Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி பிபிசிக்கு சிறப்பு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி பிபிசிக்கு சிறப்பு பேட்டி

  • க.சுபகுணம்
  • பிபிசி தமிழ்
9 ஜூன் 2022, 13:14 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஜக்கி வாசுதேவ் நேர்காணல்

'சேவ் சாயில்' இயக்கத்துக்காக 100 நாள்கள் 27 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஈஷா ஃபவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழுக்கு அளித்த ஒரு பிரத்யேக பேட்டியில், மண் வளப் பாதுகாப்புக்கான அவரது இயக்கம் பற்றியும் சர்ச்சைக்குரிய பிற பிரச்னைகள் பற்றியும் பேசினார்.

ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இனி அவர் பேட்டியில் இருந்து:

"சேவ் சாயில்" முன்னெடுப்புக்காக 27 நாடுகளுக்குப் பயணித்துள்ளீர்கள். இந்தப் பயணத்தின்போது, உலக மக்களின் வரவேற்பு எப்படியிருந்தது? அந்தந்த நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களிடம் பேசினீர்களா? மண் பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்துப் பேசினார்களா?

அனைத்து தேசங்களிலும் மக்களுடைய வரவேற்பு பிரமாதமாக இருந்தது. கொள்கை வகுப்பாளர்களுடனும் பல சந்திப்புகள் நிகழ்ந்தன. வேளாண் துறை அமைச்சகங்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சகங்கள் ஆகியவற்றோடு சந்திப்புகள் நடந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இப்போது வரை 74 தேசங்கள், நாம் செய்துள்ள "சேவ் சாயில்" என்ற கொள்கை கையேட்டின் படி செயல்படுகிறோம் என்ற அறிவிப்பை வழங்கியுள்ளார்கள்.

இது ஒருநாள் வேலையல்ல. இப்போதைக்கு ஒரு நோக்கத்தை மட்டும் தான் உருவாக்கியுள்ளோம். செயல் இன்னும் நிறைய உள்ளது.

மண் பாதுகாப்பில் நீங்கள் மிக முக்கியமாகப் பேசக் கூடியது, உணவுப் பாதுகாப்பு தொடர்பாகத்தான். உணவு உற்பத்தி ஆரோக்கியமாக இருக்க, மண் வளம் நன்றாக இருக்க வேண்டுமென்று பேசுகிறீர்கள். அதைத் தாண்டி இன்னும் பல்லுயிரிய வளப் பாதுகாப்பு, காட்டுயிர்கள் குறைந்து வருவது போன்றவற்றுக்கான முன்னெடுப்புகளுக்கு ஏதும் திட்டம் வைத்துள்ளீர்களா?

இது வெறும் உணவு பற்றியது மட்டுமல்ல. மண் என்பது நம் உயிருக்கு மூலமானது. உணவு மட்டுமல்ல, உயிருக்கு அடிப்படையே மண் தான். நம்முடையது மட்டுமின்றி, அனைத்து உயிர்களுக்குமான உடலும் இந்த மண்ணிலிருந்துதான் ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு அடிப்படையாக இருக்கும் அந்த மண், உயிரோடு இல்லையென்றால் உயிர்கள் வாழ்வதற்கு இங்கு வாய்ப்பில்லை. ஒரு கையில் மண்ணை எடுத்தால், அதில் தோராயமாக 8 முதல் 10 பில்லியன் ஜீவன்கள் இருக்கின்றன. இவற்றில் ஓராண்டுக்கு 27,000 உயிர்கள் இறந்துபோகும் அளவுக்கு, இந்த ஜீவன்கள் குறைந்துகொண்டே வந்துள்ளன. இதே வேகத்தில் சென்றால், தோராயமாக 30 முதல் 40 ஆண்டுகளுக்குள் நாம் இங்கு எதையும் வளர்க்க முடியாது. வளர்ப்பது வேறு விஷயம், உயிர்களே இருக்க முடியாது. அதற்குக் காரணம், நம் உடலிலும் 60% இந்த ஜீவன்கள் தான் இருக்கின்றன.

எப்போது மண்ணில் அவை குறைந்து போகின்றனவோ, அப்போது இந்த உடலிலும் உயிர்கள் முழுமையாக இருப்பதற்கு வாய்ப்பில்லாமல் ஆகிவிடும். இதை நான் சொல்லும் விஷயமல்ல. அனைத்து தேசங்களிலும் உள்ள அனைத்து அமைப்புகளும் சொல்கிறார்கள். முக்கியமான மண் சார்ந்த விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள். ஆனால், நாம் கொஞ்சம் கவனமின்றி இருந்துள்ளோம். அந்தக் கவனத்தை இதற்குக் கொண்டு வந்து, அதற்குத் தேவையான நிதியை அரசாங்கத்தில் ஏற்படுத்தி, அதைச் செயலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முன்னெடுப்பு நடந்துள்ளது.

இது வெறும் விவசாயத்தைப் பற்றியது மட்டுமல்ல, அதுவொரு முக்கியமான செயல். ஆனால் அதுமட்டுமல்ல, மண் என்பது நம்முடைய சொத்தல்ல, நமக்கு நம் முன்னோர்களிடம் இருந்து உயிரோட்டமாக இருந்த மண் நமக்கு வந்தது. அதனால்தான் நாம் நன்றாக வாழ்ந்துள்ளோம். அடுத்த தலைமுறை நன்றாக வாழ்வதற்கு, உயிரோட்டமான மண்ணை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இது நம்முடைய அடிப்படையான பொறுப்பு.

