Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்..

Featured Replies

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள்.அப்படி பலப் புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்கு கொண்டுச் சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ்ப் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகப்புகழ்ப் பெற்றப் பலப்படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன.

மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்:

stricken_child_pulitzer_94_500.jpg

1994- ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது'(Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம் வருடம் சூடானில் எடுக்கப்பட்டது. சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஐ.நா சபையின் மூலம் உணவு பொருட்கள் நாடு முழுவதும் பரவலாக வழங்கப்பட்டது. அப்படியான ஒரு உணவு முகாமை நோக்கி தவழ்ந்துச் சென்ற ஒரு பெண் குழந்தையை தன் உணவாக்கிக் கொள்ள காத்திருக்கும் பருந்தையும் புகைப்படமாக எடுத்தவர் 'கெவின் கார்டர்'(Kevin Carter) என்னும் புகைப்படக்காரர்.

குழந்தை எப்போது இறக்கும், நாம் எப்போது அதை உணவாக்கிக் கொள்ளலாம் என்று பருந்து காத்திருக்கும் இப்படம் வெளியான போது உலகத்தை வெகுவாக பாதித்தது. சூடானின் அப்போதைய நிலைமை இப்படம் முழுமையாக உலகத்தாருக்கு விளக்கியது. அந்தக் குழந்தை என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் புகைப்படமாக எடுத்த கார்டருக்கும் கூட தெரியவில்லை.

இப்படத்தை இப்போது பார்த்தால் கூட நம் மனம் பதபதைக்கும். இது சொல்லும் செய்தி இன்று கூட நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஈவு இரக்கமற்ற இவ்வாழ்வின் குறுர முகத்தை நாம் கண்டு கொள்ள முடியும். இப்படம் சொல்லும் செய்திகள் பல இருக்கிறது.

இப்படத்தோடு சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒன்று இப்படத்தின் களமான சூடானைப்பற்றியது மற்றொன்று இப்படத்தின் புகைப்படக்காரர் கெவின் கார்டரைப் பற்றியது. இரண்டுமே நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டியவைகள்.

..............................................................................................................

தெற்கு சூடான்:

வட ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் பல நூற்றாண்டுகளாகவே அந்நிய தேசத்தவரால் அடிமைப்படுத்தப்பட்டு ஆளப்பட்டிருக்கிறது. உலகின் பெரிய நதியான 'நைல் நதி' இந்த நாட்டின் ஊடாக பாயிகிறது. இதன் பொருட்டே பல தேசங்கள் இந்த நாட்டை வசப்படுத்த முயன்றிருக்கின்றன. அதில் நமக்கு நன்றாக பழக்கப்பட்ட பிரித்தானியர்களும் அடங்குவர். வழக்கம் போல அந்நாட்டையும் பிரித்தானியர்கள் காலனியாக்கி ஆண்டு வந்திருக்கின்றனர். வடக்கு, தெற்கு என இரண்டு பகுதியாக இந்த நாடு பிரிந்துக்கிடக்கிறது. 'சூட்' என்னும் சதுப்பு நிலம் இந்த நாட்டை இரண்டாக பிரிக்கிறது. பல நூற்றாண்டு காலம் எகிப்தியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் வடக்குப் பகுதி சூடான், இஸ்லாம் மற்றும் அரேபிய மதத்தை தழுவிய நாடாக இருக்கிறது. தெற்கு சூடான் கிருத்துவத்தையும் பல உள்ளூர் மதங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை பெரியதாக எந்த உள்ளூர் பிரச்சனையும் வரவில்லை. அதன் பிறகுதான் அதன் ஆட்சியாளர்கள் தெற்கு சூடான் மற்றும் அதன் உட்புறம் நிலங்களின் வளங்களை சுரண்ட முயன்று இருக்கின்றனர். பிரித்தானியர்கள் எகிப்தியர்களோடு* சேர்ந்து ஆட்சி!செய்தபோது வடக்கு மற்றும் தெற்கு சூடான் பகுதிகளை தனித்தனி நிர்வாகமாகத்தான் நிர்வகித்து இருந்திருக்கின்றனர்.

(*பிரித்தானிய காலனி, எகிப்திய அதிகாரிகள் என்ற ஒரு கூட்டு முறை. காரணம் நைல் நதி மீதான கட்டுப்பாடு - அது ஒரு தனி கதை)

வடக்குப் பகுதியில் அரேபியர்களின் ஆளுமையும் தெற்கு பகுதியில் கத்தோலிக்க கிருத்துவர்களின் ஆளுமையும் இருந்திருக்கின்றது. இரண்டு பகுதிக்கும் எப்போதும் ஒரு பிணக்கம் இருந்திருக்கின்றது. 1946-ஆம் ஆண்டுவாக்கில் வடக்கு சூடானியர்களுக்கு அதிகாரம் கிடைத்தபோது இரண்டு பகுதிகளையும் இணைக்க முயன்றிருக்கிறார்கள். தெற்கு பகுதிகளிலும் அரேபிய மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. தெற்குப்பகுதியின் அதிகாரமும் வடக்கு சூடானியர்கள் எடுத்துக்கொண்டார்கள். இது தெற்கு சூடான் பகுதியில் கொதிப்பை ஏற்படுத்தியது. அது தொடர்ந்து வளரவும் செய்தது. பிறகு 1953-இல் பிரித்தானியர்கள் சூடானுக்கு விடுதலை தருவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு 1956-இல் சுதந்திர சூடான் அரசு அமைந்தது. அதில் வடக்கு சூடானியர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. தெற்கு சூடானியர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது.

