Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெறும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய பிரியாவிடை உரையின் முழு விபரம்

Featured Replies

Maithripala_Sirisena.jpg

நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். 

எனினும் அந்த அரசியலமைப்பின் ஊடாகவே எனது அதிகாரங்களை நீக்கியதுடன் அவற்றை பாராளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்கிய முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையுடன் நான் விடைபெறுகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுமக்களுக்கு ஆற்றிய இறுதி பிரியாவிடை உரையில் தெரிவித்திருக்கிறார்.

ஊழலற்ற அமைச்சரவையொன்றை உருவாக்கிக் கொள்வதே நாட்டின் புதிய ஜனாதிபதி எதிர்கொள்கின்ற முதலாவது சவாலாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ஏற்கனவே வென்றெடுத்த ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்டவற்றை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிதாகப் பதவியேற்கின்ற ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், 

2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெற்றி பெறச்செய்வதற்காக வாக்களித்த இந்நாட்டு மக்களனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்து, 9 ஆம் திகதி ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதற்கு சில நாட்களின் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி மாநகரத்தின் தலதா மாளிகை வளாகத்தில் மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினேன். 

அதன்போது மீண்டுமொரு முறை நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதேபோன்று அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனக்கிருந்த எல்லையற்ற அதிகாரங்களை நீக்கிக்கொண்டேன். அவ்வதிகாரங்களை பாராளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் வழங்கினேன். 2015 ஆண்டில் 6 வருடகாலத்திற்கான ஜனாதிபதியாகவே பொதுமக்கள் என்னைத் தெரிவு செய்தனர். இருப்பினும் அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அதில் ஒருவருடத்தைக் குறைத்து எனது பதவிக்காலத்தை 5 வருடங்களாக மாற்றிக்கொண்டேன்.

பொதுவான எமது நாட்டின் தலைவர்கள் அனைவரும் தமது அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக்கொண்டார்கள். எனினும் எனது பதவிக்குரிய மட்டுமீறிய அதிகாரங்களைக் குறைத்தமை, பதவிக்காலத்தை 5 வருடங்களாக்கியமை மற்றும் பொதுமக்கள் எனக்கான தமது ஆணையை வழங்கிய 6 வருடகாலத்தில் ஒருவருடத்தை குறைத்தமை ஆகியவை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் பதவியிலிருந்த காலத்தில் நாட்டில் முழுமையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இயலுமாக இருந்தது. இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்திராத ஊடக சுதந்திரத்தை வழங்கியதுடன், ஜனநாயகம் உச்சளவில் வலுப்படுத்தப்பட்டது என்றே நான் கருதுகின்றேன். 

எனினும் அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஊடகங்கள் என்னை வெகுவாக விமர்சித்ததுடன், என்னைத் தாக்கும் விதமான பொய்யான செய்திகளை வெளியிட்டனர். குறிப்பாக சமூகவலைத்தளங்களின் ஊடாக அத்தகைய செய்திகள் அதிகளவில் பரவின. எனினும் அவற்றால் நான் நிலைகுலையவில்லை. ஏனெனில் அத்தகைய சுதந்திரத்தை வழங்குவது எனது கொள்கை என்பதாலேயேயாகும்.

மேலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் செய்ய முடியாததை எனது அரசாங்கத்தில் செய்ய முடிந்தது. குறிப்பாக அரச தலையீட்டுடனான படுகொலைகள், அரசியல் பழிவாங்கல்கள், சித்திரவதைக்குட்படுத்தல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற எவையும் எனது ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை. தெளிவாகக் கூறுவதெனின் அரசாங்கத்தின் துப்பாக்கி அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட ஏதேனும் காரணங்களுக்காக பொதுமக்களை நோக்கித் திரும்பவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட பெருமளவான விடயங்களை நிறைவேற்ற முடிந்ததைப் போன்றே, நாடு தொடர்பிலும், நாட்டுமக்கள் தொடர்பிலும் நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை செய்திருக்கிறேன் என்று நம்புகின்றேன். எனினும் அரசாங்கத்தில் எனக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையில் எவ்வித தனிப்பட்ட விடயங்கள் தொடர்பிலுமன்றி, கொள்கைகள் ரீதியில் மாத்திரம் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் காரணமாக அரசாங்கத்தில் முரண்நிலை உருவானமை இரகசியமான விடயமல்ல. அதன் காரணமாக மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய சில முக்கிய செயற்திட்டங்களை செய்யமுடியாமல் போனது. அரசாங்கத்திற்குள் இருந்த கருத்து முரண்பாட்டு நிலையே அதற்குக் காரணமாகும்.

