் தமிழர்களாகிய நமது எதிர்காலச் சந்ததி மொழியால் அனாதைகளாகக் கூடாது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கின்ற உயரிய பண்பை உலகிற்குச் சொல்லிக்கொடுத்த நமது உன்னத மொழியை நாமே மறத்தல் கூடாது.

தமிழராய்ப் பிறந்து, தமிழராய் வளர்ந்து தமிழராய் வாழுகின்றது இன்றைய பரம்பரை. நாளைய பரம்பரையும் தமிழராய்ப் பிறக்கவேண்டும், தமிழராய் வளரவேண்டும், தமிழராய் வாழ வேண்டும். அனுதினமும் அதனை நினைக்க வேண்டும். அதற்கு வழி சமைக்கவேண்டும்.

வீடுகள் தோறும் தேன் மொழி பேசுவோம் - கூடி

விளையாடுவோம் தமிழ் இசை பாடுவோம்

ஆடுவோம் நண்பர்கள் கூடுவோம் தமிழர்கள்

அனைவோரும் தமிழினில் உரையாடுவோம்.

  • தொடங்கியவர்

தமிழ் மொழியே உலகிலே தோன்றிய முதல் மொழி என்பதும், தமிழ் இனமே உலகின் நாகரிகம்பெற்ற முதல் இனம் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். கல்தோன்றி மண்தோண்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி என்று சாட்சியுரைத்தனர் சான்றோர்கள்

உலகின் பல்வேறு பாகங்களிலும் பரவி வாழ்ந்த தமிழ் இனம் காலப்போக்கில் மொழியால் திரிந்து, இடத்தால் பிரிந்து வௌ;வேறு மொழிகளாக, வெவ்வேறு இனங்களாக, வெவ்வேறு நாடுகளாக மாற்றுருப் பெற்றுப் போயிற்று. அந்த மொழிகளெல்லாம் இன்று தமிழ்மொழிக்கு அந்நியமாக வழங்கி வருகின்றன.

தமிழ்மொழி அதன் பயன்பாட்டின் அடிப்படையில் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. அவையே முத்தமிழ் என்று வழங்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பனவாகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுட்களும் ஆகும். இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் இயற்றமிழ் என்கின்ற பிரிவின் கீழே வருகின்றன. இசைத்தமிழ் எனப்படுவது இசையும் தாளமும் அமைந்த பாடல்களாகும். நாடகத்தமிழ் என்பது நடிப்பும் பாட்டும் அல்லது நடிப்பும் உரைநடையும். முத்தமிழிலும் தித்திக்கும் தேன்பாகாக இனிப்பதும், எத்தமிழையும் அறியாதமக்களின் இதயங்களையும் கவர்ந்திழுப்பதும் இசைத்தமிழாகும்.

தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்கின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அதன் பின்னால் தோன்றிய இசை நூல்களான பெரு நாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், இந்திரகாளியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற அற்புதமான நூல்களும் அழிந்து போய்விட்டன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறும் மிகத்தொன்மையான இசை நூலாகக் கருதப்படுகின்றது. அதிலும்கூட அழிந்தவை போக எஞ்சியிருக்கும் இருபத்தியொரு பாடல்களே இப்போது கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசை நூல்கள் தமிழிசையின் சிறப்புக்குச் சான்றாக அமைகின்றன. தெள்ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் திருமுறைகள், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான தனிப்பாடல்கள் எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடமெனத் திகழ்கிறது.

இசையை ஏழுவகையாகப் பகுத்தவர்கள் தமிழர்களே. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே அந்த ஏழு வகைகளாகும். ஏழு வகை இசையினையும் இடத்திற்கும், பாடலுக்கும், குணத்திற்கும், காலத்திற்கும் ஏற்றவாறு நான்காகப் பாகுபடுத்தினார்கள் நமது பண்டைத்தமிழ் மக்கள்.

