Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் டெங்கு மரணங்கள்; தடுப்பு மருந்து கண்டறிவதில் சிக்கல் நீடிப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தொடரும் டெங்கு மரணங்கள்
படக்குறிப்பு,

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டெங்கு வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அதோடு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது.

 

இந்த எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் , மற்றொரு புறம் உலகளவில், டெங்குவிற்கான தடுப்பூசி கண்டறியும் முயற்சிகள் பலவும் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளதால், மரணங்களை தடுப்பதும் சவாலாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசு ஏடிஸ் எஜிப்டி(Aedes aegypti) என்று அறியப்படுகிறது. இந்த கொசு மாசுபட்ட நீரைவிட, தேங்கியுள்ள நன்னீரில்தான் அதிகம் காணப்படுகிறது. அதனால், தற்போது கொசு ஒழிப்பு, தற்காப்பு முயற்சிகள் மட்டுமே டெங்குவில் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்கான சாத்தியமாக இருப்பதாக இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்திவருகிறது.

 

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் உள்ள சவால்கள் என்ன என்றும், இதுவரை கண்டறியப்பட்ட மருந்துகள் ஏன் தோல்வி அடைந்தன என்றும் நிபுணர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள முற்பட்டோம். ஆய்விதழ்களில் டெங்கு தடுப்பு ஆய்வுகள் குறித்து வெளியான தகவல்களையும் சேகரித்தோம்.

 
தொடரும் டெங்கு மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெங்கு வைரஸ் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திவந்தாலும், தடுப்பு மருந்துகளைக் கண்டறிவதில் சவால்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நான்கு விதமான டெங்கு வைரஸ்கள்

முதலில், கொரோனா காலத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதனை சந்தித்தோம். கொரோனா வைரஸை விட டெங்கு வைரஸ் அபாயகரமானது என்ற கருத்தை முன்வைக்கிறார் இவர்.

 

டெங்குவில் இருந்து தப்பித்துக்கொள்ள பாதுகாப்பான தடுப்பூசி ஒன்று இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை என்பதால்தான் அது மிகவும் ஆபத்தானது என்று அவர் குறிப்பிடுவதற்கு காரணம்.

 

''டெங்கு வைரஸை பொறுத்தவரை, டெங்கு1,2,3,4 என நான்கு விதமான வைரஸ்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நான்கில் ஒரு வைரஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறன. முதல் வகை டெங்குவிற்கான தடுப்பூசி மற்றொரு வகை டெங்கு தாக்குவதை தடுப்பதில்லை."

"அதேபோல, நான்கு வைரஸ்களையும் சமாளிப்பதற்கான பாதுகாப்பான ஒரு தடுப்பூசி இன்னும் வெளியாகவில்லை. ஒரே ஆண்டில்கூட, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டெங்கு வைரஸ் தாக்கம் இருக்கும் என்பதால், உலகளவில் ஒரே தடுப்பூசி கண்டறிவது என்பது தற்போதும் ஒரு சோதனையாக இருக்கிறது,''என்கிறார் சௌமியா.

 
டெங்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நான்கு வகை வைரஸ்களை, ஒரே ஊசியால் சமாளிக்கமுடியவில்லை என்பதால்தான், முதன்முதலில் டெங்குவிற்கு 2015ல் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தோல்வி அடைந்தது. அமெரிக்காவில் தடுப்பு மருந்துகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நிபுணர் கே.முத்துமணி, இதனை உறுதிப்படுத்துகிறார். இவர் ஓர் உயிரி மருந்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வு அதிகாரியாக செயல்படுகிறார்.

 
தொடரும் டெங்கு மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெங்கு பாதிப்புக்கு எதிராக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் போதிய பயன்களை அளிக்கவில்லை.

சர்ச்சையில் முடிந்த முதல் தடுப்பூசி

சனோஃபி பாஸ்டர்(Sanofi Pasteur) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது. 2015ல் மெக்சிகோவில் இந்த ஊசி மருத்துவ சோதனை அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. இந்த மருந்தை, 9-45 வயதில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்றும் சனோஃபி பாஸ்டர் நிறுவனம் சொல்லியிருந்தது.