 

ஜக்கி வாசுதேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜக்கி வாசுதேவ்

உங்களுடைய இந்த 30,000 கி.மீ பயணத்திற்காக, 2000 லிட்டருக்கும் மேற்பட்ட அளவில் புதைபடிம எரிபொருளைப் பயன்படுத்தி பயணிப்பது, மண் பாதுகாப்புக்கு முரணாக இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. அதோடு, இதைவிட விமானப் பயணங்கள் மூலமாக மக்களோடு மக்களாக எளிமையாகப் பயணிக்கும்போது, மக்களுடன் இன்னும் அதிகமாகத் தொடர்பு கொள்ளவும் மண் பாதுகாப்பு மீதான கவனத்தை மேலும் அதிகமாக ஈர்க்கவும் வாய்ப்பு இருக்கலாம் அல்லவா?

மோட்டார் சைக்கிளில் செல்வதைவிட விமானத்தில் செல்வதால் 100 மடங்கு அதிகமான கரிமத் தடம் ஏற்படும். நம் நாட்டில் சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தம் வாழ்வில் சிறு தவறு கூட செய்யமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் எதுவுமே செய்யவில்லை. ஏதாவது செய்தால், அதில் 100 தவறுகளைக் கண்டுபிடிப்பார்கள். நான் விமானத்தில் சென்றிருந்தால், விமானத்தில் இப்படிச் சுற்றுவதாகச் சொல்வார்கள். காரில் சென்றிருந்தால், காரில் சுற்றுகிறேன் என்பார்கள். மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு இப்படிச் சொல்கிறார்கள். என்ன செய்வது அவர்களுக்கு வேறு வேலையில்லையே, சொல்லிக்கொள்ளட்டும் பாவம் விடுங்கள். அவர்களும் வாழ்க்கை நடத்த வேண்டுமல்லவா!

சுற்றுச்சூழல் சார்ந்து அக்கறையோடு செயல்படக்கூடிய ஈஷா அறக்கட்டளை மீது அதேநேரத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றனவே. அதுபற்றிய உங்கள் கருத்து.

எவ்வளவு தடவை இதையே கேட்பீர்கள்?

சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் தான்...

உங்களுக்கு யார் சொன்னார்கள். நீங்கள் செய்தி பார்க்கிறீர்களா அல்லது அரசு துறைகள் சொல்வதைப் பார்க்கிறீர்களா, நீதிமன்றம் சொல்வதைப் பார்க்கிறீர்களா, இல்லை உங்கள் பக்கத்து வீட்டில் பாதி மூளையோடு இருக்கும் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்கிறீர்களா?

என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நாங்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பும் செய்யவில்லை, அனைத்துமே சரியாக உள்ளதாக அரசு துறைகள் சொல்கின்றன.

 

ஜக்கி வாசுதேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜக்கி வாசுதேவ் - கோப்புப் படம்.

சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுள்ளவர்கள், கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு முன்பே வாங்கியிருக்க வேண்டிய சுற்றுச்சூழல் அனுமதியை, கட்டிய பிறகு வாங்க ஏன் முயல வேண்டும்? முன்பே வாங்கியிருக்கலாமே?

நாட்டில் அரசாங்கம் உள்ளதா? சட்டம் உள்ளதா? அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நீங்கள் ஏன் செய்கிறீர்கள்.

இத்துடன் போதும். நிறுத்திக் கொள்ளலாம்.

ஈஷாவுடைய கடிதத்திலேயே "சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் விதிகளை மீறிவிட்டோம்" என்று குறிப்பிட்டு, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து?

(இந்தத் தருணத்தில், பிபிசியின் கேமராவை ஆஃப் செய்யுமாறு ஜக்கி வாசுதேவ் தனது தன்னார்வலர்களிடம் அறிவுறுத்தினார். பிபிசியின் 3 கேமராக்களையும் அவர்களே கட்டாயமாக ஆஃப் செய்துவிட்டார்கள்.)

இந்த நேர்காணலின் முழுமையான காணொளியை இங்கு காணலாம்:

காணொளிக் குறிப்பு,

மண் பாதுகாப்பு, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி ஜக்கி வாசுதேவ் சிறப்பு பேட்டி

`விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை'

பிபிசி தமிழ் நேர்க்காணலுக்கு முன்பு பிபிசி இந்தியின் வினித் கரே, சத்குரு ஜக்கி வாசுதேவிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இங்கே...

மண் பாதுகாப்புக்கான இந்த 100 நாள் முன்னெடுப்பு முடிந்த பிறகு அதற்கு அடுத்ததாக, இந்தப் பிரச்னைக்காக என்ன செய்யவுள்ளீர்கள்?

