Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல் – 01

[ புதன்கிழமை, 05 சனவரி 2011, 00:03 GMT ] [ புதினப் பணிமனை ]

'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம்

இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டம் துளிர்விட்டது தொடக்கம் இன்றுவரை மிக முக்கியமான, நேரடியான அனைத்துலக தலையீடுகளை [international Intervention] குறைந்தது மூன்று சக்திகள் மேற்கொண்டிருக்கின்றன.

01. வேவ்வேறு காலகட்டங்களிலான இந்தியாவின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீடு.

02. நோர்வேயை மத்தியஸ்தராக முதன்மைப்படுத்தி பின்னிருந்து செயற்பட்ட மேற்குலகின் வகிபாகம்.

03. நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இடம்பெறும் இலங்கைத் தீவுடன் தொடர்புபட்ட பூகோள அரசியல் நகர்வுகள்.

இதில், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் செயற்பாடுகள் அதிக கவனத்திற்குரியனவாகக் காணப்படுகின்றன.

மேற்கூறிய மூன்று நிகழ்வுகளும், வெவ்வேறு காலப்பகுதிகளில், வெவ்வேறு தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், இவையனைத்திற்கும் இடையில் ஒரு பொதுவான அம்சம் காணப்படுகிறது.

அது யாதெனில், குறித்த நகர்வுகள் ஊடாக பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடத்தில் ஒரு மாயைநிலை தோற்றுவிக்கப்பட்டது. அல்லது, ஈழத்தமிழ்மக்கள் ஒரு மாயைக்குள் அகப்பட்டு அதற்கமைவாக சிந்திக்கவும், வாழவும் தள்ளப்பட்டார்கள்.

மாயைகளை உருவாக்குவதனூடாக ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைப்போராட்டத்தினை அதன் பிரதான இலக்கிலிருந்து திசைதிருப்புவது மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருகிறது.

இது, போரட்டத்தை முன்னெடுப்பதற்கான முட்டுக்கட்டையாகவும், உத்வேகத்தை சிதைப்பதற்கான ஒரு கருவியாகவும் கையாளப்பட்டு வருகிறது.

மாயைநிலைகள், தமிழ்மக்கள் யதார்த்தரீதியாக சிந்திப்பதற்கும், நடைமுறை ரீதியாக செயற்படுவதற்கும் தடைக்கற்களாக விளங்கின. அதுவே, முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னரும் தொடர்கிறது.

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, 'ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல்' என்ற இப்பத்தி கடந்த காலத்தின் மிக முக்கியமான கட்டுடைப்புக்கு உட்படுத்த வேண்டிய மாயைகளையும், சமகால மெய்நிலையையும் வெளிப்படுத்த முனைகிறது.

இந்தியா 1971ல் வங்காள தேசத்தின் விடுதலைக்கு உதவியது போன்று ஈழத்தமிழர்களினதும் சுதந்திரத்திற்கு உதவும் என்று கருத்து 1970களின் ஆரம்பத்திலே தமிழ்மக்களிடம் காணப்பட்டது. இதுவும், தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் வீச்சுபெறுவதற்கான காரணங்களில் ஒன்று.

பின்னர், 1983ல் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியாவின் பல்வேறு வழிகளிலான தலையீடு, இந்தியா ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையை மென்மேலும் அதிகரித்தது.

அந்த நம்பிக்கைகளை வளர்க்கக் கூடிய வகையிலேயே, இந்தியாவின் வெளிப்படையான அணுகுமுறைகள் காணப்பட்டன. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1987ல் இந்தியா இலங்கைத் தீவில் கால்பதித்த போதும் கணிசமான தமிழ்மக்கள் மாற்றமடையாத நம்பிக்கையுடனேயே காத்திருந்தனர்.

காலப்போக்கில், அவை நம்பிக்கைகள் அல்ல, இரகசிய நிகழ்ச்சி நிரல்களுடன் இராஜதந்திரமும், அதற்குள் விழுந்த தமிழ்த் தரப்பினரும் கட்டியெழுப்பிய மாயைகள் என்பது மெதுமெதுவாகத் தெரியவந்தது.

இதுபோன்றதொரு நிலையே, 2002ல் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காணப்பட்டது.

போர்நிறுத்தம் தமிழ் மக்களுக்கு சார்பானதென்றும், நோர்வே தமிழ்மக்களுடைய சுதந்திரத்திற்கு பேருதவி செய்யப்போகிறது என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் பெருமளவில் கட்யெழுப்பப்பட்டன. இதில், சிங்கள அடிப்படைவாதக் கட்சிகளின் பங்கும் கணிசமானது.

தாம் மீளமுடியாத பொறிக்கு சிக்குண்டுள்ளோம் என்பதை புரிந்து கொண்டவர்கள் கூட ஆக்கபூர்வமாக எதனையும் செய்ய முடியாதவர்களாகவே காணப்பட்டனர். தமிழ் மக்களோ, மீண்டும் கனவுக்கும் மாயைக்கும் மீண்டும் பலியானார்கள். விளைவு, பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்டார்கள் மற்றும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டார்கள்.

இருப்பினும், இப்போதும் நாம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிலும் பார்க்க, மாயைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனுமே காத்திருக்கிறோம்.

பூகோள அரசியல்போக்கில் மிக முக்கியமான விடயமாக இராஜந்திர நகர்வுகள் காணப்படுகிறன.

இராஜதந்திரம் குறித்த நாடுகளின் தேசிய நலனைப் மையப்படுத்தியே கையாளப்படும். அதற்கு சார்பான காரணிகளை இராஜந்திரம் மிககெட்டித்தனமான அடையாளம் கண்டு தேடிப்பெற்றுக்கொள்ளும். தேடிப்பெற்றுக்கொண்ட காரணிகளை தமது அடைவிலக்குகளுக்கான கருவிகளாகவும், காரணிகளாகவும் மிகச்சாதுரியமாக இராஜதந்திரம் பயன்படுத்தும்.

அரசியலின் ஆணிவேர்களில் ஒன்றாக இராஜதந்திரம் திகழ்கிறது.

