Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரக்ஞானந்தா: 'சதுரங்க ராஜா' பட்டத்தை நெருங்கும் 'தமிழ்நாட்டு பையன்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரக்ஞானந்தா அசத்தல்

பட மூலாதாரம்,FIDE

21 ஆகஸ்ட் 2023
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். அரையிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை டைபிரேக்கர் ஆட்டத்தில் அவர் வீழ்த்தினார். பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதுகிறார்.

அரையிறுதியில் பிரக்ஞானந்தா அசத்தல்

பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.

நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

 

இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் ரேபிட் முறையில் இன்று நடைபெற்றது. ரேபிட் செஸ் போட்டியில் வல்லவரான பிரக்ஞானந்தாவுக்கு இது சாதகமாக அமைந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

பிரக்ஞானந்தா அசத்தல்

பட மூலாதாரம்,FIDE

இறுதிப்போட்டியில் கார்ல்சன் vs பிரக்ஞானந்தா

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபா சோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2ம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இறுதி போட்டியில் பிடே உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்திற்காக முதல் நிலை வீரரான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடுவார்.

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் உள்பட கார்ல்சனை 3 முறை பிரக்ஞானந்தா தோற்கடித்துள்ளார். குறிப்பாக, ரேபிட் செஸ் போட்டியில் அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால், பிடே உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா வெல்வார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரக்ஞானந்தா அசத்தல்

பட மூலாதாரம்,RAMESHBABU/BBC

செஸ் உலகை கலக்கும் பிரக்ஞானந்தா யார்?

நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான முகத்தோற்றமும் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தாவின் சாதனையை இரண்டு வழிகளில் பார்க்கலாம், ஒருபுறம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேகமாக முத்திரை பதிக்கிறான். இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர். தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இது ஒரு அம்சம்.

பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவரது நான்கு வயது மூத்த சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்பதுதான்.

அதாவது பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்கான வசதி, வாய்ப்புகளை அவரது சகோதரி வீட்டிலேயே செய்து கொடுத்திருக்கிறார். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்களின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் செஸ் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

செஸ் உலக உணர்வு

திறமை மற்றும் தன்னம்பிக்கை, இவை இரண்டும் பிரக்ஞானந்தாவிடம் காணலாம். தூரத்தில் இருந்து பார்த்தால், அவரது கண்ணோட்டம் ஒரு சாம்பியனாகத் தெரியவில்லை, வெறுமனே எண்ணெய்யில் அழகுபடுத்தப்பட்ட முடி போல அவர் ஜொலிக்கிறார். ஆனால், நிஜத்தில் எளிமையாகவும் இயல்பான மாநிறத்துடன் நம்பிக்கை நிறைந்தவராக இருக்கிறார். செஸ் உலகின் மிகப்பெரிய நாயகனாக இப்போது இவர் மீதான பார்வை விரிந்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செஸ் உலகம் பிரக்ஞானந்தா பற்றி அறியத் தொடங்கியபோது, அவர் 12 வயது மற்றும் 10 மாதங்களை அடைந்திருந்தார். அதற்கு முன்பு எந்த இந்தியனும் செய்ய வெளிப்படுத்தாத ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.

பிரக்ஞானந்தாவுக்கும் அவரது அக்காவுக்கும் இடையிலான வயது வித்தியாசம் நான்கு வருடங்கள். ஆனாலும் அந்த வேறுபாடுகளைக் கடந்து சதுரங்கத்தின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் சகோதரனுக்கு கற்றுக் கொடுத்தார் அவரது சகோதரி. விரைவில் ஒரே வீட்டிலேயே இருவரும் பரஸ்பர போட்டி விளையாட்டுகளை ஆடத் தொடங்கினர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியேயேயும் திறமைகளை வெளிப்படுத்தினர். அதன் விளைவாக வீட்டில் வெற்றிக் கோப்பைகள் குவிந்தன.

