Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாப்பழச் சிறுவனுடன் பிரபாகரன் பற்றிப் பேசியவை

Featured Replies

முன்பு ஒரு பதிவில் பலாப்பழப்பிரியனான ஒரு சிறுவன் பற்றிப் பேசியிருந்தேன். அண்மையில் அதே சிறுவனுடன் பிரபாகரன் பற்றிப் பேசநேர்ந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
 
மேற்படி சிறுவனிற்குப் பத்துவயது ஆரம்பமாகியுள்ளது. கிரேக்க மித்தோலொஜி என்றால் அவனிற்குப் பலாப்பழம் அளவிற்குப் பிடிக்கும். அவனது அறையில் ஏறத்தாள 30 கிரேக்க மித்தோலொஜி புத்தகங்கள், அவன் வாசித்து முடித்தவை இருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரும், குணாதிசயங்களும் மற்றும் பாத்திரங்களிற்கிடையேயான தொடர்பும் அவனிற்கு அத்துப்படி. கிரேக்க மித்தோலொஜி பற்றிக் கதைக்கத் தொடங்கின் அவனது கண்ணில் ஒளி மின்னத் தொடங்கும். அப்பிடி அண்மையில் கதைத்துக் கொண்டிருந்த நேரம் எனக்குள் ஒரு உறுத்தல் பிறந்தது. இவனிற்குத் தமிழ்க் கதைகள் ஏதாவது தெரியுமா என்பதே எனது உறுத்தல்.
 
பெற்றோர் புராணக் கதைகள் எதையும் அவனிற்கு அறிமுகப்படுத்தவில்லை. அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்றபோதும் கோவில் ஐயர் போன்ற நடைமுறைகளில் உடன்பாடற்றவர்கள் என்பதால் கோவிலிற்கு அதிகம் போவதில்லை. வீட்டில் தமிழ் கதைக்க முயன்று தோற்றுப்போனதால் ஆங்கிலம் தொடர்பாடல் மொழியாக இருக்கிறது. பல்வேறு பட்ட தளங்களில் குழந்தைகளும் பெற்றோரும் ஆழ்ந்து உரையாடுவார்கள், ஆனால் தமிழ்ப் பெருமை என்பதற்கான தேவை அவர்களால் உணரப்பட்டதில்லை. அதைப் பிழை என்றும் இலகுவில் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் அவர்கள் வீட்டில் காரணகாரியம் பலத்த ஆதிக்கம் செலுத்துவது.
 
சிறுவனிற்குப் பத்துவயது தான் என்றாலும் அவனுடன் காரசாரமாக விவாதிக்க முடியும். அவனுடன் விவாதிக்குப் போது அவன் குழந்தை என்பது மறந்துபோகும். என்னதான் இருந்தாலும் இவன் தமிழ்ப் பெற்றோரிற்குப் பிறந்த தமிழ்க்குழந்தை. இவனிற்குள் தமிழ் கதைகள் சிலவற்றையேனும் விதைத்துவிடவேண்டும் என்று எனக்குள் ஒரு சின்னப்பிள்ளைத்தனம் தொற்றிக் கொண்டது. ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது? அதற்கு முதல் அவனிற்கு ஏன் கிரேக்க மித்தோலொஜியில் ஆர்வம் என்பதை அறியவேண்டும். தூண்டில் போட்டேன். பின்வருவன சிக்கின.
 
விதிகளை விஞ்சிய சாகசங்கள் நிறைந்த கதையம்சம் கற்பனையினைக் கட்டவிழ்க்கிறது. எவை சாத்தியம் அசாத்தியம் என்பன சார்ந்த வரைவிலக்கணங்கள் கச்சிதமாக உடைக்கப்படுகின்றன. நன்மை தீமை மற்றும் நியாயம் அநியாயம் என்பன முடிந்த முடிபாக இன்றி தளங்களோடு மருவிக்கொண்டிருக்கின்றன. வாசகரின் மனம் ஆழுமைகள் பற்றிச் சிந்திக்கிறது. எதையேனும் பெரிதாகச் சாதிக்கவேண்டிய உந்துதல் பிறக்கிறது. கதை ஈர்த்துவைத்திருக்கிறது. பாத்திரவிரிப்பு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. காட்டூண்கள் மட்டும் அனுபவிக்கும் விதி மீறும் சுதந்திரத்தை தெங்வங்களும் அரசர்களும் மனிதனை ஒத்தவடிவில் நிகழ்த்துவது புத்துணர்வளிக்கிறது... இப்பிடியே ஏகப்பட்ட காரணங்கள் தெரிந்தன.
 