 

இந்த தடுப்பு மருந்து எப்படி பயன்பாட்டில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது என்பதை விவரிக்கிறார் முத்துமணி.

 

''டெங்வாக்ஸியா தடுப்பூசி 2015 முதல் இரண்டு ஆண்டுகளில் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் சில மாதங்களில், இந்த தடுப்பூசியின் செயல்திறன் (efficacy) குறித்த கேள்விகள் எழுந்தன.

 
தொடரும் டெங்கு மரணங்கள்
படக்குறிப்பு,

நான்கு விதமான டெங்கு வைரஸ்களையும் எதிர்க்குமளவுக்கு எந்த மருந்தும் வேலை செய்யவில்லை என்று கூறுகிறார் உயிரி மருந்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வு அதிகாரியான முத்துமணி.

அதாவது, நான்கு வகையான டெங்கு வைரஸ் பாதிப்புகளில், ஒரு சில நாடுகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தாக்கம் பதிவான நிலையில், இந்த தடுப்பூசி சரியாக வேலைசெய்யவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதோடு, இளவயது குழந்தைகள், முதியவர்களின் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை என்பதால், விரைவில் இது கைவிடப்பட்டது,''என குறிப்பிடுகிறார்.

 

பிலிப்பைன்ஸ் நாட்டில், 2017ல் டெங்வாக்ஸியா பள்ளிக்குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது. அந்த சமயத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில குழந்தைகளுக்கு சில வாரங்கள் கழித்து, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டன.

 

அதே ஆண்டில், வெவ்வேறு மாதங்களில், சுமார் 130 குழந்தைகள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்தது. இதனைஅடுத்து, பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடங்கிய இந்த தடுப்பூசி சர்ச்சை, பிற நாடுகளிலும் விவாதமாக மாறியது.

 

அதனால், தாய்லாந்து, பிரேசில், எல் சால்வடார், பராகுவே, குவாத்தமாலா, பெரு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் படிப்படியாக கைவிடப்பட்டது என சயின்ஸ் ஆய்விதழ் உறுதிப்படுத்துகிறது.

 
தொடரும் டெங்கு மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெங்கு வைரஸ்கள் தனித்துவம் வாய்ந்தவை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெங்கு வைரஸ்களின் தனித்தன்மை என்ன?

அடுத்ததாக, மற்ற வைரஸ் தாக்கத்தில் இருந்து டெங்குவின் தாக்கம் மிகவும் வித்தியாசமானது என்றும், அதன் தாக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்.

 

அதாவது, முதல் முறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டு வரும் ஒரு நபர், அடுத்தமுறை பாதிக்கப்பட்டால், மிகவும் மோசமான விளைவுகளை எதிர்கொள்வார் என்றும் அந்த பாதிப்பு மரணம் வரை கொண்டுசெல்லும் என்றும் சொல்கிறார் .

 

''மற்ற வகை காய்ச்சல் போல, முதல்முறை தாக்கத்தை சமாளித்துவிட்டால், அடுத்தமுறை காய்ச்சல் வந்தால், உடலில் எதிர்ப்புசக்தி அதிகரித்திருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கும். ஆனால் டெங்குவை பொறுத்தவரை, முதல்முறையைவிட, அடுத்தமுறை தாக்கம் உயிர்பறிக்கும் தாக்கமாக இருக்கும். ஏனெனில், முதல்முறை தாக்கிய வைரஸ் வகை ஒன்றாகவும், இரண்டாவது முறை பாதிக்கப்படும்போது அது மற்ற வகை வைரஸின் தாக்கமாக இருக்கும் வாய்ப்புகள்தான் அதிகம். அதனால், உடலில் ஏற்பட்ட எதிர்ப்பு சக்தி இரண்டாவது முறை பாதிப்பின்போது உதவுவது சந்தேகம்தான்,'' என தெளிவுபடுத்துகிறார்.