பிரக்ஞானந்தா முதலில் 2013இல் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினார், பின்னர் இரண்டு ஆண்டுகளில் 15 வயதுக்குட்பட்டோருக்கான உலக பட்டத்தை வென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம். சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஆவது எவ்வளவு சவாலானது என்பதை நீங்களே அளவிடலாம். அது ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதற்கு நிகரானதாக சக வீரர்கள் ஒப்பிடுகிறார்கள்.

பிரக்ஞானந்தா அசத்தல்

பட மூலாதாரம்,RB RAMESH/BBC

இளம் வயது, பெரிய சாதனைகள்

இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் ஆனதும், சூசன் நைனன் பிரபல விளையாட்டு இணையதளமான ஈஎஸ்பிஎன்-இல் "ராஜாவாக இருக்கக்கூடிய ஒரு பையன்" என்று ஒரு கட்டுரை எழுதினார்.

இந்த வீரரின் பெயரில் தாங்கியுள்ள எழுத்துப்பிழை, செஸ் உலகமே கலங்கி நிற்கும் வகையில் உள்ளது என்று அந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிப்படையாக, ஒரு பெயர் அழைக்கப்படுவதை வருணித்த ஆசிரியரின் குறிப்பு, அதிர்ச்சியூட்டும் தரத்தை நோக்கியதாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cjrzv4qwlk5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரக்ஞானந்தாவை வீழ்த்தி இந்தியர்களின் ஆசையை நிராசை ஆக்கியவர் - யார் இந்த கார்ல்சன்?

பிரக்ஞானந்தாவை வீழ்த்தி இந்தியர்களின் ஆசையை நிராசை ஆக்கியவர் - யார் இந்த கார்ல்சன்?

பட மூலாதாரம்,FEDI/STEV BONHAGE

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தாவை வெற்றி கொண்டுள்ளார்.

முதல் சுற்றுப் போட்டி டிராவில் முடிவடைந்தைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்று இந்திய செஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி, இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தாவை வெற்றி கொண்டுள்ளார் மேக்னஸ் கார்ல்சன்.

செஸ் உலகின் முடிசூடா மன்னன்

நார்வே நாட்டைச் சேர்ந்த 32 வயதான கார்ல்சன், 2011இல் முதன் முறையாக செஸ் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் இடத்தைக் கைப்பற்றினார்.

தனது 20 வயதில் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்த அவர், மே மாதம் 2023 தரவரிசை நிலவரப்படி, நம்பர் ஒன் இடத்தை இன்னும் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை.

அதாவது கிட்டத்தட்ட12 ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து, செஸ் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்ல்சன்.

 

ஐந்து முறை சாம்பியன்

பிரக்ஞானந்தாவை வீழ்த்தி இந்தியர்களின் ஆசையை நிராசை ஆக்கியவர் - யார் இந்த கார்ல்சன்?

பட மூலாதாரம்,FEDI

கடந்த 2013இல் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அவர், 2014, 2016, 2018 மற்றும் 2021 என மொத்தம் ஐந்த முறை உலகக் கோப்பையை முத்தமிட்ட சாதனை நாயகனாக திகழ்கிறார்.

அத்துடன், 2020 அக்டோபர் வரை, தொடர்ந்து 125 போட்டிகளில் தோற்காத வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகவும் விளங்குகிறார். குறிப்பிட்ட ஆண்டு வரை, 42 போட்டிகளில் வெற்றிகளைக் குவித்ததுடன், 83 ஆட்டங்களை சமனும் செய்திருந்தார் கார்ல்சன்.

அவரது இந்த சாதனைப் பயணம் தொடர்ந்தால், செஸ் உலகில் யாரும் நெருங்க முடியாத சாதனைகளைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆரம்பக்கால செஸ் வாழ்க்கை

பிரக்ஞானந்தாவை வீழ்த்தி இந்தியர்களின் ஆசையை நிராசை ஆக்கியவர் - யார் இந்த கார்ல்சன்?