இதனால் தெற்கு சூடானில் பல போராட்டங்கள் நடந்தன. 1955-இல் துவங்கிய முதல் சூடானிய உள்நாட்டு போர் 1972-வரை நடந்தது. தெற்குப் பகுதிக்கு சுயாட்சியும் கூடுதல் அதிகாரம் வேண்டி நடந்த இந்தப் போர் சரியான தீர்வை எட்டாமல் சமரசங்களால் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த பதினேழு ஆண்டு காலப்போரில் ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

பிறகு 1983-இல் இரண்டாம் சூடானிய உள்நாட்டு போர் துவங்கியது. இதில் இருபது லட்சம் மக்கள் வறுமை,பட்டினி மற்றும் நோயால் கொல்லப்பட்டனர். நாடெங்கும் வறுமை தலைவிரித்தாடியது. பட்டினிச் சாவுகளைத் தடுக்க அந்த நாட்டால் முடியவில்லை. நாற்பது லட்சம் தெற்கு சூடானியர்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். இதில் பல தடவை இடம் பெயர்ந்தவர்கள் அதிகம். இரண்டாம் உலகப்போருக்கு பின் அதிக மக்களைக் காவு வாங்கியது இப்போர் தான். பிறகு அமைதி ஒப்பந்தங்கள் மூலம் 2005-இல் இப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

2005 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி 2011-இல் தெற்கு சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 98.83 விழுக்காடு வாக்குகளைத் தனி நாடாக பிரிவதற்கு பெற்று 9.7.2011 அன்று தெற்கு சூடான் விடுதலைப் பெற்ற தனி நாடாக மலர்ந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் 54 ஆவது நாடாகவும், ஐ.நா மன்றத்தில் 193-ஆவது நாடாகவும் தெற்கு சூடான் இருக்கிறது.

தெற்கு சூடானில், இரண்டாம் சூடானிய உள்நாட்டு போர்(1983–2005) நடந்தக் காலகட்டத்தில் தான் நாம் மேலேப் பார்த்தப்படம் எடுக்கப்பட்டது. விடுதலைக்கானப் போரில் பல இன்னல்களைச் சந்தித்தும், பல லட்சம் மக்களை இழந்தும் அவர்களின் விடுதலைத் தாகம் தொடர்ந்தது. அதன் விளைவாக இன்று அத்தேசம் விடுதலைப் பெற்ற நாடாக உருவாகிருக்கிறது.

Sudan_Kevin_Carter.jpg

கார்டர் எடுத்த மற்றொரு படம் ..............................................................................................

'கெவின் கார்டர்':

தென்னாப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். விளையாட்டுத்துறைப் புகைப்படக்காரனாக தன் வேலையைத் துவங்கியவர். பின்பு 1993-இல் சூடானில் நடந்த உள்நாட்டுப் போரையும் அதன் பட்டினிச்சாவுகளையும் புகைப்படம் எடுக்க சூடானுக்கு போனார். ஐ.நா திட்டத்தின் மூலம் உணவு கொண்டுச்சென்ற ஒரு விமானத்தில் கார்டர் சென்றிருக்கிறார்.

kevin-carter.jpg

கெவின் கார்டர்

அந்த விமானம் தெற்குச் சூடானியப் பகுதியில் ஒரு கிராமத்தில் உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்காக தரை இறங்கி இருக்கிறது.

உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து முண்டி அடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கின்றார்கள்.

கார்டர் அதை புகைப்படம் எடுக்கத் துவங்கி இருக்கிறார். பெற்றோர்கள் உணவுப் பெறுவதில் மும்மரமாக இருந்ததால், கவனிப்பாரின்றி தனித்து விடப்பட்ட ஒரு பெண் குழந்தை உணவிற்காக அந்த உணவு முகாமை நோக்கி தவழ்ந்து வந்திருக்கின்றாள். அவளுக்கு உணவு முகாமிற்கும் ஒரு கிலோமீட்டர் தூரம்.

பட்டினியில் வாடிய அந்தப் பிஞ்சுக் குழந்தை போராடி தவழ்ந்து வருவதைப் பார்த்த கார்டர் புகைப்படம் எடுக்க தயாராகி இருக்கிறார்.

அந்த நேரம் ஒரு பருந்து அவள் அருகே வந்து அமர்ந்திருக்கிறது.

அதன் நோக்கம். அந்த குழந்தையை உண்பது.

இதைப்பார்த்த கார்டர் சிறிது நேரம் காத்திருக்கின்றார். அந்த பருந்து என்னதான் செய்யப்போகிறது என்பது போல. இப்படி அவர் காத்திருந்தது 20 நிமிடத்திற்கும் மேலாக.

பின்பு பருந்து பறந்துப் போய் விடாத அளவிற்கு மெதுவாக அந்தக் குழந்தைக்கு அருகில் போய் படமெடுத்திருக்கிறார். அதன் பின் அந்த பருந்தை துரத்திவிட்டு தன் விமானத்திற்கு சென்று விட்டாராம். அந்த குழந்தைப் பற்றி அவர் யோசிக்கவில்லை.

இந்தப்படம் மார்ச் 26, 1993-இல் 'நியூ யார்க்' பத்திரிக்கையில் வெளிவந்தது. அது வெளிவந்த நாளிலிருந்து பல நூறு மக்கள் அந்தக் குழந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்கத்துவங்கினார்கள்.

ஆனால் பத்திரிக்கைக்கு அந்தக் குழந்தையின் நிலைப் பற்றி தெரியவில்லை. அவள் உணவு முகாமை அடைந்தாளா அல்லது அவள் பெற்றோர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது இன்று வரை யாரும் அறியாத ஒன்றுதான்.

