Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது? - ராஜன் குறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது?

ராஜன் குறை கிருஷ்ணன்

spacer.png

காந்தி, 1948 ஜனவரி 30 அன்று கொலையுண்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் முன் எப்போதையும்விட அந்த நிகழ்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. கட்டுரைகள் எழுதப்படுகின்றன. குறிப்பாக அவர் கொலைக்கு நேரடி காரணமான இந்துத்துவக் கருத்தியல், அதாவது இந்து ராஷ்டிரம் / இந்து அடையாளவாத தேசம் என்ற கருத்தியல் இந்திய அரசியலில் முதன்மை பெற முயலும் நேரத்தில், அவர் கொலை அதிக முக்கியத்துவம் பெறுவதும், அனைவரையும் சிந்திக்க வைப்பதிலும் வியப்பில்லை. 

நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் காந்தியைக் கொன்ற கோட்சேவின் கருத்தியலான இந்து ராஷ்டிரம் என்ற இந்து அடையாளவாத தேசியம் மட்டும் ஏன் காந்தி கொல்லப்பட்டே ஆக வேண்டிய எதிரி என்று நினைத்தது? ஏன் கோரக்பூர் மடாதிபதியும், இந்து மகாசபை தலைவர்களில் முக்கியமானவருமான திக்விஜய் நாத் காந்தி கொல்லப்பட வேண்டும் என்று அவர் கொலைக்கு மூன்று தினங்களுக்கு முன்பு 1948 ஜனவரி 27ஆம் தேதி தில்லி கனாட் பிளேஸில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார்? கொலை நடந்த பின் கைதுசெய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார்?  

அப்படிக் கொல்ல நினைக்க இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களோ, காந்தி முஸ்லீம் ஆதரவளராகக் கருதப்பட்டதோ, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று காந்தி சொன்னதோ மட்டும் காரணமல்ல. அவை சில உடனடிக் காரணங்கள். அதன் பின்னால் இயங்கிய தத்துவார்த்த முரண்பாடு ஆழமானது.

காந்தியுடன் முரண்பட்ட பிற தத்துவங்களான பொதுவுடமைத் தத்துவமோ, பெரியாரின் திராவிடக் கருத்தியலோ, அம்பேத்கரின் தலித்தியமோ காந்தியைக் கொல்லுமளவு வெறுக்கவில்லையே? அவருடன் முரண்பட்டபோதும், அவருடைய விழுமியங்களை முழுவதும் மறுக்கவில்லையே? ராமனையும், கிருஷ்ணனையும் (கீதை) உயர் விழுமியங்களின் உருவகமாகக் கொண்ட காந்தியை ஏன் இந்து அடையாளவாதம் கொன்றது? இந்த கேள்விக்கு விடை தேடுவது முன்னெப்போதையும்விட இன்றைக்கு அவசரமானது. 

 

61f9660fe1622.jpg

விழுமியங்களும் நடைமுறைகளும்   

காந்தி வாழ்வியல் நடைமுறையில் தான் சந்தித்த எல்லா முரண்களுக்கும் விழுமியங்களையே தீர்வாக முன்வைத்தார். நடைமுறை முரண்களை அந்த தளத்திலேயே எதிர்கொண்டு தீர்க்க அவர் முயலவில்லை. ஆனால், விழுமியங்கள் குறித்த தன் எண்ணங்களை எழுத்திலும், செயலிலும் தீவிரமாக வெளிப்படுத்தினார். 

காந்தியால் தன் கருத்துக்களை நோக்கி பெரும்பாலானவர்களை, முக்கியமாக எளிய மக்களை ஈர்க்க முடிந்தது. இந்தியாவின் தன்னிகரற்ற வெகுஜனத் தலைவரானார். வெகுமக்கள் அவரை அவதார புருஷராக, நடமாடும் தெய்வமாக, மகாத்மாவாக கருதினார்கள். அதனால் இந்திய விடுதலை இயக்கத்தின் தனிப்பெரும் ஆற்றலாக அவர் உருவெடுத்தார். இருப்பினும் முரண்களை எதிர்கொள்வதில் சமூக இயக்கத்தில் விழுமியங்களுக்கும், நடைமுறைகளுக்குமான இடைவெளி தொடரவே செய்தது. 

