Jump to content

நானும் என் ஈழமும் 16: மைதிலியக்கா


Recommended Posts

பதியப்பட்டது

Naanum%20En%20Eelamum%2016.jpg

இப்போதெல்லாம் எம்மில் பலர் அதிகம் சொல்லும் வார்த்தையாகிவிட்டது 'கிளிநொச்சி'. இந்த பெயருக்குரிய இடத்திற்கு நான் பல தடவைகள் சென்றுள்ளேன். சில மாதங்கள் வாழ்ந்த்துள்ளேன். உலகத்தில் நான் சென்ற அத்தனை இடங்களிலும் பார்க்க எனக்கு அந்த வன்னி மண் தான் பிடித்திருந்தது.

ஒரு தடவை சென்ற போது அதிகம் மக்கள் இல்லாத அமைதியை கண்டேன். பின்னர் சென்ற போது இடம்பெயர்ந்த மக்களையும், அவர்களை துரத்தும் மலேரியா காய்ச்சலையும், மரத்தடியே அவர்கள் தங்குவதையும் கண்டேன். பின்னொரு தரம் சென்ற போது வன்னிமண் அம்மக்களை ஒழுக்கமாய் வாழ வைப்பதை கண்டேன். இறுதியாக சென்ற போது ஒரு நேர்மையான அரசாங்கள் ஒழுக்கமாக நடப்பதை கண்டேன். இன்று அம்மண்ணில் எதிரியின் கால்கள் எனும் போது மனசு துடிக்கின்றது, கோபம் வருகின்றது. கைதவறி விதை விழுந்தாலே விருட்சமாகும் மண்ணல்லவா, அங்கு இரக்கமேயில்லாத பிசாசுகள் எனும் போது கோபம் வரும் தானே.

வன்னி நோக்கிய என் பயணங்கள் ஒவ்வொன்றும், அங்கு இருந்த ஒவ்வொரு நிமிடமும் என்னால் இப்போதும் விபரிக்க முடியும். அதில் ஒரு பயணம் மட்டும் ஒரு படி அதிகமாகவே நினைவில் இருக்கு. அதிலும் அங்குள்ள மக்களின் இன்றைய சூழ்நிலை எனக்கு அப்பயணத்தை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வருகின்றது.

அப்போது தான் வன்னி மண்ணிற்கு இடம்பெயர்ந்து மக்கள் கிளாலியூடாக வர ஆரம்பித்திருந்த காலம். சொந்த வீடுகள்,காணிகள்,வசதிகள் அத்தனையையும் விட்டுவிட்டு உயிரை பாதுகாக்க வள்ளத்தில் ஏறி நம்பிக்கையோடு வன்னி மண்ணை மக்கள் தொட ஆரம்பித்திருந்தார்கள். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தை விட்டு கிளம்பிய சோகம், இனி வன்னியில் என்ன நடக்கும், எப்படி வாழ்வது என்ற யோசனை...இவற்றை அனுபவித்தவர்களுக்கு தான் வலி தெரியும். அதன் ரணம் புரியும்.

பல்லாயிரக்கணக்கான மக்களோடு என் பெரியம்மா குடும்பமும் இடம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களை பார்க்க சென்றிருந்தேன். ஒரு பெரிய காணி, இரண்டு சின்ன கொட்டில்: ஒன்று பெண்களுக்கு, மற்றொன்று சமையல்கட்டு. அதில் கிட்டத்தட்ட 15 பேர் தங்கியிருந்தார்கள். நான்கு குடும்பங்கள், அதில் ஒன்று என் பெரியம்மா குடும்பம். இடம்பெயர்ந்து வந்துவிட்டால் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் துணை தானே. அதுவரை ஒருவரை ஒருவர் பார்த்தேயிராத நான்கு குடும்பங்கள் அப்போது சகோதரங்கள் ஆகியிருந்தார்கள்.

அங்கு போய் அவர்களையும், அந்த இடத்தையும் பார்த்ததும் எனக்கு பயங்கர சந்தோசம். இத்தனை பேரா! என்ற வியப்பும், யேய் என்று சந்தோசமும் எனக்குள். அவர்களில் வலிகளும் கஸ்டங்களும் எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது நினைக்கும் போது கஸ்டமா இருக்கு.