பட மூலாதாரம்,FIDE/STEV BONHAGE

கார்ல்சனுக்கு அவரது ஐந்தாவது வயதில் அவரின் தந்தை ஹென்ரிக் கார்ல்சன் செஸ் போட்டியை அறிமுகப்படுத்தினார்.

அதற்கு முன் இரண்டு வயதிலேயே, கார்ல்சனுக்கு இருந்த பொது அறிவு, அபாரமான நினைவாற்றல், புதிர்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றைக் கண்டு அவரின் தந்தை வியந்தார். இந்த திறமைகளே அவரை செஸ் போட்டிக்குக் கொண்டுவர அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

ஆரம்பத்தில் தனது மூத்த சகோதரியை வெற்றி கொல்வதே கார்ல்சனின் அதிகபட்ச இலக்காக இருந்தது. ஆனால் சிறிது காலத்திற்குப் பின்னர், தனது தந்தையின் அறிவுறுத்தலின்படி, ஆட்டத்தை வேறுவிதமாக மாற்றிக் கொண்டார் கார்ல்சன்.

தனக்குத்தானே ஆடிக் கொள்வது, செஸ் புத்தகங்களில் அளிக்கப்பட்டுள்ள யோசனைகளின்படி விளையாடுவது எனப் பல்வேறு யுத்திகளைக் கையாண்டு தனது திறனை வளர்த்துக் கொண்டார்.

 
மேக்னஸ் கார்ல்சன்

பட மூலாதாரம்,FEDI

கார்ல்சனை செதுக்கியவர்கள்

கார்ல்சனுக்கு முன், ஆறு முறை டேனிஷ் சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பென்ட் லார்சனின் Find The Plan தான் கார்ல்சன் கற்றுத் தேர்ந்த முதல் புத்தகம்.

இந்தப் புத்தகத்துடன் நார்வேயின் சிறந்த வீரரும், ஏழு முறை தேசிய சாம்பியனுமான ஜி.எம். சிமென் அக்டெஸ்டீன், கார்ல்சன் ஜூனியராக இருந்தபோது பயிற்சியாளராக இருந்தார்.

நார்வேயின் முன்னாள் ஜூனியர் சாம்பியனான டார்ப்ஜோர்ன் ரிங்டால் ஹேன்சனுடன் இணைந்து, கார்ல்சனை திறமைமிக்க இளம் வீரராக வளர்த்தெடுத்தார் அக்டெஸ்டீன்.

இவரது தீவிர பயிற்சியின் பயனாக, 2000ஆம் ஆண்டில், செஸ் தரவரிசையில் கார்ல்சனின் மதிப்பீடு 1000 புள்ளிகளுக்கு மேல் (904 முதல் 1,907 வரை) அதிகரித்தது.

கார்ல்சனின் அதிவேக ஆட்ட திறன் பார்வையாளர்களை மட்டுமின்றி, சக போட்டியாளர்களையும் சமயத்தில் மிரள வைத்தது.

ஜூலை 2000இல், நார்வேயில் நடைபெற்ற 11 வயதினருக்கு உட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், 11க்கு 10 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றார் அப்போது ஒன்பது வயது கார்ல்சன்.

 

உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்

மேக்னஸ் கார்ல்சன்

பட மூலாதாரம்,FEDI

கடந்த 1995 முதல் 2004 வரை, ஜூனியர் நிலையில் கார்ல்சன் படைத்த சாதனைகள், அவரை கிராண்ட் மாஸ்டர் நிலைக்கு அழைத்துச் சென்றன.

விஜ்க் ஆன் ஜீயிஸ் நடைபெற்ற எலைட் கோரஸ் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கான தனது வேட்டையைத் தொடங்கினார்.

