Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு யாழ்ப்பாணியின் சோக‌ வாக்குமூல‌ம்

Featured Replies

1.

அவ‌ளைக் காண‌வில்லை என்று தெரிந்த‌போது நான் பெரிதாக‌ முத‌லில் எடுத்துக்கொள்ள‌வில்லை. வ‌குப்பு முடிந்த‌வுட‌ன் வ‌ழ‌மையாக‌ச் ச‌ந்திக்கும் இட‌த்தில் அவ‌ள் இல்லாத‌போது வேறெத‌னும் வேலையாக‌ப் போயிருப்பாள் -தாம‌த‌மாக‌ வ‌ரலாம்- என்று காத்துக்கொண்டிருக்க‌த் தொட‌ங்கினேன். கோடை கால‌த்தில் இந்த‌ வ‌ளாக‌த்தைச் சுற்றி ஓடும் ந‌தியிற்கு அதிக‌ வ‌ன‌ப்பு வ‌ந்துவிடுகின்ற‌து. ப‌டிக்கும் நாங்க‌ள் ப‌ல்வேறு தாய்மொழிக‌ளைப் பேசிக்கொண்டு திரிவ‌துபோல‌ ந‌தியும் க‌ல‌க‌ல‌ப்பாக‌ப் ப‌ல‌மொழிக‌ளைப் பேசிக்கொண்டு ந‌க‌ர்வ‌து போல‌ப்ப‌ட்ட‌து.

இய‌ற்கைச் சூழ‌லை இர‌சிக்க‌த்தொட‌ங்கிய‌தில் நான் எத‌ற்காய் இங்கு வ‌ந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்ப‌தும் ம‌ற‌ந்துபோய்விட்ட‌து. ஒருக்காய் முறிக‌ண்டிப்ப‌க்க‌ம் போய் த‌லையைக் காட்டிவிட்டு வ‌ர‌லாம் என்றாலும், இவ‌ள் அத‌ற்குள் வ‌ந்துவிட்டாள் என்றால் பெரும் பிர‌ச்சினையாகிவிடும். 'ஏன் அந்த‌ப் ப‌க்க‌ம் போனாய்' என்று அவ‌ள் எழுப்பும் கேள்வியோடு புகையைத் தொட‌ங்கும் ச‌ண்டையின் பெருநெருப்பை, மூன்று கிலோமீற்ற‌ர் தூர‌த்திலிருக்கும் க‌னேடிய‌ பிர‌த‌ம‌ர் வாச‌ல்த‌ல‌த்தால் கூட‌ தீர்த்துவைக்க‌ முடியாது. க‌ன‌டாவில், அதுவும் அத‌ன் த‌லைந‌க‌ரில் முறிக‌ண்டி எப்ப‌டி வ‌ந்த‌து என்று நீங்க‌ள் உங்க‌ள் மூளையைத் திருகு திருகென்று திருக‌வும்கூடும். முறிக‌ண்டி ம‌ட்டுமில்லை, க‌ன்னிய‌ர் ம‌ட‌ம், வ‌ழுக்கையாறு என்ப‌தெல்லாம் கூட‌ எங்க‌ளின் வ‌ளாக‌த்தில் இருக்கின்றன. முறிக‌ண்டி என்ப‌து நீங்க‌ள் எங்க‌ள் வ‌ளாக‌த்தின் சுர‌ங்க‌ப்பாதைக்குள்ளால் ந‌ட‌ந்துபோனால் வ‌ருகின்ற‌ ஒரு முச்ச‌ந்திப் பிர‌தேச‌மாகும். முச்ச‌ந்தியில் ஒருபுற‌ம் கோப்பிக்க‌டையும், இன்னொரு ப‌க்க‌ம் Barம் இருக்கும். வ‌ளாக‌த்துக்கு வாற‌ போற‌ பெட்டைய‌ள் ஏதோ ஒரு வ‌குப்புக்காக‌வேனும் அந்த‌ முச்ச‌ந்தியைக் க‌ட‌ந்துபோய்க் கொண்டிருப்பார்க‌ள் என்ப‌தால் அது ஒரு கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாய் மாறிவிட்ட‌து. என‌க்கென்ன‌வோ இந்த‌ப் பொடிச்சிக‌ள், தாங்க‌ள் அன்ற‌ன்றைக்கு செய்கின்ற‌ அல‌ங்கார‌த்தைப் பெடிய‌ங்க‌ளுக்குக் காட்சிப்ப‌டுத்தி பாராட்டைப் பெறுவ‌த‌ற்காய்த்தான் அடிக்க‌டி முறிக‌ண்டிப் ப‌க்க‌மாய் ந‌டைப‌வ‌னி செய்கின்றார்க‌ளோ என்கின்ற‌ ஒரு சந்தேகமும் உண்டு. அத்தோடு ப‌க்க‌த்திலை ஒரு பாரும் இருக்க‌ அதுக்குள்ளை தாக‌ந் தீர்க்க‌, இங்காலை க‌ண்ணுக்கு குளிர்ச்சிக்கென‌ இர‌வு ஒன்ப‌து ப‌த்து ம‌ணிவ‌ரை ச‌ன‌ம் நிறைய‌ப் புழ‌ங்கிக்கொண்டிருக்கிற‌ இட‌மாய்தான் முறிகண்டியிருக்கும். இப்ப‌டி வெளியிலை வெயிலுக்குள்ளை நிண்டு என‌க்கும் ஒரே தாக‌மாய்தானிருக்கிற‌து, முறிகண்டிச் ச‌ந்திக்குப் போய் வாயைக் கொஞ்ச‌ம் ந‌னைச்சுட்டு வ‌ந்திட‌லாம் என்றால் இவ‌ளொருத்தி வ‌ருவ‌தாய்ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்து ப‌ய‌முறுத்துகிற‌து

ஒருமுறை இப்ப‌டித்தான் முத‌லாம் ஆண்டு பெட்டையொருத்திக்கு ஒற்றை ரோஸ் கொடுத்து காத‌லைச் சொல்ல‌ ந‌ண்ப‌ரொருவ‌ன் முறிக‌ண்டியில் காத்துக்கொண்டிருந்தான். அவ‌னும் ரிப்ரொப்பாய் வெளிக்கிட்டு, ரென்ச‌னைக் குறைக்க‌ கொஞ்ச‌ம் 'வாசித்து'விட்டு சுதியாய்த்தான் நின்றான். அந்த‌ப் பெட்டை வ‌ருகின்ற‌ நேர‌ம‌ள‌வில் ஒற்றை ரோஸை எங்க‌ள் கையில் த‌ந்துவிட்டு, த‌ன்ரை ரென்ச‌னைக்குறைக்க‌ பாத்ரூம் போய்விட்டு வ‌ந்திருந்தான். பெட்டை முறிக‌ண்டியைக் க‌ட‌க்கையில் 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று ஒர் ஓர‌த்தில் கூப்பிட்டு அந்த‌மாதிரி ரொமாண்டிக்காய் முழ‌ங்காலிட்டு I love you என்ற‌ப‌டி ஒற்றை ரோஸைக் கொடுத்தான். அந்த‌ப் பெட்டைக்கு கொஞ்ச‌ம் அதிர்ச்சி என்றாலும், இப்ப‌டி ஒருத்த‌ன் ரொமாண்டிக்காய் இருக்கின்றானே என்ப‌தில் ஒரு நெகிழ்ச்சி வ‌ர‌ ரோஸையும் வாங்கிவிட்டாள். ஆனால் ரோஸை அவ‌ள் முக‌ர்ந்து பார்த்த‌தில்தான் எல்லாப் பிர‌ச்சினையும் தொட‌ங்கிய‌து. 'You bloody drinker, அவ்வ‌ப்போது நீ குடிக்கிற‌தென்றால் கூட ப‌ர‌வாயில்லை, அத‌ற்காய் ப்ர‌போஸ் ப‌ண்ணுகிற‌ கேர்ளிற்குத் தருகிற‌ ரோஸைக் கூட‌ குடிக்க‌ வைத்துத் த‌ந்திருக்கிறாயே, உன்னையெல்லாம் ந‌ம்பி நான் எப்ப‌டிக் காத‌லிக்க‌ முடியும்' என்று ந‌ல்லாய்த் திட்டிவிட்டு ரோஸையும் குப்பைத்தொட்டிக்குள் எறிந்துவிட்டு அவ‌ள் ம‌றைந்துவிட்டாள். ந‌ண‌ப‌னுக்கோ என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று பெருந்திகைப்பாக‌ இருந்த‌து. நாங்க‌ள்தான் கொடுப்புக்குள் ந‌முட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தோம். கையில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்திருக்க‌ச் சொன்ன‌ ரோஸை பிய‌ர் பிச்ச‌ருக்குள் அமிழ்த்தி எடுத்த‌து நாங்க‌ள்தான்.. பெட்டை முறிகண்டிக்கு வாற‌ ரென்ச‌னிலை ந‌ண்ப‌னால் ரோஸிலிருந்த‌ வ‌ந்த‌ 'ந‌றும‌ண‌ம்' ஒன்றையும் இன‌ம்பிரித்த‌றிய‌ முடிய‌வில்லை.

இங்கே முன்னே ஒடிக்கொண்டிருக்கிற‌ ரீடோ ஆற்றுக்கு நாங்க‌ள் இட்ட‌பெய‌ர்தான் வ‌ழுக்கையாறு. ஆறே இல்லாத‌ யாழ்ப்பாண‌த்திலை ம‌ழை நிறைய‌ப் பெய்து வெள்ள‌வாய்க்காலுக்குள்ளாலை நீரோடும்போது அது வ‌ழுக்கையாறாக‌ மாறிவிடுவ‌துண்டு. நானொரு அச‌ல் த‌மிழ‌ன். என்ன‌ தான் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மைல்க‌ள் தாண்டி க‌ன‌டாவுக்கு வ‌ந்தாலும் எங்க‌டை ஊர்க‌ளை ம‌ற‌க்க‌க்கூடாதுதான். சில‌வேளை என்ரை பெட்டை வாய் த‌வ‌றி ரீடோ ஆற்றுப்ப‌க்க‌மாய்ச் ச‌ந்திப்போம் என்றாலும், நான் 'வ‌ழுக்கையாறு என்று சொல்லும்' என்று திருத்த‌ ஒருபோதும் ம‌ற‌ப்ப‌தேயில்லை. ஈழ‌த்தில் பாளியாறு ப‌த‌வியா ஆறு, ம‌காவ‌லியாறு என்று எத்த‌னையோ ஆறுக‌ளிருக்க‌ இப்ப‌டியொரு போலி ஆற்றின் பெய‌ரைத் தேர்ந்தெடுத்த‌துதான் ஒரு யாழ்ப்பாணிக்குரிய‌ சாம‌ர்த்திய‌ம்.

2.

இவளை ஏன் இன்ன‌மும் காண‌வில்லை. வ‌ழுக்கையாற்ற‌டிக்கு வ‌ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணித்தியால‌த்திற்கு மேலே ஆகிவிட்ட‌து. இத‌ற்கிடையில் நாலைந்து முறை அவ‌ளை செல்போனில் அழைத்தும் பார்த்துவிட்டேன், ஒரு ப‌திலையும் காண‌வில்லை. காத‌லுக்காய் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் வ‌ருகின்ற‌ கதாநாய‌க‌ன்க‌ள் போல‌ என்னால் இனியும் காத்துக்கொண்டிருக்க‌ முடியாது. அவ‌ர்க‌ளுக்காவ‌து காத‌லி வ‌ந்துவிட்ட‌த‌ன்பிற‌கு கொஞ்ச‌ம் கோபித்து, கொஞ்ச‌ம் செல்ல‌ம் கொஞ்சி, பிற‌கு ஏதாவ‌து வெளிநாடொன்றுக்குப் ப‌ற‌ந்து டுய‌ட் ஆட‌வாது முடிகின்ற‌து. என‌க்கு இஃதொன்றும் நிக‌ழ‌ப்போவ‌தில்லை. இப்ப‌டி நீண்ட‌நேர‌க் காத்திருப்ப‌தாலேயே ஒரு க‌டுப்பு வ‌ந்துவிட்டிருக்கும். இவ‌ள் வ‌ந்த‌வுட‌னே அது எள்ளும் கொள்ளுமாய் வெடிப்ப‌தாய்த்தான் முடியும். பிற‌கு ச‌ண்டை, க‌ண்ணீர், கெஞ்ச‌ல், ஆற்றுப்ப‌டுத்த‌ல் என ஒருவார‌ம் இருவ‌ரும் ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ளோடுதான் இருக்க‌வேண்டியிருக்கும். எத‌ற்கு இந்த‌ப் பொல்லாப்பு. 'என்னால் இனியும் காத்திருக்க‌முடியாது நான் வீட்டை போகின்றேன்' என்றொரு ரெக்ஸ் மெஸேஜ் அனுப்பிவிட்டுப் போக‌வேண்டிய‌துதான்.

