Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கோட்டா கோகம"  சிங்களக் கூட்டு உளவியலை... முழுமையாகப் பிரதிபலிக்கிறதா? நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா கோகம சிங்களக் கூட்டு உளவியலை முழுமையாகப் பிரதிபலிக்கிறதா? நிலாந்தன்.

"கோட்டா கோகம"  சிங்களக் கூட்டு உளவியலை... முழுமையாகப் பிரதிபலிக்கிறதா? நிலாந்தன்.

கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்கும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்த பொழுது அவர்கள் மத்தியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அந்த உரையில் நான் பார்க்கக் கிடைத்த ஒரு பகுதியில் அவர் பின்வரும் பொருள்பட பேசுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக பொருட்களை அனுப்பவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியபொழுது டுவிட்டரில் அச்செய்தியின் கீழ் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பெரும்பாலான தமிழர்கள் எங்களுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டாம் பாதிக்கப்பட்ட எல்லா இனத்தவர்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று எழுதுவதை பார்க்கிறேன். இது ஒரு முக்கியமான மாற்றம். இந்த புரிந்துணர்வை நாங்கள் தொடர வேண்டும்…..

உண்மை. தமிழக முதல்வர் உதவ முன் வந்த பொழுது சுமந்திரன் உட்பட தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அவ்வாறுதான் கூறுகிறார்கள். தமிழகத்தின் உதவிகள் தனிய தமிழ் மக்களுக்கு என்று வராமல் முழு இலங்கைத் தீவுக்கும் உரியதாக வரவேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பெருந்தொற்று நோய்க் காலத்திலும் பிரித்தானியாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு தொகுதி மருத்துவ உதவிகளை நாட்டுக்கு அனுப்ப விரும்பினார்கள். அந்த உதவியை தமிழர்களுக்கு என்று செய்யாமல் முழு நாட்டுக்கும் என்று செய்ய வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். அந்த அடிப்படையில் அவர் அரசாங்கத்தோடு அது தொடர்பாக பேச முற்பட்டார். ஆனால் அரசாங்கம் அதை நிராகரித்துவிட்டது. இப்பொழுது மறுபடியும் சுமந்திரன் தமிழக முதல்வரின் உதவி தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். அதில் அவர் சுமந்திரனின் நிலைப்பாட்டை விமர்சித்திருந்தார்.

இந்தியா,அமெரிக்கா, ஐநா போன்ற வெளித் தரப்புக்கள் இலங்கைத்தீவில் கொழும்பிலுள்ள அரசாங்கத்தோடு தான் உறவுகளைப் பேணும். உதவிகளைச் செய்யும். அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவின் பாற்பட்டது. ஆனால் தமிழகம் ஈழத்தமிழர்களுக்கு உதவுவது அத்தகையது அல்ல. அது கடலால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆனால் இனத்தால் மொழியால் பண்பாட்டு நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் இரண்டு சமூகங்களுக்கிடையிலானது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பத் தேவையில்லை.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மூன்று இனங்களுக்கும் உரியவைதான். அதேசமயம் அதற்கு எதிராகப் போராடும் சிங்கள மக்களின் எழுச்சியை தமிழ் மக்கள் நிதானமாக அணுக வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு ஐக்கிய இலங்கை என்ற மாயைக்குள் மூழ்கத் தேவையில்லை. அப்படி மூழ்கலாம் தான். எப்பொழுது என்று சொன்னால், சிங்கள-தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் பல்லினத் தன்மை மிக்க ஒரு சமஸ்டிக் கட்டமைப்பை உருவாக்கும் பொழுது அது சாத்தியமாகும். அவ்வாறு ஒரு சமஸ்டி கட்டமைப்புக்கு சிங்கள கூட்டு உளவியலை கட்டியெழுப்ப வேண்டும் வாருங்கள் என்று அழைத்தால் அதற்கு ஆங்கிலமும் சிங்களமும் தெரிந்த தமிழ் பிரதிநிதிகள் சிங்கள முற்போக்கு தரப்புடன் ஒன்று சேரலாம்.