கொள்கை மாற்றங்களுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்வோம். கொள்கை வகுப்பதில் இருக்கும் முக்கியமான விஷயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலுள்ள மற்ற அம்சங்களில் இருந்து மண் பாதுகாப்பைத் தனியாகப் பிரிக்க வேண்டும். ஏனெனில் மற்ற சுற்றுச்சூழல் சிக்கல்களில் இருந்து இதைப் பிரித்துவிட்டால், பொருளாதாரமும் இதில் ஈடுபட்டிருப்பதால், மிக நீண்ட விவாதங்களுக்கு இது வித்திடும்

ஆனால், மண்ணின் வளத்தை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளித்தால், அனைத்து விவசாயிகளும் இதைச் செய்யத் தயாராக இருப்பார்கள்.

"சேவ் சாயில்" என்பது ஒரு போராட்டமோ, கிளர்ச்சியோ இல்லை. இன்னொருவர் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் விஷயமல்ல. தெரிந்தோ தெரியாமலோ நம்மிலும் சிலர், இந்தப் பேரழிவுக்குக் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அனைவருமே அதற்கான தீர்வில் பங்கு வகிப்பதுதான் ஒரே வழி.

 

ஜக்கி வாசுதேவ்

பட மூலாதாரம்,ANADOLU AGENCY / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இஸ்தான்புல்லில்

இடித்த கோவில்களைக் கட்ட முடியுமா?

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்குக் கிளம்பிய சர்ச்சையால், பாஜக தனது இரண்டு செய்தித் தொடர்பாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது. இந்தியாவிலிருந்து நீங்கள் அரபு நாடுகளுக்குப் பயணித்துள்ளீர்கள். இந்த விஷயம் எந்தளவுக்கு அரபு நாடுகளுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?

நான் சென்ற இடங்களில் எல்லாம், மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டேன். துபாயில் 10,000 பேர் கூடினார்கள். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இதே நிலை தான். இத்தகைய விஷயங்கள் அளவுக்கு அதிகக் கவனத்தை இந்தியாவில் ஈர்க்கின்றன. இது ஏன் தேசிய விவாதமாக மாறுகிறது? அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். நம்மைப் பிரிக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். நம் அனைவருக்கும் பொதுவான பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மண். ஆகவே, மனிதர்களிடையே இருக்கும் பல்வேறு பிரிவினைகளுக்கு இடையே நமக்கான பொதுவாக இருக்கக்கூடிய விஷயங்களைத் தேட வேண்டியது அவசியம். மண் அப்படியான ஒன்று. ஆகவே, அதில் கவனம் செலுத்துவோம்.

இதே காரணத்திற்காக, டாவோஸில் நீங்கள் இருந்தபோது, இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோயில்களை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்தீகள். அதைக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?

வரலாற்று நூல்கள் சிலருக்கு வசதியான வகையில் எழுதப்பட்டது. இப்போது அது மீண்டும் மாற்றி எழுதப்படுகிறது. அதுவும் அனுமதிக்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைத்து தெருக்களிலும் கோயில்கள் இருந்தன. படையெடுப்புகளின்போது, கோயில்கள் இடிக்கப்பட்டன. அனைவருக்கும் அது தெரியும். அவற்றையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்பப் போகிறோமா? அது சாத்தியமில்லை. ஆனால், சில முக்கியச் சின்னங்கள் இருக்கின்றன. சமூகங்கள், உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஏனெனில், அதைச் செய்யவில்லை என்றால், இந்தக் காயம் தொடர்ந்து இருக்கும்.

இந்தியா முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனில், நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பார்ப்பதை நிறுத்த வேண்டும். அது நடக்க வேண்டுமெனில், சில காயங்கள் நீக்கப்பட வேண்டும். சில குடும்பங்கள் அவர்களுடைய மூத்தவர்கள் அனுபவித்த கொடுமைகளை இன்னும் நினைவில் வைத்துள்ளார்கள். குடும்பத்திற்குள் அவர்கள் அவற்றைத் தொடர்ந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். இப்போது அவர்கள் டெல்லியில் ஔரங்கசீப் தெருவைப் பார்க்கும்போது அவர்களை அது காயப்படுத்துகிறது. இது இஸ்ரேலில் அடால்ஃப் ஹிட்லர் பெயரை தெருவுக்கு வைப்பதைப் போன்றது.

உங்களால் ஹிட்லரை மறக்க முடியாது. அதேபோல், ஔரங்கசீப் வரலாற்று நூல்களில் அவர் செய்ததற்காக அவர் பெயர் இருந்தாலும், டெல்லியில் நினைவுகூர வேண்டியதில்லை. அது மக்களைக் காயப்படுத்துகிறது. அதைச் சரிசெய்யலாம். ஆனால், மற்ற விஷயங்களைச் சரிசெய்ய முடியாது. ஏனெனில், ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மீண்டும் கட்டப் போகிறீர்களா? அவை அனைத்தையுமே மீண்டும் கட்ட முடியுமா? அது தேவையா? வாழ்க்கை அப்படியானது இல்லை. கடந்த காலத்தில் சில விஷயங்கள் நடந்துள்ளன. அவற்றை அப்படியே விட்டுவிட்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும். சரிசெய்யப்பட வேண்டிய சில குறிப்பிட்ட விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் இதே போன்றதொரு கருத்தைச் சொல்லியிருந்தார். அவரும் இதையே தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறீர்களா?

