Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 MAY, 2025 | 11:02 AM

image

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. 

அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பணிகள் வியாழக்கிழமை (15)  ஆரம்பமான நிலையில்,  வெள்ளிக்கிழமை (16)  நடைபெற்ற  இரண்டாம் நாள் அகழ்வின் போதே இந்த மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்கப்பட்டுள்ளது. 

முழுமையான என்புத்தொகுதி, மண்டையோடு என்பவற்றுக்கு மேலதிகமாக கை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் சனிக்கிழமை (17) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

45__3_.jpg

45__4_.jpg 

45__1_.jpg

https://www.virakesari.lk/article/214956

  • 3 weeks later...
  • Replies 106
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    தயவு செய்து இவரின் தளத்திற்கு சென்று ஆதரவு தெரிவிக்கவும்.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இணையவன்
    இணையவன்

    புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி ; இதுவரையில் 07 மண்டையோடுகள் மீட்பு

03 JUN, 2025 | 09:20 AM

image

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.

இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக, மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன.

இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் , திங்கட்கிழமை (02) மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சேராக காணப்பட்டமையால், பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர்.

IMG-20250602-WA0054.jpg

https://www.virakesari.lk/article/216408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி - இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

Published By: VISHNU

03 JUN, 2025 | 08:39 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

1002199388.jpg

செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

1002199421.jpg

அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது, ஐந்து மண்டையோடுகளுடன், எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவை, அவசர அவசரமாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகளுடன் கூடிய, எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு கூட்டு தொகுதியில் ஒரு எலும்பு கூட்டு தொகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/216509

  • கருத்துக்கள உறவுகள்

மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது!!

adminJune 4, 2025

1002199388-1.jpg?fit=1170%2C658&ssl=1

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06.06.25) வழங்கப்படவுள்ளது.

செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று (03.06.25  செவ்வாய்க்கிழமை வரையில் ஏழு மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அப்பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் . நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர்.

குறித்த விண்ணப்பம் மீதான விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரியின் அபிப்பிராயத்தையும் யாழ்ப்பாண பொலிசாரின் நடவடிக்கை தொடர்பிலும் அறிக்கையை தருமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என திகதி குறித்துள்ளார்.

https://globaltamilnews.net/2025/216318/

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கஜேந்திரகுமார எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,  துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். 

இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன் என்றார். 

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

04 JUN, 2025 | 05:10 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிக்கு போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப்போகின்றனர்.  அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற  2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யாழ்ப்பாணம் செம்மணியில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியிலான பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை கொண்டுள்ளது. இங்கே எவ்வித பாதுகாப்பும் போடப்படவில்லை. மக்கள் அங்கு சென்று எதனையும் செய்யலாம் என்பதை போன்று உள்ளது. அந்த புதைகுழி தொடர்பான நடவடிக்கைகளுக்ககாக போதுமான நிதி இல்லை. அங்கு அகழ்வுகளை நடத்துவதற்கும் சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் நிதி போதுமாக இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்கும் போதுமானது அல்ல.

போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போகின்றனர். இதனால் அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம்.

1996 காலப்பகுதியில் அங்கே நடந்த கிருஷாந்தி கொலை வழக்கின்போது 600 பேர் அங்கிருந்து காணாமல் போனமை தெரியவந்தது. இதனால் உண்மைகளை கண்டறிய வேண்டும். இதற்காக நிதியை ஒதுக்குமாறு நாங்கள் கோருகின்றோம். இதனை பாதுகாப்பதற்காகவும், சாட்சியங்களை பாதுகாப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/216575

  • கருத்துக்கள உறவுகள்

கிருசாந்தி கொலையின் முதல் குற்றவாளியான சோமரத்னா ராஜபக்சா ‘இந்த நிலத்தில் (செம்மணியில்) 300 முதல் 400 வரை சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு மாலையும் அங்கு சடலங்கள் கொண்டுவரப்பட்டு, சிப்பாய்கள் அவற்றை புதைக்கச் சொல்லப்பட்டனர்’ என்று சொல்லி இருக்கிறார்.

https://en.wikipedia.org/wiki/Somaratne_Rajapakse

  • கருத்துக்கள உறவுகள்

புதைகுழி ராணி சந்திரிகா.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவின் ஆட்சியில் மாணவி கிருசாந்தியை மானபங்கப்படுத்தி கொலை செய்து செம்மணியில் புதைத்தார்கள்.

