Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

Featured Replies

மகர ஜோதி பொய், ஐஸ் லிங்கம் பொய், பக்தி பரவசமும் பொய்

“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.

amarnathதெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய ‘குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.

மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.

காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ‘அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’ என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).

இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

“”இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”" என்று சொன்னால், ‘இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!

மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?

“கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?” என்று குமுறியிருக்க வேண்டாமா? ‘அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? ‘மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை ‘மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?

மூடநம்பிக்கை, பகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த ‘பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.

130120081921புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து ‘தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் ‘ங’ போல் வளையும்’ நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த ‘உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?

இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக ‘உணர்ந்து’ மயங்கும் பொருட்டு ஒரு ‘தெய்வீக கிளைமாக்ஸ்’ பக்தனுக்கே தேவைப்படுகிறது.

எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!

‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.

அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, ‘எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.

சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.

ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.

இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். ‘பக்தி’ என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. ‘கஞ்சாவே பேரின்பம்’ என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

‘மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், ‘ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். ‘பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.

அல்லது “மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது” என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், ‘பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்’ பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.

‘டபுள்யூ.டபுள்யூ.எஃப்’ என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். ‘குத்து.. கொல்லு’ என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

புதிய கலாச்சாரம் - ஜூலை 2008 ( அனுமதியுடன்)

கடவுள் கைது பக்தன் விடுதலை வெளியீட்டில் இடம்பெற்றுள்ள கட்டுரை

வினவு தளத்திலிருந்து http://vinavu.wordpress.com/2009/01/15/sabice/

இதன் மறுமொழியை வாசிக்க http://vinavu.wordpress.com/2009/01/15/sabice/#comments

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நீன்கள் சொன்னாலும் நாங்கள் திருந்தமாட்டம். யாழ்ப்பாணத்தில் சிவ பக்கதனாய் இருந்த நாங்கள் சிட்னியில ஜய்யப்பணுக்கு கோயில் கட்டுறம்,' "இதுதான் தமிழன்டா"

  • கருத்துக்கள உறவுகள்

சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது;

இதைத்தான் சாருநிவேதா புத்தகமாக எழுதினாரா?? :rolleyes: :rolleyes:

புதிய தகவல்களை அறியத்தந்த கட்டுரைக்கு நன்றி...!

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி பக்தர்கள் பக்தி பரவசத்தால் ஆனந்தம் சபரிமலையின் மொத்த வருமானம் ரூ.100 கோடி

வீரகேசரி நாளேடு 1/15/2009 8:18:31 PM - சபரிமலை சன்னிதானத்தில் பகவான் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்ற சிறிது நேரத்தில் பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதியை கண்டு லட்சக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசமடைந் தனர்.

சபரிமலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கு பெருவிழா நடைபெற் றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநி லங்களிலிருந்து சுமார் 15 இலட்சம் பக் தர்கள் இங்கு கூடியிருந்தனர். அதிகாலை முதலே 18 ஆம் படியேறி தரிசனம் செய்யவும் நெய்யபிஷேகம் நடத்தவும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துநின்றனர்.

மகர சங்கரம பூஜை அதிகாலை 4.15 மணி க்கு ஆரம்பமாகி அபிஷேகங்கள் இடம்பெற்றன. மாலை 6 மணிக்கு திருவாபரணப் பெட்டிகள் எடுத்துவரப்பட்டன. அப்போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. பந்தளத்தில் திருவாபரண பெட்டி புறப் பட்டது முதல் இந்த கருடன் கூடவே வருவ தாக ஐதீகம் . திருவாபரண பெட்டி 18 ஆம் படி வழியாக 6.34 மணிக்கு ஸ்ரீகோயிலுக்கு வந்தது. திருவாபரண பெட்டி பெற்றுக் கொள்ளப்பட்டு நடைசாத்தப்பட்ட பின்னர் திருவாபரணங்கள் சுவாமிக்கு அலங்கரிக் கப்பட்டு மாலை 6.40 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து, தொடர்ந்து 6.42 மணிமுதல் மகர நட்சத்திரம் விண்ணில் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. அதனை பார்த்து பக்தர்கள் பக்தி பரவசம டைந்து பாடினர். இம்முறை மகரஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் பக்தர்களை அனும திப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. குறைவான பாஸ் வினியோ கிக்கப்பட்டதால் பலரும் இந்த வாய்ப்பை பெற முடியவில்லையென தெரிவிக்கப்படு கிறது. சன்னிதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு சோத னை தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது.

