Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவை மையம் கொண்டுள்ள நிதிசார் புயல் இந்தியர்களை தாக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க அரசுக்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டுள்ள கடன் உச்சவரம்பு நெருக்கடி சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் புயலை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்காவுக்கு இந்த நெருக்கடி ஏன் வந்தது? இதற்கு தீர்வு காண அதிபர் ஜோ பைடன் என்ன செய்கிறார்? அமெரிக்காவால் இந்த நெருக்கடியை எளிதில் கடந்துவிட முடியுமா? இதனால் உலகளாவிய நிதிச் சந்தையில் மாற்றங்கள் வருமா? அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்தியாவுக்கு ஆபத்தா? அல்லது ஆதாயமா?

இலங்கை திவாலாகி மக்கள் கிளர்ச்சி வெடித்ததையும், பாகிஸ்தான் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதையும் அண்மைக்காலத்தில் கண்ணுற்ற நமக்கு, அமெரிக்காவும் அதேபோன்றதொரு நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காணும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

ஏனெனில், உலகமே கண்டு வியக்கும் நாடு, பெரும் பணக்கார நாடு, ராணுவ, பொருளாதார வல்லரசு என்பன போன்ற பெருமைகளைக் கொண்ட அமெரிக்காவை ஆளும் அரசு செலவிட பணம் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதைக் கேள்விப்படும் யாவருக்கும் ஆச்சரியம் வருவது இயற்கையே.

கடன் உச்சவரம்பு நெருக்கடி என்றால் என்ன?

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 26.85 டிரில்லியன் டாலர் ஆகும். ஆனால், அந்நாட்டை 31.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கழுத்தை நெரிக்கிறது.

அதாவது, அதன் ஜிடிபி மதிப்பைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாக, தலைக்கு மேல் கடன் இருக்கிறது. இதுவே, 3.38 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் அந்த மதிப்பில் 57 சதவீதம்தான் கடன் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அதன் ஜிடிபி மதிப்பில் 26 சதவீதம் கடன் உள்ளது.

கடன் அளவில் காணப்படும் இந்த வித்தியாசம்தான், பெரும் பணக்கார நாடான அமெரிக்காவை நெருக்கடியில் தள்ளியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யும் அமெரிக்க அரசு புதிதுபுதிதாக கடன்களை வாங்கிக் கொண்டேதான் இருக்கிறது.

அதற்கு ஏற்றவாறு, தேவைப்படும் போதெல்லாம் கடன் உச்சவரம்பை அந்நாட்டு அரசு உயர்த்திக் கொண்டே வந்திருக்கிறது. அதுதான் அமெரிக்க அரசை இன்று இந்த நெருக்கடிக்கு கொண்டு வந்துள்ளது.

கடன் வாங்க அனுமதிக்கப்பட்ட அளவான 31.38 டிரில்லியன் டாலர் அளவை கடந்த ஜனவரி 19-ம் தேதியே அமெரிக்க அரசு நெருங்கிவிட்டது. அது முதலே நெருக்கடியில் இருந்து வரும் அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள சமாளிப்பு நடவடிக்கைகள் மூலம் இம்மாத இறுதி வரையே தாக்குப்பிடிக்க முடியும்.

மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு அரசு செலவினங்களுக்கு பணமும் இருக்காது, கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டால் புதிதாக கடனும் வாங்க முடியாது என்பதால் அமெரிக்க அரசு நெருக்கடியில் தவிக்கிறது.

அமெரிக்க அரசின் வரவு-செலவுக்கான நிதியை நிர்வகிக்கும் கருவூலத்தின் செயலர் ஜேனட் எல்.எல்லென், இந்த கடன் உச்சவரம்பு நெருக்கடி சூழலை பேரழிவு என்கிறார். இதனால், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமெரிக்க அரசு அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத மோசமான நிலை உருவாகி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இந்த நெருக்கடி வந்தது எப்படி?