முத்தமிழுக்கும் இனிமை சேர்ப்பது இசைத்தமிழ். ஆந்த இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோல் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் இசையினை முறையாகப் பயில வேண்டும். தமிழ்ப் பாடல்களைப் பாடவேண்டும். தமிழ் இசையின் மகத்துவத்தைத் தணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சி செய்யவேண்டும்

தழிழைப்பற்றி தழிழனுக்கே சொல்லிக் குடுக்கவேண்டிய காலமிது...

  • தொடங்கியவர்

பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கிறிஸ்துவ வழிபபட்டு ஓலைச்சுவடி இது.

Christian_prayers_in_tamil_on_palm_leaves.jpg

பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விவிலிய நூலின் முகப்பு இது:-

200px-Genesis_in_a_Tamil_bible_from_1723.jpg

எழுத்துரு மாற்ற வரலாறு:-

300px-History_of_Tamil_script.jpg

தமிழன் தன்னை பற்றியும் தன் மொழியை பற்றியும் பீத்திகொண்டு திரிந்தானே அன்றி தமிழை பாதுகாக்க முயலவில்லை என்பது துரதிஸ்டம்

ஈழவன் நீங்கள் சொல்வதென்னவோ உண்மைதான்

தமிழ் மொழியே உலகிலே தோன்றிய முதல் மொழி என்பதும், தமிழ் இனமே உலகின் நாகரிகம்பெற்ற முதல் இனம் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

வானவில் எந்த ஆராட்சியாளர்கள் அப்படிக் கூறியுள்ளனர்.

கொஞ்சம் விபரங்களைத் தந்தால் நன்றாக இருக்கும்

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, மேலும் பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். எழுத்தளவில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதால் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திச்சூடி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது

மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. தமிழ் திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)

சங்கம் மருவிய காலம் (கி.பி 300 - கி.பி 700)

பக்தி இலக்கிய காலம் (கி.பி 700 - கி.பி 1200)

மத்திய காலம் (கி.பி 1200 - கி.பி 1800)

இக்காலம் (கி.பி 1800 - கி.பி 2007)

பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது

Edited by வானவில்

தமிழ்மொழி நமது தாய்மொழி. பல்வேறு சிறப்புக்களைக்கொண்ட பண்பட்ட மொழி. அமிழ்தினும் இனியது தமிழ்மொழி என்று பலமொழிகளைப் பயின்ற அறிஞர்கள் பாராட்டுகின்றார்கள். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார். உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கணனித் தொடர்புகளுக்கும் மிகவும் இசைவான, இலகுவான மொழியும் தமிழே என்று இன்றைய அறிஞர்கள் இயம்புகின்றார்கள்.

....

இது நமக்கு நாமே கூறிக்கொள்ளும் புகழாரமா ?

ஏனென்றால் தமிழ் மொழிதான் சிறந்தது என்றோ, முதன்மை மொழி என்றோ வேறு நாட்டவனிடம் சொன்னால் பைத்தியம் என்று நினைப்பான்.

ஒரு தடவை ஒரு அரபிக்காரன் அரபு மொழியும் இஸ்லாம் சமயமும் தான் உலகிலேயே சிறந்தது என்று என்னிடம் சொன்னான். அவனிடம் வாதாடிப் பயனில்லை என்பதால் மனதிற்குள் சிரித்துவிட்டு மௌனமாக இருந்தேன்.

கி.மு. 1000 வருடங்களுக்கு முன்பே அரேபிய மொழி தோன்றிவிட்டதற்கான தடயங்கள் உள்ளதாகச் சொன்னான்.

Edited by லிசான்

  • தொடங்கியவர்

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தொன்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது

  • தொடங்கியவர்

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kankeyar), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர்.

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது.

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.

தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.

எத்னொலோக் Ethnologue என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவணம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.

புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.

  • தொடங்கியவர்

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய அரிச்சுவடி அசோக மன்னர் காலத்து பிராமி அரிச்சுவடியிலிருந்து வளர்ந்தது. பிராமியின் தென்கிளையிலிருந்து கிரந்த அரிச்சுவடி உருவானது. அக்காலத்தில் தமிழும், சமஸ்கிருதமும் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பெற்றன.

