Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல் 

கார்த்திக் வேலு

spacer.png

லகின் பெரிய விவகாரங்களில் ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன?  எப்போது இது ஆரம்பித்தது? எதை நோக்கி இது செல்லும்? இந்த விவகாரத்தைப் பின்னின்று இயக்கும் கரங்கள் எவை? இந்த வரலாற்றை ஐந்து அத்தியாயங்கள் கொண்ட தொடராக ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் தனித்த விஷயங்களில் கவனம் குவிக்கின்றன என்பதால், இந்தக் கட்டுரைகளைத் தனித்தும் வாசிக்கலாம்; தொடராகவும் வாசிக்கலாம்.  


 

ன்று இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் விழும் குண்டுகள், பல நூறாண்டுகளுக்குப் முன்னரே எங்கிருந்தோ ஏவப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

இஸ்ரேலை அறிய முதலில் யூத மதம் உருவாகிவந்த விதம் குறித்து அறிவது உதவியாக இருக்கும். வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கையில் மக்கள் - மதம் - தேசம் என்ற மூன்றும் எப்படி ஒன்றை ஒன்றைச் சார்ந்து வளர்ந்தன என்ற சித்திரமும் பிடிபடும்.  யூத மதம், யூதர்கள், யூதர்களுக்கான நாடு மூன்றுமே படிப்படியாக பரிணாமம் கொண்ட விஷயங்கள். 

யூத மதத்தின் பின்னணி

யூத மதம் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான வேர்களைக் கொண்டது. அதேசமயம், வரலாற்றுப் பரிணாமத்தில் புறச்சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொண்ட மதமும்கூட. 

ஆபிரகாமிய மதங்கள் என்று சொல்லப்படும் ஓரிறை (Monotheistic) நம்பிக்கை கொண்ட மதங்களில் முதலாவதாக உருவானது யூத மதம். இதற்குப் பின்னரே கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற பிற அபிரகாமிய மதங்கள் உருவாகிவந்தன. யூத மதத்தின் கிளையாக உருவாகி பின்னர் தனி மதமாக பிரிந்துவிட்டதே கிறிஸ்துவம்.  இஸ்லாம் அதற்கும் பின்னர் ஏழாம் நூற்றாண்டில்தான் உருவாகிறது. 

இன்று நாம் மத்திய கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்றெல்லாம் குறிப்பிடும் மத்திய திரைகடலை ஒட்டிய நிலப் பகுதிகள் ‘லெவான்ட்’ (Levant) என்று அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு இருந்த ஒரே நில வழிப் பாதை லெவான்ட் பகுதியைத் தொட்டுத்தான் செல்லும்.

இந்த வழியாகவே ஆதிமனிதர்கள் உலகின் பிற இடங்களுக்குப் பரவ ஆரம்பித்தார்கள்.  எனவே, லெவான்ட் பகுதி மிகவும் வளமான, பல்வேறு இனமக்கள் கலந்து உறவாடும் களமாகவே வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு இருந்திருக்கிறது. 

 

இஸ்ரேலின் தோற்றம்

ஐரோப்பாவில் இந்த பகுதியில்தான் முதன்முதலில் விவசாயம் செய்யப்பட்டு, மக்கள் ஓரிடத்தில் தங்கி வாழும் சமூகங்கள் உருவாகியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் இங்கு வாழ்ந்த மக்களைக் ‘கேனனைட்ஸ்’ என்கிறார்கள்.  லெவான்ட் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்கு பகுதிக்குச் செல்லும் வணிகப் பாதையில் அமைந்திருந்தால் அங்கு சிறு சிறு வணிக நகரங்கள் தோன்றின.

இன்றைக்குச் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதிகளை எகிப்து பேரரசு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது. எகிப்து அப்போதே நல்ல வளர்ச்சி கண்ட நாகரிகமாக இருந்திருக்கிறது. எகிப்திய பிரமிடுகள் இதெல்லாம் நடப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக ஆரம்பித்துவிட்டன என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். 

spacer.png

முன்னர் சிறு சிறு வியாபார நகரங்களாக இருந்த பகுதிகள் இஸ்ரேல், ஜூடா உட்பட தனி நாடுகளாக வடிவெடுக்கின்றன. ஆபிரகாமின் வழிவந்த குலத்தந்தையான (Patriarch) யாகேபுவின் மற்றொரு பெயர்தான் இஸ்ரேல். அவருடைய 12 மகன்களின் வழிவந்த 12 குடிகளைத்தான் பூர்வ இஸ்ரேலியர்களாகப் புனித நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நாடுகளில் இருந்துவந்த பகுதிகளைத்தான் தோராயமாக தற்கால இஸ்ரேல் - பாலஸ்தீன நிலப்பரப்பு என்கிறோம்.

பைபிளைத் தவிர்த்து வரலாற்றுரீதியாக இஸ்ரேல் குறித்த முதல் குறிப்பு 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய கல்வெட்டில் காணக் கிடைக்கிறது. லெவான்ட் பகுதியைச் சார்ந்த பலவேறு நாடுகளை எகிப்து வென்றதைச் சொல்லும் இந்தக் கல்வெட்டில் இஸ்ரேல் குறித்து முதல் குறிப்பே இப்படித்தான் வருகிறது, ‘இஸ்ரேல் இஸ் வேஸ்டட், பேர் ஆஃப் சீட்’ (Israel is wasted, bare of seed). அதன் பின் வந்த காலகட்டத்தில் (12C BCE) இந்தப் பகுதியின் மீது எகிப்தின் பிடி தளர ஆரம்பித்தது.

நட்சத்திர அடையாளம்

இதன் பிறகு மீண்டும் அனைத்துக் குலங்களையும் (11C BCE) டேவிட் (தாவீது) அரசனின் கீழ் ஒருங்கிணைகிறார்கள். இவரின் காலகட்டத்தில்தான் (10C BCE) ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகராகிறது. இவரின் பெயரால்தான் யூதர்களின் ‘ஸ்டார் ஆஃப் டேவிட்’ (Star of David) என்னும் புனிதக் குறியீடு வழங்கப்படுகிறது. இன்று நாம் இஸ்ரேலிய கொடியில் காணும் நட்சத்திர குறியீடு இதைச் சுட்டுவதே.

ஜெர்மனியில் யூத இன அழித்தொழிப்பின்போது யூதர்களைத் தனியே அடையாளப்படுத்திக்கொள்ள அவர்கள் தங்கள் உடையில் இந்த நட்சத்திர சின்னத்தைக் குத்திக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. டேவிட்டின் மகனான சாலமனின் ஆட்சியில்தான் யூதர்களின் முதல் கோவில் கட்டப்படுகிறது.

இதற்கும் சில நூற்றாண்டுகள் (8C BCE) கழித்து பலம் வாய்ந்த அசிரியப் பேரரசு (தற்கால சிரியா) இந்தச் சிறுநாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க முனைந்த இஸ்ரேல் நாடு அழிக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் ஜூடேயா நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இதுவே யூதர்களின் முதல் புலப்பெயர்வு. இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதி பாபிலோனியர் (சமகால ஈராக்) ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

இந்தக் காலகட்டத்தில் ஜூடேயாவில்  இருக்கும் பெரும்பான்மை யூதர்கள் அங்கிருந்து பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். ஜெருசலத்தில் யூதர்களின் அரசரான சாலமனால் கட்டப்பட்ட யூதர்களின் முதல் கோவில் (First Temple) இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. 

இது நடந்து ஒரு எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பாரசீக அரசன் சைரஸ் (Cyrus) பாபிலோன் மீது போர் தொடுத்து அவர்களை வெல்கிறார். இந்த வெற்றிக்குப் பின் மீண்டும் யூதர்கள் ஜூடேயா நாடு திரும்புவதற்குப் பாரசீகர்கள் அனுமதிக்கிறார்கள். நாடு திரும்பிய மக்கள் (5C BCE) மீண்டும் தங்களது கோயிலைக் கட்டி எழுப்புகிறார்கள் (Second Temple).

இதன் பிறகு சுமார் ஒரு நூறாண்டு காலம் யூதர்களுக்குத் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் சுதந்திரம் கிட்டுகிறது. பிறகு மீண்டும் ஒரு படையெடுப்பு. இந்த முறை கிரேக்க அலெக்ஸாண்டர் பாரசீகத்தைக் கைப்பற்றுகிறார்.  எனவே, ஜூடேயா நாடும் அவர் ஆளுகையின் கீழ் வருகிறது. 

எஞ்சி இருக்கும் சுவர்

கிரேக்க ஆட்சியின்போது கிரேக்கர்களின் பல்லிறை (Polytheistic) மதமான ஹெலனிசத்துடன் சிறிது காலம் யூத மதம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. சில நூற்றாண்டுகளுக்குப் யூதர்கள் மீண்டும் தனியே பிரிந்துவந்து, தங்களின் தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துகொண்டார்கள். இதன் பிறகு ரோமப் பேரரசின் (1C BCE) அதிகாரத்தின் கீழ் யூதர்கள் வந்தார்கள்.

ரோமானிய ஆட்சியை யூதர்களின் கலகம் தோல்வியில் முடிந்தது. ரோம கவர்னரான டைடஸ் ஜெருசலத்தில் யூதர்கள் கட்டிய இரண்டாம் கோவிலையும் சூறையாடி, இடித்துத் தரைமட்டமாக்கினார். 

பலரும் காணொளிகளில் யூதர்கள் ஒரு பழைய சுவற்றின் முன் நின்று வழிபடுவதைப் பார்த்திருக்கலாம். இதை ‘வைலிங் வால்’ (wailing wall) என்கிறார்கள். இடிக்கப்பட்ட இரண்டாம் கோவிலின் எஞ்சி இருக்கும் சுவர்தான் அது. அதன் காரணமாகவே இது யூதர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்த இடமாகத் திகழ்கிறது. 

spacer.png வைலிங் வால்

இடிக்கப்பட்ட இந்தக் கோயிலின் மீது ரோமர்கள் தங்களின் முதன்மைக் கடவுளான ஜூபிடருக்கு கோயில் கட்டுகிறார்கள். யூதர்கள் மத வழிபாடு செய்ய மத வரி விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்துக் கலகம் செய்த யூதர்கள் முடக்கப்படுகிறார்கள். வருடத்தில் ஒரு நாள் தவிர ஜெருசலேம் நகருக்குள்ளேயே அவர்கள் வர முடியாதவாறு தடை விதிக்கப்படுகிறார்கள். ‘வைலிங் வால்’ முழுமையாகவே மண்ணைக் கொட்டி  மூடி மறைக்கப்படுகிறது. கோயில் இடிப்பு மதரீதியாக யூத மரபில் பெரும் சோகமாக இன்றும் பார்க்கப்படுகிறது.

ரோமர்களில் ஆட்சிக் காலத்தில் அவர்கள்தான் இந்தப் பகுதியைச் 'சிரியா பலஸ்தீனா' என்று முதன்முதலாக குறிப்பிடுகிறார்கள். யூதர்களின் வரலாற்றுரீதியான எதிரிகளான பிலிஸ்தீனியர்களைக் குறிக்கும் இடமாக உத்தேசித்து இந்தப் பெயரை இடுகின்றனர். இதுவே பின்னர் ‘பாலஸ்தீனம்’ என்ற பெயராக உருவெடுக்கிறது (நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ‘பிலிஸ்தீன்’ (philistine) என்ற சொல்லும் இதிலிருந்து வந்ததுதான்).

யூத மதத்தின் பரிணாமம்!

இன்றைக்கும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே யூதர்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அவர்கள் பலமுறை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். எகிப்தியர்கள், அசிரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் என்று வரலாறு நெடுகிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பல்வேறு பேரரசுகளின் ஆளுகையின் கீழ் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

spacer.png

இன்று நாம் பெரும் மதங்களாக கருதும் கிறிஸ்துவமும், இஸ்லாமும் உருவாகும் முன்னரே யூதர்களின் இந்த அலைக்கழிப்பு ஆரம்பித்துவிட்ட இந்த வரலாற்றுச் சித்திரம் இங்கு முக்கியமானது. 