சமகால அனைத்துலக அரசியல் என்பது, பொருளாதார நலனை அடிப்படையாக வைத்தே நகர்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லையென்பது எமது மூதாதையர்களால் எமக்கு சொல்லப்பட்ட கூற்று. இன்றைய அனைத்துலக அரசியல் அதற்கு நல்ல உதாரணம்.

இதனை நடைமுறையோடு இணைத்துப் பார்ப்பது காலத்திற்கு பொருத்தமாவதுடன், தமிழ் சமூகத்துக்கு தேவையாகவுள்ள கருத்தாடல் களத்துக்கு வழியமைத்து மாயைகளை களைய வழியமைக்க வேண்டும் என்பது இப்பத்தியின் நோக்கு.

ஈழப்போர் நான்கு சிறீலங்காவிற்கு சாதகமான முறையில் நிறைவடைவதற்கு பல நாடுகள் பல்வேறு வழிவகைகளில் உதவி புரிந்தன என்பது மெல்ல மெல்ல வெள்ளிடை மலையாகின்றது.

அதேவேளை, சிறீலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களும் தொடர்ச்சியாக இறுகி வருகின்றன. இதற்கான காரணங்களாக இலங்கைத் தீவில் அதிகரித்தவரும் சீனாவின் மேலாண்மையே காரணம் என்று பரவாலாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் மேலாண்மையை இந்தியாவும், அமெரிக்காவும் விரும்பவில்லையென்றும், ஆதலாலேயே சிறீலங்காவிற்கு எதிரான அனைத்துலக நெருக்கடிகள் அதிகரிக்கின்றன என்று வாதத்திற்கு வலுச் சேர்க்கும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தீவில் அதிகரித்தவரும் சீனாவின் மேலாண்மை என்பது பலகாரணிகளில் ஒன்றாக இருக்கலாமே தவிர, அது ஒரு பிரதான காரணியாக இன்றுவரை வளர்ச்சியடைவில்லை என்பதே நிகழ்கால மெய்நிலை.

சீனாவுடன், அமெரிக்காவும் இந்தியாவும் மிக இறுக்கமான பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. தமது மண்ணில் சீனா ஆழமாக காலூன்றுவதற்கு தாமே வழியமைத்துக் கொடுக்கும் அமெரிக்காவும் இந்தியாவும், சீனா இலங்கைத் தீவில் காலுன்றுவதை தமக்கான பெரும் அச்சுறுத்தால கணிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு.

சீனா மிகப்பெரும் சக்தியாக வளந்து வருகிறது என்பதுவும், இது ஏனைய சக்திமிக்க தரப்புகளுக்கு நல்ல செய்தியில்லை என்பதுவும் உண்மை. ஆனால், அதன் காரணமாக எந்தக் கட்டத்திலும் சீனாவுடன் ஒரு போருக்கோ அல்லது ஆழமான முரண்பாடுகளை உருவாக்கும் நிலைக்கோ அமெரிக்காவே, இந்தியாவோ வித்திடப்போவதில்லை.

கடந்த காலங்களைவிட, அண்மைய ஆண்டுகளிலேயே சீனாவுடனான இருதரப்பு வர்த்தக உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், மும்முரமான வாணிபங்களிலும் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுவருகின்றன.அரசியலிலும் பார்க்க, பொருளாதார நலன்களே அனைத்துலக உறவுகளை வடிவமைக்கின்றன.

அவற்றிற்கான உதாரணமாக, இந்தியா உள்விவகார அமைச்சு தகவல்களின் படி, 2006-2007 வரை இந்தியாவில் 900 ஆக காணப்பட்ட சீனா தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2010 ஜீனில் 7000 தை தாண்டிவிட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு, விமான மற்றும் துறைமுகப் போக்குவரத்து தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கியமான துறைகளிலுமே சீனாவின் தொழிலாளர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மின்வலு, மின்சக்தி எரிபொருள், தொலைத்தொடர்பு உட்பட்ட முக்கியமான துறைகளும் இதற்குள் உள்ளடக்கம்.

2006ல் 16 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம், 2010ன் இறுதிக் காலப்பகுதியில், 42 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிவிட்டது. இதில், 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதியையும், 11.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதியையும் சீனாவுடன் இந்தியா மேற்கொள்கிறது.

பொருளாதார ஒத்துழைப்பின் நன்மைகருதி, அதன் தாக்கம் உணர்ந்து, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் சுமார் 11000 சீனதுருப்பினர் நிலைகொண்டுள்ளனர் என்ற மிகுந்நத சர்ச்சைக்குரிய செய்தியை சீனாவின் வெளிவிவகாரத்துறை பேச்சாளர் ஜியாங் யூ மறுத்துள்ளார்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள் திரிவுபடுத்தி வெளியிடும் கருத்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை இந்தியத் தரப்பினரும் மறுக்கவில்லை. மாறாக, சுயாதீனமான முறையில் அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளன.

இவையனைத்தையும் விஞ்சுமாற் போலவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக மற்றும் வாணிப உறவுகள் வளர்ச்சியடைந்து செல்கின்றன.

இவையனைத்தும் சில சிறு உதாரணங்கள் மட்டுமே.

ஆகவே, இலங்கைத் தீவில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாண்மை காரணமாக ஏனைய சர்வதேச சக்திகள் தமிழ்மக்களுக்கு ஆதரவாக மாறும் அல்லது செயற்படும் என்று மீண்டும் ஒரு மாயைக்குள் விழாமல், காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ற வகையில், பூகோள அரசியலின் போக்குக்கு அமைவாக, நீண்டகாலத்திற்கு அமைவான திட்டங்களைத் தீட்டி, அதற்கு வடிவம்கொடுத்து எமக்கான உரிமையையும், இறைமையையும் மீளப் பெற்றுக் கொள்ளவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ்மக்கள் ஈடுபடுவதே இன்றைய காலத்தின் தேவையும், கட்டாயமும் ஆகும்.

http://www.puthinappalakai.org/view.php?20110105102845

"ஆகவே, இலங்கைத் தீவில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாண்மை காரணமாக ஏனைய சர்வதேச சக்திகள் தமிழ்மக்களுக்கு ஆதரவாக மாறும் அல்லது செயற்படும் என்று மீண்டும் ஒரு மாயைக்குள் விழாமல், காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ற வகையில், பூகோள அரசியலின் போக்குக்கு அமைவாக, நீண்டகாலத்திற்கு அமைவான திட்டங்களைத் தீட்டி, அதற்கு வடிவம்கொடுத்து எமக்கான உரிமையையும், இறைமையையும் மீளப் பெற்றுக் கொள்ளவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ்மக்கள் ஈடுபடுவதே இன்றைய காலத்தின் தேவையும், கட்டாயமும் ஆகும்."