எழுத்து முறை வளர்ந்து கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படலாயின. அவற்றை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர்.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்கள் ஏற்கப்பட்டன.

  • தொடங்கியவர்

கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஜ ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ juu, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j

ஷ sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shuu, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show, ஷ் sh

ஸ Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Suu, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S

ஹ ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ huu, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h

க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshuu, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh

தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 ஆகும்.

உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.

குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.

மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.

வல்லினம் : க் ச் ட் த் ப் ற்

மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்

இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்

ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்.

பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "த" எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.

சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கென தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கென தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியர் அகத்தியரின் மாணாக்கராவார். அவ ரே பண்டிதர்களாலும் , புலவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அகத்தியத்தை எளிமைப்படுத்தி தொல்காப்பியமாக செய்தவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆயினும் இன்றைய மாணவர்களுக்கு தொல்காப்பியம்கூட மிகவும் கடுமையான ஒன்றுதான். :lol::D

பயனுள்ள விடயம்.

  • தொடங்கியவர்

தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.

சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.

தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.

பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.

தமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் முக்கியம். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே அருமைபெருமகளை சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய

  • தொடங்கியவர்
இப்படியே அருமைபெருமகளை சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரன் வானவில் அவர்களே தமிழைப்பற்றி நிறையத் தெரிந்து வைத்துள்ளீர்கள். சில தரவுகளையும் சேகரித்து வைத்துள்ளீர்கள் உங்களுக்கு எனது பாராட்டுக்கள், இருந்தாலும் எமது இன்றைய தேவை ஆதிகாலத்தைத் தோண்டுவதல்ல. இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்க்கொலையையும், தமிழர் கொலைகளையும் எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தான் முக்கியம். இலகு தமிழில் அதாவது புரியக்கூடிய நவீன மொழியில் எடுத்துக்கூறியே புரிந்து கொள்கிறார்களில்லை அப்படியிருக்கும்போது உங்களால் முன்வைக்கப்படும் இந்த தரவுகள், ஆய்வுகள் எல்லாம் சரிப்படும் என்று நினைக்கிறீங்களா? அதாவது சினிமா பாணியிலை முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி நிச்சியம்.

இப்படியே அருமைபெருமகளை சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய

Edited by Kuddithambi

அதானே கள்ளுக்கொட்டிலில கிடக்காமல் ....

ஏதாவது செய்யவேண்டியதுதானே :P

சரியாக சொல்லி இருக்கிறீங்கள் குட்டிஸ்

:lol:

6ம் வகுப்பில் "தமிழ்மொழி" பற்றி கட்டுரை எழுத சொல்லுவினம் எல்லோ ரீச்சர்மார். அப்போ எல்லாம் யாழ்கள்ம் இருந்தால் 100 மார்க்ஸ் வாங்கி இருப்பேன். ஜஸ்ட் மிஸ் ஆகிட்டு. :unsure:

தமிழ்மொழி பற்றிய தெளிவான தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி

  • தொடங்கியவர்

6ம் வகுப்பில் "தமிழ்மொழி" பற்றி கட்டுரை எழுத சொல்லுவினம் எல்லோ ரீச்சர்மார். அப்போ எல்லாம் யாழ்கள்ம் இருந்தால் 100 மார்க்ஸ் வாங்கி இருப்பேன். ஜஸ்ட் மிஸ் ஆகிட்டு. :)

தமிழ்மொழி பற்றிய தெளிவான தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி

எந்தக் காலத்திலையும் எந்த தமிழ் வாத்தியும் கட்டுறைக்கு முழுப்புள்ளியும் வழங்கியதா சரித்திரமில்லை , ஏந்தான் நம்ம மேல இப்படிப் பொறாமையோ தெரியலை :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தமிழ் வட்டார மொழிதான். வடமொழி தான் செம்மொழி. எனவே, பள்ளி அளவிலேயே தமிழ் மொழியை நிறுத்திக் கொள்ளுங்கள். கல்லூரிகளில் தமிழ் மொழி தேவையில்லை. அதற்குப் பதிலாக சமஸ்கிருதம் கற்பிக்கலாம்..’ ‘என நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழைக் குழிதோண்டிப் புதைக்கும் தீர்மானம் ஒன்றை, சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டு வந்தது. இதையறிந்த வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அதிர்ச்சியில் உறைந்தார். அப்போது, அவர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்.