யூத மதம் உருவாகிவந்த காலகட்டத்தில் உலகெங்கிலும் பல்வேறு பண்டைய மதங்களும் வழிபாட்டு முறைகளும் இருந்தன. எகிப்தில் பல்லிறை வழிபாடும் மிக வலுவாகவும் மிகச் செழிப்பாகவும் இருந்தது.  ஹெலனீய மதம் கிரேக்க சாம்ராஜ்ஜியம் முழுதும் பரவ வாய்ப்பு இருந்தது. அதேபோலதான் ரோமானியர்களின் பல்லிறை மதமும். 

மெசப்சோமிய பகுதிகளிலும் பல்வேறு பல்லிறை மதங்கள் இருந்தன. மிகப் பழமையான சுமேரிய நாகரீகம் யூத மத உருவாக்கத்தும் முந்தையது. உலகில் மிகப் பழமையான காவியமான ‘கில் காமேஷ்’ யூத மத உருவாக்கத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது. 

எகிப்தில் இன்று பெருபான்மை மதம் இஸ்லாம், மீதமுள்ள 10% மக்கள்தொகை மரபுவாத கிறிஸ்துவர்கள். ரோம், கிரேக்க நாடுகளில் இன்று கத்தோலிகர்களே பெரும்பான்மையினர். சிரியா பலரும் இஸ்லாமிய நாடு என்று புரிந்துவைத்திருக்கிறார்கள். நிஜத்தில் அசிரியர்களுக்கு அவர்களுடைய தனித்துவமான மதம், வழிபாட்டு முறை எல்லாம் இருந்தன. ஆனால், இன்று இந்த மதங்கள் எல்லாம் எங்கே? 

இந்த சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் பந்தாடிய யூத மதம் எப்படி இன்றும் தாக்கு பிடித்து நிற்கிறது? 

யூதர்கள் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளில் எதிர்கொண்ட சவால்களும் ஒடுக்குமுறைகளும் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளில் யூத மதம் கொண்ட பரிணாமத்திலும் அதன் ஆச்சாரவாத நோக்கையும் வடிவமைத்ததிலும் பெரும் பங்காற்றி இருப்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

 

https://www.arunchol.com/karthik-velu-on-israel-history

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும்

யூத மதத்தின் வரலாற்றில் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் மிகவும் கரடுமுரடான காலகட்டமாக அமைந்தன. அடுத்த 700 ஆண்டு கால வரலாற்றில் நடந்த கிறிஸ்துவ மத உருவாக்கமும் பரவலும் உலகளாவிய நோக்கில் அரசியல் மற்றும் மத அதிகாரங்களை மாற்றி அமைத்த முக்கிய விசைகளில் ஒன்றாக அமைந்தது. இந்த மறுசீரமைப்பு யூதர்களுக்கு எதிர்காலம் குறித்த கேள்வியை மேலும் அதிகரிக்கவே செய்தது.

பிறப்பால் இயேசு ஒரு யூதர். அவருடைய சீடர்கள் அனைவரும் யூதர்களே. யேசு பிறந்த பெத்லஹேம் நகரம் ஜெருசலேம் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. அதாவது, அந்தக் கால ஜூடேயா நாட்டில் ஒரு பகுதி. இயேசு பிறந்த இடம் யூத நாடாக இருந்தபோதும், அது ஒட்டுமொத்தமாக ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.

வேறொரு மதச் சூழலில் வேறோரு அரசியல் அதிகாரத்தின் கீழ் ஒரு புதிய மதமாக கிறிஸ்துவம் எழுந்துவந்து இன்று உலகெங்கும் பரவிக் காலூன்றியது என்பது மனித குல வரலாற்றில் அசாத்தியமான நிகழ்வுகளில் ஒன்று. 

புனித உடன்படிக்கை

இயேசுவின் போதனைகள் யூத மத பின்புலத்தில் இருந்துவந்தாலும் அவை தனித்துவமான பாதையில் வேறொரு திசையை நோக்கிச் சென்றன. இரண்டு மதங்களும் ஓரிறை வழிபாட்டை ஏற்றாலும் அந்த இறைக்கு இயேசு முற்றிலும் வேறான ஒரு விளக்கத்தை அளித்தார். கடவுள் அனைத்தையும் படைப்பவராகவும் (Father)  – அவரின் மகனாக பூமியில் அவதரித்தவராகவும் (Son of God) – எல்லாவற்றிலும் உறைந்திருக்கும் புனித ஆவியாகவும் (Holy Spirit) திரித்துவமாக உருவகித்தார்.  இம்மூன்றும் தனித்தனி இருப்புகளாக அடையாளப்படுத்தப்பட்டாலும் இவற்றின் சாரம் ஒன்றுதான் என்றார்.

மாறாக யூதர்கள் கடவுள் எந்தவிதத்திலும் பிளவுபடுத்த முடியாத வேறுபடுத்த முடியாத, முழு முதல் ஒற்றை இருப்பு என்று நம்புகிறார்கள். யூத நம்பிக்கை இயேசுவை (அல்லது வேறு யாரையும்) கடவுளின் அவதாரமாகவோ, அவரின் பகுதியாகவோ ஏற்க மறுத்தது. இந்த இறையியல் கோட்பாட்டில் உள்ள வேறுபாடு கிறிஸ்துவம் தனித்துவமான ஒரு மத நோக்காக யூத மதத்தில் இருந்து வேறுபடுத்திக்கொண்டு விலகி வளர வழி வகுத்தது.

இறையியலைத் தாண்டி நடைமுறையிலும் இயேசு முன்வைத்த விஷயங்கள் பல யூதர்களுக்கு ஏற்புடையனவாக இருந்தன. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட மீட்பராக பலரை இயேசுவைக் கண்டார்கள். மேலும் கடவுளைக் கண்களால் காண முடியாத அரூப நிலையில் இருந்து கடவுளின் அவதாரமாக மனித உருவில் ஒருவரைக் காணுவதில் உள்ள நெகிழ்வுத்தன்மை பலருக்குக் கடவுளை மேலும் நெருக்கமான ஓர் இருப்பாக காட்டியது. 

இதையும் தாண்டி மிக முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. யூத நம்பிக்கையின் அடித்தளம் கடவுள் யூத மக்களிடம் செய்துகொண்ட ‘புனித உடன்படிக்கை’யாகக் (Mosaic Covenant) கருதப்படுகிறது. மக்கள் யூத மதக் கோட்பாடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டு நடந்தால், தொடர்ந்து வழிபாடுகளையும் சடங்குகளையும் பிசகாமல் செய்துவந்தால், கடவுள் அவர்களைக் காத்திருப்பார் எனவும், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசமாக இஸ்ரேல் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்றும் சொல்கிறது. 

 

652cf022402cc.jpg

யூத வெறுப்பின் வேர்கள்

இயேசு முன்வைத்த புதிய உடன்படிக்கை பாவ மன்னிப்பைப் பிரதானமாக முன்வைக்கிறது. நற்கருணை, சக மனிதரை அன்பு செய்தல் போன்ற விஷயங்களை முன்வைக்கிறது. இறைவனின் கட்டளைகள் நம்பிக்கையாளர்களின் மனதில் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. மிகக் கறாரான சட்டங்களும் நெறிமுறைகளும் கொண்ட யூத நம்பிக்கையில் இருந்து விலகி இயேசு முன்வைத்த பாதை நெகிழ்வும், எளிமையும், மனிதத்தன்மையும் கொண்ட ஒரு வடிவத்தை அடைகிறது.

இந்தக் காரணங்களால் இயேசுவிடம் பல சாமானிய யூதர்கள் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால், யூத மதத் தலைவர்கள் தரப்பில் இயேசு யூத நம்பிக்கைகளுக்குப் புறம்பான விஷயங்களை முன்வைத்ததும் தன்னைக் கடவுளின் மைந்தன் என்று சொல்லிக்கொண்டதும் மத நிந்தனையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்தக் குற்றங்களை முன்வைத்து இயேசுவை ரோமானிய அதிகாரிகள் முன்பு கொண்டு நிறுத்தினர்.  ரோமானிய அரசு மதரீதியான குற்றச்சாட்டுகளைப் பெரிதாக பொருட்படுத்தாவிட்டாலும், இயேசு தன்னை ராஜாவாக அறிவித்துக்கொண்டதைப் பெருங்குற்றமாக கருதியது. இவ்வாறு அரசியல் விசைகளும் மத விசைகளும் பிரித்தறிய முடியாத வண்ணம் இயேசு சிலுவையில் அறையப்பட காரணமாயின.

பிறகாலத்தில் திரளவிருக்கும் யூத வெறுப்பின் வேர்கள் இங்கிருந்துதான் கிளைத்தன. கிறிஸ்துவர்களின் பார்வையில் இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமானவர்களாக யூதர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மெல்ல கிறிஸ்துவம் என்பது யூத மதத்தின் ஒரு கிளையாக இருப்பதில் இருந்து, ஒரு தனி மதமாக மாற ஆரம்பித்தது. கிறிஸ்துவம் பரவப் பரவ யூதர்களின் மீதான நீக்கவே முடியாத இந்தக் கறையும் பரவ ஆரம்பித்தது.

 

யூதம் தன்னை எப்படிக் கட்டமைத்துக்கொண்டது?

இதுவரை லெவான்ட் பகுதியில் மட்டும் இருந்த யூதர்கள், மதரீதியான கெடுபிடிகளுக்குத் தப்பி ரோமப் பேரரசின்  கீழ் இருக்கும் பல்வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார்கள். வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு என்று ரோம ஆதிக்கம் மிகப் பரந்த நிலப்பரப்பில் விரவியிருந்தது.

ஆப்பிரிக்காவில் கறுப்பின யூதர்கள் உருவானது இவ்விதம்தான். பல யூதர்களுக்கே ஆப்பிரிக்க பூர்வகுடிகளில் யூதர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமளிப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்படிப் பரவலாக சிதறிய யூதர்களின் அவர்கள் சென்ற எல்லா நாடுகளிலும் அவர்களைச் சிறுபான்மையினர் ஆக்கியது.

spacer.png கறுப்பின யூதர்கள்

மைய நிலம் இல்லாமல் வழிபாட்டுத்தலங்களும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சூழலில், யூத மதம் தன்னை இந்தத் தடைகளுக்கு ஏற்ப கட்டமைத்துக்கொண்டது. ஒரு நாடு, ஒரு வழிபாட்டிடம், ஒற்றை வாழ்விடம் எளிதில் சாத்தியமாகாது என்பதை உணர்ந்து யூதர்கள் யூத மதத்தை, ஒற்றைப் புள்ளியில் குவியாத பரவலாக கட்டமைப்பு (De-centralised) கொண்ட மதமாக பரிணமித்துக்கொண்டார்கள். இதன் காரணமாக, யூத குருமார்களான ராபைகள் (Rabbi) பங்கு யூத மதத்தில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. 

ராபைகளில் செயல்பாடு நம் ஊர் பஞ்சாயத்து தலைவர்களின் செயல்பாட்டுக்கு ஒத்தது. அதாவது, மதரீதியாக அந்தந்தச் சமூகங்களுக்கு அங்குள்ள ராபை வழிகாட்டுபவரகாக இருப்பார். அவருக்கு மேலோ கீழோ யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி மத அதிகாரம் என்பது ஒற்றைப் புள்ளியில் குவியாமல் பரவலாகிறது. இது அவர்கள் குடியேறியுள்ள நாட்டில் அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள உதவியது.

ஆனால், யூத மதப் பின்புலத்தில் உருவான கிறிஸ்துவ மதம் இதற்கு முற்றிலும் மாறான முறையில் தன்னைக் கட்டமைத்துக்கொண்டது.