காலையில் எழுந்ததும் அனைவரும் ஒன்றாக சீனி போடாத தேநீர் குடிப்பதும் [வெளிநாட்டுகாரி என எனக்கு மட்டும் ஒரு சின்ன துண்டு சக்கரை கிடைக்கும்], கிணறு இல்லாததால் அரைமணித்தியாலம் நடந்து சென்று குளத்தில் குளிப்பதும், நடக்கும் போது வழியில் இருக்கும் மாங்காய், கொய்யாக்காய் பறித்து சாப்பிடுவதும், ஒன்றாக சாப்பிடுவதும், சமையலுக்கு தேவை என விறகு பொறுக்க போவதும் எனக்கு பிடித்திருந்தது. அது எத்தனை கஸ்டமாக அவர்களுக்கு இருந்திருக்கும்!

அந்த நேரத்தில் எனக்கு அதிகம் பிடித்தது மைதிலி அக்காவை தான். நான்கு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசு. நல்லா படிப்பாவாம். எனக்கு எங்கட அக்காவை விட அவவில நல்ல விருப்பம். அதனால அக்காக்கு கொஞ்சம் பொறாமை. என்னை தன்னோடவே வச்சிருப்பா.

அக்காவும், மைதிலி அக்காவும், நானும் பக்கத்தில் இருக்கும் காணிகளுக்கு போய் என்ன இருக்கு எண்டு பார்ப்போம். பத்தைக்குள்ள பாம்பிருக்கும் என பெரியவங்க சொன்னதால எங்களுக்கு காவலுக்கு அண்ணாக்கள் வருவினம். ஆனால் ஒரு நாள் ஒரு பாம்பை கண்டுட்டு எங்களுக்கு முன்னால ஓடிட்டினம். நாங்க ஒரு பெரிய மரத்தடி எடுத்து பாம்பை தூக்கி அடுத்த காணிக்குள்ள எறிஞ்சு போட்டு தான் வந்தனாங்கள். அதில எனக்கு ஒரு ரகசியம் தெரியும். அபப்பா சொல்லி தந்தவர். பாம்பு வந்தால் "நாரயணா ஏன் இப்ப இங்க வந்திருக்க? பிள்ளையள் இருக்கிற இடம். வந்த வழியே போ" எண்டு சொன்னால் உடனே போயிடுமாம்.

அதனால நான் அங்க எந்த பாம்பை கண்டாலும் அந்த டயலக்க சொல்லி பார்க்கிறது. சிலது போயிடும். சிலது என்னை போல சரியான பிடிவாதம் போல, அப்படியே நிற்கும். 'சரி நீ நில் நான் போறேன்" எண்டு சொல்லிட்டு ஓடிடுவேன். 'மரத்தடியை கண்டாலும் நாரயணா போயிடுன்னு பபா சொல்லுது' என அடிக்கடி சொல்லுவாங்க அக்காக்கள். இப்ப தான் எனக்கு ஒரு சந்தேகம் வருது, அந்த போகம பிடிவாதமா நின்ற பாம்பெல்லாம் ஒருவேளை மரத்தடியா இருக்குமோ!!

எல்லாத்தையும் விட ரொம்ப சந்தோசமானது இரவு தான். ஆண்கள் மரத்தடியில் தூங்கிவிட, நாங்கள் கொட்டிலுக்குள் தூங்குவோம். மைதிலி அக்கா நல்லா கதை சொல்லுவா, எங்கட அக்கா நல்லா பாடுவா. முதலில் கதையில் தொடங்கி, பாட்டு தொடங்கும் போது நான் தூங்கிவிடுவேன். அன்றிரவும் அப்படித்தான், இரவு சாப்பாடு மதியம் செய்த சோறும்,கறியும் தான். வழமையாக பாண் தான் இரவில். அன்று பாண் வாங்க முடியவில்லையாம். [பணம் இருந்திருக்காதோ என இப்போ யோசிக்க தோணுது] அதனால எல்லாருக்கும் சோறு கவளம் தான். இரவில், நிலவில், முற்றத்து மண்ணில், 15 பேர் ஒன்றாக சாப்பிட்டும் சுகம் எங்காவது வருமா!

சாப்பாடு முடிந்தால் தூக்கம் தானே, அப்போ மைதிலியக்கா கதை சொல்லணும். ஆனால் அண்டைக்கு மைதிலி அக்காக்கு என்னமோ நடந்திட்டுது போல.

'என்ன மைதிலி இண்டைக்கு சத்தத்தை காணம்? கதை ஸ்டொக்கில இல்லையோ?'