' அவளுடைய இன்னலை, சரியான ஒரு கோணத்தில் புகைப்படம் எடுக்கத் தன் கேமராவைக் கையாண்டுக்கொண்டிருந்த அந்தப் புகைப்படக்காரரும் ஒரு கொடுர மிருகம் தான்,

அந்த காட்சியின் மற்றொரு பருந்து அவர்' என்று இப்படத்தைப் பற்றி 'St. Petersburg Times' பத்திரிக்கை எழுதியது.

புலிட்சார் விருதைப் பெற்றாலும், இந்தப் புகைப்படத்தால் புகழடைந்ததுப் போலவே பல கண்டனங்களைப் பெற்றார் கார்டர். இதன் விளைவாக குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். மன உளைச்சல்கள் அதிகரித்தன.

images.jpg

கெவின் கார்டர் 1960-1994

1994, ஜூலை 27ஆம் தேதி கார்டர் தான் சிறுவயதில் விளையாடிய வளர்ந்த ஒரு நதிக்(Braamfontein Spruit river) கரைக்குப் போனார்.

அங்கே தன் காரை நிறுத்தி விட்டு, ஒரு ரப்பர் குழாயின் ஒரு முனையை காரின் புகை வெளியேற்றியில்(exhaust pipe) இணைத்து, மறுமுனையை தன் காருக்குள் கொண்டுச் சென்றார். பின் காரின் பக்க கண்ணாடிகளை மூடிவிட்டு காரை இயக்கித்தில்(switched on the engine) வைத்துத்தவர், காருக்கு உள்ளாக அமர்ந்து தன் 'Walkman'-ஐ காதில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

காரிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைட் வாயு காருக்குள் நிரம்ப துவங்கியது. பிறகு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது 'கார்பன் மோனாக்சைடின்' விஷத்தன்மையால் இறந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

Kevin_Carters_Pulitzer-Prize.jpg

கார்டரால் எடுக்கப்பட்ட மற்றொரு புகழ்ப்பெற்றப் படம் "necklacing" in South Africa

அந்தக் குழந்தைச் சம்பந்தமான கண்டனங்களால் மனச்சாட்சி உலுக்கப்பட்ட அவர், குற்றயுணர்ச்சியின் மிகுதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

அவர் தன்னை மாய்த்துக்கொண்ட போது அவருக்கு வயது 33. புலிச்சார் விருது பெற்ற இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை.

தன் தற்கொலைக் கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்தார்.

"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ...

மேலும் அவரின் நாட்குறிப்பேட்டில் இப்படி எழுதி இருந்தாராம்.

"Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I may pray that He will protect this little boy, guide and deliver him away from his misery, I pray that weDear will be more sensitive towards the world around us and not be blinded be our own selfish nature and interests"

இந்த மனிதனின் மரணம் சொல்லும் செய்தியையும் நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாத ஒன்று.

பிறிதொரு நாளில் இத்தகைய குற்ற உணர்ச்சிக்கு நாம் ஆட்படாமலிருக்க வேண்டுமானால் இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் ஒரே வழி.

http://vijayarmstrongcinematographer.blogspot.com/2011/08/blog-post_17.html

இப்பிடியான ஆக்கங்கள் எந்த பகுதியில் இணைகிறது என்றே எனக்கு தெரியல ஓரளவு பொருத்தமான

பகுதியாக சமூக சாளரம் இருந்ததினால் இங்க இணைக்கிறன்...:

Edited by வீணா

  • தொடங்கியவர்

TrangBang.jpg

ஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அந்த ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' பெற்ற இப்படத்தை எடுத்தவர் 'Nick Ut' என்னும் வியட்நாம் புகைப்படக்காரர்.

வியட்நாம் போர்:

நவம்பர் 1,1955 ஆம் ஆண்டு துவங்கிய இப்போர் ஏப்ரல் 30,1975-இல் முடிவுக்கு வந்தது. கம்யூனிஸ்ட் ஆதரவு வடக்கு வியட்நாமுக்கும் தெற்கு வியட்நாமுக்கும் இடையே இப்போர் நடந்தது. தெற்கு வியட்நாமிற்கு வட அமெரிக்க போன்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகள் துணை புரிந்தன என்பதினால் இது ஒருவகையில் பொதுவுடமைக்கு எதிரான போராக பார்க்கப்பட்டது/நடத்தப்பட்டது. அதனால் தெற்கு வியட்நாமில் உருவான 'வியட்காங்'(Viet Cong) என்னும் கொரில்லா படையும்(முறையான படைப்பிரிவும், அரசியல் தலைவர்களும் அதற்கு உண்டு) தெற்கு வியட்நாம் அரசாங்கத்தையும் அதன் ஆதரவு வட அமெரிக்கப் படைகளையும் எதிர்த்தது.