இப்போ இந்த வகையறையில், தமிழன் கிரேக்கனிற்குச் சழைத்தவன் அல்ல என்பதை விதைக்க வேண்டும். எங்கு ஆரம்பிப்பது. திருஞான சம்பந்தரிற்கு பால்கிடைத்த கதை இவனிற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றும். விக்கிரமாதித்தன் கதை ஒரு ஒற்றைக் கதையாகத் தோன்றும், பொன்னியின் செல்வன் தமிழ்ப்படம் பார்த்தது போலிருக்கும். இவ்வாறு யோசித்துக்கொண்டு செல்கையில் ஒன்று தான் சரி என்று பட்டது. கிரேக்கனை வெல்ல எம்மிடம் கதைகள் இருக்கின்றனவோ இல்லையோ வரலாறு இருக்கின்றது. சாகசங்கள் ஏராளம் இருக்கின்றன. முடியாதெனப்பட்டவை முடிக்கப்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. நம்பிக்கை, கிளர்ச்சி, வலி, மகிழ்ச்சி துரோகம் அனைத்துமே 30 வருடகால ஆயுதப்போராட்ட வரலாற்றில் கற்பiனியினை விஞ்சி நிகழ்ந்து முடிந்தன. ஆனால் இன்று அனைத்தும் இழந்து நடந்தவை கதைகளாகிக் கிடக்கின்றன. அங்கு தான் இச்சிறுவனைக் கதைவெளியில் அழைத்துச் செல்லவேண்டும் என்று தோன்றியது.
 
கிரேக்க மித்தோலொஜியில் கடவுள்கள் மற்றும் அரசர்கள் என்பவர்களிற்கிடையேயான வேறுபாடு மிகச்சிறியதாய் இருக்கும். கடலிற்குக் கீழும் றாச்சியங்கள் இருக்கும். வானிற்குள்ளும் இருக்கும். மெதூசா போன்ற பாத்திரங்கள் இருக்கும். சாகசங்கள் நிறைந்து வழியும். துரோகம் இருக்கும். அண்ணன் தம்பி சண்டை இருக்கும், நம்பிக்கை இருக்கும். வஞ்சம் இருக்கும். வெற்றியும் தோல்வியும் காத்திருப்புக்களும் இருக்கும்.
 
சுரங்கங்கள் கோட்டைகள் என்று ஆரம்பித்து, எல்லாளன் சங்கிலியன் வழியாக ஒரு தமிழ் அரசை மிகப்பலாமான அத்திவாரத்துடன், பாத்திரவிரிப்பிற்கு ஏற்ற விசாலத்துடன் அவனிற்குக் கட்டியமைத்தேன். அதற்கு ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. பின் ஒருவாறு தலைவரை ஆகக் குறைந்தது பத்துக் கிரேக்க கதாநாயகர்கள் ஒரு சேர்த்த ஆழுமையாகக் கட்டியெழுப்ப அரை மணிநேரம் சென்றது. பின் இயக்கம் மற்றும் நானறிந்த மாவீரர்களின் கதைகளை மக்களின் நம்பிக்கைகள் தங்கியிருப்புக்களுடன் சேர்த்து அத்திவாரத்தை நிரவ இன்னும் ஒரு அரைமணிநேரம் ஆகிப்போனது. கேடி அண்ணை தொடங்கி எனக்குத் தெரிந்த ஏகப்பட்ட சாகசங்கள் பலவற்றிற்கான ஹின்ற் கொடுத்து ஒரே ஒரு சாகசத்தை சவுணட் எபக்றோடு சொல்லி, பின் எதிரியினைக் கட்டமைத்துக் கருணாவிடம் வந்து கதையினை செற்றப் பண்ண இன்னுமொரு மணிநேரம் ஆகிப்போனது. நிறுத்துவதற்குப் பொறுத்த இடம் என்று தோன்றியதால், இவ்வளவும் நான் பிறந்த நாட்டில் எனது வாழ்நாளிற்குள் நான் பார்க்க நடந்தன என்ற துரும்புச்சீட்டின் வாயிலாக எங்கோ எப்போ யாரோ எழுதிய கிரேக்க மித்தோலொஜிக்கு மேலான கிளர்ச்சியினை அவனுள் அவன் மக்கள் சார்ந்து கிளப்பியபின் தொடரும் போட்டு நிறுத்தியிருந்தேன். 
 
