Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கவர்ந்த எம்மவர்களின் '1999' திரைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்மா நலமா', 'ஆணிவேர்', 'குருதிச்சின்னங்கள்', இலண்டனில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்', கனடாவில் தயாரிக்கப்பட்ட 'தமிழச்சி' ஜேர்மனியில் வாழ் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை வாசம்' ஆகிய திரைப்படங்கள் கடந்த 7,8 வருடங்களில் சிட்னியில் திரையிடப்பட்ட எம்மவர்களின் திரைப்படங்களாகும். நான் மேலே குறிப்பிட்ட எல்லாப்படங்களையும் திரையில் பார்த்தேன். நாங்கள் ஆதரிக்காது விட்டால் யார்தான் ஆதரிப்பார்கள் என்ற நோக்கத்துக்காக எம்மவர்களின் படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். பொதுவாக எம்மவர்களின் படங்கள் தரமற்றவை என்ற அபிப்பிராயம் எங்களுக்குள் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களினால் இப்படங்கள் உருவாகப்படுவதும் காரணமாக இருக்கலாம்.

லெனின் அவர்கள் இயக்கிய இப்படம் பற்றிய செவ்வி யாழ் இணையத்தின் முகப்பில் சில நாட்களுக்கு முன்பாக இருந்தது. ஆனால் நான் வாசித்துப் பார்க்கவில்லை. சிட்னியில் திரையிடப்படும் எம்மவர்களின் எல்லாப்படங்களையும் ஆதரிக்கவேணும் என்ற காரணத்தில் நான் இப்படங்களைப் பார்ப்பதினால், இப்படத்தையும் பார்ப்பேன் என யாழில் எழுதியிருந்தேன். அண்மையில் நோர்வேயில் திரைப்பட விழாவில் புகழ்பெற்ற தமிழக திரைப்படங்களோடு இப்படம் திரையிடப்பட்டது. அப்படங்களுடன் இப்படம் பெரிய வரவேற்பைப் பெறுமா என நான் யோசித்துப் பார்த்தேன்.

சென்ற வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில் பெர்வூட் திரையரங்கில் இப்படம் காண்பிக்கப்பட்டது. இப்படத்தை ஜெயச்சந்திரா என்ற சிட்னி வாழ் ஈழ மண்ணில் பிறந்தவர், 'சிட்னித் தமிழ் மன்றம்' என்ற தமிழகத் தமிழர்களின் அமைப்பின் உதவியுடன் சிட்னியில் வெளியிட்டார். எம்மவரின் படம் என்பதினால் எனக்குத் தெரிந்த பலருக்கு மின்னஞ்சல் மூலம் இப்படம் பற்றிய விளம்பரத்தை அனுப்பினேன். ஆனால் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு இப்படத்தைப் பார்க்க நேரமிருக்கவில்லை. என்றாலும் நான் திரையரங்கில் இப்படத்தைத் திரையில் பார்க்கச் சென்றேன். எம்மவரின் படத்தை ஆதரிக்கவேணும் என்ற காரணத்திற்காகவே சென்றேன். ஆனால் இதுவும் எம்மவர்களால் இயக்கிய சாதாரண படமாகவே இருக்கும் என நினைத்து இப்படத்தைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை.

படம் ஆரம்பித்து சில நிமிடங்களின் பின்பு, இது மற்றைய ஈழத்துப்படங்கள் போல இல்லை என்பதை உணர்ந்தேன். இப்படம் முடியும்வரை விறுவிறுப்பாக எல்லோரையும் கவரும்படி இருந்தது. நான் பார்த்து வியந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்தேன். இப்படத்தின் கதையினை இங்கே நான் சொல்லவிரும்பவில்லை. இப்படத்தின் கதை தெரிந்தால் திரையரங்களில் இனிமேல் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பு குறைவாக இருக்கும்.

ஒவ்வொரு நடிகர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை திறம்பட நடித்தார்கள். அன்புவாக நடித்த சுதன் மகாலிங்கத்தின் நடிப்பும், குமாராக நடித்த திலிபன் சோமசேகரத்தின் நடிப்பும், அன்புவின் அப்பாவின் நடிப்பும் பிடித்ததாக படம் முடிந்து வெளியே வரும் போது பார்வையாளர்களில் சிலர் தங்களுக்குள் கதைத்துக் கொண்டு வந்தார்கள். எனக்கும் இக்கலைஞர்களின், இப்படத்தில் வெளிப்படுத்திய இயல்பான உணர்வு நன்றாகப் பிடித்திருந்தது. இவர்களைப் போல அமைதியாக நடித்த அகிலன் பாத்திரம் ஏற்ற காண்டி கானாவின் நடிப்பும் என்னைக் கவர்ந்தன. மற்றைய நடிகர்களும் அவர்களுக்கு வழங்கிய பாத்திரங்களை சிறப்பாக நடித்தார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் சிலர், பட்டப் பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம். மரநாய், மொட்டயன், உடும்பன் என இப்படத்தில் வரும் சில பாத்திரங்களுக்கு பெயர்கள் இருந்தன. பொதுவாக புலம் பெயர்ந்த நாடுகளில் திருமணமாகாத ஆண்கள் ஒரே விட்டில் இருக்கும் போது சிலர் காலை முதல் மாலை வரை குடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பக்கத்தில் என்ன நடக்கிறது என்றது கூடத்தெரியாது. இது போன்ற நாங்கள் பார்த்துப் பழகிய பாத்திரங்கள் இப்படத்தில் வருவதினால் எல்லாப் பாத்திரங்களும் என்னைக் கவர்ந்தன

இதுவரை எந்தத்திரைப்படங்களிலும் பார்க்காத பிரமிக்கவைத்த அருள் சங்கரின் படத்தொகுப்பு. இதனை நான் இங்கு விபரிக்கவில்லை. இங்கே எழுதினால், எனது பதிவை வாசித்து விட்டு, இனிமேல் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பு குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தான் காரணம். திரையில் சென்று பார்க்கும் போது பார்ப்பவர்கள் நிச்சயம் அருள் சங்கரின் படத்தொகுப்பை வியந்து இரசிப்பார்கள்.