இதேவேளை சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனில் மொத்த வருமானம் இந்திய ரூபாய்படி 100 கோடி ரூபாவை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி மண்டல சீசன் ஆரம்பமானது. மொத்தம் 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்ற இந்த காலத்தில் மொத்தம் 71 கோடியே 95 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த தொகையுடன் அன்னதான நன்கொடை யாக 67.28 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

மகரவிளக்குகாக நடைதிறக்கப்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் மொத்த வரு மானம் 30 கோடியை கடந்தது. இதன் மூலம் முதன்முறையாக சபரிமலை வருமானம் மண்டல, மகர விள க்கு சீசனில் நூறு கோடி ரூபாவைத் தாண்டியுள்ளது

ஆரம்பத்தில் பகுத்தறிவாளர்கள்(?) மதத்தை பின்ப‌ற்றுவ‌த‌ற்கு ம‌னித‌ர்க‌ளின் ம‌ட‌மையே கார‌ண‌ம் என்றார்க‌ள். இன்று ம‌த‌த்தை பின்ப‌ற்றுப‌வ‌ர்களில் நன்கு படித்தவர்களும் இருப்பதால் தொடர்ந்து இக்காரணத்தை இவர்களால் சொல்லமுடியாது. எனவெ இது தெய்வீக அபினி என்கிறார்கள்.

இவ‌ர்க‌ள் விடுகின்ற‌ த‌வ‌று இதுதான். ம‌னித‌ வாழ்க்கையில் ம‌னித‌ ம‌ன‌த்தின் செல்வாக்கு என்ன‌ என்ப‌தை அறிந்து கொள்ள‌ இவ‌ர்க‌ள் விரும்புவ‌து இல்லை. மன‌ம் என்று ஒன்று இருப்ப‌தை இவ‌ர்க‌ள் ஏற்றுக் கொள்வதும் இல்லை.

அறிவு என்ப‌து ஒரு க‌ருவி ம‌ட்டுமே. அத‌ற்கு அநுப‌விக்கும் ச‌க்தி கிடையாது.

ஆனால் வாழ்க்கையோ அநுப‌வ‌ம் என்ப‌தாக‌த்தான் இருக்கின்ற‌து. இந்த‌ அநுப‌வ‌ம் என்ப‌து ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து. மனத் திருப்தி தான் வாழ்க்கைத் திருப்தி ஆகின்றது.

க‌ட‌வுள் கொள்கையும் ம‌னித‌ர்க‌ளுக்கு இத்த‌கைய மனத் திருப்திக‌ளை கொண்டுவ‌ந்து கொடுக்கும் ‌க‌ருத்தே. ம‌னித‌ ம‌ன‌ம் அத்த‌கைய‌து.

க‌ட‌வுள் க‌ருத்தை அக‌ற்றி விட்டால் ஏற்ப‌டும் வ‌ர‌ண்ட‌ வெற்றிடம் ம‌னித‌ர்க‌ளுக்கு வாழ்க்கையின் நோக்க‌ம் என்ன‌ என்ற‌ கேள்வியை எழுப்பும். இத‌ற்கு இந்த‌ ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளின்(?) ப‌தில், வெளியே ந‌ன்கு சோடித்தாலும் உட்க‌ருத்தான‌து "இய‌ந்திர‌த்த‌ன‌மான‌து அல்ல‌து மிருக‌ங்க‌ளைப் போன்ற‌து" என்ற‌ ஒன்றாக‌வே அமையும். இந்த‌ ப‌திலிற்கு ம‌னித‌ர்க‌ள் த‌யார் இல்லை.