இந்தத் திசை நோக்கிய முக்கிய நகர்வு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் ஆரம்பிக்கிறது. ரோம அரசரான கான்ஸ்டன்டைன் தனது தங்கையின் கணவருக்கு எதிராகப் போர் புரிய நேர்கிறது. அந்தப் போருக்கு முன் அவர் தனது கனவில் சிலுவை போன்ற ஓர் அடையாளத்தைக் காண்கிறார். அதை ஒரு புனித வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்கிறார். அது அளித்த நம்பிக்கையின் பேரில் ஈடுபடும் தனது படைகளில் கேடையங்கள் அனைத்திலும் சிலுவை குறியைப் பொறிக்கச் சொல்கிறார். இறுதியாக அவருக்கு அந்தப் போரில் மாபெரும் வெற்றி கிடைக்கிறது. தனது வெற்றிக்குக் காரணம் இயேசு என்று நம்புகிறார். 

மிலான் அரசாணை

மரபாக ரோமானியர்கள் பன்மையான இறை வழிபாட்டுமுறையைப் பின்பற்றிவந்தவர்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கடவுளை வைத்திருப்பார்கள். அப்பல்லோ, வீனஸ், டயானா இவை எல்லாமே கடவுளர்களின் பெயர்கள்.  ஜூபிடர் இவர்களின் தலைமை கடவுள். இந்த நீண்ட மரபில் வந்த ரோம அரசர்களில் ஒருவர் ஓரிறை மரபான கிறிஸ்துவத்தை ஆதரித்தது கிறிஸ்துவ மதத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை எனலாம். 

உருவாகி ஓரிரு நூற்றாண்டுகளே ஆன ஒரு புதிய மதத்தை ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் அதிகாரப்பூர்வமாக ஏற்பது என்பது மாபெரும் அங்கீகாரம். அரசியலுக்குள் மதம் நுழைவது எப்படி அரசியல் அதிகாரத்தைப் பன்மடங்காக்குகிறதோ அதேபோல மதத்துக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும்போதும் அது அந்த மதத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்துகிறது. 

கான்ஸ்டன்டைன் 313ஆம் ஆண்டு ‘மிலான் அரசாணை’ என்ற உத்தரவைப் பிறப்பிக்கிறார். அதன்படி கிறிஸ்துவ மதம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதமாக ஏற்கப்படுகிறது. இதுவரை அரசு கைப்பற்றிய மத வழிபாட்டிடங்கள், சொத்துக்கள் போன்றவை மக்களிடமே திருப்பி அளிக்கப்படுகின்றன. இது நடந்த பத்து ஆண்டுகளில் கிறிஸ்துவத்தை ரோம் சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரப்பூர்வமான மதமாகவே அறிவிக்கிறார். மேற்கே இங்கிலாந்தில் இருந்து கிழக்கே சிரியா வரை ரோமர்களின் ஆட்சிப் பரவியிருந்தது. இந்தப் பேரரசின் குடையின் கீழ் 5 கோடி மக்கள் வாழ்ந்துவந்தனர். இந்த அங்கீகாரம் கிறிஸ்துவம் பரவ எவ்வளவு முக்கியமானதாக அமைந்திருக்கும் என்பதை நாம் எளிதாக ஊகிக்கலாம்.

இதே அளவு முக்கியமான இன்னொரு விஷயத்தையும் கான்ஸ்டன்டைன் செய்கிறார் 325ஆம் ஆண்டில் ‘நைசியன் சபை’ என்ற ஒன்றையும் உருவாக்குகிறார். வளர்ந்துவரும் கிறிஸ்துவ மதத்தில் வரக்கூடிய பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் களைந்து மதரீதியான கருத்தியல் இணைவை உருவாக்க இந்தச் சபை பெரும் உதவியாக இருந்தது. இந்தச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இன்றளவும் கிறிஸ்துவ வழிபாட்டு முறையிலும், கிறிஸ்துவ இறையியலிலும் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. 

கிறிஸ்துவர்களை ஒடுக்கிய ரோம்

ரோம் அதிகாரப்பூர்வமாக கிறிஸ்துவ மதத்தை ஏற்றதுக்கொண்டது பண்பாட்டுரீதியாக முக்கியமான இணைவுகளையும் பாய்ச்சலை நிகழ்த்தியது. ரோமானிய செவ்வியல் பண்பாடு, கலை, கட்டுமானம், தத்துவம், மொழி, அரசியல், விஞ்ஞானம், சட்டம்  போன்றவை கிறிஸ்துவ இறையியல், அதன் மெய்யியல் மற்றும் குறியீடுகளுடன் ஒன்றர கலந்தது. இதுதான்  நாம் இன்றும் மேற்கத்திய கலாச்சாரம் என்று ஒட்டுமொத்தமாக சுட்டுவதற்கு அடித்தளமாக அமைந்தது. 

வரலாற்றில் எதேச்சையாக நடக்கும் சில விஷயங்கள் எதிர்காலத்தில் மாபெரும் பாதிப்பைச் செலுத்துபவையாக மாறுவது பெரும் வியப்பளிப்பது. ஏனென்றால், கிறிஸ்துவ மதத்துக்கும் இப்படி ஒரு நல்லூழ் அமைந்தது எனலாம். கிறிஸ்துவ மதம் உருவான முதல் இரண்டு நூற்றாண்டுகள் வரை ரோம அரசு கிறிஸ்துவர்களைக் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியது வரலாறு. 

புனித இக்னேசியஸ், முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்துவ மதத்தின் ஆரம்பக் கால திருத்தூதர்களில் (Apostels) ஒருவர். கிறிஸ்துவ இறையியல், தேவாலயவியல் (ecclesiology) போன்ற விஷயங்கள் குறித்து எழுதிய முன்னோடிகளில் ஒருவர். குறிப்பாக, பாதிரிமார்களின் அதிகாரம், மத ஒற்றுமை பேணுதல், திருச்சபையின் கட்டமைப்பு, அதன் அதிகார அடுக்கு போன்ற கருத்துகளை எல்லாம் முன்வைத்தவர். இதை அவர் எழுதிவைக்கத்தான் முடிந்தது.

இதுபோன்ற கருத்துகளை முன்வைத்ததற்கும் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் ரோமானிய அரசால் கொல்லப்பட்டார். ரோமானிய கேளிக்கை அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார். புனித இக்னேசியஸ் தனது மனதில் எதை உத்தேசித்தாரோ அதை இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் தன்னை தண்டித்த அதே ரோமப் பேரரசின் வழிவந்த இன்னொருவர்  நிறைவேற்றுவார் என்பதை அவர் கனவிலும் கற்பனை செய்திருக்கவே மாட்டார். 

ஓரிறை மதங்கள்

யூத மதமும் ஓரிறை  மதம்தான்.  கிறிஸ்துவமும் ஓரிறை மதம்தான். அந்தக்  காலகட்டத்தில் இவ்விரண்டு மதங்களுக்கும் இடையே இருந்த வேறுபாடு நுட்பமான இறையியல் வேறுபாடு மட்டுமே. கிறிஸ்துவம் இன்று அடைந்திருக்கும் பிரமாண்டமான  வடிவும் விரிவும் அன்றில்லை. அப்படி இருக்க பல நூறாண்டுகள் பழமையான யூத மதத்தைவிட இளைய மதமான கிறிஸ்துவத்தின்பால் கான்ஸ்டன்டைன் ஈர்க்கப்பட்டது மிக முக்கியமான வரலாற்று திருப்பத்திற்கு வித்திட்டது. ஒருவேளை அவர் யூத மதத்தைத் தனது மதமாக தேர்ந்தெடுத்திருந்தால். இன்று நாம் காணும் உலக அமைப்பே வேறு விதமாக இருந்திருக்கலாம்.

spacer.png அரசர் கான்ஸ்டன்டைன்

கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சிய ரோம ராஜ்ஜியம் நான்காம் நூற்றாண்டில் சரியலானது. ஆனால், அதற்குள் கிறிஸ்துவம் நன்கு பரவி நிலையாக ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கிறிஸ்துவம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பான்மை அதிகாரம் கொண்ட மதம் என்னும் நிலையை எட்டிவிட்டது.

யூதர்களுக்குத் தங்களுக்கென்று அரசியல் அதிகாரமும் இல்லை, அதிகாரத்தில் இருக்கும் அரசுகளின் அதரவும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் மதரீதியான தலைமையை மட்டுமே தங்கள் வழிகாட்டுதலுக்காக உருவாக்கிக்கொள்கிறார்கள். ராபைகள் ஆன்மிக வழிகாட்டிகளாக மட்டும் இல்லாமல், யூதர்களின் அன்றாட நடைமுறை கேள்விகளுக்கும் சிக்கல்களுக்கும் வழிகாட்டுபவர்களாக மாறிவிடுகிறார்கள். 

தவிர்க்க முடியாத பாலஸ்தீனம்

தாய் நாடு என்ற ஒன்றில்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்தவர்கள் அந்தந்த நாட்டோடு தம்மை இணைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு ஏற்கெனவே எண்ணிக்கையில் குறைவான யூதர்கள் மேலும் பல்வேறு நாடுகளில் சிதறி, முற்றான அரசியல் அதிகாரம் அற்றவர்களாக மாறுகிறார்கள்.

இதற்கிடையிலேயேதான் இஸ்லாம் ஒரு மதமாக அரேபிய தீபகற்பத்தில் உருவாகிவருகிறது.  இஸ்லாமியப் பரவல், மதம் மற்றும் அதிகாரம் சார்ந்த சமன்பாட்டை முற்றிலும் வேறொரு பக்கம் சாய்க்கிறது. இஸ்லாமிய அரபு தேசமாக பாலஸ்தீனம் என்பது எப்படி நாம் தவிர்க்கவே முடியாத ஒரு நிதர்சனம் என்பது இந்தப் புள்ளியில்தான் ஆரம்பமானது.

(தொடர்ந்து பேசுவோம்) 
 

 

https://www.arunchol.com/karthik-velu-on-israel-and-christianity

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்

கார்த்திக் வேலு

spacer.png

ன்று இருக்கும் பாலஸ்தீனத்தை உருவாக்கிய விசை கிழக்கே அரேபிய தீபகற்பத்தில் ஆரம்பிக்கிறது. அரேபிய பாலை நிலப்பகுதி பெரிதும் நாடோடி இனக் குழுக்களின் (Bedouins) நிலப்பரப்பாக இருந்தது. ஆங்காங்கே இருக்கும் பாலைவனச் சுனைகளைத் தவிர வேறெங்கும் நிலையான விவசாயம் செய்து பெருந்திரளாக ஓரிடத்தில் வாழும் வாய்ப்பற்றச் சூழல். 

எனவே, ரத்த உறவு கொண்ட நெருக்கமான இனக் குழுவாக (Clan) திரள்வதே அந்தச் சூழலுக்குப் பொருத்தமான சமூக அமைப்பாக இருந்தது. இந்த இனக் குழு அமைப்பு, அவற்றுக்கு இடையேயான உறவுகள், வழக்கங்கள், பூசல்கள் இவை அரேபிய சமூக, அரசியல் மற்றும் மத உருவாக்கத்தில் பெரும் செல்வாக்கை செலுத்தியது. 

இஸ்லாமின் விளைநிலம்

அரேபியாவில் இஸ்லாம் உருவாவதற்கு முன்னர் பல்வேறு பல்லிறை வழிபாட்டு முறைகள்புழக்கத்தில் இருந்தன. ஒவ்வொரு இனக் குழுவும் அவர்களுக்கான கடவுளைக் கொண்டிருந்தனர். நபிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இன்று இஸ்லாமியரின் மிகப் புனிதமான இடமாகக் கருதப்படும் காபாவில் சிலை வழிபாடு நடந்திருக்கிறது. இஸ்லாம் உருவாவதற்கு முன்பே அரேபிய பகுதிக்கு யூதர்களும், கிறிஸ்துவர்களும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாம் ஒரு புதிய மதமாக அரேபிய பகுதியில் உருவானது. இஸ்லாம் உருவாவதற்கு முன் அரேபிய பகுதிகளில் அரசு, தேசம் போன்ற கட்டமைப்புகள் பூரண பரிணாமம் கொண்டிருக்கவில்லை. பல்வேறு குடிகளுக்கு இடையே உள்ள குடும்ப உறவுகளும், குடி வழக்கங்களுமே எழுதப்படாத விதிகளாக இருந்தன. நிலையான குடிகள் வாழ்ந்த மெக்கா, மதீனா போன்ற நகர்நாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த மைய அரசு, மைய நிர்வாகம் அல்லது அதிகாரம் என்பது உருவாகவில்லை. 