சீனாவில் பிறந்து உலகையே ஈராண்டுகள் முடக்கிப் போட்ட கொரோனா பேரிடர்தான் அமெரிக்காவின் இன்றைய நிலைக்கு முக்கியமான காரணம். கொரோனா ஊரடங்குகளால் ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தை சரிசெய்ய அமெரிக்க அரசு 900 பில்லியன் டாலர் அளவுக்கு வரிச்சலுகைகள், மானியங்களை வாரி வழங்கியது. இதனால் ஏற்பட்ட பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ், குறுகிய காலத்திலேயே வட்டி விகிதத்தை கணிசமாக அதிகரித்துவிட்டது. இதன் பக்க விளைவுகளில் ஒன்றாக சிலிகன் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க், ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் ஆகிய 3 வங்கிகள் திவாலாகிவிட்டன.

அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய கடன் உச்சவரம்பு நெருக்கடியும் வந்துள்ளது. நெருக்கடியில் இருந்து மீள கடன் உச்சவரம்பை உயர்த்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதால் அதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் ஒத்துழைப்பை ஆளும் ஜனநாயகக் கட்சி நாடியுள்ளது. ஜப்பானில் ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு, ஆஸ்திரேலியாவில் குவாட் அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, இதற்காகவே தாயகம் திரும்பினார்.

அமெரிக்க அரசுக்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடன் உச்சவரம்பை உயர்த்துவதில் சிக்கல் ஏன்?

அமெரிக்காவுக்கு இதுபோன்ற கடன் உச்சவரம்பு நெருக்கடிகள் ஒன்றும் புதிததல்ல. 1960-ம் ஆண்டுக்குப் பிறகு 78 முறை இதே நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் கடந்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் 3 முறை கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோன்று இப்போதும் உயர்த்துவதில் என்ன சிக்கல்? என்ற கேள்வி எழலாம்.

அமெரிக்காவில் பொருளாதார பிரச்னையுடன் அரசியலும் கலந்து விட்டதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்கிறார் எழுத்தாளரும், நிதி சார் ஆலோசகருமான சோம. வள்ளியப்பன். "அடுத்த அதிபர் தேர்தலை மனதில் கொண்டு, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி இந்த நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. கடன் உச்சவரம்பு நெருக்கடியில் இருந்து அரசு மீண்டுவர உதவி செய்வதற்கு கைமாறாக, அரசு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடனுக்கு அக்கட்சி நிபந்தனை விதிக்கிறது. கல்விக்கடன் தள்ளுபடி, மின்சார வாகனங்களுக்கு சலுகை போன்ற அதிபர் பைடனின் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சி நிர்பந்திக்கிறது. அதனால்தான், கடன் உச்சவரம்பை தளர்த்துவதில் இரு கட்சிகளும் உடன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது." என்று அவர் கூறுகிறார்.

குடியரசுக் கட்சியின் முன்மொழிவும், அதிபர் பைடனின் பதிலும்

நெருக்கடிக்கு தீர்வு காண குடியரசுக் கட்சி முன்மொழிந்துள்ள, 'Limit, Save and Grow Act' மசோதா கடன் உச்சவரம்பை 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்திக் கொள்ள அனுமதிக்கிறது. அதேநேரம், அடுத்த நிதியாண்டில் 1.47 டிரில்லியன் டாலர் அளவுக்கு அரசு செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதுடன், அடுத்து வரும் ஆண்டுகளில் அரசு செலவினங்களை ஒரு சதவீதம் மட்டுமே உயர்த்த வேண்டும் என்றும் அந்த மசோதா கூறுகிறது.

ஆனால், குடியரசுக் கட்சியின் நிபந்தனைகளை ஏற்காமலேயே தன்னால் 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நடுத்தர மக்களைப் பாதிக்கக் கூடிய குடியரசுக் கட்சியின் நிபந்தனைகளை புறந்தள்ளி, அக்கட்சி பாதுகாக்க நினைக்கும் பெரு நிறுவனங்கள், பணக்காரர்களுக்கு வரி விதிப்பதன் மூலம் தன்னால் அதனை சாதிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

கடன் நெருக்கடியைத் தீர்க்க மாற்று வழிகள் உள்ளதா?