நோர்வே திரைப்பட விழாவில் காண்பிக்காத இப்படத்தின் இருபாடல்கள் சிட்னியில் காண்பித்தார்கள். அப்பாடல்கள் படம் பிடிக்கப்பட்ட இடங்கள் மிகவும் அழகானவை. அன்பு பாத்திரம் வரும் பாடலின் போது எல்லா நடிகர்களும் ஒரே நிறத்தை உடைய ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவ்வாடைகளின் நிறம் பின்புலத்தில் தெரியும் காட்சிகளுக்கு ஏற்ப ஒற்றுமையாக கவருவதாக இருந்தது. இப்படத்தின் பாடல்களை திரையில் பார்த்தவுடனே எல்லோரையும் கவருவதாக இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ் தில்லையம்பலத்துக்கு எனது பாராட்டுக்கள்.

இப்படத்தை இயக்கியவர்கள் தாயாகப் பற்று மிக்கவர்கள் என்பதை இப்படத்தினைப் பார்ப்பதன் மூலம் அறியலாம். படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் அறிவார்கள். 1999 ஆண்டில் கதைவருவதினால் 1999ல் நடந்த சமபவங்களும் இப்படத்தில் (வானொலியில்) வருகின்றன.

சிட்னியில் வெள்ளிக்கிழமை திரையிட்டபோது திரையரங்கிற்கு அரைவாசிப் பேர்கள் தான் வந்தார்கள். ஆனால் சனிக்கிழமை திரையரங்கு நிறைந்து காணப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேற்பட்டவர்கள் நுளைவுச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சனிக்கிழமை திரையிட்ட போது படம் முடிந்ததும் பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டினார்கள். இது சிட்னியில் நான் இதுவரை கேள்விப்படாத விடயம். மற்றைய படங்கள் முடிந்ததும் பலர் வீடு நோக்கிச் செல்வார்கள். ஆனால் இப்படம் முடிந்ததும் பலர் அங்கு நின்று இப்படத்தை இரசித்ததை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

நான் ஆரம்பத்தில் இப்படம் நோர்வேயில் காண்பிக்கப்பட்டபோது தமிழகத்து திரைப்படங்களோடு இப்படம் பாராட்டைப் பெறுமா என்று யோசித்திருந்தேன். ஆனால் இப்படத்தைப் பார்த்தபின்பு நோர்வேயில் காண்பிக்கப்பட்ட சில பாடங்கள் இப்படம் பெற்ற பாராட்டைப் பெற்றிருக்குமா என யோசிக்கிறேன். நோர்வே விழாவில் இயக்குனர் ஜெகநாதன்(பேராண்மை,ஈ போன்ற படங்களை இயக்கியவர்) அவர்களுக்குப் பிடித்த படமாக '1999' எனத் தெரிவித்தார். பல படங்களை பார்த்தபின்பு அன்றிரவே அப்படத்தை மறந்து விடுவோம். ஆனால் இப்படம் எனக்கு 2,3 நாட்களாக அடிக்கடி எனது ஞாபகத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறது.எனது வாழ் நாளில் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. சிட்னியில் மீண்டும் திரையிடவுள்ளதாக அறிந்தேன். பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். இப்படத்தை சிட்னியில் திரையிட்ட ஜெயச்சந்திரா, சிட்னி தமிழ் மன்றம் ஆகியவற்றுக்கு மிக்க நன்றிகள். சிறந்த படத்தை தந்த லெனின் உட்பட அனைந்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா, அதென்ன எம்மவர்கள், தென்னிந்தியர்கள்? மனப்பாங்கு ஒன்னுமே புரியலையே? :wub::lol:

இருந்தாலும் "உங்களவர்" படம் பெருவெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்! :)

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வலைப்பதிவில்

http://kanthappu.blogspot.com/2010/02/1999.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா, அதென்ன எம்மவர்கள், தென்னிந்தியர்கள்? மனப்பாங்கு ஒன்னுமே புரியலையே? :wub::lol:

தமிழ் பேசும் தென்னிந்தியர்கள் மீது பற்று எனக்கு இருக்கிறது. முத்துக்குமார் பிறந்த மண்ணல்லவா?. எம்.ஜி.இராமச்சந்திரன் வாழ்ந்த மண்ணல்லவா? ஆனால் ஈழத்துப்படங்களையும், தென்னிந்தியாப்படங்களையும் வேறு படுத்திக் காட்டுவதற்காக நான் ஈழத்தில் பிறந்ததினால் எம்மவரின் படம் என்று எழுதியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் தென்னிந்தியர்கள் மீது பற்று எனக்கு இருக்கிறது. முத்துக்குமார் பிறந்த மண்ணல்லவா?. எம்.ஜி.இராமச்சந்திரன் வாழ்ந்த மண்ணல்லவா? ஆனால் ஈழத்துப்படங்களையும், தென்னிந்தியாப்படங்களையும் வேறு படுத்திக் காட்டுவதற்காக நான் ஈழத்தில் பிறந்ததினால் எம்மவரின் படம் என்று எழுதியிருக்கிறேன்.

Objection your honour!