 

உலகளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தடுப்பூசி கண்டறியப்பட்டு சமாளிக்கப்பட்ட கொரோனா வைரஸில் கூட பல திரிபுகள் இருந்தன. ஆனால், டெங்குவில் உள்ள நான்கு வகை வைரஸ்கள் ஏன் அவ்வளவு கொடியவையாக உள்ளன என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

 

இதற்கான விளக்கத்தை தந்த அவர், ''கொரோனா வைரஸில் பல திரிபுகள் இருந்தபோதும், தடுப்பூசி வேலை செய்தது எப்படி என்றும் டெங்குவுக்கு பல ஆண்டுகளாக தடுப்பூசியை கண்டறியமுடியவில்லை என்பதும் வியப்பான விஷயம்தான். இயற்கையின் விந்தை என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு வைரஸு க்கும் தனிப்பட்ட தன்மைகள் இருக்கும். அதனால், டெங்கு வைரஸின் தன்மை குறித்த ஆய்வுகள் மேம்படுத்தப்பட்டால்தான் இதற்கு விடைகிடைக்கும். கொரோனா வைரஸை பொறுத்தவரை நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அதிர்ஷ்டம் டெங்குவில் இதுவரை நமக்கு சாத்தியமாகவில்லை,'' என வியப்புடன் சொல்கிறார்.

 

இந்த தனித்தன்மை காரணமாகதான், டெங்வாக்ஸியா தடுப்பூசிக்கு பிறகு வெளியான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த தடுப்பூசி பயன்பாடும் நின்றுபோனது.

 
தொடரும் டெங்கு மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நான்கு வகையான டெங்கு வைரஸ்களையும் எதிர்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தாக இருக்கும்.

தொடரும் கேள்விகள்

டேகேடா மருந்து நிறுவனம்(Takeda Pharmaceutical Company) 2022ல் பலகட்ட ஆய்வுகளுக்கு பின்னர் Tak 003 என்ற தடுப்பூசியை அறிமுகம் செய்தது.

 

Tak 003 தடுப்பூசியின் தோல்வி பற்றி பேசிய முத்துமணி, ''இந்த தடுப்பு மருந்து, மூன்று வகையான வைரஸ்களில் இருந்து மட்டுமே பாதுகாப்பு கொடுக்கிறது என்றும் ஒரு வகை டெங்கு வைரஸில் இருந்து போதுமான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அதோடு, மருத்துவ பரிசோதனைகளின் (clinical trails) போது பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் பாதகமான நிகழ்வுகள் பதிவாகியதால், இந்த தடுப்பு மருந்தின் செயல்பாட்டில் பல கேள்விகள் எழுந்தன. அதனால், இந்த மருந்தின் பயன்பாடு கைவிடப்பட்டது,'' என காரணங்களை அடுக்கினார்.

 

அடுத்ததாக, Butantan-DV என்ற பெயரில் வெளியான பிரேசில் நாட்டு தடுப்பு மருந்து பற்றி தகவல் சேகரித்தோம். பிரேசில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், மூன்றாவது மருத்துவ பரிசோதனையில் 16,000 பேர் பங்குகொண்ட மருத்துவ பரிசோதனையில் Butantan-DV தடுப்பு மருந்து, 79.6% செயல்திறன் கொண்ட தடுப்பு மருந்தாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், இந்த தடுப்பு மருந்தும் முழுமையான பாதுகாப்பை வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

 

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் உலகளவில் செயல்படும் தனியார் மருந்து நிறுவனங்களான மெர்க் (Merck), கிளாக்சோ ஸ்மித்க்லைன் (GlaxoSmithKline)ஆகிய நிறுவனங்களும் டெங்குவின் தனித்தன்மை பிரச்னையை தீர்த்து, மருந்து கண்டறிய ஆய்வுகளை நடத்திவருவதாக தெரிவித்துள்ளன. இந்தியாவில், அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு ஆய்வும், இரண்டு தனியார் மருந்து நிறுவனங்கள் நடத்தும் ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன.

 
தொடரும் டெங்கு மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வெப்பமான பிரதேசங்களில் மற்றும் காணப்பட்ட டெங்கு கொசுக்கள் தற்போது குளிர் பிரதேசங்களிலும் காணப்படுகின்றன.