கிட்டத்தட்ட அப்படித்தான். அவருடைய பாணியில் அவர் கூறினார். இந்த நிலத்தில் நடந்துள்ள கடந்த கால விஷயங்களால், சிவலிங்கங்களைப் போல நமக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். ஆனால், அவை எல்லாவற்றையுமே மீட்டுருவாக்க முடியாது. அது இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவை மீட்டுருவாக்குவதைப் போன்றது. அது நடைமுறையில் செய்யக்கூடிய விஷயமல்ல.

இரு தரப்பிலும் வெறுப்புப் பேச்சு

அமெரிக்க மத சுதந்திர அறிக்கையைப் படித்திருப்பீர்கள். இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் மீதான கொலைகள் உட்பட பல்வேறு விதமான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளது. உலகம் முழுக்கப் பயணித்திருக்கும் நீங்கள், இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகள் இந்தியாவின் நற்பெயருக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கிறீர்கள்?

 

ஜக்கி வாசுதேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் ஜக்கி வாசுதேவ்.

வெறுப்புப் பேச்சு இரண்டு தரப்பிலுமே நடக்கிறது. ஒரு தரப்பில் மட்டுமே அது இருப்பதைப் போல் கூறுவது சரியல்ல. இரண்டு தரப்பிலுமே வெறுப்புப் பேச்சுகள் எப்போதும் இருந்து வருகின்றன. ஆனால், அது தான் முக்கியமானது என்பதைப் போல் ஏன் முன்னிலைப்படுத்துகிறீர்கள். நாடு முழுவதும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்களா?

இவற்றை முன்னிலைப்படுத்திக் காட்டுவது அமெரிக்காவின் குறிப்பிட்ட ஊடகங்களால் செய்யப்படுகிறது. தொடர்ந்து அதையே முன்னிலைப்படுத்தாதீர்கள். அமெரிக்காவின் இந்த அணுகுமுறை முதிர்ச்சியற்றது. உலகம் எந்தவித அரசியல் காரணங்களுக்காகவும் இப்படிச் செயல்படக் கூடாது. அதைப் புறந்தள்ளிவிட்டு, நாம் முன்னேறுவதைப் பார்க்க வேண்டும்.

இந்திய அரசின் செயற்கை உரங்களுக்கான மானியம் 2022-23 ஆண்டில் 2.5 லட்சம் கோடி வரை உயரும் என்று சொல்லப்படுகிறது. தொழில் செய்வதை எளிமைப்படுத்த வேகமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது போன்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஓர் அரசு நிர்வாகம் வளர்ச்சித் திட்டங்களையும் சுற்றுச்சூழலையும் எப்படி சமநிலையில் சமாளிக்கிறது என்பது அந்த அரசின் ஞானத்திற்கே விடப்பட வேண்டும். பரிந்துரைகளை வழங்க விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம்.

ஆனால், எந்தக் கட்டடத்தைக் கட்டினாலும் போராடினால், எப்படி அனைத்து இந்தியர்களும் தரமான வாழ்வை வாழ முடியும்?

சாலைகள் வேண்டாம், துறைமுகங்கள் வேண்டாம், கட்டடங்கள் வேண்டாம், பிறகு இந்த நாட்டில் எதுவும் நன்றாக இல்லையென்று குற்றம் கூறினால், இது எப்படிச் சாத்தியமாகும்.

இந்தியா உலகத்திற்குச் செய்துகொடுத்த சுற்றுச்சூழல் சார்ந்த வாக்குறுதிகளை, பல வளர்ந்த நாடுகளைவிடச் சிறப்பாகச் செய்துள்ளது. கருத்து கூறிக்கொண்டேயிருக்கும் மக்களைப் பொறுத்தவரை, நான் முன்னமே சொன்னதைப் போல், அவர்கள் தவறுகளே செய்யாதவர்கள். ஏனெனில், அவர்கள் வாழ்வில் எதையுமே செய்ததில்லை.

சூழலியலாளர்கள், "மண் பாதுகாப்பு இயக்கம்" குறித்து ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். இதில், மரங்களைப் பற்றிய அறிவு, பல்லுயிரிய வளம் பற்றிய புரிதல் ஆகியவற்றைக் கொண்ட கிராமப்புற பழங்குடியின சமூகங்களுக்கு இதில் இடம் இருக்கிறதா?

பத்து பிரச்னைகளை ஒரே வீச்சில் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நடைமுறையில் அப்படியில்லை. இது விவசாயத்திற்கான மண்ணின் மீது கவனம் செலுத்துகிறது. ஏனெனில், விவசாய நிலம், விவசாயத்திற்கான மண் ஆகியவற்றின் நிலப்பகுதிகள் மீது ஒவ்வொரு நாளும் மனிதர்கள் பரவிக் கொண்டே இருக்கின்றனர்.

நீங்கள் அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். நீங்கள் சீரியஸாக இல்லை. பேசிக் கொண்டேயிருக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களுக்குத் தீர்வுகளில் ஆர்வமில்லை. தீர்வு வேண்டுமெனில், மனிதர்களுடைய கரிமத் தடம் எங்கு தினசரி இருக்கிறதோ அங்கு தான் முதலில் சரிசெய்ய வேண்டும்.