'தென்னிந்தியர்' என்பதைவிட தமிழகத்தார் என்று பொருத்தமாக அழைக்கலாமில்லையா..அப்பு? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தபு. உங்கள் விமர்சனம் நம்மவர்களின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை தருகிறது. நாங்கள் தமிழகத்தின் சிறந்த கலைஞர்களால் பங்காளிகளாக வரவேற்க்கப் படுகிற காலம் உருவாகிவருகிறது.நோர்வேயில் 1999 பார்த்துவிட்டு வாசுகி ஒரு காலைப் பொழுது முழுக்க 1999 படத்தின் புகழ் பாடினாள். நான் தென்னிந்தியாவில் இருப்பதால் பார்க்க இயலவில்லை. சென்னையில் இந்தப் படம் திரையிடப் படும் என நம்புகிறேன், இயக்குனர் சசிக்குமார் ஏற்பாட் செய்வதாக கூறியதாக வாசுகி சொன்னாள். லெனினுக்கு என்னுடைய பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி..கந்தப்பு, இங்கே இப்படம் திரையிடுவது அரிது... பார்க்க விரும்புகிறேன்.

ஈழத்துப்படங்களை இதுவரை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. யாராவது சில நாட்கள் கழித்து இணையத்தில் வந்தால் சொல்லவும்.

ஏம்பா, அதென்ன எம்மவர்கள், தென்னிந்தியர்கள்? மனப்பாங்கு ஒன்னுமே புரியலையே? :wub::lol:

இருந்தாலும் "உங்களவர்" படம் பெருவெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்! :)

Objection your honour!

'தென்னிந்தியர்' என்பதைவிட தமிழகத்தார் என்று பொருத்தமாக அழைக்கலாமில்லையா..அப்பு? :wub:

ஈழத்துப்படங்களை இதுவரை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிது ராஜவன்னியன். இப்படி தென்னிந்தியர்கள் என்று சொல்வது உங்களை சிலவேளைகளில் புண்படுத்தி இருக்கக்கூடும். அதற்காக மன்னித்துக்கொள்ளவும். உங்கள் வினாக்கள் தனியான ஓர் தலைப்பில் ஆராயப்படவேணும்.

தமிழகத்தினர் எனப்படுகின்ற உங்களை அழைக்கக்கூடிய பதம் பொருத்தமானது. ஆனால், சிக்கல் என்ன என்றால்.. தமிழக சினிமா, தென்னிந்திய சினிமா ஆகிய பதங்கள் வெவ்வேறு அர்த்தங்களை ஆட்களுக்கு வழங்கக்கூடும். உண்மையில் தமிழக சினிமா என்று கூறுவதைவிட தென்னிந்திய சினிமா, தென்னிந்திய கலைஞர்கள், தென்னிந்திய படைப்புக்கள் என்று கூறுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன்.

நம்மவர்களில் பலர் தம்மை எவ்வாறு மற்றவர்கள் அடையாளப்படுத்தவேண்டும் என்பதில் இப்படியான விருப்பை கொண்டு இருக்கக்கூடும்:

ஈழத்தமிழர் > இலங்கைத்தமிழர் > சிறீ லங்கா தமிழர்

இவ்வாறே உங்களுக்கும் உங்களை மற்றவர்கள் எப்படி இனம்காணவேண்டும், அழைக்கவேண்டும் என்பதில ஓர் விருப்பத்தெரிவு வரிசை இருக்கக்கூடும். அதை எப்படி அழைப்பது? நீங்கள்தான் சொல்லவேணும்.

தமிழக தமிழர்? > தென்னிந்திய தமிழர்? > இந்தியதமிழர்?

மேற்கண்ட விருப்புவரிசை தனிநபர்களிடையே வேறுபாடை கொண்டு இருக்கும்.

எங்களை கனேடிய தமிழர், புலம்பெயர்தமிழர், வெளிநாட்டு தமிழர், அகதித்தமிழர், சிறீ லங்கா தமிழர் என்று எல்லாம் சொல்லுறீனம். மற்ற ஆட்கள் எப்படி எங்களை அழைக்கிறீனம் எண்டுற விசயத்தை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிது ராஜவன்னியன். இப்படி தென்னிந்தியர்கள் என்று சொல்வது உங்களை சிலவேளைகளில் புண்படுத்தி இருக்கக்கூடும். அதற்காக மன்னித்துக்கொள்ளவும். உங்கள் வினாக்கள் தனியான ஓர் தலைப்பில் ஆராயப்படவேணும்.

தமிழகத்தினர் எனப்படுகின்ற உங்களை அழைக்கக்கூடிய பதம் பொருத்தமானது. ஆனால், சிக்கல் என்ன என்றால்.. தமிழக சினிமா, தென்னிந்திய சினிமா ஆகிய பதங்கள் வெவ்வேறு அர்த்தங்களை ஆட்களுக்கு வழங்கக்கூடும். உண்மையில் தமிழக சினிமா என்று கூறுவதைவிட தென்னிந்திய சினிமா, தென்னிந்திய கலைஞர்கள், தென்னிந்திய படைப்புக்கள் என்று கூறுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன்.

நம்மவர்களில் பலர் தம்மை எவ்வாறு மற்றவர்கள் அடையாளப்படுத்தவேண்டும் என்பதில் இப்படியான விருப்பை கொண்டு இருக்கக்கூடும்:

ஈழத்தமிழர் > இலங்கைத்தமிழர் > சிறீ லங்கா தமிழர்

இவ்வாறே உங்களுக்கும் உங்களை மற்றவர்கள் எப்படி இனம்காணவேண்டும், அழைக்கவேண்டும் என்பதில ஓர் விருப்பத்தெரிவு வரிசை இருக்கக்கூடும். அதை எப்படி அழைப்பது? நீங்கள்தான் சொல்லவேணும்.

தமிழக தமிழர்? > தென்னிந்திய தமிழர்? > இந்தியதமிழர்?

மேற்கண்ட விருப்புவரிசை தனிநபர்களிடையே வேறுபாடை கொண்டு இருக்கும்.