மாணவியை தேடி சென்ற தாய் உறவினர்களையும் கொலை செய்து புதைத்தார்கள்.

இதுவரை இந்த சம்பவம் பற்றி அறியாதவர்கள் இருந்தால்

அதைப்பற்றி ஓரளவு அறிந்து கொள்ள மேலே உள்ள காணொளியை பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன!

adminJune 5, 2025

43-3-1.jpg?fit=1170%2C734&ssl=1

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில்,  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் புதன்கிழமை (04.06.25)  சிறிய என்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் அது ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுவுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அத்துடன் இதுவரை 13 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை ஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை. அத்துடன், வேறு சில என்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

43-2-1.jpg?resize=800%2C600&ssl=1

https://globaltamilnews.net/2025/216350/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை

Published By: RAJEEBAN

05 JUN, 2025 | 08:08 PM

image

செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேசநடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வெளிப்படைதன்மையை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது.

செம்மணியின் இரண்டாவது மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இது அமையலாம்.எனினும் இதற்கு சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி அகழ்வு இடம்பெறுவது அவசியம்.

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு இலங்கை அதிகாரிகள் உரிய நிதியை ஒதுக்கவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் ஊடகங்களிற்கும்  அந்த பகுதிக்கு செல்வதற்கான போதிய அனுமதியை வழங்கினால் ,இநத விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விசாரணைகளின் போது இடைக்காலத்தில் தெரியவந்துள்ள விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக தெரிவித்து வந்தால்  மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் வெளிப்படையான விதத்தில் இடம்பெறும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்பாட்டிற்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அவசரத்தை கருத்தில் கொள்ளும்போது இது இடம்பெறவேண்டும்.

அந்த பகுதியின் நேர்மைதன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

https://www.virakesari.lk/article/216724

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தைகள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 18 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Published By: VISHNU

06 JUN, 2025 | 06:36 AM

image

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

43__4_.jpg

அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 

43__3_.jpg

அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால், அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதுவரையில் ஆடை, அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால், வெற்று உடல்களாகவே அவை புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக காணப்படலாம் எனும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. 

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/216733

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் - மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

Published By: VISHNU

06 JUN, 2025 | 09:37 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (06) கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன் இதுவரையில் 18 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையுடன் (7) முதலாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைவதனால் , தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை அடுத்து , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதித்துள்ளது.

https://www.virakesari.lk/article/216821

  • கருத்துக்கள உறவுகள்

3 குழந்தைகளின் எலும்பு கூடுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பாதணிகள்,நகைகள் எவையும் அணிந்து காணப்படவில்லையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இன்றுடன் நிறைவு : 19 முழுமையான எனித என்புத்தொகுதிகள் அடையாளம்! 

07 JUN, 2025 | 10:07 PM

image

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள மனித புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக நடைபெற்றது. கடந்த ஒன்பது நாட்களாக பரீட்சார்த்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.

இன்றைய நிலையில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிறைவு நாளில் 19 என்பு தொகுதிகளும் முழுமையாக அகழ்வு பணி செய்யும் இடத்திலிருந்து அகழப்பட்டு பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்படும்.

குறித்த பகுதி குற்றம் நிகழ்ந்த பிரதேசமான மனிதப் புதைகுழியாக நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்மைய தொடர்ந்து 45 நாட்களுக்கு மேற்கொள்ள அதற்கான செலவு பாதீட்டை கால தாமதமின்றி ஒப்படைக்க கூறிய அடிப்படையில் பாதீடு இன்று கையளிக்கப்பட்டது.

நிதிகளை வழங்கும் அரச நிறுவனங்களிடம் பாதீடு கையளிக்கப்பட்டு இரண்டு வார கால அவகாசத்தில், உத்தேச திகதியாக ஜூன் மாதம் 20ஆம் திகதி மீளவும் அகழ்வாய்வு பணியை ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பாதீட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டு நிதி அனுசரணை வந்த பின்னர் குறித்த திகதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுமா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானித்து. இது குறித்து அகழ்வில் பங்குபற்றும் தரப்பினருக்கு அறிவிக்கப்படும்.