கடந்த காலத்தில் எனக்குரிய அதிகாரங்களைக் குறைத்துக் கொண்டதைப் போன்றே, நான் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் பயனடைந்தவர்களும் இருக்கின்றார்கள். எனினும் அவை குறித்து விரிவாகப் பேசுவதற்கு தற்போது நேரத்தை செலவிட வேண்டும் என்று நான் கருதவில்லை. நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட ஆரம்பகாலத்தில் சர்வதேச சக்திகளால் நாட்டிற்கு எத்தகைய அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் காணப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியும். 2014 இற்கு முன்னரான காலப்பகுதியையும் 2015 இற்குப் பின்னரான காலப்பகுதியையும் ஒப்பிட்டு, தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாலேயே நான் இறந்தகாலம் தொடர்பில் நினைவுபடுத்துகின்றேன். நாட்டில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நான் எனது பதவிக்காலத்தில் 99 சதவீதம் வரை இல்லாமல் செய்திருக்கிறேன் என்றே நம்புகின்றேன். விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நாட்டிற்குள் சர்வதேச நீதிமன்றத்தின் வருகையும், அது ஒருமித்த நாட்டின் இறைமைக்குப் பாதிக்காக அமையும் என்ற நிலையில் கடந்த காலத்தில் காணப்பட்டது. ஆனால் அவை அனைத்திலிருந்தும் நாம் தற்போது மீண்டிருக்கின்றோம்.

எனினும் எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சில முக்கிய சவால்கள் உள்ளன. வறுமையிலிருந்து மீட்சி பெறவேண்டும். அதேபோன்று நாட்டில் வாழும் அனைத்து இன,மத மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக, அனைவரும் ஒரே குடும்பம் போன்று வாழக்கூடிய சூழ்நிலையொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். நான் அதற்காகப் பெருமளவில் முயற்சி எடுத்துக்கொண்டேன். அதற்கான பலாபலன்கள் இல்லாமலில்லை. ஆனால் இன்னமும் பல்வேறு இன, மத மக்களுக்கும் இடையில், குறிப்பாக மொழி ரீதியாகக் காணப்படும் அச்சம், சந்தேகம் அனைத்தையும் முற்றாக இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

மேலும் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்று எதிராக நான் சில கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டேன். எனது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளைக் கண்டறிவதற்காக நீதிமன்ற அதிகாரமுள்ள சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தேன். தனது அரசாங்கத்தின் மோசடிகளைக் கண்டறிவதற்காக இத்தகைய ஆணைக்குழுக்களை நியமித்த முதலாவது ஜனாதிபதி நானென்னபதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நாட்டின் உயர்கட்டமைப்பொன்றில் இடம்பெற்ற பாரிய மோசடியாகும். அதுகுறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தேன். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதும் அவ்விசாரணைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அத்தோடு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மத்திய வங்கி தொடர்பில் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் நீங்கள் அனைவரும் அதிர்ச்சியடையக்கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளன. புதிதாக ஆட்சிபீடமேறுகின்ற அரசாங்கம் அவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுடன், பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகின்றேன்.