இப்போது இர‌வு எட்டு ம‌ணியாகிற‌து. ம‌த்தியான‌ம் இவ‌ளைச் ச‌ந்திக்காம‌ல் வீட்டை வ‌ந்து ந‌ன்கு நித்திரை கொண்டு எழும்பியாகியும் விட்டாச்சு. ஒருமுறை அவ‌ளை செல்போனில் அலைத்துப் பார்ப்போம். ம‌த்தியான‌ம் காத்திருந்த‌ அலுப்பை கொஞ்ச‌மாக‌வேனும் காட்டாம‌ல், காத‌லில் உருகி எப்ப‌டிக் க‌தைப்ப‌து என்று ஒருமுறை என‌க்குள் ஒத்திகை செய்துகொண்டேன். காத‌லிக்கும்போது எப்போதும் மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ ப‌க்க‌ங்க‌ளை ம‌ட்டுமே காட்ட‌வேண்டும் என்று எங்கையோ வாசித்த‌து இந்த‌ச் சூழ‌லுக்கு எவ்வ‌ள‌வு பொருந்துகிற‌து பாருங்க‌ள். ஏன் இவ‌ள் தொலைபேசியை எடுக்கிறாளில்லை. என்ன‌ ந‌ட‌ந்த‌து இவ‌ளுக்கு? சில‌வேளை என்னை வெட்டிவிட்டு வேறு யாரைவ‌து பிடித்துவிட்டாளா? சீ...ஏன் என்னைப் போல‌வே அவ‌ளையும் நினைக்கிறேன். வேறு ஒருத்த‌னைப் பிடிக்க‌வேண்டியிருந்தால் இந்த‌ இர‌ண்டு வ‌ருச‌த்துக்குள்ளையே எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அவ‌ளுக்கு வாய்த்திருக்கும். அதையெல்லாம் ம‌றுத்த‌ப‌டிதானே என்னோடு இருந்த‌வ‌ள். அப்ப‌டியேதும் ந‌ட‌ந்திருக்காது. அப்ப‌ ஏன் இப்ப‌ தொலைபேசியை எடுக்கிறாளில்லை. ச‌ரி எத‌ற்கும் அவ‌ளின் அறைத்தோழிக்கு அழைத்துப் பார்க்க‌வேண்டிய‌துதான். 'என்ன‌ அவ‌ள் கால‌மை வ‌ளாக‌த்து வெளிக்கிட்ட‌த‌ற்குப் பிற‌கு இன்னும் அறைக்கு வ‌ர‌வில்லையா?' எங்கை போய் இவ‌ள் தொலைந்துவிட்டாள். இத‌ற்கு முன் இப்ப‌டியேதும் நிக‌ழ்ந்து இல்லையே. வேறெங்காவ‌து இப்ப‌டி போவ‌தாய் இருந்தால் கூட‌ தொலைபேசியில் அழைத்தோ, ஈமெயிலிலோ அல்ல‌து ரெக்ஸ் மெஸேஜ் செய்துவிட்டோதானே போகின்ற‌வ‌ள். என்ன‌வாயிற்று இவ‌ளுக்கு.

இவ‌ளுக்கு இங்கை இர‌ண்டு அண்ணாமார் இருக்கின‌ம். ஒருத்த‌ர் ப‌க்க‌த்திலை இருக்கிற‌ ம‌ற்ற‌ யூனிவ‌(ர்)சிற்றியில் ப‌டிக்கிறார். ம‌ற்ற‌வ‌ர் ப‌டித்துமுடித்துவிட்டு ஜேடிஎஸ்சில்தான் வேலை செய்கின்றார். இவ‌ளுடைய‌ அண்ணன்மாருக்கு எங்க‌டை விச‌ய‌ம் சாடைமாடையாய்த் தெரியும். இவ‌ளென்னைக் காத‌லித்துக்கொண்டிருப்ப‌து அவ‌ர்க‌ளுக்கு அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை என்ப‌தும் என‌க்கு ந‌ன்கு தெரியும். இப்ப‌த்தையான் நிலைமையில் க‌வுர‌வ‌ம் அது இதென்டு ஒன்றையும் பார்த்துக்கொண்டிருக்க‌ முடியாது. சில‌வேளை அவ‌ர்க‌ளோடுதான் இவ‌ள் நிற்கிறாளோ தெரியாது. ஒருக்காய் அவ‌ர்க‌ளுக்கும் அழைத்துப் பார்க்க்க‌வேண்டிய‌துதான். என்ன‌து அங்கையும் இவ‌ள் போக‌வில்லையா? இந்த‌ விச‌ரி எங்கைதான் போய்த்தொலைந்தாளோ?

3.

ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டும் ஆகிவிட்ட‌து. இனி இப்ப‌டியே வீட்டிலிருந்து சும்மா பார்த்துக்கொண்டிருக்க‌முடியாது. இவ‌ளுடைய‌ அண்ணன்மார் இருவ‌ரும் என்ரை அப்பார்ட்மெண்டிற்கும் வ‌ந்துவிட்டின‌ம். இவ‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர் எல்லோரையும் விசாரித்தாயிற்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாய்க் கிட‌க்கிற‌து. எல்லாச் சுத‌ந்திர‌மும் இருக்கிற‌தென்று பீத்திக்கொள்கின்ற‌ க‌ன‌டாவில் எல்லாவற்றையும் செய்வ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌மும் இருக்கிற‌து என்ப‌தையும் ம‌ற‌ந்துவிட‌முடியாது. இவ‌ளுக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்திருக்குமா என்று வ‌ருகின்ற‌ எண்ண‌த்தை இலையான் க‌லைக்கிற‌ மாதிரி துர‌த்திக்கொண்டேயிருந்தேன். 'இனியும் இப்ப‌டியே வாளாவிருக்க‌ முடியாது, வாருங்க‌ள் போவோம்' என்று இவ‌ளுடைய‌ அண்ணன்மாரையும் அழைத்துக்கொண்டு பொலிஸில் புகார் கொடுக்க‌ வெளிக்கிட்டோம்.

பொலிஸ்கார‌ன்க‌ள், ஒன்றும் ந‌ட‌ந்திருக்காது, தாங்க‌ளும் தேடுகிறோம், யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் நிற்க‌க்கூடும், நாளைக்கு வ‌ந்திருவா என்று சொல்லுறாங்க‌ள். எங்க‌டை த‌மிழ்ச்ச‌மூக‌த்திற்குள்ளை குடும்ப‌ங்க‌ளுக்குள் ஏதாவ‌து பிண‌க்குப்ப‌ட்டு, ம‌னுசிமார்க‌ள் கோப‌த்தில் சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் இர‌வில் நின்றுவிட்டு, கால‌மைக‌ளில் 'க‌ல்லானாலும் க‌ண‌வ‌ன் புல்லானாலும் புருச‌ன்' என்ற‌ தத்துவ‌ ஞான‌ம் கிடைத்து க‌ண‌வ‌ன்மாரோடு போய்ச் சேர்ந்துவிடுவ‌துண்டு. இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலும் சில‌வேளைக‌ளில் ம‌னுச‌ன்மார் ம‌னுசியைக் காண‌வில்லை என்று ம‌னுக்கொடுப்ப‌துண்டு. இப்ப‌டிப் புகார் கொடுப்ப‌து, உண்மையில் ம‌னுசி காண‌வில்லை என்ப‌தால் வ‌ந்த‌ அக்க‌றையாலையா அல்ல‌து நாளை மனுசிக்கு ஏதும் ந‌ட‌ந்தால் பொலிஸ் த‌ன்னைச் ச‌ந்தேக‌த்தில் பிடித்துவிட‌க்கூடும் என்ற‌ முன் எச்சரிக்கையாலையா என்ப‌து புகார் கொடுக்கும் ம‌னுச‌ன்மார்க‌ளின் ம‌ன‌தைப் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. இவ்வாறான‌ கார‌ணங்க‌ளால் இந்த‌ப் பொலிஸ்கார‌ன்க‌ள் உண்மையான‌ அக்க‌றையோடு இவ‌ளைத் தேடுவான்க‌ளோ என்ப‌தில் என‌க்கு ஐமிச்ச‌ம் இருந்த‌து.

அடுத்த‌ நாள் ம‌த்தியான‌ம் போல‌ வ‌ளாக‌த்திற்கு பொலிஸ் வ‌ந்து இவ‌ளைப் ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளை இவ‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள், பேராசிரிய‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் முழுதும் இவ‌ளைக் காண‌வில்லை என்ற‌ செய்தி ப‌ர‌விவிட்ட‌து. அத்தோடு இவ‌ள் காணாம‌ற்போன‌து வ‌ளாக‌ச் சுற்றாட‌லுக்குள்தான் என்ப‌தை இவ‌ள‌து அறைத்தோழியும் தெளிவாக‌ச் சொல்லியிருக்கிறாள். எனென்றால் நேற்றுக் காலை இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் சேர்ந்துதான் அறையிலிருந்து வ‌குப்புக்க‌ளுக்காய் வெளிக்கிட்டிருக்கின‌ம். இவ‌ள் காணாம‌ற் போயிருந்த‌து வ‌ளாக‌த்திற்குள் என்ப‌தால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ நிர்வாக‌த்திற்கும் பெரும் பிர‌ச்சினையாகிவிட்ட‌து. என்னிட‌ம், ந‌ண்ப‌ர்க‌ளும் பொலிஸும் அடிக்க‌டி வ‌ந்து விசாரித்துக்கொண்டிருந்தார்க‌ள். எங்க‌ளுக்குள்ளை ஏதாவ‌து பிர‌ச்சினைப்ப‌ட்டுத்தான் அவ‌ள் காணாம‌ற்போய்விட்டாளா என்று தொட‌க்க‌த்தில் பொலிஸுக்கு என்னிலை ஒரு ச‌ந்தேக‌மிருந்த‌து. நான் தான் ஏதோ இவ‌ளுக்குச் செய்துவிட்டு காண‌வில்லையென்று நாட‌க‌ம் ஆடுகின்றேனோ என்று அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ழ‌மையான‌ பொலிஸ் புத்தி சிந்தித்திருக்கின்ற‌து. ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இவ‌ள் காணாம‌ற்போயிருந்த‌ நேர‌த்தில் நான் வ‌குப்பொன்றுக்குள் இருந்த‌து தெளிவாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌தால் வேறு யாரோதான் இவ‌ள் காணாம‌ற்போன‌த‌ற்கு கார‌ண‌மாயிருக்க‌வேண்டுமென‌ப் பொலிசுக்கு பிற‌கு தெரிந்துவிட்ட‌து. என்றாலும் என்னையும் எப்போது தாங்க‌ள் தொட‌ர்புகொண்டாலும் பொலிஸ் நிலைய‌த்திற்கு வ‌ர‌வேண்டுமென‌ அறிவுறுத்தியிருந்தார்க‌ள்.

