Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்

09 January 2026

ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. 

நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வாய் கிழிய கத்தும் இரானில் சுதந்திரம் இல்லை என்பது பொய்த்து பொய் உள்ளது.

அதுவும் மேற்கு, இஸ்ரேல் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்றப்படுத்தலாம் என்ற சாத்திய கூறுகள் இருந்தும்

இரானின் அதி உச்ச ஆட்சி பீடத்தில் இருந்து அடிவரை சொல்வது, மக்களுக்கு ல மனப்புழுக்கம், மற்றும் குறைகளை வன்முறை இல்லாது சொல்லலாம்,

வன்முறை வந்த்தால், வெளியார் தூண்டியாது என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்ற்கும் அப்படியாந மொழியிலேயே அந்தந்த நாடுகளில் நாடாகும் போராட்டத்துக்கு சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு : இணைய சேவை முடக்கம் !

10 Jan, 2026 | 11:37 AM

image

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்தது. இந்த நாணய வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை எதிர்த்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களும் வியாபாரிகளும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். பல இடங்களில் ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறி நிலைமை மேலும் தீவிரமடைந்தது.

நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள், தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தொடர்ந்து இடம்பெறும் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஈரானில் நிலவும் இந்த அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம், அடுத்தகட்டமாக எத்தகைய திருப்பத்தை எடுக்கும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகின்றது.

https://www.virakesari.lk/article/235666

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது?

மஷாதில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,மஷாத்தில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரைத் தடுக்கும் வகையில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர்

10 ஜனவரி 2026, 09:26 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜனவரி 7ஆம் தேதி நிலவரப்படி 24 மாகாணங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலும், ஆங்காங்கே சிதறியவையாகவும் காணப்பட்டன.

தெஹ்ரானில் அதிகப்படியான போராட்டங்கள் பதிவாகி இருந்தாலும், கடந்த சில நாட்களாக சிறிய நகரங்களில் அரிதாக பெரிய அளவிலான கூட்டங்கள் கூடத் தொடங்கியுள்ளன.

இது கவனத்தை தலைநகரில் இருந்து பிற இடங்களுக்கு திருப்பியுள்ளது.

இந்த அமைதியற்ற சூழல் குறித்து தெளிவான ஒற்றை விளக்கம் என ஏதுமில்லை. சிலர் இது பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டதாகக் கருதுகின்றனர், மற்றவர்களோ இது நீண்டகால அரசியல் மற்றும் சமூகக் குறைகளின் சமீபத்திய வெளிப்பாடு என்று விவரிக்கின்றனர்.

தற்போதைய அமைதியற்ற சூழல், 2022-ஆம் ஆண்டு நடந்த மாசா அமினி போராட்டங்களின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

போராட்டங்கள் எவ்வளவு பரவலாக நடத்தப்படுகின்றன?

சமீபத்திய போராட்ட அலை இரானின் பெரும் பகுதிகளில் விரிவடைந்துள்ள போதிலும், அதில் மக்கள் பங்கேற்கும் விதம், இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப பெருமளவில் மாறுபட்டுள்ளது.

ஆரம்பத்தில் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று டிசம்பர் 28 அன்று, அதாவது போராட்டத்தின் முதல் நாளன்று தெஹ்ரானில் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான கடைக்காரர்களும் வணிகர்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

அடுத்தடுத்த நாட்களில், போராட்டங்கள் பொதுவாகச் சிறிய அளவிலும், சிதறியும், குறுகிய காலமே நீடிப்பதாகவும் இருந்தன. பெரும்பாலும் இவை இரவில் நடைபெற்றதோடு, சில நபர்களைக் கொண்ட குழுக்களாகவே இருந்தன. இந்த முறையில் சுமார் 10 நாட்களுக்கு போராட்டங்கள் தொடர்ந்தன.

ஜனவரி 6 முதல், போராட்டத்தின் நிலவியல் ரீதியான போக்கு மாறத் தொடங்கியது. பல சிறிய மற்றும் முக்கியத்துவம் குறைவான நகரங்களில் அரிதான பெரிய அளவிலான கூட்டங்கள் காணப்பட்டன. இதுவொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று சில உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.

முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான மேற்கு மாகாணமான இலாமில் உள்ள அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர்.

இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,Middle East Images / AFP via Getty Images

ஒரு நாள் கழித்து, சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் எழுச்சியையே பார்த்திராத வடக்கு கொராசான் மாகாணத்தின் தலைநகரான போஜ்னூர்டில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின.

