Jump to content

பட்டமோடி - The Kite Runner


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டமோடி (The Kite Runner) 

51vRNqL61aL._SX318_BO1,204,203,200_.jpg

 

"மீண்டும் நல்வழிக்குத் திரும்ப ஒரு வழி இருக்கிறது!"

"There's a way to be good again!"

(இது பல ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக வெளிவந்து பின்னர் ஒரு திரைப்படமாகவும் வெளிவந்து விட்ட ஒரு படைப்பு. இதைப் பற்றி ஏற்கனவே யாழில் பகிரப் பட்டிருக்கக் கூடும், ஆனால் கொரனாவுக்கு முடங்கிய நாட்களில் வாசிக்கத் தகுந்த நல்ல புத்தகமாக இருப்பதால் இங்கே பகிர்கிறேன்)

"யுத்தம் என்பது குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் மட்டும் நடக்கும் ஒன்றல்ல. இந்த உபகரணங்களுக்கு அப்பால் மக்களின் துன்பத்தினாலும் வாழ்க்கை மாற்றங்களாலும் கூட யுத்தம் பிரதிநிதித்துவம் செய்யப் படுகிறது". இப்படிச் சொன்னவர் வன்னியில் இறுதி யுத்த நாட்கள் வரை வாழ்ந்து மீண்ட தமிழ்க்கவி. இந்த பட்டமோடி என்கிற கதையும் காலித் ஹொசைனியின் வரிகளில் ஆப்கானிஸ்தானின் யுத்த அவலங்கள் எப்படி ஒரு குடும்பத்தையும் அதன் சுற்றத்தாரையும் அலைக்கழிக்கிறது என்ற விவரணம் தான்.

ஆப்கானிஸ்தான் என்பது எங்கள் அனேகரின் கற்பனையில் வரண்ட நிலமும், வடக்கில் மலை சூழ்ந்த கணவாய்களும் கொண்ட நிலப்பரப்பு. 80 களில் சோவியத் ரஷ்யாவுக்கு இந்து சமுத்திரத்திற்கு ஒரு இலகுவான வழி வேண்டும் என்ற நோக்கத்தில் ஆப்கானை தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்திருந்தது, பெருமளவுக்கு. ஆனால், அதற்கு சில ஆண்டுகள் முன்புவரை மன்னராட்சியில் இருந்து வந்த ஆப்கான், மன்னரின் உறவினர் ஒருவர் செய்த சதிப்புரட்சி மூலம் குடியரசாக உருவாகி ஒரு சில ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. இந்த மன்னராட்சியின் முடிவோடு ஆரம்பிக்கும் கதை இறுதியில் சோவியத் ரஷ்யா உடைந்து, பனிப்போர் ஆரம்பித்து தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிப் பின்னர் மேற்கு நாடுகளால் தலிபான் முதலில் விரட்டப் பட்டதுடன் முடிவடைகிறது.

 

முடிவு என்று சொல்வதை விட, கதையின் முடிவில் ஒரு இளைய ஆப்கான் நாட்டவரின் வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பிக்கிறது என்பதாகவே காட்டப் படுகிறது.

யுத்தமில்லாத வாழ்க்கை சாதாரணமான வாழ்க்கை - உண்டு, உறங்கி, குடும்பம் நடத்தி ஒரு நாள் நிலத்தின் கீழ் துயில் கொள்ளும் சாதாரண நிலை!. ஆனால், மனித விழுமியங்களையும், எல்லைகளையும், முட்டி மோதி சோதித்துப் பார்க்கும் நிலையை எந்த யுத்தமும், போர் நிலைமையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்தச் சோதனையில் சிலர் மனிதத் தன்மையைத் துறக்க சிலர் அதீத மனிதத் தன்மை கொண்டோராக உருமாறும் அதிசயமும் நடக்கிறது. இந்த இரண்டு போக்குகளையும் காட்டி இறுதியில் மனிதத் தன்மை எப்படி ஒரு குடும்பத்தை முழுமையாக்கி நிறைவைக் கொண்டு வருகிறது என்று காட்டுவதே பட்டமோடியின் சுருக்கக் கதை. எனவே, தர்மம் வெல்கிறது என்ற பழைய தமிழ் சினிமா செய்தி சொல்லும் கதை போலத் தோன்றினாலும் சொல்லப் பட்டிருக்கும் எளிமை கலந்த உரை நடைப் பாணி அவ்வாறொரு தோற்றத்தைத் தராமல் ரசிக்க அனுமதிக்கிறது.

பட்டமோடி என்பது நான் கொடுத்த தமிழ் பெயர், சரியாக இருக்குமா தெரியவில்லை: ஆப்கானின் சில பகுதிகளில் பட்டம் விடுவது எங்கள் ஊர்களில் போல பிரபலமான  விளையாட்டாக இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. இந்த விளையாட்டில், வெட்டி விழுத்தப் படும் பட்டத்தை அது எங்கே சென்று வீழக் கூடுமென்று கணித்து ஓடிச் சென்று கைப்பற்றுபவருக்கே வெற்றி - அப்படி ஓடிக் கைப்பற்றுபவரே பட்டமோடி எனப்படுகிறார். அவ்வாறு நடைபெறும் ஒரு பட்டமேற்றல் போட்டியில் நடக்கும் ஒரு சம்பவம், அந்த சம்பவத்திற்கு அமீர் என்ற கதாபாத்திரம் காட்டும் எதிர்வினை என்பனவே கதையின் மூலைக்கல்!.