காலத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் டெங்கு

நான்கு விதமான டெங்கு பாதிப்புக்கு ஒரு தடுப்பு மருந்து இல்லை என்பது தற்கால சிக்கல். டெங்கு கொசு பாதிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கிவிட்டது. வெப்பமண்டலத்தில் மட்டுமே இதுநாள்வரை தென்பட்ட டெங்கு கொசு, தற்போது சமீபமாக தமிழ்நாட்டில், குளுமையான மலைப்பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கூட தென்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சமீபத்தில், நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு, சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் டெங்கு கொசு பரவல் இருப்பதை கண்டறிந்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

 

''பொதுவாக டெங்கு கொசு வெப்பமண்டலம் சார்ந்த இடங்களில் காணப்படும். அதிக குளிர் பகுதிகளில் பெரும்பாலும் அவை ஜீவிக்கமுடியாது. ஆனால், சமீப ஆண்டுகளில், நீலகிரி பகுதியில் கூட இந்த டெங்கு கொசுவால் வாழமுடிகிறது என்பது பெரிய ஆச்சரியம். இது காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடு என்று எண்ணுகிறேன்,'' என்கிறார்.

 

டெங்குவை போல, நிபா வைரஸ் பரவல் கூட விடை தெரியாத புதிராக தொடர்கிறது. இது குறித்து கேட்டபோது, ''2018க்கு முன்னர் இந்தியாவில் நிபா வைரஸ் காணப்படவில்லை. ஆனால் 2018க்கு பின்னர், ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக, கேரளாவில், கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் ஏன் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று புரியவில்லை. இவையெல்லாம் இன்னும் அறிவியலுக்கு எட்டாத விஷயமாக, விடை தெரியாத விஷயங்களாக உள்ளன,'' என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

 

இதுபோல, காலத்திற்கு ஏற்ப டெங்கு கொசுவும் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தகவமைத்து கொள்கிறது என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

 
தொடரும் டெங்கு மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பின் தொடர் விளைவுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மருந்துகள் உள்ளன.

டெங்கு காய்ச்சல் வந்த பின் காப்பாற்ற மருந்து உள்ளதா?

டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டறிய பல சிக்கல்கள் இருந்தபோதும், பொருளாதார சிக்கலும் ஒரு பகுதியாக இருக்கிறது.

 

இதுவரை வெளியான தடுப்பூசிகள் எதுவும் கைகொடுக்கவில்லை என்பதால், தற்காப்புதான் ஒரேவழியாக ஏன் பார்க்கப்படுகிறது என்று கேட்கும் முத்துமணி, ''டெங்கு அதிகளவில் வளரும் நாடுகளில்தான் பாதிப்பை ஏற்படுகின்றது. அங்கு தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் மற்றும் அதை விநியோகம் செய்வது என்பது பொருளாதார ரீதியாக அதிக சுமையை ஏற்படுத்துகிறது. அதனால், மலிவு விலையில் தடுப்பூசியை தயாரித்து, அதனை தேவைப்படுபவர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவது சவாலானதாக உள்ளது,''என்று கூறி பொருளாதார அம்சத்தை உணர்த்துகிறார்.

 

டெங்கு காய்ச்சல் வருமுன் காப்பதைப் பற்றி மட்டுமே நாம் உரையாடவில்லை. டெங்கு காய்ச்சல் வந்தபின்னர், உயிரை காப்பாற்றிக்கொள்ள மருந்துகள் உண்டா என்று முத்துமணியிடம் கேட்டோம். டெங்கு தடுப்பூசி பற்றிபரவலாக அறியப்பட்டது போல, டெங்கு காய்ச்சல் வந்தபோது பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதற்கு தேவைப்படும் மருந்துகள் பற்றிய ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

''டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பின்னர், அந்த வைரஸ் உடல் முழுவதும் பரவுவதை தடுக்கவும், உள் உறுப்புகளில் தாக்கம் ஏற்படுத்துவதை தவிர்க்கவும் மாத்திரை வடிவில் மருந்து கொண்டுவருவதில் வெற்றிகரமான சோதனைகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, எச்ஐவி (எய்ட்ஸ்) பாதிப்பு ஏற்பட்ட பின்னர்கூட பல காலம் ஒரு நபர் ஆரோக்கியமாக வாழும் முறையில் மருந்துகள் உதவுகின்றன. அதுபோலவே, டெங்கு பாதிப்பு இருந்தாலும், அதனை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவரை காப்பாற்றும் மருந்துகளை விரைவில் எதிர்பார்க்கலாம்,'' என நம்பிக்கையுடன் கூறுகிறார் முத்துமணி.

https://www.bbc.com/tamil/articles/c4n5d5ejplvo

  • கருத்துக்கள உறவுகள்

அரிய கட்டுரை தமிழில், இணைப்பிற்கு நன்றி ஏராளன்!