நாடு கடந்த தமிழீழ அரசு, முதல் இருந்து உலகத்தமிழர் பேரவை வரை இன்றைய தமிழர் அமைப்புக்கள் இந்த பூகோள அரசியலின் போக்குக்கு அமைவாக, நீண்டகாலத்திற்கு அமைவான திட்டங்களைத் தீட்டி, அதற்கு வடிவம்கொடுத்து எமக்கான உரிமையையும், இறைமையையும் மீளப் பெற்றுக் கொள்ளவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றார்கள்.

மாயை என்னும் பேயை எவ்வாறு அகற்றுவது என்பது பற்றி கூடுதலாக தமிழீழ ஆர்வலர் நிர்மானுசன் பாலசுந்தரம் அவர்கள் சொல்லி ஆராய்ந்திருந்தால் அதிகளவு பயனுள்ளதாக இருந்திருக்கும் இல்லை மேற்கொண்டு ஆராய்ந்து எழுதினால் அதை

இணைத்துவிடவும்.

தென் சூடானின் இன படுகொலை - எண்ணெய்வளம் சீனாவை மீறி ( சீனா சூடானின் ஒரு நெருங்கிய நண்பர், இரண்டு மில்லியன் மக்கள் படுகொலைக்கு தனது மசகு எண்ணெய் தேவையை ஆயுதம் கொடுத்து பூர்த்தி செய்தது) தனி நாடான வண்ணம் உள்ளது. சூடான் அதிபர் ஒரு போர்க்குற்றவாளி. எவ்வாறான ஊடாக தென் சூடான் மக்கள் விடுதலை பெறுகின்றனர் என்பது ஆராயப்படல் வேண்டும்.

மேலும் எவ்வாறு கொசாவா, கிழக்கு திமோர் என்பன தனி நாடாகின, இவற்றில் இருந்து நாம் என்ன கற்க முடியும் என்பதும் ஆராயப்படல் வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசு இந்த பெயரைகேட்டால முன்பு எனக்கு அலர்ஜி.

இப்போது அவர்களின் பெரும் விசுவாசியாகிவிட்டேன்.நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு மூன்று கப்பல்களில் மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னாருக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பியும் தொண்டர்கள் நேரடியாக களத்தில் நின்று உதவியதற்கும் ,உருத்திரகுமாரன் நேரடியாக ஒமாபாவுடன் தொடர்பு கொண்டு

மீள்கட்டுமானத்தை அமெரிக்காவே செய்ய உறுதிமொழி வாங்கியதற்கும் நன்றிகாட்டும் முகமாக நானும் இனி நாடு கடந்த தமிழீழ அரசு தொண்டன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு இந்த பெயரைகேட்டால முன்பு எனக்கு அலர்ஜி.

இப்போது அவர்களின் பெரும் விசுவாசியாகிவிட்டேன்.நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு மூன்று கப்பல்களில் மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னாருக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பியும் தொண்டர்கள் நேரடியாக களத்தில் நின்று உதவியதற்கும் ,உருத்திரகுமாரன் நேரடியாக ஒமாபாவுடன் தொடர்பு கொண்டு

மீள்கட்டுமானத்தை அமெரிக்காவே செய்ய உறுதிமொழி வாங்கியதற்கும் நன்றிகாட்டும் முகமாக நானும் இனி நாடு கடந்த தமிழீழ அரசு தொண்டன் தான்.

அர்ச்சுன், பிறகு பேச்சு மாறக்கூடாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு இந்த பெயரைகேட்டால முன்பு எனக்கு அலர்ஜி. இப்போது அவர்களின் பெரும் விசுவாசியாகிவிட்டேன்.நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு மூன்று கப்பல்களில் மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னாருக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பியும் தொண்டர்கள் நேரடியாக களத்தில் நின்று உதவியதற்கும் ,உருத்திரகுமாரன் நேரடியாக ஒமாபாவுடன் தொடர்பு கொண்டு மீள்கட்டுமானத்தை அமெரிக்காவே செய்ய உறுதிமொழி வாங்கியதற்கும் நன்றிகாட்டும் முகமாக நானும் இனி நாடு கடந்த தமிழீழ அரசு தொண்டன் தான்.

"ஓ" போடு! :lol:

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல் - 02

[ வியாழக்கிழமை, 03 மார்ச் 2011, 08:10 GMT ] [ புதினப் பணிமனை ]

'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம்

இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், நிலையான தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.

நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை இது.

போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல. போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும். களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் போக்குநிலையும் அது தரிக்க வேண்டிய ஆயுதமும் நிர்ணயிக்கப்படும்.

போரடினால்தான் தமது இருப்பு உறுதிசெய்யப்படும் என முடிவெடுத்து, அதற்கு வடிவம் கொடுத்து, அதனை செயல்படுத்திய இனங்களே தமக்கான சுதந்திரத்தை அடைந்தது என்பது வராலாற்று மெய்நிலை.

இருப்பின் அடையாளம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் ஊடாகவே முழுமையடைகிறது. ஆகவே, இருப்பு முழுமையடைய வேண்டுமானால், உரிமைக்கான போராட்டம் தளர்வின்றி தொடரவேண்டும். இந்தத் தொடர்ச்சிக்கான பயணத்தில், தாயக நிலைமைகள், சிறிலங்காவின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமகள், புலம்பெயர் நாட்டு நிலமைகள் மற்றும் பூகோள அரசியல் நிலைமைகளை சரிவர கணிப்பீடு செய்து போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும்.