இவ‌ள் காணாம‌ற்போய் மூன்றாவ‌து நாளாகியும் விட்ட‌து. இவ‌ளின் அண்ண‌ன்மார் ம‌ற்றும் ரொர‌ண்டோவிலிருந்த‌ இவ‌ள‌து பெற்றோர் என‌ எல்லோரும் ஒரேயிட‌த்தில்தான் நிற்கிறோம். எல்லோர் முக‌ங்க‌ளிலும் சோக‌மும் சோர்வும் அப்பிக்கிட‌க்கிற‌து நானும் என‌து மூளையைக் கச‌க்கி அவ‌ளின் நினைவின் மிட‌றுக‌ளிலிருந்து அவ‌ள் தொலைந்துபோயிருக்க‌க்கூடிய‌ இட‌ங்க‌ளைப் ப‌ற்றி வ‌டிக‌ட்டிக்கொண்டிருக்கின்றேன். இப்போதுதான் இந்த‌ விட‌ய‌மொன்று நினைவுக்கு வ‌ருகின்ற‌து. இவ‌ள் சொல்லுவாள், மார்க்க‌மிலிருக்கிற‌ ம‌ச்சான் முறையான‌ ஒரு பெடிய‌னுக்கு தான் உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்துக்கொண்டிருக்கிற‌ பொழுதிலிருந்தே த‌ன்னில் விருப்ப‌மென்று. அடிக்க‌டி த‌ங்க‌ளின் பாட‌சாலைக்கு வ‌ந்து த‌ன்னை 'நேசியும‌ன் நேசியுமன்' என்கின்ற‌ அவ‌னின் தொல்லை தாங்காது த‌ன் அண்ணாமாரிட‌ம் சொல்ல‌, அவ‌ர்க‌ள் அவ‌னைக் கூப்பிட்டு இதெல்லாம் ச‌ரியில்லையென‌ எச்ச‌ரித்துவிட்டிருக்கின்றார்க‌ள் என்று சொல்லியிருக்கிறாள். ஆனால் இப்ப‌ இவ‌ள் வ‌ளாக‌ம் வ‌ந்த‌ன்பிற‌கு கூட‌, யாரிட‌மிருந்தோ தொலைபேசி எண்ணெடுத்து ம‌ச்சான் த‌ன்னை நேசிக்கும்ப‌டி அவ்வ‌ப்போது வ‌ற்புறுத்திக்கொண்டிருப்ப‌தாய் சொல்லியிருந்தாள். 'நீரென்னை நேசித்துக் கொண்டிருப்ப‌தாய் சொல்ல‌வில்லையா' என்று அவ‌ளிட‌ம் ஒருமுறை கேட்ட‌போது 'அதையும் அந்த‌ விச‌ர‌னுக்குச் சொன்ன‌னான். ஆனால் அவ‌ன் நீர் பொய்சொல்கின்றீர். நீரில்லாவிட்டால் உயிர் வாழ‌வே மாட்டானென‌ உறுதியாய்க் குர‌லில் கூறினான்' என்றாள். 'இந்த‌ நாச‌மாய்ப் போன‌ த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து பார்த்து இவ‌ங்க‌ள் சரியாகக் கெட்டிட்டாங்க‌ள், உருப்ப‌ட‌வே மாட்டாங்க‌ள்' என்று ஓர் அறிவுஜீவியின் பாவ‌னையில் நான் கூறிய‌தும் என‌க்கு நினைவுண்டுதான்.

4.

எத‌ற்கும் ஒருக்காய் இவ‌ளின் இந்த‌ ம‌ச்சானை விசாரித்துப் பார்த்தால் என்ன‌ என்று இவ‌ளின் அண்ணாவிட‌ம் சொன்னேன். த‌க‌வ‌ல் பொலிசுக்கும் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. நாங்க‌ள் அவ‌னின் தொலைபேசி இல‌க்க‌த்தை அழைத்த‌போது அவ‌னும் எடுக்கிறானில்லை. அவ‌னொரு வீட்டின் நில‌வ‌றையில் தான் வ‌சித்துவ‌ந்தான். பொலிஸ் போய் வீட்டைத்த‌ட்டிய‌போது அவ‌ன் திற‌க்க‌வில்லை என்ற‌போது பொலிசுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து. க‌த‌வை உடைத்துப் பார்த்த‌போது, அங்கே இவ‌ளை அறைக்குள் பூட்டிவைத்திருந்த‌து தெரிந்த‌து. ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே, உங்க‌ளுக்கு ந‌ம்புவ‌த‌ற்குக் க‌டின‌மாயிருந்தாலும் காத‌லுக்காய் ஒரு க‌ட‌த்த‌ல்தான் க‌னடாவில் நிக‌ழ்ந்திருந்த‌து. எங்க‌ள் எல்லோருக்கும் அப்பாடா இவ‌ள் ஒரு பிர‌ச்சினையுமில்லாம‌ல் கிடைத்துவிட்டாள் என்ப‌தில் பெரிய‌ நிம்ம‌தி. இப்போது இவ‌ளுக்கு மூன்று நாட்க‌ளுக்கு முன் என்ன‌ நிக‌ழ்ந்த‌தென்ற‌ விட‌ய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் ப‌னிக்கட்டியொன்று உருகிய‌மாதிரித் தெரிய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. இவ‌ள் அன்றைக்கு வ‌குப்பு முடிந்துவ‌ந்த‌போது இந்த‌ ம‌ச்சான்கார‌னும், அவ‌னுடைய‌ இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் காரில் காத்துக்கொண்டிருக்கின்றார்க‌ள். இவ‌ளுக்கும் இவ‌ர்க‌ளைக் க‌ண்டு பெரிய‌ அதிர்ச்சி. 'வாருங்க‌ள் காருக்குள் இருந்து க‌தைக்க‌லாம்' என்று இவ‌ளை கூட்டிக்கொண்டுபோய் அப்ப‌டியே மார்க்க‌த்திற்கு அவன்கள் க‌ட‌த்திக்கொண்டு போய்விட்டார்க‌ள். காத‌லிப்ப‌து பிழையில்லைத்தான். . ஆனால் இப்ப‌டிக் க‌ட‌த்திக்கொண்டு போய் த‌னியே வீட்டில் வைத்திருந்தால் இவ‌ளுக்குக் காத‌ல் வ‌ந்துவிடும் என்றோ அல்ல‌து இவ‌ளை அவ‌னுக்கு க‌லியாண‌ஞ் செய்துவைத்துவிடுவார்க‌ள் என்றோ ஒரு த‌மிழ்ப்ப‌ட‌த்துக்கு நிக‌ராய் அவ‌ன் யோசித்த‌துதான் பெரும் சிக்க‌லுக்கு வ‌ழிவ‌குத்துவிட்ட‌து.

ஒன்ற‌ரை ம‌ணித்தியால‌ம் ஓட‌க்கூடிய‌ ஓர் ஆங்கில‌த் திரில்ல‌ர் மாதிரி இந்த‌ மூன்று நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ இவ‌ளின் க‌தை இருந்தாலும், பிற‌குதான் என‌க்கும் இவ‌ளுக்கும் இடையில் எல்லாம் புகைய‌த் தொட‌ங்கின‌. இப்ப‌டி மூன்று நாட்க‌ள் ஒரு பெடிய‌னின் வீட்டில் வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் ப‌ற்றி உற‌வுக‌ளும் ச‌முக‌மும் 'என்ன‌ க‌தைக்கும்' என்ப‌து புரிய‌க்கூடிய‌தாக‌ இருந்தாலும், என்னுடைய‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூட‌ நான‌றிய‌க்கூடிய‌தாக‌ இந்த‌ விட‌ய‌ம் ப‌ற்றியும் இவ‌ளைப் ப‌ற்றியும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய்க் க‌தைத்துக் கொண்டு திரிந்த‌தைத்தான் தாங்க‌முடியாதிருந்த‌து. அதிலும் ஒருத்த‌ன், 'எப்ப‌டி மூன்று பெடிய‌ங்க‌ள் இருக்கைக்கே காருக்குள் ஏறி இவ‌ள் க‌தைக்க‌ப் போன‌வ‌ள்' என்று கேட்டான். இன்னொருத்த‌ன் 'என்ன‌தான் இருந்தாலும், இவ‌ளின் ச‌ம்ம‌த‌மில்லாம‌ல் அவ‌ங்க‌ள் மார்க்க‌ம் ந‌க‌ருக்குக் கொண்டுபோய் இருக்கமாட்டார்க‌ள் என்றான். என்னுடைய‌ நெருங்கிய‌ தோழி கூட‌, 'அவ‌ள் ந‌ல்ல‌வ‌ள் என்று இனியும் ஏமாளியாக‌ இருக்காதே, ஒரு யாழ்ப்பாண‌த்துப் பெடிய‌னாக‌ அடுத்தென்ன‌ செய்வ‌தென்று யோசி' என்று அறிவுரையை க‌ன்னிய‌ர் மட‌த்தில் வைத்துச் சொன்னாள். என‌க்கு எல்லாம் ஒரே குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. ஒருத்தியை அவ‌ளின் விரும்பமின்றி ஒருத்த‌ன் கொண்டுபோய் வைத்துவிட்டான் என்ப‌த‌ற்காய் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் நேசித்த‌து எல்லாம் பொய்யாகிவிடுமா என்ன‌? இத்த‌னை அல்லாட‌ல்க‌ளுக்குமிடையில், இவ‌ள் த‌ன்னைக் க‌ட‌த்திக்கொண்டு போன‌வ‌ர்க‌ளின் மீது வ‌ழ‌க்கு ப‌திந்துவிட்ட‌து, இனி அவ‌ன்க‌ளின் வாழ்க்கை முற்றும் பாழென்று புல‌ம்பிக்கொண்டிருந்தாள். இவ‌ள் த‌ன‌து ம‌ச்சானின் வாழ்க்கை நாச‌மாகிவிட்ட‌தென‌ இர‌க்க‌ப்ப‌டுகின்றாளா அல்ல‌து ம‌ச்சான் மீதான் த‌ன‌து காத‌லை ம‌றைமுக‌மாய் என‌க்குக் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாளா என்று நான் யோசித்துப் பார்த்த‌தில் என‌க்கு த‌லையிடிதான் வ‌ந்து சேர்ந்த‌து.

5.

இப்ப‌டியாக‌ நாட்க‌ள் போக‌ப்போக‌ எங்க‌ள் உற‌வில் எங்க‌ளைய‌றியாம‌லே விரிச‌ல் வ‌ந்துவிட்ட‌து. இவ‌ளுக்கு அந்த‌க் க‌ட‌த்திப் போன‌ பெடிய‌ன் மீது ஏதோ ஈர்ப்பிருந்திருக்கிற‌தோ என்ற‌ எண்ண‌ம் அடிக்க‌டி வ‌ருவ‌தை என்னால‌ த‌டுத்து நிறுத்த‌வும் முடிய‌வில்லை. ச‌ந்தேக‌ம் போன்ற‌ வியாதி ரொர‌ண்டோவில் வ‌ந்த‌ SARSஐ விட‌ அபாய‌க‌ர‌மான‌து. எந்த‌ ம‌ருந்து கொடுத்தாலும் அவ்வ‌ள‌வு கெதியாய் மாறிவிடாது. இந்த‌ முறை கோடை வ‌குப்புக்க‌ள் எதுவும் எடுப்ப‌தில்லையென‌ முடிவுசெய்து ரொர‌ண்டோ மாந‌க‌ரில் பொழுதை க‌ழிப்ப‌தென‌ முடிவு செய்தேன். த‌ன‌க்குச் சில‌ பாட‌ங்க‌ள் எடுக்க‌விருக்கிற‌தென‌ இவ‌ள் வ‌ளாக‌த்திலேயே த‌ங்கிவிட்டாள். ரொர‌ண்டோ வ‌ந்த‌த‌ன்பிற‌கும் என்னால் இவ‌ள‌து விட‌ய‌த்தில் தெளிவான‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியாம‌ல் இருக்கிற‌து. ப‌ல‌ர‌து பேர‌ன்புக்கும் பெரும‌திப்புக்குமுரிய‌ சிறி ராம‌பிரானே -எல்லாம் அறிய‌க்கூடிய‌ க‌ட‌வுளாய் இருந்தும்கூட‌- சீதா தேவியை நெருப்பில் நீந்த‌ச்சொல்லி ஏற்றுக்கொண்ட‌போது சாமானிய‌னாய் -அதுவும் யாழ்ப்பாண‌ம் என்னும் பூகோள‌த்தில் சிறு புழுக்கை போன்ற‌ ஊரிலிருந்து வ‌ந்த‌- நான் என்ன‌தான் செய்ய‌முடியும்? இப்ப‌டியிருக்கும்போதுதான் ஸகாபுரோவில் எக்ளின்ட‌ன் வீதியிலுள்ள‌ சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம் ப‌ற்றி ந‌ண்ப‌ரொருவ‌ன் குறிப்பிட்டு, ஆதி ர‌ம்பாவிட‌ம் போனால் உன‌து ம‌ன‌ச்ச‌ஞ்ச‌லம் -ம‌ழை காணா ம‌ண்ணில் மூத்திர‌ம் பெய்தால் த‌ட‌மின்றிப் போவ‌துபோல‌- தூசாய்ப் ப‌ற‌ந்துபோய்விடுமென‌ புத்திம‌தி சொன்னான்.

ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் சாத்திர‌ம் பார்ப்ப‌திலிருந்து தியான‌ம் போன்ற‌ ப‌ல‌வ‌ற்றில் தேர்ந்த‌ வித்த‌கியாக‌ இருந்தார். ஆதி ர‌ம்பாவின் பூர்வீக‌ம் தெலுங்கு தேச‌மாயிருக்க‌வேண்டும், ஆனால் ச‌ன் ரீவி நிக‌ழ்ச்சித்தொகுப்பாள‌ர்க‌ளைப் போல‌ 'ந‌ன்கு த‌மிழ்' பேச‌க்கூடிய‌வ‌ராக‌ இருந்தார். வ‌ய‌தும் அவ்வ‌ள‌வு ஒன்றும் பெரிதாக‌ இல்லை. இந்த‌ வ‌ய‌திலும்...... வேண்டாம் இத‌ற்கு மேல் ஏதும் விப‌ர‌ங்க‌ள் த‌ந்தால் நீங்க‌ள் பிற‌கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவை ம‌ற‌ந்து ந‌டிகை ர‌ம்பாவை நினைக்க‌த் தொட‌ங்கிவிடுவீர்க‌ள் என்ப‌தால் நிறுத்திக்கொள்கின்றேன். என‌து கையைத் த‌ன‌து ம‌டியில் வைத்துப் பார்த்த‌ப‌டி 'த‌ம்பி நீங்க‌ள் ச‌ரியான குழ‌ப்ப‌த்தில் இருக்கின்றீர்க‌ள்?' என்று கூறினார். இந்த‌ உல‌க‌த்தில் குழ‌ப்ப‌மில்லாத‌ மனுச‌ர் என்று எவ‌ரேனும் இருக்கின்றார்க‌ளா என்ன‌ என்று கேட்க‌ விரும்ப‌மிருந்தாலும், ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் என் கைக‌ளை வ‌ருடிய‌ப‌டி சாத்திர‌ம் கூறும் இத‌மான‌ அனுபவ‌த்தைக் குலைக்க‌ நான் விரும்ப‌வில்லை. இவ்வாறாக‌ நான் சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவின் ஆச்சிர‌ம‌த்தில் அதிக‌ள‌வு பொழுதைக் க‌ழிக்கும் ஒரு ப‌க்த‌னாய் மாறிவிட்டேன். அங்கே செய்ய‌ப்ப‌ட்ட‌ தியான‌மும் ப‌ஜ‌னையும் புத்துண‌ர்வைத் த‌ந்த‌தோ இல்லையோ என்னால் இவ‌ளைப் ப‌ற்றிய‌ குழ‌ப்ப‌ங்க‌ளிலிருந்து ஒரளவுக்காவது த‌ப்பித்திருக்க முடிந்திருந்த‌து. தியான‌ம் ப‌ஜ‌னைக‌ளின்போது ஒரேயோரு தொந்த‌ர‌வு ம‌ட்டுமேயிருந்த‌து. ஆச்சிர‌ம‌த்திற்கு அடுத்த‌தாய் இருந்த‌ க‌டையிலிருந்து க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ந்துகொண்டிருக்கின்ற‌ த‌ந்தூரி சிக்க‌ன் வாச‌ந்தான் என்னை அடிக்க‌டி தியான‌த்திலிருந்து -இப்போது கோழியின் எந்த‌ப் பாக‌ம் பொரிந்துகொண்டிருக்கும்- என்று ம‌ன‌தின் திசையை மாற்றிக்கொண்டிருந்த‌து.

இப்ப‌டி என்னைப் போல‌வே சிறில‌சிறி ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ளின் ஆச்சிர‌ம‌த்திற்கு ப‌ஜ‌னைக்கென‌ அடிக்க‌டி வ‌ந்துபோய்க்கொண்டிருக்கின்ற‌ ஒருத்தியை அவ‌தானித்துக்கொண்டிருந்தேன். அவ‌ள் என்னை ஈர்த்த‌ற்கு அதிக‌ கார‌ண‌ம், இடைவ‌ரை நீண்டிருந்த‌ அவ‌ள‌து கூந்த‌லும், காதில் தொங்கிக்கொண்டிருந்த‌ நீண்ட‌ சிமிக்கித் தோடுக‌ளுந்தான். நான்கு மாத‌ங்க‌ளே கோடை வ‌ருகின்ற‌ க‌ன‌டா போன்ற‌ நாட்டில் இடுப்பு வ‌ரை நீண்ட‌ கூந்த‌லைப் ப‌ராம‌ரிப்ப‌து என்ப‌து எவ்வ‌ள‌வு க‌டின‌மான‌ காரிய‌ம் என்று எவ‌ருக்கும் சொல்லித்தான் தெரிய‌வேண்டுமென்ப‌தில்லை. அத்தோடு என்னைப் போல‌ யாழ்ப்பாண‌ க‌லாசார‌த்தைக் கைவிட‌க்கூடாதென்ப‌தில் பிடிவாத‌மாய் அவ‌ளிருக்கிறாள் என்ப‌தை அவ‌ளுட‌ன் பேசும்போது தெரிந்த‌து. இங்கு வ‌ந்த‌த‌ன் பிற‌கு கூட‌ ரெக்ஸோனா சோப்பும் பேபி ப‌வுட‌ரும் போடுவ‌தை இத்த‌னை ஆண்டுகளானபின் கூட‌ அவ‌ள் ஒதுக்கிவிட‌வில்லை என்றால் பாருங்க‌ள். அன்றைக்கொரு நாள் ப‌ஜ‌னை முடிந்து எல்லாவ‌ற்றையும் சுத்த‌மாக்கி முடிந்த‌போது நேர‌ம் ப‌த்து ம‌ணியாகிவிட்ட‌து. அவ‌ளுக்கு நான் தான் என்னுடைய‌ காரில் ride கொடுத்தேன். பேசிக்கொண்டு போகும்போது தான் வீட்டிலை மூன்று பெடிய‌ங்க‌ளுக்கு ஒரு பெட்டை என்றாள். யாழ்ப்பாண‌த்திலையே ந‌ல்ல‌ தென்ன‌ஞ்சோலையுள்ள‌ இர‌ண்டு வீடுக‌ள் த‌ங்க‌ளுக்கு இருக்கிற‌தென்றும் ஓர் உப‌குறிப்பாய்ச் சொன்னாள். கொண்டுபோய் அவ‌ளை வீட்டில் இற‌க்கிய‌போது இப்போது இங்கையிருக்கிற‌ வீடும் ந‌ல்ல‌ வ‌ச்தியாக‌த்தான் தெரிந்த‌து. வீட்டுக்கு முன் ஒரு Lexusம் BMWம் நின்ற‌து. இவ்வ‌ள‌வு கார்க‌ள் வீட்டிலிருந்தாலும் ப‌ஜ‌னைக‌ளுக்கு வ‌ரும்போது என்னுடைய‌ காரிலேயே வ‌ர‌ விரும்புகின்ற‌வ‌ளாய் அவ‌ள் இருந்தாள். அவ‌ள‌து வீட்டிலும் நான் யாழ்ப்பாண‌த்தில் எந்த‌ ஊர்க்கார‌ன் என்றும், அந்த‌ ஊரில் எந்த‌த் திசையில் எங்க‌ள் வீடு இருந்த‌தென்ப‌தையும் 'விசாரித்து' ஏற்க‌ன‌வே அறிந்து வைத்திருந்த‌தால், அவ‌ர்க‌ளுக்கு அவ‌ள் என்னோடு காரில் வ‌ருவ‌தில் பெரிய‌ பிர‌ச்சினையிருக்க‌வில்லை. அத்தோடு சிறில‌சிறி ஆதி ரம்பாவின் தீவிர‌ ப‌க்த‌னாக‌ நான் இருப்ப‌தும், ஒரு கும‌ர்ப்பெட்டையை என்னோடு த‌னியே விடுவ‌தில் வ‌ர‌க்கூடிய‌ த‌டையை உடைத்திருக்க‌வேண்டும்.

6.

கோடை முடிந்து இலையுதிர்கால‌ம் ஆர‌ம்பிக்க‌, நான் ரொர‌ண்டோவை விட்டு நீங்கி வ‌ளாக‌ம் போக‌வேண்டியிருந்த‌து. ரொர‌ன்டோவிலிருக்கும்போது அவ்வ‌ப்போது -க‌ட‌த்தப்ப‌ட்ட‌ இவ‌ளோடு- தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருந்தாலும் முன்புபோல‌ அவ்வ‌ள‌வு ஈடுபாட்டோடு க‌தைப்ப‌தில்லை. இவ‌ளுக்கும் நானும் ஏதோ சில‌ கார‌ணங்க‌ளுக்காய் த‌ன்னைவிட்டு வில‌கிப்போய்க்கொண்டிருப்ப‌தாய்த் தோன்றியிருக்க‌க் கூடும்.

இலையுதிர்கால‌ம் என்றாலும் இன்ன‌மும் கோடை மிஞ்சியிருந்த‌து: மிதமான‌ வெப்ப‌நிலை இருந்த‌து. நீண்ட‌ மாத‌ங்க‌ளுக்குப்பிற‌கு இவ‌ளை முத‌ன் முத‌லில் பார்த்த‌போது மிகுந்த‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ப‌ளீரென்ற‌ வெள்ளை சோர்ட் ஸ்கேர்ட்டை முழ‌ங்காலுக்கு ஒரு சாண் மேலே நிற்க‌க்கூடிய‌தாக‌ அணிந்த‌ப‌டி வ‌ந்துகொண்டிருந்தாள். என‌க்கென்றால் வான‌த்திலை இருக்கிற‌ சூரிய‌ன், கையிலை எட்ட‌க்கூடிய‌ தூர‌த்தில் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்து இவ‌ளை எரித்துவிட‌லாமோ என்ற‌ள‌வுக்கு கோபம் கொப்ப‌ளிக்க‌த் தொடங்கிய‌து. என்னோடு இருந்த‌ இவ்வ‌ள‌வு கால‌மும் இப்ப‌டி shortயாய் எதுவும் போட்ட‌தேயில்லை. இதெல்லாம் இவ‌ளின் க‌ட‌த்திப்போன‌ ம‌ச்சான் கொடுத்த‌ ஊக்குவிப்பாய்தான் இருக்க‌வேண்டும். அத்தோடு முந்தி தோள்வ‌ரை நீண்டு கிட‌ந்த‌ கூந்த‌லை இன்னும் குட்டையாக‌ வெட்டி 'பொப்' ஆக்கியுமிருந்தாள். இவ‌ள் என்னுடைய‌ ஆண்மைக்கு ச‌வால் விடுவ‌த‌ற்கு என்றே இதையெல்லாம் வேண்டுமென்றே செய்திருக்கின்றாள் போல‌ப்ப‌ட்ட‌து. ஆண்மைக்கு ச‌வால் விட்டால் கூட‌ப்ப‌ர‌வாயில்லை, நான் இவ்வ‌ள‌வு கால‌மும் க‌ட்டிக்காத்துக்கொண்டிருந்த‌ யாழ்ப்பாண‌த்துக் க‌லாசார‌த்தையே காலில் போட்டு மிதிக்கின்ற‌ பாவ‌னையில் அல்ல‌வா ந‌ட‌ந்து வந்து கொண்டிருக்கிறாள். இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ளை நான் நாளைக்கு க‌லியாண‌ங்க‌ட்டினால் எங்க‌டை யாழ்ப்பாண‌த்துச் ச‌ன‌ம் போற‌ வாற‌ இட‌ங்க‌ளுக்கு எந்த‌ முக‌த்தோடு நான் கூட்டிக்கொண்டு போக‌ முடியும்? இப்ப‌வே முடிவெடுத்துவிட்டேன். இனி இவ‌ளைக் கைக‌ழுவிவிட்டு விட‌வேண்டும். இராம‌பிரானுக்கு அனுமான் நின்று வ‌ழிகாட்டிய‌து போல‌ என‌க்கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவும் அவ‌ர‌து அணுக்கப் ப‌க்தை அனுவும் இருக்கும்போது நான் ஏன் இவ‌ளை என்ரை த‌லையில் க‌ட்டி வைத்துக் க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டும். அந்த‌க்கால‌த்திலை 'க‌ற்பு' ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌போது நெருப்பில் குதிக்கத் த‌யாராக‌ அல்ல‌வா சீதையை எல்லாம் வ‌ள‌ர்த்திருக்கின்றார்க‌ள். இப்போது க‌ற்பிலோ பிற‌வ‌ற்றிலோ ச‌ந்தேக‌ம் வ‌ருகிற‌தென்று கேட்டால் -இப்ப‌டி குட்டையாய் பாவாடை அணிகின்ற‌வ‌ள்- பாவாடையை உய‌ர்த்திப்பிடித்து பின்ப‌க்க‌த்தைக் காட்டிப் ப‌ழித்துவிட்டுப் போனாலும் போய்விடுவாள். பிற‌கு என‌க்குத்தான் அசிங்க‌மாய்ப் போய்விடும். .