'இல்லையக்கா எனக்கு எண்ட ப்ரண்டுந்த நினைவா கிடக்கு'

'ஆரை சொல்லுறிங்க..அண்டைக்கு சொன்னிங்களோ சுபா எண்டு ஒரு பிள்ளைய பத்தி.அவவோ?'

'இல்லையக்கா இவ என்னோட ஓ/எல் வரைக்கும் படிச்சவ. அவ செத்து நாளைடோய ஒரு வருசமக்கா'

'..............'

'செல் அடிச்சு தான். செல் அடிப்பான் எண்டு பங்கருக்குள்ள போக முதல் அடிச்சு போட்டான்'

கொஞ்சம் தூரத்தில் படுத்திருந்த மைதிலி அக்காவின் அம்மா;

'பிள்ளை இரவில எதுக்கு இப்ப இந்த சாகுற கதையள். பேசாம படுங்கோ'

அதன் பின்னர் யாருமே கதைக்கவில்லை. மைதிலி அக்கா அழுது கொண்டு இருந்தா. நானும் அக்காவும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து கொண்டு இருந்தோம்.

காலம நான் எழும்பி பார்த்தேன். ரெண்டு அக்காவும் எழும்பல. எங்கட அக்காவை தட்டி எழுப்பிட்டு, மைதிலி அக்காவ எழுப்ப போனேன். எங்கட அக்கா எழுப்ப வேணாம் எண்டு சொன்னா. மைதிலி அக்கா எழும்புற போலவே தெரியலை. அவட அம்மாட்ட போய் நான் 'அக்காகு காய்ச்சலோ ஏன் எழும்பேல்ல' எண்டு கேட்ட பிறகு தான் அக்காவை பக்கத்தில போய் பாத்திட்டு கத்தினவ.

'அய்யோ பிள்ளைய ஏதோ பூச்சி கடிச்சு கிடக்கு' எங்கட பெரியம்மாட குரல். எல்லாரும் சேர்ந்து மருத்துமனைக்கு கொண்டு போக, அக்கா போய் நிறைய நேரமாசு எண்டு சொல்லிட்டினம்...அதுக்கு பிறகு என்னத்த சொல்ல...விஷபூச்சி ஏதோ கடிச்சதாம்..என்னை பார்க்கவே விடலை..

அந்த சம்பவத்திற்கு பின்னர் 5 வருடங்களுக்கு பின்னர் தான் மறுதரம் வன்னி மண்ணை தொட்டிருக்கேன். எங்க வீட்டிலயே எத்தனையோ உயிர் இழப்புக்கள், ஆனால் இது என்னை அதிகமாகவே அழ வைத்தது...ஒரு உயிர் போகும் போது பக்கத்தில் நித்திரையில் இருந்திருக்கேனே..பாம்ப போக வைக்க சொல்லி தந்த போல, விச பூச்சிக்கும் ஒன்றை சொல்லி தந்திருக்கலாம் என்ட அப்பப்பா...இல்லாட்டி இரவில சாவு கதை கதைச்சதாலயோ? மைதிலியக்கா கதைக்காம இருந்திருக்கலாம்!

பிள்ளை சுவாசிச்ச இடம் எண்டு கடைசிவரை அதே காணியில் மைதிலி அக்காட அப்பாவும் அம்மாவும் இருந்தவை..இப்ப எங்கயோ..என்ன செய்யினமோ...

இன்று மறுபடி வன்னிகாட்டில் இன்னமும் உள்ளே இடம் பெயர்ந்துள்ள எம் மக்கள்...அங்கு எத்தனை மைதிலிகள்...எத்தனை மைதிலிகளின் பெற்றோர்கள்...உலகத்திடம் தான் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இப்படிடும் எமக்கு கஸ்டமா?எப்போது எங்களுக்கு விடியும்????

Posted

தூயா இன்னும் எத்தனை மைதிலியக்காகள், இது ஒரு தொடர் கதை.

நானும் கிளிநொச்சியல் 4 வருசம் இருந்து படிச்சிருக்கிறன். வாழ்வில மறக்கமுடியாத பல கதைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் யாழ் களத்திற்கு வருவதற்கு முக்கிய காரணங்களீல் தூயாவின் எழுத்தும் ஒரு காரணமாகும்.எம் மண்ணீல் நடந்தவற்றை உணர்ச்சி பூர்வமாக தந்து உள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

போர் கொண்டு சென்றது போக, சுனாமி அள்ளிச் சென்றது போக இது போன்று பாம்புகளும் தேள்களும் கடித்து எத்தனை உறவுகள்! நெஞ்சு வலிக்கிறது

Posted

நேற்று தூயாவிண்ட இந்தக்கதையை வாசிச்சு இருந்தன். பதில் எழுதநேரம் கிடைக்க இல்லை.

