Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                 இறை குறைபடுமோ ?

                                           - சுப.சோமசுந்தரம்           

 

            இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை.
             தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல்

" அகவன் மகளே!   அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!"
                   (குறுந்தொகை 23)

என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல்.

"மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும்
ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே".
                     (குறுந்தொகை 111)

              பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று.

"......................வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன
உருகெழு பேய்மகள்"
                      (புறநானூறு 371)

என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார்.
            இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை.
               இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம்  பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன்.
               நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் :

"வள்ளலாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ளம் மகிழ அமுதுசெய
இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க்
கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால்
உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் 
பிள்ளைபிடிக்க உவந்து பிதா
அரிந்து சமைக்கப்பெறின் என்றார்"
           (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54)

பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார்.
                  அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை :

"இனிய மழலைக் கிண்கிண்கால் 
இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் 
கனிவாய் மைந்தன் கையிரண்டும் 
கையால் பிடிக்கக் காதலனும்
நனிநீடு உவகை உறுகின்றார் 
என்று மகிழ்ந்து நகைசெய்யத் 
தனி மாமகனைத் தாதையார்
கருவி கொடுதலை அரிவார்"
              (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63)

பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார்.
             அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று :

"அறுத்த தலையின் இறைச்சி திரு  
அமுதுக்கு ஆகாது எனக்கழித்து 
மன்றத்து நீக்கச் சந்தனத்தார்
கையில் கொடுத்து மற்றை உறுப்பு 
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து 
எலும்பு முளை திறத்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்"
              (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65)

பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள்.
              இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம்.
                சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ?
              மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே !
               உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார்.

"முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது"
        (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5)
"என்று கூறிய இயற்பகையார் முன் 
எய்தி நின்றஅக் கைதவ மறையோர்
கொன்றைவார் சடையர் அடியார்கள் 
குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட 
ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் 
உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி 
இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு 
இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்"
             (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6)

பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார்.
              இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல்.

"என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் 
யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் 
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை 
ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன 
மன்னு காதல்உன் மனைவியை வேண்டி 
வந்தது இங்குஎன அந்தணர் எதிரே 
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து 
தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்"
               (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7)

பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார்.

"இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி
எம்பிரான் செய்த பேறுஎனக்கு"
                 (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு)

பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார்.
                இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது.

"சென்று அவர் தடுத்தபோதில்
இயற்பகையார் முன் சீறி
வன்துணை வாளே ஆகச்
சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும்
தலைகளும் துணித்து வீழ்த்து 
வென்றுஅடு புலிஏறு என்ன
அமர் விளையாட்டில் மிக்கார்"
            (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21)

பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார்.
               இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது.
               நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?
             

Edited by சுப.சோமசுந்தரம்

"அறிவின் வடிவாகவே இருக்கும் வாலறிவன் இறைவனைக் குறித்து அறிய முனையும் குறைவுற்ற இறையமைப்பு குறித்த நெடிய அற்புதமான பதிவு பேராசிரியர் சோமசுந்தரனார் இட்ட பதிவு.  

"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" என்பார் அறிவர் தந்தை பெரியார். இறைவனைஇ வாலறிவன்இ முற்றறிவன் என்று அறிவின் வடிவமாக வணங்கிய மரபு தமிழர் பக்தி மரபு. மூன்றாம் நூற்றாண்டின் இறைப்பெருமாட்டி காரைக்கால் அம்மையார் இறைவனை இவ்வாறு காண்கிறார். 

அறிபவனும்இ அறிவிப்பவனும்இ அறிவாய் இருந்து அறிகின்றவனும்இ அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. அவனே ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றான் என்கின்றார்.

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன்

(அற்புதத் திருவந்தாதி 20)

சிவபெருமான்இ யார் எந்தக் கோலத்தில்இ எந்த உருவில் வணங்கினாலும்இ எத்தகைய தவத்தில் ஈடுபட்டாலும்இ அவர்அவர்க்கும் அவரவர் விரும்பிய கோலத்தில் வந்து அருள் புரிவார் என்கின்றார்.