2011-ம் ஆண்டு ஒபாமா ஆட்சியில் கடன் உச்சவரம்பு நெருக்கடி உருவான போதும் எதிர்க்கட்சியாக இருந்த குடியரசுக் கட்சி இதுபோன்றே நடந்து கொண்டது. அதாவது, அரசின் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புதிய நிர்பந்தங்களைத் திணிப்பதே. அப்போது, 900 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் உச்சவரம்பை தளர்த்திக் கொள்வதை ஏற்றுக் கொண்ட குடியரசுக் கட்சி, அடுத்த ஆண்டு அதே அளவு நிதியை அரசு செலவினத்தில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து சாதித்துக் கொண்டும் விட்டது. இதன் காரணமாக, திட்டச் செலவுகளை தாராளமாக செய்ய முடியாத அரசு மக்களிடையே செல்வாக்கை இழக்கும், அடுத்த ஆண்டில் அதாவது 2012ம் ஆண்டு அதிபர் தேர்தல் தனக்கு சாதகமாக முடியும் என்ற குடியரசுக் கட்சி போட்ட அரசியல் கணக்கு தவறாகிப் போய்விட்டது.

2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது கடன் உச்சவரம்பு நெருக்கடியை அணுகும் விதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகும் 5 ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்த ஒபாமா, இதுபோன்ற நெருக்கடிகளில் ஒருமுறை கூட எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதே அணுகுமுறையைத் தான் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் கடைபிடிக்கிறார். 2011-ம் ஆண்டைப் போல இன்னொரு முறை குடியரசுக் கட்சியின் உத்தியை இம்முறை அனுமதிக்கக் கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

காலக்கெடு வெகுவாக நெருங்கி வருவதால், ஒருவேளை கடன் உச்சவரம்பை உயர்த்த முடியாமல் போனால் நெருக்கடியை சமாளிக்க என்ன செய்வது?. இதற்குப் பதிலளித்த சோம.வள்ளியப்பன், "கடன் உச்சவரம்பை உயர்த்த குடியரசுக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருவத தவிர்த்த மாற்று வழிகள் குறித்தும் பல யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஒன்று, கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்குப் பதிலாக புதிய பணத்தை அச்சடிப்பது. அதிலும், ஒரு ட்ரில்லியன் நாணயம் ஒன்றை வெளியிட்டு பிரச்னையை தீர்த்துவிடலாம் என்பது போன்ற யோசனைகள் கூட முன்வைக்கப்படுகின்றன." என்று தெரிவித்தார்.

கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன நடக்கும்?

ஒரு வேளை அமெரிக்க அரசால் கடன் உச்சவரம்பை உயர்த்த முடியாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்று உலகம் முழுவதும் நிதிச் சந்தையில் கலக்கம் நிலவுகிறது. அதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த சோம. வள்ளியப்பன், "2011-ம் ஆண்டைப் போல குடியரசுக் கட்சியுடன் கடைசி நேரத்தில் உடன்பாட்டை எட்டப்படலாம் அல்லது மாற்று உபாயங்கள் கையாளப்படலாம். ஆனால், அமெரிக்க அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்த்துவிடும் என்று நம்பலாம்." என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், "ஒருவேளை குடியரசுக் கட்சியுடன் உடன்பாடு எட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அமெரிக்க அரசு முன்னுரிமை அடிப்படையில் செலவுகளை செய்யலாம். அதன்படி, கடன் பத்திரங்களுக்கான வட்டி கண்டிப்பாக செலுத்தப்பட்டுவிடும். ஏனெனில், அது அமெரிக்க அரசின், அதன் நாணயமான டாலரின் நம்பகத்தன்மை தொடர்பானது. ஊழியர்களின் ஊதியங்கள் சற்று தள்ளிப் போகலாம். அத்தியாவசியம் அல்லாத செலவுகளாக கருதும் செலவுகளை அமெரிக்க அரசு ஆறப் போடலாம்.

எது நடந்தாலும் அது தற்காலிகமானதுதான். அமெரிக்கா விரைந்து மீண்டுவிடும். ஆனால் அதற்குள் பங்குச்சந்தைகள் வீழலாம். ஸ்டாண்டர்ட் அன்ட் புவர்ஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் அமெரிக்காவின் மதிப்பீட்டைக் குறைக்கலாம். டாலர் மதிப்பிலும் மாற்றம் வரலாம்." என்று கூறினார்.

அமெரிக்க அரசுக்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சோம.வள்ளியப்பன், நிதிசார் ஆலோசகர்

அமெரிக்க டாலரின் ரிசர்வ் கரன்சி அந்தஸ்துக்கு ஆபத்தா?