இது விடயத்தில் மனோ கணேசன் சில சமயங்களில் சிங்கள மக்களின் குற்ற உணர்ச்சியை தூண்டக்கூடிய விதத்தில் கருத்துக்களை தெரிவிக்கின்றார். அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டில் அவர் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். அதை அவர் சிங்களத்திலும் தெரிவிப்பார் என்று நம்பலாம். டுவிட்டரில் அதை ஆங்கிலத்தில் சிறு குறிப்பாக வெளியிட்டிருந்தார். மனோ கணேசனும் சரி சுமந்திரனும் சரி அவர்களைப் போன்ற சிங்களம் மற்றும் ஆங்கிலம் தெரிந்த அரசியல்வாதிகள் எல்லாரும் இப்பொழுது செய்ய வேண்டிய ஒரு முக்கிய காரியம் உண்டு. தென்னிலங்கையில் உள்ள படித்த நடுத்தர வர்க்க சிங்களவர்கள் மத்தியில் குற்ற உணர்ச்சியை தூண்டுவதே அது.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் அரசியல் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட விரக்தி வெறுப்பு காரணமாகவும் சிங்கள நடுத்தர வர்க்கம் கடுமையான கோபத்தோடு காணப்படுகிறது. இக்கோபத்தை அவர்கள் காலிமுகத்திடலிலும் ஏனைய பொது இடங்களிலும் வெளிப்படுத்தக் காணலாம். குறிப்பாக காலிமுகத்திடலில் இரண்டு குப்பைக் கூடைகளுக்கு மகிந்த மற்றும் கோத்தாபயவிடம் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதோடு குப்பைகள் நிரப்பிக் கட்டப்பட்ட கறுத்தப் பொலித்தீன் பைகளின் கழுத்தில் ராஜபக்சக்களின் குரக்கன் நிறச் சால்வை தொங்க விடப்பட்டிருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுத்தவெற்றி நாயகர்களாகப் போற்றிக் கொண்டாடப்பட்ட இரண்டு தலைவர்களை இப்பொழுது அதே சிங்கள மக்கள் குப்பைக் கூடைகளுக்குள் வீசும் ஒரு நிலை. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர்கள் ராஜபக்சக்களை குப்பைக் கூடைக்குள் வீசுகிறார்கள். அதற்காக யுத்த வெற்றியையும் அவ்வாறு குப்பைக் கூடைக்குள் வீசத் தயாரா என்பதுதான்.

தென்னிலங்கையில் தன்னியல்பாகத் திரளும் மக்கள் மத்தியில் சில பொதுவான அம்சங்களைக் காணலாம். முதலாவது அவர்கள் எந்த ஒரு கட்சியின் சின்னத்தையோ கொடியையோ ஏந்திக் கொண்டியிருக்கவில்லை. இரண்டாவது எந்த ஒரு கட்சியின் கோஷத்தையும் முன்வைக்கவில்லை. மூன்றாவது கட்சித் தலைவர்களை அல்லது முக்கியஸ்தர்களை தமது போராட்டங்களில் இணைத்துக் கொள்வதில்லை. நாலாவது தாங்கள் கூடும் இடங்களில் கட்சித் தலைவர்களை அல்லது கட்சிப் பிரமுகர்களைப் பேச அனுமதிப்பதில்லை. ஐந்தாவது -இது முக்கியமானது- அவர்கள் அனேகமாக ஸ்ரீலங்காவின் சிங்கக் கொடியை ஏந்தியிருக்கக் காணப்படுகிறார்கள். அவர்களை இணைக்கும் அம்சங்களில் ஒன்றாக சிங்கக்கொடி காணப்படுகிறது.

ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியில் காணப்படும் வாளேந்திய சிங்கத்தை தமிழ் மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதனை போராடும் சிங்கள மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு சுமந்திரன் மனோகணேசன் போன்றவர்களுக்கு உண்டு. அதுமட்டுமல்ல அந்த சிங்கத்தின் கூரான வாள் முனையில் தமிழ் மக்களின் நூற்றாண்டுகால ரத்தம் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிங்கள நடுத்தர வர்க்கம் நொந்துபோய் இருக்கும் இத்தருணத்தில் அவர்கள் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இது மிக முக்கியம். சிங்களக் கூட்டு உளவியலை குற்றவுணர்ச்சி கொள்ள வைப்பது. சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் எல்லாவற்றுக்குமாக சிங்கள மக்கள் மத்தியில் குற்ற உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்.

இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு முதலாவது முக்கிய முன்நிபந்தனை அதுவாகும். அவ்வாறு சிங்களப் பொது உளவியலை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும்போது அது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு தேவை என்ற நிலைப்பாட்டை எடுக்கும். அப்பொழுது சமஸ்டி கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனோ நிலைக்கு அவர்களைத் தயார்படுத்தலாம். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் சரி சிவில் சமூகங்களும் சரி அதை எந்த அளவுக்கு செய்திருக்கின்றன? அல்லது செய்யத் தயாராக காணப்படுகின்றன?

அதேசமயம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிலர் இவ்வாறான தருணம் ஒன்றில் சிங்கள மக்களோடு சகோதரத்துவத்தை பேணுவதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கைகளை வென்றெடுக்கலாம் என்று ஒரு வாதத்தை முன் வைக்கின்றார்கள். அவர்கள் சிங்கள நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படும் மனமாற்றத்தை மனோரதிய படுத்துகிறார்களா?

சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய இடதுசாரிகளும் சரி லிபரல்களும் சரி காலத்துக்கு காலம் அவ்வாறு மனமாற்றத்தை குறிக்கும் அல்லது மனச்சாட்சியின் பிரதிபலிப்பாக அமையும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இறுதியிலும் இறுதியாக அவர்கள் எங்கே சென்று சரணடைகிறார்கள் என்று பார்த்தால் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பில்தான். கொல்வின் ஆர். டி. சில்வா, என். எம். பெரேரா, தொடங்கி தயான் ஜயதிலக்க மற்றும் ஜெகான் பெரேரா வரையிலும் அப்படித்தான் நிலைமை உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு டிலான் பெரேரா ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு வந்தபொழுது ரவிராஜ் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னார்… டிலான் பெரேரா போன்ற நம்பிக்கையூட்டும் முற்போக்கான இளம் சிங்கள அரசியல்வாதிகள் அரங்கினுள் நுழைகிறார்கள் என்று. ஆனால் டிலான் கடைசியாக எங்கே போய்ச் சேர்ந்தார் ?

சிங்கள இடதுசாரிகள் நாடு முழுவதற்குமான வர்க்க உணர்வைப்பற்றி கதைக்கும் போது அது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மக்களின் இன உணர்வை வர்க்க உணர்வுக்குள் கரைத்துவிட முற்படுகின்றது. அதுபோலவே சிங்கள லிபரலர்களும் ஒரே இலங்கை என்ற கோஷத்தை முன் வைக்கும் பொழுது அது தமிழ் மக்களின் தேசிய உணர்வை இலங்கை தேசியத்துக்குள் கரைப்பதிலேயே முடியும்.இங்கு பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களை அவர்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதுதான். அந்த அடிப்படையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் தேசிய இருப்பை ஏற்றுக் கொண்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு அரசுக் கட்டமைப்பு மாற்றத்துக்கு அவர்கள் தயாரா என்பதுதான். இது முகநூலில் டுவிட்டரில் எழுதி சந்தோஷப்படும் விடயம் மட்டுமல்ல. காலிமுகத்திடலில் சுலோக அட்டைகளில் எழுதி செல்பி எடுக்கும் விவகாரமும் அல்ல. அதைவிட ஆழமானது. பிரதான நீரோட்ட கட்சிகள் சிங்கள பௌத்த இனவாத வாக்குகளை திரட்டும் பொழுது இந்த லிபரல்களும் இடதுசாரிகளும் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதனை கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழில் மிகத் தெளிவாகவும் தொகுத்தும் மு.திருநாவுக்கரசு கருத்து தெரிவித்திருக்கிறார்.