தூயாவுக்கும் இவ்வளவு திகிலான அனுபவங்கள் எல்லாம் கிடைச்சு இருந்திச்சிதா எண்டு இந்தக்கதையை வாசிச்சபிறகு மலைப்பாய் இருந்திச்சிது. எனக்கும் ஊரில பிடிக்காத விசயம் இந்த பூச்சிகள், பூராண், பாம்புகள்தான். நானும் ஓரிருமுறை பாம்புக்கடியில இருந்து தப்பி இருக்கிறன். ஆனால்... பலதடவைகள் மட்டைத்தேளிடம் கடிவாங்கி இருக்கிறன். அது வலியோ வலி எண்டு கடிச்ச இடத்தில நரம்பு இழுத்துக்கொண்டு இருக்கும். பிறகு கடிச்ச இடத்தில புளி பூசிறது. சப்பாத்துக்க, கட்டுலுக்கு கீழ, தலாணிக்கு கீழ எல்லாம் மட்டத்தேள் ஒளிஞ்சு இருக்கும். இதைமாதிரி குழவிகளிட்டயும் சிலவேளைகளில கடி வாங்கி இருக்கிறன்.

எனக்கு இஞ்ச கனடாவில மிகவும் பிடிச்ச விசயம் என்ன எண்டால் நுளம்பு, பூராண், மட்டத்தேள், பாம்பு ஒண்டும் இஞ்ச இல்லை. நிம்மதியாய் நித்திரை கொள்ளலாம். ஊரில எண்டால் நொய்ங் நொய்ங் நொய்ங் எண்டு நுளம்பு காது, மூக்கு எண்டு உடம்பு எல்லாம் சுத்திச் சுத்தி திரிஞ்சு கடிச்சுக்கொண்டு இருக்கும். ஒழுங்காய் படுக்கவும் ஏலாது.

பிறகு நிம்மதியாய் மலசலம் கழிப்பம் எண்டு கழிவறைக்கு போனால்.. அங்க நூற்றுக்கணக்கில கரப்பொத்தான் எல்லாம் சிலவேளைகளில இருக்கும்... வழமையான நிலமையிலயே இப்பிடி எல்லாம் பிரச்சனை. ஆனால்.. வன்னியில இப்படியான பிரச்சனை நேரம் சனம் எவ்வளவு கஸ்டப்பட்டு இருக்கும், கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எண்டு கற்பனை செய்து பார்க்கக்கூடியதாய் இருக்கிது.

பதிவுக்கு - எண்ணப்பகிர்வுக்கு நன்றி தூயா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெஞ்சைத் தொடுகிற கதைகள் சம்பவங்கள். வன்னியில் இதே காலத்தில் நாங்கள் குடும்பமாக இடம்பெயர்ந்து ஒரு அரை குறையாகக் கட்டிய வீட்டில் இருந்த போது ஒரு சம்பவம் அதிசயமாக நடந்தது. நானும் அப்பாவும் படுத்திருந்த கதவில்லாத, வாசலில் நேரே பற்றைகள் கொண்ட அறைக்குள் அந்த வீட்டுப் பூனையும் அண்டுவதுண்டு. அப்பா அன்றிரவு பூனையை வெளியேற்றுவதில் அக்கறை காட்டினார். வெளியே குளிர் தானே, உள்ளே படுக்கட்டும் விடுங்கள் என்று நான் சொன்னதும் விட்டு விட்டார். இரவு குளிர் பெருமழையோடு அசந்து தூங்கி விட்டு விடிய எழுந்தோம்.அறை வாசலில் ஒரு எட்டு ஒன்பது அங்குலம் நீளமான பெரிய கருந்தேள் ஒன்று இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. ஒரு நாளும் தேளிடம் கடி வாங்கியதில்லை. கடித்திருந்தால் நான் வலியிலேயே போய்ச் சேர்ந்திருப்பேன். அந்த அதிசயத்தை இன்றும் நினைத்துக் கொள்வேன். இப்படிப் பட்ட அதிசயங்கள் இன்று தலையின் மேல் கூரை கூட இல்லாத வன்னிச் சகோதரங்களுக்குக் நடக்குமா என்று யோசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Naanum%20En%20Eelamum%2016.jpg