அமெரிக்காவுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அமெரிக்க டாலரின் ரிசர்வ் கரன்சி அந்தஸ்துக்கு குந்தகம் நேருமோ என்ற விவாதம் எழுவது வாடிக்கையான ஒன்று. இதுகுறித்த கேள்வியை முன்வைத்த போது,

"தற்போதைய நெருக்கடியால் உலகின் சேமிப்பு நாணயம் (Reserve Currency) என்ற டாலரின் அந்தஸ்துக்கு எந்த பங்கமும் வராது. சர்வதேச நிதிச் சந்தையில் டாலரே தொடர்ந்து கோலோச்சும். கடந்த 15 ஆண்டுகளாகவே டாலருக்கு மாற்று குறித்து பல யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை. அதனை அமெரிக்கா அனுமதிக்கவும் செய்யாது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பின்னேதான் அணிவகுக்கும்.

அமெரிக்கத் தடைகளைத் தாக்குப்பிடிப்பதுடன் யுக்ரேன் போரை ரஷ்யா தொடர்வதும், சீனாவின் வல்லரசுக் கனவும் சர்வதேச அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த சூழலில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடன் உச்சவரம்பு நெருக்கடி கவனிக்கத்தக்கது. ஆனாலும் கூட, டாலர் வீழ்ச்சியடைவதை சீனா உள்பட பெரும்பாலான நாடுகள் விரும்பாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகளின் எல்லை கடந்த முதலீடுகளும் பொருளாதார ஒத்துழைப்புமே அதற்குக் காரணம். அமெரிக்க கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலாவது இடத்தில் இருக்கும் சீனாவும், அமெரிக்க டாலர் மதிப்பிழப்பதை விரும்பாது. ஏனெனில், டாலரின் மதிப்பு குறைவது, அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சீனா செய்துள்ள முதலீட்டின் மதிப்பையும் குறைத்துவிடும் அல்லவா!

தகுந்த மாற்று வராத வரையிலும் அமெரிக்க டாலரின் அந்தஸ்து குறையாது. தற்போதைய நிலை அப்படியே நீடித்தால், சர்வதேச நிதி, வர்த்தகச் சந்தையில் மேலும் சில நாணயங்கள் தலையெடுக்கலாமே தவிர டாலரை அவை பதிலீடு செய்ய முடியாது. ஆகவே, சர்வதேச நிதி, வர்த்தக சந்தையில் அமெரிக்க டாலருக்கு மாற்று என்பது தூரத்து கனவாகவே இருக்கும்." சோம. வள்ளியப்பன் விரிவாக பதிலளித்தார்.

அமெரிக்க அரசுக்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு ஆபத்தா? ஆதாயமா?

அமெரிக்காவுக்கு வந்துள்ள நெருக்கடி ஒரு வகையில் இந்தியாவுக்கு ஆதாயம் தருவதாகவும் அமையலம் என்று அவர் கூறினார். "அடிக்கடி வருகின்ற இதுபோன்ற கடன் உச்சவரம்பு நெருக்கடி காலப்போக்கில் அமெரிக்காவுக்கு பாதகமாக அமையலாம். கடனைத் திருப்பிச் செலுத்தும் அமெரிக்க அரசின் திறன் மீது சந்தேகம் எழும் பட்சத்தில், அமெரிக்கச் சந்தைகளில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறக் கூடும். அவ்வாறான பெருமுதலீட்டாளர்கள், ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சந்தைகளாக கருதப்படும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்யலாம். இந்தியாவை நோக்கி முதலீடுகள் வரும் பட்சத்தில் நீண்ட கால நோக்கில் அது நம் நாட்டிற்கு சாதகமாக அம்சம்.

அமெரிக்கா ஒரு பணக்கார நாடு. தற்போதைய நெருக்கடி அந்நாட்டு அரசுக்குத்தான் ஏற்பட்டுள்ளதே தவிர அந்நாட்டு நிறுவனங்களுக்கு அல்ல. அவை வழக்கம் போல் செயல்படுவதில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால், 2008-ம் ஆண்டைப் போல் மீண்டும் ஒரு நெருக்கடி உலக அளவில் வரும் என்ற அச்சம் தேவையில்லை. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட எந்தவொரு துறைக்கும் நெருக்கடி வராது. நம் நாட்டில் யாருக்கும் பாதிப்பு இருக்காது." என்று சோம. வள்ளியப்பன் தெரிவித்தார்.