எனவே கோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் கோரிக்கையின் பின்னணியில் அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் ஒருங்கிணைக்கும் பிரதான அம்சமாக காணப்படும் சிங்கக்கொடியை தமிழ்மக்கள் அப்பாவித்தனமாக பார்க்கத் தேவையில்லை. தங்களுடைய கடந்த கால அனுபவத்திற்கூடாகவே அவர்கள் பார்க்கவேண்டும். அதே சமயம் சிங்கள நடுத்தர வர்க்கத்தின் மனதில் ஏற்பட்டிருக்கும் சிறிய மாற்றங்களை எப்படி ஒரு பெரும் போக்காக ஒரு சமூகத்தின் கூட்டு உளவியல் ஆக மாற்றலாம் என்று மனோ கணேசன் சுமந்திரன் போன்றவர்கள் சிந்திக்கலாம். சிங்களப் பொது உளவியலை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கினால்தான் இலங்கைதீவில் நல்லிணக்கம் ஏற்படும். அதே சமயம் தமிழ் மக்களும் தமது கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தமது இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்வது என்பது தமிழ் தேசிய அரசியலின் ஜனநாயக உள்ளடக்கத்தை மேலும் செழிப்பாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான். மாறாக தமிழ்த் தேசிய அரசியலை கைவிட்டு சிறீலங்கர்களாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் அல்ல.

https://athavannews.com/2022/1276932

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து  பாடம் எதையும் படிக்காத  ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம் – நிலந்தன்.

April 17, 2022
spacer.png

தோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டா கோகம கிராமம்தான். உலகில் அதிகம் பேர் உற்றுக் கவனிக்கும் ஒரு கிராமமாக அது மாறிவருகிறது. இலங்கைத்தீவில் அதுதான் மிகப் பிரசித்தமான ஒரு ட்ரெண்ட். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்ற கிராமத்தின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டது. இப்பொழுது கோட்டா கோகம  என்ற கிராமம் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.

அரசுக்கு எதிரான போராட்டங்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவில் பெருந்தொற்று நோய்க் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட கபன் துணி போராட்டம் புத்தாக்கத் திறன் மிக்க ஒரு குறியீட்டுப் போராட்டம். அதுபோலவே கோட்டா கோகமவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை. உருவாக்கப்பட்ட மிகச் சில நாட்களுக்குள் அதுபோல வேறு எந்தக் கிராமமும் வேகமாக வரவில்லை. அதில் குடியிருப்பவர்களைப் பொறுத்தவரை அது ஒரு புரட்சிக்  கிராமம். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்கும் எல்லாருக்கும் அது ஒரு புரட்சி கிராமம். 

இந்தியாவில் ஆந்திராவில் தெலுங்கானா விடுதலை போராட்டத்தின்போது கவிஞர் சொரபண்டார ராஜ் எழுதிய ஒரு கவிதை உண்டு. ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமம் என்று அதற்குத் தலைப்பு. ஆந்திராவில் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலகம் முழுவதிலும் சுதந்திரத்துக்காகப் போராடிய எல்லாம் மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் அவ்வாறான ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமங்கள் காணப்பட்டன. விடுதலைப் போராட்டத்தை அவைதான் அடைகாத்தன.

ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஆர்பாட்டக்காரர்களின் குடியிருப்பு என்ற அடிப்படையில் கோட்டா கம கிராமத்துக்கு ஒரு புரட்சிகரமான பாத்திரம் உண்டு. அது இப்பொழுது அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறியீடாக மாறியிருக்கிறது. மேலும் அது இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை நோக்கிய கட்டமைப்பு மாற்றத்தைக் கருக்கட்டும்  கிராமமாகவும் வளர்ச்சி பெற்றால் அது மகத்தானதே.