இந்தத் தொடரில் அவர் பெற்ற வெற்றி, கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான போட்டிகளுக்குள் நுழைய வழிவகுத்துக் கொடுத்தது. கூடவே, அவருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்பான்சரும் கிடைத்தது.

டாப் டென் வீரர்

எலைட் கோரஸ் போட்டியைத் தொடர்ந்து, ஐஸ்லாந்தில் நடைபெற்ற பிளிட்ஸ் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான கார்போவை தோற்கடித்து, செஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் உலக அளவில் சிறந்த 10 வீரர்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

 
பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,FEDI

இந்தப் போட்டியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ரேபிட் நாக் அவுட் போட்டிகளில், அப்போது உலகின் நம்பர் வீரரான காஸ்பரோவை 13 வயதில் எதிர்கொண்டார்.

கார்ல்சனிடம் மோதிய முதல் போட்டியில் காஸ்பரோவால் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. இரண்டாவது போட்டியில் காஸ்பரோவிடம் தோல்வியைத் தழுவினாலும், உலக செஸ் அரங்கில் கார்ல்சனின் கிராப் கிடுகிடுவென ஏறியது.

கார்போ, காஸ்பரோ உடனான போட்டிகளைத் தொடர்ந்து கார்ல்சன் ஆடிய மூன்றாவது போட்டி, அவரை உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனைக்கு இட்டுச் சென்றது.

செர்ஜி கர்ஜாகினுக்கு பிறகு, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை கார்ல்சன் படைத்தார்.

கடந்த 2004இல் தனது 13 ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன அவர், 2011இல் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற இடத்தை பிடித்தார். 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.

https://www.bbc.com/tamil/articles/cpw8x85y6g1o

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி விட்ட போட்டி.......என்றாலும் இருவருக்கும் பாராட்டுக்கள்......!  👍

நன்றி ஏராளன் .......!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பிராக்குக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரக்ஞானந்தா அசத்தல்

எப்போதும் வீபூதி கடாட்சம்.
மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரக்ஞானந்தா: மாபெரும் வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் எளிய மனிதர்கள்

பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலக கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவி வெள்ளி பதக்கத்தை வென்ற தருணம் மிகவும் கனமானது.

சென்னை பாடி பகுதியில் அவரது வீட்டு கதவு உள்புறத்தில் தாளிட்டிருந்தது. போட்டி முடிவுகள் வெளியாகி சுமார் 15 நிமிடங்கள், பிபிசி தமிழ் உள்பட கூட்டம் கூட்டமாக ஊடகத்தினர் குவிந்திருந்தனர். பிரக்ஞானந்தாவின் குடும்பத்தினரின் வெளிப்பாடுகளை அறிய காத்திருந்தனர்.

சுற்றிலும் மௌனம். ஒரு சிலர் கதவை தட்டி முயற்சித்தனர். பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவின் அலைபேசி எடுக்கப்படவில்லை. 20 நிமிடங்கள் கழித்து, பிரக்ஞானந்தாவின் தந்தை மற்றும் சகோதரி வைஷாலி கதவை திறந்தனர்.

இருவர் முகத்திலும் பளிச் புன்னகை. ''பிரக் குட்டியின் அழைப்புக்காக காத்திருந்தோம். அதனால்தான் நாங்கள் திறக்கவில்லை. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எங்கள் குட்டி கடுமையான சவாலாக இருந்தான். வெள்ளி பதக்கத்தை அள்ளி வந்திருக்கிறான்,''என்றார் சகோதரி வைஷாலி.

 
பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,FIDE

வைஷாலியும் செஸ் வீரர் மற்றும் பிரக்ஞானந்தா பங்குபெற்ற அதே பிடே உலக கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவில் இடம்பெற்றிருந்தார். மூன்று சுற்றுகள் வரை போட்டியிட்டு பின்னர் வெளியேறியவர் என்பதால், பிரக்ஞானந்தாவை நகர்வுகளை நுணுக்கமாக கண்காணித்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்.

