Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு

அ. அச்சுதன் 

இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். 

மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் திருக்கோணமலை என்று இந்த நகரம் பெயர்பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் கோணேஸ்வரம் ஆதலால் திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது. 

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனிதஷேத்திரமாக இருந்து வந்ததைப் புராண இதிகாச வரலாறுகள் கூறுகின்றன. எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தினாலே இந்நகரம் திருக்கோணமலை என்ற பெயரால் வழங்கி வருகின்றது.

தெட்சண கயிலாயம் என்று திருக்கோணேஸ்வரம் போற்றப்பட்டு வருகின்றது வடக்கே இமயக்கொடுமுடியில் கயிலாய சிகரத்தில் கயிலை நாதன் எழுந்தருளியிருப்பது போல தெற்கே திருக்கோணமலையில் கோணேசப்பெருமான் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார். பூகோள அமைப்பில் இந்த இரண்டு தலங்களும் ஒரு அட்சரரேகையில் அமைந்திருப்பதையும் இவையிரண்டுக்கும் நடுவே தில்லைத் திருத்தலம் அமைந்திருப்பதையும் திருமூல நாயனார் திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார். இந்தத் தலங்கள் அமைந்திருக்கும் பாங்கை விஞ்ஞானரீதியாகவும் ஆராய்வது மேலும் திருக்கோணேஸ்வரத்தின் மகிமையை அறிவதற்கு உதவியாயிருக்கும்.

image_c9bf889cbd.jpg

குளக்கோட்டு மன்னனால் திருப்பணிகள் செய்யப்பட்ட சரித்திரி முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோணேஸ்வரர் திருத்தலத்தை பாதுகாப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் அக்கறை செலுத்தவேண்டும் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் 2008க்குப் பின் அவசர அவசரமாக வீதியின் இருமருங்கிலும் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எந்த உத்தரவும் இன்றி தற்காலிக கடைகளை அமைத்தனர். அக்கடைகள் தற்போது 58ஆக அதிகரித்துவிட்டன. இக்கடைகள் அமைப்பவர்களுக்கும் திருக்கோணேஸ்வரர் கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. திட்டமிட்டு ஆலயச்சூழலை ஆக்கிரமிப்பது போல் இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகம் பல இடங்களிலும் முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

தற்போது திருக்கோணேஸ்வரம் செல்லும் பாதைக்கு அருகில் கோவில் சமதரையில் இவர்களுக்கு நிரந்தர கட்டடம் அமைக்க தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டு வருகின்றது. 03- 08-2022 இல் தொல்லியல் திணைக்களத்தினால் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகசபை தலைவர், செயலாளரும் அழைக்கப்பட்டு தெருவோரம் வர்த்தகம் செய்வோருக்கு கோவிலுக்கு சமீபமாக நிரந்தர கட்டடம் அமைக்க தங்களுக்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளதாகவும் அதற்கு ஆலய நிர்வாகம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

image_933f4cc113.jpg

கடந்த சில வருடங்களாக தொல்லியல் திணைக்களம் கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளை தடுத்து வருவதை அனைவரும் அறிவர். தேரோடும் வீதியை அகலிக்க தடுத்தனர். வாசலில் பெருங்கோபுரம் கட்டுவதற்கு திணைக்களம் இடையூறுகளை விளைவித்து வருகிறது. தற்போது இந்திய அரசாங்கத்திடம் திருக்கோணேஸ்வரத்தின் பாரிய திருப்பணி வேலைகளை நிறைவேற்றித் தருமாறு ஆலய அறங்காவலர் சபையும், இந்து சமய நிறுவனங்களும் வேண்டுதல் விடுத்து அவை சாதகமாக அமைய உள்ள நேரத்தில் திட்டமிட்டு ஆலய சுற்றாடலை அபகரிக்கும் நோக்கில் நிரந்தர கடைகளை கட்டுவதற்கு முயற்சி எடுக்கின்றனர். இவ்விடயத்தை கருத்தில் கொண்டு சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும்.