ஜனவரி 7 மாலை வரை பிபிசி மானிட்டரிங் தொகுத்த தரவுகள், ஒட்டுமொத்தமாக தெஹ்ரானில்தான் அதிக எண்ணிக்கையிலான போராட்டங்கள் நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

இருப்பினும், முதல் நாள் தவிர, தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் ஆங்காங்கும், அளவில் குறைவாகவுமே இருந்தன. இது சில மாகாண நகரங்களில் காணப்பட்ட செறிவான கூட்டங்களுக்கு மாறாக இருந்தது.

தெஹ்ரானை தாண்டி, ஃபார்ஸ் மாகாணம், குர்திஷ் மக்கள் வசிக்கும் இலாம் மற்றும் கெர்மான்ஷா மாகாணங்கள், தென்மேற்கில் உள்ள சஹார்மஹால்-பக்தியாரி ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடந்ததைத் தெளிவாகக் காண முடிகிறது.

இந்தப் பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் நீண்டகாலப் பொருளாதார வீழ்ச்சி, அதிக வேலையின்மை மற்றும் குறைந்த முதலீடு போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.

மொத்தத்தில், இரானின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன.

இரானில் 480-க்கும் மேற்பட்ட மாவட்டங்களும் சுமார் 1,400 நகரங்களும் உள்ளன. இந்தப் போராட்டங்கள் நிலவியல் ரீதியாக விரிவடைந்து இருந்தாலும், அதன் அளவிலும் தீவிரத்திலும் சீரற்றதாகவே உள்ளதை இது குறிக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தப் போராட்டங்கள் முந்தைய நாடு தழுவிய போராட்டங்களைவிட, குறிப்பாக 2022-இல் மாசா அமினியின் மரணத்திற்குப் பிறகு நடந்த போராட்டங்களைவிட மிகச் சிறிய அளவிலேயே உள்ளன.

மஷாத்தின் காணொளிகளில், போராட்டக்காரர்கள் "ஷா நீடூழி வாழ்க" என்று கோஷமிடுவதைக் காண முடியும்.

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,மஷாத்தின் காணொளிகளில், போராட்டக்காரர்கள் "ஷா நீடூழி வாழ்க" என்று கோஷமிடுவதைக் காண முடியும்.

போராட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்வது?

தற்போதைய போராட்டங்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.

சில ஆய்வாளர்கள் இதைப் பணவீக்கம், நாணயத்தின் உறுதியற்ற தன்மை, குறைவான வாங்கும் திறன் ஆகியவற்றால் தூண்டப்பட்ட பொருளாதார ரீதியான போராட்டமாகப் பார்க்கிறார்கள். போராட்டத்தின் தொடக்க காலத்தில் வணிகர்கள் இதில் பங்கேற்றது இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

மற்றவர்களோ, இந்தப் போராட்டங்கள் ஆழமான, நீண்டகால அதிருப்தியைப் பிரதிபலிப்பதாகவும், இது அரசியல் ஆட்சிக்கு எதிரான பரந்த, ஆனால் ஒருங்கிணைக்கப்படாத எதிர்ப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். தெளிவான தலைமையோ அல்லது கோரிக்கைகளோ இல்லாதது இந்தப் போராட்டங்களை வரையறுப்பதைக் கடினமாக்குகிறது. இது பொருளாதாரக் குறைபாடுகள், அரசியல் ஒடுக்குமுறை, ஒன்று திரட்டப்பட்ட வெறுப்பு ஆகியவற்றின் கலவையாகத் திகழ்கிறது.

பெண்ணுரிமை மற்றும் சமூக சுதந்திரத்தை மையமாகக் கொண்டு நடந்த 2022-ஆம் ஆண்டு போராட்டங்களைப் போலன்றி, தற்போதைய போராட்டத்தில் ஒரு தெளிவான ஒருங்கிணைந்த கருப்பொருள் இல்லை.

பல இடங்களில், போராட்டக்காரர்கள் மதகுருமார்களின் அமைப்பு மற்றும் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனேயியை இலக்கு வைத்து முழக்கங்களை எழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

முந்தைய போராட்ட அலைகளுடன் ஒப்பிடுகையில், இரானின் கடைசி ஷாவின் மகனும், தற்போது நாடு கடத்தப்பட்டு வசிப்பவருமான ரெசா பஹ்லவிக்கு ஆதரவான முழக்கங்கள் அதிகரித்துள்ளன.

இது தற்போதைய அரசியல் அமைப்பின் மீதான ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

ரெஸா பஹ்லவி 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமது தந்தையின் முடிசூட்டின் போது (வலது ஓரம் இருக்கையில் இருப்பவர்)

பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images

படக்குறிப்பு,ரெஸா பஹ்லவி 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமது தந்தையின் முடிசூட்டின் போது (வலது ஓரம் இருக்கையில் இருப்பவர்)

போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்?