அகழ்வு பணிகள் இன்று ஆரம்பித்த நேரத்தில் ட்ரோன் கமராவின் உதவியுடன் மேலுமொரு மனித புதைகுழி இருக்குமென சந்தேகப்படும் பகுதியில் படங்கள் எடுக்கப்பட்டு தற்போது ஆய்வுக்காக பேராசிரியர் ராஜ் சோமதேவாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த படங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

IMG-20250607-WA0008.jpg

IMG-20250606-WA0002.jpg

IMG-20250607-WA0009.jpg

IMG-20250607-WA0006.jpg

IMG-20250607-WA0007.jpg

https://www.virakesari.lk/article/216887

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழி தொடர்பில் விசேட கரிசனை கொண்டுள்ளோம்; நீதி அமைச்சர் தெரிவிப்பு

08 JUN, 2025 | 12:57 PM

image

ஆர்.ராம்

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழு அகழ்வு குறித்து விசேட கரிசனைகளைக் கொண்டிருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செம்மனி சிந்துபாத்தி இந்து மயாணத்தில் நடைபெற்றுவரும் அகழ்வில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அரச தரப்பின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்படும் அனைத்து மனித எச்சங்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்பின்னர் பகுப்பாய்வு அறிக்கைகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூற முடியும்.

நீதிமன்றத்தின் அனுமதியில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து வழக்குகளும் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன. ஆகவே நீதிமன்றம் தான் இறுதியான முடிவினை எடுக்கும்.

எவ்வாறாயினும் உண்மைகள் கண்டறியப்படுவதற்காக தொடர்ச்சியான அகழ்வுப்பணிகளுக்காக நீதி வழங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அரசதரப்பில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு விசேட கரிசனைகளையும் கொண்டிருக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/216925

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணிப் மனிதப் புதைகுழியின் உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்து

June 11, 2025

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர்   எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன. முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.

ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழகப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.

அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.

https://www.ilakku.org/government-should-cooperate-in-uncovering-the-truth-about-the-semmani-mass-grave-sumanthiran-urges/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்

large.IMG_8459.jpeg.8f8bc0e36c0c6370dcb8

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி தொடர்பில் இதுவரை வெளிவராத பல உண்மைகள்!

இந்தத் திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு யாழ். பல்கலை மாணவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை

16 JUN, 2025 | 10:15 AM

image

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மனித புதைகுழி காணப்படும் நிலையில் , முதல் கட்ட அகழ்வு பணிகளில் 19 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.    

அந்நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை 45 நாட்களுக்கு மேற்கொள்ள யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றதும் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களையும் ஈடுபடுத்தும் முகமாக , அதற்கான அனுமதிகளை வழங்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரியினால் யாழ்ப்பாண பல்கலைகழகத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/217580

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக இடம்பெறுவதுடன், வெளிப்படைத் தன்மைஅவசியம் - ரவிகரன் எம்.பி

Published By: VISHNU

17 JUN, 2025 | 06:06 PM

image

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களைப்போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென இவ்வுயரிய சபையிலே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 முழுமையான மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தப் புதைகுழியினை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு அகழ்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் புதைகுழியினை அகழ்வு செய்து உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைமைகள் கண்டறியப்படவேண்டுமெனவும், இந்த விட யத்தில் அரசாங்கமானது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது சிறுவர்கள், பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இதனைவிட அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளில் ஆடைகள் அணிந்திருந்தமைக்கான சான்றிதழ்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இந்த சடலங்கள் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திட்டமிட்ட வகையில் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது.

மேலும் செம்மணிப் பகுதியில் புதைகுழிகள் உள்ள விடயம் கடந்த 1999ஆம்ஆண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதில் பிரதான சந்தேகநபரான இராணுவ லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் 600பேர்வரையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரமானது அன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, செம்மணி புதைகுழி தோண்டும் நடவடிக்கை அன்று இடம்பெற்றிருந்தது. லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன அடையாளம் காட்டிய சிலபகுதிகள் அந்தவேளையில் அகழப்பட்டன. அதில் 25 எலும்புக் கூடுகள் வரையில் மீட்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது செம்மணி பகுதியில் அகழ்வு இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கொடூர யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர், தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர், ஒன்பதாயிரம் சிறுவர்கள் அனாதரவாக்கப்பட்டனர். இவ்வாறு பேரிழப்புகளை தமிழ்மக்கள் சந்தித்திருந்தனர்.