''தொடர்ந்து 20 நாட்களாக உலக கோப்பை போட்டியில் பிரக் விளையாடிக் கொண்டிருந்தான். உலகக்கோப்பை போட்டிக்கு வருவதற்கு முன்னர் ஹங்கேரியில் விளையாடினான். அதாவது ஒரு மாதமாக தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டிருந்தான். சிறு அயர்வு அவனுக்கு ஏற்பட்டிருக்கும். இந்த தோல்வி அவனை மேலும் உற்சாகப்படுத்தும் என்றுதான் நம்புகிறோம். அவன் செஸ் விளையாட்டில் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. செஸ் விளையாட்டில் உலக அளவில் தன்னுடைய முதல் நகர்வை அவன் தொடங்கியிருக்கிறான்,'' என்றார் வைஷாலி.

தொடர்ந்து பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு பேசுகையில், எந்தவித பதற்றமும் அவரிடம் வெளிப்படவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். செஸ் விளையாட்டைப் பற்றி ஆரம்பத்தில் எதுவும் தெரியாது என்றாலும், வைஷாலியும், பிரக்ஞானந்தாவும் தொடர்ந்து செஸ் போட்டிகளில் தேசிய அளவில் மற்றும் உலக அளவில் பங்குபெற தொடங்கியதால், ரமேஷ் பாபு செஸ் ரசிகர் ஆகியிருந்தார்.

 
பிரக்ஞானந்தா
 
படக்குறிப்பு,

வைஷாலியும் செஸ் வீரர் மற்றும் பிரக்ஞானந்தா பங்குபெற்ற அதே பிடே உலக கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவில் இடம்பெற்றிருந்தார்.

போட்டியின் இறுதிக் கட்டம் பற்றி பேசிய அவர், ''கடைசி இரண்டு நாட்களில் போட்டி பல முறை ட்ரா ஆனது. மேக்னஸ் கார்ல்சன் இறுதிப் போட்டிக்கு முன்னர் பேசியபோது, பிரக்ஞானந்தாவுடன் விளையாடுவதால், பொறுத்திருந்துதான் விளையாட போவதாக பேசியிருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து செஸ் உலகக்கோப்பை போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பங்குபெற்ற பின்னர், தற்போது எங்கள் பிரக்ஞானந்தா அதே இடத்திற்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி,''என்றார் ரமேஷ் பாபு.

பிரக்ஞானந்தா தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வார் என்று கேட்டபோது, மெலிதான புன்னகையை அவர் உதிர்த்தார். ''பிரக் எப்போதும் செஸ் விளையாடுவதை விருப்பத்துடன் செய்வான். வெற்றி, தோல்வி என்பது அவனை பெரிதும் பாதித்ததில்லை. இதுவரை நாங்கள் அவனை அப்படிதான் பார்த்திருக்கிறோம். விளையாட்டில் அடுத்த முறை தன்னை எப்படி மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவன் இருந்திருக்கிறான். அதனால், இதனை பாடமாகதான் அவன் எடுத்துக்கொள்வான்,''என்கிறார் ரமேஷ் பாபு.

பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் என இருவரும் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு உருவபொம்பையை காண்பித்தார் தந்தை ரமேஷ் பாபு. ''இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவருமே செஸ் விளையாட்டின் மீது தீராத விருப்பம் கொண்டவர்கள். அதனால், ஒருவரை ஒருவர் வெற்றிகொண்டார் என்பதைவிட, செஸ் விளையாட்டு இருவரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்,''என்கிறார் அவர்.

சிறு வயதில் வைஷாலி டிவி பார்ப்பதை குறைப்பதற்காக செஸ் வகுப்பில் சேர்த்திருந்தார். வைஷாலியை பார்த்து, விளையாட தொடங்கிய பிரக்ஞானந்தா, தற்போது சர்வதேச அரங்கில் போட்டியில் பங்குபெறும் நிலைக்கு சென்றுள்ளது தனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார் ரமேஷ் பாபு.