இது நோன்பு காலம் என்பதனால் ஒருபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் அக்குடியிருப்புக்கு உதவுகிறார்கள். தவிர கரு ஜயசூரியவால் நிர்வகிக்கப்படும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உதவிகளைச் செய்வதாக தகவல். மேலும் மாணவர் அமைப்புக்களும் அங்கே நிற்பதாக ஒரு தகவல். எனவே காலிமுகத்திடலில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தங்குமிட வசதிகளும் ஏனைய வசதிகளும் ஏதோ ஒரு விதத்தில் கிடைப்பதாக தெரிகிறது. இனி வெளிச்சக்திகளும் அக்கிராமத்தை தத்தெடுக்க முயற்சிக்கக்கூடும் .

கொழும்பில் உள்ள மேற்கத்திய நாட்டுத் தூதுவர்கள் தமது ருவிட்டர் பக்கங்களில் வெளியிடும் செய்திகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகின்றன. மேற்கத்தைய ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் விவகாரத்தை பெருப்பித்து எழுதுகின்றன. குறிப்பாக சில தமிழக யூடியூப்பர்களின் கற்பனையை  தாங்கமுடியவில்லை. சில யூடியூப்பர்களின் பொய்களை மில்லியன் கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் சரியான தகவல்களைத் தரும் யூடியூப்களை  அந்தளவு தொகையினர் பார்ப்பதில்லை.

நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் பொதுவாக இரண்டு வகைப்பட்டவை. ஒருபகுதி ஆர்ப்பாட்டங்கள் கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் தன்னியல்பாக தெருவுக்கு வருகிறார்கள். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டமும் அத்தகையதே. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் எந்தக் கட்சியின் கொடிகளும் காணப்படவில்லை. ஏந்தக் கட்சியின் கோஷமும் காணப்படவில்லை. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கோஷங்களும் சிங்கக்கொடியும் மட்டும்தான் காணப்படுகின்றன. அவர்களை இரண்டு விவகாரங்கள் இணைக்கின்றன ஒன்று ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கூட்டுணர்வு. இரண்டாவது, இலங்கையர்கள் என்ற கூட்டுணர்வு. சிங்கக்கொடி அதைத்தான் பிரதிபலிக்கிறது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கட்சிப் பிரமுகர்களைக்  காணமுடியவில்லை. கட்சி முக்கியஸ்தர்களும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் சற்று விலகி நிற்பதாக தெரிகிறது. அரசியல் கட்சிகளை நீக்கிவிட்டு மக்கள் தன்னியல்பாக ஆர்ப்பாட்டங்களை,போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இலங்கைத் தீவில் மட்டும்தான் நடக்கும் ஒரு விவகாரம் அல்ல. ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டக்களத்தில் தாற்காலிகமாகத் தங்கியிருந்து போராடுவதும் இதுதான் முதற்தடவையல்ல. அதற்கு உலக அளவிலும் பிராந்திய அளவிலும் உள்நாட்டிலும் முன்னுதாரணங்கள் உண்டு.