இரண்டு புறமும் பல தேசங்கள் பங்கு பெற்றன. பொதுவுடமை கருத்தாக்கத்திற்கு எதிரான அணியில் 'தெற்கு வியட்நாம், வட அமெரிக்கா, தெற்கு கொரியா, ஆஸ்த்திரேலியா, பிலிபைன்ஸ், நியூஸ்லாந்து, தாய்லாந்து' போன்ற நாடுகளும் பொதுவுடமை ஆதர பிரிவில் 'வடக்கு வியட்நாம், மக்கள் குடியரசு சீனா, சோவித்யூனியன் மற்றும் வட கொரியா' போன்ற நாடுகளும் ஆதரவு கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடந்த இப்போர் வட அமெரிக்காவின் போர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. வடக்கு/தெற்கு வியட்நாமிற்கு இடையேயான போரானாலும் இதில் வட அமெரிக்காவின் பங்கு அதிகம். ஒரு வகையில் இது வட அமெரிக்கா தொடுத்த 'பொதுவுடமை சித்தாந்தத்திற்கு' எதிரானப் போர்களில் ஒன்று. போரில் அடிமேல் அடிப்பட்ட வட அமெரிக்கா, இதை தன் மதிப்பிற்கு வந்த சவாலாக எடுத்துக் கொண்டது. பெரும் ஆயுதபலம் மற்றும் பணப்பலத்தைப் பிரயோகித்தாலும் இறுதியில் இப்போர் வட அமெரிக்கர்களுக்கு தோல்வியைக் கொண்டு வந்தது. 1973-இல் வட அமெரிக்க இப்போரில் இருந்து வெளியேறியது. இன்றுவரை வட அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது என்பது வியட்நாமில் மட்டுமே நடந்த ஒன்று.

பல லட்சம் மக்களை பலி கொண்ட இப்போர் 1975-இல் தெற்கு வியட்நாமின் தலைநகரான 'சாய்கான்'(Saigon) வடக்கு வியட்நாம் படையால் பிடிக்கப்பட்டப் பிறகு முடிவுக்கு வந்தது. இரண்டு வியட்நாமுகளும் இணைக்கப்பட்டன.

இப்போர் அதன் உச்ச கட்டத்தை அடைந்துக்கொண்டிருந்த காலக்கட்டதில் ஜூன் 8, 1972-இல் 'Trang Bang' என்னும் சிறு கிராமத்தின் மீது தெற்கு வியட்நாம் படையால் போடப்பட்ட 'நேபம்'(napalm) குண்டால் துளைக்கப்பட்ட இடிபாடுகளிலிருந்துதான் அந்த ஒன்பது வயதுச் சிறுமி ஓடி வந்தாள்.

அச்சிறுமியின் பெயர் 'Phan Thi Kim Phuc'. அவளோடு அவளுடைய சகோதரர்களும் உரவினர் குழந்தைகளும் ஓடிவருகிறார்கள். குண்டுகளால் உண்டான தீ, அவளின் உடைகளை எரித்து அவளின் தோல்களிலும் பரவி இருந்தது. அவளின் கண்ணங்கள் மற்றும் உதடுகள் கூட தீயினால் கருகி இருந்தது. அவள் ஓடி வரும் போது "too hot, too hot" என்று அவள் தாய் மொழியில் கத்திக்கொண்டு வந்தாளாம்.

அப்போது அங்கே இருந்த புகைப்படக்காரர் 'நிக்'(Nick Ut) அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார். படைவீரர்கள் அவளுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவளின் தோல்கள் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. புகைப்படக்காரர் நிக் அவளை தன் காரில் ஏற்றிக் கொண்டு அருகிலிருந்த இராணுவ மருத்துவ முகாமிற்குச் சென்றிருக்கிறார். அங்கே அவளுக்கு முதலுதவி தரப்பட்டு, பதினாலு மாதங்கள் சிகிச்சையில் பதினேழு தையல்கள் போடப்பட்டன.

இதன் இடையே இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட அமெரிக்காவில் போருக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இப்படம் பெரிதும் உதவியது. அப்போது வட அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. இது ஒரு தேவையற்றப் போர் என்று வட அமெரிக்க மக்கள் கருதினார்கள். வீனாக தன் இளைஞர்களை வட அமெரிக்கா பலி இடுகிறது என்ற கருத்தோட்டம் பரவி தேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அச்சமயத்தில் வெளியான இப்படம் மிகுந்த கவனத்திற்கு உள்ளானது. அப்போதைய அதிபர் நிக்சன் இது ஒரு சித்தரிக்கப்பட்ட போலி புகைப்படம் என்பதாகக் கூட விவாதித்தாராம்.

ஆனால் இது உண்மையானப் படம் தான். அதை பலர் உறுதி செய்தார்கள். இப்படம் எடுக்கப்பட்ட போது உடனிருந்த மற்றச் செய்தியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கூட இதை உறுதி செய்தார்கள். செய்தியாளர்கள் கண் முன்னால் குண்டு வீசுவதற்கான ஆணை இடப்பட்டு அக்கிராமம் குண்டுகளால் துளைக்கப்பட்டதை அவர்கள் பதிவுசெய்தார்கள்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, பிழைக்க மாட்டாள் என்றுதான் முதலில் மருத்துவர்கள் சொன்னார்களாம். பதினாங்கு மாத கால மருத்துவதிற்குப் பிறகு பிழைத்து அவள் தன் கிராமத்திற்கு திரும்பினாள். அவள் மருத்துவமனையில் இருந்த போதும் அதன் பின் கிராமத்திலும் அவளை சென்று பார்த்து வந்திருக்கிறார் புகைப்படக்காரர் நிக். மூன்று வருடங்களுக்கு பின் போர் முடிவடைந்த போது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

சில வருடங்களுக்கு பிறகு ஒரு ஜெர்மன் பத்திரிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பெண் மீண்டும் செய்தி ஆனாள். அதன் பின் வியட்நாம் அரசாங்கம் அவளை 'போரின் அடையாளச் சின்னமாக' பயன்படுத்த துவங்கியது. அதனால் அவளின் மருத்துவபடிப்பு பாதிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கு படிக்கச் சென்றாள். அங்கே தன் சக மாணவனோடு நட்பு ஏற்பட்டு அவனை திருமணம் செய்துக்கொண்டாள். பிறகு கனடா நாட்டு குடியுரிமைப் பெற்று அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

இடையே பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு போரின் அவலங்களை உலகத்திற்கு எடுத்துச் சொன்னாள். ஒருமுறை அவளின் இந்த நிலைக்கு காரணமான குண்டு வீச்சை நடத்திய இராணுவ அதிகாரி, அவளை சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அவளை அவர் பார்த்த நொடியிலிருந்து தொடர்ந்து தன்னை மன்னிக்குப்படி கேட்டுக்கொண்டே இருந்தாராம். அவள் அவரின் கையை பிடித்து நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்றுச் சொன்னப் பிறகுதான் அவர் நிம்மதி அடைந்ததாக அவரே சொல்லுகிறார்.