முஹம்மது நபியின் காலத்துக்குப் பிறகு இஸ்லாமியர்கள் தங்களை வழிநடத்தும் மதத் தலைமையையும், அரசியல் தலைமையையும் ஒற்றைத் தலைமையாக இருக்குமாறு அமைத்துக்கொண்டார்கள். இப்படி அமைந்த அரசுகளைக் ‘காலிஃபேட்’ (Caliphate) என்று குறிப்பிட்டார்கள். 

இவ்வாறான இஸ்லாமிய அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைந்த மத - அரசமைப்பு அரேபியர்களுக்குப் பெரும் வரப் பிரசாதமாக அமைந்தது. தங்களுக்குள்ளே தொடர்ந்து பூசலிட்டுக்கொண்டிருந்த பல்வேறு நாடோடிக் குடிகளை மிகக் குறைந்த காலத்தில் ஒரு தேசமாகவும் மதக் குழுவாகவும் திரட்ட இந்த அமைப்பு உதவியது.  பல்வேறு குலங்களைச் சார்ந்த வீரர்களைத் தேவைப்படும்போது திரட்டு அணுகுமுறையில் இருந்து காலிஃபேட்டுக்கு என்று நிலையான ராணுவம் உருவானது இவ்வகையான அரசியல் - மத ஒருங்கிணைப்பு, பிற ஆபிரகாமிய மதங்களை ஒப்புநோக்க இஸ்லாமியர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. 

ரோமப் பேரரசின் வீழ்ச்சியில் இருந்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பு வரையிலாக சுமார் 300 ஆண்டுகள் லெவான்ட் பகுதி பைசாண்டைன் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நிர்வாக வசதி கருதி அதை மூன்று பாலஸ்தீனப் பிராந்தியங்களாக பிரித்து அடையாளப்படுத்தியிருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள்தான்.

லெவான்ட் பகுதியில், ரோம ராஜ்ஜியத்துக்குப் பிறகு மீண்டும் யூத அரசு அமையவே இல்லை. பாலைவனக் காற்றில் தொடர்ந்து வடிவம் மாறும் மணற்குன்றுகளைப் போல, வரலாற்றின் போக்கில் அரசியல், சமூக, மத யதார்த்தங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன.

 

காலிபேஃட் 

முதலில் அரேபிய தீபகற்பம் முழுதும் இஸ்லாமிய காலிஃபேட் அமைப்பின் அதிகாரத்தின்  கீழ் வந்தது.  காலிஃபேட்டின் படைகள் மேலும் மேற்கே நகர்ந்து  பைசாண்டைன் பேரரசின் கீழ் இருந்த லெவான்ட் பகுதிகளையும் (சிரியா, பாலஸ்தீனம், எகிப்து) தனதாக்கிக்கொண்டன. புனித நகரமான  ஜெருசலேம்  முதன்முறையாக அரேபியர் கைவசம் வந்தது. முஹம்மது நபிக்குப் பிறகான காலகட்டத்தில் - நான்கே ஆண்டுகளில் ஜெருசலேம் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பது எப்படிப் பார்த்தாலும் சூறாவளியான ஒரு நிகழ்வுதான்.

புனித இடமான ஜெருசலேத்தில் இஸ்லாமிய மதத்தின் முத்திரையாக ‘டோம் ஆஃப் த ராக்’ (Dome of the Rock) எனப்படும் இஸ்லாமிய கும்மட்டத்தை அங்கு முன்னர் இடிக்கப்பட்ட யூத கோயிலின் சிதிகலங்களின் மேலே எழுப்புகிறார்கள்.  இன்று இஸ்ரேல் பிரச்சினையில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ‘அல் அக்ஸா’ மசூதியின் மத்தியில் இருக்கும் பொற்கூரை வேய்ந்த கும்மட்டம்தான் இது. மெக்கா மதீனாவுக்குப் பிறகு இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமாக இடமாக இது கருதப்படுகிறது.

இஸ்லாமிய அரசின் கீழ் பிற மதத்தினரிடம் மத வரி வசூலிக்கும் ‘ஜிசியா’ முறை அமலில் இருந்தது. என்றாலும், ஒப்புநோக்க பிற மதத்தினரைச் சகிப்புத்தன்மையுடனேயே நடத்தியிருக்கிறார்கள்.  இன்றிருக்கும் சூழலில் இதைப் சொல்வது முரண்நகையாக தோன்றலாம், ஆனால் இஸ்லாமிய காலிஃபேட் ஜெருசலேத்தைக் கைப்பற்றியது யூதர்களுக்கு அப்போது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவே இருந்தது. ரோம மற்றும் பைசாண்டைன் அரசுகளின் காலகட்டத்தில் யூதர்கள் ஜெருசலேத்துக்கு உள்ளேயே வரக் கூடாது என்று கெடுபிடிகள் இருந்ததை நாம் இங்கு நினைவுகூரலாம்.

இஸ்ரேல் பகுதிக்கு பெருமளவு அரேபிய இஸ்லாமியர் குடியேற்றம் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்கிறது. இவர்களே பாலஸ்தீனத்தின் மையத் திரளான மக்களாக இன்றும் நீடிக்கிறார்கள். இந்தக் குடியேற்றங்கள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை. இதற்குள் ஐம்பது தலைமுறைகளாகவது கடந்திருக்கும். 

இந்தக் காலகட்டத்தில் இவர்கள் அங்கு ஏற்கெனவே இருந்துவந்த யூத, கிறிஸ்துவ, ரோம பண்பாடுகளோடு கலந்தும் உறவாடியும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை அடைந்துவிட்டார்கள். அந்தப் பின்புலத்தில் இருந்தே பாலஸ்தீனம் இஸ்ரேலைப் போலவே தங்களுக்கான ஆதிநிலம் என்று உணர்கிறார்கள். எந்த வகையில் பார்த்தாலும் பாலஸ்தீனர்களும் அந்த மண்ணின் மைந்தர்கள்தான். 

இஸ்லாமிய காலிஃபேட் அதன் உச்சக்கட்டத்தில் கிட்டத்தட்ட ரோமப் பேரரசின் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது.  இது முஹம்மது நபி அவர்கள் இறந்து நூறு ஆண்டுகளிலேயே நடந்த அதிசயம். இவ்விதமான அசுர வளர்ச்சியை எந்த மதமும் அதுவரை கொண்டிருக்கவில்லை. இந்த அசுர வளர்ச்சி ஏற்கெனவே பரவலாக கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய சமூகத்திற்கு அச்சம் அளிப்பதாக இருந்தது. கிறிஸ்துவர்கள் புனிதத் தலமான ஜெருசலேம் இஸ்லாமிய ஆளுகைக்குக் கீழ் போனது இதை மேலும் அதிகரித்தது. 

 

புனிதப் போர் 

இஸ்லாமிய பரவல் குறித்த அச்சம் பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் உச்சத்தைத் தொட்டது போப் இரண்டாம் அர்பனின் வழிகாட்டலின் கீழ் மாபெரும் கிறிஸ்துவப் படை திரண்டது. ஜெருசலேமை நோக்கிய அவர்களின் பயணத்தை, புனிதப் பயணம் என்று சொல்லிக்கொண்டாலும் அது புனிதப் போர் என்ற போர்வையில் நிலங்களை அபகரிப்பதாகவே அமைந்தது.

முதலாம் புனிதப் போர் கிறிஸ்துவர்களுக்குச் சாதமாக அமைந்தது. ஜெருசேலத்தைக் கைபற்றினார்கள். ஜெருசலேம் கிறிஸ்துவ ராஜ்ஜியமாக மாறியது. ‘அல் அக்ஸா’, ‘டோம் ஆஃப் த ராக்’ (Dome of the Rock) போன்ற இஸ்லாமிய புனிதத் தலங்கள் கிறிஸ்துவ வழிபாடு நடக்கும் இடங்களாக மாறின.  கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் இவ்விதம் ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் கையில் இருந்தது.  சில ஆண்டுகள் இடைவெளியில் தொடர்ந்து இவ்வாறு பல கிறிஸ்துவ புனிதப் போர்கள் நடந்தன.  சுமார் 200 ஆண்டு இடைவெளியில் இவ்வாறாக 9 புனிதப் போர்கள் நடந்திருக்கின்றன.

அதன் பின் இஸ்லாமிய காலிஃபேட்டின் சார்பில் சலாதீன் கிறிஸ்துவ ஆக்கிரமிப்பாளர்களை வீழ்த்தி ஜெருசலேமை மீண்டும் இஸ்லாமிய ஆட்சியில் கீழ் கொண்டுவந்தார். ஆரம்பக் கட்டத்தில் ஜெருசலேமைக் காரணமாக வைத்து நடந்த இந்தப் புனிதப் போர்கள் பிற்காலத்தில் மிக நேரடியான இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உள்ள நிலத்தைக் கைப்பற்றும் குறிக்கோளை வைத்தே நடத்தப்பட்டன. 

இந்தப் புனிதப் போர்கள் மத நம்பிக்கை எப்படி ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதை மிக அழுத்தமாக அடிக்கோடிட்டன.  கூடவே உலகளாவிய அரசியல் செல்வாக்கு என்பதை கிறிஸ்துவம், இஸ்லாம் என்று இரு எதிரெதிர் துருவங்களாக கட்டமைத்தது.  அந்தப் பிளவு இன்றுவரை தொடர்வதைப் பார்க்கிறோம்.

 

வெறுப்பும் அழிவும் 

ஒருபுறம் பாலஸ்தீனத்தில் மெல்ல இஸ்லாமிய வளர்ச்சி நடந்துகொண்டிருக்க ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு ஏற்கெனவே புலம்பெயர்ந்து சிதறுண்ட யூதர்களை நோக்கி இன்னுமொரு புலப்பெயர்வும், அழிவும் அலையாக எழுந்துவந்தது.  14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் ‘கருப்பு மரணம்’ என்று சொல்லப்பட்ட கொடிய பிளேக் நோய் பரவியது. கொத்துக் கொத்தாக மக்கள் பூச்சிகளைப் போல செத்து விழுந்தார்கள். ஐரோப்பாவின் மக்கள்தொகையில் பாதியை இந்நோய் துடைத்து அழித்தது. 

இந்த நோய் பரவலுக்குக் காரணம் யூதர்களே, மேலும் கிறிஸ்துவர்களை அழிக்க, இஸ்லாமியர்களின் உத்தரவின் பேரில் குடிநீர் கிணறுகளில் விஷம் கலக்கிறார்கள் போன்ற வதந்திகள் வேகமாகப் பரவின.  இன்றைய வாட்ஸப் வதந்திகளுக்குச் சற்றும் சளைக்காத புரளிகள்.  யூத வெறுப்பு என்பது புதிய உச்சங்களைத் தொட்டது.  யூதர்களில் உடமைகள் அழிக்கப்பட்டன, தங்கள் வாழ்விடங்களைவிட்டு துரத்தப்பட்டனர். பலர் கொலையும் செய்யப்பட்டனர்.

பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமாகவே யூதர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாற வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணைகள் பிறப்பித்தன.  முதலில் மனிதர்கள் மதத்தை வடிவமைக்கிறார்கள், பின் மதம் மனிதர்களை வடிவமைக்க ஆரம்பிக்கிறது.  