பில்டம் மிகப் பலம் என்றபடியால் தொடர்ச்சி பிச்சுதறோணும். அதுவும் அவன் லேசுப்பட்ட சிறுவனில்லை. அடுத்த சந்திப்பிற்கான திட்டமிடலில் தற்போது இருக்கிறேன். 
 
ஆனால் இப்போது இதை இங்கு ஏன் இணைக்கிறேன் என்றால், இத்தகைய ஒரு சிறுவனைக் கைகாட்டி விடுவதற்கு எமது போராட்டம் சார்ந்து எங்களிடம் ஏதாவது நூல்கள் இருக்கின்றனவா? ஓயாது ஒப்பாரி வைப்பதுவும், வெள்ளைக்காரனிடம் நியாயம் கோருவதற்காகக் கடிதம் எழுதிக் குவிப்பதுவுமன்றி, எமது சந்ததிக்கு எங்கள் கதைகளை நாங்கள் உள்வாங்கிய அதே பரபரப்புடன் காவிச்செல்வதற்கு எங்களிடம் ஏதேனும் நூல்கள் உள்ளனவா? 
 
எமது படைப்புக்கள் எல்லாமே எமது கதை தெரிந்தவர்களிற்காகத் தான் வந்துகொண்டிருக்கின்றனவே அன்றி, எமது கதைபற்றி எதுவுமே தெரியாதவர்களிற்குக் கதைசொல்லும் அவா எங்களிடம் அறவே இல்லை. பொதுவாக ஞாபகவீதி ஓட்டம் மட்டும் தான் எங்களிற்குப் பிடிப்பது. அதனால் கூடியிருந்து எங்களது பொது ஞாபகங்கள் பற்றிப் பேசி இறுமாந்திருப்போம். நாங்கள் இறுமாந்த தருணங்களைக் கடக்காத எங்கள் நீட்சிகள் இன்று புலத்தில் ஏராளம். மேற்கின் பாரம்பரியமும் சிந்தனை முறையும் இவர்களிற்குத் தானாக வரும். ஆனால் எங்கள் சந்ததிகளிற்கு நாங்கள் கதைசொல்லத் தவறின் அவற்றின் கற்பனை அடையக்கூடிய எல்லைகளை அடையாது போய்விடும்.
 
கனேடிய எழுத்தாளர்கள் பலரை எனக்குப் பிடிப்பதில்லை. காரணம் அவர்கள் கொல்லையினை விட்டுக் கிழம்பாத கற்பனையினைப் பெரிதும் முன்வைப்பார்கள். கனடா வேறு மிக அமைதியான வசதியான நாடென்பதால், இவர்களின் கொல்லைக்குள் மட்டும் நின்றவர்களின் கற்பனை, ஒரு போரைக்கடந்து அகதியாக வந்தவனைக் கட்டிப்போட லாயக்கற்றன. அதற்காக எல்லோரும் அப்படியில்லை. மாகிறற் அற்வூட்டின் இரு நாவல்கள் பிடித்தன. அலஸ் மன்றோ—தற்போது இலக்கிய நோபல் பரிசு பெற்றவர்--துரதிஸ்ரவசமாகச் சிறுகதைகளகைத் தான் எழுதிக்குவிப்பவர் என்றபோதும், அலசை எனக்கு நோபல் பரிசிற்குப் பலகாலம் முன்தொட்டே பிடிக்கும். ஏனெனில் அனுவம் அவரிற்கு அதிகம். பிச்சைக் காரன், குடிகாரன், அடக்கப்பட்ட பெண், புராதனகுடி இப்படி பிரச்சினைகளில் அல்லோலப்படும் விடயங்களை இறங்கிச் சென்று உணர்ந்து எழுதுவதால் அருமையாக இருக்கும். அதுபோல ஜோசப் பைடனைப் பிடிக்கும். இப்பிடிக் கனேடிய எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணவேண்டி உள்ளது. ஆனால் கனடாவிற்குக் குடியேறி வந்த கனேடிய எழுத்தாளர்கள் பிச்சு உதறுகிறார்கள். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாவலும் ஏதோ தத்துவ,பொருளாதார சமூகவியல் பாடம் படித்தது போல் அனுபவம் செறிந்து கிடக்கும். றஸ்சியா பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்த வித்தியாசங்களிற்கான காரணம் அறிவு அல்ல, அனுபவம்.
 