ஆனால் கடவுள் க‌ருத்து அவ‌ர்க‌ளின் வாழ்க்கையின் நோக்க‌த்தை உய‌ர்த்துகின்ற‌து.

க‌ட‌வுள் க‌ருத்து ம‌ன‌த்தோடு ம‌ட்டும‌ல்ல‌, இன்று ம‌னித‌ர் அறிவோடும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுகின்ற‌து. விஞ்ஞான‌ம் முன்னேற‌ முன்னேற இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ அடிப்ப‌டை விட‌ய‌ங்க‌ள் ம‌னித ஆறிவிற்கு எட்டா வ‌கையில் மேலும் சிக்க‌ல‌டைந்து நுட்ப‌ம‌டைவ‌து க‌ட‌வுட் க‌ருத்தை மேலும் வ‌லுவ‌டைய‌ச் செய்கின்ற‌து. ‌

ஆனால் இந்த‌ ப‌குத்த‌றிவாள‌ர்க‌ள்(?) செய்வ‌து என்ன‌ ? சில‌ கீழ்த்த‌ர‌மான‌ பித்த‌லாட்ட‌க்கார‌ர்க‌ள் க‌டவுள் பெயரில் என்று செய்யும் கூத்துக்க‌ளை அப்ப‌டியே இதுதான் க‌ட‌வுள் என்று எடுத்துக்கொள்கின்றார்க‌ள். இவர்கள் த‌ங்க‌ள் த‌வ‌றை, த‌ங்க‌ள் எடுகோள்க‌ளின் குறைப‌டுக‌ளை முற்றாக‌ ஆராயுமுன்ன‌ரே முடிவிற்கும் தாவி விடுகின்றார்க‌ள். இத‌ற்கு வினவுவின் மேற்சொன்ன‌ ப‌திவு ந‌ல்ல‌ உதார‌ண‌ம்.

க‌ட‌வுள் க‌ருத்தை அக‌ற்றி விட்டால் ஏற்ப‌டும் வ‌ர‌ண்ட‌ வெற்றிடம் ம‌னித‌ர்க‌ளுக்கு வாழ்க்கையின் நோக்க‌ம் என்ன‌ என்ற‌ கேள்வியை எழுப்பும். இத‌ற்கு இந்த‌ ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளின்(?) ப‌தில், வெளியே ந‌ன்கு சோடித்தாலும் உட்க‌ருத்தான‌து "இய‌ந்திர‌த்த‌ன‌மான‌து அல்ல‌து மிருக‌ங்க‌ளைப் போன்ற‌து" என்ற‌ ஒன்றாக‌வே அமையும். இந்த‌ ப‌திலிற்கு ம‌னித‌ர்க‌ள் த‌யார் இல்லை.

ஆனால் கடவுள் க‌ருத்து அவ‌ர்க‌ளின் வாழ்க்கையின் நோக்க‌த்தை உய‌ர்த்துகின்ற‌து.

ஆகவே வறண்ட வெற்றிடத்திற்கு பயந்து இயந்திரதனமான மிருகமான மனிதனுக்கு போலிக்கடவுளை அறிமுகப்படுத்தி உயர்வானவனாக்குறீர்கள்! :lol:

சில‌ கீழ்த்த‌ர‌மான‌ பித்த‌லாட்ட‌க்கார‌ர்க‌ள் க‌டவுள் பெயரில் என்று செய்யும் கூத்துக்க‌ளை அப்ப‌டியே இதுதான் க‌ட‌வுள் என்று எடுத்துக்கொள்கின்றார்க‌ள்.