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம் (33)

மனிதம் போற்றும் அன்பு வடிவே இறைவன் வடிவும் வழிபாடும் என்பதுவும் நம் மரபுதான். 

பக்தி இயக்க இலக்கிய காலங்கள்இ  "காதலால் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமேஇ தொல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன்"இ என்ற  காரைக்கால் அம்மையார்இ 'அன்பே சிவம்' என்ற திருமூலர்இ 'யாவராயினும் அன்பர் அன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்ற  மாணிக்கவாசகர்இ "(பூங்)காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி(ந்த) மனத்தால்" மக்கள் தொண்டு செய்து இறைவனை உணர்க என்று பாடிய  திருஞானசம்பந்தர்இ "(உயிரினங்களைஇ இறைவன் வாழும்)பாத்திரம் சிவம் என்று பணிதீராகில் மாத்திரைக்குள்(நொடிப் பொழுதில்) அருள்வார் (திரு)மாற் பேரரே" என்று அருளிய திருநாவுக்கரசர் என்று கிபி ஏழாம் நூற்றாண்டுவரைஇ குறைவற்ற இறையமைப்புடனேயே பெரும்பாலும் திகழ்ந்தது எனலாம். 

எட்டாம் நூற்றாண்டில்இ வன்தொண்டர் ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்தொகையில்தான் சிறுத்தொண்டர் மற்றும் இயற்பகை போன்ற இயற்கைக்கு முரணான அடாத செய்கைகளைப் பக்தியின் பெயரால் போற்றுவதும்இ துதிப்பதுமான போக்குகளுக்கு துவக்கம் எனலாம். 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2025 at 14:07, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

எட்டாம் நூற்றாண்டில்இ வன்தொண்டர் ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்தொகையில்தான் சிறுத்தொண்டர் மற்றும் இயற்பகை போன்ற இயற்கைக்கு முரணான அடாத செய்கைகளைப் பக்தியின் பெயரால் போற்றுவதும்இ துதிப்பதுமான போக்குகளுக்கு துவக்கம் எனலாம். 

தங்கள் விளக்கம் என் எழுத்துக்கு அணி சேர்ப்பது. நன்றி.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2025 at 14:38, சுப.சோமசுந்தரம் said:

குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?
             

❤️........................

குறைபட்ட இறையமைப்புகள் வாழ்க்கைகளில் நிறைவைக் கொடுப்பதேயில்லை, மாறாக அவை பல வாழ்க்கைகளை கெடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் இந்த குறைபட்ட இறையமைப்புகள் குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு அதிகாரங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் அவை ஊக்குவிக்கப்பட்டு, அதனூடாக இவை மனிதர்களிடையே அடுக்குகளையும், அழிவுகளையும் உண்டாக்குகின்றன.

நரபலி, பலதாரங்கள் என்பன இன்று நாகரிக சமூகங்களால் ஒதுக்கப்பட்டவையாகிவிட்டன. இவை எந்த இறையமைப்பினதும் புதிய அறைகூவல்களால் ஒதுக்கப்படவில்லை, மாறாக மனிதர்களின் பொதுப்புத்தியில் ஏற்பட்ட மாற்றங்களால் மட்டுமே இவை இல்லாமல் ஆக்கப்பட்டன.

இந்த வாரம் கூட தலைகளில் தேங்காய்களை அடித்து உடைக்கும் ஒரு திருவிழாவை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன்.....................🫣.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை ........... நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ........... ! 👍

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2025 at 11:38, சுப.சோமசுந்தரம் said:

 இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம்

போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்

கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்

பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர்

ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு

ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி

- நீர்ப்படைக் காதை 130

நியாயத்தின் சாம்பல்

மேற்குறிப்பிட்டநிகழ்வு சங்க காலத்தியது தான். பத்தினியின் பசி தீர ஆயிரம் பொற்கொல்லர்களை நரபலி கொடுத்தமை, சங்க காலத்தின் முதன்மைக்காப்பியாமாம் சிலப்பதிகாரத்தில் பச்சைத் தமிழன் பாண்டியன் செய்வித்ததாகத் தான் உள்ளது.

பொதுவாக இறை வழிபாடுகள் நம்பிக்கை சார்ந்தவை, அதனால் எத்தனையோ மூடநம்பிக்கைகள் அதனுள்ளே இயல்பாக ஊடுருவ முடியும்.