கற்பனை என்பது கதை எழுதுவதற்கானது மட்டுமல்ல. விஞ்ஞானத்தின் எந்தச் உச்சத்திலும் பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மனப்பண்பாட்டைக் கதை, இசை இப்படியான கலைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். காலாதிகாலமாக மனிதன் அறிந்து அனுபவித்த இந்த உண்மை தற்போதைய நுகர்வு இயக்கத்தில் தொலைந்துகொண்டிருப்பது வேதனைக்குரியது. இப்போதெல்லாம், பல்கலைக்கழகத்தில் எலெக்ற்றிவ் பாடங்களைக் கூட மாணவர்கள் மடைத்தனமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சந்தை வலியது.
 
கதை கற்பனைக்கு மட்டுமானது அல்ல. கதையில் அரசியல் நிறைய இருக்கிறது. பெரியது சிறியது என்ற விடயங்களை மனதில் நாட்டுவதிலும் கதைகளின் பங்கு கனதியானது. எனவே தான் புத்திசாலித் தமிழ்ச்சிறுவனிற்குத் தமிழன் சழைத்தவனில்லை என்று தெரிவது எனக்கு அவசியமாகப் பட்டது.
 
எனது வீடு துப்புரவு செய்ய வரும் பெண்ணிடம் ஒரு தடவை எனது புத்தக அலுமாரியினை முற்றாகத் தூசுதட்டி மீள அடுக்கக்கோரியிருந்தேன். நான் வந்து பார்த்தபோது, அலுமாரி மினுங்கிக் கொண்டிருந்தது. ஆனால் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த விதத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. ஏறத்தாள புராணக்கதையில் அப்பர் கல்லையும் பொன்னையும் ஒன்றாக ஒதுக்கியதைப் போல, அனைத்துப் புத்தகங்களும் சமத்துவமாக ஒற்றைகளாக மட்டும் பார்க்கப்பட்டிருந்தமை தெரிந்தது. அதில் இருந்த பேருண்மை உறைத்தது. பொதுவாகப் புத்தகங்களின் பக்கங்களையும் பெயர்களையும் பாடமாக்கி ஒப்பிப்பவர்கள் மீது எனக்குப் பலத்த கடுப்பு. இந்தச் சம்பவம் அந்தக்கடுப்பை நியாயப்படுத்தியது.
 
துரதிஸ்ரவசமாக எங்கள் போராட்ட காலத்துக் கதைகள் எல்லாம் இன்று சத்தங்களாக மட்டும் தான் இருக்கின்றன. எங்களிற்குத் தான் அந்தச் சத்தங்கள் அர்த்தமுடையவை. எங்கள் ஞாபகங்களை எங்களோடு பயணித்திராதவர்கள் முன் போட்டால், அவை சத்தங்களாக மட்டும் தான் அவர்களிற்குக் கேட்கும். ஏனெனில் புத்தகங்களின் பக்கங்களையும் பெயர்களையும் பாடமாக்குபவர்களைப் போல, நாங்களும் சண்டைகளின் பெயர்கள் ஊர்களின் பெயர்கள் ஆழமைகளின் பெயர்கள் தெரிந்தவர்களோடு மட்டுமே உரையாடக்கூடியவர்களாக இருக்கிறோம். மனிதன் என்ற பொதுமைக்கு எங்கள் உணர்வுகள் எங்களிற்குள் இருப்பதைப் போன்றதாகக் காட்டப்படுவதற்கு எங்களிற்குள் எந்த முயற்சியும் இல்லை.
 