நான் இப்ப‌டியான‌ கோல‌த்திலை இவ‌ளைக் க‌ண்ட‌த‌ன்பிற‌கு அவ்வ‌ள‌வாய் இவ‌ளோடு க‌தைக்க‌ விரும்பவில்லை. வேறு வேலையிருக்கிற‌தென்று வ‌ழுக்கையாற்ற‌டியிலிருந்து ந‌ழுவிப்போயிருந்தேன். பிற‌கு வேண்டுமென்றே அவ‌ள‌து தொலைபேசி அழைப்புக்க‌ளையும் நேர‌டிச் ச‌ந்திப்புக்க‌ளையும் த‌விர்க்க‌த் தொட‌ங்கினேன். இதெல்லாம் போதாத‌து என்று அவ்வ‌போது என்னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'என்ன‌டா உன்ரை ஆள் அந்த‌ மாதிரி உடுப்புப் போட்டுக்கொண்டு இப்ப‌ திரிகிறா' என்று நாளாந்த‌ வ‌ர்ண‌னை செய்துகொண்டிருந்தார்க‌ள். என‌க்கென்றால் நான் இவ்வ‌ளவு கால‌மும் இவ‌ளுக்குக் க‌ற்றுக்கொடுத்த‌தெல்லாம், ம‌ழைநீரில் க‌ரைகின்ற‌ ம‌ண்ணாங்க‌ட்டியாய் போய்க்கொண்டிருக்கின்ற‌தே என்கின்ற‌ க‌வ‌லைதான் வ‌ந்த‌து.

ஒரு நாள் பின்னேர‌ம் எக்க‌னாமிக்ஸ் வ‌குப்பு முடிந்து முறிக‌ண்டிச் ச‌ந்திய‌டிக்கு கிட்ட‌ வ‌ந்துகொண்டிருந்த‌போது இவ‌ள் என்னை வ‌ழிம‌றித்தாள். 'உங்க‌ளோடு பேச‌வேண்டும் கொஞ்ச‌ நேர‌ம் நிற்க‌ முடியுமா?' என்று கேட்டாள். நான் இன்றைக்கும் இவ‌ள் ஷோர்ட் ஸ்கேர்ட் ஏதாவ‌து போட்டிருக்கின்றாளா என்றுதான் முத‌லில் ப‌ரிசோதித்துப் பார்த்தேன். அப்ப‌டி எதுவும் போடாத‌ப‌டியால்தான் ஆறுத‌லாக‌க் க‌தைப்ப‌த‌ற்கு ஒத்துக்கொண்டிருந்தேன். 'என்ன‌ ந‌ட‌க்கிற‌து எங்க‌ளுக்குள்ளை?' என்றாள். நான் என்னுடைய‌ குழ‌ப்ப‌ங்க‌ளை எல்லாம் சொன்னேன், ஆனால் புத்திசாலித்த‌ன‌மாய் சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம‌த்தில் ச‌ந்தித்த‌ அனு ப‌ற்றிய‌ விப‌ர‌ம் எதையும் சொல்ல‌வில்லை. இவ‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அந்த‌ மூன்று நாட்க‌ளில் என்ன‌ நிக‌ழ்ந்திருக்குமென்ப‌து என‌க்கு பெர்மூடா முக்கோண‌ம் போல‌ ஒரே ம‌ர்மமாய் இருக்கிற‌தென்றேன். இவை எல்லாவ‌ற்றையும் விட‌ முக்கிய‌மாய் எங்க‌ள் யாழ்ப்பாண‌த்துக் கலாசார‌த்தைக் குலைக்கிற‌ மாதிரி இப்ப‌டி இவ‌ள‌ ஆடைக‌ள் போடுவ‌து என‌க்கு அதிக‌ம் தொந்த‌ர‌வாய் இருக்கிற‌தென்றேன்.

தான் ஆடைகள் அணிவதற்கான சுத‌ந்திர‌ம் த‌ன‌க்கு ம‌ட்டுமே உரிய‌தென்று உய‌ர்த்திய‌ குர‌லில் சொன்னாள். பின், 'இப்ப‌டியெல்லாம் க‌தைக்கும் நீர், என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டிய‌ பிற‌கு புண‌ர்ச்சியின்போது கூட‌, ஆடைக‌ளோடு சேர்த்துத்தான் புண‌ருவீரா?' என்றாள். என்னால் இத‌ற்கு மேலும் பொறுமையாக‌ இருக்க‌முடிய‌வில்லை. 'You are a bitch, நீரொரு அச‌ல் யாழ்ப்பாண‌த்தியாய் இருந்தால் இப்ப‌டியெல்லாம் க‌தைத்திருக்க‌ மாட்டீர். உம்மை இப்ப‌ பார்க்க‌ யாரோ என்ரை உட‌ம்பிலை எண்ணெய் ஊற்றி எரிக்கிற‌மாதியான‌ உண‌ர்வுதான் வ‌ருகிறது. இப்ப‌டியெல்லாம் நீர் க‌தைப்பீர் என்று தெரிந்துதான் நான் ரொர‌ண்டோவில் நின்ற‌ நேர‌ம் யாழ்ப்பாண‌த்துக்காரி ஒருத்தியை ப்ர‌போஸ் செய்துவிட்டேன். இனி நீரும் உம்ம‌டை ல‌வ்வும், ஒரு மண்ணாங்கட்டியும் என‌க்கு வேண்டாம்' என்றேன். இஃதொரு பெரிய‌ அடியாக‌ அதிர்ச்சியாக‌ இவ‌ளுக்கு இருக்க‌ப்போகின்ற‌தென‌ இவ‌ள‌து எதிர்வினைக்காய்க் காத்துக்கொண்டிருந்தேன். எந்த‌ அதிர்ச்சியும் இல்லாது மெல்லிய‌ புன்முறுவ‌லோடு, 'நீரொரு அச‌ல் யாழ்ப்பாணி என்றென‌க்கு ந‌ன்கு தெரியும். இன்னொருத்தியைக் காத‌லிக்கின்றேன் என்ப‌தைக் கூட‌ நெஞ்சுக்கு நேரே சொல்ல‌ முடியாத‌ கோழையைத்தான் இவ்வ‌ள‌வு கால‌மும் நேசித்திருக்கின்றேன் என்ப‌தைய‌றியும்போது என‌க்குத்தான் வெட்க‌மாயிருக்கிற‌து. உங்க‌ளுக்கு எல்லாம் எத‌ற்கு வாய்? அது நேர்மையாக‌ இருக்கின்ற‌வ‌ன்க‌ளுக்குத்தான் தேவையாயிருக்கும். நீங்க‌ளெல்லாம் குண்டியால் குசுகுசுக்கொண்டிருக்க‌த்தான் பொருத்த‌மான் ஆட்க‌ள்' என்று கூறிவிட்டு ச‌ட்டென்று அந்த‌ இட‌த்திலிருந்து போய்விட்டாள்.

இவ்வ‌ள‌வு தெளிவாய் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டு ஒரு துளி க‌ண்ணீரோ, அதிர்ச்சியோ இல்லாம‌ல் இவ‌ள் போன‌து கூட‌ அவ்வ‌ள‌வு பெரிய‌ விட‌ய‌மில்லை. ஆனால், நான் போற‌ வாற‌ பெட்டைய‌ளின்ரை குண்டிக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌து, ஒரு த‌மிழ்ப்பெட்டையான‌ இவ‌ளுக்கு எப்ப‌டியோ தெரிந்துவிட்ட‌தே என்ப‌துதான் எல்லா அவ‌மான‌ங்க‌ளுக்கும் மேலான‌ அவ‌மான‌மாய் என‌க்குத் தோன்றிய‌து. ஒரு அச‌ல் யாழ்ப்பாணியான‌ என் மீது விழுந்து விட்ட‌ இந்த‌க்க‌றையை, நான் வ‌ங்க‌க்க‌ட‌லையெடுத்து என் மீது வாரியிறைத்துக் கொட்டினால் கூட‌ என்றைக்கும் அக‌ற்ற‌முடியாது போல‌த்தான் தெரிகிற‌து..

(2008)

(ந‌ன்றி: கால‌ம் ‍-34)

http://djthamilan.blogspot.com/2009/06/blog-post_19.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை...படித்தவுடன்/படிக்கும்போதே சில சொற்களை தவிர்த்திருக்கலாமோ என எண்ண தோன்றியது..அந்த "கு"னாவில் தொடங்கும் கதைகள்தான்...

எனக்கு பிடித்தற்கு இன்னுமொரு காரணம், நான் சில நாட்களுக்கு முன்பே உந்த இடங்களை அங்கு படித்த ஒருவரிடம் இருந்து அவரது வாயாலேயே அறிந்தனான்...முறிகண்டி, வழுக்கை ஆறு, அங்குள்ள பஸ்க்கும் யாழ் தேவி என்று பெயராம். சிலருக்கு தெரியாமல் இருக்கும்..இந்த கதை சொல்லும் இடம் Carleton உனிவேர்சிட்டி..ஒட்டவா (கனடாவில்)வில் உள்ளது. பக்கத்தில் உள்ள ஒட்டவா உனிவேர்சிட்டி புறம்பானது..இந்த கதை சொல்லும் இடம் கார்ல்டன்...நான் கிட்டடியில ஸ்ரீ லங்கன் எம்பசி க்கு போனனான் அப்ப அங்குள்ளவர் கேட்டார் கார்ல்டன் இலேயோ படிக்கிறது எண்டு..அண்டைக்கு வந்த சந்தோசம் அது வேற கதை...(கார்ல்டன் இல ஏதும் முதியோர் கல்வித்திட்டம் ஏதும் இருக்கோ தெரியாது )

எனக்கு தெரிய 90 களில் வந்த ஆட்கள் கனபேர் டொரோண்டோ, மற்ற மற்ற இடங்களில் இருந்தது ஒட்டவா, கார்ல்டன் இல இன்ஜினியரிங் படிக்க வராவை/ வாறவையாம்..இப்ப ஓரளவு குறைவு எண்டு கதை...எங்கட ஆக்கள் மற்ற மற்ற உநிவேர்சிட்டிக்கு போறதாலேயும் ?பொதுவாகவே இன்ஜினியரிங் படிப்பவர் தொகை குறைவதாலையும். எனது மனைவியோடு வேலை செய்யும் ஒருவர் சொன்னாராம். தாங்கள் படிக்கையில் ஒரு பாடத்துக்கு போவவர்களின்/ படிப்பவர்களின் மொத்த தொகையே..5 பேராம் (ஒட்டவா உனிவேர்சிட்டி இல்) ஒருநாள் பாட்டி ஒன்று போட்டு விட்டு எல்லாரும் கட் பண்ண அந்தண்டு lectures இல்லாமல் போட்டுது என்றாராம்...

மற்றும் படி ..பொடியளுக்கு (எங்களை மாதிரி யூத்ஸ்க்கு வடிவேல் சொன்ன மாதிரி) எல்லாம் கரைச்சல் பாருங்கோ...குடிச்சு போட்டு.. பூக்கொடுத்தாலும் நக்கலடிப்பியல், ஒரு ஒழுங்கா அம்மாக்கு ஏத்த மாதிரி பொண்ணு பார்த்தாலும் நளினம் விடுவியல்...:lol:

சுகன், யாழ்ப்பாணியின் சோகக்கதை என்று சொல்லும்போதே தெரிகிறது. கடத்தப்பட்ட அந்தப் பெண்ணிற்கு எனது வாழ்த்துக்கள். இப்போது மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

90களில் இப்பிடியான சம்பவங்கள் மிகவும் பிரபலம். அதுவும் காள்ற்றனில் கேட்கவே வேண்டாம். அங்கு படித்த தமிழர்களின் எண்ணிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தோத்துப் போய்விடும். நான் படித்த பல்கலைக்கழகத்தில் படித்த தமிழர்களின் எண்ணிக்கை 20ஐக் கூடத் தாண்டாது. :D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் கனடாவிலா படிச்சனீங்கள்...அது சரி என்ன யாழ்ப்பாணி மற்ற இடத்துக்காரர் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்களா :lol:

Edited by ரதி

  • தொடங்கியவர்

சுகன் கனடாவிலா படிச்சனீங்கள்...அது சரி என்ன யாழ்ப்பாணி மற்ற இடத்துக்காரர் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்களா

இந்தக் கேள்வியை நீங்கள எழுதியவரிடம் தான் கேட்கவேண்டும். வலைத்தளத்தில் படித்ததில் வித்தியாசமாக இருந்ததால் இங்கு இணைத்தேன்.