டெங்கு வைரசு, மலேரியா போலவே, நுளம்பினால் பரவும். ஆனால், வெவ்வேறு நுளம்பினங்கள். அண்மைக்காலமாக, டெங்குவைப் பரப்பும் Aedes aegypti நுளம்புகள் அமெரிக்கக் கண்டத்தின் தெற்கிலும், சாதாரணமாகக் குளிர்மையான பிரேசில் பிரதேசங்களிலும் பெருக ஆரம்பித்திருக்கின்றன. இதன் காரணம், தற்போது நிலவும் எல் நினோ கால நிலை: வெப்பம் அதிகம், மழை, வெள்ளம் அதிகம். இதனால், டெங்கு சீசன் அதிகரித்திருக்கிறது.

டெங்கு நுளம்புகளைக் குறி வைக்கும் Wolbachia பக்ரீரியாக்களைக் கொண்டு உயிரியல் நுளம்புக் கட்டுப் பாடு அவுசில் சாத்தியமாகியிருக்கிறது.

https://www.nature.com/articles/s41598-023-42336-2

அப்படி ஏதாவது புதிய வழி தான் இப்போதிருக்கும் தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு வந்தால்( காய்ச்சல் )அல்லது அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால்  யாரும் NSAIDs ( Non steroid anti inflammatory Drugs ) எடுக்க வேண்டாம். Asprin, Ibuprofen போன்ற ஐரோபிய வட அமெரிக்க நாடுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகள் NSAIDs வகைக்குள் அடங்கும். அம்மருந்தை எடுத்துவிட்டால் டெங்கு வந்து தப்புவது கடினம்.

இலங்கையில் வேலை செய்தபோது செக்கஸ்லோவிக்கியாவில் இருந்து Tourist ஆக வந்த ஒரு dentist க்கும் அவரின் மனைவி இரண்டு பிள்ளைகளுக்கும் காய்ச்சல் வர எல்லோரும் முதல் மூன்று நாள் வரைக்கும் Ibuprofen எடுத்து இருக்கிறார்கள். பின்னர் தான் இரத்தம் சோதனை செய்ய வந்தனர். கடையில் ஒரு பிள்ளை இறந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நான் அடுத்த சமருக்கு ஊருக்கு போறதா இல்லையா?

ஒவ்வொரு நாளும் மூளை காய்ச்சல், டெங்கு, மருந்து தட்டுப்பாடு, வைத்தியர் வெளி ஏற்றம் எண்டு டிசைன், டிசனா பீதியை கிளப்பினா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்ப என்ன நான் அடுத்த சமருக்கு ஊருக்கு போறதா இல்லையா?

ஒவ்வொரு நாளும் மூளை காய்ச்சல், டெங்கு, மருந்து தட்டுப்பாடு, வைத்தியர் வெளி ஏற்றம் எண்டு டிசைன், டிசனா பீதியை கிளப்பினா?

ஒரு நேர சுற்றுலாவுக்கே இவ்வளவு அஞ்சுகிறீர்களே?

ஊருக்குப் போய் நிரந்தரமாக இருக்கப் போகிறோம் என்பவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரு நேர சுற்றுலாவுக்கே இவ்வளவு அஞ்சுகிறீர்களே?

ஊருக்குப் போய் நிரந்தரமாக இருக்கப் போகிறோம் என்பவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

அது மட்டுமா அங்கே இருக்கும் 24 மில்லியனும் வாழுதுதானே?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அது மட்டுமா அங்கே இருக்கும் 24 மில்லியனும் வாழுதுதானே?

 

அவர்களுக்கு மாற்றுவழி இல்லை.

ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையில் தான் இருக்கப் போகிறேன் என்று அடம்பிடிக்கிறார்களே

விளக்கைப் பிடித்துக் கொண்டு பாழ்கிணறுக்குள் பாய நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

அவர்களுக்கு மாற்றுவழி இல்லை.

ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையில் தான் இருக்கப் போகிறேன் என்று அடம்பிடிக்கிறார்களே

விளக்கைப் பிடித்துக் கொண்டு பாழ்கிணறுக்குள் பாய நிற்கிறார்கள்.

உண்மைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இப்ப என்ன நான் அடுத்த சமருக்கு ஊருக்கு போறதா இல்லையா?

ஒவ்வொரு நாளும் மூளை காய்ச்சல், டெங்கு, மருந்து தட்டுப்பாடு, வைத்தியர் வெளி ஏற்றம் எண்டு டிசைன், டிசனா பீதியை கிளப்பினா?

அண்ணை டெங்கு மழைக்காலங்களில் தான் அதிகம் பரவும், அதற்கு ஏற்றாற் போல் பயணத்தை திட்டமிடலாமே?! அத்தோடு காலை மாலை தான் டெங்கு நுளம்பு விசிற் பண்ணுமாம்!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு நேர சுற்றுலாவுக்கே இவ்வளவு அஞ்சுகிறீர்களே?

ஊருக்குப் போய் நிரந்தரமாக இருக்கப் போகிறோம் என்பவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் எமக்கு வருத்தங்கள்,விபத்துகள்,சாவுகள் வராதா மருத்துக்களால் மட்டும் உயிரை மீட்டு தர முடியமா ☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை டெங்கு மழைக்காலங்களில் தான் அதிகம் பரவும், அதற்கு ஏற்றாற் போல் பயணத்தை திட்டமிடலாமே?! அத்தோடு காலை மாலை தான் டெங்கு நுளம்பு விசிற் பண்ணுமாம்!

நன்றி தம்பி. அப்படித்தான் திட்டம். 

காலை மாலை தான் ஊரில விசேசமே, மத்தியானம் வெய்யில் கொழுத்தும், இரவு ஊர் அடங்கி விடும். பாப்பம்.

20 minutes ago, ரதி said:

வெளிநாட்டில் இருக்கும் எமக்கு வருத்தங்கள்,விபத்துகள்,சாவுகள் வராதா மருத்துக்களால் மட்டும் உயிரை மீட்டு தர முடியமா ☺️

வரும். அதுக்காக ஆபத்தை தேடிப்போய் கைகுலுக்கத்தான் வேணுமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நன்றி தம்பி. அப்படித்தான் திட்டம். 

காலை மாலை தான் ஊரில விசேசமே, மத்தியானம் வெய்யில் கொழுத்தும், இரவு ஊர் அடங்கி விடும். பாப்பம்.

வரும். அதுக்காக ஆபத்தை தேடிப்போய் கைகுலுக்கத்தான் வேணுமா?

ஒவ்வொரு நாளும் காலமை எழும்பி வெளியில் போய் வருவதே ஆபத்து தான் ...உங்கள் போன்றவர்களின் கதையை பார்த்தால் இங்கு உள்ளவர்களுக்கு சாவே வராது என்ட மாதிரித் தான் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

வெளிநாட்டில் இருக்கும் எமக்கு வருத்தங்கள்,விபத்துகள்,சாவுகள் வராதா மருத்துக்களால் மட்டும் உயிரை மீட்டு தர முடியமா ☺️

உண்மை தான்.ஆனாலும் நீங்கள் கூறுவதெல்லாம் தவிர்க்க முடியாதது.

அங்கே போய் வருத்தம் வந்து சிகிச்சை செய்ய முடியாமலோ மருத்துவம் இன்றியோ பிரச்சனை என்று வந்தால்

இப்ப இவர் என்னத்துக்கு போனவர் இஞ்சை திண்டு போட்டு கிடக்கேலாமல் போனவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்றும் சொல்வார்கள்.

நேற்று மட்டக்களப்பு நண்பருடன் கதைக்கும் போது 

முன்னர் யாழ்பாணத்து ஆட்கள் தான் வெளிநாடு என்று திரிவார்கள்.

இப்போ மட்டக்களப்பில் யாரைப் பார்த்தாலும் வெளிநாட்டுக் கதை தான் என்று கவலைப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.