உதாரணமாக காந்தி, முதலீட்டியத்தின் உபரி திரட்சிக்கும் (accumulation), தொழிலாளர் நலனுக்குமான முரண்பாட்டினை வர்க்க புரட்சி மூலமாக தீர்க்க வேண்டும் என்பதை ஏற்கவில்லை. மாறாக, எளிய மக்களின் பொருளாதார தன்னிறைவான வாழ்க்கை என்ற விழுமியத்தை முன்வைத்தார். உற்பத்தி, நுகர்வு பெருக்கத்தை மறுதலித்தார். 

ஒரு சின்ன தீவான இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியே உலகை இந்தப் பாடுபடுத்தினால், இந்தியாவும், சீனாவும் தொழில்மயமானால் உலகம் வெட்டுக்கிளிகள் தாக்கிய வயல்போலாகிவிடும் என்றார். இன்று ‘மார்க்ஸ் இன் த ஆந்த்ரோபோசின்: டுவார்ட்ஸ் த ஐடியா ஆஃப் டீகுரோத் கம்யூனிஸம்’ (Marx in the Anthropocene: Towards the idea of Degrowth Communism - 2023) என்பன போன்ற நூல்களில் மார்க்ஸ் சூழலியலுக்கும், முதலீட்டியத்திற்கும் உள்ள முரண்கள் குறித்து சிந்தித்தது எடுத்துக்காட்டப்படுவதைக் காண்கிறோம். 

மற்றொரு முக்கிய பிரச்சினையான சாதிய ஏற்றத்தாழ்வில், காந்தி வர்ணாசிரம அமைப்பை முற்றும் மறுதலிக்க விரும்பவில்லை. ஆனால், அதன் உயர்வு - தாழ்வு நோக்கை மாற்றியமைக்கும் விழுமியங்களை முன்னிறுத்த முனைந்தார். அனைவருக்குமான தன்மானம், தன் மதிப்பு போன்ற விழுமியங்களில் தீர்வை உருவாக்க விரும்பினார். ஆங்கிலத்தில் இவை ‘செல்ஃப் ரெஸ்பெக்ட் (self-respect) என்றே எழுதப்படும்போது பெரியாரின் சுயமரியாதைக்கு அணுக்கமாகவே உள்ளன.  

இதிலும் காந்தியின் விழுமியங்கள் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போதுமானதாக இல்லை என்பதுதான் அம்பேத்கரும், பெரியாரும் அவரைக் கடுமையாக விமர்சிக்க, முரண்பட காரணமானது. ஆனாலும் காந்தியின் விழுமியங்களுக்கும், இவர்களது நடைமுறை முன்னெடுப்புகளுக்கும் முரண் முற்றானதாக இருக்கவில்லை. அதேசமயம், சீர்திருத்தங்களுக்கு எதிரான பிற்போக்குவாத சனாதன சக்திகள் காந்தியை மிகப் பெரிய எதிரியாக கருதியதை அட்சயா முகுல் எழுதிய ‘கீதா பிரஸ் அண்ட் த மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா’ (Gita Press and the Making of Hindu India - 2015) நூலைப் படிக்கும்போது புரிந்துகொள்ளலாம்.  

காந்தியமும் இந்துத்துவமும்

இவ்வாறான சூழலில் காந்தியின் விழுமியங்களையே முற்றிலும் முரணானதாகக் கண்டது வன்முறை நாடிய இந்துத்துவ அடையாளவாதமே. காந்தி கொலையுண்டதற்கு கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன், 1909 அக்டோபர் 24ஆம் ஆண்டு லண்டனில் நடந்த விஜயதசமி தின கூட்டத்தில்  முதலும் கடைசியுமாக விநாயக் தாமோதர் சாவர்க்கரும், காந்தியும் நேரில் சந்தித்தனர். 