இதேவேளை தொல்லியல் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம், மூதூர் பிரசேச இந்து குருமார் சங்கம் ஆகியன கடும் கண்டனத்தை வெளியிட்டு உள்ளன.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் சிவாலயத்தை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சி தீவிர மடைந்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பியான செல்வராஜா கஜேந்திரன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

image_fa204b4eae.jpg

உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் அங்கமாக உள்ள தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தமிழ் மக்களின் பாரம்பரியங்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்காலிகமாக வழங்கப்பட்ட கடை தொகுதியை நிரந்தரமாக வழங்க தொல்பொருள் திணைக்களம் முயற்சிப்பது முற்றிலும் தவறானது. திருக்கோணேஸ்வரத்தை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலை உடன்நிறுத்த வேண்டும் என்றார் கஜேந்திரன் எம்.பி.
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சுற்றாடலில் திருக்கோணேஸ்வரர் ஆலய திருப்பணியை மட்டும் தொல்லியல் திணைக்களம் தலையீடு செய்து திருப்பணிகளை தடுத்து வருகின்றது. திருக்கோணேஸ்வரம் இந்திய மக்களுடனும் தொடர்புடைய கோயில் இந்திய அரசாங்கமும் திருக்கோணேஸ்வரர் திருப்பணி தொடர்பாக விரைவில் செயற்படுவதற்கு பிரதமரும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன் அக்கறை செலுத்தவேண்டும்.

 

 

https://www.tamilmirror.lk/temple/திட்டமிட்டு-கோவில்-சூழல்-கடைகளால்-ஆக்கிரமிப்பு/64-302862

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் வாய்  திறந்து பேச மாட்டாரா? தனது தொகுதியில் நடைபெறும் அராஜகங்களை தட்டி கேட்க மாட்டாரா?
அவரது கட்சியாவது  தட்டிக்கேட்கலாமே??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடைகளினது எண்ணிக்கை மட்டுமல்ல, வில்வம் பழம், இலைகளுடன் சிவனை தரிசிக்க வரும் சிங்கள பக்தர்களின் எண்ணிக்கை முன்னரை விட அதிகமாக இருந்ததை 2018ல் போன பொழுது காண முடிந்தது. கதிர்காமம் போல இதையும் மாற்றிவிடுவார்களோ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். 

இணைப்புக்கு நன்றி கிருபன்.

2015இல் இலங்கை சுற்றுலா சென்ற போது இந்த கோவிலுக்கும் போயிருந்தேன்.

இங்கு கடைத் தெருக்களைப் பார்த்தால் சிங்கள மக்களே கூடுதலானவர்களாக தெரிந்தார்கள்.மனதுக்கு ஏதோ நெருடலாக இருந்தது.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கடைகளினது எண்ணிக்கை மட்டுமல்ல, வில்வம் பழம், இலைகளுடன் சிவனை தரிசிக்க வரும் சிங்கள பக்தர்களின் எண்ணிக்கை முன்னரை விட அதிகமாக இருந்ததை 2018ல் போன பொழுது காண முடிந்தது. கதிர்காமம் போல இதையும் மாற்றிவிடுவார்களோ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. 

 

அதே தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் வாய்  திறந்து பேச மாட்டாரா? தனது தொகுதியில் நடைபெறும் அராஜகங்களை தட்டி கேட்க மாட்டாரா?
அவரது கட்சியாவது  தட்டிக்கேட்கலாமே??

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் கோமாவில் இருப்பதால்…
இப்படியான ஆக்கிரமிப்புகள், நடப்பது… தெரியாமல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, தமிழ் சிறி said:

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் கோமாவில் இருப்பதால்…
இப்படியான ஆக்கிரமிப்புகள், நடப்பது… தெரியாமல் இருக்கின்றது.