எங்களை கனேடிய தமிழர், புலம்பெயர்தமிழர், வெளிநாட்டு தமிழர், அகதித்தமிழர், சிறீ லங்கா தமிழர் என்று எல்லாம் சொல்லுறீனம். மற்ற ஆட்கள் எப்படி எங்களை அழைக்கிறீனம் எண்டுற விசயத்தை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்று நினைக்கிறன்.

புரிதலுக்கு நன்றி, "மச்சான்"(அய்யோ!! இங்கே நமிதாவின் உச்சரிப்பே நினைவுக்கு வந்து தொலைக்கிறது :wub: )

எனது ஆதங்கம் 'தென்னிந்தியர்' என்று பொதுமைபடுத்த வேண்டாமென்பதே. தமிழன் என்றே அடையாளப்படுத்த விருப்பம். நிருவாக அல்லது கூடுதல் குறிப்பாக வேண்டுமெனில் தமிழகத் தமிழன் எனக்கொள்வது உகந்தது. இப்பொழுதும் இந்தியன் என்ற கூடுதல் சொல் அடைமொழியாக, அடிமைவழியாக வருவதை விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் எப்போது காண்பிப்பார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

எனது ஆதங்கம் 'தென்னிந்தியர்' என்று பொதுமைபடுத்த வேண்டாமென்பதே. தமிழன் என்றே அடையாளப்படுத்த விருப்பம். நிருவாக அல்லது கூடுதல் குறிப்பாக வேண்டுமெனில் தமிழகத் தமிழன் எனக்கொள்வது உகந்தது. இப்பொழுதும் இந்தியன் என்ற கூடுதல் சொல் அடைமொழியாக, அடிமைவழியாக வருவதை விரும்பவில்லை.

பார்த்தீங்களோ, உங்களுக்கே ஒரு தெளிவு இல்லை மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கவேணும் என்று. நீங்கள் "இந்திய" என்கின்ற சொல் உங்களை அடையாளப்படுத்துவதில் வருவதை விரும்பவில்லை. அதை ஓர் அடிமைத்தனமாக நினைக்கிறீங்கள். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் ஓர் கருத்துக்கணிப்பு நடாத்தினால் அங்குள்ள பெருன்பான்மை மக்களின் தெரிவு எதுவாக காணப்படும்?

உங்களை அடையாளப்படுத்தும்போது தமிழ்நாட்டு மக்கள் என்றும் கூறமுடியாது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத மக்களும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீங்களோ, உங்களுக்கே ஒரு தெளிவு இல்லை மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கவேணும் என்று. நீங்கள் "இந்திய" என்கின்ற சொல் உங்களை அடையாளப்படுத்துவதில் வருவதை விரும்பவில்லை. அதை ஓர் அடிமைத்தனமாக நினைக்கிறீங்கள். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் ஓர் கருத்துக்கணிப்பு நடாத்தினால் அங்குள்ள பெருன்பான்மை மக்களின் தெரிவு எதுவாக காணப்படும்?

உங்களை அடையாளப்படுத்தும்போது தமிழ்நாட்டு மக்கள் என்றும் கூறமுடியாது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத மக்களும் இருக்கின்றார்கள்.

மாறுபடுகிறேன், மாப்பிள்ளை. நீங்கள் தவறுதலாக புரிந்துள்ளீர்களென எண்ணுகிறேன்.

தமிழன் என்ற "inverted tree"யின் கீழ் தமிழக தமிழன், ஈழத் தமிழன், மலாய் தமிழன், சிங்கை தமிழன் என்ற பகுப்பாடுகள் நிருவாக மற்றும் கூடுதல் அடையாளமாக இருக்கலாமென்றே கூற விழைந்தேன். மற்றபடி கருத்துக்கணிப்பில் தமிழக தமிழர்கள் மீது எனக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை. முள்ளிவாய்க்கால் கருகும்போது தன் நாட்டில் பட்டாசு மழையில் புதைந்த இலவச பிரியாணி பே(போ)தைகள் எம் கூட்டம். எம்போன்றோர் இப்பொழுது சிறுபான்மையாக இருக்கலாம்..ஆனல் நிலைமை நிச்சயம் மாறும்.

இனத்தின் அடையாளம் என்பது அம்மண்ணின் மைந்தர்களையும், அவர்களின் மொழி சார்ந்தவற்றையும் சேர்த்தே குறிக்கவேண்டும் ..வந்தேறு குடிகளைக் கொண்டல்ல.

ராஜவன்னியன், பிரதேசவாரியாக தமிழர்களை பிரித்து இனம்காட்டுவது சர்ச்சைக்குரிய ஒரு விசயமாக இருந்தாலும், குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த தமிழர்களை இனம்காட்டவேண்டிய இடங்களில அவர்களை அழைப்பதற்கு ஓர் பதம் - சொல் தேவைப்படும். அந்த பதத்தை பயன்படுத்தும்போது கொஞ்சம் சிரத்தை எடுக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். தமிழக தமிழர் என்று உங்களை அழைச்சாலும், ஓர் துறை சார்ந்து இனம்காணும்போது "இந்திய" என்கின்ற சொல் பயன்படுத்தப்படவேண்டி வருவது தவிர்க்கமுடியாதது ஆகிது.

உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். எனக்கு திரையில் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பில்லை என்பதையிட்டு மிகுந்த மனவருத்தமாக உள்ளது. உங்களைப்போல் எமது கலைஞர்களை ஊக்குவித்து அவர்களை மேலும் வளர்க்கவேண்டிய கடமை எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜவன்னியன் அவர்களின் கருத்துக்களினை வாசிக்கும் போது எனது தவறினை உணர்ந்தேன். எங்களை சிறிலங்காத் தமிழர்கள் என்று சொல்லும் போது எங்களில் எத்தனை பேருக்கு பிடிக்காமல் இருக்கும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் இராஜவன்னியன். எனது பதிவிலும் தமிழகத்தமிழர் என்று மாற்றியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

..எங்களை சிறிலங்காத் தமிழர்கள் என்று சொல்லும் போது எங்களில் எத்தனை பேருக்கு பிடிக்காமல் இருக்கும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் இராஜவன்னியன். எனது பதிவிலும் தமிழகத்தமிழர் என்று மாற்றியுள்ளேன்.