ஒரு வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு.. ‘‘இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தரக்கூடாது..’’ என பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் வீட்டின் கதவுகளையும் தட்டினார். தமிழின் தனித்தன்மையை விளக்கினார். அவரது முயற்சிக்கு வெற்றி கிட்டியது. பல்கலைக்கழக தீர்மானம் தோற்றுப்போனது. அவர் ஒருவேளை அந்த முயற்சியை எடுத்திருக்காவிட்டால், இன்றைக்கு உயர் கல்வியில் தமிழின் நிலை? நினைத்துப் பார்க்கவே அச்சமாகத்தான் இருக்கிறது. சூரியநாராயண சாஸ்திரி, தமிழ் மீதுகொண்ட அளப்பரிய பற்றால், தனது பெயரான சூரியநாராயண சாஸ்திரிகள் என்பதை பரிதிமாற்கலைஞன் என மாற்றிக்கொண்டு, மறைமலையடிகள் போன்றோரின் தனித்தமிழ் பெயர் மாற்றத்துக்கு முன்னோடியாயிருந்தார். தவிர, அப்போதே தமிழை செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தார். திருப்பரங்குன்றம் அருகேயுள்ள விளாச்சேரி கிராமம். தமிழ்த் தொண்டர், தமிழறிஞர் பரிதிமாற்கலைஞன் பிறந்து வாழ்ந்து இளவயதிலேயே மடிந்த மண்.

‘‘நூறாண்டுகளுக்கு முன் அந்தக் கலைஞர் தமிழைச் செம்மொழியாக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதை இன்றைய கலைஞர் நிறைவேற்றியிருக்கிறார்..’’ என மேடைக்கு மேடை தி.மு.க.வினரும் தமிழறிஞர்களும் பெருமை பொங்கச் சொல்கிறார்கள். ஆனால், நூறாண்டுகள் முன்பே தமிழுக்காக முதல் குரல் கொடுத்த அந்தக் கலைஞருக்கு ஒரு நினைவில்லம் கூட இல்லை என்பது துயரிலும் துயர். அவருக்காக நினைவில்லம் அமைக்கவும் அவரது நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பதற்காகவும் நடைபெறும் முயற்சிகளின் கதி _ கிணற்றுக்குள் போட்ட கல்! தற்போது, பரிமாற்கலைஞரின் நினைவாக விளாச்சேரி கிராமத்தின் பேருந்து நிறுத்தத்துக்கு மட்டுமே அவரது பெயரைச் சூட்டியுள்ளார்கள். தமிழ் தெருவில் நிற்கிறது!

நினைவில்லம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த நான்கு ஆண்டுகளாக விடாப்பிடியாக அரசிடம் வைத்து வருகிறார் ரா. சொக்கலிங்கம். இவர் மதுரை கம்பன் கழகச் செயலாளர்.. கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்.

‘‘பரிதிமாற்கலைஞருக்கு அவர் பிறந்த கிராமத்தில் நினைவில்லம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையைச் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நூற்றாண்டையட்டி அரசுக்கு முன்வைத்தோம். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அன்றைய துணைவேந்தர் உட்பட, பலர் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவைச் சந்தித்து மனு கொடுத்தோம். கடந்த அரசு ஓரளவு முயற்சி எடுத்தது. நாங்கள் எழுதிய கடிதங்களுக்குப் பதில்கள் வந்தன. அத்தோடு சரி’’ என்றார் வருத்தத்தோடு. அப்படியும் சளைக்காமல் இன்னும் சில தமிழ் ஆர்வலர்களோடு சேர்ந்து மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், வாசன் ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பலன் இல்லையாம்.

