Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.!

 

 

26-03-2020
 
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
இன்றைய நிலையில் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் நம் உடலில் எப்படி நுழைகிறது, பாதிப்பை உண்டு செய்கிறது என தெளிவாய் அறிவோம்.
 
கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது.
 
இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர்தான் கோவிட் -19.
 
corono%2Bvirus-2.jpg
 
 
வைரஸ் என்றால்?...
 
முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரிதான் வைரஸ். ஒரு ஆர்.என்.ஏ. (நமது செல்களில் 'ஜீன்' எனப்படும் 'டி.என்.ஏ.' இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டி.என்.ஏ.வின் அரைகுறை வடிவமான RNA அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இதுதான் கொரோனா வைரஸ். 
 
இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில்(Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு 'கொரோனா வைரஸ்' எனப் பெயர்.
 
இதை ஏன் 'அரைகுறை உயிரி' என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவதுதான் இந்த மாதிரியான வைரஸ்களின் வேலை. 
 
செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோதான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.
 
இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன்தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. 
 
இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறிதான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.
 
இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. 
 
நமது உடலின் இருக்கும் Immune system என்பது நமது உடலுக்குக் கிடைத்திருக்கும் ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.
 
முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம்.
 
இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. 
 
வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.
 
ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், பாதுகாப்பு அரண்கள் தனது அடுத்த கட்ட வேலையில் இறங்கும். 
 
அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை, வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இதுதான் இதன் வேலை.
 
அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். 
 
இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.
 
இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க...
 
தொண்டைப் பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. 
 
நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்.என்.ஏ.வை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்.என்.ஏ. செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். பின்பு, இந்த ஒவ்வொரு ஆர்.என்.ஏ.வும் ஒரு வைரசாக மாறும்.
 
அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். 10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.
 
இதுவரையிலும்கூட நமது உடலுக்குப் பிரச்சனைகள் அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள், நுரையீரலில் நுழைந்து வைரஸ்களைத் தாக்க ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனையே துவங்குகிறது.
 
மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கேதான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
 
அது என்ன வகையான குழப்பம்...?
 
நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம்தான். நமது ஜீன்களுக்கு பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன்ஸ் தகவல்களை அனுப்புகிறது. அப்போது நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.
 
அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். 
 
இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில்தான் பெரும்பாலான மரணங்கள் நிகழ்கின்றன.
 
இப்படி உடலில் இருக்கும் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில்தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. 
 
வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதுதான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
 
நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.
 
ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவதால் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.
 
கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப் போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில்தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.
 
நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.
 
நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி. உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. 
 
ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பதுதான் நல்ல செய்தி.
 
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடித்துவிடுவார்களா?  
 
தெரியவில்லை.
 
35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்.ஐ.வி. வைரசும், இதே கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்ததுதான். அதுவும், நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ்தான்.
 
ஆனால், கொரோனா மாதிரி எச்.ஐ.வி. இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனாதான் கொடூரம். அதற்குத்தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.
 
இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம்.
 
இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து..!



Read more: http://truetamilans.blogspot.com/2020/03/blog-post_26.html#ixzz6HnwV90gk

மிகவும் பயனுள்ள கட்டுரை. இணைப்பிற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஏராளன். கொரோனா பற்றி கொஞ்சம் புரிய வைக்கிறது இந்தக் கட்டுரை.......!

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...?

மூக்கு, வாய் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ் செல்கள் வழியாக நுரையீரல் சென்று அங்கு அடைக்காத்து தன்னுடைய எண்ணிக்கையை வலுப்படுத்துகிறது. பின்னர், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சென்று அவற்றை செயல் இழக்க செய்து உயிரை பறிக்கிறது.

 
 
 
கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...?
நுரையீரலை பாதிக்கும் கொரோனா
 
மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமானது காற்றை பிரித்து உடல் இயக்க செயலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல். நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு சுவாசக் குழாயின் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கு காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து எடுத்து, ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கிறது.

இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை ஆஜ்சிஜன் துணை கொண்டு சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றி மீண்டும் இதயம் வழியாக உடல் முழுவதற்கும் அனுப்பும் முக்கியமான பணியை மேற்கொள்கிறது. இப்போதே உடல் உறுப்புகளில் நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
 
இத்தகைய பணியை செய்யும் நுரையீரலைதான் கொரோனா வைரஸ் தன்னுடைய இலக்காக கொண்டிருக்கிறது. மூக்கு, வாய் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ் செல்கள் வழியாக நுரையீரல் சென்று அங்கு அடைக்காத்து தன்னுடைய எண்ணிக்கையை வலுப்படுத்துகிறது. பின்னர், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சென்று அவற்றை செயல் இழக்க செய்து உயிரை பறிக்கிறது.

நுரையீரல் பாதிக்கப்படுவது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியாவின் ராயல் ஆஸ்ட்ரலேசியன் மருத்துவ கல்லூரியின் தலைவரும், சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் ஜான் வில்சன் கொரோனா வைரசின் பாதிப்பின் கடுமையான விளைவுகளை நான்கு நிலைகளாக பிரிக்கிறார்.

* முதல்கட்டமாக வைரஸ் பாதிப்பு இருக்கும், ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு தொடர்பாக பெரியதாக எந்த ஒரு அறிகுறியும் காணப்படாது.