அமெரிக்காவின் வோல்ட்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. அரபு வசந்தத்திலும் அவ்வாறான ஏற்பாடுகள் காணப்பட்டன. இந்தியாவில் அண்மையில் வெற்றி பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது டெல்லியில் விவசாயிகள் தற்காலிகமாக தங்கி இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.. இவைதவிர சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடாத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மெரினா கடற்கரையில் அவ்வாறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவையாவும் நாட்டுக்கு வெளியே உள்ள உதாரணங்கள். நாட்டுக்குள் தமிழ்ப்  பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளில் துலக்கமான மூன்று உதாரணங்களை இங்கே காட்டலாம். முதலாவது உதாரணம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடையது. பல ஆண்டுகளாக தொடர்ந்து வீதியோரங்களில் போராடும் அன்னையர்கள் மிகச்சிலர்தான். அவர்களும் வீதியோரத்தில் குடில்களை அமைத்து தங்கி இருக்கிறார்கள். அப்போராட்டங்கள் மக்கள் மயப்படவில்லை எனினும், தொடர்ச்சியாக நடப்பவை. அடுத்த போராட்டம் கேப்பாபிலவில் காணிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். அதில் போராடிய பெண்கள் படையினரின் பெரும்படைத்  தளங்களின் முட்கம்பி வேலிகளின் ஓரமாக அமர்ந்திருந்தது மழைக்கும் வெயிலுக்கும் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து தொடர்ச்சியாகப் போராடினார்கள். அப்படித்தான் இரணைதீவில் தமது வீடுகளை மீட்கச் சென்ற பெண்களும் போராடினார்கள். இந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதாரணங்களின் பின்னணியில்தான் காலிமுகத்திடலில் கோட்டா வீட்டுக்குப் போ என்ற கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காலிமுகத் திடலில் கூடாரம் அமைத்துத் தங்கியிருப்பவர்களுக்கிடையே ஒரு கூட்டுணர்வு உண்டு. தன்னியல்பாக அவர்கள் அமைப்பாகி வருகிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து தலைமகள் மேலெக்கூடும். அரசியல் விழிப்புடைய தலைமைகளால் வழிநடத்தப்படாத போராட்டங்கள் ஒன்றில் தாமாகச் சோர்ந்து போய்விடும். அல்லது பலப்பிரயோகத்தின் மூலம் ஒடுக்கப்படலாம். அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பலத்தை பிரயோகிக்கும் முடிவை இதுவரை எடுக்கவில்லை. நேற்று-சனிக்கிழமை-காலிமுகத்திடலை நோக்கி போலீஸ் வாகனத் தொடர் அணி ஒன்று  நகர்த்தப்பட்டது. எனினும் அது பின்னர்  பின்னெடுக்கப்பட்டது. அது கோட்டா கோகமவின் மீதான ஓர் உளவியல் தாக்குதலே 

அதேசமயம் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தோடு இணக்கத்துக்கு வரத் தயாரில்லை. அவை அரசாங்கத்தை எப்படித் தோற்கடிக்கலாம் என்றே சிந்திக்கின்றன. ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அல்லது ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளிடம் போதிய பலம் இல்லை என்றே தெரிகிறது. அரசாங்கத்திடமிருந்து விலகி நிற்கும் அரசாங்கத்தின் முன்னாள் கூட்டாளிகளை நம்ப முடியாது. அரசாங்கம் அவர்களை ஏதோ ஒரு விதத்தில் சமாளித்து ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்கலாமா என்று தொடர்ந்து எத்தனிக்கிறது. இதனால் விவகாரம் இப்பொழுது ஒரு யாப்பு நெருக்கடியாக மாறிவருகிறது. யாப்பின்படி அரசாங்கத்தை கவிழ்ப்பது கடினம் என்று தெரிகிறது. அரசாங்கத்தை கவிழ்க்கத் தேவையான பலம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. யாப்புக்கு வெளியே போய் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை. இதனால் ஏறக்குறைய அரசற்ற ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இந்த அரசற்ற நிலையினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள்தான் மேலும் பாதிக்கப்படுவார்கள். வர்த்தகர்கள் பொருட்களை விரும்பிய விலையில் விற்கிறார்கள். எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் எல்லாவற்றிலும் முறைகேடுகள் காணப்படுகின்றன.

ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் பொதுமக்களின் தன்னியல்பான எழுச்சிகள் மேலும் அதிகரிக்கும். அதேசமயம் ஐஎம்எப் போன்ற உலகப் பொது நிறுவனங்களும் அரசாங்கத்துக்கு உதவத் தயங்கும். ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பிரதான முன்நிபந்தனை அரசியல் ஸ்திரத்தன்மை ஆகும். பொருளாதார நெருக்கடிகள் இப்பொழுது யாப்பு நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை என்ற வளர்ச்சியை அடைந்துவிட்டன. எனவே இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது அரசியல் ஸ்திரத்தன்மைதான். ஆனால் அவ்வாறான ஓர் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை. அதே சமயம் அப்படி ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தோடு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகளும் தயாரில்லை. எனவே அரசியல் ஸ்திரமின்மை அல்லது ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்தும் இருக்கப்போகிறது?

அதாவது கோட்டா வீட்டுக்குப் போக மாட்டார். அவரை வீட்டுக்கு அனுப்புவதற்காக காலிமுகத்திடலில் திரண்டிருக்கும் மக்களும் இப்போதைக்கு வீட்டுக்குப் போக முடியாது என்று தெரிகிறது. ஒரு உல்லாச வெளி நாட்டின் உலைக்களமாக இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கொதித்துக் கொண்டிருக்கப் போகிறது?

இதே காலிமுகத்திடலில் 1956இல் தமிழ் சத்தியாக்கிரகிகள் வெண்ணிற ஆடைகளோடு தமது அறவழிப் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்கள் தனிநாடு கேட்கவில்லை. சிங்கள மக்களுடைய சாப்பாட்டை தட்டிப் பறிக்கவில்லை. நாட்டைப் பிரிக்க சொல்லியும் கேட்கவில்லை. சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படுவதை எதிர்த்தார்கள். சத்தியாகிரகிகள் மத்தியில் மக்கள் பிரதிநிதிகளும் இருந்தார்கள். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் என்ன செய்தது? அறவழிப் போராட்டத்தின் மீது குண்டர்களை  ஏவிவிட்டது. குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை அடித்து மிதித்தார்கள். சிலருடைய காதுகளைக் கடித்தார்கள். போலீசார் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு நின்றார்கள். இவ்வாறான வன்முறைகளின் தொடர் விளைவாக நாடு மீளமுடியாத வன்முறைச் சுழலுக்குள் சிக்கியது. யுத்தத்தின் சங்கிலித்தொடர் விளைவே இப்பொழுதுள்ள  பொருளாதார நெருக்கடி. சுமார் அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு நசுக்கினார்கள். அதன் விளைவாக வந்த ஆயுதப் போராட்டத்தையும் 2009 ஆம் ஆண்டு நசுக்கினார்கள். அந்த வெற்றியை இதே காலிமுகத்திடலில் விமரிசையாகக் கொண்டாடினார்கள். இப்பொழுது எல்லா வெற்றிகளும் தோல்விகளாக மாறிவிட்டன. அரை நூற்றாண்டுக்கு மேலாக இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு முட்டாள் தீவு மீண்டும் ஒருதடவை காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கிறது?
 

 

https://globaltamilnews.net/2022/175514

 

இரு கட்டுரைகளும் நன்றாக விடயங்களை அலசியுள்ளது.

இணைப்புகளுக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ரீலங்காவின் தேசியக் கொடியில் காணப்படும் வாளேந்திய சிங்கத்தை தமிழ் மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதனை போராடும் சிங்கள மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு சுமந்திரன் மனோகணேசன் போன்றவர்களுக்கு உண்டு. அதுமட்டுமல்ல அந்த சிங்கத்தின் கூரான வாள் முனையில் தமிழ் மக்களின் நூற்றாண்டுகால ரத்தம் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிங்கள நடுத்தர வர்க்கம் நொந்துபோய் இருக்கும் இத்தருணத்தில் அவர்கள் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

இவர் போகாத ஊருக்கு வழி  சொல்கிறார் சிங்களவனாது திருந்துவது ஆவது ஒவ்வொரு சிங்களவனுக்குள்ளும் தமிழ் எதிர்ப்பு  இனவாத சுனாமி உண்டு அது இல்லையென்றால் எப்போதோ இந்த நாடு முன்னேறி இருக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.