1997-இல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம். பிறகு பல கிளை நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இப்போது அது 'Kim Phuc Foundation International' என்றப் பெயரில் இயங்கி வருகிறது.

1997-இல் 'UNESCO Goodwill Ambassador' ஆக நியாமிக்கப்பட்ட அவர். பல பட்டங்களை பெற்றுள்ளார்.

அதில்..

'honorary Doctorate of Law from York University'

'Order of Ontario'

'honorary degree in Law from Queen's University in Kingston, Ontario'

'honorary degree of Doctor of Laws from the University of Lethbridge' ஆகியவையும் அடங்கும்.

1999 -இல்

The Girl in the Picture: the Story of the Story of Kim Phuc, the Photograph and the Vietnam War by Denise Chong என்னும் புத்தகம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் விதத்தில் வெளிவந்து புகழ்ப்பெற்றது.

'Haunted a whole generation of Americans and helped turn America's public opinion against the Vietnam War. Today, that picture is still considered by the world as one of the most important images of the 20th century'

'ஒரு தலைமுறையையே உலுக்கிய அந்தப் புகைப்படம் அமெரிக்க மக்களை வியட்நாம் போருக்கு எதிராக ஒன்று திரள உதவியது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானப் புகைப்படங்களில் ஒன்றாக அது இன்று கருதப்படுகிறது'

ஏதும் அறிய அந்த ஒன்பது வயதுச் சிறுமியின் மீது படர்ந்த அந்தத் தீ என்னும் பல இடங்களில் படர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. போரின் கொடுர முகத்திற்கு சாச்சியாக அந்தப் பெண் நம்மோடு வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை

more potos...

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

மனதை உலுக்கிய புகைப்படங்கள், மற்றும் அதனைப் பற்றிய விரிவான செய்திகள் மூலம் பலவற்றை அறியக்கூடியதாக உள்ளது. இணைப்பிற்கு நன்றி வீணா. மேலும் அரிய புகைப்படங்கள் இருந்தால்... தொடர்ந்து இணைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு வீணா தொட‌ர்ந்தும் இணையுங்கள்...இதை மாதிரி எங்கள் போராட்ட‌த்தினை சொல்லும் ஒரு புகைப்பட‌மும் மற்றவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேதனை

இணைப்பிற்கு நன்றி வீணா.

மேலும் சில புகைப்படங்கள் இந்த இணைப்பில் உள்ளன

http://www.cameranak...KevinCarter.htm

http://en.bestpictur...20carter/1#Bing

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா இணைப்பிற்கு, முன்னம் இதை வாசித்தனான், அப்ப ஒரு செய்தியாக மட்டுமே வாசிச்சன், முள்ளிவாய்க்கலின் பின் இப்ப இதை பார்க்க மனதை நெருடுகின்றது, அளவக்கு அதிகமாக போட்டு சாப்பிட்டபின் மிகுதியை வீசுபவர்கள் இதை பாரத்தால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது... இறந்த உறவினரை பார்த்து கதறி அழும் பெண்.

இந்தப் படம் உலகப் பரிசு பெற்றது.

Edited by தமிழ் சிறி

01.jpg

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது... இறந்த உறவினரை பார்த்து கதறி அழும் பெண்.

இந்தப் படம் உலகப் பரிசு பெற்றது.

என்னமோ தெர்ல.......இதெல்லாம் பெரிசா நம்ம மனச உலுக்கல...!

என்னை உலுக்கின போட்டோ ..ஒண்ணே ஒண்ணு...அது:

வன்னி இறுதி சண்டையின்போது... வயுத்துல குழந்தயோட இருந்த தாயோட உடலை , ஷெல் பீஸ் கிழிக்க......குழந்தையின் ஒரு கை வெளியே தெரிய , இருவருமே இறந்துபோனார்களே......

சிறி ..சிறி ... யார் என்ன படம் கேட்டாலும் படம் உடனே இணைக்குறீங்களே...

இந்தப்படத்தை தேடி இணைப்பீர்களா?

...

என்னை உலுக்கின போட்டோ ..ஒண்ணே ஒண்ணு...அது:

வன்னி இறுதி சண்டையின்போது... வயுத்துல குழந்தயோட இருந்த தாயோட உடலை , ஷெல் பீஸ் கிழிக்க......குழந்தையின் ஒரு கை வெளியே தெரிய , இருவருமே இறந்துபோனார்களே......

சிறி ..சிறி ... யார் என்ன படம் கேட்டாலும் படம் உடனே இணைக்குறீங்களே...

இந்தப்படத்தை தேடி இணைப்பீர்களா?

அறிவிலி இதுவா நீங்கள் கேட்ட படம்?

