Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்...

Featured Replies

“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள் சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும், சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம்.

தோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருந்திருக்கிறது. இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாய்த் தவித்தபடி காட்சியளித்திருக்கிறார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும், மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல். ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். 30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னாராம் டிரைவர்.

பாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு அழக்கூட திராணியற்றவர்களாய் தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அருகில் சென்று, “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றிருக்கிறார் வினோத் ஸ்ரீவத்சவா. கைகளைப் பற்றிக்கொண்டு, அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்திருக்கிறது. அவரது மகள்களும், மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலைகுத்திப்போய் இருந்திருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம். மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள். சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும்.

தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றிருக்கிறார் வினோத். அவரது இரண்டாவது பெண் பூஜா அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, தனது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டியிருக்கிறார். அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டதாம். வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்திருக்கிறார்.

சர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு, ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000! ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க, எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னாராம். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.

இறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, விமானத்தை நிறுத்தி வைத்ததாகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

இறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே. ” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்த பிறகு, திருச்சியில் இருந்த எங்களுக்குப் போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனார்.

by ,Mathavaraj J........via google buzz

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா பகிர்வுக்கு, என்ன ஒரு நிலை அவர்களுக்கு, சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம், தங்கள் அன்பு தாயை இழந்து, அழக் கூட முடியாமல், இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.

மனித நேய AIRRBEA ஆட்கள் செய்த உதவி மிகப் பெரியது

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வீணா

  • கருத்துக்கள உறவுகள்

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் பாராட்டுக்குரியவர்கள்.

தொலை தூரத்தில், இடரில் சிக்கிய உயிர்களுக்கு மனித நேயத்துடன் செய்த உதவி என்றும் போற்றுதலுக்கும் நன்றியுணர்வுக்கும் உரியது. விமான நிலையத்திலிருந்து அவனியாபுரத்திலேயே சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

இம்மாதிரி தொலை தூர பயணத்திற்கு, குறைந்த பட்சம் கடன் அட்டையாவது தேவையான அளவிற்கு பணமெடுக்கும் அளவு வைத்திருத்தல் நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

என் உணர்வுகளை மீண்டும் ஒரு முறை உலுக்கிபோட்டுவிட்டது...............

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் இக்கும் என் பாராட்டுகள்.

வீணா அந்த குடும்பத்திற்க்கு ஏன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துவிடுங்கள்.....

மனிதாபிமானம் என்பது யார், எவர், சொந்தம் என்று பாராது உதவிசெய்த அந்த உறவுகளுக்கு மீண்டும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி வீணா பகிர்வுக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் என்னை எந்த மரணமும் பாதிப்பதில்லை...எங்கட எவ்வளவு மக்கள் புதைக்க கூட முடியாமல் இறந்திருக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.