* இரண்டாவது கட்டம் மேல் சுவாசக் குழாயில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது. பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி இருப்பதாக லேசான அறிகுறிகள் இருக்கலாம். இதுபோன்ற சிறிய அறிகுறிகளை கொண்டவர்கள் இன்னும் வைரஸை பரப்ப முடிகிறது. ஏனென்றால், அவர்கள் வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

* மூன்றாவது கட்டம் வைரஸ் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது, இதேபோன்ற அறிகுறிகளை கொண்ட ‘புளு’ காய்ச்சலாக தெரிகிறது.

* நான்காவது கட்டம் நிமோனியாவை கொண்ட கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவ உதவியை நாடியவர்களில் சுமார் 6 சதவீதம் பேர் இதுபோன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகிறார்.

கொரோனா வைரஸ் வயதானவர்கள், உயர் இரத்த அழுத்தம், இதயம் நுரையீரல் பிரச்சினைகள் கொண்டவர்கள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜான் வில்சன் பாதிப்பு தொடர்பாக கூறுகையில், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் உருவாவது, பாதிப்பு சுவாச மரத்தை (காற்றை உள்ளே இழுக்கும் மூச்சு குழாய் நுரையீரல் வரையில் தலைகீழா கிளைகளுடன் ஒரு மரம் போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.) அடைந்துவிட்டது என்பதற்கான விளைவாகும். சுவாசப்பாதை நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று பயணம் செய்வதாகும். சுவாசப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. இது காற்றுப்பாதையில் இருக்கும் நரம்புக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அப்போது சிறு துகளால் கூட இருமல் ஏற்படும்.

வைரஸ் பாதிப்பு சுவாசப்பாதையிலிருந்து நுரையீரல் உள்ளே செல்லும் போது, வாயு பரிமாற்ற மையத்திற்கு செல்கிறது. இதனால், வாயு பரிமாற்றம் தடையை சந்திக்கிறது. பின்னர் நுரையீரலின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று சுத்திகரிப்பு உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுத்திகரிப்பு பகுதியில் காளான்கள் போன்ற வீக்கம் ஏற்படுகிறது. பின்னர் நிமோனியா ஏற்படுகிறது. வைரசினால் பாதிக்கப்பட்ட நுரையீரலின் ஆக்சிஜனை எடுத்து ரத்தத்தை சுத்தம் செய்யும் பணி குறையும். இதனையடுத்து கடுமையான நிமோனியாவுடன் மரணம் ஏற்படுகிறது, இதுவே வழக்கமான நிகழ்வாக இருக்கிறது என்கிறார்.

நிமோனியாவிற்கு சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது?

ஆஸ்திரேலியா நுரையீரல் அறக்கட்டளையின் தலைவரும், முன்னணி சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பேசுகையில், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியாவை தடுக்கக்கூடிய வகையில் எந்த ஒரு சிகிச்சையும் இதுவரை இல்லை. ஏற்கனவே, எல்லா வகையான மருந்துகளையும் முயற்சித்து வருகின்றனர். பலவிதமான வைரஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்போம் என நம்புகிறோம்.

இந்த நேரத்தில் ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறையையே (மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில் உதவி செய்யும் மருந்துகளை கொண்டு மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை )மேற்கொள்கிறோம். வேறு எந்த பிரத்யேக சிகிச்சையும் கைவசம் இல்லை. இதுதான் நாங்கள் தீவிர சிகிச்சையில் இருக்கும் மக்களுக்கு வழங்குகிறோம்.

சுவாசக்கருவியின் மூலமாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும். அவர்களுடைய ஆக்சிஜன் அளவை பராமரிக்கிறோம், குணமடையும் போது அவர்களின் நுரையீரல் மீண்டும் இயல்பான வழியில் செயல்பட முடியும் எனக் கூறியுள்ளார்.

மருத்துவர் ஜான் வில்சன் பேசுகையில், கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். சில சூழ்நிலைகளில் இதுமட்டும் போதுமானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா ஏற்பட்டால், அது தடையின்றி தொடரும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிர் பிழைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நிமோனியா எவ்வாறு மாறுபடுகிறது? என்ற கேள்விக்கு மருத்துவர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பதில் அளிக்கையில், எங்களுக்கு தெரிந்த பெரும்பாலான நிமோனியா பாதிப்புக்கு மருத்துவமனையில் அனுமதிப்போம். ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சைக்கு பலன் கிடைக்கிறது. ஆனால், கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா மாறுபட்டதாக இருக்கிறது என்கிறார்.

மருத்துவர் வில்சன் பேசுகையிலும், கொரோனாவினால் ஏற்படும் நிமோனியா கடுமையானதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா சிறிய பகுதிகளுக்கு பதிலாக நுரையீரலின் அனைத்து பகுதியையும் பாதிக்கும் எனக் கூறுகிறார். நிமோனியாவால் இறக்கும் அபாயத்திற்கு முக்கிய காரணியாக வயது மூப்பும், இதயம், சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்டவையும் காரணமாக உள்ளது எனக் கூறுகிறார்கள். கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கை மட்டுமே உள்ளது. எனவே, அரசின் அறிவுரைகளை ஏற்று சுய விலகியிருத்தலை கடைபிடிப்போம், ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.