எல்லாரும் பார்த்தது தான் இருப்பினும் தயவு செய்து இந்த இணைப்பில் போய் பாருங்கள்.

http://www.nowpublic...n-army-shelling

அறிவிலி இதுவா நீங்கள் கேட்ட படம்?

எல்லாரும் பார்த்தது தான் இருப்பினும் தயவு செய்து இந்த இணைப்பில் போய் பாருங்கள்.

http://www.nowpublic...n-army-shelling

ம்ம் குட்டி ...இதபோல இன்னுமொண்ணு!

படம் 1

படம் 2

படங்களின் இணைப்பு மட்டும் தரப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

அதேதான் ஈசன்...!

இணைப்புக்கு நன்றி எல்லாம் சொல்ல்மாட்டேன்...

நன்றி சொல்லகூடிய விசயமா இதெல்லாம்!

எது எது எல்லாமோ உலகை உலுப்புதாம்...

இதுகளும் எப்போ ஆவது யார் மனசயாவது உலுக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சி இல்லாமல் (ஏன் மனமே இல்லாமல்) வாழ்ந்து பழகியவர்களை பிடித்து உலுக்கினாலும் ஒன்றும் உலுங்காது.

  • தொடங்கியவர்

afghan-girl-615.jpg

'ஆப்கான் பெண்'(Afghan Girl) என்று பெயரிடப்பட்ட இந்தப் பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985-ஆம் ஆண்டின் 'நேஸ்னல் ஜியோகெராபிக்'(National Geographic) இதழில் அட்டைப் படமாக வெளி வந்தது. இப்படம் 1980-இல் ஆப்கானிஸ்தான் நிலை மற்றும் உலக முழுவதுமிருக்கும் அகதிகளின் நிலையை வெளிப்படுத்துவதாக அறியப்பட்டது. இன்றுவரை உலகில் 'மிகவும் அறியப்பட்ட' புகைப்படமாக இது இருக்கிறது. அவளின் கடல் பச்சை வண்ணக் கண்களும் அது சொன்னச் செய்தியும் உலகத்தை கவனிக்க வைத்தது. அந்த கண்களுக்கு பின்னே உறைந்துக் கிடந்த துயரம் அன்றைய ஆப்கானின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 'Amnesty International'-ஆல் அதிகமுறை அவர்களின் சுவரொட்டிகளிலும் காலண்டரிலும் அச்சிடப்பட்டது.

"ஆப்கன் மோனலிஸா"(the Afghan Mona Lisa) என்று அழைக்கப்பட்ட இப்படத்தை எடுத்தவர் 'ஸ்டீவ் மெக்கரி'(Steve McCurry) என்ற புகழ்ப்பெற்ற 'நேஸ்னல் ஜியோகெராபிக்' புகைப்படக்காரர்.

யாரிந்த 'ஆப்கான்'பெண்?

உண்மையில் அப்படத்தை எடுத்த ஸ்டீவ் மெக்கரிக்கேக் கூடத் தெரியவில்லை. அவர் 1984-டிசம்பரில் ஆப்கான் போரைப் புகைப்படமெடுக்க சென்றிருந்தபோது, ஆப்கான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இருந்த ஒரு அகதிகள் முகாமில் இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறார். அப்போது பன்னிரெண்டு வயதே நிரம்பி இந்தப் பெண்ணை பார்த்தபோது, அவளின் கண்களில் இருந்த ஈர்ப்பு அவரை படமெடுக்க தூண்டி இருக்கிறது. அவளின் அனுமதியோடு சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அவ்வளவுதான், பெயரைக்கூட கேட்க வில்லை. வந்துவிட்டார்.

பின்னர், அப்படம் அட்டைப்படமாக வெளியாகி உலகத்தின் கவனத்தைப் பெற்றபோது கூட, அந்தப் பெண்ணைப்பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அப்படம் உலக முழுவதும் பலப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டது. அகதிகளின் நிலையை விவரிக்கும் ஒருவித 'குறியீடாக, அடையாளமாக'(symbol) பயன்படுத்தப்பட்டது.

1985-afghan-girl-national-geographic1.jpg

முதலில் இந்தப் பெண்ணின் படத்தை 'நேஸ்னல் ஜியோகெராபிக்' பத்திரிக்கையின் ஆசிரியர் பிரசுரிக்க வேண்டாம், அது ரொம்ப கஷ்டப்படுத்துகிறது என்றாராம். பிரசுரித்தபோது உலகின் பலப் பகுதிகளிலிருந்து கடிதங்கள் வந்ததன, அந்தப் பெண்ணைப்பற்றி தகவல் கேட்டு. பண உதவி செய்வதாக, அவளை தத்தெடுத்துக்கொள்வதாக, அவளை திருமணம் செய்துக்கொள்வதாக கூட.

பல முறை ஸ்டீவ் அந்தப்பெண்ணைப்பற்றி தெரிந்துக்கொள்ள முயன்றபோதும், அது முடியாமல் போது. காரணம், சோவியத்தை வெற்றிக்கொண்ட தாலிபான்களின் ஆட்சி அங்கே நடந்துக்கொண்டிருந்ததும் வெளியார்கள் செல்ல முடியாததாக இருந்ததும். பிறகு 2001-இல் பில்லேடனை பிடிக்கறேன் பேர்வழி என தாலிபான்களின் ஆட்சியை வட அமெரிக்கர்கள் ஒழித்துக்கட்டியது நாம் அறிந்ததுதான்.