இன்றைய தினம் புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படப் போகின்றார். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு இருக்கக்கூடிய முதலாவது சவால் எதுவாக இருக்குமென்று நீங்கள் கருதுகின்றீர்கள்? பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களின் எவ்வித ஊழல், மோசடிகளுடனும் தொடர்புபடாதவர்களைக் கொண்டு அமைச்சரவையை உருவாக்குவதே அவருடைய முதலாவது சவாலாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன். எமது நாட்டைப் பொறுத்தவரை பக்கச்சார்பற்ற ஒரு ஜனாதிபதியின் கீழ் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும். வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து அரசியல் ரீதியில் எந்தவொரு தரப்பிற்கும் பக்கச்சார்பாக செயற்படாமல் நடுநிலையாக நின்று, எனது பொறுப்பின் கீழுள்ள பாதுகாப்பு மற்றும் முப்படையினரை தேர்தல்கள் ஆணைக்குழுவினரின் கோரிக்கைக்கு அமைவாக வழங்கி, நாட்டின் அமைதியான முறையில் தேர்தலொன்று நடைபெறுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கின்றேன். நான் எந்தவொரு தரப்பையும் சாராமல் நடுநிலையாக செயற்பட்டமையே அமைதியான தேர்தல் நடைபெறுவதற்கு வழிவகுத்தது என்று நம்புகின்றேன்.

இதற்கு முன்னர் அதிகாரத்திலிருந்த தலைவர்கள் அனைவரும் தேர்தலின் போது அவர்கள் சார்ந்திருக்கின்ற அரசியல் கட்சியை அடிப்படையாகக் கொண்டு, ஏதேனுமொரு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவர். அதன் காரணமாக அரச அதிகாரம் மட்டுமீறியளவில் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களையும் கடந்தகாலத்தில் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கும் இடையில் எந்தளவிற்கு வித்தியாசம் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். புதிதாகப் பதவியேற்கும் ஜனாதிபதிக்கு நாட்டுமக்களின் சுபீட்சம், அபிவிருத்தி மற்றும் ஏற்கனவே அடைந்துகொண்ட ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தல் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் தொடர்பில் பாரிய பொறுப்பு உள்ளது. அதுமாத்திரமன்றி போதைப்பொருள் ஒழிப்பு, கிராமிய அபிவிருத்தித் திட்டம், உள்நாட்டு உற்பத்தி மேம்பாடு உள்ளிட்ட எமது கடந்தகால செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடப்பாடும் இருக்கின்றது. அவற்றை நான் முன்னெடுத்ததை விடவும் சிறப்பான முறையில் அடுத்ததாகப் பதவியேற்கும் ஜனாதிபதி முன்னெடுத்துச்செல்வார் என்று நம்புவதுடன், அதனைத் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்ததாக நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுகின்ற பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமாத்திரமன்றி ஒட்டுமொத்த அரசசேவை உத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறுகின்றேன். நாம் வௌ;வேறு தரப்புக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வரலாறு எம்மனைவருக்கும் தெரியும். நாட்டின் சுதந்திரத்திற்கான தலைமைத்துவத்தை வழங்க முன்வந்த கெப்பெட்டிபொல உள்ளிட்டோரை வெள்ளையர்கள் தேசத்துரோகியாக அறிவித்தார்கள். எனினும் எனது பதவிக்காலத்தில் அவர்களை தேசத்துரோகி பட்டியலிலிருந்து நீக்கி, தேசப்பற்றாளர்கள் என்று அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். எமது ஆட்சிக்காலத்தில் எத்தகைய சவால்கள் காணப்பட்ட போதிலும், ஒரு சமுதாய ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

எமது அரசாங்கத்திற்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் என்ன? நவீன லிபரல் கொள்கைகளுக்கும், நான் நம்புகின்ற சமுதாய ஜனநாயகம் மற்றும் சுதேச சுயாதீனத்துவத்தை முன்நிறுத்திய சிந்தனைகளுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை முரண்பாடாகும். நாம் பெரிதும் பேசுகின்ற நல்லிணக்கம், இன மற்றும் மத ஒருமைப்பாடு ஆகிய விடயங்களைப் பொறுத்தவரையில் முழு நாட்டுமக்களுக்கு மாத்திரமன்றி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட – கிழக்கு மக்களுக்கும் என்னால் பாரிய சேவைகளையாற்ற முடிந்தது. காணி விடுவிப்பு, அவர்களுடைய சூழலியல் அபிவிருத்தி மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பலவற்றை நிறைவேற்ற முடிந்தது. அதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. அவர்களின் தேவைகளை முழுமையாக நூறுசதவீதம் நிறைவேற்றினேன் என்று நான் கூறமாட்டேன். எனினும் வட – கிழக்கு அபிவிருத்திக்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து, அவர்களுக்காக சேவையாற்ற முடிந்தமையையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த காலத்தில் நான் வாளை வெளியே எடுத்தபோதிலும், அதனைப் பயன்படுத்தவில்லை என்று சிலர் கூறினார்கள். இல்லை: நான் வாளைப் பயன்படுத்தினேன். எனது அரசாங்கத்தின் பிரதமரைப் பதவி நீக்கி, வேறொரு பிரதமரை நியமித்து, பாராளுமன்றத்தைக் கலைப்பதாற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டேன். அது நாட்டின் பல்வேறு வாத விவாதங்களும், விமர்சனங்களும் எழுவதற்குக் காரணமாகின. அதேபோன்று நாட்டின் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்காக குறிப்பிடத்தக்க கடுமையான சில தீர்மானங்களை மேற்கொண்டேன். பொலிஸ் திணைக்களம் எனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 11 மாதங்கள் ஆகின்றன. அதன்மூலம் பொலிஸ் திணைக்களம் தொடர்பானன சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. நாட்டின் சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு பொலிஸாருக்கு இருப்பதனால் அதில் பெருமளவான மறுசீரமைப்புக்களை மேற்கொண்டேன்.