கடைக்காரர்கள் இந்தப் போராட்டங்களைத் தொடங்கி வைத்தாலும், பல இடங்களில் இதில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை விரிவடைந்துள்ளது.

நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் 67 இடங்களில் இருந்து வந்த காணொளிகளை பிபிசி வெரிஃபை உறுதி செய்துள்ளது.

பல நகரங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் முக்கியமாகப் போராட்டங்களில் இணைந்துள்ளனர், இது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவைத் தாண்டிப் போராட்டத்தின் வீச்சை விரிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், பல்வேறு குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது மற்றும் நகரங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான, அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்புக்குரிய சான்றுகளும் குறைவாகவே உள்ளன.

போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், தப்ரிஸ், இஸ்ஃபஹான், மஷாத், அஹ்வாஸ் உள்ளிட்ட பல வர்த்தக சபைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டன.

பொருளாதார அழுத்தங்களை ஒப்புக்கொண்ட போதிலும், "எதிரிக் குழுக்கள்" தங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் கவலை தெரிவித்து, போராட்டங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று அவை கூறின.

ஜனவரி 7 அன்று தப்ரிஸில் கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை அரசு ஊடகங்கள் உடனடியாக மறுத்தன. தனியாக, குர்திஷ் மக்கள் வாழும் சில பகுதிகளில் ஜனவரி 8 அன்று கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

போராட்டங்களில் மக்கள் பங்கேற்கும் முறைகளும் 2022-இல் இருந்து வேறுபடுவதாகத் தெரிகிறது. சீர்திருத்த ஆதரவு ஆய்வாளர் அப்பாஸ் அப்தி கூறுகையில், மாசா அமினி போராட்டங்களின்போது இருந்ததைவிட இதில் பெண்கள் மிகக் குறைவாகவே பங்கேற்கின்றனர்.

இந்த மாற்றமே சில சம்பவங்கள் அதிக வன்முறையாக மாறியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இளைஞர்களின் முக்கியப் பங்கை முன்னிலைப்படுத்திய அவர், சமூகப் பிளவு ஆழமடைவதை அது சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார்.

போராட்டங்களில் மக்கள் பங்கேற்கும் முறைகளும் 2022-லிருந்து வேறுபடுவதாகத் தெரிகிறது. சீர்திருத்த ஆதரவு ஆய்வாளர் அப்பாஸ் அப்தி கூறுகையில், மஹ்சா அமினி போராட்டங்களின் போது இருந்ததை விடப் பெண்கள் இதில் மிகக் குறைவாகவே பங்கேற்கின்றனர். இந்த மாற்றமே சில சம்பவங்கள் அதிக வன்முறையாக மாறியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,இரானின் இலாம் மாகாணத்தில் உள்ள முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர்

அரசு ஊடகங்களும் பாதுகாப்புப் படைகளும் எவ்வளவு விரைவாக பதிலளித்தன?

இரானிய ஊடகங்கள் முதல் நாளில் இருந்தே இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரைவாக வெளியிடத் தொடங்கின. அரசு ஒளிபரப்பு நிறுவனம் போராட்டங்கள் குறித்து சுருக்கமாகச் செய்தி வெளியிட்டதோடு, பொது மக்களின் குறைகளை ஒப்புக்கொள்ளும் நேர்காணல்களையும் ஒளிபரப்பியது.

இதுபோன்ற போராட்டங்களின்போது இதுவொரு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை. அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் அதிருப்தியாளர்களின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்க அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டனர்.

மூத்த அதிகாரிகள் "நியாயமான" கோரிக்கைகளுக்கும் "கலவரங்களுக்கும்" இடையே வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

உதாரணமாக, தெஹ்ரானில் ஒரு தனிநபர் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை உடனடியாக எதிர் வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன், அந்தச் செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் கூறியது.

பாதுகாப்புப் படையினர் தொடக்கத்தில் நிதானமாகச் செயல்படுவது போலத் தோன்றினாலும், ஜனவரி 3-க்குப் பிறகு தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். இது அயதுல்லா காமனேயியின் முதல் பொதுக் கருத்துடன் ஒத்துப் போகிறது.

அதில் அவர் "கலவரக்காரர்கள் அவர்களுக்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்" என்று எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து நீதித்துறையும் விரைவான தண்டனை வழங்கப்படும் என மிரட்டல் விடுத்தது.