அந்தாளுக்கு இப்ப திருகோணமலை தன்ரை தொகுதி எண்டதையே மறந்து போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அந்தாளுக்கு இப்ப திருகோணமலை தன்ரை தொகுதி எண்டதையே மறந்து போயிருக்கும்.

எதிர்கட்சி தலைவராக வந்த பின்…. தனக்கு கொம்பு முளைச்சிட்டுது என்ற நினைப்பில்…
விட்டேத்தி குணமாக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விசேட நாட்களை தவிர்த்து மற்றைய நாட்களில் அதிகளவில் சிங்கள மக்களே வருகிறார்கள்.

ஆலயத்தை நோக்கிச் செல்லும் போது வலது பக்கத்தில் கடைசியாக ஆலய நிர்வாகத்தினால் நடாத்தப்படும் கடை உள்ளது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு தொன்மம்

By Digital Desk 5

22 Aug, 2022 | 11:00 AM
image

(ஆர்.ராம்)

அன்று ஆகஸ்ட் 3ஆம் திகதி, கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன் மற்றும் செயலாளர் பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் “ஆலயத்தினை அண்மித்துள்ள கீழ் பகுதி சமதரையில் 58 வியாபார நிலையங்களை நிரந்தரமாக அமைக்கவுள்ளோம். அவற்றுக்கு மின்சார மற்றும் நீர் வழங்கல் வசதிகளையும் வழங்கவுள்ளோம்” என்ற தகவலை பரிமாற்றுகிறார் தொல்பொருளியல் திணைக்களத்தின் திருமலை மாவட்ட அதிகாரி. 

“அவ்வாறான தீர்மானமொன்று எங்குமே எடுக்கப்படவே இல்லையே”என்று பதிலுரைகின்றனர் ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் மற்றும் செயலாளர். 

அச்சமயத்தில், “நாங்கள் உங்களிடத்தில் அனுமதி கோரவில்லை. அவ்வாறு கோர வேண்டிய அவசியமும் இல்லை. சம்பிரதாயபூர்வமாக உங்களுக்கு தகவலொன்றை பரிமாற்றுகின்றோம்”என்று பதிலளிக்கின்றார் தொல்பொருளியல் திணைக்களத்தின் அந்த அதிகாரி. 

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன், ஒரு சட்டத்தரணி. ஆதலால் அவர், “தொல்பொருளியல்  சட்டத்தின் சரத்து 20இன் பிரகாரம், அடையாளப்படுத்தப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளதே தவிரவும், அங்கு நிர்மாணங்களைச் செய்ய முடியாதல்லவா” என்று வாதிடுகின்றார். 

ஆனால் அவரது  வாதம் வெற்றிபெறவில்லை. ஏனென்றால், பிராந்திய அதிகாரி வெறுமனே 'அம்பு' மட்டும் தான். 'தொல்பொருளியலின் பெயரால் தமிழின தொன்மைகளை ஆக்கிரமிக்கும் தென்னிலங்கையின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்' என்ற வில்லால் எய்யப்பட்ட அம்பேமாவட்ட அதிகாரி. அதனால் தர்க்கம் செய்வதால் பயனில்லை. 

தொல்பொருள் பிரகடனம்

தமிழர் தேசத்தின் தலைநகரான திருகோணேமலையில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் பதிகம்பாடப்பெற்ற திருத்தலமாகவும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் திகழ்வது திருக்கோணஸ்வரம். இவ்வாலயத்தின் வரலாற்ற சிறப்பம்சங்களின் பட்டியல் நெடியது. 

அத்துணை பெருமைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த ஆலயம் 1981ஆம் ஆண்டு மிகப்பெறுமதியான தொல்பொருளியல் பகுதியாக அடையாளம் காணப்பட்டு வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. 

அன்றிலிருந்து, இந்த ஆலயத்தில் சிறுகல்லொன்றை அகற்றுவது கூட சட்டத்திற்கு முரணான விடயமாகும். இதனை, நன்குணர்ந்த பரிபாலன சபையினர் அதன்பிராகரமே ஆலயத்தை நிருவகித்தும் வந்துகொண்டிருக்கின்றனர்.