அமெரிக்கா இன்று நெருக்கடியில் இருப்பதாக தோன்றினாலும், அதனுடன் வேறு எந்த நாட்டையும் ஒப்பிடவே முடியாது. 'யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்ற நிலைதான். அமெரிக்கா தனது 230 ஆண்டு கால வரலாற்றில், வாங்கிய கடனையோ, அதற்கான வட்டியையோ திருப்பிச் செலுத்த முடியாத நிலையை ஒருமுறை கூட சந்தித்ததே கிடையாது. அந்த பெருமையைத் தக்க வைக்கவும், தற்போதைய சிக்கலைத் தீர்க்கவும் கடன் உச்சவரம்பை உயர்த்த ஒத்துழைக்குமாறு அமெரிக்க அரசின் கருவூலச் செயலர் ஜேனட் எல்லன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c6p0e5yg32ko

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவினை விட ஜப்பானே அதிகளவில் அமெரிக்க அரச பணமுறிகளில் முதலிட்டுள்ளது என கருதுகிறேன்.

எதற்காக பணமுறிகளில் இந்த இரண்டு நாடுகளும் முதலிடுகின்றன என முன்னர் ஒரு திரியில் விவாதிக்கப்பட்டுள்ளமையால் சுருக்கமாக கூறினால், உலக வர்த்தகத்தில் ஒரு நாட்டின் ஏற்றுமதியானது இறக்குமதியினை விட அதிகரிக்கும் (BOF)போது அந்த நாட்டின்  நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும்.

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் போது இயல்பாகவே அந்த  நாட்டின் பொருளின் விலை அதிகரிக்கும் அதனால் அது சர்வதேச  சந்தையில் போட்டியினை இழக்கும், இதனை தவிர்ப்பதற்காக வலிந்து தமது நாணயத்தின் பெறுமதியினை குறைக்க இரண்டு தெரிவுகள் உண்டு 
1. தங்கத்தினை வாங்குதல்
2. அமெரிக்க அரச பணமுறியினை வாங்குதல்.

இதில் இரண்டாவது தெரிவு இலாபமானதும் அதிக திரவத்தன்மை கொண்டதுமாகும் (வட்டி மற்றும் பணமுறியினை விற்கும் போது அது உடனடியாக அமெரிக்க நாணயமாக மாறும்).

அமெரிக்காவின் கடன் பிரச்சினைக்கு காரணம் கோவிட்  காலத்தில் ஏற்படுத்திய பொருளாதார தூண்டல் மட்டும் காரணம் அல்ல என கருதுகிறேன்.

பொதுவாக அரச செலவினை அதிகரிக்கும் போது மிகப்பெரிய பாதீடு அது பொருளாதாரத்தினை தூண்டும்(Keynes multiplier) ஆனால் இவ்வாறான நிலை தோன்றுவதற்கு மூலகாரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியின் தவறான அணுகுமுறைக்களே காரணம் 2008 வீட்டு விலை சரிவின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீழ இதே பொருளாதார தூண்டல் முரையினை கையாண்டனர் என கருதுகிறேன்(அமெரிக்காவில் உள்ள வருமான இடைவெளி பல பொருளாதார பிரச்சினைகளை உருவாக்குகின்றதுதான்).

சில பொருளாதார நிபுணர்கள் இந்த பொருளாதாரதூண்ட்டலை seaming paradox என கூறுகிறார்கள்(அதாவது மககளிடம் பணமுறிகளை விற்று பெறும் பணம் மூலம் எவ்வாறு பொருளாதாரத்தினை தூண்ட முடியும் என)

இவ்வாறான செயற்பாடுகள் கடன் வாங்குதலை அதிகரிக்கும் இந்த கடன் அதிகரிப்பு தொடர்ச்சியாக அமெரிக்காவினை மேலும் கடன் தொள்ளைக்குள் கொண்டு செல்லும், அதே திரியில் அமெரிக்காவின் கடன் 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட மொத்த பாதீட்டில் குறைந்த பட்சம் 6 இல் 1 எனும் விகிதத்திற்கு அதிகரிக்கும் என்பதனை மாதிரிகளின் மூலம் கூறப்பட்டுள்ளடது.