 

கதையின் மிகுதிப் பகுதி, அந்த மூலைக்கல்லான சம்பவத்தில் இருந்து அமீர் மீள எடுக்கும் நடவடிக்கைகளின் விபரிப்பு - எனவே தான் "திரும்பவும் நல்வழிக்குத் திரும்பும்" ஒரு மீட்புப் பயணமாக (journey of redemption) பட்டமோடி விரிகிறது.

இந்தக் கதையின் மூலைக்கல்லான சம்பவத்தை எந்த நாட்டின் பின்புலத்திலும் உருவாக்கி இதே போன்ற கதையை இன்னொருவர் எழுதி விடலாம்! ஆனால், இது ஆப்கானிஸ்தான் என்ற போர் தின்னும் ஒரு ஏழை நாட்டின் கதையையும் சேர்த்தே சொல்வதால் தான் விசேடமாகி விடுகிறது. எனவே, ஆப்கானிஸ்தான் பற்றிய வர்ணணையில் அவர்களின் கலாச்சாரம், பஷ்ரூன் மக்களின் விருந்தோம்பல், ஹசாரா என்ற ஒதுக்கப் படும் இனக்குழுவின் விளிம்பு நிலை வாழ்வு என்பன இந்த நாவலை ஒரு வரலாற்றுப் பதிவாகவும் திகழ வைக்கிறது.

காலித் ஹொசைனி ஒரு அமெரிக்க ஆப்கான் எழுத்தாளர். எழுதுவதோடு மட்டும் நிற்காமல் சிதைந்த ஆப்கான் நகரங்களில் மருத்துவமனைகளை மீளமைக்க உதவி வரும் ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.  

 -ஜஸ்ரின்

 நன்றி: முகப்புப் படம் அமேசன் தளத்திலிருந்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

பட்டமோடி என்பது நான் கொடுத்த தமிழ் பெயர், சரியாக இருக்குமா தெரியவில்லை: ஆப்கானின் சில பகுதிகளில் பட்டம் விடுவது எங்கள் ஊர்களில் போல பிரபலமான  விளையாட்டாக இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. இந்த விளையாட்டில், வெட்டி விழுத்தப் படும் பட்டத்தை அது எங்கே சென்று வீழக் கூடுமென்று கணித்து ஓடிச் சென்று கைப்பற்றுபவருக்கே வெற்றி - அப்படி ஓடிக் கைப்பற்றுபவரே பட்டமோடி எனப்படுகிறார். அவ்வாறு நடைபெறும் ஒரு பட்டமேற்றல் போட்டியில் நடக்கும் ஒரு சம்பவம்

வருடம்தோறும்  வடகிழக்கு பருவப் பெயர்சிக்காற்றுடன் பட்டம் ஏற்றுவதுதான் எனது சிறுவயது அனுபவங்கள். புத்தக வாசிப்பிலும் பட்டம் ஏற்றுவதிலும் விருப்பம் உள்ளதாலோ என்னவோ நண்பி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். பிடித்த புத்தகங்களில் ஒன்று.👍🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வருடம்தோறும்  வடகிழக்கு பருவப் பெயர்சிக்காற்றுடன் பட்டம் ஏற்றுவதுதான் எனது சிறுவயது அனுபவங்கள். புத்தக வாசிப்பிலும் பட்டம் ஏற்றுவதிலும் விருப்பம் உள்ளதாலோ என்னவோ நண்பி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். பிடித்த புத்தகங்களில் ஒன்று.👍🏾

நான் ஊரில் பட்டத் திருவிழாவுக்குப் போனதில்லை, ஆனால் பெருமெடுப்பில் நடக்கும் என அறிந்திருக்கிறேன். ஊரிலும் இந்த கண்ணாடி நூலால் வெட்டுவதெல்லாம் செய்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவின் முகத்தை அரிந்த  பிளேடுகளை பட்டத்தின் வாலாக கட்டி நாங்கள் இருந்த காலங்களில் மற்றைய பட்டங்களை  தெறிக்க விடுவது உண்டு .

எந்த பட்டம் ஏத்தினாலும்  உச்சி சரியாக கட்டினால்  அது விண்ணில் பறக்கும் .

 

உச்சி என்பது முக்கியம் கொக்குக்கு அது தெரிந்தவன் கொக்கு பட்டம் விடுவதில் வல்லுநர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட திருவிழா பருத்தி துறை முனையில் வாடைக்காற்று நேரம் நடப்பதுண்டு  இப்ப ஏனோ அங்குள்ளவர்கள் எல்லாம் வெளிநாடு வந்த காரணத்தினால் நடப்பதில்லை போல் உள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.