அளவிடை

அவ்வாறிருக்க, திருகோணேஸ்வர ஆலயம் இரண்டு பிரதான பகுதிகளைக் கொண்டது. அதில் முதலாவது பிரதான ஆலயம் அமைந்திருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதி 18ஏக்கர்கள் ஒரு ரூட் 29பேர்ச்சஸ் அளவு நிலப்பரப்பைக் கொண்டதாகும். 

3.jpg

இரண்டாவது, பாவநாசம் தீர்த்தத்தை அண்மித்துள்ள 3ஏக்கர் 2ரூட் ஒருபேர்ச் அளவு நிலப்பரப்பைக் கொண்டதாகும். இதனைவிடவும், பிரதான ஆலயத்தின் கீழ்பகுதியில் உள்ள கோட்டை வாசலில் 26பேர்ச்ஸ் நிலப்பரப்பு ஆலயத்திற்குச் சொந்தமானதாகவே உள்ளது. 

ஆலயத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பு பற்றிய விபரங்கள், 1971ஆம் ஆண்டு, அப்போதைய பரிபாலனத் தலைவர் எம்.கே.செல்வராசாவின் பெயரில் காணப்படும் ‘உரித்து வரைபடத்தில்’ மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

‘நிலமே’யும் கடைகளும்

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு ஐ.தே.க.விலிருந்து வெளியேறிய சுசந்த புஞ்சிநிலமே சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளவும், அவர் தேர்தலில் களமிறங்குவதற்கு திருகோணமலை தொகுதி வழங்கப்படுகின்றது. 

4.jpg

இரத்தினபுரியில் இருந்து ஆதரவாளர்களுடன் வந்து திருமலை கச்சேரிக்கு அருகில் தங்கியிருந்த காலத்தில், அவரது ஆதரவுக்குழாத்தில் இருந்த பெரும்பான்மை சமூகத்தவர்களால் ஆலய வளாகத்தினுள் மூன்று வியாபார நிலையங்கள் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது, நகரசபையிடத்தில் எவ்விதமான அனுமதியையும் குறித்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பெற்றிருக்கவில்லை. அப்போதைய ஆலய நிருவாகத்தினரும், அந்த விடயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 'வயிற்றுப்பிழைப்புக்காகத்தானே' என்ற மனோநிலையில் பொருட்டாக அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதன்விளைவு, அவை 58 வியாபார நிலையங்களாக விரிவடைந்து நிற்கின்றது. அதுமட்டுமன்றி அத்தனை வியாபார நிலையங்களினதும் உரிமையாளர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்கள். 

ஆரம்பித்த தலையிடி

வியாபர நிலையத்தை அடியொற்றி ஆலயப்பகுதிக்குள் பெரும்பான்மை சமூகத்தினரின் அதீதமான பிரசன்னம் ஏற்படவும், யதார்த்தத்தை உணர்ந்த பரிபாலன சபையினர், கடைகளை அகற்றுவதற்கு காய்களை நகர்த்தினார்கள். அதனால், வியாபார நிலைய உரிமையாளர்கள் மல்லுக்கட்ட ஆரம்பித்தனர். 

பின்னர் இவ்விடயம் 2018இல் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் எதிர்கட்சித்தலைராக இருந்த சம்பந்தனும் அவருடன் நல்லுறவில் இருக்கும் சுசந்த புஞ்சிநிலமேயும் பிரசன்னமாகியிருந்தனர். 

