Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நிஜ ஹீரோ..

Featured Replies

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.

தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.

அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…

O

மன்னார் வளைகுடா வாழ்க்கை என்னும் வலைப்பதிவில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச் செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது

http://www.tamilpaper.net/?p=3624

  • கருத்துக்கள உறவுகள்

Quote: “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்"

நன்றி வீணா நல்லதொரு பதிவை பகிர்த்து கொண்டதிற்கு, சொல்ல வார்த்தையே இல்லை,

பல மாணவர்கள் முள்ளிவாய்க்கால் & மற்ற அவலங்களுக்குள் படித்து முன்னேறியுள்ளார்கள்.

முன்னேறனும் என்ற வெறி, & தாய் & தந்தை படும் கஷ்டம் விளங்கினால் கட்டாயம் முன்னேறுவார்கள்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தம்பி வாழ்க்கையில் இன்னும் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும்

மாரியின் வாழ்வில் வசந்தம் வீசட்டும். அவர் மென்மேலும் உயர்நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள்...!

இணைப்பிற்கு நன்றி வீணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.