 

6184299a90033.jpg

அன்றைய தினம் காந்தி பத்து தலைகள் கொண்ட ராவணனுடன் ராமர் நடத்திய போரும், கீதையில் கண்ணன் கூறிய போரும் நமது மனதிற்குள் நடக்க வேண்டிய போரின் உருவகங்கள் என்று கூறினார். தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் களையப்பட வேண்டும் என்பதுதான் அவற்றின் நோக்கமே தவிர வன்முறையை போதிப்பது அல்ல என்றார். சாவர்க்கரோ ராமர் இலங்கைக்கு சென்று போர் புரிந்து தீயவர்களைக் கொன்றது சீதையை விடுவிக்கத்தான் என்றார். சரியான நோக்கங்களுக்காக வன்முறையைக் கைக்கொண்டு போராடுவது தவறல்ல என்றார். 

இந்த காந்தி - சாவர்க்கர் லண்டன் விவாதம் அதற்கு சில மாதங்கள் முன்பு மதன்லால் திங்கரா என்ற இளைஞர் கர்சான் வைலி என்ற பிரிட்டிஷ் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற நிகழ்வின் பின்னணியில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். திங்கரா சாவர்க்கரின் எண்ணங்களால், எழுத்துகளால் தூண்டப்பட்டிருந்தார். சாவர்க்கர் திங்கராவின் செயலை புகழ்ந்தார். காந்தி திங்கரா செய்த கொலையை வன்மையாகக் கண்டித்தார்.  நாற்பதாண்டுகளுக்கு பிறகு அதே சாவர்க்கரின் எண்ணங்களால், எழுத்துக்களால் உருவான நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றது தற்செயலானது அல்ல. 

காந்தி - சாவர்க்கர் லண்டன் சந்திப்பு குறித்த தகவலை தனது ‘இந்துத்துவா அண்ட் வைலனஸ்: வி.டி.சாவர்க்கர் அண்ட் த பாலிடிக்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’ (Hindutva and Violence: V.D.Savarkar and the Politics of History - 2022) என்ற நூலில் தரும் விநாயக் சதுர்வேதி இத்தாலிய தேசியவாதியான மாஜினியின் சிந்தனைகளும், வாழ்க்கையும் எப்படி சாவர்க்கரின் சிந்தனையை வடிவமைத்தன என்பதையும், அதேசமயம் காந்தி எப்படி மாஜினியை முற்றிலும் வேறு முறையில் புரிந்துகொண்டார் என்பதையும் குறிப்பிடுகிறார். 

சாவர்க்கரை சந்தித்த பிறகு கப்பலில் நாடு திரும்பும் போதுதான் காந்தி தன்னுடைய புகழ்பெற்ற ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற நூலை எழுதினார். அதில் அவர் மாஜினி உருவாக்க நினைத்த மக்களின் சுயாட்சி என்பது இத்தாலியில் உருவாகவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆஸ்திரிய மன்னரின் மேலாதிக்கத்திலிருந்து இத்தாலிய மன்னர் விடுவிக்கப்பட்டார் என்பதுதான் நடந்தது, மக்களுக்கு சுயாட்சி கிடைக்கவில்லை என்று தெளிவுபடுத்துகிறார். 

இதற்குக் காரணம் இத்தாலிய தேசம் கரிபால்டியின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் பெற்ற விடுதலைதான் என்று கூறுகிறார் காந்தி. வன்முறை மூலம் மக்களின் உண்மையான சுயாட்சியை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கிறார். பிறரைக் கொல்வது என்பது வீரமல்ல, கோழைத்தனம் என்று காந்தி வரையறுக்கிறார். ஒருவர் தனது லட்சியங்களுக்காக தன்னுயிரைக் கொடுப்பது வீரமாக, தியாகமாக இருக்கலாம்; ஆனால் பிறரைக் கொல்வது கோழைத்தனம் என்கிறார். 