விவேக் இராம்சுவாமி எனும் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள இவர் அமெரிக்க நாணயத்தினை மீண்டும் தங்க தரம் போன்றதோர் (Commodity pecged) மதிப்பீட்டு நிலையினை மீழ உருவாக்க வேண்டும் என கூறுகிறார்.

தற்போதுள்ள அமெரிக்க நாணயம் வெறும் முகப்பெறுமதி நாணயம் அதனால் பணவீக்கம் ஏற்படும், அத்துடன் தற்போது உலக அளவில் ஏற்படும் அமெரிக்க நாணயத்தின் உலக நாணய கையிருப்பு நாணயம் எனும் நிலைக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு இது ஒரு  மாற்றாக இருக்கலாம்.

1970 பின் அமெரிக்கா தனது தங்க தர நிலையினை கைவிட்ட பின்னர் மேற்கு நாடுகளில் Stagflation உருவானது(வேலையின்மையும், பணவீக்கமும்), அதற்கு காரணம் பெற்றோலிய பொருள்கலின் விலை அதிகரிப்பே, தற்போது ஒட்டு மொத்த உலகும் அதே திசையில் எதிர்வரும் காலங்களில் பயணிப்பதற்கான விடயங்கள் பெற்றோலிய உற்பத்தி நாடுகளாலும் இரஸ்சிய உக்கிரேன்  யுத்தத்தால் ஏற்படலாம்.

 அமெரிக்க கையிருப்பு நாணயதிற்கு மாற்று நாணயம் வருமா(தனிய ஒரு நாணயம் என்றில்லாமால் பல யூரோ, யுவான், ஜென் என பல)? அது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளதாக கருதுகிறேன் உடனடியாக அல்ல 10 ஆண்டு காலத்தில் அதற்கு காரணம் அமெரிக்க பொருளாதார கொள்கைகளும் அமெரிக்க மத்திய வங்கிகளுமே காரணமாகும் வெளியில் இருந்து அல்ல.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு

கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு

அமெரிக்கக் கடன் உச்ச வரம்பை உயர்த்தவும், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான உடன்பாடு எட்டப்படும் என அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தெரிவித்துள்ளார்.

கடன் உச்ச வரம்பை உயர்த்தவில்லை என்றால் ஜூன் 5ம் திகதிக்கு பிறகு திறைசேரி காலியாகிவிடும் என்று அமெரிக்க திறைசேரி முன்பு தெரிவித்திருந்தது.

அதன்படி, கடன் வரம்பை 31.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்த்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் குடியரசுக் கட்சித் தலைவருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 டிரில்லியன் டாலர் நாணயம்: கடன் நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்காவுக்கு உதவுமா?

1 டிரில்லியன் டாலர் நாணயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவை கடன் நெருக்கடியிலிருந்து காப்பாற்ற குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் நேரம் வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது.

ஜூன் மாதத்திற்கு முன் கடன் வரம்பை அதிகரிப்பதில் உடன்பாடு ஏற்படவில்லையென்றால், அமெரிக்கா டீஃபால்ட் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக அமெரிக்கா இருப்பதால் அது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

சமீபத்திய நாட்களில் அதிபர் மாளிகையும், காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியினரும், பேச்சுவார்த்தைகள் நேர்மறையான திசையில் நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது.

அத்தகைய சூழ்நிலையில் கடைசி முயற்சியாக ’ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்’ மதிப்புள்ள பிளாட்டினம் நாணயம் பற்றி சில அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர், இது நாட்டை டீஃபால்ட் நிலையிலிருந்து காப்பாற்ற முடியும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த மதிப்பிலும் பிளாட்டினம் நாணயங்களை அச்சிட 1997 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் அமெரிக்க நிதியமைச்சரை அனுமதிக்கிறது.

 

கடன் வரம்பை அதிகரிக்க காங்கிரஸ் சம்மதிக்கவில்லையென்றால் இதன் மூலம் அமெரிக்க அரசு தன் செலவை ஏற்று திவாலாவதைத் தவிர்க்கலாம் என்று பிளாட்டினம் நாணயத்தை அச்சிடுவதற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.

நிதியமைச்சர் ஜேனட் யெல்லென் இந்த யோசனையை நிராகரித்துவிட்டார். ஆனாலும் பைடன் நிர்வாகத்தின் சில அதிகாரிகள் இந்த யோசனைக்கு சாதகமாக உள்ளனர்.