அதன்பின் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு ஸ்டீவ் மெக்கரி அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பி, அவளைத்தேடி ஆப்கான் சென்றார். அது நடந்தது 2002 ஆம் ஆண்டு. அவளை முதன் முதலில் பார்த்த அதே அகதிகள் முகாமிற்கு சென்றார். அகதிகள் பொதுவாக இடம் பெயர்ந்துக்கொண்டே இருப்பார்கள் என்பதனால் அவளைக் கண்டுபிடிப்பது பெரும் சிரமம் என்பதை அவர் அறிந்துதான் இருந்தார். என்றாலும், முயன்றுப்பார்க்க விரும்பினார். 'நேஸ்னல் ஜியோகெராபிக்' பத்திரிக்கையும் இதில் ஈடுபட்டது. அங்கே அகதி முகாமில் அவளைப்பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பல தவறான நபர்கள் அடையாளம் காட்டப்பட்டு, பின்பு ஒரு வயதானவர் மூலம் அவளின் இருப்பிடம் தெரிந்தது. அந்தப் பெரியவர் 1984-இல் அந்த முகாமில் சிறுவனாக இருந்தபோது அவளோடு பழகியவர், இவர்கள் கொண்டு போன புகைப்படத்தைப் பார்த்து அவரால் அடையாளம் சொல்ல முடிந்தது.

(முதலில் பல தவறான தகவல்கள் கிடைத்தன. அவள் இறந்துப் போய் விட்டாள், கனடாவிற்குச் சென்று விட்டாள். ஏன்..! பின்லேடனுக்கே ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தாள் என்பதாய்)

அந்தப் பெரியவரின் மூலம் தெரிந்த தகவல், அவள் 'தோரா போரா'(Tora Bora - பின்லேடனை தேடி குண்டு வெடித்தார்களே அதே மலைதான்) மலைப்பகுதியைச் சார்ந்தவள் என்பதும், அப்போதைய ஆப்கான் மீது சோவியத்தின் படையெடுப்பிலிருந்து தப்பித்து அகதியாக வந்தவள் என்பதும் தான். ஸ்டீவ் அவளைத்தேடி மூன்று நாள் பயணம் செய்து தோரா போரா சென்றார். அவளிருந்த கிராமம் ஆறு மணிநேர வாகனத்திலும் பிறகு மூன்று மணிநேரம் நடையாகவும் செல்லும் தூரத்தில் இருந்தது. அது ஒரு எல்லையோர கிராமம். ஸ்டீவ் அவளை முதன் முதலில் பார்த்தப் போதே தெரிந்துக் கொண்டார் 'அது அவள் தான்'!

அவளின் பெயர் 'ஷர்பாத் குளா'(Sharbat Gula), பஸ்தூன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவள். அவளுக்கு அப்போது வயது 28 அல்லது 29 அல்லது 30 ஆகக் கூட இருக்கலாம், சரியாக தெரியவில்லை. அவளுக்கு கூட தெரியவில்லை. பதினேழு ஆண்டுகளுக்கு முன் 12 வயது சிறுமியாக இருந்த அவள் இப்போது மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயாகிருந்தாள்.

ஸ்டீவ் 1984-இல் ஆப்கான் வந்திருந்தது, ஆப்கனும் சோவியத் யூனியனும் போரிட்டுக்கொண்டிருந்த நேரம். அப்போதைய சோவியத் யூனியன் ஆப்கானின் மீது படை எடுத்திருந்தது. காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான், பெட்ரோல், எண்ணைய் குழாய் பாதை, அமெரிக்காவோடு பனிப்போர், அரேபிய தேசங்களோடு உறவு மற்றும் பகை போன்ற உலக அரசியல்!?

டிசம்பர் 24,1979-இல் துவங்கிய இந்தப் போர் ஒம்பது ஆண்டுகள் தொடர்ந்தது. ஆப்கன் போராளிகள் மற்றும் தன்னார்வ அரேபிய இளைஞர்களின் கூட்டுப்படை ருஷ்யர்களை எதிர்த்தது. ஆப்கனுக்கு ஆதரவாக பல தேசங்கள் உதவி புரிந்தன. வட அமெரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தைவான், இந்தோனேசியா, சீனா, யூ.கே மற்றும் இந்தியா ஆகியவை அதில் அடக்கம். சொல்லப்போனால் இது பனிப்போரின் இறுதி காலகட்டத்தில் நடந்த ஒருவித 'proxy war'-ஆகவே பார்க்கப்பட்டது.

சோவியத் யூனியனின் 'வியட்நாம் போர்'* என அழைப்பட்ட இந்தப் போர் பிப்ரவரி 15,1988-இல் முடிவுக்கு வந்தபோது இருபுறமும் பல்லாயிரம் வீரர்கள் இறந்துபோனார்கள். ஆப்கானிஸ்தானில் மட்டும் ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஐம்பது லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபது லட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட முப்பது லட்சம் மக்கள் படுகாயம் அடைந்தார்கள்.

(*வியட்நாம் 1955-1975 போரில் அமெரிக்க தோற்றது - இங்கே சோவியத் தோற்றது)

அதன் பிறகு ஆப்கானின் உள்ளாட்டுப் போர் துவங்கியதும், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும். அவர்களின் கொடுங்கோல் ஆட்சியும் உலக அறிந்த துயரக் கதை.

தன் ஆறு வயதில் சோவியத்தின் குண்டுகளுக்கு தன் பெற்றோர்களைப் பலி கொடுத்துவிட்டு, தன் சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளோடு உயிர் பிழைக்க பனி மலைகளை கடந்து எல்லைத்தாண்டி பாகிஸ்த்தான் முகாம்களில் அடைகளம் அடைந்தவள் அவள். அவளுடைய மூத்த சகோதரனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறாள். போரின் முடிவுக்கு பின் நாடு திரும்பி திருமணம் செய்துக்கொண்டாள். கணவன்(Rahmat Gul) சிறு வேலைகள் செய்து பிழைப்பவன். மூன்று பெண் குழந்தைகள் முறையே 1,3,13 வயது. ஒரு குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டது.