காந்தியின் தத்துவத்தை நாம் இறையாண்மை தேசியத்திற்கும், சுயாட்சி தேசியத்திற்குமான வேறுபாடாகப் புரிந்துகொள்ளலாம். இறையாண்மை தேசியம் என்பது ராணுவமயமானது; சுய பாதுகாப்பு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பின் சாத்தியங்களை உள்ளடக்கியது. சுயாட்சி தேசியம் என்பது மக்கள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை. அது மக்களின் ஆன்ம விழிப்பால், பகுத்தறிவால் உருவாவது; ஆயுதங்களால் அல்ல. 

உலக வரலாற்றிற்கு காந்தி பரிந்துரைத்த மாற்று 

பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் உருவான முதலீட்டிய நடைமுறை காலனீயத்திற்கு அதாவது ஐரோப்பிய நாடுகள் உலகின் பிற பகுதிகளில் கால் பதித்து வர்த்தகம் செய்ய, ஆதிக்கம் செலுத்த வழி கண்டன. பின்னர் முதலீட்டியமும், காலனீயமும் சேர்ந்து நவீன நாகரீகத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை உருவாக்கின. ஒன்று அரசர்களிடம் இருந்த இறையாண்மையை மக்களை நோக்கி நகர்த்த முற்பட்டது. இரண்டு, அறிவியல் தொழில்நுட்பம், இயந்திரங்களின் பெருக்கம், தொழிற்புரட்சி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி - நுகர்வை பெருக்கியது. 

இந்த இரண்டும் இணைந்தபோது, தேசியக் கருத்தியலும், ராணுவமயமான தேசங்களும் உருவாயின. மோட்டார் வாகனங்கள், ரயில், விமானம் ஆகியவையும், புதிய வகை ஆயதங்களும், வெடிகுண்டுகளும் பெருகி தேசங்களுக்கிடையேயான யுத்தங்களை அனைத்து மக்களையும் பாதிக்கும் கொலைக்களங்களாக மாற்றின. இரண்டு உலக யுத்தங்கள் பெரும் அழிவை உலகெங்கும் தோற்றுவித்தன. அதன் இறுதியில் அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்ட பின் உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் பெருகியுள்ளன. 

காந்தி இவ்வாறு உற்பத்தி, நுகர்வு, வன்முறையை பெருக்கிய நவீன நாகரீகத்தை ஏற்கவில்லை. அதற்கு மாற்றாக தன்னிறைவுப் பொருளாதாரம், தற்சார்பான வாழ்க்கை, பகிர்தல், வன்முறையை முற்றிலும் மறுத்தல் ஆகியவற்றையே நம்பினார். ஒரு தேசத்தின் சுயராஜ்யம் என்பது அனைத்து மக்களும் சுயாட்சி உரிமைகள் பெறுவதே என்று உறுதிபடக் கூறினார். மன்னர்களோ, பணக்காரர்களோ ஆட்சியதிகாரம் பெறுவது விடுதலையல்ல என்று நினைத்தார்.

 

618cae4eac612.png

இந்தியர்கள் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்க மறுத்து தங்கள் வாழ்க்கை முறையை சீர்படுத்தி வாழ்வதே சுயாட்சிக்கு வழி வகுக்கும் என்ற காந்தி, ஆங்கிலேயர்களும் அந்த வாழ்க்கை முறையை ஏற்றால் இங்கேயே வாழலாம் என்று ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலில் கூறினார். அப்படியெல்லாம் வரலாற்றில் இதுவரை நடந்ததில்லையே என்ற கேள்விக்கு, இதுவரை வரலாற்றில் நிகழாதது, இனிமேலும் நிகழாது என்று நினைப்பது மனித கெளரவத்தையே மறுப்பதாகும் என்றார் காந்தி.     

இத்தகைய நம்பிக்கையுடன், இந்திய விடுதலை என்பது புதிய அரசியல் விழுமியங்களை உலகிற்கு அளிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் காந்தி. ஆனால், இந்துத்துவர்கள் ஐரோப்பாவில் தோன்றிய பாசிஸம், நாசிஸம்போல, ஒற்றை அடையாளவாத, வன்முறை இறையாண்மை நோக்கினைக் கொண்ட நவீன தேசியத்தையே விரும்பினார்கள். நவீன உலகில் பிற நாடுகளுடன் போட்டியிட்டு ராணுவ வல்லரசாக வேண்டும் என்று விழைந்தார்கள். 