பல காலங்களாகவே சமயக் கோட்பாடுகளை அறியாமலே மேலோட்டமாகவே சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றியே அனேகமானோர் அவற்றைக் கைக்கொண்டு வருவதால், அச் (ச+ச) களைத் தாக்கி அவற்றிலிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களைத் தாக்கி அதன் மூலம் அவையைப் பிழை என நிறுவும் போக்கும் எதிர்க்கோட்பாடு கொண்டவர்களின் ஆயுதமாகும். இதைத் தேர்ந்து அறிவதே அறிவார்ந்தவர் கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2025 at 17:38, சுப.சோமசுந்தரம் said:

" அகவன் மகளே!   அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!"
                   (குறுந்தொகை 23)

என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை.

இந்தப் பாடல் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டது. தலைவி தன் காதலனை நினைத்துப் பாடுகிறாள். அவளது கூந்தல் அழகும், அவள் பாடும் பாட்டும் அவளது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இது சங்க இலக்கியத்தின் எளிமையும், ஆழமும் நிறைந்த பாடலாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

இந்தப் பாடல் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டது. தலைவி தன் காதலனை நினைத்துப் பாடுகிறாள். அவளது கூந்தல் அழகும், அவள் பாடும் பாட்டும் அவளது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இது சங்க இலக்கியத்தின் எளிமையும், ஆழமும் நிறைந்த பாடலாகும்.

இது தோழி கட்டுவிச்சியிடம் (குறி சொல்பவளிடம்) கூறுவதாக வருகிறது. தலைவியின் காதலை தலைவியின் தாய்க்கும், செவிலித்தாய்க்கும் குறி சொல்லும் அகவன் மகள் மூலமாக மறைமுகமாக எடுத்துரைக்க முனைகிறாள் (தானும் தலைவியின் வயதொத்தவள் ஆதலின் மூத்தோரிடம் நேரடியாகக் கூறக் கொண்ட நாணத்தின் காரணமாக). முன்னர் நான் வேறு ஊடகத்தில் இப்பாடலுக்கு எழுதிய உரையை இத்துடன் படியெடுத்துப் பதிகிறேன் :

பாடற் களம் :

குறிஞ்சி நிலத்தலைவி தலைவனிடம் கொண்ட காதல் ஏக்கத்தில், மெலிதல் போன்ற உடல் மாற்றங்கள் அவளிடம்  ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே தாயும் செவிலித் தாயும் கவலையுற்று, குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் பாடும் அகவலோசைப் பாடல். குறி சொல்பவளை 'அகவன் மகளே!' என விளிக்கிறாள் தோழி.

பாடற் பொருள் :
அகவன் மகளே ! அகவன் மகளே ! சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் போன்ற  (கோப்பு அன்ன) நல்ல நெடிய கூந்தலையுடைய அகவன் மகளே ! பாடலைப் பாடுக ! இன்னும் பாடலைப் பாடுக ! அவரது நல்ல  நெடுங்குன்றம் பற்றிப் பாடிய பாடலைப் பாடுக !

பின் குறிப்பு :
(1) சங்குமணி போல் வெண்மையான கூந்தல் என்றதன் மூலம், குறி சொல்பவள் வயதில் மூத்தவள் என்று அறிகிறோம்.
(2) தோழியைப் பொறுத்தமட்டில் தான் சொல்லத் தயங்குகிற தலைவியின் காதற் செய்தி, குறி சொல்பவள் மூலம் தலைவியின் தாயிடமும் செவிலித்தாயிடமும் சென்றடைய வேண்டும் என நினைக்கிறாள். கட்டுவிச்சி வழக்கம் போல் குறிஞ்சித் தலைவன் சேயோனின் நெடுங்குன்றச் சிறப்பினைப் பாடியிருப்பாள். அவள் குறி அறிந்து நம் தலைவனின் நெடுங்குன்றத்தைப் பாடியதைப் போல, தோழி நாடகமாடுகிறாள், "முன்னர் பாடிய 'அவரது'  குன்றம் பற்றிப் பாடு". இதன் மூலம் 'அவர்' பற்றிய குறிப்பைத் தாய்க்கும் செவிலிக்கும் தர முயற்சிக்கிறாள் தோழி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, villavan said:

போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்

கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்

பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர்

ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு

ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி

- நீர்ப்படைக் காதை 130

மேற்குறிப்பிட்டநிகழ்வு சங்க காலத்தியது தான். பத்தினியின் பசி தீர ஆயிரம் பொற்கொல்லர்களை நரபலி கொடுத்தமை, சங்க காலத்தின் முதன்மைக்காப்பியாமாம் சிலப்பதிகாரத்தில் பச்சைத் தமிழன் பாண்டியன் செய்வித்ததாகத் தான் உள்ளது.