‘விளாச்சேரியில் அவர் எங்கு பிறந்தார். அவர் வீடு எங்கிருந்தது? எனத் தமிழ் வளர்ச்சித் துறையினர் கேட்டனர். அவர் அங்கு வசித்ததற்கு வேறு ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள். பரிசீலிப்போம்’ என்கிறார்கள்.

அவர் வாழ்ந்த வீடு தெரியவில்லையென்றால், நினைவில்லம் என்ற கருத்தை விட்டுவிட்டு ஒரு மணிமண்டபம் கட்டலாமே’’ என்று சூடாகக் கேட்கிறார் சொக்கலிங்கம். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இந்தப் பகுதி அரசியல்வாதிகளுக்கே அந்தத் தமிழ் அறிஞரைத் தெரியவில்லையாம்.

பரிதிமாற்கலைஞரின் வாரிசுகளில் ஒருவரான வி.சூ. கோவிந்தனை (மகன் வழிப்பேரன்) சந்தித்தோம். மதுரைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் இவர்.

தன் தாத்தாவின் நினைவில்லத்திற்காக நடத்திய போராட்டத்தைச் சற்று வலியுடன் சொன்னார்.

‘‘அவர் வாழ்ந்த இல்லம் குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் என்னிடம் தகவல் கேட்டார்கள். நானும் விளாச்சேரியில் உள்ளவர்களிடம் விசாரித்தேன். ஒரு வீட்டைக் காண்பித்தார்கள். நானும் அந்த வீட்டின் நான்கு மாடல்களை அரசுக்கு அனுப்பினேன். ஆனால் தமிழ்வளர்ச்சித்துறை எனக்கு அனுப்பிய பதிலில் ‘நீங்கள் அனுப்பிய தகவல்களைப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி விசாரித்தோம். அவர்கள் பெயரில் நீங்கள் குறிப்பிட்ட சொத்து எந்தக் காலத்திலும் இருந்ததில்லை’ எனக் குறிப்பிட்டு பதிலெழுதியிருந்தார்கள். ஒருவேளை பரிதிமாற்கலைஞர் வாடகை வீட்டில் கூட குடியிருந்திருக்கலாம். அல்லது அவர் வாழ்ந்த இல்லம் இடிக்கப்பட்டிருக்கலாம்.’’ என்றவர் தொடர்ந்து,

‘‘கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் நினைவில்லம் மற்றும் தபால் தலை கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், எங்கள் குடும்பத்தினர் கூடுதலாக வைக்கும் கோரிக்கை பரிதிமாற்கலைஞரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கவேண்டும் என்பதுதான். அவரால் ஆசிரியர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட மறைமலை அடிகளாரின் புத்தகங்களை அரசு ஏற்கெனவே நாட்டுடமை ஆக்கிவிட்டது’’ என்று நினைவுபடுத்தினார்.

‘‘இதுகுறித்து நான் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்குக் கடிதம் எழுதினேன். அதற்கு ‘இது மாநில அரசு செய்யவேண்டியது’ என எனக்குக் கடிதம் எழுதியதோடு, அப்போது மாநில கல்வி அமைச்சராக இருந்த சண்முகத்துக்கும் கடிதம் எழுதி அதன் நகலை எனக்கு ப. சிதம்பரம் அனுப்பினார். பிரதமருக்கும் ஆங்கிலத்தில் பரிதிமாற்கலைஞர் பற்றிக் கடிதம் அனுப்பினேன். அதுவும் மாநில அரசின் பார்வைக்கு வந்திருக்கிறது. உடனே பரிதிமாற்கலைஞர் புத்தகங்கள் தொடர்பாக, தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து ஆவணங்கள் கேட்டார்கள். சுமார் ஆயிரம் பக்கங்கள் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரியவில்லை’’ என்று தன் போராட்டத்தை விவரித்தார்.

‘‘விரைவில் தமிழக முதல்வரைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைக்க உள்ளேன்.. இந்தக் கலைஞர் காலத்தில் இல்லையென்றால், எந்தக் காலத்திலும் அந்தத் தமிழறிஞருக்கு அங்கீகாரம் கிடைக்காது’’ என்றார் நெகிழ்ச்சியா

குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.