கடவுளின் பெயரால் உலகம் பூராவும் கொன்று குவிக்கப்படும் மனிதர்களுக்கு என்ன பதில்?

இந்த தீமையான மதத்தை ஒழிக்க முதற்படியாக 18 வயது வரை மதத்தை சிறுவர்களுக்கு போதிக்க கூடாது என்று தடை சட்டம் இயற்ற வேண்டும். அதை மீறுபவர்களுக்கு சிறுவர் பாலியல் குற்றவாழிகளுக்கு வழங்கும் தண்டனையை ஒத்த தண்டனை வழங்க வேண்டும். மதக்கல்விக்கு பதில் மனிதஉரிமைக் கல்வியை புகட்ட வேண்டும். சுயமாக சிந்திந்து தமக்கான அரசியல் உரிமையை தேர்ந்தெடுக்கும் பருவத்தில்தான் அவர்களை அவர்களுக்கான மதத்தையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும்!

இந்த மதத்தை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் செய்வார்களா இதை?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் கருத்தே என் கருத்தும். அனுபவம் தான் மதம், கடவுள் என்றால் பாப்ரி மசூதிக்கும். அமர்நாத் கோயில் நிலத்துக்கும் யெருசலேம் தேவாலய வளாகத்துக்கும் ஏன் சண்டையும் மனித வதையும் உருவாக வேண்டும்? இதுக்கும் மனித பலவீனம் தான் காரணம், கடவுளோ மதமோ அல்ல என்று ஆஸ்திகர்கள் சொல்வார்கள் போலும். மனித பலவீனத்தை நீக்காத மதமோ கடவுளோ வெறும் அபின் என்று வினவு சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

ஆகவே வறண்ட வெற்றிடத்திற்கு பயந்து இயந்திரதனமான மிருகமான மனிதனுக்கு போலிக்கடவுளை அறிமுகப்படுத்தி உயர்வானவனாக்குறீர்கள்! :unsure:

கீழ்த்த‌ர‌மான‌ பித்த‌லாட்ட‌க்கார‌ர்க‌ள் க‌டவுள் பெயரில் என்று செய்யும் கூத்துக்களுக்கும், போலிக்கடவுளருக்கும் என்ன வித்தியாசம் சாணக்கியன் ?

"க‌ட‌வுள் க‌ருத்து" என்னும் பதத்தையே பாவிக்கின்றேன்.

சிறிய‌ உதார‌ண‌ம் ஒன்றைப் பார்ப்போம். ஜ‌ன‌னாய‌க‌ கேலிக்கூத்து, விடுத‌லைப் போரில் துரோக‌ம் என்று ப‌ல‌வ‌ற்றை இன்று காண்கின்றோம். இதற்காக ஜனனாயகமோ, விடுதலைப்போரோ ‌த‌ப்பாகி விடுமா? இவ‌ற்றின் அடிப்ப‌டைக் க‌ருத்துகளையும், இவ‌ற்றை மாசு ப‌டுத்துப‌வ‌ர்க‌ளின் செய‌ற்பாட்டையும் பிரித்துக்காட்டும் அந்த‌க் "கோடு" எம‌க்குத் தெளிவாக‌த் தென்ப‌டுவ‌தே இத‌ற்குக் கார‌ண‌ம்.

அந்த‌க் "கோடு" எம‌க்குத் தெளிவாக‌த் தென்ப‌டுவதற்குக் கார‌ண‌ம், நாம் இந்த‌ ஜ‌ன‌னாய‌க‌ம், விடுத‌லைப்போர் என்ப‌வ‌ற்றை ஆராய்கின்றோம், நுக‌ர்கின்றோம், ஈடுப‌டுகின்றோம்.