இப்பாடலில், கொற்கையிலிருந்து (குறுநில மன்னனாக) ஆண்டு வந்த வெற்றி வேற்செழியன் நெடுஞ்செழியனுக்குப் பின் மதுரை வந்து பாண்டி நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறான் என்று சொல்லுமிடத்தில் எத்தகைய சிறப்பு மிக்க பாண்டிய நாடு என்று குறிக்க,

"பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர்

ஒருமுலை குறைந்த திருமா பத்தினிக்கு

ஒருபகல் எல்லை உயிர்ப்பலி யூட்டி

உரைசெல வெறுத்த மதுரை மூதூர்"

என்று சேரன் செங்குட்டுவனுக்கு எடுத்தியம்புகிறான் மாடலன் மறையோன். அஃதாவது "ஆயிரம் (ஈரைஞ்ஞாற்று) பொற்கொல்லர் (கண்ணகிக்குப் பொற்கொல்லன் மூலமாக இழைக்கப்பட்ட அநீதிக்குத் தண்டனையாயகவும், பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்ட பழி போக்கவும்) உயிர்ப்பலியாகத் தம் உயிர் ஈந்தனர்; அத்தகைய மதுரை மூதூர்" என்றுதான் நான் வாசித்த இரண்டு உரையாசிரியர்கள் உரை சொல்கின்றனர். அவ்வாறாயின், தண்டனை என்பது நாம் கட்டுரையில் சொல்லும் பலியாகாது என்பது என் கருத்து. கூடுதலாக சான்றாண்மை மிக்க உரையாசிரியர்கள் ஓரிருவரை வாசித்து விட்டு மாறுபாடு இருப்பின் மீண்டும் உங்களிடம் வருகிறேன்.

இது தொடர்பாக மேலும் ஒன்று கூற விழைவு. நான் வாசித்த, கேட்ட வரையில் சங்கப் பாடல்களில் நரபலி காணவில்லை என்று எழுதினேனே தவிர, தமிழ் நாகரிகம் ஏனைய பண்டைய நாகரிகங்களில் இருந்து வேறுபட்டு நிவந்து நிற்பதாக்கும் என்று நான் நம்பவில்லை. சமூக உளவியல் என்பது அனைத்துக் குழுக்களிலும் இயற்கையாய் ஒரே மாதிரிதான் தோன்றி வரும் என்பதில் எனக்கு மாறுபாடில்லை (ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியிற் தெளிந்தனம்). புலிகளில் சைவப் புலி என்று எதுவுமில்லை (There is no vegetarian tiger). உதாரணமாக, "கங்கை கொண்டான், கடாரம் வென்றான்" என்றெல்லாம் புலவர்கள் பாடினார்களே தவிர, அப்போது பெண்களைக் கவர்ந்து வந்து அந்தப்புரங்களை நிரப்பிய அயோக்கியத்தனங்களைப் பாடுவதில்லை. புரவலர்களைச் சார்ந்து வாழ்ந்த புலவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?

Now in a lighter vein :

நான் சிலம்பில் வாசிக்காத பகுதியை வாசிக்க வைத்த வில்லவன் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர். இப்போதைக்கு முழுப் பாடலாக இல்லாவிடினும் ஒரு வரியாவது பாடுகிறேனே ! அவர் தற்போது குறிப்பிட்ட நீர்ப்படைக் காதை, வரி 238 ல் சேரன் செங்குட்டுவன்

"வில்லவன் வந்தான் வியன் பேரிமயத்து"

என்று பாடப் பெறுகிறான். அவ்வரியினை இளங்கோவடிகளிடம் இரவல் பெற்று,

"வில்லவன் வந்தான் சிலம்புச் செல்வத்து"

என்று நமது வில்லவன் அவர்களைப் பாடலாமே !