இப்படி மீண்டும் வெளியேறிய யூதர்களுக்கு துருக்கியைச் சார்ந்த ஆட்டமன் பேரரசு அடைக்கலம் அளித்தது.  வரலாற்றில் இந்தப் புள்ளி வரை யூதர்களை ஓரளவு நல்லபடியாக நடத்தியது இஸ்லாமிய அரசுகளே என்பதைக் காணலாம்.  ஆச்சரியகரமாக ஐரோப்பாவில் யூதர்களுக்கு இன்னுமொரு அடைக்கலம் கிடைத்தது.  போலாந்து மற்றும் லித்துவேனிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பு யூதர்களை உவந்து ஏற்றுக்கொண்டது.  அவர்களுக்கு நிலம் வாங்கவும், மத வழக்கங்களைப் பின்பற்றவும் அனுமதி வழங்கியது. 

இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் யூதர்கள் போலாந்துக்குப் புலம்பெயர்ந்தார்கள்.  16, 17ஆம் நூற்றாண்டுகள் யூதர்கள் வரலாற்றின்  பொற்காலமாகப் பார்க்கப்படுகின்றன.

இதுவும் அதிக நாள் நீடிக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் போலாந்துக்கும் உக்ரைனுக்கும் (உக்ரைன் அப்போது ரஷ்யாவின் பகுதி) நடந்த போரில் முன்னூறுக்கும் மேற்பட்ட யூத சமூகங்கள் அழிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த யூத அழிப்பை ரஷ்ய மொழியில் ‘போக்ரோம்’ (Pogrom) என்கின்றனர்.  யூத அழிப்பைச் சுட்ட முதன்முதலாக பயன்பட்ட இந்தச் சொல்தான் இன்று உலகம் முழுதும் இன அழித்தொழிப்பைச் சுட்டும் பொதுவான சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

சென்ற இடமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் ஒடுக்குமுறையும் வெறுப்பு அவர்களைத் தொடர்ந்துகொண்டே வந்திருக்கிறது.  வரலாற்றில் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு உருவாகும் வெறுப்பு, பின் காரணங்களே இல்லாமல் நுரை போல பெருகிறது.

 

அமெரிக்கா னும் கனவுலகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் புத்துலகமான அமெரிக்கா, உலகெங்கிலும் புதிய வாழ்வைத் தேடி வருபவர்களுக்கு ஒரு கனவுலகமாக இருந்தது.  ஐரோப்பாவில் இருந்து பெருமளவு மக்கள் அமெரிக்காவுக்குக் குடியேறினார்கள்.  யூதர்களுக்கு இது கடவுளே அளித்த வாய்ப்பாக வந்து சேர்ந்தது.  1920 வரையான காலகட்டத்தில் உலகெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 25 லட்சம் யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். 

இன்று உலகில் உள்ள யூதர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.  ஒருவகையில் அமெரிக்கா யூதர்களின் மற்றுமொரு ‘பிராமிஸ்டு லேண்ட்’ (Promised Land)ஆக மாறிவிட்டிருக்கிறது.  வரலாற்றில் யூதர்களுக்கு நிகழ்ந்த மிகப் பெரும் திருப்புமுனையாக இதைச் சொல்லலாம். 

இந்தக் காலகட்டத்தில்தான் தங்களுக்குத் தனியே ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் யூதர்களிடம் வலுப்பெற ஆரம்பிக்கிறது. இந்தக் கோரிக்கைக்கு மேற்கத்திய நாடுகளின் பரவலான ஆதரவும் கிடைக்கிறது. 

இருபதாம் நூற்றாண்டின் மனசாட்சி காலங்காலமாக ஒவ்வொரு நாடாக துரத்தி அடிக்கப்பட்ட யூதர்களுக்குத் தனி நாடு எனும் கோரிக்கை நியாயமானதே என்று கருதியது.  புதிய இஸ்ரேல் உருவானபோது அதை அமெரிக்கா, ரஷ்யா என்ற இரண்டு துருவங்களும் உடனடியாக அதை அங்கீகரித்தன. பெரும் உத்வேகத்துடன் புதிய உலகில் அடியெடுத்துவைத்தது இஸ்ரேல்!

(தொடந்து பேசுவோம்) 
 

https://www.arunchol.com/karthik-velu-on-palestine-and-islam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்பு

spacer.png


தினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை ஐரோப்பாவின் இருண்ட காலம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.  ஐரோப்பிய மக்கள்தொகையைப் பாதிக்குப் பாதி அழித்த பிளேக் நோய், பயனற்ற புனிதப் போர்கள், நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பின் கீழ் தடுமாறும் பொருளாதாரம் என்று நோய்மையான காலகட்டமாக அது இருந்தது.  இதற்குப் பிறகான 200-300 ஆண்டுகளின் காலகட்டம்தான் ஐரோப்பிய மறுமலர்ச்சி (Renaissance) காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. 

கலை, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், சிந்தனை எனப் பல துறைகளில் புதிய பாய்ச்சலை நிகழ்ந்தது. மைக்கல் ஏஞ்சலோ, டாவின்சி, ஷேக்ஸ்பியர், மில்டன், கலிலீயோ போன்ற ஆளுமைகள் எல்லாம் இந்தக் காலகட்டத்தவர்களே. 

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகா உட்பட இன்று ஐரோப்பாவில் கம்பீரமாக நிற்கும் பல ரோமன் பாணி கட்டிடங்கள் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவைதான்.  இந்த மறுமலர்ச்சி அலையின் இயல்பான அடுத்த கட்டமாக காலனியாதிக்கம் நிகழ்ந்தது. 

தேசியவாதத்தின் நிலைப்பாடு

அதிகாரத்தைக் கையாளும் இடத்திலிருந்து மதம் ஒரு அடி பின்னே நகர்ந்துகொள்ள, அந்த இடத்தை வணிகம், தொழில்நுட்பம், நிர்வாகம் போன்ற திறன்களைக் கொண்டிருந்த காலனியாதிக்கம் பிடித்துக்கொண்டது.  உலகெங்கிலும் காலனிகள் உருவாக்கப்பட்டு, அங்கிருந்த செல்வங்கள் சுரண்டி எடுக்கப்பட்டு ஐரோப்பாவில் கொண்டுவந்து கொட்டப்பட்டன. 

பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பாவை ஒப்புநோக்க இந்தியாவும், இஸ்லாமிய அரசுகளும் செல்வச் செழிப்பு கொண்ட நாடுகளாக இருந்தன.  இருநூறு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. 1900 வாக்கில் ஐரோப்பா அசைக்க முடியாத பொருளியல் மற்றும் அரசியல் சக்தியாக மாறிவிட்டிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட லெவான்ட் பகுதியும் அரேபிய தீபகற்பமும் ஆட்டமன் (துருக்கி) பேரரசின் கீழ் இருந்தன.  இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனம் பெரும்பான்மை இஸ்லாமிய நாடாகவே இருந்தது. மக்கள்தொகையில் 8% மட்டுமே யூதர்களாக இருந்ததை ஆட்டமன் ஆவணங்கள் சுட்டுகின்றன. 

காலனியாதிக்கத்தின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஓர் எதிர்வினையாக தேசியவாத கருதுகோள் காலனிய நாடுகளில் பெரும் விசையுடன் எழுந்துவந்தது. அதாவது புவியியல், வரலாறு, பண்பாடு, மொழி போன்ற விஷயங்களில் தங்களை ஒரு தேசமாக (Nation) உணரும் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள ஓர் அரசாக (state) இருக்க வேண்டும் என்பதே தேசியவாதத்தின் நிலைப்பாடு. இந்த நவீன தேசியவாத கருதுகோள் என்பதே முதலில் ஐரோப்பாவில் உதித்த விஷயம் என்பது இங்கு ஒரு நகைமுரண்.

ஆட்டமன் பேரரசில் இந்தக் கோரிக்கை இரண்டு தரப்பில் இருந்தும் உருவாகிவருகிறது. ஒருபுறம் அரபு இஸ்லாமியர்கள் அனைத்து அரபு இனங்களையும் உள்ளடக்கிய ஓர் அரபு நாடு வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதேசமயம் உலகெங்கிலும் யூதர்களிடம் தங்களுக்கு என ஒரு தாய்நாடு வேண்டும் என்ற எண்ணம் (Zionism) மேலும் வலுப்பெற ஆரம்பிக்கிறது. 

நெடுங்காலமாக பேச்சில் மட்டுமே இருந்துவந்த இந்தக் கோரிக்கையை, முதலாம் உலகப் போர், நிறைவேறக்கூடிய கோரிக்கைதான் என்ற நம்பிக்கையை அளித்தது. 

 

பிரிட்டனின் திரைமறைவு பேரம்

முதலாம் உலகப் போரில் இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா ஓரணியாகத் திரளவே, ஜெர்மனி, ஆஸ்திரிய, ஆட்டமன் அரசுகள் எதிரணியாக திரண்டன. துருக்கியில் இருந்து பிரிந்து தனி தேசம் அமைத்திட வேண்டும் என்ற அரபிகளின் ஆசையை பிரிட்டன் ஆதரிப்பதாக ஒப்புக்கொண்டது.

துருக்கியர்களும், அரேபியர்களும் இஸ்லாமை பின்பற்றுவோர்தான் என்றாலும் வெவ்வேறு மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுவழியைக் (ancestry) கொண்டவர்கள். இருவருக்குமான விலக்கம் இன்றுமே தொடர்கிறது,

மற்றொருபுறம் யூத தேசியவாதிகளிடமும் யூதர்களுக்கு என்று ஒரு தனிநாடு உருவாக உதவுவோம் (Balfore Declaration,1917)  என்று எழுத்துப்பூர்வமாக வாக்களித்த அதேவேளையில் அரபு தேசியவாதிகளுக்கு அனைத்து அரபு நிலங்களையும் (Henry McMohan Pledge, 1916) திரும்ப அளிப்போம் என்றும் வாக்களித்தது. 

இந்த ஆவணங்களின்படி இரண்டு தரப்புமே பாலஸ்தீனம் தங்கள் வசம்தான் வரும் என்று எதிர்பார்த்திருக்கும்போது, பிரிட்டன் திரைமறைவில் முற்றிலும் வேறொரு பேரத்தை நிகழ்த்தியது. தனது கூட்டாளியான ஃப்ரான்ஸுடன் சேர்ந்துகொண்டு எப்படிப் போரில் வென்ற ஆட்டோமன் நிலங்களைப் பங்கிட்டுக்கொள்வது என்று ரகசிய உடன்படிக்கை பேசியது. இதேதான் இந்தியாவிலும் நடந்தது. 

முதலாம் உலகப் போரில் இந்தியா பிரிட்டனின் சார்பாக போராடினால் இந்தியாவுக்குச் சுய நிர்ணய உரிமை அளிப்போம் என்று வாக்களித்தார்கள்.  போர் முடிந்த பிறகு அந்த வாக்கு காற்றில் பறந்தது.  அதற்குப் பதிலாக போராட்டங்களை முடக்கும் ரவ்லட் சட்டம் கொண்டுவந்து மக்களை இன்னும் நெருக்கினார்கள்.  அது ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முடிந்தது.

 

பிரிட்டனின் குறிக்கோள்

பிரிட்டனுக்கு மத்திய கிழக்கை ஆளுவதைவிட தனது காலனியான இந்தியாவுக்குத் தங்கு தடையின்றி கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதிசெய்வது மிக முக்கியமான குறிக்கோளாக இருந்தது இருந்தது.  அதற்கு சூயஸ் கால்வாய் வழி போக்குவரத்து இன்றியமையாததாக இருந்தது. சூயஸ் கால்வாய் வழி தடைபட்டால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போகும் தூரம் கிட்டத்தட்ட 9000 கிமீ அதிகரிக்கும், அதற்காகவே அது முதலில் எகிப்தை ஆட்டோமன் கட்டுப்பாட்டில் இருந்து தனது கட்டுப்பாட்டுக்குக் (Protectorate) கொண்டுவந்தது. 