காந்தி இறையியல் நோக்கு என்பது தனிப்பட்ட கடவுளர்கள், மதங்களை கடந்த பொதுவான மானுடவியல் பண்பாக இருக்க வேண்டும் என நினைத்தார். மனிதர்கள் தங்கள் எளிமையினை புரிந்து இயற்கையின் மடியில் இறை உணர்வுடன் ஒன்றியிருக்க வேண்டும் என நினைத்தார். இந்துத்துவர்களோ தெய்வங்கள் என்பவை, ராமரோ, கிருஷ்ணரோ, தங்கள் மத அடையாளத்தை உறுதிசெய்துகொண்டு, வன்முறை மூலம் தேசத்தினை கட்டமைக்க உதவக்கூடியவையாகவே கருதினார்கள்.  

காந்தியின் விழுமியங்கள், நவீன அடையாளவாத வல்லரசிற்கு முற்றிலும் எதிரானவை என்பதால்தான் அந்த எழுபத்தெட்டு வயது மனிதர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதுகூட இந்துத்துவ இலட்சியத்தை நிரந்தரமாக சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று அஞ்சி தோட்டக்கள் அவர் மேல் பாய்ச்சப்பட்டன. அகிம்சையைக் கொல்லாமல் வன்முறை தழைக்காதே?

 

https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-gandhi-assassination

 

 

2 hours ago, கிருபன் said:

இந்துத்துவர்கள் ஐரோப்பாவில் தோன்றிய பாசிஸம், நாசிஸம்போல, ஒற்றை அடையாளவாத, வன்முறை இறையாண்மை நோக்கினைக் கொண்ட நவீன தேசியத்தையே விரும்பினார்கள். நவீன உலகில் பிற நாடுகளுடன் போட்டியிட்டு ராணுவ வல்லரசாக வேண்டும் என்று விழைந்தார்கள். 

 

2 hours ago, கிருபன் said:

இந்துத்துவர்களோ தெய்வங்கள் என்பவை, ராமரோ, கிருஷ்ணரோ, தங்கள் மத அடையாளத்தை உறுதிசெய்துகொண்டு, வன்முறை மூலம் தேசத்தினை கட்டமைக்க உதவக்கூடியவையாகவே கருதினார்கள்.  

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டமும் வலுவடடைவதுபோல் தெரிகிறது.

ஈழத் தமிழரில் சில பழமைவாதிகள் இந்துத்துவாவை ஒட்டிய மனநிலையில் உள்ளனர். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் ராஜன் குறை, இந்துத் தேசியவாதியான ஜெ.மோ வின் எதிர்க்குரல், இவரது கட்டுரைகள் சிறப்பானவை! இணைப்பிற்கு நன்றி இணையவன்!

காந்தியுடைய கொள்கைகள் கருத்துகளோடு உடன்படாதோர் பலர் இருக்கின்றனர், ஆனால், இந்துத்துவ வெறியர்கள் மட்டும் தான் காந்தியைக் கொன்றதோடு மட்டும் நிற்காமல், இப்போதும் கொன்ற கோட்சேயை நாயகனாகப் போற்றுகின்றனர்!

சுதந்திர இந்தியா, பாகிஸ்தான் உருவாக இருந்த காலப் பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய  நூலொன்றில், ஒரு உரையாடலைக் குறிப்பிட்டிருந்தார்கள்: "இந்தியாவை இரண்டாகப் பிரிக்காதீர்கள், வேண்டுமானால் முஸ்லிம் லீக்கின் கையிலேயே ஆட்சியைக் கொடுத்து விடுங்கள்" என்று காந்தி சொன்னாராம். இந்தத் தகவல் வெளியே பரவிய போது தான் இந்துத்துவாக்களின் "காண்டு" இன்னும் அதிகமானதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

பேராசிரியர் ராஜன் குறை, இந்துத் தேசியவாதியான ஜெ.மோ வின் எதிர்க்குரல், இவரது கட்டுரைகள் சிறப்பானவை! இணைப்பிற்கு நன்றி இணையவன்!