புரிதலுக்கும், திருத்தலுக்கும் நன்றியப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தபு. உங்கள் விமர்சனம் நம்மவர்களின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை தருகிறது. நாங்கள் தமிழகத்தின் சிறந்த கலைஞர்களால் பங்காளிகளாக வரவேற்க்கப் படுகிற காலம் உருவாகிவருகிறது.நோர்வேயில் 1999 பார்த்துவிட்டு வாசுகி ஒரு காலைப் பொழுது முழுக்க 1999 படத்தின் புகழ் பாடினாள். நான் தென்னிந்தியாவில் இருப்பதால் பார்க்க இயலவில்லை. சென்னையில் இந்தப் படம் திரையிடப் படும் என நம்புகிறேன், இயக்குனர் சசிக்குமார் ஏற்பாட் செய்வதாக கூறியதாக வாசுகி சொன்னாள். லெனினுக்கு என்னுடைய பாராட்டுகள்.

இப்படத்தில் இருபாத்திரங்களின் பெற்றோர் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்டதாக கதை வருகிறது. இதனால் இந்தியாவில் இப்படம் ஓட அனுமதி தருவார்களா? அல்லது அவ்வசனங்களை நீக்கிவிட்டு படம் ஓட அனுமதிப்பார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குனர் சமுத்திரக்கனி 1999 திரைப்படம் பற்றிப் பேசுகிறார்

இயக்குனர் சசிகுமார் 1999 திரைப்படம் பற்றிப் பேசுகிறார்

Norway Tamil Film Festival Kick-Starts

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/21030.html

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் 1999 திரைப்படம் பற்றிப் பேசுகிறார்

Edited by காவடி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு எம்மவர் படம் பார்த்தேன் படம் சுப்பர்....வீட்டில சரி ,காரிலும் சரி போட்டு கேட்கும் பாடல்கள் மட்டும் தென்னிந்தியர் பாடல் அந்த குறையையும் எம்மவர்கள் தீர்ப்பினமோ?1 வருடத்திற்கு ஒரு படம் எடுத்தால் எப்படி நாங்கள் நேரத்தை வீண்னாக்கிறதாம்?எம்மவர் ஒரு மாதத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும்,ஒரு மாததில 10 புதுபாட்டு வெளியிடவேண்டும்...அப்பதான் எம்மவர் கொடி கட்டிபறக்கலாம் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இராஜவன்னியன் அவர்களின் கருத்துக்களினை வாசிக்கும் போது எனது தவறினை உணர்ந்தேன். எங்களை சிறிலங்காத் தமிழர்கள் என்று சொல்லும் போது எங்களில் எத்தனை பேருக்கு பிடிக்காமல் இருக்கும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் இராஜவன்னியன். எனது பதிவிலும் தமிழகத்தமிழர் என்று மாற்றியுள்ளேன்.

அப்பு ,கலப்பை 15 ஆண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழாவில் எஸ். பொ அவர்கள் சொன்னதை கேட்டியளோ?

தமிழ் தேசியத்தை முதலாகவும் பின்பு அவர்கள் வாழும் பிரதேசத்தையும் சொல்லட்டாம் என்று ...இது அவரின் கருத்துமட்டுமே

தமிழ் ஈழத்தவன்

தமிழ் இந்தியன்

தமிழ் அவுஸ்ரேலியன்

தமிழ் கனேடியன்

தமிழ் பிரித்தானியன்

தமிழ் மலேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் 1999 திரைப்படம் பற்றிப் பேசுகிறார்

நான் படம் பாக்க இல்லை எண்டாலும் திரையிட்டால் கட்டாயம் பாக்கிறேன்...

Objection your honour!

'தென்னிந்தியர்' என்பதைவிட தமிழகத்தார் என்று பொருத்தமாக அழைக்கலாமில்லையா..அப்பு? :huh:

அப்படியும் சொல்ல முடியாது தானே..?? தமிழகத்தில் இருந்தாலும் அங்கே வேலை செய்வதும் படம்பிடிப்பதும் தென்னிந்திய மானிலத்தவர்களை அனைவரும் சேர்ந்துதானே....?? :huh:

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். எனக்கு திரையில் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பில்லை என்பதையிட்டு மிகுந்த மனவருத்தமாக உள்ளது. உங்களைப்போல் எமது கலைஞர்களை ஊக்குவித்து அவர்களை மேலும் வளர்க்கவேண்டிய கடமை எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மில் பலர், எம்மவர்களின் முயற்சிகளுக்கு ஆதரிப்பது குறைவு. அக்கலைஞர்களின் திறமைகளைப் பார்க்காமல் உது சரியில்லை என்று கதைப்பவர்கள் அதிகம். இத்திரைப்படம் சிட்னியில் திரையிடப் போவது பற்றி பலருக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தேன். பலர் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்படம் பற்றி தமிழகத்தின் சிறந்த இயக்குநர்களான 'பேராண்மை' படப்புகழ் ஜனநாதன், 'நாடோடிகள்' புகழ் சமுத்திரக்கனி, 'சுப்பிரமண்யபுரம்' புகழ் சசிகுமார் போன்றோர்களின் பேட்டிகளை, காணொளிகளை தமிழக திரை பற்றிய ஊடகங்களில், நான் மின்னஞ்சல் அனுப்பிய சிலர் பார்த்தபின்பு '1999' நல்லபடம் தங்களுக்கு சிட்னியில் திரையிட்டது தெரியாது. பார்க்காமல் விட்டு விட்டோமே என்று கதைத்தார்கள். நான் சொன்னேன் உங்களுக்கு மின்னஞ்சலில் 2 முறை இப்படம் பற்றிய தகவல்களை அனுப்பி இருந்தேன் என்றேன். அதற்கு தங்களுக்கு மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றார்கள். மறுபடியும் எனது மின்னஞ்சலைப் பார்த்தபின்பு அவர்களுக்கு நான் அவர்களுக்கு அனுப்பிய திகதியைச் சொல்ல, ஒம் கிடைத்தது வாசிக்கவில்லை என்றார்கள். எங்கட படத்தை நாங்கள் சொன்னால் எங்கட சனம் கேட்காது. ஆனால் தமிழகத்து திரைப்பட ஊடகங்களில் புகழ்பெற்ற இயக்குநர்கள் சொல்லும் போது கட்டாயம் பார்க்கவேணும் என்கிறார்கள். இப்ப மறுபடியும் எப்பொழுது சிட்னியில் இப்படம் ஒடும் என்று கேட்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு எம்மவர் படம் பார்த்தேன் படம் சுப்பர்....வீட்டில சரி ,காரிலும் சரி போட்டு கேட்கும் பாடல்கள் மட்டும் தென்னிந்தியர் பாடல் அந்த குறையையும் எம்மவர்கள் தீர்ப்பினமோ?1 வருடத்திற்கு ஒரு படம் எடுத்தால் எப்படி நாங்கள் நேரத்தை வீண்னாக்கிறதாம்?எம்மவர் ஒரு மாதத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும்,ஒரு மாததில 10 புதுபாட்டு வெளியிடவேண்டும்...அப்பதான் எம்மவர் கொடி கட்டிபறக்கலாம் :huh::huh:

நீங்கள் இப்படத்தைப் பார்த்தால் இப்படத்தில் வரும் பாடல்களை உங்கள் மகிழுர்ந்தில் செல்லும் போது கேட்பீர்கள். வருசத்துக்கு ஒரு முறை வரும் எங்கட படங்களுக்கே எங்கட சனம் ஆதரிக்கக்காணவில்லை. மாதத்துக்கு ஒருமுறை படம் வந்தால் யார் பார்ப்பினம். எங்கட சனம் எங்கட படங்களுக்கு ஆதரவுகள் கொடுத்தால் அவர்கள் அதிக படங்களை வெளியிடுவார்கள். ஆனால் எம்மவர்களின் பல படங்கள் எதோ ஒருபடம் எடுக்கிறோம் என்று தரமற்ற படங்களை எடுப்பதினால் எம்மவர்களின் படங்களுக்கு கூடாத பெயர். ஆனால் எல்லோரையும் கவர்ந்து, வியக்க வைத்த படம் '1999'.

நான் படம் பாக்க இல்லை எண்டாலும் திரையிட்டால் கட்டாயம் பாக்கிறேன்...

நோர்வே தவிர ஐரோப்பிய நகரங்களில் இன்னும் இப்படம் திரையிடவில்லை. அதனால் நீங்கள் பார்க்கவில்லை.அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க சிட்னியில் 3வது காட்சி விரைவில் காண்பிக்கப்படவுள்ளது. மெல்பேர்ன் நகரில் இம்மாதம் இப்படம் காண்பிக்கப்படவுள்ளது.

இப்படம் பற்றி கானாபிரபா அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதிய ஆக்கம்

"1999" - சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை

இன்று கனேடியா வாழ் ஈழத்தமிழர்களால் தயாரித்து இயக்கிய 1999 படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் தமிழகத்துச் சினிமாக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், எமது ஈழத்துப் படைப்புக்களைப் பொறுத்தவரை, லண்டனில் தயாரான "கனவுகள் நிஜமானால்", கனடாவில் தயாரான "தமிழச்சி", ஈழத்தில் எடுக்கப்பட்ட "ஆணிவேர்" வரிசையில் 1999 படமே ஈழத்துப் படைப்பாகத் திரையைத் தொட்டிருக்கிறது. இவற்றில் "ஆணிவேர்" படத்தை நான் இங்கே திரையிட அவாக் கொண்டு எதிர்கொண்ட சிரமங்களை எல்லாம் ஒரு தொடராகவே எழுதலாம். ஒரு படத்தைத் திரையிடும் மோசமான அனுபவத்தை முதன்முறையாக (கடைசியுமாகவும் என்றும் சொல்லிவைக்கலாம்)எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தது "ஆணிவேர்" படத்தை இங்கே திரையிட்ட போது நான் சந்தித்த அனுபவங்கள். அதில் இருந்து நான் பெற்ற பாடம், எங்கள் மண்ணின் கதை சொல்லும் படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பேசுபவர்களை ஒரு எல்லைக்கு மேல் நம்பக் கூடாது என்பதுதான். 1999 படத்தைப் பேச வந்து விட்டு ஆணிவேரைப் பற்றிப் பேசுகிறாரே என்று நீங்கள் முணுமுணுக்க முன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.