. இஃதொரு பெரிய‌ அடியாக‌ அதிர்ச்சியாக‌ இவ‌ளுக்கு இருக்க‌ப்போகின்ற‌தென‌ இவ‌ள‌து எதிர்வினைக்காய்க் காத்துக்கொண்டிருந்தேன். எந்த‌ அதிர்ச்சியும் இல்லாது மெல்லிய‌ புன்முறுவ‌லோடு, 'நீரொரு அச‌ல் யாழ்ப்பாணி என்றென‌க்கு ந‌ன்கு தெரியும். இன்னொருத்தியைக் காத‌லிக்கின்றேன் என்ப‌தைக் கூட‌ நெஞ்சுக்கு நேரே சொல்ல‌ முடியாத‌ கோழையைத்தான் இவ்வ‌ள‌வு கால‌மும் நேசித்திருக்கின்றேன் என்ப‌தைய‌றியும்போது என‌க்குத்தான் வெட்க‌மாயிருக்கிற‌து. உங்க‌ளுக்கு எல்லாம் எத‌ற்கு வாய்? அது நேர்மையாக‌ இருக்கின்ற‌வ‌ன்க‌ளுக்குத்தான் தேவையாயிருக்கும். நீங்க‌ளெல்லாம் குண்டியால் குசுகுசுக்கொண்டிருக்க‌த்தான் பொருத்த‌மான் ஆட்க‌ள்' என்று கூறிவிட்டு ச‌ட்டென்று அந்த‌ இட‌த்திலிருந்து போய்விட்டாள்.

இவ்வ‌ள‌வு தெளிவாய் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டு ஒரு துளி க‌ண்ணீரோ, அதிர்ச்சியோ இல்லாம‌ல் இவ‌ள் போன‌து கூட‌ அவ்வ‌ள‌வு பெரிய‌ விட‌ய‌மில்லை. ஆனால், நான் போற‌ வாற‌ பெட்டைய‌ளின்ரை குண்டிக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌து, ஒரு த‌மிழ்ப்பெட்டையான‌ இவ‌ளுக்கு எப்ப‌டியோ தெரிந்துவிட்ட‌தே என்ப‌துதான் எல்லா அவ‌மான‌ங்க‌ளுக்கும் மேலான‌ அவ‌மான‌மாய் என‌க்குத் தோன்றிய‌து. ஒரு அச‌ல் யாழ்ப்பாணியான‌ என் மீது விழுந்து விட்ட‌ இந்த‌க்க‌றையை, நான் வ‌ங்க‌க்க‌ட‌லையெடுத்து என் மீது வாரியிறைத்துக் கொட்டினால் கூட‌ என்றைக்கும் அக‌ற்ற‌முடியாது போல‌த்தான் தெரிகிற‌து..

(2008)

(ந‌ன்றி: கால‌ம் ‍-34)

http://djthamilan.blogspot.com/2009/06/blog-post_19.html

யதார்த்தம் !!

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் சுதன் இதை நீங்கள் எழுதியது என நினைத்து விட்டேன்...ஆனால் எழுத்து நடை கிட்டதட்ட சயந்தனின் எழுத்து நடையை ஒத்து உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தான் என்னோடு ஒரு புத்தள பெடியன் இருந்தான், அவனுக்கு அவனது தமக்கை ஒரு கடிதம் எழுதி இருந்தா,அதை ஒரு மட்டகளப்பு பெடியன் எடுத்து தனக்கு வந்த கடிதம் என வாசித்து விட்டான், அதில் அ்வா எழுதி இருந்தாவாம், யாழ்பாணிகளுடன் இருப்பது கவனம், யாரை நம்பினாலும் கள்ள யாழ்பாணியை நம்பாதே என எழுதி இருந்தா, இதை அவன் எங்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டான், உனது தமக்கை எப்படி இப்படி எழுத முடியும் என, யாழ்பான பெடியள் புத்தளத்தானை பேச, புத்தளத்தான் எனது கடிதத்தை எப்படி மட்டக்களப்பான் எடுத்து களவாக் படிக்க முடியும் என மட்டக்களப்பனை பேச, மட்டக்களப்பான் தான் சொன்னதை ஏ்ன் புத்தளத்தானுக்கு சொன்னீர்கள் என்று யாழ்பானிகளை பேச ஒரே புடுங்குபாடு கடைசியில் ஒரே அறையில் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வேலை செய்து இன்ப துண்பங்களில் கலந்துகொன்ண்டவர்களில், ஒருவனது குடல் கத்தி குத்தால் வெளியில் வந்து விட்டது குத்தியவன் வாழ்வு சிறையில். :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அவ‌ள‌து வீட்டிலும் நான் யாழ்ப்பாண‌த்தில் எந்த‌ ஊர்க்கார‌ன் என்றும், அந்த‌ ஊரில் எந்த‌த் திசையில் எங்க‌ள் வீடு இருந்த‌தென்ப‌தையும் 'விசாரித்து' ஏற்க‌ன‌வே அறிந்து வைத்திருந்த‌தால், அவ‌ர்க‌ளுக்கு அவ‌ள் என்னோடு காரில் வ‌ருவ‌தில் பெரிய‌ பிர‌ச்சினையிருக்க‌வில்லை. அத்தோடு சிறில‌சிறி ஆதி ரம்பாவின் தீவிர‌ ப‌க்த‌னாக‌ நான் இருப்ப‌தும், ஒரு கும‌ர்ப்பெட்டையை என்னோடு த‌னியே விடுவ‌தில் வ‌ர‌க்கூடிய‌ த‌டையை உடைத்திருக்க‌வேண்டும்.

புலம் பெயர் பெடியள் கொடுத்து வைச்சவங்கள்

  • தொடங்கியவர்

மதிப்பிற்குரிய ஆண்களே இதைப் படிப்பீராக - யமுனா ராகவன்

மூலம்: http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_22.html

நான் பல வேலைகளில் யோசித்தது உண்டு, என்ன தான் செய்யவேண்டும் நான், மனம் புழுங்கி, வருந்தி சொல்லவரும் விஷயங்கள் உங்கள் காதில் விழ, அங்கீகரிக்கப்பட, மாற்றம் வரும்படியான மனநிலை உருவாக என்று. இதுவரை பிடிப்படவில்லை, இனியாவது பிடிபடுமா எனவும் தெரியாது எனக்கு.

என்னையோ, இல்லை என்னை போலவே தொலைந்த முகங்கள் கொண்ட பெண்களையோ நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கலாம், பார்த்திருப்பீர்கள், பார்க்க நேரலாம். கடக்கும் நிமிடங்களை இறுகப்பற்றி, நேற்றைகளையும் நாளைகளையும் மறந்த எங்களுக்கு இன்னும் பேர் வைக்கப்படவில்லை. எங்களை கண்டுப்பிடிப்பது அத்தனை கஷ்டமில்லை. நாங்கள் அசின்களோ, தமன்னாக்களோ, ஐஷ்வர்யா ராய்களோ நிச்சயம் இல்லை. Matrimonial column தாங்கி வரும் Tall, Fair and Pretty பெண்கள், ஒரு 85% நாங்களாக இருக்க வாய்ப்பில்லை. சுமார் அழகாய், சுமார் புத்தியோடு, சுமார் பணத்தோடு, சுமார் படிப்போடு, சுமார் வேலையோடு எங்கள் வாழ்க்கையை கடந்து, வந்த வழி திரும்பிப் பார்த்து வெதும்பி குமுற மட்டுமே தெரிந்த இந்த முதுகெலும்பில்லா கூட்டத்தில் நானும் ஒருத்தி. பேச்சு வழக்கிற்கு நாங்களை நான் என்றே வைத்துக்கொள்ளலாமா... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவோமாக!

மூலக்கடையில் நீங்கள் விட்ட சிகரெட் புகையின் ஊடே, நான் உங்களை கடந்திருப்பேன். வெண்டைக்காய், தக்காளி பார்த்து வாங்குவதில் முனைப்பாய் இருந்தப்போது தெரிந்த என் இடுப்பை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பஸ்ஸில் இடிபட்டு இடமின்றி நிற்க, என் பின்பகுதியை தேய்த்துக்கொண்டு உங்கள் உறுப்புகளின் வேட்கையை சிலநிமிடம் தீர்த்துக்கொள்ள, அறுவெறுப்பாக உணர்ந்தாலும், வீட்டில் நேற்று என்னை அடித்ததில் வலித்த கன்னத்தையும் உடைந்த தன்மானத்தையும் யோசித்து கொண்டு ஒன்றும் சொல்லாது வந்ததில், பஸ் விட்டு இறங்கி, உங்கள் நண்பர்களிடம், ``மாம்ஸ்! இன்னைக்கு பஸ்ல ஒரு Aunty செமயா company குடுத்தாடா!`` என்று பீற்றிக்கொள்ள வைத்தது நானாக இருக்கலாம். பல சமயங்களில் வெறும் மார்பகமாகவோ, பிட்டமாகவோ, இடுப்பாகவோ கூட நான் உங்களுக்கு தெரிந்திருப்பேன். ``காலைலயே என்னமோ புருஷன் செத்தாப்புல எப்புடி இருக்குது பாரு, விடியாமூஞ்சி!`` என்று வாய் விட்டோ, மனத்திற்குள்ளேயோ திட்டினாலும், ஒன்றுமே உறைக்காது காப்பி போட்டு, காலை சமையல் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுப்பவள் நானாக இருக்கலாம். அலுவலகத்தில் நேரத்திற்கு வந்து வேலையை மட்டுமே கவனித்து, பாராட்டப்பட்டால், ``இதையும் அதையும் காட்டியே வேலை முடிச்சிக்கிறாளுங்க`` என்று சொன்னதும் என்னை பற்றி இருக்கும். ஆக மொத்தம் இப்படி நீங்கள் காணும் திசை, ஊர், நாடு முழுக்க இருப்பினும், அரூபமான என்னை நீங்கள் உற்றுத்தேடித்தான் கண்டுப்பிடிக்க முடியும்.

திமிர் பிடிச்ச பேச்சு, தெனாவட்டு பார்வை, எவன் கூடவேணும்னா போகலாம், குறைந்த பட்ச ஆடைகள் போடுவது, பிறப்புறுப்பை பற்றி பேசுவது ஆகியவைதான் பெண்ணியம் என்று நீங்கள் நினைத்திருப்பீரெனில் மேற்கொண்டு படிக்கவும். ``எதற்கு இத்தனை பேர் பெண்ணியம் பற்றி பேசுதுங்க, அவர்களுக்கு தான் எத்தனை சலுகைகள், இன்னும் என்னதான் வேணும் இந்த எழவெடுத்ததுங்களுக்கு!`` என்று சொல்வீரேயானாலும் மேலே படிக்கவும்.

வேதக்காலத்தில், ஆணும் பெண்ணும் சமமாக இருந்ததாகவும், எல்லாமே கற்றுத்தெரிந்துக் கொண்டார்கள் பெண்கள் என்று பல வேதங்கள் சொல்கிறது. எப்போது இருந்து மாறியது இந்த நிலை. 500 BCக்கு மேலே, ஆரியர்களும், இஸ்லாமியர்களும் வந்ததால் குடைசாய தொடங்கியதாம் பெண்களுக்கான மரியாதை. மிதிப்பட்டு, நசுங்கி, அடுப்பங்கரை நெருப்போடு கரிபடிந்து, இரவுகளில் பேசாது புணர்ந்து, பிள்ளை பெத்துப்போடும் இயந்திரங்களாகி, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் செத்து நடைபிணங்களாக மாறிப்போனார்கள். அவர்களுக்கு எதிராக நடந்த எதுவுமே வரலாற்றில் பதியவில்லை. பதிக்கப்பட்டவைகளும் ஆண்களின் வக்கிரத்திற்கு மைல்கல்லாகி போன மேற்கூறிய விஷயங்கள் தான். படங்களில் பார்த்தோ, புத்தகங்களில் படித்தோ இருக்கலாம் நீங்கள்.