 

 
பிரக்ஞானந்தா
 
படக்குறிப்பு,

பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் என இருவரும் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு உருவபொம்பையை காண்பித்தார் தந்தை ரமேஷ் பாபு.

கூட்டுறவு வங்கி அதிகாரியான ரமேஷ் பாபு தனது சொந்தங்கள், நண்பர்கள், ஊடகத்தினரின் அழைப்புகள் என தொடர்ந்து வந்த அலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் சோர்ந்துபோகவில்லை.

பிரக்ஞானந்தாவின் எளிமையான வீட்டில், இரண்டு அறைகள், ஒரு சமையல் அறை மற்றும் ஒரு சிறிய ஹால். அந்த ஹாலில் பாதி இடத்தை கோப்பைகள் அடங்கிய ஷோகேஸ் அடைத்துக்கொண்டிருந்தது. வைஷாலியும், பிரக்ஞானந்தாவும் மாறி மாறி பெற்ற பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் எல்லா ரேக்களிலும் தேங்கி, வீட்டை நிறைந்திருந்தன.

அடுத்ததாக பிரக்ஞானந்தாவின் இல்லத்தில் மிகவும் நெகிழ்ச்சியான மனுஷியாக இருந்தவர் பிரக்ஞானந்தாவின் பாட்டி மதுரவள்ளி. ''என் பேரனுக்காக எத்தனையோ பேர் வாழ்த்துகள் சொல்கிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் என் பேரனுக்காக பிரார்த்தனை செய்தார்கள் என்று மொபைல் போனில் காட்டினார்கள். எனக்கு ரொம்ப சந்தோசம். அவனுக்கு நடந்தது எல்லாமே நன்மைதான். எங்க குழந்தைகளை நல்ல வளர்த்திட்டோம்னு நிறைவா இருக்கு,''என கண்ணீர் பொங்க பேசினார்.

பிரக்ஞானந்தா இந்தியாவில் இருந்து கிளம்பியது முதல் இறுதிச்சுற்றில் பங்குபெற்றதுவரை அவருடன் கூடவே இருந்தது அவரது தாயார் நாகலட்சுமி. சமூகவலைத்தளங்களில் அவரது படங்கள் வைரலாக பரவின. சேலை கட்டிய ஒடிசலான தோற்றம் கொண்ட அந்த பெண்மணி, சுவற்றில் தன்னை பதித்துக்கொண்டு நிற்கிறார். இறுதி போட்டியில் முடிவு தெரிந்ததும், அவர் தனது மகனை அரவணைத்துக்கொண்டார்.

 
பிரக்ஞானந்தா
 
படக்குறிப்பு,

"எங்க குழந்தைகளை நல்ல வளர்த்திட்டோம்னு நிறைவா இருக்கு,''என கண்ணீர் பொங்கினார் பாட்டி மதுரவள்ளி.

அம்மா நாகலட்சுமி பற்றி பேசிய வைஷாலி, ''நானும், பிரக்கும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் அம்மா கடுமையான உழைப்பாளி. நாங்கள் போட்டியில் பங்குபெற, ஊட்டச்சத்தான உணவு தேவை. நாங்கள் கடல் கடந்து செல்லும் தேசத்தில் என்ன கிடைக்கும், சரியான உணவு கிடைக்குமா என்று யோசித்ததில்லை. எங்கள் வீட்டில் சாப்பிடுவது போல, பல பொருட்களை தயார் செய்து, எங்களை அம்மா கவனித்து கொள்வார். அப்பா போலியோ பாதிப்பால் முடங்கவில்லை. எங்கள் பயணத்திற்காக விமான டிக்கட், எந்த விடுதியில் தங்கினால், குறைந்தபட்ச கட்டணம் அதேநேரம் எங்கு பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று தேடிதேடி பதிவு செய்வார். நாங்கள் விளையாடுவதற்கு எங்கள் பெற்றோரின் உறுதிதான் காரணம்,''என்கிறார் வைஷாலி.