இப்போதெல்லாம் எம்மில் பலர் அதிகம் சொல்லும் வார்த்தையாகிவிட்டது 'கிளிநொச்சி'. இந்த பெயருக்குரிய இடத்திற்கு நான் பல தடவைகள் சென்றுள்ளேன். சில மாதங்கள் வாழ்ந்த்துள்ளேன். உலகத்தில் நான் சென்ற அத்தனை இடங்களிலும் பார்க்க எனக்கு அந்த வன்னி மண் தான் பிடித்திருந்தது.

ஒரு உயிர் போகும் போது பக்கத்தில் நித்திரையில் இருந்திருக்கேனே..பாம்ப போக வைக்க சொல்லி தந்த போல, விச பூச்சிக்கும் ஒன்றை சொல்லி தந்திருக்கலாம் என்ட அப்பப்பா...இல்லாட்டி இரவில சாவு கதை கதைச்சதாலயோ? மைதிலியக்கா கதைக்காம இருந்திருக்கலாம்!

பிள்ளை சுவாசிச்ச இடம் எண்டு கடைசிவரை அதே காணியில் மைதிலி அக்காட அப்பாவும் அம்மாவும் இருந்தவை..இப்ப எங்கயோ..என்ன செய்யினமோ...

இன்று மறுபடி வன்னிகாட்டில் இன்னமும் உள்ளே இடம் பெயர்ந்துள்ள எம் மக்கள்...அங்கு எத்தனை மைதிலிகள்...எத்தனை மைதிலிகளின் பெற்றோர்கள்...உலகத்திடம் தான் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இப்படிடும் எமக்கு கஸ்டமா?எப்போது எங்களுக்கு விடியும்????

கிளிநொச்சி ஒரு நகரமல்ல, அதன் ஒவ்வொரு துளியிலும் ஓராயிரம் கதைகள், வீரம், காதல், சோகம் இன்னும்....... இன்னும்....... அழித்துவிடமுடியாத அந்தப் பசுமையானதும், வார்த்தைக்குள் கட்டிவிட முடியாத நெஞ்சக் கூட்டை நெருடிச் செல்லும் அந்த வீரர்களின் புன்னகையை............... புதுமெருகேறி நிமிர்ந்து நின்ற அந்த நகரை.... எண்ணிப் பார்க்கிறேன் தூயா அவர்களே துடிக்கிறது. கிளிநொச்சி மட்டுமா? மல்லாவி, பரந்தன், ஆனையிறவு.... அந்த ஆனையிறவில் வாகனத்தை நிறுத்தி அந்த மண்ணைத் தொட்டு அளைந்து அள்ளிய போதுஏ ற்பட்ட்ட சுகம் .

Posted

தூயா அக்காவின் கதை மிகவும் நல்ல கதை. பாராடுக்கள்.

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிலங்கா வான்படையின் குண்டுகளுக்குத் தப்ப , பதுங்குகுழிக்கு சென்று அங்கிருந்த விசப்பாம்புகள், புழுமைச் சிலந்தி, மட்டைத்தேள் போன்றவற்றினால் கடி வாங்கியோர் பலர் இருக்கிறார்கள். கொடிய பாம்புக்கடியினால் இவர்களில் சிலர் இறந்தும் இருக்கிறார்கள். எப்பொழுது வன்னியில் இருக்கும் எம்மவர்களுக்கு விடிவு கிடைக்கப் போகிறதோ?

Posted

வன்னி நினைவுகளை மீட்டமைக்கு நன்றி தூயா. வன்னி மண்ணும் மக்களும் இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது.

Posted

வன்னி வாழ்வினை இரைமீட்ட துஜாவிற்கு நன்றிகள்... ஒரு சோகத்தினை வலிகள் தெரியாது நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டவிதம் அருமை.. நான் என்றும் உங்கள் ஆக்கங்கள் படிக்கத்தவறுவதில்லை... ஆனாலும் அறுசுவையோடு படைத்த ஆக்கம் அருமை.. ஆன்னால் அதன் பின்னணியிலிருக்கும் ஆழமானவரிகள் நம் தமிழர் படும் அவலங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எரிக்கும்வரை தொடர்வோம்... வெல்லும் வரை போராடுவோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.