எனவே, பிரிட்டனின் முதன்மையான குறிக்கோள் சூயஸ் கால்வாயைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தல், அந்த வழியில் இருக்கும் துறைமுகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்தல், மற்றும் எண்ணெய் வளம் கொண்ட பகுதிகளைத் (ஈராக்) தனதாக்கிக்கொள்ளல். இன்று உலகெங்கும் பரவி இருக்கும் ‘பீபி – பிரிட்டிஷ் பெட்ரோலியம்’ (BP - British Petroleum) நிறுவனம் உருவானதே ஈராக்கில்தான் என்பதில் இதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அரபுத் தரப்பும், யூதத் தரப்பும் இந்தக் காலனியாதிக்க நாடுகளில் சுயநலப் போக்கில் குழப்படிகள் வந்துவிடும் என்று அஞ்சி அவர்களே நேரடியாக சந்தித்து ஓர் உடன்படிக்கை (Faisal-Weizmann Agreement) செய்துகொண்டனர். இந்த உடன்படிக்கையின்படி பாலஸ்தீனம் யூதர்களின் நாடாக இருக்கும் அது தவிர பிற அனைத்து இடங்களும் அரபு நாடாக இருக்கும்.

இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை நல்கும் என்றிருந்தது. கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போலிருக்கும் உடன்படிக்கை இது. இந்த ஆவணத்தின்படி மட்டும் பிரிட்டன் நடந்திருந்தால், வாக்களித்ததுபோலவே அவரவருக்கு அவரவர் இடத்தை அளித்துவிட்டிருந்தால் இன்று இந்தப் பிரச்சினையின் வீரியம் வெகுவாக குறைந்திருக்கும். யூதர்களும் அரபிகளும் எப்படியோ ஓர் அரசியல் உடன்படிக்கைக்கு வந்திருப்பார்கள்.

 

மேண்டேட்

இதில் விதி அதன் போக்கில் நகர்ந்தது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு வென்ற நாடுகளை என்ன செய்வது என்று விவாதிக்க நடந்த பாரிஸ் அமைதி மாநாட்டில் எந்தப் பகுதி யார் அதிகாரத்தின் கீழ் வரும் என்பதைப் போரில் வென்ற நாடுகளே முடிவுசெய்தனர். இதில் அரபுத் தரப்போ, யூதர்கள் தரப்போ கருத்தில் கொள்ளப்படவில்லை. அதன்படி பாலஸ்தீனம், ஈராக், ஜோர்டன் பகுதிகள் பிரிட்டனின் கீழ் வந்தது (எண்ணெய் கிணறுகள், துறைமுகங்கள்) சிரியா, லெபனான் பகுதிகள் ஃபிரெஞ்சு நாட்டின் கீழ் வந்தது (ஃப்ரான்ஸுக்குச் சிரியாவுடன் ஏற்கெனவே நீண்ட வணிகப் பாரம்பரியம் உண்டு).

காலனியாதிக்க அரசுகள் போருக்கும் பின்னான இந்தத் தொடர் ஆக்கிரமிப்பை ‘மேண்டேட்’ (Mandate) என்று சொல்லிக்கொண்டார்கள். அதாவது, இந்தப் பகுதிகளை நாங்கள் ஆளவில்லை மாறாக இந்தப் பிரச்சினைகள் முடியும் வரை ஒரு ‘டிரஸ்டி’ போல நிர்வகிக்கிறோம் என்ற அணுகுமுறையை முன்வைத்தார்கள். அப்படி டிரஸ்டி என்ற பேரிலேயே பிரிட்டன் முப்பது ஆண்டுகாலம் தனது காலனியாதிக்கத்தை நீட்டித்துக்கொண்டது.  அதாவது, இந்தியா சுதந்திரம் பெறும் அவர்கள் கையைவிட்டுப் போகும் வரை. 

spacer.png

சரி அப்படித்தான் ஒரு டிரஸ்டியாக இருந்து பிரச்சினைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வை உருவாக்கினார்களா என்றால் அதுவும் இல்லை. பிரிட்டன் பாலஸ்தீன நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பேல்ஃபோர் அறிக்கையின்படி உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற வழிவகுத்தது.  ஆனால், பாலஸ்தீனத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று நிர்ணயித்தது. 

எண்பது சதவிகிதத்துக்கும் மேல் இஸ்லாமியர் வாழும் பாலஸ்தீனப் பகுதியில் அமையவிருக்கும் அரசில் தங்களுக்கு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை  இருக்காது என்ற சாத்தியம் இஸ்லாமியர்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கிறது. யூதர்களுக்கும் இஸ்லாமியர்களும் இடையே முதன்முறையாக அது நேரடி மோதலாக வெடித்தது. 

வெடித்த குற்ற உணர்வு

பிரிட்டனுக்குப் பாலஸ்தீன ‘மேண்டேட்’ (Mandate) கிடைத்தபோது அங்குள்ள மக்கள்தொகையில்  யூதர்கள் வெறும் 5%தான்.  ஆனால், அடுத்த இருபது ஆண்டுகளில் அது 30%ஆக அதிகரித்தது.  பாலஸ்தீன அரபிகளிடம் இது பெரும் அதிருப்தியை உருவாக்கியது.  தனி நாடு கிடைக்கவில்லை, இருக்கும் நாட்டிலும் பெருமளவு யூதக் குடியேற்றம், அவர்களுக்கான நிலம், பிற வசதிகள் என்று ஒரு தொடர் பதற்றத்தை உருவாக்கியது.

யூதக் குடியேற்றத்தைப் பிரிட்டன் மிகவும் பொறுப்பற்றுக் கையாண்டது. அதனால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே தொடர் மோதல்கள் உருவாகின.

தன் தவறை உணர்ந்த பிரிட்டன் யூதக் குடியேற்றத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது.  பாலஸ்தீனத்துக்குள் வரும் யூதர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.  இந்தக் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய குழுக்கள் வன்முறையில் இறங்கினர். அதற்குள் இரண்டாம் உலகப் போர்  ஆரம்பித்துவிட இவை அனைத்தைக் காட்டிலும் பெருங்கொடுமை அரங்கேறியது. 

ஹிட்லரின் கீழ் யூதர்கள் கொத்துக் கொத்தாக கொன்று ஒழிக்கப்பட்டனர். அமெரிக்கப் படைகள் தலையிட்டு ஹிட்லரை முடக்குவதற்குள் 60 லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டிருந்தனர்.  மனிதன் இவ்வளவு கொடூரமானவனா என்று வரும் தலைமுறைகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொள்ளும் வண்ணம் நம் வரலாற்றில் மாபெரும் இன அழித்தொழிப்பு நடந்தேறியது.  இது ஒட்டுமொத்த ஐரோப்பியக் குற்ற உணர்வாக வடிவெடுத்தது. 

இந்த அழிவுக்குத் தப்பிவந்த யூதர்களை ஏற்பதைத் தவிர பாலஸ்தீனத்துக்கு வேறு வழி இருக்கவில்லை.  மீண்டும் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் மோதல்கள் வெடித்தன.  நிலமை கைக்கு மீறிப்போவதை உணர்ந்த பிரிட்டன், பாலஸ்தீனத்தின் சிக்கை அவிழ்க்கும் வேலையைப் புதிதாக உருவாகியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கைகளில் ஒப்படைத்துவிட்டது. 

ஐக்கிய நாடுகள் சபையும் பாலஸ்தீனத்தை இரண்டு நாடுகளாகப் பிரிக்க முடிவெடுத்தது (Resolution 181)  – யூதர்களுக்கு இஸ்ரேல் , அரபிகளுக்குப் பாலஸ்தீனம் என்று.  இந்த முடிவை யூதர்கள் ஏற்றார்கள், ஆனால் அரபிகள் சார்பில் இது ஏற்கப்படவில்லை. 

 

சிக்கலான வரலாறு

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தத் திட்டம் ஏற்கப்பட்டதுமே பாலஸ்தீன யூதக் குழுக்களுக்கு இடையே உள்நாட்டுக் கலவரம் வெடித்தது.  சீக்கிரமே பிரிட்டனும் நாட்டைவிட்டு வெளியேறியது (1948).  பிரிட்டன் வெளியேறிய அடுத்த நாளே ஐக்கிய நாடுகள் சபை வகுத்த திட்டத்தின்படி இஸ்ரேல் தனக்கு அளிக்கப்பட்ட பகுதிகளைக் கையகப்படுத்திக்கொண்டு புதிய நாடாக அறிவித்துக்கொண்டது.  இந்த முடிவை ஏற்காத அரபு நாடுகள் அனைத்தும் இஸ்ரேலைத் தாக்க ஆரம்பித்தன. 

அன்று ஆரம்பித்த அரபு, இஸ்ரேல் தேசங்களுக்கான மோதல் போகப்போக அதிகரித்தபடிதான் போனது. யூதர்களுக்கு இது சுதந்திரப் போர், ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு இது பேரழிவு (Al-Nakba).  கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பாலஸ்தீன அகதிகள் சுற்றியுள்ள நாடுகளைக்கு அடைக்கலம் புகுந்தார்கள்.

இதுவரை நாம் கண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் சுருக்கமான வரலாறே எவ்வளவு சிக்கலானது என்று பார்த்தோம், ஆனால் அதை வெறும் காலனியாதிக்க தந்திரமாக பிரிட்டன் கருதியது சற்றும் பொறுப்பற்ற செயல். மூன்று குதிரைகளுக்கு ஒரே கேரட்டைக் காட்டி தனக்கு வேண்டிய காரியத்தை முடித்துக்கொண்டது.  துப்பாக்கி எங்கிருந்தோ வந்திருக்கலாம் தோட்டாவும் எங்கிருந்தோ வந்திருக்கலாம், ஆனால் அதைச் சுண்டிய விரல்கள் பிரிட்டனின் விரல்களே. 

இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் அறையில் ஒரு அடுப்பைப் பற்றவைத்துவிட்டு, விளையாடிக்கொண்டிருங்கள் நான் போய்வருகிறேன் என்று நழுவிட்டது. இப்போது அவர்கள் நெருப்போடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

(தொடர்ந்து பேசுவோம்)
 

https://www.arunchol.com/karthik-velu-on-palestine-and-colonial

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?

கார்த்திக் வேலு

spacer.png

பாலஸ்தீன மக்கள் கொஞ்சம் தாமதமாகவே ஒரு சிக்கலைப் புரிந்துகொண்டார்கள்.  அது அனைத்து அரபு நாடுகளும் அவர்களின் தேவை மற்றும் அவர்களின் பார்வை சார்ந்தே நடந்துகொள்கிறார்கள் என்கிற புரிதல்.  தங்களை முதன்மையாக தாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

யாசர் அராபத், 1964இல் ‘பாலஸ்தீன விடுதலை இயக்க’த்தை (PLO) துவங்கினார்.  பாலஸ்தீனத்தின் முதல் உலகளாவிய முகமானார்.  பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆரம்பக் காலத்தின் இஸ்ரேலை வீழ்த்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிந்தது.  ஆனால், போகப்போக நடைமுறை நிதர்சனங்களை ஏற்று தனது அணுகுமுறையில் சமரசங்களைச் செய்துகொண்டது. 

அமைதிக்கு விலை உயிர்

இஸ்ரேல் உருவாகியது முதல், அதை ஏற்றுக்கொள்ளாத அரபு நாடுகள் 1967இல் ஒன்றுசேர்ந்து அதைத் தாக்க முடிவெடுத்தன. இஸ்ரேலைச் சுற்றி மூன்று புறமும் படைகளையும் தளவாடங்களையும் குவித்தன.  எகிப்தின் அதிபர் நாசர் இஸ்ரேலை அழிப்பதே தங்கள் நோக்கம் என்று அறிக்கை விட்டார்.  இஸ்ரேல் சூழ்நிலையின் ஆபத்தைக் கணித்து அரபு படைகளை முந்தித் தாக்கியது (pre-emptive strike). 