Early vedic period சமயத்தில், பெண்கள் 20 வயது மேலே தான் பெரும்பாலும் மணந்ததார்களாம், திருமணம் செய்யும் ஆணை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இருந்ததாம், ஆனால் பெண்ணினம் அதன் பின் தாங்க நேர்ந்த துரதிர்ஷ்டங்கள் பல்வேறு. 70 வயது ஆணிற்கு கூட 10, 12 வயது பெண்ணைக்கூட திருமணம் செய்ய பால விவாக உரிமை, இன்னும் sathi ( உடன்கட்டை ஏறுதல் ), jauhar ( தோற்ற நாட்டின் பெண்கள் அத்தனை பேரும் அடுத்த நாட்டிற்கு உரிமை பொருள் ஆவது.. எவன் வேண்டுமானாலும் புணரும் குப்பைத்தொட்டி ஆவார்களாம். இது இன்னமும் நடந்துக்கொண்டே தானே இருக்கிறது ), தேவதாஸிகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று நீண்டுகொண்டே போகும் பட்டியல் முழுக்க கண்ணீர், ரத்தவாடை, திரும்ப பேசமுடியாது அடங்கி போன உறுப்புகள் தான், வரலாற்றின் பக்கங்கள் முழுக்க.

``இன்னும் எத்தனை நாட்கள் தான் பேசுவீர்கள் இதையே. ஆமாம் அந்த காலத்தில் இப்படி தான் இருந்தார்கள், இறந்தார்கள். அதற்கு இப்பொது என்ன செய்வது`` என்று ஒரு வேளை உங்களுக்கு தோணலாம். தோணும். பழைய கதையை விடுவோம். இப்போது நம் சமயத்திற்கு time travel செய்யலாம். பெண்கள் படிக்கிறார்கள், ஆண்களை காட்டிலும் பெரிதாய். பெண்கள் கால்வைக்காத துறையே இல்லை. இதனை கேட்கும்போது பெருமையாக இருக்கிறது, நிஜமாகவே. ஒடுக்கப்பட்டு இருந்த நிலையில் இருந்து எழுந்து நிற்க முயலும் கம்பீரம் தாங்கிய பெண்ணினம் பற்றி யோசிக்கும் போது. ஆனால் இத்தனைக்கு நடுவிலும், சமீபத்தில் பார்த்த ஒரு statistics சொல்வது உங்களோடு பகிரவா?

ஐக்கிய நாடுகள் சபை (UN) சொல்கிறது, ஒரு நிமிடத்திற்குள் 3 பெண்களுக்கு அநீதி நிகழ்கிறதாம், 7 நிமிடத்திற்குள் ஒரு பெண் கணவனாலோ அவன் குடும்பத்தினராலோ கொடுமைப் படுத்தப்படுகிறாளாம், 30 நிமிடத்திற்குள் ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் படுகிறாளாம். இந்த எண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்கிறதா.. சர்வ நிச்சயமாக ஒன்றும் சொல்லியிருக்காது. இப்படி வைத்துக்கொள்ளுங்களேன். இந்த கடிதம் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்கள் அறையின் உள்ளேயோ, நீங்கள் இருக்கும் அலுவலக அறையின் தரையிலோ, இந்த பெண்களை உங்கள் அருகிலோ, எதிரிலோ, நிற்கவோ அமரவோ கிடத்தியோ பாருங்கள். அரைமணி நேரத்தில் உங்களை சுற்றி 90 பெண்கள் அழுதுக் கொண்டிருக்கலாம். ஒரு நான்கு பெண்கள் அடிவாங்கி வெவ்வேறு உடல் மனக்காயத்தோடு அமர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு பெண் நிச்சயம் துணிகிழிந்து, ரத்தம் ஒழுக, ஒருவனாலோ அல்லது பலராலோ பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவோடோ, இன்றியோ கிடக்கலாம்.

அட போகட்டும் ஐய்யா... ஒரு மணிநேரத்தில் குவியும் உடல்களை கணக்கு போட உங்களுக்கெல்லாம் நேரம் இல்லை. உங்க நேரம் IPL, நித்தியானந்தா, Airtel, மத்திய சாப்பாடு, Hero Honda, மட்ட வெயில், car, ரோட்டின் traffic, சிகரெட், காலை முதல் மாலை வரை உங்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் வேலை, உங்களை தாண்டி போகும் Figure, sms இன்னும் இது போல extra விஷயங்களை பார்க்கவே நேரம் போதாது. இதில் நீங்கள் தாண்டி போகும் 2 பெண்களில் நிச்சயம் ஒருவர் அவர் வீட்டிற்குள்ளேயே எதாவது ஒரு விதத்தில் domestic violence அனுபவிப்பவர் மற்றும் திருமணமான மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கட்டாயம் இக்கொடுமை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தன் வாழ்க்கையில் எல்லா பெண்களும் ஒரு முறையேனும் இப்படி கட்டாயம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என்னும் விஷயம், உங்களுக்கு தேவை இல்லாதது தான்.

பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எப்படி அடக்க ஒடுக்கமாக நடக்கவேண்டும் என்று நம் 25 வயது முதல் 60 வயது வரை உள்ள கதாநாயகர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் கேட்டு கைத்தட்டவும், ``சரியா சொன்னாருடா`` என்று சீட்டி அடிப்பது தானே உங்களுக்கு பிடிக்கும். நான் புடவையிலோ, சல்வாரிலோ, ஜீன்ஸிலோ, நைட்டியிலோ எந்த உடையில் இருந்தாலும் என்னை சந்தித்த 90% ஆண்கள் பேசும்போதோ, பேச்சின் ஊடேயோ என் மார்பையோ உடலையோ பார்த்தார்கள், மேய்ந்தார்கள். மீதமுள்ளவர்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை, அதனால் அவர்களை இதில் இருந்து விட்டுவிடுவோம். ஆக நான் என்ன உடுத்தினாலும் பார்க்க தானே போகிறீர்கள். நான் ஒன்றும் பேச்சின் ஊடே உங்கள் கால்சராயின் zipper, பார்த்துக்கொண்டு பேசவில்லையே. நீங்கள் மட்டும் ஏன் இப்படி?

என் உடை என்னை, என்னுடைய ஒழுக்கத்தை பறைசாற்றும் என்பது தானே உங்கள் நியாயம். நான் அணியும் உடுப்புகளின் வழியே மறைந்தும் மறையாது தெரியும் என்னுடைய உடல் தானே உங்கள் காமத்தை தூண்டுகிறதாய் உங்கள் பக்கத்து தர்க்கம். என்னுடைய நடை உடை பாவனை பேச்சுதானே உங்களுக்கு சொல்கிறது நான் பத்தினியா, பரத்தையா என்று. நீங்களே சொல்லுங்கள், உங்கள் உலகில் யார் நல்ல பெண்கள்? யார் ஒரு மாதிரி பெண்கள்? உங்கள் தாய் உங்கள் தகப்பனை பார்த்ததில் ஒன்றும் நீங்கள் பிறக்கவில்லையே, ஆதிகால செயல் செய்து தானே நீங்கள் உருவாகியிருப்பீர்கள். உங்கள் தாயாரிடம் இருக்கும் மார்பகமோ, உங்கள் தங்கைகளின் இடுப்போ, உங்கள் அக்காக்களின் தொடையோ, உங்கள் அத்தையின் பிட்டமோ, உங்கள் சித்தியின் உதடோ, உங்களுக்கு உடல் பசியை தூண்டி விட்டிருக்கிறதா, அல்லது உங்கள் உறுப்புகளுக்கு இரத்தவோட்டம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கிறதா, அல்லது நீங்கள் உங்கள் இருட்டுகளின் தனிமையில் மேலே சொன்ன எதையாவது யோசித்துக்கொண்டே சுய இன்பம் அடைந்திருக்கிறீர்களா?...

சரி விடுங்க. விஷயத்திற்கு திரும்ப வருவோம். உங்களில் எத்தனை பேருக்கு Domestic violence definition மற்றும் அதன் வகைகள் தெரியும். உங்களின் அலுவலின் மத்தியில் இதை பற்றி தெரிந்திருந்தால் சந்தோஷம், ஒன்றும் செய்யாது போனாலும், அதாவது தெரிந்திருக்கிறதே என்று. தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். Domestic violence ஏகப்பட்ட கிளைகளின் கீழே இருப்பினும், நடப்பிற்காக 5 முக்கிய வகையாக்கி இருக்கிறார்கள். Physical and sexual abuse, Emotional or Psychological abuse, Verbal abuse, Financial abuse, Neglect இது தான் அவை என்கிறார்கள்.

உடலால் அத்துமீறல்... உங்கள் வடிகாலுக்காக... உங்களின் சுயவிருப்பு வெறுப்புகள், கோபங்கள், எரிச்சல்கள், கையாலாகாதத்தனங்கள் ஒட்டுமொத்தமாக வந்து கழித்துவிட்டு போகும் கழிவறைதான் நான். உங்கள் செயலிற்கு நீங்கள் கொடுக்கும் காரணம் என்னவாக இருந்தாலும், என் மேல் ஒரு விரல் கூட என் சம்மதமின்றி வைக்க,உங்களுக்கு உரிமை இல்லை, அது தெரியுமா உங்களுக்கு? பேச்சின் உச்சக்கட்டத்தில் என் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் தீர்ந்து போனாலோ, அல்லது இல்லாது போனாலோ என்னை அடக்க உங்கள் விரல்களுக்கு தோதாக இருக்கும் என் கன்னமும், உங்கள் கைக்குள் சிக்கும் என் தலைமயிரும், முதுகில் விழுந்த இடிகளும், உங்கள் கால்கள் உதைத்ததில் ஒரு ஓரமாக சென்று சுருண்ட என் உடலும், அங்கங்கே கன்னிப்போய் வீங்கியோ, நடக்கமுடியாது நடந்ததோ, உதடு கிழிந்து வாயில் வைக்கும் உணவுப்பொருள் கிளப்பும் எரிச்சலும், நீங்கள் அடிக்கையில் உங்கள் காலை கட்டிக்கொண்டு அழுத என் பிள்ளைகளோ இன்னும் சில நாட்களில் மறக்கக்கூடும். ``குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும், adjust பண்ணிக்கிட்டு போம்மா. பாரு அவன் இன்னும் சாப்பிடாம இருக்கான், போய் சாப்பாடு போடு என்றும், அடிக்கிற பரதேசியின் கைதான் அணைக்கும்`` என்று சொல்வதும் என்னைப் போலவே ஒரு பெண்ணாக இருக்கலாம். கனன்று எரிந்து நீர்த்து அடங்கிப்போகும் என் கோபங்கள், நாளை நீங்கள் வந்து சொல்லும்,`` ஏதோ யோசனைல அடிச்சிட்டேன்`` என்பதில். நீங்கள் மன்னிப்பு என்ற ஏதோ கேட்டுவிட்டதால் மகாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். உங்கள் மனதில் நடந்த இந்த சம்பவத்தின் தழும்புகள் நிற்காது, ஏனென்றால் இதை பற்றி சொன்ன ஒற்றை வார்த்தையில் கால் கழுவியது போல உங்கள் அழுக்குகள் அடித்துக்கொண்டு போய்விட்டது. எனக்கும் நினைவிருக்காது, நாளை வேறு ஒரு காரணத்திற்காக அடித்து வலிக்கும் வரை. நான் தான் அப்போதே சொன்னேனே, எனக்கு இன்னும் பெயர்வைக்கவில்லை என்று.

இது ஒருபுறம் இருக்க, உங்களின் உடல் வேட்கைக்கு இரையாகும் என் உடல் அடிக்கடி, எனக்கு பிடித்தோ, பிடிக்காமலோ. எனக்கு உச்சம் வந்ததா வரவில்லையா என்று நீங்கள் எண்ணும் அளவிற்கு இன்னும் எனக்கு படுக்கையில் உரிமை இல்லை. ``பாதிநேரம் எப்போது முடித்து என் மேல் இருந்து எழுவாய், நான் தூங்க!`` என்று தான் தோணும். இதில் உனக்கு நான் எனக்கு பிடித்ததை செய்யச்சொல்லி கேட்டாலோ, நான் இங்கு உடல் வேட்கையால் உந்தப்பட்டவளாக, ஒரு ஒழுக்கம் நிறைந்த குடும்பப்பெண் அல்லாது scarlet woman ஆகி போவேன். எதுவும் சொல்லாமல் இருந்தால் ``இப்ப எல்லாம் இதை செய்றியா, அதை செய்றியான்னு கேட்கிறது இல்லையே! வேற எவனாவது இருக்கானாடி!`` என்று சிரித்துக்கொண்டே என்மேல் இயங்கும் போது, நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாய் நான் என்ன யோசிக்கவேண்டும் என்று நீங்களே சொல்லுங்களேன்.