ட‌க்கிளசு என்ப‌வ‌னுக்காக‌ ஜ‌ன‌னாய‌கம் த‌ப்பாகி விடாது. க‌ருணா என்ப‌வ‌னுக்காக‌ விடுத‌லைப்போரும் த‌ப்பாகி விடாது.

ஆனால் ஒரு வட இந்திய‌ரிற்கு எமது போராட்டம் "வித்தியாசமாகத்" தென்படலாம். அந்தக்கோட்டை காணும் தெளிவு அவருக்கு இல்லாமையே காரணம்.

இந்த‌ப் ப‌குத்த‌றிவாளர்களிற்கும் ஆன்மீக‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ நில‌மை இதுதான்.

அவ‌ர்க‌ளின் ஆய்வு அவ‌ர்க‌ள் க‌ண்முன் நிக‌ழும் சில‌ பித்த‌லாட்ட‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌துட‌ன் நின்று விடுகின்ற‌து.

அவ‌ர்க‌ளிற்கு இந்த‌ "கோடு" தென்ப‌டுவ‌தில்லை.

ஆன்மீக ஆய்விற்கு நீண்ட காலமும், அதிக முயற்சியும் தேவை. ப‌குத்த‌றிவாளர்கள் இதற்குத் தயாரில்லை. மாறாக நுனிப்புல் மேய்ந்த்துவிட்டு, முடிவும் எடுத்துவிடுகின்றார்கள்.

என்னே வசதி ... !! :lol::wub:

ஈசன் அவர்களே,

நானும் நீங்கள் குறிப்பிடும் புனிதமான உங்கள் கடவுள் பற்றித்தான் பேசுகிறேன்.

வழக்கம் போல "ஆன்மீக ஆய்விற்கு நீண்ட காலமும், அதிக முயற்சியும் தேவை." என்கிற முடிவுரையுடன் தான் மதம் பற்றிய விளக்கங்கள் ஆரம்பிக்கின்றன.

அதற்குக் காரணம் இல்லாத ஒன்றை தேடி அப்படி ஒன்றும் இல்லை என்று கண்டுபிடிப்பவர்களின் வாயை அடைப்பதற்காகத்தான்! பிரம்மன் போல் முடியை கண்டுவிட்டதாக பொய்யுரைப்பவர்கள் மதபோதகர்களாகி விடுகின்றனர்!

சரி உங்கள் கருணா உதாரணத்திற்கே வருவோம்...

கருணாவால் சித்திரவதைபட்டு கொன்றொழிக்கப்பட்ட மக்களின் துயரங்களுக்கு கருணாவை விட கருணாவை உருவாக்கி, போசித்து வளர்த்தவர்களுக்கும், அவன் சேர்ந்திருக்கும் போது அவனை கண்டிக்காது அவன் மூலம் பலன் பெற்றவர்களுக்குமே அதிக பங்கு இருக்கிறது என்பது எனது கருத்து.

அது போலவே பல பித்தலாட்டக்காரர்களை மதத்தின் பெயரால் வெறியாட்டம் ஆட தேவையான அனைத்தையும் செய்துவிட்டு இறுதியில் அவன் மாட்டிக் கொள்ளும் போது அவன் செயலுக்கும் மதத்திற்கும் தொடர்பில்லை, மதம் மாசற்றது என்று கூறுவதை ஏற்க முடியாது!

நீங்கள் அந்தக் கோட்டை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வளைத்து வரைந்துகொள்கிறீர்கள்! அந்தக் கோடு தெரிகிறது என்று கூறுவதே பித்தலாட்டத்தின் முதல்படி!

