Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

                                 பொருநைக் கரையினிலே - 1

                                                                                           - சுப.சோமசுந்தரம்

 

 

           காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து.

 

            அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சிதாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு.

 

                   தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது.

 

                பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று.

 

             இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

              பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் ..சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது.

               நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட .தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை.

                  1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது.

                 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ !

                1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை.

 

               சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை.

 

              பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம்.

 

              இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ. என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ. இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது.

 

              மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. .நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது

 

              இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ. வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன்.

 

            பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ. என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம்நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல.

  

                 நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?  

 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 14
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கோ பேராசானே...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகத்தியர் காவேரியை ஓடவிட்டு கூடவே தானும் நடந்து "நடந்தாய் வாழி காவேரி" என்றது போல் நீங்களும் பொருநையுடன் கூடவே பயணிக்கும் கட்டுரை ஒரு வரலாற்று ஆவணமாகவே மிளிர்கின்றது......தொடருங்கள் ஐயா ......!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாமிர பரணியாற்றின் மண் கொண்டு வந்து, யாழ்ப்பாணத்தில் வீடு கட்டினார்கள் என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வளவு பெருமை பெற்றவள் பொருணை…!

தொடருங்கள்…!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுப. சோமசுந்தரம் அவர்களே அருமை. வாசிக்க நன்றாக உள்ளது. 👍🏽

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, சுப.சோமசுந்தரம் said:

பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா

அக்கறையோடு காத்திருக்கிறேன். எழுதுங்கள்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாளையங்கோட்டையின் வரலாற்றுத் தகவல்களை  நுணுக்கமான அறியக்கூடியதாக இருக்கின்றது. தொடருங்கள் முனைவர் @சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே!

 

சுலோச்சன முதலியார் பாலம் மூழ்குமளவிற்கு பொருநையில் (தாமிரபரணி ஆற்றில்) வெள்ளம் பெருகியிருக்கின்றது!

spacer.png

  • Thanks 1
  • 4 weeks later...
Posted

கட்டுரை ஆசிரியரின் வழக்கமான (அன்னாரது  பட்டறிவின் அடிப்படையில் எழுதும்) நடையிலிருந்து வேறுபட்டு, கற்றதும், கேட்டதும், உற்றதும், உயிர்த்ததும் கொண்ட பொருண்மையால்,, சற்றே வேகம் குறைந்துள்ள எழுத்துநடை என்னை வியக்க வைத்தது. சுலோச்சனா முதலியார் பாலத்தின் வரலாறு தொட்டு, பாளையம்கோட்டையின் வரலாற்றுச் சுவடுகள் பலவும் ஆசான் தொப-வின் நினைவுகளோடு இழையாடிச் சென்றது மனதுக்கு இன்னும் அணுக்கமாக இருந்தது. மேடைப் போலீஸ் ஸ்டேஷன் என்ற அளவில் பாளையம்கோட்டையை அறிந்த என போன்றோருக்கு பேராசிரியர் சோமசுந்தரம் அவர்களின் இத்தொடர் ஓர் சிறந்த பெட்டகம். இடைவெளி எடுத்துப் படித்தாலும், மீள்வாசிப்புக்குத் தகுதியான சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை. இப்போதே இருமுறை மீள்வாசிப்பு செய்ய வைத்த காந்த சக்தி, இக்கட்டுரையின் வரலாறு சொல்லும் மொழி நடையே. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறோம். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் சுந்தரனார்! 

  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.