இதற்கான முதற்கட்டமாக பின்வரும் நான்கு விடயங்களில் புலம்பெயர் தமிழர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

01. தாயகம்தான் போரட்டத்தின் அடிநாதம். இன்னும் அழுத்திக் கூறுவதானால், இணைந்த வடக்கு, கிழக்குத்தான் ஈழத் தமிழர் அரசியலின் ஆணிவேர். தமிழ்தேசியப் போராட்டத்தின் அடுத்தகட்டம் புதியவீச்சுடன் தொடரவேண்டுமானால், தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதரங்களும், அடிப்படைத் தேவைகளும் நிறைவுசெய்யப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்வு நிலை வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்கான செயற்பாடுகளை புலம்பெயர் சமூகம் விரிவுபடுத்தவும், விரைவுபடுத்தவும் வேண்டும்.

02. தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளுடனான உறவை பலப்படுத்த வேண்டும். மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக புதிதாக தோன்றிவரும் சூழலையும், அதிருப்தியாளர்களையும் இனம் கண்டு அதனை சரிவரப் கையாள வேண்டும். அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை. செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கொள்கைப் பற்றுடனும், அர்ப்பணிப்புணர்வுடனும், இலக்கில் உறுதியாகவும் இருந்தால் யாருடனும், எங்கும் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

பொருளாதார ரீதியான பிரச்சினைகளால் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பின்பு அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக தென்னிலங்கை மக்கள் மாற்றம் பெற்றிருக்கிறார்கள். இது அவர்களிடத்தில் அதிருப்தி அலைகளை மேலோங்கச் செய்கிறது. அதேவேளை, பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவத்தினரும், ஜே.வி.பிக்கு ஆதரவாக உள்ள முப்படையைச் சார்ந்தோரும் ஒரு இணைப்புப் பாலத்தை உருவாக்கி, சிங்கள இளைஞர்களை அணிதிரட்டி மகிந்த ஆட்சிக்கு எதிராக போராடத் திட்டமிட்டுள்ளார்கள் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இது போன்ற செயற்பாடுகளை ஈழத்தமிழர்களின் அரசியற் போராட்டத்துக்கு சாதகமாக கையாள்வது என்பது தொடர்பாக தற்போதே திட்டமிடல்கள் மேற்கொள்ள வேண்டும். ஓரு போராட்டம் வெடித்தபின் திட்டமிட்டு காய்களை நகர்த்துவதென்பது ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையாது. இத்தகைய போராட்டம் எப்போதும் வெடிக்கலாம். ஆனால், அது வெடித்தால் அதனை எவ்வாறு ஈழத்தமிழர் அரசியலுக்கு ஆதரவாக பயன்படுத்துவதென்பதற்கான திட்டம் இப்போதே தமிழர்களால் தீட்டப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை சக்திவாய்ந்த நாடுகளின் வெளிவிவகார திணைக்களங்களும், அனைத்துலக உளவு நிறுவனங்களும் ஈடுபட்டுவருவது வழக்கமான ஒரு விடயம்.

அதேவேளை, தமது 'புரட்சியில்' தமிழ் இளைஞர்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற நோக்கோடு, ஜே.வி.பி தமது செயற்பாடுகளை வடக்கில் முடுக்கிவிட்டுள்ளது. அதற்கான எதிர்வினைகளே, கோத்தாபயவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் 'இரகசியப்' படையணியால் ஜே.வி.பிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளாகும்.

ஜே.வி.யின் தந்திரத்துக்குள் தமிழ் இளைஞர்கள் சிக்காமல், அவர்களுடைய செயற்பாடுகளை ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்துக்கு சார்பாக எவ்வாறு கையாளலாம் என்ற தந்திரத்துடன் தமிழ்ச் சமூகம் செயற்பட வேண்டும். ஜே.வி.பி ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு தமது தார்மீக ஆதரவை இன்றுவரை வழங்காத அதேவேளை, முட்டுக் கட்டையாக இருந்து வந்துள்ளது என்பதை கவனத்திற்கொள்க.

03. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் போரடிக்கொண்டிருக்கும் தமிழர்கள், மகிந்த ஆட்சிபீடம் உச்சவளங்களுடன் செயற்படுவதால் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது உண்மையே. ஆனால், மகிந்தவின் ஆட்சிக்கு அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் கொடுக்கும் முக்கிய சக்தியாக புலம்பெயர் தமிழர்களே உருவெடுத்துள்ளார்கள் என்பது இன்றைய களயதார்த்தம்.

ஆதலாலேயே, புலம்பெயர் தமிழர்களின் கட்டமைப்புகளை சிதைப்பதற்காக வெவ்வேறு தரப்புகளையும், பல்வேறு களங்களையும் பெரும் ஆளணி மற்றும் நிதிச்செலவுகளோடு மகிந்த கூட்டணி களத்தில் இறக்கியுள்ளது. இவர்கள், வெவ்வேறு வேடங்களோடு வெளிக்கிளம்பியுள்ளார்கள். இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் பகுத்தறிந்து செயற்பட வேண்டும். அதேவேளை, தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு மறைமுக கட்டமைப்புகள் ஊடாக ஆற்றிவரும் உதவிகள் தேவையின் நிமிர்த்தம் மேம்படுத்தப்படவேண்டும். அங்கு வாழும் உறவுகளுக்கு கைகொடுத்து அவர்களை பலப்படுத்த வேண்டிய தலையாய கடமை புலம்பெயர் தமிழர்களுடையது.