வாசித்து இணைத்தது நானுங்கோ!

யான் ஜெ.மோவினதும், ராஜன் குறையினதும், ஷோபாசக்தியினதும் இன்னும் பலரினதும் எழுத்துக்களைப் படிப்பேன். ஆனால் எவரினதும் முகாமிலும் இல்லை.😎

மேலும் காந்தியின் சத்திய சோதனையை பதின்ம வயதில் படித்த பின்னர் அவர் மீது பிடிப்பும் இல்லை. அது வளரவளர வேறு சித்தாந்தங்களைப் பயின்று இன்னும் அதிகமாகியதுதான் உண்மை. 

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கமுயன்று, இப்போது இந்துத்துவ முகத்துடன் பிற மதத்தினரை ஒடுக்கும் வலதுசாரி பரப்பியத்தை வளர்த்துக்கொண்டுள்ளது. மோடி அதன் உந்துவிசையாக இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வாசித்து இணைத்தது நானுங்கோ!

யான் ஜெ.மோவினதும், ராஜன் குறையினதும், ஷோபாசக்தியினதும் இன்னும் பலரினதும் எழுத்துக்களைப் படிப்பேன். ஆனால் எவரினதும் முகாமிலும் இல்லை.😎

மேலும் காந்தியின் சத்திய சோதனையை பதின்ம வயதில் படித்த பின்னர் அவர் மீது பிடிப்பும் இல்லை. அது வளரவளர வேறு சித்தாந்தங்களைப் பயின்று இன்னும் அதிகமாகியதுதான் உண்மை. 

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கமுயன்று, இப்போது இந்துத்துவ முகத்துடன் பிற மதத்தினரை ஒடுக்கும் வலதுசாரி பரப்பியத்தை வளர்த்துக்கொண்டுள்ளது. மோடி அதன் உந்துவிசையாக இருக்கின்றார்.

தவறுக்கு வருந்துகிறேன்! இதோ மீண்டுமொரு பச்சை பிராயச்சித்தமாக😂

நானும் காந்தியின் பல கொள்கைகளோடு முரண்படும் ஆள் தான். "குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே தாம்பத்தியம் செய்ய வேண்டும்" 😎என்று சொல்லிக் கடுப்பேத்தியவர். நாசிகளை யூதர்கள் வன்முறையால் எதிர்க்காமல், கூட்டுத் தற்கொலை செய்து தம் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டுமென்றும் சொன்ன ஒருவர்.

ஆனால், உலகத்திற்குப் பயன்படா விட்டாலும் ஒரு அகிம்சை வழிமுறையை நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒருவரைக் கொன்றவருக்கு இன்னும் இந்தியாவிலும், மோடி வாலாக்கள் வாழும் உலக நாடுகளிலும் பெரிய மரியாதை இருக்கிறது. இது தான் முள்ளு!

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக கிறிஸ்தவம் ஏன் தமிழீழத்தை அழித்தது.. இப்படின்னு ஏன் குரே எழுத மாட்டன் என்கிறார்.

ஹிந்தித்துவா ஹிந்தியா தான் இருக்கே தவிர.. இந்துத்துவா இந்தியா இருந்திருந்தால்.. அண்டையில்.. இந்துக்கள் அழிவதை வேடிக்கை பார்த்திருக்காது. 

மேற்கு நாடுகள்... கிறிஸ்தவர்களுக்கு சார்ப்பாக இருப்பதை ஒருபோதும் எங்கும் கைவிட்டதில்லை என்பதற்கு.... 60% கிறஸ்தவர்களைக் கொண்ட தென் சூடானுக்கு விடுதலையும் பாப்பரசர் விஜமும். அதே 80% இந்துக்களைக் கொண்ட தமிழீழத்துக்கு அழிவும் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும். ஐயோ என்ற குரலுக்கு கூட செவி கொடுக்க யாருமில்லை. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.