அவர்களின் முன்னிலையில் விடயம் ஆராயப்பட்டு, குறித்த வியாபரா நிலையங்களை ஆலயத்தின் முகப்பில் உள்ள ‘கிளிப் கொட்டேஜ்’ பகுதிக்கு இடமாற்றுவதெனவும், அங்கு நகரசபையினரால் வியாபார நிலையங்களுக்கான நிர்மாணம் செய்யப்பட்டு கையளிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

துரத்திய துரதிஷ்டம்

ஆனால், குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டன. முதலில் நகரசபையிடத்தில் போதிய நிதி காணப்பட்டிருக்கவில்லை. பின்னர், ஆலயம் அதற்கான நிதியை நகரசபைக்கு வழங்குவதற்கு முன்வந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, மத்திய அரசில் ஆட்சிக்குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. பின்னர் கொரோனா நிலைமைகள் என்று காலம் கடந்துவிட்டது. 

தலைதூக்கிய நெருக்கடி

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ‘இந்தியா’ திட்ட வரைவுகளை அண்மையில் கோரியிருந்தது. 

அதற்கு அமைவாக, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனால் வழங்கப்பட்ட வரைவில், 'திருக்கோணஸ்வரத்துக்கான இராஜகோபுர முன்மொழிவும்' செய்யப்பட்டிருந்தது. 

கோணஸ்வரத்திற்கான இராஜகோபுரத்தினை அமைப்பதற்கு இந்தியத் தரப்பில் சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அண்மையில் சிற்பசிற்பாசாரிகள் ஆலயத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.  

சிற்பாசாரிகளின் விஜயம், ஆலயப்பகுதியில் வியாபார நிலையங்களை கொண்டிருப்பவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.  தமது, வியாபார நிலையங்கள் அகற்றப்படப்போகின்றன என்பதை குறிப்பால் உணர்ந்துள்ளனர். 

அதன்பின்னரே, ஆலயத்தின் தலைவரும், செயலாளரும், தொல்பொருளியல் திணைக்கள மாவட்ட அதிகாரியால் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் தொல்பொருளியல் திணைக்களத்தின் வகிபாகம் என்னவென்பது வெளிச்சமாகின்றது. 

முரண்நகை

அண்மைய காலங்களில் தேரோடும் வீதி விஸ்தரிப்பதற்கும்  ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அழிந்துபோன அன்னதான மடத்தினை மீளமமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தொல்பொருளியில் திணைக்களம் அனுமதிகளை வழங்கவில்லை.  ஆலமரக்கிளையொன்று அகற்றப்பட்டதற்காக ஆலய பரிபாலன சபையினருக்கு 'தொன்மங்களை சீர்குலைத்தால் சட்டநடவடிக்கை' என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், தொன்மங்களை உடைய ஆலயப்பகுதியில் வியாபார நிலையங்களை நிரந்தமாக அமைத்துக்கொடுப்பதற்கும் அப்பணியை தானே முன்னெடுப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களம் எவ்வாறு இணங்கியது. அச்செயற்பாட்டை அத்திணைக்களம் எந்த சட்ட அதிகாரத்தின் கீழ் மேற்கொள்கின்றது என்பது பிரதான கேள்வியாகிறது. 

பூச்சியநிலை  

அண்மைக்காலமாகவே, கோணேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிகள் முன்னெடுப்பதற்கு தொல்பொருளியல் திணைகளம் முட்டுக்கட்ட போட்டுவருகின்றது. இந்த நிலையில், இராஜகோபுர நிர்மாணம் சாத்தியமாகுமா என்ற ஐயப்பாடுகளும் அதிகரித்துள்ளன. 

திருகோணேஸ்வர ஆலய நிலைமைகள் குறித்து கரிசனை கொள்ளுமாறு, சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும் செஞ்சொற்செல்வருமான கலாநிதி.ஆறு.திருமுருகன், ஆகியோர் பிரதமர் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் கோரியுள்ளனர். 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றிலும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் பொது வெளியிலும் நிலைமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் எந்தவிரதமான பிரதிபலிப்புக்களும் இதுவரையில் கிடைக்கவில்லை. பூச்ச நிலைமையே நீடிக்கின்றது. 

பேராபத்தான திட்டங்கள்

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வியாபார நிலையங்களை நிர்மாணத்தல் என்ற விடயம் தான் தற்போதைக்கு வெளிப்பட்டாலும், இதன் பின்னால் பேராபத்தான திட்டங்கள் மறைந்துள்ளன.