அத்துடன், போர்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் போன்ற மகிந்த அரசிற்கு நெருக்கடிகளையும், ஈழத்தமிழர்களுக்கு நீதியையும் பெற்றுத்தரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக செயற்படுகின்ற அதேவேளை, ஈழத்தமிழர்களின் அரசியற் போராட்டத்தின் இலக்கினை அடையும் முகமாக அனைத்துலக சக்திகளுடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் புலம்பெயர் தமிழர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இராஜதந்திரிகளுடனான உறவுகள், இதில் தனிநபர் உறவுகள் கூடுதலான சந்தர்ப்பங்களில் சக்திவாய்ந்தது. பொஸ்னியா மற்றும் கம்போடிய ஆகிய நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இடம்பெற்ற நீதிதேடும் முயற்சிகளில், தனிநபர் உறவுகள் எத்தகைய தாக்கத்தினை செலுத்தின என்பது சிறந்த உதாரணங்கள் ஆகும்.

சிறிலங்கா அடைந்த மிகப்பெரிய வெளியக இராஜதந்திர வெற்றிகளின் பின்னணியில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பங்களிப்பே முதன்மையானது. இது, லக்ஸ்மன் கதிர்காமர் வளர்த்துப் பராமரித்த தனிப்பட்ட உறவுகளாலேயே சாத்தியப்பட்டது. இதையொத்த பாணியையே தற்போது பிரான்சுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தயான் ஜயதிலக்க இராஜதந்திர அந்தஸ்து பெற்றது முதல் பின்பற்றி வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இதுபோன்ற உதாரணம் பொருந்தும். ஆனால், ஓரு நாட்டுடனும், ஒரு சில இராஜதந்திரிகளுடனும் மட்டுமன்றி இது பரவலாக விரிவு படுத்தப்பட வேண்டும்.

04. அனைத்துலக அளவில் இடம்பெற்று வரும் அனைத்து வகைப்பட்ட நகர்வுகளையும், செயற்பாடுகளையும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புகள் உன்னிப்பாக அவதானித்து, அதிலிருந்து ஈழத்தமிழர் போராட்டத்திற்கான விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுடனும், அங்குள்ள குடியியல் அமைப்புகளுடனும், ஊடகங்களுடனும் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உறவுகள் இன்று உதவாவிட்டாலும், என்றைக்கோ ஒரு நாள் அவை நிச்சயம் உதவும். அத்துடன், குறிப்பிட்ட நாடுகளில் இடம்பெறும் முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் அலசி ஆராய்ந்து பதிவு செய்யப்பட வேண்டும்.

மீண்டும் கூறுகிறேன், இவ்வாறான செயற்பாடுகளை சக்திவாய்ந்த நாடுகளின் வெளிவிவகார திணைக்களங்களும், அனைத்துலக உளவு நிறுவனங்களும் ஈடுபட்டுவருவது வழக்கமான ஒரு விடயம். அதன்காரணமாகவே, திடீரென நிகழும் ஆட்சிமாற்றங்களுக்கு ஏற்றாற் போல் சக்திமிக்க நாடுகள் உடனடியாகவே தம்மை தயார்படுத்திக் கொள்கின்றன. இவை, எல்லாக் கட்டத்திலும் முற்றுமுழுதாக வெளித் தெரிவதில்லை. சிலவேளைகளில், முன்னர் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, தமக்கு ஏற்றாற் போன்ற போராட்டங்களை தோன்றுவதற்கு சக்திமிக்க நாடுகள் தூபமிடுகின்றன.

உதாரணமாக, 2010 ஜனவரியில் சிறிலங்காவில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில், மகிந்த அதிபரானால் தாம் என்ன செய்ய வேண்டும், சரத் பொன்சேகா அதிபரானால் என்ன செய்ய வேண்டும் என்ற இருவகைத் திட்டங்களையும் சக்திமிக்க நாடுகள் சில மாதங்களுக்கு முன்னரே தீட்டியிருந்தன. அதேவேளை, தமக்கு சார்பானவர் ஆட்சிபீடம் ஏற வேண்டும் என்பதற்கான பின்னணி பணிகளையும் குறித்த நாடுகள் சம நேரத்தில் முன்னெடுத்திருந்தன.

ஆகவே, இது போன்ற காரணிகளை கவனத்திற்கொண்டு தமிழ் அமைப்புகள் செயற்திட்டங்களை வகுக்க வேண்டும். தென்சூடானின் சுதந்திரம் மட்டுமல்ல, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்ங்களும் தமிழ் மக்களுக்கு படிப்பினைகளே.

ஆதலால், தமிழ் அமைப்புகள் தமது செயற்பாட்டுத் தளங்களை விரிவுபடுத்த வேண்டும். எல்லாவகையான நாடுகளுடனும் அல்லது ஆகக்குறைந்தது அங்குள்ள சிவில் அமைப்புகள், ஊடாகங்களுடனாவது தொடர்புகளை பேணிப், பராமரிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்ட அல்லது ஆதரவாக செயற்படாத நாடுகளுடனும் இத்தகைய உறவுகள் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், குறித்த நாடுகளின் ஆதரவும், எதிர்ப்பும் அந்தந்த நாடுகளின் தேசிய நலனில் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன. இந்த ஆதரவும், எதிர்ப்பும் அனைத்துலக உறவுகளிலே சாதாரண விடயங்களே.

இதற்கான அனைத்துலக அளவிலான சிறந்த உதாரணங்களை அடுத்த தொடரிலே அலசுவேன்.

http://www.puthinappalakai.com/view.php?20110303103310

ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல் - பாகம் 03

[ வெள்ளிக்கிழமை, 20 மே 2011, 11:57 GMT ] [ புதினப் பணிமனை ]

'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஆணிவேர் பிடுங்கியெறியப்பட்டு, தமிழ் தேசியத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு உலகில் முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டத்தின் முடிவு, தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு தரப்புகளுக்கும் அதிர்ச்சியான விடயம்.

குறிப்பாக, இனவிடுதலைக்காக போராடும் இனங்களுக்கு வீழ்ந்த பேரிடியாக அது அமைந்ததென்றால் மிகையாகாது.

தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு பல்வேறு தரப்புகளால், வெவ்வேறு காரணங்கள், வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகிறன.

ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கான இடைவெளி இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளது. முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய காலம் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டத்திற்கு சவால்களை மட்டுமல்ல, எதிர்காலத்திற்கு உகந்த உறுதியான அத்திபாரத்தையும் அமைக்க வழியமைத்திருக்கிறது.

அதுவரை, ஈழப்போராட்டம் ஈடாடியபடியே நகர வேண்டிய சாபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதன் சில கவலைதரும் காட்சிகளே பின்வருபவை.

ஒரு சிலர், விமர்சனம் என்ற போர்வையில் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர். பசுத்தோல் போர்த்திய புலிகளாக காட்சி தந்த சிலர், இன்று பச்சோந்திகளாக மாறியுள்ளனர்.

இலட்சியத்தாலும், இலக்கினாலும் ஒன்றுபட்ட குழுமத்தினர் 'இடைக்கால' சிக்கல்களால் எதிரெதிர் தரப்பினாராக மாறியுள்ளனர்.

இன்னொரு தரப்பினர் எல்லாம் முடிந்ததென்றெண்ணி சோர்ந்து, கவலையில் தோய்ந்துள்ளனர். மற்றொரு தரப்போ போராட்டத்தை விட்டு ஒதுங்கியுள்ளனர்.

இவையனைத்துக்கும் அப்பால், மற்றுமொரு தரப்பு 'மீண்டும் எழுவோம்', நீதியும், நிரந்தர தீர்வும் கிடைக்கும் வரை போரட்டத்தை ஜனநாயக வழியில் தொடர்வோம் என்ற முழக்கத்தோடு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.

இந்த தரப்பின் மீதும் 'கல்லெறி' வீழ்கிறது. ஆனால், அது ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடாகவன்றி, தமிழ்தேசிய உரிமைப் போராட்ட முன்னெடுப்புக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போடுவதாகவே உள்ளது.

ஆதலால், இதனை, சிறிலங்கா அரசுடன் இணங்கிப் போகுதல், 'குறித்த சில விடயங்களில் ஒத்துழைத்தல்', மற்றும் பேரம் பேசுதல் போன்ற போர்வைகளைத் தாங்கி தமிழர் வாழ்வை மேலும் கேட்பாரற்ற அடிமை வாழ்வுக்குள் தள்ளும் ஒரு செயற்பாடாவே பார்க்கவேண்டியுள்ளது.

இதில் ஈடுபட்டுள்ள குழுவினரே, போராடும் மனஉறுதியோடு உள்ள தரப்பினரின் தன்னம்பிக்கையையும், ஆத்மபலத்தையும் சிதைக்கும் நடவடிக்கைகளுக்காக 'இரகசிய நிகழ்ச்சி நிரலோடு [Hidden Agenda] இயங்குகின்றார்கள்.

இது, எதிர்பாராத அழுத்தங்களுக்குள் சிக்குண்டுள்ள சிறிலங்கா ஆட்சிபீடத்தை ஆசுவாசப்படுத்தி, தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டத்தின் வீச்சை குறைக்கும் செயல்பாடகவே தென்படுகிறது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் 'எதிர்பாராத' வீழ்ச்சிக்குப் பினனர், மேற்கூறியது போன்ற விடயங்கள் ஒரு இனக்குழும கட்டமைப்புக்குள்ளோ அல்லது அது சார்ந்த வெளியக கட்டமைப்புக்குள்ளோ நிகழ்வது சாதாரணம்.

ஆனால், அதற்காக போராட்டத் தேர் மந்தம் அடையக்கூடாது. எந்த வீதியிலாவது தேர் பயணிக்கட்டும், ஆனால் அதன் நோக்கமும், இலக்கும் உறுதியானதாகவும், உன்னதமானதாகவும் இருப்பதே பிரதானம்.

வீதி பள்ளம், மேடாக இருக்கலாம், வீதியில் சேறு, சகதி இருக்கலாம். அல்லது அந்த வீதியில் ஒரு விபத்து நேர்ந்திருக்கலாம். இது போன்ற காரணங்களுக்காக தேரோட்டம் எக்காரணம் கொண்டு நிறுத்தப்படமாட்டாது, நிறுத்தப்படக்கூடாது.

இவை இத்துடன் நிற்க, மேலே கூறப்பட்ட விடயங்களில் பிரதானமானவற்றுக்கான காலத்திற்கும், களத்திற்கும் பொருத்தமான சில அனைத்துலக ரீதியான விடயங்களை கீழே அலசுவோம்.

சுதந்திரப் போராட்டங்களின் வரலாற்றில் அயர்லாந்து முன்னிலைப் பாத்திரம் வகிக்கிறது.

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த விடுதலைப் போராட்டத்தின் சுதந்திர தாகம், அதன் இலக்கை எட்டிய பின்னரே அடங்கியது.

இதற்காக அவர்கள் கொடுத்த விலை அளப்பரியது. ஒரு புறம் களமுனையில் சவால் மிக்க படைநடவடிக்கை, மறுபுறம் பிளவுகள், விலைபோகுதல்கள், காட்டிக்கொடுப்புகளுக்கு முகம்கொடுத்தபடி அயர்லாந்தின் குடியரசுப் படை போராட்டத்தை தொடர்ந்தது.

அயர்லாந்தின் களமுனைகளும் ஏனைய களமுனைகள் போலவே மிகுந்த நெருக்கடிகளை அயர்லாந்தின் குடியரசுப் படைகளுக்கு வழங்கின.

பலவித இடர்களுக்கும் முகம்கொடுத்தபடி அவர்களுக்கான பக்கபலமாக களத்திலும், புலத்திலும் மக்கள் இருந்தார்கள்.

உலகிலேயே அதிக புலம்பெயர்ந்தோர் [Diaspora] சமூகமாக அயர்லாந்து மக்கள் இருந்து வருகிறார்கள். இது, அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்திற்கான பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பேருதவியாக அமைந்தது.

கடந்த ஏபரல் மாத நடுப்பகுதியில், அயர்லாந்து நண்பர் ஒருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலே, புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியில் பலம்பெற்று உயர்வடைவதோடு, உலகளாவிய பொருளாதாரச் செயற்பாடுகளிலும் பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்து அவரால் முன்வைக்கப்பட்டது.

