Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!

tCdfLC4U-Rajan.jpg

ராஜன் குறை 

Actors want to rule and are fear to talk about politics

மக்களாட்சியில் யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம்; தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் ஆதரவளித்தால் ஆட்சி அமைக்கலாம். இது சிறு குழந்தைக்கும் தெரியும். சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களுக்கு மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கும். அவர்களை திரையில் பார்த்து ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது சுலபம். அதனால் அவர்கள் கட்சி தொடங்க விரும்பலாம். மக்களாட்சியில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் அதனை பொதுமக்கள் மாண்பு கருதி வரவேற்கவே செய்வார்கள்.

அப்படி ஒரு நடிகர் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் சேராமல் தன் தலைமையில் கட்சி தொடங்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. எதனால் கட்சி தொடங்கும் கதாநாயக நடிகருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விதான் அது. அவர் சினிமாவில் நன்றாக நடனம் ஆடினார், சண்டை போட்டார், சிரிப்பு வரும்படி நடித்தார், உணர்ச்சிகரமாக நடித்தார் அதனால் அவர் முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். அது அபத்தமாக இருக்கும் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியும்.

அதனால் அந்த நடிகர் பொதுவாக என்ன சொல்வாரென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, ஜாதி, மத பிரிவினைகளைப் பார்க்கின்றன; நான் அனைத்து மக்களும் பொதுவானவன், ஊழலே செய்ய மாட்டேன், என் ரசிகர் மன்றத்து நிர்வாகிகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளானால் சுயநலம் இல்லாமல் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

அதை எப்படி நம்புவது என்று கேட்டால், ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக செயல்படுகின்றன என்று கூறுவார்கள். ரத்த தான முகாம்கள் நடத்தினார்கள், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை, வேட்டி கொடுத்தார்கள், பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், கால்குலேட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று பல நற்பணிகளைப் பட்டியில் இடுவார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்த அரசே ஒரு நற்பணி மன்றம் போல செயல்பட்டு மக்களுக்கு தேவையானதையெல்லாம் செய்து கொடுக்கும் என்று கூறுவதுபோல தோன்றும். அப்புறம் ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தை மாற்றி அமைப்போம், முழுப்புரட்சி செய்வோம், “போர்! போர்!” என்றெல்லாம்  வீரமாக பொத்தாம் பொதுவாக எதையாவது பேசுவார்கள்.

ஒட்டுமொத்தத்தில் நடிகர் மிகவும் பிரபலமானவர் என்பதால் மக்கள் அவர் கட்சிக்காரர்களுக்கு வாக்களித்தால் அவர் முதல்வராகிவிட்டால் “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று முடித்துவிடுவார்கள்.

இவ்வாறு பேசுவது ஆட்சிக்கு வரும் விருப்பம்தானே தவிர, அரசியலுக்கு வரும் விருப்பமல்ல. அரசியல் என்பது எண்ணற்ற சமூக முரண்பாடுகளின் களம். கார்ல் ஷ்மிட் என்ற அறிஞர் கூறியதுபோல எதிரி x நண்பன் என்பதே அரசியல். எதிரி என்றால் தனிப்பட்ட எதிரி அல்ல; போட்டி நடிகர் அல்ல. அரசியல் எதிரி என்பது வேறு ரகம்.
grMtvP1Z-Rajan-2.jpgஅரசியல் என்றால் என்ன?

இன்றுள்ள மக்களாட்சி நடைமுறை உருவாகி இன்னம் 250 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை எனலாம். அதாவது மன்னரல்லாத அரசியலமைப்பு சட்ட குடியரசு 1776-ம் ஆண்டு அமெரிக்காவில்தான் முதன்முதலில் உருவானது. மக்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதுதான் மக்களாட்சி. அதற்கு 13 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் புரட்சி 1789-ம் ஆண்டு வெடித்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கம் உலகளாவிய மக்களாட்சி லட்சியமாக முன்மொழியப்பட்டது.

அதற்கு முன்னால் மன்னராட்சியில் மன்னர்கள், நிலப்பிரபுக்கள், மதகுருமார்கள், சாதாரண மக்கள் என்ற கட்டமைப்புதான் பரவலாக இருந்தது. இதிலும் மத அமைப்பிலோ அல்லது வேறு விதமாகவோ பலவிதமான ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது அரசர்களின் எதேச்சதிகாரமாக இருந்தது. மக்களுக்கான உரிமைகள் என்பது உத்தரவாதமில்லாமல் இருந்தன.