அதாவது, கோணேஸ்வர ஆலத்திற்கு கீழ்ப்பகுதியில் சங்கமித்த விகாரை காணப்படுகின்றது. இதுவரலாற்று முக்கியத்துவமானதாக கூறப்படுகின்றது. ஆனால் கோணேஸ்வரர் ஆலயத்தினை மையப்படுத்தியே வீதி நிர்மாணங்கள் செய்யப்பட்டிருப்பதால் குறித்த விகாரை பிரசித்தமடையாது காணப்படுகின்றது என்ற சிந்தனை விகாராதிபதி உள்ளிட்டவர்களுக்கு உண்டு. 

எனவே, கோட்டைவாசல் அருகிலிருக்கும் இராணுவ முகாம் ஊடாக சங்கமித்த விகாரைக்கு செல்கின்ற போக்குவரத்து ஏற்பாடுகளை தவிர்த்து, விகாரையை நேரடியாக மையப்படுத்தும் வீதியை பிரதானப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

குறித்த வீதி பிரதானப்படுத்தப்பட்டால், கோட்டை வாசல் பாதுகாப்பு காரணங்களை காண்பித்து நிரந்தரமாக மூடப்படும். அதன்பின்னர் சங்கமித்த விகாரைக்கான வீதியே பிரதானப்படுத்தப்படும். பின்னர், தொல்பொருளியல் திணைக்களத்தால் முன்மொழியப்பட்டுள்ள வியாபார நிலையங்கள் அமைக்கப்படும் பகுதியை குறித்த வீதியூடாக பயணித்து, படிகள் மூலமாகவே ஆலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அவ்வாறாயின், சங்கமிதத விகாரையைக் கடந்தே கோணேஸ்வரை அடையவது நியதியாகிவிடும். இதுதான் திட்டத்தின் முதலாவது அங்கம். 

இரண்டாவது, சங்கமித்த விகாரைக்கான குறித்த வீதியை விஸ்தரித்து கடற்கரை வீதியுடன் இணைப்பதாகும். இதன்மூலமாக, ஏற்கனவே, மத்தறை, காலி மற்றும் தங்கல்ல ஆகிய பகுதியில் இருந்து வருகை தந்து 'கொரியாவத்த' என்னும் பெயரில் உருவாகியுள்ள சிங்கள மீனவக்கிராமத்துடன் தொடர்புபடுத்த முடியும். அத்துடன், அக்கிராமத்துக்கு அருகில் உள்ள ஏனைய வெற்றுநிலங்களில், கோணேஸ்வரர் ஆலய வியாபார நிலையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இதர தரப்பினர்களுக்கான குடியேற்றங்களையும் தாரளமாகவே மேற்கொள்ள முடியும். 

RAM_6-05.jpg

ஆக, தமிழரின் தொன்மம் நிறைந்த பகுதியில்  வாழ்வாதரத்தின் பெயரால் வியாபார நிலையங்களை அமைத்து, ஆக்கிரமிப்புக்கான வாழிடங்களை உருவாக்குவாக்குவதற்கு, தொல்பொருளியல் திணைக்களம் தூபமிடுகின்றது என்பது தான் அப்பட்டமான உண்மை.
 

https://www.virakesari.lk/article/133982

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2022 at 22:51, MEERA said:

இங்கு விசேட நாட்களை தவிர்த்து மற்றைய நாட்களில் அதிகளவில் சிங்கள மக்களே வருகிறார்கள்.

ஆலயத்தை நோக்கிச் செல்லும் போது வலது பக்கத்தில் கடைசியாக ஆலய நிர்வாகத்தினால் நடாத்தப்படும் கடை உள்ளது.

 

பறி போகும் திருகோணமலை கோவில் என யாரோ விரிவாக எழுதியது கொஞ்ச நாட்கள் முகநூலில் சுற்றியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.