அவர் மேலும் கூறுகையில், அயர்லாந்தின் சுதந்திரத்திற்கான போராட்ட காலம் மிகுந்த சோதனையும், வேதனையும் நிறைந்ததாகவே இருந்தது என எனது முன்னோர்கள் ஊடாக அறியமுடிந்தது.

தொடர்ச்சியான இழப்புகள், பின்னடைவுகள், தோல்விகள் ஏற்பட்டபோதும் அவர்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவதற்கு எண்ணவில்லை.

விளைவு நாங்கள் இன்று வெற்றி பெற்ற சுதந்திரப் போராடங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், எமது வகிபாகம் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியத்துவம் மிக்கதொன்றாக மாறியுள்ளது.

அயர்லாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்திலே புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய பங்களிப்பு காத்திரமானது என்றார் அவர்.

உலகின் பலபாகங்களிலும் அநீதி தலைவிரித்தாடியது. அடக்குமுறையாளர்களின் கொடிய கரம் இறுகிக்கொண்டே வந்தது. ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கதையானாது.

தேசிய நலன்களுக்காக வல்லாதிக்க சக்திகள் மனித உரிமைகள் விடயத்தில மௌனம் காப்பதை உலகின் ஒரு பகுதியினர் விரும்பவில்லை.

விளைவு, 1998 யூன் 15 தொடக்கம் யூலை 17 வரை இத்தாலியின் தலைநகரில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான மாநாட்டில்; ஒரு சட்டம் இயற்றப்பெற்று, அதில் பங்குபற்றிய பெரும்பான்மையான நாடுகளால் அது அங்கீகரிக்கப்பட்டது.

இது ஆங்கிலத்தில் Rome Statute என அழைக்கப்படுகிறது. இதனை 120 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதனை அடிப்படையாக வைத்தே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் [international Criminal Court - ICC] உருவாக்கம் பெற்றது.

இதன் பிரதான வழக்கு தொடுனராக [Chief Prosecutor] ஆர்ஜென்ரீனாவை சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஜோசே லூயிஸ் மொரெனோ ஓக்கம்போ [José Luis Moreno Ocampo] பதவி வகிக்கின்றார்.

இதனை உருவாக்குவதற்கும், இதன் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இவரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பும் முகம் கொடுக்கும் சவால்கள் அவர்களுக்குள்ள ஆதரவுக்கு நிகரானவை அல்லது ஆதரவை விட அதிகமானாவை.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் அமெரிக்கா, சீனா மற்றும் ரஸ்யா உட்பட பலநாடுகள் (சிறீலங்கா உள்ளடங்கலாக) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை ஏற்று அதிகாரபூர்மாய் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆயினும், அமெரிக்கா, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன்னெடுக்கும் வழக்குகளுக்கு தனது ஆதரவை வழங்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக சூடானிய ஜனாதிபதி ஒமார் ஹசன் அகமட் அல் பசீருக்கு [Omar Hassan Ahmad Al-Bashir] எதிரான வழக்குக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

போர்குற்றங்கள் [War Crimes], மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் [Crimes Against Humanity] மற்றும் இனப்படுகொலை [Genocideப] ஆகியவை தொடர்பாக குறித்த நாடுகளின் நீதித்துறை செயற்திறன் அற்றிருக்குமாயின் அல்லது நீதி வழங்கத் தவறுமாயின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குறித்த வழக்குகளை கையாள முடியும்.

ஆனால், குறித்த நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் சட்ட சாசனத்தில் கையொப்பமிட்டு, உறுப்பு நாடுகளாக இருக்கும் பட்சத்திலேயே இது 'விரைவாகச்' சாத்தியப்படும்.

இதுபோன்ற பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் எதிர்கொள்கிறது. அதற்கு எதிரான அழுத்தங்களும் தொடர்கின்றன.

ஆனால், எது வரினும், தான் எக்கட்டத்திலும், எக்காரணத்திற்காகவும் பின்வாங்கப் போவதில்லை. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமன்றத்தின் செயல்திறன் அதிகரிக்குமே தவிர, வலுவிழக்காது என்று அடித்துக் கூறுகிறார் அதன் பிரதான வழக்கு தொடுனரான ஜோசே லூயிஸ் மொரெனோ ஓக்கம்போ.

அனைத்துலக ரீதியான சாவால்களை எதிர்கொள்கின்ற போதும், என்றும் உற்சாகத்துடனும், தனது இலக்கு நோக்கிய பயணத்தில் மிக உறுதியாகவும், நேர்த்தியாகவும் அவர் செயற்படுகிறார்.

இது, சிறிலங்கா ஆட்சிபீடம் இழைத்த போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக செயற்படும் தரப்பினருக்கும், அவர்களின் செயற்பாட்டை வலுவிழக்கச் செய்வது போன்ற விமர்சனங்களையும் முன்வைக்கும் தரப்பினருக்கும் ஒரு சிறந்த உதாரணம்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கே சவால்கள் உள்ளதென்றால், நீதிக்காக செயற்படும் தமிழின மனித உரிமைச்செயற்பாட்டாளர்களது பயணம் இலகுவானதொன்றல்ல.

ஆனால், திரு. ஓக்கம்போ போல் துடிப்புடன், செயல்திறனுடன், நடைமுறை உலக அரசியலை விளங்கி அதற்கேற்ப காய்களை நகர்த்தினால் இவர்களது இலக்கு சாத்தியமாகும்.

"காலத்தை தற்போது நிர்ணயம் செய்ய முடியாது, ஆனால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என அனைத்தலக சட்டவாளர் ஒருவர் தனிப்பட்ட சந்திப்பொன்றிலே அழுத்திக் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய பூகோள அரசியலின்படி, குற்றச் சாட்டுக்குள்ளாகியுள்ள சிறிலங்காத் தரப்பினரை நீதியின் முன் நிறுத்துவதென்பது சவாலான விடயம்தான், ஆனால் சாத்தியமற்ற விடயமல்ல.