இந்நிலையில் வெளியகத் தரப்பிலிருந்து ஏற்படும் சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாமனைவரும் மிகவும் மோசமான உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தோம். அத்தாக்குதலில் உயிரிழந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளை இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். உண்மையில் அது ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்படக்கூடிய வாய்ப்பிருந்த சம்பவமாகும். அச்சம்பவம் தொடர்பில் நான் வேறு எதனையும் பேசவிரும்பவில்லை.

தற்போது எனது ஆட்சிக்காலம் தொடர்பில் திருப்தியடைகின்றீர்களா என்று எவரேனும் என்னிடம் வினவினால், ஒரு வினாடியும் தாமதிக்காமல் 'ஆம், நான் எனது ஆட்சிக்காலம் தொடர்பில் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைகின்றேன்' என்று பதிலளிப்பேன். அதற்குக் காரணம் நாட்டிற்கும், மக்களுக்கும் நான் பல்வேறு விடயங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கிறேன். ஜனநாயக சூழலொன்றைக் கட்டியெழுப்பியமை, ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை போன்றவற்றுடன், பௌத்தர்களின் திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தினேன். அது நாட்டுமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய விடயமாக அமைந்திருந்தது. இதுவரை காலமும் எனது அரசியல் பயணத்தின் வெற்றிக்கு பாரிய சக்தியை வழங்கி உறுதுணையாக செயற்பட்ட எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் இத்தருணத்தில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 5 வருடகாலமாக நாட்டுமக்களுக்கு சேவையாற்றிய நான், இன்று புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாட்டிற்கு சேவையாற்றுவதற்கான சக்தியும், தைரியமும், வாய்ப்பும் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த, வலுவான, சுபீட்சமான நாடாகக் கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்திலும் உங்களனைவருடனும் நான் ஒன்றிணைந்து செயற்படுவேன். 

https://www.virakesari.lk/article/69041

இந்த தலைப்பு கூறுவது போல் மைத்திரி எங்கே‌ இன அழிப்பில் ஈடுபட்டார்??  தமிழன் தன்னை தானே அழித்து கொண்டான் .....!!!!

" 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெற்றி பெறச்செய்வதற்காக வாக்களித்த இந்நாட்டு மக்களனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" 

 

உங்களை வெல்ல வைத்த தமிழ் மக்களை ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் 'நல்லாட்சியில்' தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நீங்களும் ஒரு சிங்கள இனவாதி தலைவரே. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
21 minutes ago, Dash said:

இந்த தலைப்பு கூறுவது போல் மைத்திரி எங்கே‌ இன அழிப்பில் ஈடுபட்டார்??  தமிழன் தன்னை தானே அழித்து கொண்டான் .....!!!!

 

இந்த மனுஷன் இரண்டாவது தரம் ஜனாதிபதி ஆகிற கனவில விழுந்த ஒரு சூட்டோட திருந்தின படியா இண்டைக்கு சந்தோசமா ஒதுங்குது!

எப்பிடியோ ஒரு மச்சக்காரன் தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.