அரசு அத்தகைய முடிவை எடுத்தால், ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாணயத்தை, நாணய அச்சிடும் அமைப்பு வெளியிடும்.

நாணயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 டிரில்லியன் டாலர் நாணயத்தை வெளியிடுவது எப்படி?

இருப்பினும் அமெரிக்க கடன் உச்சவரம்பை அதிகரிப்பதற்கு இது ஒரு தீர்வாக இருந்ததில்லை.

ஆனால் பொது மக்கள் வாங்கக்கூடிய சிறப்பு பதிப்பு நாணயங்களை வெளியிட நிதியமைச்சருக்கு உரிமை உண்டு.

ஒரு டிரில்லியன் டாலர் பிளாட்டினம் நாணயத்தை அச்சிட முடிவு செய்தால் என்ன நடக்கும்?

"அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், நாணயத்தில் ஒரு டிரில்லியன் டாலர் என்று எழுதி ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும்" என்று அமெரிக்க நாணயம் அச்சிடும் அமைப்பின்(மின்ட்) முன்னாள் தலைவர் ஃபிலிப் டீல் கூறுகிறார்.

இவ்வளவு அதிக மதிப்புள்ள பிளாட்டினம் நாணயம் மிகப் பெரியதாகவும் கனமாகவும் இருக்கும் என்று ஒருவர் கற்பனை செய்யக்கூடும். ஆனால் உண்மையில் ஒரு பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய கால் டாலர் நாணயத்தின் அளவிலேயே அது இருக்கும்.

நாணயத்தில் டிரில்லியனில் உள்ள பூஜ்ஜியங்களை எழுத வேண்டிய அவசியமில்லை. ஒரு டிரில்லியன் டாலர் என்று எழுதினால் மட்டும் போதும்.

இப்போது கேள்வி என்னவென்றால், நாணயத்தின் மதிப்பை எழுதுவதன் மூலம் நிர்ணயிக்க முடியும் என்றால் அதற்கு பிளாட்டினம் நாணயம் ஏன் வேண்டும்?

அது ஏனென்றால் அமெரிக்க சட்டத்தின்படி 50 டாலருக்கு மேல் மதிப்புள்ள நாணயங்களுக்கு பிளாட்டினம் உலோகத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

"திவாலாவதற்கும் கரன்சி அச்சிடுவதற்கும் இடையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் ... நாடு டீஃபால்ட் செய்வதை அனுமதிக்க முடியாது," என்று ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை உருவாக்கும் யோசனையை வெளியிட்ட வில்லமேட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஹன் க்ரே கூறுகிறார்.

1 டிரில்லியன் டாலர் நாணயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யோசனை எப்படி வந்தது?

உண்மையில் டீஃபால்ட் நிலையைத் தவிர்க்க ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை வெளியிடுவதற்கான யோசனை முதன்முதலில் 2010 இல் கார்லோஸ் மூச்சா என்ற அட்லாண்டா வழக்கறிஞர் மூலம் ஒரு வலைப்பதிவில் அளிக்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டின் நாணயச் சட்டத்தின் கீழ், பிளாட்டினம் நாணயங்களை அச்சிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை கார்லோஸ் அறிந்தார்.

"சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை அச்சிட காங்கிரஸ் ஏற்கனவே கருவூலத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது," என்று அவர் தனது கட்டுரையில் எழுதினார்,

அவர் முன்வைத்த யோசனை அதிபர் மாளிகையிலும், கேபிடல் ஹில்லிலும் கூட விவாதிக்கப்படும் என்பது மூச்சாவுக்குத் தெரியாது.

”கார்லோஸின் திட்டம் உண்மையில் வேலை செய்யக்கூடியது,” என்று சில நாட்களுக்குப் பிறகு முன்னாள் மின்ட் இயக்குனர் ஃபிலிப் டீலிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.

இந்த விஷயம் வைரலானது மற்றும் வலைப்பதிவின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் பராக் ஒபாமாவின் முதல் பதவிக்காலத்தில் கடன் நெருக்கடி வரும் வரை அதாவது 2011 ஆம் ஆண்டு வரை இது பொது விவாதத்தின் அங்கமாக மாறவில்லை.