பூகோள அரசியலும், உலக ஒழுங்கும் மாற்றுநிலையாக்கம் அடைபவை. பூமிப்பந்தின் சுழற்சியில் தமிழர்களுக்கு சாதகமான காலம் உருவாகும் என்பதை எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் அபிவிருத்தி ரீதியான அரசியல் அபிவிருத்தி [Political development] நிகழ்வுகள் எடுத்துக்காட்டும்.

ஆகவே, சிறிலங்கா ஆட்சிபீடம் மீதான போர்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் போன்றவற்றால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற மாய வலைக்குள் சிக்காமல், நீதிக்காக செயற்படும் தமிழின மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.

இவர்கள், அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், குறித்த நாடுகளின் வெளிவிவகார மற்றும் மனித உரிமைகள் அமைச்சுகளுடனான தமது தொடர்பைப் தொடர்ச்சியாகப் பேணி, மென்மேலும் வலுப்படுத்த வேண்டும்.

சிலவேளைகளில், தமிழர் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைகக்கு துணைபோன நாடுகளுடன் கூட தமிழர்கள் தொடர்பை பேணவேண்டி வரலாம்.

இத்தகைய சந்தர்பங்களில், உணர்ச்சிவசப்படாமல், இராஜதந்திரத்துடன் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும்.

நாம் எமது கொள்கையில் உறுதியாக இருந்து கொண்டு, தமிழ் தேசிய உரிமை போராட்டத்தின் இலக்கினை அடைவதற்கு யதார்த்தத்தை உணர்ந்து, நடைமுறைக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டும்.

ஒரு உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொள்வோம். உலகிலேயே அதிகமான முஸ்லீம்களைக் கொண்ட மூன்றாவது நாடு இந்தியாவாகும்.

இதன் காரணமாக, இந்தியாவுக்கும் அரபுநாடுகளுக்குமிடையிலான அரசியல் பொருளாதார உறவுகள் வலுவானதொன்றாகவே உள்ளது. அதேவேளை, இந்தியா தற்போது தனது புதிய நண்பனான இஸ்ரேலிடமிருந்து, இராணுவ நிபுணத்துவத்தையும், போர்த்தளபாடங்களையும் வாங்கத் தொடங்கியுள்ளது.

இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது. இஸ்ரேல் 1948ல் தனிநாடாக உருவாக்கம்பெற்றது. ஆயினும், இரு நாடுகளுக்கிடையிலும் 1980கள் வரை இறுக்கமான உறவுநிலை இடம்பெறவில்லை.

1920ம் ஆண்டிலிருந்து, இந்தியத் தேசியவாத இயக்கத் தலைவர்கள், பலஸ்தீனிய அரேபியர்களுக்கு ஆதரவான, பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர்.

அத்துடன், இஸ்ரேல் என்ற தேச உருவாக்கத்துக்கும் எதிரானவர்களாகவே அவர்கள் செயற்பட்டார்கள். அதன் ஒரு கட்டமாகவே, 1947ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் பலஸ்தீனத்தின் பிரிவினைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

மூன்று ஆண்டுகள் கழித்து, 1950ல் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆயினும், 1980ம் ஆண்டுவரை, பலஸ்தீன மக்களிற்கான இறைமையுள்ள அரசுக்கு ஆரவாக, அரபு நாடுகளுடனும், அணிசேர நாடுகளுடனுமே இந்தியா இணைந்து செயற்பட்டது.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தின் போக்கும், வெளியீடும் என்ன? இந்த மாற்றம் என்ன காரணங்களுக்காக நிகழ்ந்தது? இதன் தாக்கம் என்ன போன்ற காரணங்களை பாகம் நான்கில் அலசுவோம்.

அத்துடன், காலத்தின் தேவைகருதி, பலஸ்தீன போராட்ட அமைப்புகளான பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] இயக்கங்களுக்கிடையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை ஈழத்தமிழர்களுக்கு சொல்லும் பாடம் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு பயனளிக்கக் கூடிய சில இராஜதந்திர உத்திகளையும் அடுத்த தொடரிலே அலசுவோம்.

http://www.puthinappalakai.com/view.php?20110520103907

மாயையில் இருந்து விடுபடுவதற்காக முன்வைக்கப்பட்ட அம்சங்கள் உமாமகேஸ்வரன் காலத்து புளோட் அமைப்பினர் பின்பற்ற முனைந்த வழிபோன்ற அம்சங்களைக் கொண்டது. இவைகளை தென்பகுதி முற்போக்குச் சக்திகள் ஏற்றுக் கொள்ளுமா? என்பது கேள்விக்குறிதான். ஜே வி பி யினருடன் தொடர்புகளைப் பேணுவதற்கு புளொட் அமைப்பினர் மேற்கொண்ட முயற்சிகளும் பெரும் தோல்விக்குள்ளானது. அவர்களும் தமிழருக்கெதிராகவே மாற்றம் பெற்றனர். விடுதலைப்புலிகள் என்ற ஒன்றைவைத்தே தென்பகுதி ஓரணிப்படுத்தப்பட்டது.

இன்றும் அதே நிலைதான். ஆவணப்படம் என்ற விடயம் தென்பகுதில் முன்வைக்கப்பட்டு சிங்கள இனம் ஓரணிப்படுத்தப்படுகிறது. தமிழருக்கு அரசியல் உரிமை என்ற பேச்சுக்கள் எழும்போதெல்லாம், தென்பகுதியில் எந்த முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க முன்வருவதில்லை. இது வரலாறு. எந்த வகையிலும் தென்பகுதி மக்களையோ, அல்லது அவர்களின் ஒரு பகுதியிரையோ எம் போராட்டத்தின்பால் திருப்பிவிட இன்றுவரை முடியவில்லை.

அடுத்து சர்வதேச நலன்களில் இலங்கையில் தமிழரின் முக்கியத்துவம் என்ன? அவர்களோடு சர்வதேசம் ஏன் இணையாமல் இருக்கிறது என்பததை இங்கு ஒரு கேள்வியாகவே விட்டுவிடுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.