ஒருவேளை பழங்குடிகள் காடுசார் பொருட்களைச் சேகரிப்பவர்களாக இருந்தால் அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள்.

https://www.bbc.com/tamil/india-61728822

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம், உனக்கல்லடி மகளே.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஊருக்கு உபதேசம், உனக்கல்லடி மகளே.

 

நான், நீங்கள் செய்யாததை அவர் செய்கின்றார். அல்லது நம்மால் செய்ய முடியாததை அவர் செய்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நான், நீங்கள் செய்யாததை அவர் செய்கின்றார். அல்லது நம்மால் செய்ய முடியாததை அவர் செய்கின்றார். 

அவருடைய பின்புலம் அறியவில்லையோ ? 

  • கருத்துக்கள உறவுகள்

 👉 https://www.facebook.com/100065609049057/videos/1313982402462029 👈

பி.பி.சி. பத்திரிகையாளரை  மிரட்டும்... ஜக்கி வாசுதேவ்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 👉 https://www.facebook.com/100065609049057/videos/1313982402462029 👈

பி.பி.சி. பத்திரிகையாளரை  மிரட்டும்... ஜக்கி வாசுதேவ்.

 

பி.பி.சி இன் ஊடக தர்மம் பற்றி நாங்கள் அறியாமலா என்ன? 🤓

3 hours ago, Kapithan said:

அவருடைய பின்புலம் அறியவில்லையோ ? 

 

இந்து சமயத்துக்கு ஆதரவு உடையவர். வேறு மத அமைப்புக்களிற்கு எரிச்சலை கொடுக்கின்றார். சரி தானே? 😃

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருப்பினும்

இவர் போன்றவர்களின்;  வளர்ச்சி மக்களை  மந்தைகளாக்குமே  தவிர......???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காடுகளையும் மலைகளையும் சத்குரு மட்டும் அழிக்கவில்லையே. மற்றவர்களை ஏன் பிபிசி பேட்டி எடுப்பதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

 

பி.பி.சி இன் ஊடக தர்மம் பற்றி நாங்கள் அறியாமலா என்ன? 🤓

 

இந்து சமயத்துக்கு ஆதரவு உடையவர். வேறு மத அமைப்புக்களிற்கு எரிச்சலை கொடுக்கின்றார். சரி தானே? 😃

அட சமயம்  தானா உங்கள் பிரச்சனை ?

உண்மையில் நீங்கள் அவரை ஆதரிப்பதற்கு அவரது தொண்டுகள்தான்(?) காரணம் என நினைத்தேன். மதம் மனிதனை மயக்கும் அபின் என்று கார்ள் மாக்ஸ் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. 

நான் புரிந்துகொண்ட வகையில் ஜக்கி வாசுதேவ் எந்த ஒரு மதத்தையும் வெறுப்பதாகத் தெரியவில்லை. ஆனால்  தமிழகத்தில் அவருக்கு பாரிய எதிர்ப்பிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

காடுகளையும், மலைகளையும் அழித்து... 
கேராளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எந்த ஒரு கட்டிடமும் கட்ட  முடியாது.
ஆனால்... தமிழ்நாட்டில் செய்ய, திராவிட  அரசுகளே  ஆதரவு கொடுக்கும்.

தமிழனை குடிக்கும், சினிமாவுக்கும், அடிமை ஆக்கினது போததென்று..
அவனது இயற்கை வளங்களையும் சுரண்டி, 
தண்ணீரை...   விவசாயத்துக்கும்  குடிக்கவும்...  
அலைய வைப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

காடுகளையும், மலைகளையும் அழித்து... 
கேராளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எந்த ஒரு கட்டிடமும் கட்ட  முடியாது.
ஆனால்... தமிழ்நாட்டில் செய்ய, திராவிட  அரசுகளே  ஆதரவு கொடுக்கும்.

தமிழனை குடிக்கும், சினிமாவுக்கும், அடிமை ஆக்கினது போததென்று..
அவனது இயற்கை வளங்களையும் சுரண்டி, 
தண்ணீரை...   விவசாயத்துக்கும்  குடிக்கவும்...  
அலைய வைப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

தமிழக அரசில் இவருக்கு பாரிய எதிர்ப்பிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

அட சமயம்  தானா உங்கள் பிரச்சனை ?

உண்மையில் நீங்கள் அவரை ஆதரிப்பதற்கு அவரது தொண்டுகள்தான்(?) காரணம் என நினைத்தேன். மதம் மனிதனை மயக்கும் அபின் என்று கார்ள் மாக்ஸ் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. 

நான் புரிந்துகொண்ட வகையில் ஜக்கி வாசுதேவ் எந்த ஒரு மதத்தையும் வெறுப்பதாகத் தெரியவில்லை. ஆனால்  தமிழகத்தில் அவருக்கு பாரிய எதிர்ப்பிருக்கிறது. 

 

திரைமறைவில் நடக்கின்ற விடயங்கள் பற்றிய விழிப்புணர்வு அது. பி.பி.சி இன் நிகழ்ச்சி நிரலில் இவர் எங்கே கட்டம் போடப்படுகின்றார் என்பது முக்கியம். 