யுத்தகாலத்தில் இராணுவத்தரப்பினரால் பலவேறு பகுதிகளில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து தற்போது 16வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவரை 13 இடங்களில் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் பலஇடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2013ஆம் ஆண்டு புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதைகுழி அவ்வப்போது அகழப்பட்டதுடன் 2018ஆம் ஆண்டுவரை இந்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன.

இங்குமீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப் பட்டிருந்தது. இதன் உண்மைதன்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பின்னர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதேபோன்று மன்னார் நகரிலுள்ள ச.தொ.ச கட்டடத்துக்கு அருகில் 2018ஆம் ஆண்டு அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கும்மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன் இந்தவிவகாரம் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போது மனிதப் புதைகுழிகள் தென்படுகின்றமை வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் வழமையானவிடயமாக மாறிவிட்டது.

யுத்தகாலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்தனர். அந்த புதைகுழிகளே தற்போது வெளிப்பட்டுவருகின்றன.

செம்மணிப் பகுதியில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். அகழ்வுப்பணிகள் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டு எந்தக்காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன, இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்ற விடயங்கள் கண்டறியப்படவேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பினரால் கடத்தப்பபட்டவர்கள் எனப் பலரும் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்னநடந்தது என்றவிடயம் இதுவரை மர்மமாகவே உள்ளது.

இவ்வாறு காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் காணப்படுகின்றது.

இதேபோன்றே இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் திறந்த நிலப்பரப்பில் இவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது தாக்குதல்களில் பெருமளவானோர் பலியாகியிருந்தனர். இவ்வாறு பலியானவர்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தனர்.

செம்மணியில் இளைஞர், யுவதிகள் கொன்று புதைக்கப்பட்டமை, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் இறுதியிலேயே தெரியவந்தது. ஆனாலும், அந்த புதைகுழிகள் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் உரியவிசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை.

அந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அன்று கிருஷாந்தி குமாரசாமியின் கொலைவழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன தகவலை வெளிப்படுத்தி யிருக்காவிடின் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்திருக்கமாட்டாது.

இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தகவல்கள் வெளிப் படுத்தப்பட்ட போதும் உரியவகையில் புதைகுழிகள் அகழப்படாமையினால்தான் தற்போது செம்மணியில் மீண்டும் புதைகுழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதைகுழிகள் தொடர்பில் உரியவிசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்போது செம்மணியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் பெருமளவானோர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 19எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த புதைகுழி அகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அகழ்வுச்செயற்பாட்டை நிறுத்தாது இதனை முழுமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் - என்றார்.

https://www.virakesari.lk/article/217753

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது - யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

18 JUN, 2025 | 11:20 AM

image

செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இன முரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மை இன மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அவ்வப்போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனக் கலவரங்களால் சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டதுடன் பெறுமதி மிக்க சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

இன முரண்பாடு என்பது உருமாற்றம் பெற்று ஆயுதப் பிணக்காக மாற்றமுற்ற போது பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன.

படுகொலைகள். சந்தேகத்தின் பெயரிலான கைதுகள், காலவரையறையற்ற தடுப்புகள், விசாரணையற்று அல்லது விசாரணை முடிவுறுத்தப்படாது திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்யப்பட்ட சிறைவாசம், காணாமலாக்கப்படுதல் என்றவாறாக அடக்குமுறைகளின் வடிவங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டன.

தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயங்களாக இன்று வரை இருப்பவை சட்டத்தின் பிடியால் இறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே. இவற்றுள்ளும் அதிக வலியையும் வேதனையையும் தருபவை காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே.

இவ்வாறானதொரு விடயப்பரப்பாக செம்மணிப் புதைகுழி விவகாரமும் விளங்குகின்றது. ஆயினும் தொடர்ந்தும் கைவிடப்படும் விடயமாக இனியும் இது மாறிவிடக்கூடாது எனும் அக்கறையை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் வலுவாகப் பதிவு செய்கின்றோம்.

இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணாமல் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன.

செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலை வலுவாக்கப்படவேண்டும் என்பதுடன் புதை குழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது.

உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வுமற்று செயற்படவேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/217792

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணிப் புதைகுழிக்காக நீதிகோரி இன்று போராட்டம்!

833346518.JPG

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதை குழிக்கு நீதிகோரி இன்று போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித என்புத்தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டிருந்தன. அந்தப் புதைகுழியை, 'மனிதப் புதைகுழி' என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றமும் அறிவித்துள்ளது. எனினும், புதைகுழிகள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் வைத்து இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே, செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி இன்று போராட்டம் இடம்பெறவுள்ளது.

https://newuthayan.com/article/செம்மணிப்_புதைகுழிக்காக_நீதிகோரி_இன்று_போராட்டம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழி - சர்வதேச தடையவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அழையுங்கள் அனுரவிற்கு கனடிய தமிழர் பேரவை கடிதம் - அணையாவிளக்கிற்கு ஆதரவு

Published By: RAJEEBAN

23 JUN, 2025 | 11:07 AM

image

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி  அநுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையுடனும் கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.

சிறுவர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது.இலங்கையிலும் வெளிநாடுகளிலும்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் இல்லை மாறாக பல தசாப்தகால காணாமல்போதல், அரசபயங்கரவாதம்,பதில்கள் இன்றி பொறுப்புக்கூறல் இன்றி தமிழ் குடும்பங்கள் அனுபவித்துவரும் துயரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை ஆகியவற்றின் துயரம் மிகுந்த பாரம்பரியமாகும்.

கடந்த 25 வருடங்களாக செம்மணி தமிழ் சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை கடுமையாக பாதித்துவந்துள்ளது.இந்த பகுதி நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் , படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள்,இரகசியமாக உடல்கள் புதைக்கப்படுதல் ஆகியவற்றுடன் நீண்டகாலமாக தொடர்புபட்ட பகுதியாகும்.

அதன் மோசமான தன்மை குறித்து தெரிந்திருந்தாலும் சிறிய பகுதியே தோண்டப்பட்டுள்ளது.மேலும் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் உரிய காரணங்கள் தெரிவிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டன.

மன்னார் ,கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாததும்,தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை மோசமாக பாதித்துள்ளன.

நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சமீபத்தைய கண்டுபிடிப்பு உண்மைக்கான மற்றுமொரு வாய்ப்பு தவறவிடப்படுதலாக அமையும்.

மனித உரிமை நீதிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள அமைப்பு என்ற அடிப்படையில் இந்த தருணத்தினை தீவிரமாக கருதுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

உங்கள் அலுவலகத்தை வெளிப்படையான முழுமையான மனித புதைகுழிகளை தோண்டும் கட்டமைப்பை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அது தெளிவான காலவரையறை,முறையியல், பொதுமக்களிற்கு அறிவித்தல் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும்.

சர்வதேச தடயவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அகழ்வு ஆய்வின் ஒரு பகுதியாகயிருப்பதற்கு அழையுங்கள்.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை உறுதிசெய்யுங்கள்.

தலையீடுகள் அல்லது ஆதாரங்களை தங்களிற்கு சாதகமாக மாற்றுதல்ஆகியவற்றை தவிர்ப்பதற்காகஅந்த பகுதியில் பணியாற்றுபவர்களிற்கு போதுமான வளங்களையும் பாதுகாப்பையும் வழங்குங்கள்.

https://www.virakesari.lk/article/218185

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணிப் புதைகுழி விவகாரம்; அகழ்வுப் பணிகளுக்கு விடுவிக்கப்பட்டது நிதி! நாளை அகழ்வு ஆரம்பம்

762044623.jpg

யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்திமனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, அகழ்வுப் பணிகளுக்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ள விடயமும், திட்டமிட்டபடி ஜூன் மாதம் 26ஆம் திகதியன்று (நாளை) அகழ்வுகளை மேற் கொள்வதில் எந்தத் தடங்கலும் இல்லை என்றும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அண்மையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. 'மனிதப்புதைகுழி' என்ற அடையாளப்படுத்தலுக்கு அமைய இனி அகழ்வுப் பணி தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/செம்மணிப்_புதைகுழி_விவகாரம்;_அகழ்வுப்_பணிகளுக்கு_விடுவிக்கப்பட்டது_நிதி!_நாளை_அகழ்வு_ஆரம்பம்#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.