நாம் பிரக்ஞானந்தாவின் வீட்டில் செலவிட்ட நேரத்தில், ரமேஷ் பாபு மற்றும் வைஷாலியிடம் பலர் நேரடியாக வந்து வாழ்த்து சொல்வதை பார்த்தோம். அண்டை வீட்டார் பலரும் குழந்தைகளுடன் வந்து வாழ்த்திவிட்டுப் போனார்கள்.

பிரக்ஞானந்தாவின் வீட்டு ஹாலில் பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் அடிக்கடி விளையாடும் செஸ் போர்டு இருந்தது. உலகக்கோப்பை போட்டி முடிந்து, ஜெர்மனியில் நடைபெறும் மற்றொரு சர்வதேச ரேபிட் போட்டியில் பங்குபெற பிரக்ஞானந்தா கிளம்பியிருக்கிறார். ஆனால் அவர் ஊர் திரும்பியதும், பழைய செஸ் போர்டில் அவருடன் விளையாட காத்திருக்கிறார் வைஷாலி.

https://www.bbc.com/tamil/articles/c148qlnnl25o

  • கருத்துக்கள உறவுகள்

ம்......மிகவும் எளிமையான ஆனால் வைரம் போன்ற உறுதியுள்ள குடும்பம்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதில் இறுதிப்போட்டிக்கு வந்ததே மிகப்பெரிய பெருமை தான்.  பெற்ற அனுபவத்தை  வைத்து அடுத்த உலக கோப்பையை வெல்வார் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான  ‘ஆனந்த் மஹிந்திரா‘ உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்ற ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது” குழந்தைகளுக்கு வீடியோ கேம்களை கொடுக்காமல், மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் பெற்றோர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.

உங்களைப் போன்ற பலர் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு தார் (Thar) பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு வேறு யோசனை இருக்கிறது.

பிரக்ஞானந்தாவின் பெற்றோர், நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு எக்ஸ்யூவி 4 ஓஇவியை பரிசளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் ”இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில்  ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த  நோர்வே நாட்டைச் சேர்ந்த  மேக்னஸ் கார்ல்சனிடம்    பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1347524

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை சந்தித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா

JegadeeshAug 31, 2023 21:45PM
ஷேர் செய்ய : 
Pragnananda met PM Modi

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் இன்று (ஆகஸ்ட் 31) டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த வாரம் அஜர்பைஜன் தலைநகர் பாகு நகரில் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரரும், கிராண்ட்மாஸ்டருமான பிரக்ஞானந்தா கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி போட்டியில் அவர் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்டு தோல்வியடைந்தார். இதன்மூலம் பிரக்ஞானந்தா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

WhatsApp-Image-2023-08-31-at-20.57.10.jp

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி உள்ள பிரக்ஞானந்தாவுக்கு நேற்று (ஆகஸ்ட் 30) சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் உலக கோப்பை போட்டியில் வென்ற வெள்ளி பதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சத்தை பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

WhatsApp-Image-2023-08-31-at-20.57.56.jp

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று இரவு 7 மணிக்கு மிகவும் சிறப்பான பார்வையாளர்கள் என்னை சந்தித்தனர்.

Image

இந்திய இளைஞர்களுக்கு உதாரணமாக திகழும் பிரக்ஞானந்தாவின் ஆர்வமும், விடாமுயற்சியும் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகவும் பெருமையான தருணமாக உள்ளது. என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்” என்று கூறியுள்ளார்.


 

https://minnambalam.com/sports/tamil-nadu-chess-player-pragnananda-along-with-his-parents-met-and-greeted-prime-minister-modi-in-delhi-today-august-31/

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.