ஒரு காலத்தில் பி.பி.சி தமிழோசை என்றால் ஒரு மதிப்பு. மரியாதை வரும். இப்போது.. 🥱

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

 

திரைமறைவில் நடக்கின்ற விடயங்கள் பற்றிய விழிப்புணர்வு அது. பி.பி.சி இன் நிகழ்ச்சி நிரலில் இவர் எங்கே கட்டம் போடப்படுகின்றார் என்பது முக்கியம். 

ஒரு காலத்தில் பி.பி.சி தமிழோசை என்றால் ஒரு மதிப்பு. மரியாதை வரும். இப்போது.. 🥱

பிபிசி உக்ரேனுக்கு, இஸ்ரேலுக்கு, அமெடிக்கா, யூகே போன்றவற்றிற்கு ஆதரவாகப் பேசும்போது இனிக்கும். ஆனால் இப்போது கசக்கிறதோ ? 😉

ஊடகங்கள் நடுநிலை வகிக்கும், உண்மைச் செய்திகளை பக்கச் சார்பில்லாமல் வெளிப்படுத்தும் என நாங்கள் நம்பினால் அதற்கு ஊடகங்கள் பொறுப்பாகுமா? 

😔

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்கி வாசுதேவ் வத்திக்கான் கத்தோலிக்க மதத்தை நிறுவனமயப்படுத்தி கட்டுப்படுத்துவது போன்று இந்துமதத்தையும் நிறுவனமயப்படுத்த முனையும் ஒருவர். இப்படியான பிஜேபியின் கொள்கைகளுக்கு நெருக்கமானவர்.

முன்னர் வந்த கட்டுரை ஒன்று ஓரளவு புரிய வைக்கும்..

இந்து ஆக்டிவிஸ்டாக மாறுகிறாரா ஜக்கிவாசுதேவ்..?

 

-சாவித்திரி கண்ணன்

 

file.jpg

என்னாச்சு இந்த யோகா குருவிற்கு…? அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டக்களமாக ( மார்ச்-26) தமிழகத்தின் பிரபல கோவில்களை மாற்றிவிட்டார் ஜக்கி! ‘’அரசாங்கமே கோவிலில் இருந்து வெளியேறு’’ என்று ஜக்கியின் ஆட்கள் கோஷம் எழுப்பியும், பேசியும் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்தனர். இவர்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது! ஆன்மீக, யோகா அமைப்பாக இருந்த ஈஷாவில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தின் பின்னணி என்ன?

தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுமையும் லட்சக்கணக்கனக்கான மக்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி என்ற பிரணாயாமம் ஆகியவற்றை கொண்டு சேர்த்ததில் கடந்த கால் நூற்றாண்டாக பிரமிக்கதக்க பணிகளை செய்த நிறுவனம் ஈஷா யோகா மையம்!

ஆரம்ப காலத்தில் தன்னுடைய யோகா தொண்டுகளின் மூலம் மதங்களைக் கடந்து மனித நேயப் பார்வையோடு இயங்கி வந்தனர். அந்த நாட்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள்..அவ்வளவு ஏன் நாத்திகர்கள் கூட அங்கு சென்று வரக் கூடிய சூழல்கள் இருந்தது. அந்த வகையில் 1997 ஆம் ஆண்டிலேயே நான் ஈஷாவில் யோகா பயிற்சி பெற்றவன். அப்போது அவரிடம் நேரடியாகப் பேசிப் பழகியுள்ளேன்.

அப்போது அரசியல் சார்பற்றும், மதச் சார்பற்றும் இயங்கிய ஈஷா மிகப் பெரிய சக்தியாக வளர்ந்தது! உலகம் முழுக்க அதற்கு கிளைகள் உருவாகின! நன்கொடைகள் குவிந்தன! இன்று அமெரிக்காவின் பிரதான இடத்தில் 1,400 ஏக்கர் பரப்பளவில் அவர்களுக்கு சொந்த இடம் உண்டு. அது போல உலகின் பல நாடுகளிலும் உள்ளன.

EOec-1024x684.jpg

கோவை வெள்ளியங்கிரியில் இன்று மிகப் பெரிய அளவில் ஈஷா தலைமை அமைப்பு உள்ளது. அது ஒரு மிகப் பெரிய ஓலைக் குடிலில் இயங்கிய காலத்தில் அங்கு சென்றுள்ளேன். தற்போது மிகப் பெரிய கட்டிடங்கள் அங்கு உருவாகியுள்ளன. அதன் உள்ளே சுமார் நான்காயிரம் ஆன்மீக தொண்டர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள தியானலிங்கமும், ஆதி யோகி சிலையும் தினசரி 30,000 லிருந்து 60,000 பேர் வரை சென்று பார்க்கின்ற – தற்போது தமிழகத்தின் மிக முக்கிய – டூரிஸ்ட் ஸ்பார்ட்டாகிவிட்டது!

thiyana-lingam.jpg

ஒரு ஆன்மீக ஞானியின் இயல்புக்கு மாறாக தீடீரென்று தற்போது போர்முரசு கொட்டுகிறார் ஜக்கி வாசு தேவ்! ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற பெயரில் அவர் பிரயோகித்துள்ள சொற்கள் அதிரடியான அரசியல் பேசுகின்றன.