இதில் முதலீட்டிய பொருளாதாரம் உருவான பிறகு வர்த்தகர்கள், தொழில்முனைவோர் ஆகிய புதிய அதிகார மையங்கள் உருவானபோது அவர்கள் புதியதொரு அரசமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அச்சு ஊடகத்தின் பரவல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் சேர்ந்த புதிய மத்தியதர வர்க்கமும் இந்த மாற்றத்தை வலியுறுத்தியதால் மக்களாட்சி என்ற நடைமுறை உருவாகியது. அனைத்து மக்களும் சுதந்திரமானவர்கள், சமமானவர்கள் ஆகிய சிந்தனைகள் உருவாயின.  

ஆனால், ஏற்கனவே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பிரிவினைகள் ஆகியவையும் இருந்தன. அதனால் மக்களில் பல்வேறு தொகுதியினருக்குள் இருந்த முரண்பாடுகள் பல்வேறு சமூக இயக்கங்களைத் தோற்றுவித்தன. குறிப்பாக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அவர்கள் பிரச்சினைகளுக்காக போராடினார்கள். விவசாயிகளும் அவர்கள் கோரிக்கைகளுக்காக போராடினார்கள். அப்படியே சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தங்கள் உரிமைகள், கோரிக்கைகளுக்காக அமைப்பாக மாறுவதில்தான் மக்களாட்சி அரசியல் கால்கொண்டது.

அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், வரி விதிப்பில் எத்தகைய கொள்கைகளை பின்பற்றுவது, முதலாளிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வரி விதித்து, பிற சாமானிய மக்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பது என்ற மக்கள்நல அரசு மாதிரிகள் தோன்றின.

முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் வரியைக் குறைத்து பொருளாதாரத்தை வளர்ப்பது, சந்தையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, தனிச்சொத்தைப் பெருக்குவது என்பவை வலதுசாரி முதலீட்டியக் கொள்கைகள். செல்வக் குவிப்புகளுக்கு அதிக வரி விதித்து, சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, சமூக முழுமைக்கும் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்வது இடதுசாரி சோஷலிச சிந்தனை.

சமூகத்தின் அனைத்து வளங்களும் பொது உடமையாக இருக்க வேண்டும், எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தமும் தோன்றியது.

இந்தியாவிலோ கூடுதலாக ஜாதீயம் ஏற்படுத்திய கடுமையான சமத்துவமின்மையை என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. பல காலமாக கல்வி மறுக்கப்பட்டு, கிட்டத்தட்ட அடிமைகள் போல வைக்கப்பட்டிருந்த சூத்திரர், அவர்ணர் என்று கூறப்பட்ட மக்களை எப்படி சம வாய்ப்புகளை பயன்படுத்தக் கூடியவர்களாக மாற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்தது. அதனால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கப்பட்டது.

ஆனாலும் இன்னமும் சமூகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உள்ள இடைவெளி குறையவில்லை. செல்வாக்கான பதவிகளில், தொழில்களில் அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுகிறார்கள். அவர்களுக்கான அதிகாரத்தைப் பெற மக்களாட்சி அரசியலே ஒரே களமாக உள்ளது.

அதனால்தான் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடையேயான கடுமையான மோதல் களமாக மக்களாட்சி அரசியல் உள்ளது. அரசியலில் ஈடுபடுவோர் தாங்கள் ஏழைகள் பக்கமா, பணக்காரர்கள் பக்கமா, வரி விதிப்பு பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதைக் கூற வேண்டும். இட ஒதுக்கீட்டில் தங்கள் நிலைப்பாடு என்ன, தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக எப்படி போராடப் போகிறோம் என்றெல்லாம் அரசியலில் ஈடுபடுபவர்கள் பேச வேண்டும்.

இந்தியாவின் மற்றொரு முக்கியமான அரசியல் பிரச்சினை என்பது அதன் கூட்டாட்சி வடிவமாகும். மாநிலங்களில்தான் அரசுகள் உள்ளன. அனைத்தையும் இணைக்கும் ஒன்றிய அரசாங்கம்தான் தேசிய அளவில் உள்ளது. ஒன்றியத்திற்கும், மாநிலத்திற்குமான அதிகாரப் பகிர்வு சரிவர வகுக்கப்படவில்லை. ஒன்றியத்தில் அதிகாரம் குவிந்திருப்பது பல்வேறு மாநில அரசுகளாலும் கண்டிக்கப்படுகிறது. நாள்தோறும் பிரச்சினைகள் பெருகுகின்றன. ஒரு மாநிலக் கட்சி இந்த முக்கியமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும், வரி விதிப்பும் சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அரசு என்பது வெறும் நற்பணி மன்றமல்ல. ஓர் அரசியல் கட்சி எந்த வகையில் சமூக இடைவெளிகளைக் குறைப்பது என்பதைக் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் செயல்பட வேண்டும். அதைத்தான் நாம் கொள்கை என்று அழைக்கிறோம். முரண்பாடுகளை சமன் செய்வதே அரசியல் என்னும் கலை என்றார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.
M26YAdjF-Rajan-3.jpgபெரும்பாலான அரசியல் கட்சிகள் எப்படி உருவாயின?

திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதீய ஏற்றத்தாழ்வை களையும் சமூகநீதியை முன்வைத்தும், மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை முன்னிலைப்படுத்தியும், இந்தி திணிப்பை எதிர்த்தும் பிறந்தது. அது முதலில் தென்னிந்திய மாநிலங்களை தனி கூட்டாட்சி குடியரசாக, திராவிட நாடாக உருவாக்கும் லட்சியத்தைக் கொண்டிருந்தது. பின்னர் இந்திய கூட்டாட்சியிலேயே மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக்கொண்டது. சோஷலிச பார்வை கொண்டது.

எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து பிரிந்தாலும் அண்ணாவின் கொள்கைகள்தான், அண்ணாயிசம்தான் தன் கட்சியின் கொள்கை என்று கூறினார். அண்ணா பெயரில்தான் கட்சியே தொடங்கினார். அதனால் அவர் தி.மு.க-வின் நகல் என்றுதான் கூற வேண்டும். நாளடைவில் தி.மு.க-விலிருந்து சில பல அம்சங்களில் வேறுபாடுகளை உருவாக்கினார். ஆனாலும் மாநில உரிமை, சமூகநீதி அரசியல் தடத்திலிருந்து முற்றாக விலகவில்லை. அ.இ.அ.தி.மு.க என்பது தி.மு.க-விற்கு ஒரு மாற்று என்பதே அதன் வரலாற்று விளக்கம்.

முத்துராமலிங்க தேவரின் ஃபார்வார்டு பிளாக் முக்குலத்தோரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக உருவானது. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கத்திலிருந்து உருமாறி வன்னியர் நலனுக்கான கட்சியாக நிறுவிக்கொண்டது. கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வர்க்க நலன்களை முன்னெடுக்கும் கட்சிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் மக்களின், குறிப்பாக ஆதி திராவிட மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் முற்போக்குக் கட்சியாக உருவாகியுள்ளது.

மக்களாட்சியில் எல்லா கட்சிகளுமே பொதுவான சமூக நலனுக்கு இயங்கினாலும் அவர்கள் முன்னிலைப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகள் என்ன, அவர்கள் கொள்கைகள் எந்த லட்சியங்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாக இருப்பதுதான் அரசியல்.

நடிகர்களின் கட்சிகள் எப்படி உருவாகின்றன?
 
கதாநாயக நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை எல்லோருமே பார்த்து ரசிப்பதால் எல்லா மக்களுக்குமான கட்சியையே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது சமூகத்திலுள்ள முரண்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்டால் ஏதாவது பொத்தாம்பொதுவாக மனிதநேய சிந்தனைகளைக் கூறுகிறார்கள். எந்த அரசியல் பிரச்சினையையும் எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசியல் பேச அஞ்சுகிறார்கள்.

pkDeQooa-Rajan-4.jpg
விஜய்காந்த்:

விஜய்காந்த் என்ற கதாநாயக நடிகர் அப்படித்தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று கலவையான பெயரில் கட்சி தொடங்கினார். தான் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிக்கும் மாற்று என்றார். ஒன்பது சதவிகித வாக்குகளை இந்த “மாற்று” என்ற பெயரில் பெற முடிந்தது.

ஆனால், அதற்குமேல் அவரால் அரசியல் பேச முடியவில்லை. எந்த பிரச்சினைக்காகவும் எந்த மக்கள் தொகுதியையும் அணி திரட்ட முடியவில்லை. இறுதியில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார். அதன் பிறகு “மாற்று” என்ற லட்சியம் காணாமல் போனதில் அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே கட்சி மாறிவிட்டார்கள். இறுதியில் அவர் கட்சி எந்த முக்கியத்துவமும் இல்லாத கட்சியாக மாறிவிட்டது.
7jbbV2xE-Rajan-5.jpgரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி அலையில் அவர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்ததில் அவருக்கு பங்கிருப்பதாக ஒரு பிம்பம் உருவானது. ஆனால், எந்த அரசியல் கட்சியிலும் சேர மறுத்தார். அவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வர சோ ராமசாமி உள்ளிட்ட பாஜக-வினர் கடுமையாக முயன்றார்கள்.