அரபு படைகளைத் தாக்கிப் பெரும் ராணுவ வெற்றியை ஈட்டியது. இஸ்ரேல் ஒட்டுமொத்த பாலஸ்தீனப் பகுதியையும் ஆக்கிரமித்தது போதாதென்று எகிப்து, ஜோர்டன் போன்ற நாடுகளின் சில பகுதிகளையும் பிடித்துக்கொண்டது. 

இந்தத் தோல்விக்குப் பிறகு அரபு நாடுகள் கூடி புகழ்பெற்ற ‘கார்ட்டோம் தீர்மான’த்தை (Khartoum Resolution) நிறைவேற்றினர்.  ‘இஸ்ரேலை ஏற்க மாட்டோம்; இஸ்ரேலுடன் பேரம் பேச மாட்டோம்; இஸ்ரேலுடன் அமைதி இல்லை’ (Three No’s) எனும் மூன்றே வரிகளைக் கொண்ட புகழ்பெற்ற தீர்மானம் அது.

அதாவது, சண்டை மட்டுமே ஒரே வழி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற நிலைப்பாடு.  எனவே, இந்த விவகாரத்தில் எல்லா தரப்புமே ஏதோ வகையில் அமைதியை வேண்டுவதான ஒரு பிம்பம் பிழையானது.  அரபு லீக்கின் இந்த நிலைப்பாடு 2002 வரை தொடர்ந்தது.  அப்படியும் இதை மீறி அமைதிக்கு முயன்றவர்கள் துயர்மிகு முடிவை எதிர்கொண்டனர்.  

இதில் 1978இல், எகிப்து – இஸ்ரேலுக்கு இடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தில் (Camp David) கையெழுத்திட்ட அன்வர் சதாத் ஓரிரு வருடங்களில் எகிப்தில் உள்ள தீவிரவாத அமைப்பினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அன்வருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது, ஆனால் ஆள் காலி.

இஸ்ரேல் தரப்பிலும் இதே கதைதான்.  அமைதி நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைப் பாலஸ்தீனர்களுக்குத் திருப்பி அளிக்கும் ஓஸ்லோ உடன்படிக்கையில்  (Oslo Accord) யிட்சாக் ரபீன் கையெழுத்திட்டார்.  மிக முக்கியமான உடன்படிக்கை இது. அமைதி திரும்ப பிரகாசமான வாய்ப்பிருந்த புள்ளி இது. ஆனால், அவரும் ஒரு வலதுசாரி யூத மாணவனால் கொல்லப்பட்டார். 

இவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.  பிஎல்ஓ தலைவரான அராபத் மறைவும் சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. என்ன நோய் என்றே கண்டுபிடிக்க முடியாமல் நான்கே வாரங்களில் உடல்நலம் குன்றி உயிரிழந்தார். 

திறந்த வெளிச் சிறை

இதன் பிறகான காலகட்டத்தில் இஸ்ரேலிய அரசியலில், வலது அரசியலர்களின் கை ஓங்கியது.  2005 காலகட்டத்துக்குப் பிறகு இது தீவிர வலதாக மாறியது.  இன்றிருக்கும் நெத்தனயாஹூவின் அரசு இதுவரை இஸ்ரேல் கண்டதிலேயே தீவிர வலதுசாரி அரசு.  அதேபோல பாலஸ்தீன விடுதலை போராட்டம் இன்னும் தீவிரமான வன்முறையைக் கைக்கொள்ள ஆரம்பித்தது. 

பிஎல்ஓவின் மென்போக்கை நிராகரித்து உருவானதே ஹமாஸ்.  இன்று ஹமாஸைவிடவும் தீவிரவாத நிலைப்பாட்டைக் கடைபிடிப்பது காஸாவில் இருக்கும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு. காலம் செல்லச் செல்ல எப்படி இந்தப் பிளவும் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை நாம் கண்ணுக்கு நேரே காண்கிறோம்.  

இதற்கிடையில் பாலஸ்தீன மக்களிடம் இருந்தே நேரடியான எதிர்ப்பு அலையாக உருவாகிவந்தது.  இதை மக்கள் எழுச்சி (Intifada) என்கின்றனர்.  அனைத்து தரப்பாலும் கைவிடப்பட்ட பாஸ்தீன மக்கள் தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி ராணுவத்துடன் மோதினர்.  இதுபோன்ற மக்கள் எழுச்சி இரண்டு முறை வெடித்தது, அது 1987 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில்.  

வேதனைக்குரிய வகையில் இதில் அதிகம் உயிரிழந்தது பாலஸ்தீன மக்கள்தான்.  வேறெதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பைக் காட்ட உயிரையே ஆயுதமாக்கினர்.  இஸ்ரேலியர் மீதான தற்கொலை தாக்குதல்கள் (Suicide Bombing) ஆரம்பித்தன.  இதுபோன்ற தாக்குதல்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 என்று எகிறியது.  இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய ராணுவம் தாக்குப்பிடித்தாலும் இது இஸ்ரேல் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியது. 

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் வசிப்பிடங்களை முற்றிலும் பிரித்து வைக்கும் முயற்சி இந்தக் காலகட்டத்தில்தான் தீவிரம் கொண்டது. இஸ்ரேலியக் குடியிருப்புகளைச் சுற்றி 8 மீட்டர் உயரம் கொண்ட பிரம்மாண்டமான கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டன.  பாலஸ்தீனப் பகுதிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 300 ராணுவ சோதனைச் சாவடிகள் உள்ளன. பாலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்வு என்பது ஒரு மாபெரும் திறந்த வெளிச் சிறையாகத்தான் இருக்கிறது.

அமெரிக்காவின் பங்கு

இந்தப் பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கும் மிக முக்கியமானது. உலகிலேயே அமெரிக்காவிடம் இருந்து மிக அதிகபட்சம் நிதி உதவி பெறும் நாடு இஸ்ரேல்.  இஸ்ரேல் உருவான சமயத்தில் இருந்து இதுவரை அமெரிக்கா இஸ்ரேலுக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.13 லட்சம் கோடி நிதி அளித்திருக்கிறது.

இஸ்ரேல் அமைப்புகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் பல அமைப்புகளில் இருந்தும் நேரடி நிதி வருவதுண்டு.  கணக்கெடுப்புகளின்படி உலக அளவில் சுமார் ஒன்றரை கோடி யூதர்கள் இருக்கிறார்கள்.  இதில் 40% பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.  எனவே, அமெரிக்க அரசியலில் யூதர்கள் லாபி இருப்பதும் உண்மை.  ஆனால், இதுபோன்ற லாபிகள் (AIPAC) வெளிப்படையானவை, அமெரிக்கச் சட்டங்கள் இதை அனுமதிக்கின்றன.

ஆனால், இன்னொரு ஆச்சரியகரமான விஷயம் உண்டு.  இன்று இஸ்ரேலுக்கு வரும் ஆதரவு அமெரிக்க யூதர்களைக் காட்டிலும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்துவ (Christian Zionists) அமைப்புகளிடம் இருந்தே வருகிறது.  அவர்களில் நிலைப்பாட்டின்படி இஸ்ரேல் நிலப்பகுதி கடவுளால் யூதர்களுக்கு வழங்கப்பட்டது, எனவே அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சொந்தமே என்பது. 

அமெரிக்காவில் எந்தக் கட்சியைச் சார்ந்த அதிபர் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு விஷயத்தில் மட்டும் அவர்கள் கையை வைக்க முடியாது. ஒன்று, துப்பாக்கி உடமை சட்டங்கள், மற்றொன்று இஸ்ரேல் ஆதரவு. 

அமெரிக்காவில் உள்நாட்டு அரசியல் நிதர்சனம் இது.  இதுபோக மற்றுமொரு புவியரசியல் சார்ந்த குறிக்கோளும் அமெரிக்காவுக்கு உள்ளது.  இஸ்ரேல் என்பது அரபு நாடுகளின் மத்தியில் இருக்கும் தனது வலது கை என்று அமெரிக்கா கருதுகிறது.  இஸ்ரேலுக்கு அமெரிக்காவைவிட பெரிய துணை கிடைக்கப்போவதில்லை. 

இஸ்ரேல் ராணுவ பலத்திலும் தொழில்நுட்பத்திலும் இஸ்ரேலுக்கு இணையாகவே அமெரிக்காவுக்கு நன்மை உண்டு.  அரபு நாடுகள், ஒற்றை அரபு சக்தியாக ஒன்றாக திரண்டுவிடாதபடி இருக்கும் முட்டுக்கட்டையாகவும் இஸ்ரேலை அமெரிக்கா பார்க்கிறது. 

 

துணை தேசியங்கள்

அரபு நாடுகளில் தரப்பிலும் பல போதாமைகள் உள்ளன.  மொத்த அரபு நாடுகளும் ஒரு நாடாக இருக்க வேண்டும் என்றுதான் ஆரம்பக் கால கோரிக்கையாக இருந்தது.  ஆனால், சீக்கிரமே அவை உடைந்து தனித்தனி நாடுகளாகிவிட்டன.  எல்லா நாடுகளுமே அரபு இனக்குழுவை, ஒரே மதப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் அவரவருக்கான தனித்துவமான கலாச்சார இணைவுகொண்டவை (shared reality) என்று உணர்ந்துகொண்டன.  சிரியா, ஜோர்டன், சிரியா இடையே பொதுமை இருந்தாலும் இவை அனைத்துமே தமக்குள் அடங்கிய தனித்தக் கலாச்சார அடையாளங்களைக் கொண்டுள்ளன.

இந்நாடுகள் தாங்கள் ஒற்றை தேசியத்துக்கு மாறாக பல்வேறு துணை அல்லது தனி தேசியங்கள் என்பதை உணர்ந்துகொண்டன.  எனவே, பாலஸ்தீனம் என்னவோ ஒட்டுமொத்த அரபு நாடுகளின் சிக்கல் போன்று அவர்கள் ஆரம்பத்தில் வடித்துக்கொண்ட சித்திரத்தின் நிதர்சனம் இன்று முற்றிலும் வேறாக உள்ளது.  இல்லையென்றால் பாலஸ்தீனத்தை விட்டுவிட்டு மற்ற எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து இருக்கலாமே. 

ஒரு பிரச்சினை இரண்டு தரப்புக்கும் இடையிலான (Bi-lateral) பிரச்சினை என்று இருக்கும்போது அதில் தீர்வுக்கான சாத்தியக்கூறு அதிகம்.  அந்தப் பிரச்சினையில் நேரடியாக சம்பந்தம் இல்லாதவர்கள் (multi-lateral) பின்னே அணித் திரளும்போது அது பூனைக் குட்டிகள் உருட்டி விளையாடும் நூல்கண்டு போல பிரித்தெடுக்கவே முடியாத சிக்கலாகிவிடும். 

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை இப்படியான ஒரு நிலைக்கு எப்போதோ நகர்ந்துவிட்டது.  பெயருக்குதான் இது இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையே ஒழிய இதில் உலக நாடுகள் அனைத்தும் துண்டைப் போட்டு வைத்திருக்கின்றன.  இந்தப் பிரச்சினையைக் காரணம் காட்டிக்கொண்டு அவரவர் நாடுகளில் பல்வேறு புது பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். 

 

பாதிப்பு யாருக்கு?

இதில் ஒட்டுமொத்த பாதிப்புக்கு ஆளாவது ஒரு சராசரி பாலஸ்தீனியர்தான். இஸ்ரேலுக்கு எப்படியோ தனக்கான நாடு என்று உறுதியாகிவிட்டது. அந்த நிலத்தில் தொழில்நுட்பரீதியாக, ராணுவரீதியாக தன்னை வலுவான நாடாக நிறுவிக்கொண்டுவிட்டது.  அமெரிக்கா எப்போதும் பின்னுக்குத் துணை நிற்கிறது.  போர்ச் சூழலில் வாழ்ந்தாலும் மக்கள் சுபிட்சமாகவே, சந்தோஷமாகவே இருக்கிறார்கள். 