# கோவில்களை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அபகரித்துக் கொள்ளையடித்தனர்!

# இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும்,ஊழியர்களுமே கோவில்களில் திருடுகின்றனர்.

# கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

# கோவில்களை அரசாங்கத்திடமிருந்து மீட்காவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் கோவில்களே இருக்காது

# கோவில்களில் இருந்து அரசாங்கம் வெளியேற வேண்டும்! பக்தர்களிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்.

# அக்கரை இல்லாதவர்களின் கையில் கோவில் இருக்கக் கூடாது!

koil.jpg

இப்படியாக ஆவேசப்படுவது, ஆள் திரட்டுவது, கோஷமிட வைப்பது, போராட்டம் நடத்தத் தூண்டுவது என திடீரென இந்து ஆக்டிவிஸ்ட்டாக ஜக்கி மாறியுள்ளார்.

அதாவது, இது நாள் வரை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்களும் கட்சிகளும் மட்டுமே பேசியதை அவர்களின் அதே தொனியிலேயே ஜக்கியும் பேசுகிறார்.

ஞான வழியில் சென்று கொண்டிருந்த ஒரு கர்மயோகியாக வெளிப்பட்டவர் ஜக்கி! கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா என்ற உயர்ந்த தளத்திற்கு தானும் பயணப்பட்டு மற்றவர்களையும் அழைத்துச் செல்லும் ஞானிகள் இது போல பேச வாய்ப்பே இல்லை.

நமது கோவில்கள் எப்போதெல்லாம் தனியார் கைகளில் இருந்ததோ, அப்போதெல்லாம் அவற்றின் சொத்துகள் களவாடப்பட்டுள்ளன. அதனால் தான் 1927 ல் நமது முன்னோர்கள் அதை காப்பாற்றும் பொருட்டு இந்து அற நிலைய வாரியம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தனர். அன்று நீதி கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த வரலாற்றுத் தகவல்களை நான் முழுமையாக முன்று கட்டுரைகளின் வழியே அறத்தில் எழுதியுள்ளேன்.

அற நிலையத் துறை அவசியமா? அனாவசியமா?

கோயில் சொத்துக்களை அபகரித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? யார்?

அதன் பிறகு உத்தமராயும், ஆன்மீகவாதியாகவும் இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் இந்து அற நிலையத்துறை வலுப்படுத்தினார். அதற்கு அன்று கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்த அதிக்க சமூகம் எதிர்த்தது. சொத்து ஆவணங்கள் முதலிய தகவல்களை மறைத்தது. அரசாங்கம் எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதை அறிந்த பல சனாதனிகள் அன்று கோவில்  சொத்துகளை தங்கள் பெயருக்கு மாற்றிய சம்பவங்களும் நடந்தன. ”யாரெல்லாம் தங்களை கடவுளின் பிரதிநிதிகளாக இந்த சமூகத்திற்கு காட்டி பெரிய மனிதர்களாக வலம் வந்தார்களோ அவர்கள் தான் இந்த அநீதிகளை கொஞ்சமும் மனசாட்சியின்றி செய்து வந்தனர்’’ என்று அன்று ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் பேசிய பேச்சுக்கள் இன்றும் ஆவணமாய் உள்ளது.

periya-kovil.jpg

அவருக்குப் பிறகு வந்த ராஜாஜியும் சரி,காமராஜரும் சரி இந்து அற நிலையத்துறையை பலப்படுத்துவதில் தான் ஆர்வம் காட்டினர். தனியார்கள் ஆக்கிரமிப்பில் கோவில்கள் இருந்தவரை அவற்றில் தலை விரித்தாடிய தீண்டாமையை களை எடுக்க முடியவில்லை. அரசு கட்டுப்பாட்டில் எடுத்ததினால் தான் அவை சாத்தியமாயிற்று. 1937 ஆம் ஆண்டு  சென்னை மாகாண பிரதமராயிருந்த ராஜாஜி தாழ்த்தப்பட்டவர்கள் ஆலய நுழைவு சட்டம் கொண்டு வந்தார். அப்போது, ”அரசு கைவசம் நம் கோவில்கள் வந்ததினால் தான் இது சாத்தியமானது! என் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளை நான் நிறைவேற்றினேன்’’ என்றார் ராஜாஜி.

சிதம்பரம் கோவிலை தீட்சிதர்கள் தங்கள் வசப்படுத்தி வைத்துக் கொண்ட காலகட்டத்தில் வருமானமாக அவர்கள் காட்டிய கணக்கும், அது அரசு வசம் வந்த பிறகு தெரிய வந்த உண்மையான வருமானத்திற்குமான வித்தியாசம் மடுவுக்கும், மலைக்குமாக இருந்தது. ஆக, தங்கள் வசம் இருந்த போது கோவில் வருமானத்தை அவர்கள் எப்படி சுரண்டி உள்ளனர் எனத் தெரிய வந்தது. இது போல நூற்றுக்கணக்கான சம்பவங்களை பட்டியலிடலாம்!