அவளுடைய பதினாறாவது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. அவள் அண்ணன் சொன்னாராம், அவளின் திருமண நாள் மட்டும்தான் அவள் வாழ்நாளில் அவள் சந்தோசமாக இருந்த நாள் என்று.

இஸ்லாமிய முறைப்படி வாழும் பெண் அல்லவா, அவள் முகத்தை அவள் கணவன் தவிர மற்ற ஆடவர் பார்க்க கூடாது என்பதற்காக பர்தா கொண்டு மூடிக்கொண்டிருப்பவள். அவளின் கணவனிடம் அனுமதி கேட்டு, அவளின் இப்போதைய உருவத்தை ஸ்டீவ் புகைப்படம் எடுத்தார்.

அவளின் புகைப்படம் பல கோடி நபர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதையும், அகதிகளுக்கு உதவுவதிற்கு தூண்டுகோளாக அவள் இருந்திருக்கிறாள் என்பதும் அவள் அறிந்திருக்கவில்லை.

இத்தனை ஆண்டுகாலப் போரும், பெரும் அழிவுக்குப் பின்னும் தான் பிழைத்திருப்பதைப் பற்றி அவள் சொன்னாலாம். "அது கடவுளின் விரும்பம்'(“will of God”) என்று.

அவளின் விருப்பம் ஒன்றாக மட்டும் தான் இருந்திருக்கிறது. 'அவள் தவற விட்ட பள்ளிப் படிப்பு அவளின் மகள்களுக்கு கிடைக்கவேண்டும்' என்பதுதான் அது.

1984-இல் ஸ்டீவ் மெக்கரி அவளை எடுத்த புகைப்படம் தான் அவள் வாழ்நாளில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம். அதன் பிறகு 2002-இல் அதே ஸ்டீவ் எடுத்தப் புகைப்படங்கள் தான் அவள் இரண்டாவதாக எடுத்துக்கொண்டப் புகைபடம். ஆம் 1984-க்கு பிறகு அவள் புகைப்படமே எடுத்துக் கொள்ளவில்லை.

afghan-girl-in-1985-and-in-2002.jpg

ஜனவரி 2002-இல் ஸ்டீவ் அவளிடம் அவளின் புகழ்ப்பெற்ற 'ஆப்கன் பெண்' புகைப்படத்தை காட்டும் வரை, அதை அவள் பார்த்திருக்கவில்லை.

அவள் தான், அந்த புகழ்ப் பெற்ற 'ஆப்கன் பெண்' என்பதை 'நேஸ்னல் ஜியோகெராபிக்' பலவழிகளில் சோதித்து உறுதிப்படுத்திக்கொண்டது.

2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத 'நேஸ்னல் ஜியோகெராபிக்' பத்திரிக்கையின் அட்டைப் படத்தை இந்தப் பெண் மீண்டும் அலங்கரித்தாள். 114 வருடங்களில் அந்தப் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இரண்டாம் முறை வந்த முதல் நபர் அவள்தானாம். 'ஆப்கானிய பெண் தேடல்'(The Search for the Afghan girl) என்ற கட்டுரையும், ஆவணப்படமும் உருவாக்கப்பட்டது.

afghan-girl-found-cover2.jpg

'நேஸ்னல் ஜியோகெராபிக்' மூலம் நிதி திரட்டப்பட்டு, அவளுக்கும் அப்கான் பெண்களிக்கும் கல்வி கிடைக்க உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

'ஆப்கன் பெண்கள் நிதி'(Afghan Girls Fund) என்றுப் பெயரிடப்பட்ட அந்த அமைப்பு பின் 2008-இல் ஆண் பிள்ளைகளுக்கும் உதவும் விதத்தில் மாற்றப்பட்டு 'ஆப்கன் குழந்தைகள் நிதி'(Afghan Children's Fund) என்று பெயரில் இயங்குகிறது.

afghan-girl.jpg

இது தான் இந்த இருபதாம் நூற்றாண்டு மோனலிஸாவின் கதை.

'This is the legacy of the ’Mona Lisa of the twentieth century’

பின்குறிப்பு:

ஸ்டீவ் மெக்கரி எடுத்த இப்படம் 'Kodachrome film', Nikon FM2 கேமரா மற்றும் Nikkor 105mm F2.5 lens பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதன்பிறகும் ஸ்டீவ் Kodachrome film-களையே பயன்படுத்தி படங்களை எடுத்தார். ஜூன் 2009-இல் 'Kodak' இந்தவகை ஃபிலிம் தயாரிப்புகளை நிறுத்தப் போவதாக அறிவித்து ஸ்டீவை கடைசி Kodachrome film-இல் படமெடுத்துக் கொடுக்க கேட்டுக்கொண்டது. அப்படங்கள் George Eastman House museum in Rochester, New York-க்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி இக்கடுரைகளை தனது வலை பூவில் எழுதி இருந்தவர் தமிழ் திரைப்பட ஒளி பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இவர் ஒரு ஈழ ஆதரவாளரும் கூட.....
:)

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல இணைப்பு இணைப்புக்கு நன்றி தோழர் வீணா.. :)

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் பல தரவுகளையும் தருகின்றீர்கள் நன்றாக இருக்கின்றது. தொடருங்கள் வாழ்த்துகள் வீணா!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.