அந்த நாட்களில் 7,000 கையெழுத்துகளுடன் ஒரு கடிதம் வெளியிடப்பட்டது, அதில் நோபல் பரிசு பெற்ற பால் க்ரூக்மேன் மற்றும் ஃபிலிப் டீல் போன்ற முக்கிய பொருளாதார நிபுணர்கள் இதை ஆதரித்தனர்.

#MintTheCoin என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒரு பிரச்சாரம் கூட தொடங்கப்பட்டது. ஆனால், அப்போது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதால் இந்த விஷயம் முன்னே செல்லவில்லை.

1 டிரில்லியன் டாலர் நாணயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் கடன் வரம்பை அதிகரிப்பதற்கான நெருக்கடியில், ஜோ பைடனின் அரசு அத்தகைய மாற்று வழி எதையும் பரிசீலிக்க மறுத்துவிட்டது.

நிதியமைச்சர் ஜேனட் யெலன் சில நாட்களுக்கு முன்பு, "இது ஒரு ஏமாற்று வேலை என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை வெளியிட முன்மொழிவது குடியரசுக் கட்சியினருடனான பேச்சுவார்த்தையில் ஜனநாயகக் கட்சியின் அம்புக்கூட்டில் மேலும் ஒரு அம்பு சேரக்கூடும் என்று சில நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

கடன் வரம்பை அதிகரிப்பதற்கான ஜோ பைடனின் கோரிக்கையை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஜூன் 1 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டவில்லையென்றால் அமெரிக்கா பேய்மெண்டுகளை செய்யமுடியாமல் போகும்.

https://www.bbc.com/tamil/articles/c3gp3v01230o

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடக்கம்😀, சில பெருளியல் நிபுணர்களை காணவில்லையே🤑, காலச்சக்கரம்🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் உச்சவரம்பை இடைநிறுத்த அமெரிக்க செனட்டும் அனுமதி: வங்குரோத்து அபாயத்திலிருந்து தப்பியது அமெரிக்கா

Published By: SETHU

02 JUN, 2023 | 04:32 PM
image
 

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவத்றகு அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியன அங்கீகாரம் அளித்துள்ளன. இதனால் முதல் தடவையாக வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து அமெரிக்கா தப்பியுள்ளது.

கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசுக்கு அனுமதிக்கப்பட்ட 31.38 ட்ரில்லியன் டொலர் கடன் அளவை கடந்த ஜனவரியிலேயே அமெரிக்க அரசு நெருங்கிவிட்டது. அதன்பின் அமெரிக்க அரசு நிதி நெருக்கடிக்களை எதிர்கொண்டு வந்தது. செலவுகளுக்குப் பணம் இல்லாமல் வங்குரோத்து அடையும் நிலையை அமெரிக்க மத்திய அரசு எதிர்கொண்டுவந்தது. 

இந்த உச்சவரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெறப்பட வேண்டும். 

அமெரிக்க வரலாற்றில் நூற்றுக்கும் அதிகமான தடவைகள் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில்  பெரும்பான்மைப் பலம் கொண்ட கட்சியும் வெவ்வேறாக இருக்கும் நிலையில் இழுபறிகள் ஏற்படுவதுண்டு.

தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. 

இதனால், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கர்த்திக்கும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. சில நிபந்தனைகளுடன் கடன் உச்சவரம்பை நீக்குவத்றகு மெக்கர்த்தி இணக்கம் தெரிவித்தார். 

எனினும், இதற்கான சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக குடியரசுக் கட்சியின் கடும்போக்கு உறுப்பினர்கள் சிலர் எச்சரித்திருந்தனர்.

ஆனால், இச்சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் 314: 117 விகிதத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.  

அதேவேளை ஜனநாயகக் கட்சியினரை பெரும்பான்மையாகக் கொண்ட செனட் சபையில் இச்சட்டமூலம் வியாழக்கிழமை  63: 36 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்ப‍டி 2025  ஜனவரி 1 ஆம் திகதி வரை கடன் உச்சவரம்பு இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை அமெரிக்கர்களுக்கு பெரும் வெற்றி என வர்ணித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், இச்சட்டமூலத்தில் இயன்றவரை விரைவாக தான் கையெழுத்திடவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156780

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.