ஆனால், பாலஸ்தீனம் அப்படி அல்ல.  தன் நாட்டில் சரியான அரசு இல்லை. நிலையான நிர்வாகம் இல்லை உள்கட்டுமானம், கல்வி, வேலைவாய்ப்பு எதுவுமே திருப்திகரமாக இல்லை. பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறவும் முடியாது.  தங்கள் பகுதியில் இருந்து ஹமாஸ் போன்ற அமைப்புகள் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு வரும் குண்டுகள் அவர்கள் தலையில்தான் விழுகின்றன. 

அவர்களுக்கான வலுவான அரசியல் தலைமை இல்லை.  யார் யாரோ அவர்களுக்காக பேசுகிறார்கள், போராட்டத்தில் இறங்குகிறார்கள், ஆனால் அது எதுவுமே பாலஸ்தீனியர்களுக்குச் சிறிதும் நன்மை பயப்பதாக இல்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இரண்டு தனித்தனி நாடுகளாகத்தான் இருக்க முடியும்.  ஒரு நாட்டின் இருப்பு இன்னொரு நாட்டின் இருப்பை அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது. இஸ்ரேல் செய்துகொண்டிருக்கும் பெரும் பிழை பாலஸ்தீனப் பகுதிகளில் யூதக் குடியிருப்புகளைத் தொடர்ந்து அனுமதிப்பதுதான்.  அந்தக் குடியிருப்புகளை அகற்றிவிட்டு யூதர்களைப் பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். 

அமெரிக்கா இஸ்ரேலின் முக்கியமான கூட்டாளியாக இந்தக் குடியிருப்புகளைக் கண்டும் காணாமல் போவது அதைவிட தவறு.  இந்தக் குடியேற்ற காலனியத்தை (Settler colonisation) உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. 

 

ஊடகங்களின் செயல்பாடுகள்

அரபு நாடுகள் உதவுகிறோம் என்கிற பெயரில் பாலஸ்தீனத்தைப் பணயம் வைத்து சூதாடுகின்றன.  பாலஸ்தீனத்துக்குப் போராடுகிறோம் என்று சொல்லும் இந்த நாடுகள் பாலஸ்தீன அகதிகள் வந்தால் ஏற்பதில்லை.  கேட்டால் பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறினால் அந்தத் தனி நாட்டுக்கான கோரிக்கை வலுவிழக்கும் என்கிறார்கள். 

அப்போது பாலஸ்தீன மக்கள் அங்கேயே அடைபட்டுச் செத்தாலும் பரவாயில்லை, வேறு நாடுகளுக்குப் போனால் பிரச்சினை இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.  பாலஸ்தீன மக்களைப் பிணையக் கைதிகளாகப் பார்க்கும் நிலைப்பாடு இது.  ஹமாஸ் போன்று இஸ்ரேலின் இருப்பையே கேள்வி கேட்கும் தரப்புகளைப் பிற நாடுகள் ஆதரிக்கக் கூடாது. 

முக்கியமான மேலை நாடுகளின் ஊடகங்களில் குறிப்பாக அமெரிக்க ஊடகங்களில் இஸ்ரேல் தரப்பைத் (அதி நியாயமானாலும்) தெவிட்டத் தெவிட்ட பேசிய அளவுக்கு, பாலஸ்தீன தரப்பு எதிர்கொள்கிற, அந்தத் தப்பிக்கவே முடியாத சிறை வாழ்க்கையைப் பற்றிப் பேசப்படுவதில்லை.  தீவிரவாத செயல்பாடுகளுடன் பாலஸ்தீன தார்மிகத்தை இணை வைப்பது பிழை. 

இது ஒரு லட்சியவாத நோக்காக தோன்றலாம், ஆனால் இவ்வித லட்சியவாத நோக்கில்லாமல் இதுபோன்ற இடியாப்பச் சிக்கலில் இருந்து நாம் வெளியேற முடியாது.  இதைத் தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பிறந்தேயிராத பாலஸ்தீனக் குழந்தை ஒவ்வொன்றுக்கும் நாம் மாபெரும் அநீதி இழைக்கிறோம் என்றே பொருள்படும்.

அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளுக்கும் பல்வேறு உள்நாடு மற்றும் புவியரசியல் சார்ந்த நிர்பந்தங்கள் உள்ளன.  ஆனால், அதையெல்லாம் தாண்டித்தான் நாம் அமைதியை நோக்கி நகர முடியும். அன்வர் சதாத்தும், யிட்சாக் ரபீனும் அப்படி நகர்ந்தார்கள்.  அத்திசையில் நடக்க எத்தனிக்கும் யாரையுமே நாம் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். 

https://www.arunchol.com/karthik-velu-on-palestine-issue

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி. தமிழர்கள் கற்றிய வேண்டிய கட்டுரையும்கூட..  மேற்கும் அரபுலகும் பலஸ்தீனர்களையும் யூதர்களையும் அமைதியாக வாழ அனுமதிப்பதே உலக அமைதிக்கு நன்மை. ஆனால் சுரண்டலாதிக்கப் பொருண்மியத் தேடலில் மூழ்கிவிட்ட உலகு மனிதக்குருதியிலல்லவா படகோட்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கட்டுரை. பாகம் ஒன்றில் @Kadancha @சுப.சோமசுந்தரம் போன்றோருக்கு நான் எழுதிய பதில், மிகவும் நேர்ந்தியான முறையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி ஜி.

  • கருத்துக்கள உறவுகள்

இது கிட்டத்தட்ட வரலாற்று கதை. 

வரலாறு (ஆய்வு) அல்ல.

ஒவ்வொரு வசனத்தையும் கூர்ந்து வாசிக்கவும். 

(எனது) விளக்கத்தை நேரம் வரும் போது  பதிகிறேன்.


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இது கிட்டத்தட்ட வரலாற்று கதை. 

வரலாறு (ஆய்வு) அல்ல.

ஒவ்வொரு வசனத்தையும் கூர்ந்து வாசிக்கவும். 

@Kadancha 

தமிழில் சூதர் (பாணன், விறலி) பாடல்கள் என்று அரசர்கள் இருக்கும்போதே அவரைப் பற்றி மிகையாக இயற்றப்பட்ட பாடல்கள் வந்துவிடும். அவை அரசருக்கே வியப்பை அளிக்குமளவிற்கு இருக்கும். அப்படியே கல்வெட்டுகளிலும், சுருள் ஓலைகளிலும் பதிக்கப்பட்டு நமக்கு வரலாறாக வந்துவிடும்.  இப்படியான “பேய்க்குப் பேன் பார்த்த” பல பண்டைய கதைகள்தான் வரலாறாக உள்ளன.

இப்போது சூதர்களின் பாடல்கள் தேவை இல்லை. ஆனால் அதே வேலையை spin doctor உம், Public Relation இல் இருப்போரும், இடது, வலது, தாராளவாதம், மிதவாதம், பழமைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்று கொள்கை, கோட்பாடு சாய்ந்தவர்களும், வாதங்களால் மூளை வீங்கியவர்களும் தங்களுக்கேற்ற கதையாடலை (narrative) உருவாக்குகின்றார்கள். அவற்றை சகல media க்களிலும், social media க்களிலும் பரப்புகின்றார்கள். இப்படியான பல “திறப்புக்கள்” இருப்பதால்தான் சூழ்ச்சிக்கோட்பாட்டாளர்களும், சதிக்கோட்பாளர்களும் சளைக்காமல் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து ஆய்வுகள் என்ற பெயரில் புதிய மொந்தைகளில் “பேய்க்கு பேன் பார்த்த” கதைகளை சுவாரசியத்துடன் கொடுக்கின்றார்கள். நாமும் நுகர்ந்துகொண்டிருக்கின்றோம்!

ஆக மொத்தத்தில் வரலாறு என்பது எப்போதும் வென்றவர்களின் மிகைப்படுத்தப்பட்ட “பேய்க்கு பேன் பார்த்த” புனைகதைகள்தான்.

அப்படியிருந்தும் தேடல் உள்ளவர்கள் தங்கள் நம்பிக்கைசார்ந்த, அறம்சார்ந்த விடயங்களை அலசி ஆராய்ந்து இந்த பேன் பார்த்த கதைகளில் இருந்து வரலாறுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கின்றார்கள். அவ்வளவுதான்.😎

  • கருத்துக்கள உறவுகள்
இணப்புக்கு நன்றி கிருபன்ஜி.மிகவும் அருமையான கட்டுரை. பின்வரும் இணைப்பிலும் இஜ்ரேல் பாலஸ்தீனப்பிரச்சினை பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.இணப்புக்கு நன்றி கிருபன்ஜி.
பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம்.
யூதர்கள் வரலாறு 1-20Kumaravelu Ganesan 
-----------------------------

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

அப்படியிருந்தும் தேடல் உள்ளவர்கள் தங்கள் நம்பிக்கைசார்ந்த, அறம்சார்ந்த விடயங்களை அலசி ஆராய்ந்து இந்த பேன் பார்த்த கதைகளில் இருந்து வரலாறுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கின்றார்கள். அவ்வளவுதான்.😎

அது.

எல்லாம் இம்சை அரசன் புஜபராக்கிரமசாலி போல காட்டும் ஓவியம் வரைந்ததை போலத்தான்.

ஆனால் இந்த உண்மைகள், புனைவுகள் ஊடே ஒரு உண்மை வரலாற்றின் நூல் ஓடிக்கொண்டிருக்கும் - அதை இழுத்து எடுப்பதும், Noise ஐ நீக்கி விட்டு தரவுகளை பொறுக்கி கொள்ளவும் முயற்சிக்க மட்டுமே நம்மால் முடியும்.

ஆனால் ஆரம்பிக்கும் போதே ஆபிரகாம் யூதன் இல்லை போன்ற அரிய கண்டுபிடிப்புகளோடு ஆரம்பித்தால் மிச்சம் எல்லாம் அதே சதி கோட்பாடு வழியேதான் முடியும்.

23 minutes ago, புலவர் said:
இணப்புக்கு நன்றி கிருபன்ஜி.மிகவும் அருமையான கட்டுரை. பின்வரும் இணைப்பிலும் இஜ்ரேல் பாலஸ்தீனப்பிரச்சினை பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.இணப்புக்கு நன்றி கிருபன்ஜி.
பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம்.
யூதர்கள் வரலாறு 1-20
-----------------------------

புலவர் இது உங்கள் கட்டுரை தொகுப்பா?👏🏾. நான் இன்னொருவர் எழுதியதை பகிர்கிறீர்களாக்கும் என நினைத்தேன்.

புத்தி சீவிகளும், அரசியல்வாதிகளும் (இஸ்லாமிய வாக்கு வங்கிக்க்காக) யூதன் காணி கள்ளன் என எம் சமூகத்தையே மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள். இதை களையும் உங்கள் முயற்சி, எண்ணம் பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

புலவர் இது உங்கள் கட்டுரை தொகுப்பா?👏🏾. நான் இன்னொருவர் எழுதியதை பகிர்கிறீர்களாக்கும் என நினைத்தேன்.

இது எனது கட்டுரைத் தொகுபபு இல்லை. இதை எழுதியவர் இதை விரிவாக எழுதியிருக்கிறார்.சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் போய் ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார். வாசிக்கும் பொழுது ஒரு தொடர்நாவலை வாசிப்பது போல் அருமையாக இருக்கிறது. வாசித்துப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

புத்தி சீவிகளும், அரசியல்வாதிகளும் (இஸ்லாமிய வாக்கு வங்கிக்க்காக) யூதன் காணி கள்ளன் என எம் சமூகத்தையே மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள். இதை களையும் உங்கள் முயற்சி, எண்ணம் பாராட்டுக்குரியது.

நடைபெறுகின்ற மோசடி பிரசாரத்தை அப்படியே சொன்னீர்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.