1999 படத்தினை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அலோசியஸ் ஜெயச்சந்திரா திரையிடவேண்டும் என்று முனைப்புக் காட்டியபோது எனது ஆணிவேர் பாலபாடத்தை அவருக்குக் காதில் போட்டு வைத்தேன். அவருக்குத் துணையாக இங்கே சிட்னியில் இருக்கும் இந்தியத் தமிழர்களின் அமைப்பான "சிட்னி தமிழ் மன்றம்" கை கொடுத்தது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொல்ல வேண்டும். காரணம் பேசும் மொழி ஒன்றாக இருந்தாலும் ஈழத்தமிழருக்கு பல அமைப்புக்கள், இந்தியத் தமிழருக்குச் சில அமைப்புக்கள் என்று "என் வழி தனி வழி"யாகப் போகும் புலம் பெயர் சூழலில் இப்படியான நம்மவர் முயற்சிகளுக்கு தமிழக உறவுகளும் இணைந்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். சிட்னியில் 2 காட்சிகள் ஏற்பாடாகியிருந்தன. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிட்டியிருந்தது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களது படங்களைப் படங்களைப் பார்த்து நிரம்பிய அனுபவத்தோடு, என்னைத் தயார்படுத்திக் கொண்டே இந்தப் படத்தையும் பார்க்கத் தொடங்கினேன். காரணம், நம்மவர் தொழில்நுட்பத்தில் தம்மை விருத்தி செய்த அளவுக்குக் கதை சொல்லும் பாணியிலும், திரைக்கதை அமைப்பிலும் பல படிகளைக் கடக்கவேண்டும் என்பதை இதுநாள் வரை வெளிவந்த பல புலம்பெயர் தமிழர்களது சினிமாக்கள் உறுதிப்படுத்தியிருந்தன. குறும்படங்கள் பல சின்னத்திரை நாடகங்களோடு போட்டி போட, நம்மவர் சினிமாக்களோ அஜித், விஜய் போன்றவர்களின் ந(ர)கல் வடிவங்களாக இருக்கும் போக்கும் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து நிலவும் வழமை. ஆங்காங்கே அத்தி பூத்தாற்போல நல்ல குறும்பட முயற்சிகளும் வராமல் இல்லை. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் கனடா வாழ் உறவுகள் முழு நீள சினிமாக்கள் பலதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை ஒருவாரமோ இரண்டு வாரமோ கனேடியத் திரையரங்குகளை மட்டும் முத்தமிட்டு விட்டு காணாமல் போய் விடும்.

இப்படியாக இன்னொரு நம்மவர் படம் தானே என்ற ஒரு தயார்படுத்தலோடு தான் 1999 படத்துக்கும் போனேன். வெண் திரை அகலக்கால் பதிக்கப் படம் ஆரம்பமாகின்றது. எடுத்த எடுப்பிலேயே இரவு நேரத்துக் கனேடிய நகரப் பெருந்தெருக்கள் வழியே காமெரா துரத்தக் கூடவே மேற்கத்தேயப் பின்னணி இசையும் பயணிக்க முகப்பு எழுத்தோட்டம் வருகின்றது. ஆகா, ஆரம்பமே கைதேர்ந்த தொழில்நுட்ப உத்தியோடு எடுக்கப்படுகிறதே என்ற உசார் மெல்ல வந்து ஒட்டிக் கொள்ள அவநம்பிக்கை மெல்லக் கழன்று கொள்கின்றது.

படத்தின் முதற்காட்சியில் வரும் கொலையை மையப்படுத்தி நகர்கின்றது தொடர்ந்து வரும் காட்சிகள். அந்த விறுவிறுப்பும், பார்வையாளனைக் கட்டிப் போடும் கதை நேர்த்தியும் படம் முடியும் வரை நிறைந்து நிற்கின்றது. அதுதான் 1999 படத்தின் பலம்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி நான் பேசப்போவதே இல்லை, ஏனென்றால் அது இனிமேல் பார்க்கப் போகின்றவர்களுக்குச் சுவாரஸ்த்தை இழக்கச் செய்து விடும். ஆனால் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்புக்களையே பகிர்கின்றேன். ஈழத்தின் உள்நாட்டுப் போரால் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலகெங்கும் ஏதிலிகளாகச் சிதறி பரந்த ஈழத்தமிழினம், கனடாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் இந்தப் புலம்பெயர் வாழ்வு வரமா, சாபமா என்பதில் ஒரு வெட்டுமுகமே 1999 படம் சொல்லும் செய்தி. குறிப்பாக எமது அடுத்த தலைமுறையில் ஒரு சிலர் தறிகெட்டு , வன்முறை நோக்கிக் குழுக்களாகப் பிரிந்து இலக்கற்ற வாழ்வை புலம்பெயர் சூழலில் அமைத்துக் கொள்ள முற்படும் போது அதன் தொடர்பிலான அவல வாழ்வியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழல் அவர் தம் பெற்றோருக்கும், ஏன் அந்தச் சமூகத்துக்கும் கூட வந்தமைந்து பெருத்த சுமையாக மாறி, பெரும் விலை கொடுக்கும் முடிவைத் தந்து விடுகின்றது. இதுவே 1999 படத்தின் திரைக்கதை சொல்லும் சேதி.

கே.எஸ்.பாலசந்திரன் போன்ற மூத்த கலைஞர்களோடு இளைஞர்கள் பலரை முக்கிய பாத்திரங்களை ஏற்க வைத்து இயக்கியிருக்கிறார் லெனின் எம்.சிவம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வேண்டாத இடங்களில் கதையைத் திருப்பாமல் சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றியே கதைக்களத்தை அமைத்திருக்கின்றார். அந்த வகையில் கதை, திரைக்கதை ஆகியவை இரண்டுமே இப்படத்துக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றது. 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடக்கும் கதை, அதே காலகட்டத்தில் நானும் புலம்பெயர்ந்த சூழலில் வாழ்ந்த போது நடந்த விஷயங்களை மீண்டும் இரைமீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாகப் பல காட்சியமைப்புக்கள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் அவதானிக்கும் விடயங்களை வைத்து வசனங்களை அமைத்திருப்பதும் அவற்றை ஈழத்தமிழ் பேசும் பாங்கில் சமரசமில்லாது வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு, கூடவே அவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்தும் நடிகர்களும் சபாஷ் போட வைக்கிறார்கள். அந்தந்தப் பாத்திரங்கள் எப்படி எப்படியெல்லாம் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை மிகையில்லாமல் காட்சி அமைப்பிலும், வசன அமைப்பிலும் அடக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தினைத் தந்ததன் மூலம் புலம்பெயர் வாழ்வியலின் விரிந்த தளங்களை இம்மாதிரி முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் தரவிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.