அதிகம் வேண்டாம் மதத்தினால் மனிதகுலத்திற்கு விளைந்த ஒரே ஒரு நன்மையை கூறுங்கள், நான் ஈசன் பாதம் சரணடைகிறேன்! :(:)

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலம் எடுக்கும் ஒரு தேடலில் ஏன் தான் எதிரான எடுகோளையும் உள்வாங்கக் கூடாது? சாணக்கியனின் இறுதிக் கேள்வியின் மறுபக்கம், நாஸ்திகர்கள் அனேகம் பேர் மனித நேய வாதிகளாக இருக்கிறார்கள் என்பது தான். இதை மறுக்க ஏதாவது சான்று உண்டா ஈசன்? எனது தனிப்பட்ட அனுபவம், மற்றும் என் சிற்றறிவு என்பவற்றின் படி பார்த்தால் அனேகமான கடவுள் மறுப்பாளர்கள் மனித நேயமிக்கவர்களாகவும் தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பு நிற்கும் நேர்மை கொண்டோராகவும் இருக்கிறார்கள். சில சமயம் நீண்ட தேடலின் பின் மெய்யென நிரூபிக்கப் படக் கூடிய அந்தக் "கடவுளின்" செல்லப் பிள்ளைகளோ நாஸ்திகர்கள் எனவும் நான் யோசிப்பதுண்டு.

வழக்கம் போல "ஆன்மீக ஆய்விற்கு நீண்ட காலமும், அதிக முயற்சியும் தேவை." என்கிற முடிவுரையுடன் தான் மதம் பற்றிய விளக்கங்கள் ஆரம்பிக்கின்றன.

அதற்குக் காரணம் இல்லாத ஒன்றை தேடி அப்படி ஒன்றும் இல்லை என்று கண்டுபிடிப்பவர்களின் வாயை அடைப்பதற்காகத்தான்! பிரம்மன் போல் முடியை கண்டுவிட்டதாக பொய்யுரைப்பவர்கள் மதபோதகர்களாகி விடுகின்றனர்!

1803 ஆம் ஆண்டு ஜோன் டோல்டன் அணுவைப்பற்றி கருத்தை வெளியிட்டார்.

200 ஆண்டுகளிற்குப் பின்பு இன்றும் அணு ஆய்வு தொடர்கிறது.

அணு ஆய்வே இப்படி இருக்க, பிரபஞ்ச பின்னனியை இரண்டு நாளில் தெரிந்து கொள்ள முடியுமா ?

மனித குலத்தின் கொடையான மேதை ஐன்ஸ்டைன் பிரபஞ்ச பின்னனியை ஒத்துக்கொள்ள, இந்த ஐயப்பன் கோயில் தலைமைத் தந்திரி குண்டரு....மண்டரு... தண்டரு... கண்டரரு மகேஸ்வரரு வை வைத்தா அதை இல்லை என்பது ? :huh::lol:

இந்த‌ப் பகுத்த‌றிவாள‌ர்கள், அரைகுறைக‌ள் செய்யும் கூத்துக்க‌ளை வைத்து ஆன்மீக‌ம் இவ்வ‌ள‌வு தான் என்று எடை போட்டு விடுகின்றார்க‌ள். இது ஆன்மீக‌த்தின் த‌ப்பா ?

அதிகம் வேண்டாம் மதத்தினால் மனிதகுலத்திற்கு விளைந்த ஒரே ஒரு நன்மையை கூறுங்கள், நான் ஈசன் பாதம் சரணடைகிறேன்! :):unsure:

ஆன்மீகத்தின் ந‌ன்மை என்ன‌ என்ப‌தை இதிரியின் என‌து முத‌லாவ‌து பின்னூட்ட‌லிலேயே தெரிவித்துள்ளேன். ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளுக்கு ஒரு விச‌ய‌த்தை தொட்டுச் சென்றாலே போதுமான‌து, பிர‌ச‌ங்க‌ம் அவ‌சிய‌ம‌ற்ற‌து என்ப‌து என்னுடைய‌ ஒரு ந‌ம்பிக்கை. :unsure:

பலே.... பலே பிரமாதம்.

எல்லாத்தையும் துகிலுரிச்சாப்பிறகும் இதுகளை ஞாயப்படுத்த நினைப்பது கொஞ்சம் ஓவர்தான் ஈசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.