"பாதுகாப்பு காரணங்களுக்காக" இடையூறுகள் இருப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இணைய போக்குவரத்து சாதாரண நிலையைவிட சுமார் 35% குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு முழுமையான முடக்கம் என்பதைவிட, ஆங்காங்கே மற்றும் உள்ளூர் ரீதியிலான இடையூறுகள் என்றே அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள்

படக்குறிப்பு,இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள்

இணையத்தடை

இரானில் பல இடங்களில் வியாழக்கிழமை மாலை முதல் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்காங்கே இணைய சேவை செயல்பாட்டில் இருப்பதாக க்ளௌட் ஃபேர், நெட்ப்ளாக்ஸ் போன்ற இணையதள கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

"போராடுபவர்கள் மீது அரசு படைகளைப் பயன்படுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இணைய சேவை தடை செய்யப்பட்ட பிறகு அதிகரித்த வன்முறை மற்றும் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது" என இரான் மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் மஹ்மூத் அமிரை-மோஹத்தாம் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார்.

இணைய சேவை முடக்கத்தின்போது படுகொலைகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதி எச்சரித்துள்ளார்.

இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்?

கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன மற்றும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இருப்பினும் வன்முறையின் அளவு முந்தைய பெரிய அளவிலான போராட்டங்களைவிடக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. 2019 நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போராட்டங்களின்போது குறைந்தது 323 பேர் உயிரிழந்தது குறித்து ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆவணப்படுத்தியது.

அதே நேரத்தில் 2022 மாசா அமினி போராட்டங்களின்போது 550க்கும் மேற்பட்ட இறப்புகளை மனித உரிமை அமைப்புகள் பதிவு செய்துள்ளன.

இதற்கு நேர்மாறாக, தற்போதைய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரின் 14 உறுப்பினர்கள் உள்படக் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

நார்வேவில் செயல்படும் இரான் மனித உரிமைகள் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் 9 குழந்தைகள் உள்பட 51 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

அத்துடன் 2,277க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் (Human rights activist) என்ற செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சர்வதேச சூழல் ஏன் முக்கியமானது?

இஸ்ரேலுடனான ஜூன் மாத போரைத் தொடர்ந்து, பதற்றமான சர்வதேச சூழலில் இந்தப் போராட்டங்கள் விரிவடைந்து வருகின்றன. அந்தப் போரின்போது அமெரிக்கா இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்கியிருந்தது.

ஜனவரி 2-ஆம் தேதியன்று, அமைதியாகப் போராடும் போராட்டக்காரர்களை இரானிய பாதுகாப்புப் படையினர் கொன்றால் அமெரிக்கா தலையிடக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். மேலும் அமெரிக்கா "ஆயத்த நிலையில்" இருப்பதாகவும் கூறினார்.

ஜனவரி 4 அன்று டிரம்ப் தனது எச்சரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பதிலளித்த இரானிய அதிகாரிகள், அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியதுடன், இரானின் ஆயுதப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் எச்சரித்தனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய பிரமுகர்கள் இந்தப் போராட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, "வீதியில் இறங்கியுள்ள" இரானியர்களுக்கும், அவர்களுடன் "நடந்து செல்லும் ஒவ்வொரு மொசாட் முகவருக்கும்" தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பாரசீக மொழியில் இயங்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசின் சமூக ஊடகக் கணக்குகள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகள் சில போராட்டக்காரர்களுக்கு தைரியத்தை அளிக்கக்கூடும். ஆனால் அதேநேரம் இது 'வெளிநாட்டுச் சதி' என்ற அதிகாரிகளின் வாதத்தை வலுப்படுத்துவதோடு, இன்னும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பதைத் தடுக்கும் காரணியாகவும் அமையக்கூடும்.

அடுத்து என்ன நடக்கும்?

அரசாங்கத்தின் கவனம் தற்போது பொருளாதாரத் தீர்வுகளை நோக்கித் திரும்புவது போலத் தோன்றுகிறது.

ஜனவரி 3-ஆம் தேதி, அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிர்வாகம், நாடு தழுவிய அளவில் மின்னணு கூப்பன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விலைவாசி உயர்வில் இருந்து குடும்பங்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இருப்பினும், இணையதளங்களில் இத்திட்டத்திற்குப் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் இதை "அவமானகரமானது" என்று வர்ணித்துள்ளனர்.

மத்திய வங்கியின் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், நாணயத்தின் நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கிறது.

ஒருவேளை பொருளாதாரச் சூழல் மேலும் மோசமடைந்து, மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு பெரிய தேசிய இயக்கமாக உருவெடுக்காவிட்டாலும்கூட, தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqj2dp9vkl8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.