அவருக்கு தனிப்பட்ட முறையில் பாஜக அரசியல் பிடித்திருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த அரசியல் பேசினால் சிக்கல் என்பதை பாபா படம் அடைந்த தோல்வியிலிருந்து புரிந்துகொண்டார். அதனால் அவரால் கட்சி தொடங்குவதைப் பற்றி எந்த நிலைப்பாடும் எடுக்க முடியவில்லை. கலைஞரையும், ஜெயலலிதாவையும் மாறி, மாறி புகழ்ந்தார்.

கலைஞரும், ஜெயலலிதாவும் மறைந்த பிறகு அரசியலுக்கு வர முற்பட்டார். அப்போதும் தான் யாரையும் எதிர்த்து அரசியல் செய்யவில்லை என்றார். ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றப் போகிறேன் என்றார். கொள்கை என்னவென்று கேட்டால் தலை சுத்துகிறது என்றார்.

எல்லோரும் மக்களை அணி திரட்டுங்கள் – நான் பிறகு வந்து தலைமையேற்கிறேன் என்று கூறி திடுக்கிட வைத்தார். நான் முதலமைச்சராகப் பதவியேற்று எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் என்றார். இவர் கட்சியை கட்டமைத்துக் கொடுக்க பாஜக-விலிருந்து ஒருவரை இரவலாகப் பெற்றார். இறுதியில் நல்லவேளையாக உடல்நிலை சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiகமல்ஹாசன்:
 
மக்கள் நீதி மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்தார். வலதுசாரியும் இல்லாத, இடதுசாரியும் இல்லாத நடுப்பாதை, செண்டிரிஸ்ட் (Centrist) கட்சி என்றார். ஆனால் தெளிவாக நான் பாஜக-வை எதிர்க்கிறேன். அ.இ.அ.தி.மு.க-வை எதிர்க்கிறேன். தி.மு.க-வை எதிர்க்கிறேன் என்றெல்லாம் பேச மாட்டார். பள்ளப்பட்டியில் போய் இந்த நாட்டின் முதல் தீவிரவாதி இந்து தான் என்பார். மற்ற இடங்களில் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் நாட்டை பிளவுபடுத்தும் இயக்கம் என்று சொல்ல மாட்டார்.

திரைப்படங்களில் போட்டி நடிகர்களை இவர்கள் குறை சொல்ல முடியாது. விஜய்காந்துக்கு நடிக்கத் தெரியாது என்று பொதுவெளியில் கமல்ஹாசன் சொல்ல முடியாது. அது தொழிலுக்கு நல்லதல்ல. ஒருவர் படத்தை மற்றவர் விமர்சித்தால் பொதுவாக தொழிலும், வர்த்தகமும் பாதிக்கப்படும் என்பதால் அது விரும்பத்தக்கதல்ல.

அரசியல் அப்படி இல்லை. எடப்பாடிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை; அவர் ஊழல் செய்கிறார் என்று ஸ்டாலின் சொல்லத்தான் வேண்டும். ஸ்டாலின் ஆட்சி சரியில்லை என்று எடப்பாடி கூறத்தான் வேண்டும். “செளகிதார் சோர் ஹை” என்று மோடியை திருடன் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்ட வேண்டும். ஏனெனில் அரசியலில் முரண்களும், எதிர்ப்பும் அவசியம். வன்முறை கூடாதே தவிர, கருத்தியல் எதிர்ப்பு, கண்டனம் என்பது இன்றியமையாதது.

ஆனால், நடிகர்களாகவே வாழ்ந்து பழகியதால் இவர்களால் பகிரங்கமாக அரசியலில் யாரையும் விமர்சித்து பேச முடிவதில்லை. கமல்ஹாசனால் இட ஒதுக்கீடு பற்றிய கேள்விக்குக் கூட தெளிவாகப் பதில் கூற முடியவில்லை. அருகிலிருந்தவரைக் காட்டி அவர்தான் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளார் என்று கூறிவிட்டார்.  
Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiவிஜய்:

இந்தப் பட்டியலில்தான் மற்றொரு கதாநாயக நடிகர் விஜய் இப்போது சேர்ந்துள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்று ஒற்றுப்பிழையுடன் பெயர் வைத்துவிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எந்த நிலைப்பாடும் கிடையாதாம்.

நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டபோது நாடே கொந்தளித்ததே, அப்போது விஜய் எங்கே போயிருந்தார்? அவருக்கு நீட் தேர்வு எத்தகைய பிரச்சினை என்றே தெரியாதா? நடிகர் சூர்யா கூட குரல் கொடுத்தாரே?

அவரையே ஜோசப் விஜய் என்று மதச்சாயம் பூசி பாஜக விமர்சித்ததே? அது மத அடையாளம் பேசி நாட்டைப் பிளவுபடுத்துகிறது என்று தெரியாதா? தமிழ்நாட்டு நலன்கள் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறதென்று ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் ஓயாமல் குரல் கொடுக்கிறார்களே? அதெல்லாம் அவர் காதிலேயே விழவில்லையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்தில் அமலாக்கிவிடுவோம் என பாஜக அமைச்சர் ஒருவர் பேசுகிறாரே? முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விடுகிறாரே? அதையெல்லாம் படிக்க மாட்டாரா இந்த எதிர்கால அரசியல்வாதி?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு நிலைப்பாடே இல்லாமல் எதற்காக தேர்தல் நெருங்கும்போது கட்சி தொடங்குகிறார்? இது யார் கொடுத்த அசைன்மைண்ட் என்று மக்கள் கேட்கிறார்களே? அவருக்குப் புரியாதா?

பிரகாஷ் ராஜ் என்ற அரசியல்வாதி

பிரகாஷ் ராஜ் விஜய்யின் பல படங்களில் வில்லனாக நடித்தவர். பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர். அவர் வளர்ந்த ஊரான பெங்களூருவில் கெளரி லங்கேஷ் என்ற சிந்தனையாளர் கொலை செய்யப்பட்டபோது அவர் வலதுசாரி அரசியலுக்கு எதிராக பொங்கி எழுந்தார். மதவாத சக்திகளை பகிரங்கமாக விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் என பெயர் சொல்லி கண்டித்தார். தன் கண்டனத்தைத் தெரிவிக்க சுயேச்சையாக தேர்தலில் கூட நின்றார்.

பிரகாஷ் ராஜ் ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. அவரும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. ஆனால் மத அடையாளவாத வன்முறை நாட்டை பாழ்படுத்தி விடும் என்று துணிந்து குரல் கொடுக்கிறார்.

எந்த ஒரு நடிகராவது அரசியலுக்கு வந்தாரென்றால் பிரகாஷ் ராஜைத்தான் கூற முடியும். உதயநிதி அரசியல் குடும்பத்திலிருந்து நடிக்கச் சென்றவர் என்பதால் அவரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரத்தான் நினைக்கிறார்களே தவிர, அரசியலுக்கு வர நினைப்பதில்லை. அரசியல் பேசவே அஞ்சுகிறார்கள். நேராக தேர்தல்; முதல்வர் பதவி. அவ்வளவுதான் அவர்கள் ஆசை. சின்னச்சின்ன ஆசை. பாவம்.
 

 

https://minnambalam.com/political-news/actors-want-to-rule-and-are-fear-to-talk-about-politics-by-rajan-kurai/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!

IMG-5770.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நல்லாட்சியையே எதிர்பார்க்கிறார்கள். அரசியல்  தெரிந்த பல திருடர்களை மக்கள் பல நாடுகளில் கண்டு கொண்டே உள்ளார்கள்.

இந்தக் கட்டுரையில் சீமானைப் பற்றி எதுவும் எழுதாமையை லைட்டாக கண்டிக்கின்றேன். அவரும் முதலில் சினிமாவில் இருந்து தான் தொடங்கினார் அல்லவா? இப்பவும் ஒரு புதுப் படத்தில் நடிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

இந்தக் கட்டுரையில் சீமானைப் பற்றி எதுவும் எழுதாமையை லைட்டாக கண்டிக்கின்றேன். அவரும் முதலில் சினிமாவில் இருந்து தான் தொடங்கினார் அல்லவா? இப்பவும் ஒரு புதுப் படத்தில் நடிக்கின்றார்.

அண்ணை நீங்க வார்டன களத்தில இறக்க முயற்சிக்கிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இந்தக் கட்டுரையில் சீமானைப் பற்றி எதுவும் எழுதாமையை லைட்டாக கண்டிக்கின்றேன். அவரும் முதலில் சினிமாவில் இருந்து தான் தொடங்கினார் அல்லவா? இப்பவும் ஒரு புதுப் படத்தில் நடிக்கின்றார்.

ஐயாவுக்கு ரேஸ்ற் போதலைப் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.