Verbal abuse and Psychological abuse and Emotional abuse... They go hand in hand. ``என்னடி எதிர்த்து எதிர்த்து பேசுற?`` என்றோ `` உங்க குடும்பத்தில எவனக்கும் மானரோஷமே இல்லை. என் தலை எழுத்து இப்படி ஒரு கேடுகெட்ட குடும்பத்தில் பொண்ணெடுத்திருக்கேன்`` என்றோ அடைமொழியாக சேரும் நாய், பேய், சனியன் பிடிச்சதே, போன்றவைகளோ, தவறு என்று ஒரு நாளும் உங்களுக்கு தோன்றியிருக்காது. வீட்டின் நான்கு சுவத்துக்குள் நடக்கிற விஷயத்தை யாரோடும் பேசி குடும்பமானத்தை நடுதெருவிற்கு கொண்டு வரக்கூடாது என்பது உங்கள் புரட்டுகள் வெளியேறாமல் இருக்க நீங்களே சொல்லிக்கொள்ளும் சட்டம். ’’வீட்டை விட்டு போடி மயிரு! எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும். உன்னைய எந்த நாயி சீந்துதுன்னு பார்ப்போம்`` என்று காறிதுப்புவதை வாங்கி கொள்வது தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. தனித்து சமூகத்தில் நிற்பின், இது போலவே மேயும் மிருகங்கள் பலவற்றை தனித்து சந்திக்க எனக்கு தெம்பு இல்லாது போயிருக்கலாம்.

Financial abuse... உங்கள் வீட்டு தேவைக்கோ, உங்கள் படிப்பு செலவிற்கோ, உங்கள் வாழ்கை நிலையை உயர்த்திக்கொள்ளவோ, ஈடுக்கட்டவோ, உங்கள் தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடன் அடைக்கவோ, உங்களால் வாங்க இயலாது நிற்கும் கனவான நிலம், வீடு, கார், போன்றவைகளை சட்டென நீங்கள் வரதட்சணையாய் சம்பாதித்ததில் உடைந்து உட்கார்ந்த என் குடும்பம் இன்னும் எழவே இல்லை. அது எப்படி இத்தனை நாள் உங்கள் அப்பா போலவே கஷ்டப்பட்டு, எனக்கு படிப்பிற்கு வழி செய்து, உண்ண உடுத்த உடைக்கொடுத்து, தங்க நிழல் கொடுத்து, இப்போது என்னை திருமணமும் செய்து கொடுத்த வீட்டாருக்கு, மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க கூட உங்களோடு நான் தினம் வழக்காட வேண்டியிருக்கிறது. நான் மாதம் பூராவும் சம்பாத்தித்த காசு எப்படி செலவழிக்கவேண்டும் என்று நீங்கள் போட்டு கொடுக்கும் மாதாந்திர பட்ஜெட்டில், எனக்கு தேவையானவற்றை உங்களிடம் ஒருமுறைக்கு 10 முறை சொன்னால் தான், ``சே.. போய் தொலை... அடுத்த மாசம் இப்படி எல்லாம் என்னை கேட்காம செலவு வைக்காதே!`` என்று சொல்லும் உங்களை நான் தினம் தினம் சகித்து, மேலும் உங்கள் வீட்டாரின் மீதும் பாசம் பரிவு பொழிந்து, என் தாய் தந்தையரை புறக்கணித்து, என்னுடைய சுயத்தை சுட்டுக்கொண்டே என் நாட்களை போக்கவேண்டும். உங்களை போலவே வேலைக்கு சென்று வரினும், என் அன்றாடைய அல்லல்களை விட என் சம்பளக்கவர் முழுக்க வாங்குவதில் நீங்கள் காட்டும் அக்கறைதான் அதிகம். உங்களின் வேலை நேரம் போலவே இருப்பினும், வீட்டிற்கு வந்ததும் அடுக்களையில் என் வேலை தொடங்கும். உங்கள் சாயந்திரங்கள் சுலபமானது. ``அப்படி என்னதான் புடுங்கினியோ எப்ப பாரு அசதியா இருக்குன்னு அலுத்துக்கறே`` என்று சலித்துக்கொள்ளும் உங்களை நான் பொறுத்துக்கொள்வேன். என் முதுகெலும்பில் பாதி ஒடித்து உங்களுக்கும், மீதியை இந்த சமூகத்திற்கும் கொடுத்துவிட்ட கர்ணபரம்பரை நான்.

இப்போது புதிதாக கேட்க தொடங்கி இருக்கும் வார்த்தை ALPHA FEMALE... குடும்ப தலைவன் Alpha male என்ற நிலை மாறிப்போய் கொண்டே இருக்கிறது. இதுவரை மேலே சொன்ன எல்லாமே ஏதோ படிக்காத அப்பிராணிகளுக்கு மட்டும் நடப்பதாய் கொள்ளவேண்டாம். படித்த வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களை பற்றி தான் சொல்கிறேன். இதில் தொழிற்கல்வி படித்தவர்களும் உண்டு, மருத்துவம், எஞ்சினியரிங் படித்த பெண்களும் இது போன்ற வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னப் படுவதாய் கேள்வி. பெண் தலையெடுத்து வேலைக்கு சென்று சம்பாதிக்க எல்லா பொறுப்புகளையும் அவள் தலையில் கட்டிவிட்டு, ஹாயாக சுற்றி வரும் ஆண்கள் பெருகி வருவதாய் சொல்கிறார்கள். அது புதிதாய் மாறிவரும் கலாச்சாரத்தின் படிக்கட்டாய் இருக்கிறதாம். இதில் என்ன கொடுமைகள் நிகழுமோ.

இப்படி ஒரு ஆசையோ பாசமோ இல்லாத தாம்பத்தியத்தில் சிக்கி, இப்படி்யே உழன்று எங்கேயாவது கொஞ்சம் பாசம் கிடைக்காதா என்று vulnerable state of mind உடன் இருக்கும் நான் தான் நீங்கள் தெருவிலும், பஸ்ஸிலும், ஆட்டோவிலும், கடையிலும், பார்க்கும் அரூபமான 85%. நான் என் வீட்டிலேயும் சிக்கி, வேலையிலேயும் கஷ்டப்பட்டு, புருஷனால் exploit செய்யப்பட்டு, ignore செய்யப்பட்டு, மிதியடி ஆகிப்போகிறேன். உடல் தேவைகள், companionship, அன்பு, இப்படி கடையில் கிடைக்காதவைகளுக்காக ஏங்கியவள் நான். என் கணவன் என்னை தொட்டு பல மாதங்கள் ஆனது என்றும் நான் புலம்பலாம். இல்லை என்னை தினம் தொடுகிறான் மூர்க்கமாய் என்றும் சொல்லலாம்.

ஒரு balance இல்லாத வாழ்க்கையில் திரியும் என்னை வெகு சுலபமாய் சில பாசவார்த்தைகள் கொண்டு மயக்கமுடியும். கணவனிடம் கிடைக்காத ஆசையும், அங்கீகாரமும், கொடுக்கும் கணவன் அல்லாத உங்களுக்கு என் உடலையும் தருவேனாயிருக்கும். என் நம்பிக்கையையும் உடலையும் சேர்த்து, நீங்கள் எனக்கு தெரிந்தோ தெரியாமல் ஒளித்து எடுக்கும் படங்களும், வீடியோக்களும் உங்களுக்கும் உங்களை போலவே உள்ளவர்களுக்கும் வெகு கிறக்கமான விஷயங்கள். அப்படி உங்கள் படங்களில் மனதில் ஒட்டியது முதல் பெருத்த மார்பகங்கள், குடுவை முதல் மடிப்பு விழும் இடுப்புகள், அழகான கனத்த பிட்டம், வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு சிரிப்புகள் ஆகியவற்றை தாங்கிவரும் நான் நிஜத்தில் வெகுவாய் மனம் நொந்து நொடிந்து போன ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு மகள், ஒரு குடும்பதலைவி.

ஆக மொத்தம் உங்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் என்னால் ஏதோ ஒரு ஆதாயம் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய பாதுகாப்பு, தேவைகள், விருப்பங்கள், பிடிக்காதவைகள் அனைத்தும் என்னோடேயே அடங்கி போகும். அதை பற்றி யோசிக்கவோ பேசவோ செயல்படவோ உங்களுக்கு நேரம் இல்லை தான். ஒரு கட்டத்திற்கு மேல் உங்கள் வன்மத்தை நியாயம் என்று சொல்லி எனக்குள் நானே அடங்குவேன். மனைவி என்றால் என் உரிமைகளை, என் சொந்தங்களை, என் நட்புக்களை மறக்கவேண்டும். ஆமாம் என்னை அடிப்பது நியாயம், என் பணத்தை பிடுங்குவது நியாயம், என்னை வார்த்தையால் அவமானப்படுத்தி குத்துவது நியாயம், என் உடல் தேவைகளை நிராகரிப்பது நியாயம் இப்படி அடுக்கிக்கொண்டே போகிறேன் என் கல்லறைவரை.

இதுவரை மேற்கூறிய எல்லாமும் உங்களால் வெகு சுலபமாய் ஒதுக்கித்தள்ளப்படலாம். ஏனென்றால் நீங்கள் சொல்லும் பதில், எங்க வீட்டு பொண்ணுங்க இந்த மாதிரி இல்லை. எங்க வீட்டுல நாங்க இது மாதிரி எல்லாம் வளரல. நாங்க நல்ல குடும்பம். இது தானே உங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. நம் வீடு சுத்தமாக இருப்பின் போதும், பக்கத்து வீட்டு சுவற்றில் எவன் சிறுநீர் கழித்தால் நமக்கென்ன.

இந்த அழகிய உலகில், வாழ்க்கையை நீங்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் பார்த்து ரசித்து, அலசி ஆராய்ந்து அனுபவியுங்கள். நான் அதற்கு தடையாக நின்றதே இல்லை. நான் உங்கள் எதிரி அல்ல. உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் எத்தனை அழகாக ஏற்கிறீர்களோ அத்தனைக்கு சுலபமாய் என்னை உங்களாலும் உங்களை போன்ற மற்றவர்கள் செதுக்கும் எல்லைக்குள், எந்த ஒரு குறுகுறுப்பும் இன்றி உங்களால் எதிர்பார்க்கப்படுவது போல வாழவேண்டும் என்று சொல்கிறீர்கள், அதை தான் ஏற்க முடியவில்லை. சுயம் தொலைக்கும் எங்களுக்கு வாழ்க்கை தினம் சமையலில் இடும் உப்பு புளி மிளகாய் தான்.

எப்படி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் என் சுதந்திரத்தை முழுக்க எடுத்துக்கொண்டு, உங்களால் கட்டப்பட்ட எல்லைக்குள், சுற்றி வரும் தூரம் மட்டும் நடக்க தோதாய் கழுத்தில் கயிறும் கட்டி, ``என் மனைவிக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு`` என்று வாய் கூசாது சொல்கிறீர். உங்களின் ``எல்லாவிதத்திற்கு`` எது எல்லை கோடு.

நான் உங்களிடம் இவற்றை எல்லாம் பற்றி சொல்லியது, தனித்து இயங்க இல்லை. என் உலகம் இயல்பாய் நடக்க நீங்கள் வேண்டும். பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று. எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும்.

யமுனா ராகவன்

இவர் எழுதும் தொடர்கதை “அற்றவைகளால் நிரம்பியவள்” காட்சியில் பிரசுரமாகி வருகிறது. அதனைக் காண இங்கு சொடுக்கவும்.

http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக எழுதியுள்ளார் யமுனா ராகவன் அவருக்கு எனது பாராட்டுகள்...அதை துணிந்து இணைத்த சுதனுக்கு எனது சார்பாக ஓர் பச்சை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.