Edited by சுப.சோமசுந்தரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுப.சோமசுந்தரம் said:

கூடுதலாக சான்றாண்மை மிக்க உரையாசிரியர்கள் ஓரிருவரை வாசித்து விட்டு மாறுபாடு இருப்பின் மீண்டும் உங்களிடம் வருகிறேன்.

பெரும்பாலும் உரையாசிரியர்கள் வில்லவன் அவர்கள் எழுதியது போலவே உரை சொல்கிறார்கள் என்பதைக் கண்டேன். சிலர் இப்பொருள் வேறுபாட்டைச் சுட்டவும் தவறவில்லை.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுப.சோமசுந்தரம் said:

புலிகளில் சைவப் புலி என்று எதுவுமில்லை (There is no vegetarian tiger). உதாரணமாக, "கங்கை கொண்டான், கடாரம் வென்றான்" என்றெல்லாம் புலவர்கள் பாடினார்களே தவிர, அப்போது பெண்களைக் கவர்ந்து வந்து அந்தப்புரங்களை நிரப்பிய அயோக்கியத்தனங்களைப் பாடுவதில்லை. புரவலர்களைச் சார்ந்து வாழ்ந்த புலவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?

சத்தியமான வார்த்தைகள். ஒரு பக்கம் அரசர்கள் பெற்ற வெற்றிகள் வரலாற்றில் நிலை பெற்றாலும், எல்லா வெற்றிகளும், கோரமான யுத்தத்தின் விளைவுகளே. அதிலும் அப்பாவி மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டு இருப்பர்.

அய்யா, உங்களைப் போன்றவரின் தமிழ் அறிவோடு ஒப்பிடும் போது என்னைப் போன்றவர்கள் சிறு துமி. கிட்டடியில் அது சம்பந்தமாக எழுதி இருந்தபடியால் சுட்டினேன். மற்றபடி உங்கள் பாராட்டுக்குப் பொருத்தமானவன் அல்ல.

  • 3 weeks later...

ஐரோப்பிய நாட்டில் குடியேறியும் தொட்டதற்கெல்லாம் தெய்வக் குற்றம் காண்பவர்கள் உள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம். உலகில் அரங்கேறும் அநீதிகளையெல்லாம் கண்டுகொள்ளாத இறைவன் மீது குறை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளாது என்ற அதீத நம்பிக்கையை விட, இதன் மூலம் கடவுளைத் தாம் எந்தத் தராரதத்தில் வைத்துள்ளோம் என்று கூடச் சிந்திக்க முடியாதவர்களாக உள்ளனர்.

உங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் இச் சமுதாயத்திற்கு அவசியமானவை. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

ஐரோப்பிய நாட்டில் குடியேறியும் தொட்டதற்கெல்லாம் தெய்வக் குற்றம் காண்பவர்கள் உள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம்.

ஐரோப்பிய நாட்டில் குடியேறியவர்கள் நிலையே இப்படி என்றால் இலங்கையில் உள்ளவர்கள் நிலை எப்படி இருக்கும் ☹️தெரிந்தவர் ஒருவர் கடவுள் தேரில் ஏறி கொண்டிருக்கும் அரும்பெரும் காட்சியை பார்த்து அருள் பெற்று கொள் என்று அனுப்பியிருந்தார் நானும் பார்த்து கொண்டிருந்தேன் கடவுள் தேரில் ஏறுகிறார் ஏறுகிறார் மனிதர்கள் சேர்ந்து மிகவும் குனிந்து தூக்கி கஷ்டபட்டு கடவுளை தேரில் ஏற்றினார்கள் பார்க்க எனக்கே முதுகு நோக தொடங்கிவிட்டது. இலங்கையில் இப்போது மிகவும் மோசமான வெயில் வெப்பம் பலர் தேருக்கு முன்னால் நிலத்தில் படுத்து பிரதட்டை என்று உருண்டு கொண்டிருந்தனர் காணொளியாளர் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார் காலை நிலத்தில் வைக்க முடியாத அளவுக்கு வெப்பம் ஆனால் அவர்கள் எவ்வளவு நேரமாக நிலத்தில் உருண்டு கொண்டிருக்கிறார்கள் இதுவே தான் கடவுளின் சக்தி☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.