நான் அதிகம் பிரமித்துச் சிலாகிக்கும் விடயம் A.அருள்சங்கரின் படத்தொகுப்பு. ஒவ்வொரு காட்சிகளையும் வெவ்வேறு கேணங்களில் எடுத்து அவற்றை முன்பின்னாகப் பொருத்தி அமைத்த இந்தப் பாணி புதியதொரு அனுபவத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இப்படி முழுமையான புதிய தொழில்நுட்ப உத்தியோடு படத்தொகுப்பை அமைத்ததை இதுவரை நான் எந்தத் தமிழ் சினிமாவிலும் பார்க்கவில்லை. இதை நான் இங்கே மிகையாகச் சொல்லி வைக்கவில்லை. 1999 படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பட்டியலிட்டால் முதலில் வருவது அருள் சங்கரின் நேர்த்தியான படத்தொகுப்பு தான்.

இந்தப் படத்தை உலகத்தரத்துக்கு நகர்த்திச் செல்வதில் முதலில் நிற்பது படத்தொகுப்புத் தான்.

ராஜ்குமார் தில்லையம்பலம் பாடல்களுக்கு இசையமைத்துப், பின்னணி இசை வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தின் பின்னணி இசைக் கோர்ப்பாகட்டும், இளைஞர் குழு எடுக்கும் பரபரப்பான முடிவுகளின் காட்சி அமைப்புக்களின் பின்னால் ஒலிக்கும் இசையாகட்டும் மிகவும் சிறப்பாக, சினிமாவுக்கேற்ற இசை நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பா, மகன் உரையாடல் காட்சிகள் போன்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகளின் பின்னால் அடக்கி வாசிக்கும் புல்லாங்குழல் ரக இசை மிகவும் அன்னியப்பட்டு தொலைக்காட்சித் தொடருக்குப் போவது போலப் பயமுறுத்துகிறது. இப்படியான காட்சிகளுக்கு இன்னும் வேறொரு பரிமாணத்தில் வித்தியாசமான இசைக்கலவையைப் பயன்படுத்தியிருக்கலாம். படத்திற்காக மொத்தம் ஆறு பாடல்கள் ஒரு தீம் இசை, எடுக்கப்பட்டாலும் இரு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கின்றன. எஸ்பி.பாலசுப்ரமணியம், கார்த்திக் குரல்களில் கேட்ட பாடல்களைப் படத்தில் பார்க்கும் போது இன்னும் இனிமை.

படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை இரவு நேரக் காட்சிகள், பாடற் காட்சிகள் போன்றவற்றில் இருந்த நேர்த்தியான கமெரக் கோணங்கள், ஒளியமைப்பு போன்றவை மற்றைய காட்சிகள் சிலதில் பொலிவிழந்து, ஒளி பெருகி சீரியலுக்குப் போவோமா என்று அடம்பிடிப்பது போல அமைந்ததைத் தவிர்த்திருக்கலாம். நுணுக்கமாகப் பார்த்தால் சில இடங்களில் கமெரா மெல்ல ஆட்டம் கண்டிருக்கிறது. அத்தோடு குளோசப்பில் முகங்களைக் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இந்த நுணுக்கமான குறைளைத் தவிர்த்தால் தொழில்நுட்ப ரீதியில் இன்னும் மேம்பட்ட படைப்பாக இது அமைந்திருக்குக்கும்.

அட, நம்மவர் படத்தில் பாடற்காட்சியை சிரிக்க வைக்காமல் சிறக்க எடுத்திருக்கிறார்களே என நினைக்கத் தோன்றுகிறது.

படத்தில் நடித்த எந்த ஒரு நடிகருமே தம் பாத்திரத்துக்கு மிகையில்லாமலும், குறையில்லாமலும் தந்தாலும், நாயகன் அன்புவாக வந்த சுதன் மகாலிங்கம், இளைஞர் கோஷ்டித் தலைவர் குமாராக வரும் திலீபன் சோமசேகரமும் ஒரு படி சிறப்பாகச் செய்கிறார்கள். மூத்த கலைஞர் கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் வரும் காட்சியமைப்புக்கள் குறைவு என்றாலும் அங்கேயும் நிறைவு. கனடாவில் இருக்கும் குழு மோதல்களை மையப்படுத்தியதாக அமைந்தாலும் எதிர்க்குழுவை படம் முடியும் வரை காட்டாது பயணிப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொருவரின் கோணத்தில் தம்மை நியாயப்படுத்தும் போது எங்கே இந்தத் தவறு நடக்கிறது என்று தர்க்க ரீதியான கேள்வி மனதில் எழுகின்றது.

"வன்னியில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஆரம்பித்திருக்கிறார்கள், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன" படத்தின் முடிவில் வானொலி ஒன்றின் குரல் மேலெழுகிறது. மனம் பெருங்குரலெடுத்து அழுகிறது, என்னைப் போலவே பலரும் அதை உணர்ந்திருப்பார்கள்.

படம் முடிந்ததும் அரங்கம் கைதட்டிப் பாராட்டுகிறது.

புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே "1999" படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

http://kanapraba.blogspot.com/

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் வெற்றிநடை போட்ட '1999' திரைப்படம் மெல்பேர்னில் வரும் யூன் 5ம் திகதி காண்பிக்கப்படுகிறது.

199918x12.jpg

வெகுவிரைவில் பலரது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிட்னியில் '1999' திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளது. விரைவில் விபரங்கள் அறிவிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.