அரசு நிர்வாகத்தில் சில பல குறைகள் இருக்கலாம். அவற்றை நாம் தட்டிக்கேட்டு சரிபடுத்த முடியும். ஆனால், தனியார்வசம் சென்றால், வேறு வினையே வேண்டாம்! இது குறித்து தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

இன்றும் கூட சில இந்து கோவில்கள் மடாதிபதிகளின் ஆதிக்கத்தில் உள்ளன! அவற்றில் அவர்கள் எந்த மாதிரியான நிர்வாகம் செய்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அவ்வளவு ஏன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மிகப் பெரிய தொழில் அதிபரான வேணு சீனிவாசன் தமிழக கோவில்கள் சிலவற்றில் கைங்கரியங்கள் செய்ய ஒரு அறக்கடளை ஆரம்பித்தார்.அதற்கு உலகம் முழுக்க இருக்கும் இந்து பக்தர்களிடம் நிதி திரட்டினார். ஸ்ரீரங்கம்,மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில கோவில்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்து பணிகள் செய்தார். அவர் கையில் எடுத்த கோவில்களில் எல்லாம் சிலைகள் காணாமல் போயின. அவர் மீது எப்.ஐ.ஆர். கூட பதிவானது. கைதாகி இருக்க வேண்டியவர் பிரதமர் அலுவலகம் வரை லாபி செய்து தப்பித்தார்.

VAST.jpg

இதையெல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், ஆச்சார அனுஸ்டானங்களை கொண்ட பக்தனாக தன்னைக் காட்டிக் கொண்ட வேணு சீனிவாசன் போன்ற தனி நபர்கள் கையில் கோவில் போனால், இன்று கேட்கும் கேள்விகள் கூட கேட்க முடியாது. அவர்கள் வைத்தது தான் சட்டமாகிவிடும். வெளிப்படைத் தன்மை இருக்காது, நம்பகத் தன்மை சிறிதும் இருக்காது. இன்று பொதுப் பணத்தை நேர்மையாக கையாளும் ஒரு பத்து நல்ல நபர்களை ஜக்கி முதலில் அடையாளம் காட்டுவாரா?

ஈஷாவிற்கு உண்மையிலேயே அக்கரை இருக்குமானால், அவர்களால் தமிழக கோவில்களின் மறுமலர்ச்சிக்கு நிறைய பங்களிக்க முடியும். அதை செய்யலாமே! அப்படி செய்வதற்கு அரசாங்கம் ஒரு தடையே இல்லை. அதைவிடுத்து கோவில்களை அரசிடமிருந்து விடுவித்து, ஆதிக்க சாதிகளிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் மிக ஆபத்தானவை. இதை விட பெரிய தீமை தமிழகத்திற்கு வேறில்லை! இதை தமிழகத்தின் 98 சதவிகிதமான மக்கள் ஏற்கமாட்டார்கள். உண்மையான பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் இந்த யதார்த்தம் நன்கு தெரியும்.

இந்து அற நிலையத்துறை சட்டங்கள் கடுமையானவை! சுலபத்தில் யாரும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிக்க முடியாது! இப்போதுள்ள ஏற்பாடுகளே சரியானவை. கோவில்கள் பராமிப்பின்றி போனதற்கு அரசாங்கம் காரணமில்லை. பக்தர்கள் வருகை குறையும் போது வருமானம் குறைகிறது. வருமானம் குறையும் போது கோவில்களை நடத்த முடிவதில்லை. பக்தர்கள் எல்லா கோவில்களுக்கும் செல்ல வேண்டும் அந்த கோவில்களில் ஒரு கால பூஜை நடத்துவதற்கான நிதியை தாருங்கள். அல்லது எண்ணெய், புஷ்பம் உள்ளிட்டவற்றை வாங்கித் தாருங்கள் என்று ஜக்கி கூறலாமே!

அந்தந்த பக்தியில் வாழ்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து கோவில்களை பாதுகாக்கவும், புணரமைக்கவும் அரசோடு இணைந்து செயல்படுங்கள் எனக் கூறலாம். எந்த அதிகாரத்திலும் இல்லாத சில தனி மனிதர்கள் தான் இன்றும் பல கோவில்களில் ஒரு கால பூஜை நடக்க உதவி வருகின்றனர். அவர்கள் யாரும் கோவிலே தங்கள் அதிகாரத்தின் கீழ் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லை! அது போல தன்னுடைய செல்வாக்கால் கோவில்களை புனருதாரணம் செய்ய ஜக்கி உதவலாம். கோவில் சொத்துகளில் குடியிருப்போர் ஒழுங்காக வாடகை தாருங்கள் எனக் கூறலாம்!

தமிழகத்தின் பிரபல கோவில்களில் ஈஷா ஆதரவில் அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் மார்ச் 26 மாலை நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களில் சுமார் 90% பிராமணர்களாகவே இருந்தனர் என்பது நமது நண்பர்களின் நேரடி விசிட் மூலம் தெரிய வந்தது. இதன் மூலம் இந்த இயக்கத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்ற விஷயம் நன்றாக தெரிகிறது. பாவம் ஜக்கி! என்ன நிர்பந்தமோ அவருக்கு!

சினிமா துறையில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த் கை நழுவிப் போன வருத்ததில் இருந்த ஆர்.எஸ்.எஸ், பாஜக வகையறாக்கள் தற்போது கிட்டதட்ட ஆனிமீக சூப்பர் ஸ்டார் என்று சொல்லதக்க அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற ஜக்கியை நன்றாக வளைத்து போட்டுவிட்டனர் என்று தான் தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/3597/jaggivasudev-isha-templefree-kovilatimai-aram/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.