நாங்கள் ஒவ்வொருவருவரும், எங்கள் போராட்ட வரலாறு தெரியாத எங்கள் சந்தததிக்கென ஒவ்வொரு கதை எழுதிவைப்பின்--அதாவது, எதுவுமே தெரியாதவர்களிற்கு நாம் சொல்லும் கதை என்ற ரீதியில், எங்கள் சார்ந்த உணர்வைக் கதை நகர்வால் மட்டும், பாத்திரப்படைப்பால் மட்டும் அடையக்கூடியவகையிலான கதைகள் எழுதி வைப்பின், தமிழர் அல்லாதவரையும் நெகிழச் செய்யும் கதைககளாக அவை விரியுமேயாயானால்--அதுவே மிகச்சிறந்த ஆரம்பமாகும். அப்படியான கதைககளைச் சேர்ப்பதற்காக இந்தத்தலைப்பைத் தொடங்குகிறேன், பதிவீர்கள் என்ற நம்பிக்கையோடு.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஏன் பதில் எழுதாமல் பச்சை மட்டும் குத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால், மிகப் பெரிய சவால் ஒன்றை எமக்குக் கொடுத்து முடித்திருக்கிறீர்கள், அது தான் காரணம் என்று புரிகிறது. நல்ல சிந்தனை. தமிழர்களின் இராணுவ அரசியல் வரலாற்றைச் சுவையாக (நீங்கள் கூறும் கிரேக்க புராணக் கதைகள் போல) எழுதக் கூடிய ஆட்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள். அவர்களிலும் பலர் அமரர்களாகி விட்ட கப்ரன் மலரவன் போன்றோர் தான். இந்த வரலாற்றையும் ஆளுமைகளையும் கிட்ட நின்று பார்த்த சிலர் தங்கள் தனிப் பட்ட குரோதங்களாலும் இதர சித்தாந்தங்களாலும் பாதிக்கப் பட்டு மஜிக்கல் ரியலிசம் என்ற செயற்கை இனிப்பையும் கலந்து முன்னாள் போராளிகள் என்ற பட்டத்தை sales pitch ஆக வரித்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்து என்னவெனில், தமிழில் எழுதும் இவர்களின் கற்பனை கலந்த வரலாறு மொழி பெயர்க்கப் பட்டு எங்கள் சந்ததியைச் சென்றடைந்தால் நம் பெருமைகள் வாழாது. சோசலிசம் ஒழிந்து முதலாளித்துவம் பரவிய ரஷ்யாவில் கடந்த கால வரலாற்றைப் பற்றி அந்த நாட்டு இளம் சந்ததியினரிடையே நிலவும் குழப்பமும் அதன் தாக்கங்களும் அந்த நாட்டையே ஆரோக்கியமில்லாத ஒரு தேசமாக ஆக்கி விட்டன. இப்படி தமிழர்களுக்கு நிகழக் கூடாதெனில் நீங்கள் சொல்வது போல முன்னாள் போராளிகள் அல்லாத சாமான்யர்கள் கதைகள் எழுதுவது தான் சரி. 

பொட்டுல (நெற்றிப் பொட்டு) அடித்த மாதிரியான அருமையான ஒரு பதிவு.

 

போராட்ட கால அனுபவம் உள்ளவர்கள் விரக்தியிலோ அல்லது நேரம் இல்லாததாலோ ஒதுங்கிப் போய் விட்டார்கள். பலருக்கு சரளமாக எழுத வருவதில்லை. எழுதினாலும் அவர் தொடர்பான கதைகளை மாத்திரம்தான் எழுதலாம்.

 

பிரதேசங்களிலேயே வேறு விதமாகத்தான் போராட்ட நிகழ்வுகள் நடந்தன. எண்பதுகளின் 'கெரில்லா' போராளி கதை எழுதினால், அவர் தொடர்பான சம்பவங்களை மாத்திரம்தான் எழுதலாம். இயக்கம் இரகசியமாக செயல்பட்டதால் பல சம்பவங்கள் கோருவையாக வராது.  தமிழர் பிரதேசமான யாழ் குடா நாட்டில் நடந்தவை பகிரங்கமாக தெரியும். கொஞ்சம்  கீழே  இறங்கி வன்னிக்கு வந்தால் ஓரளவுதான் தெரிய வரும். மட்டக்களப்பில் வாழ்ந்த போராளியின் அனுபவம் வேறு விதமாக இருக்கும். மக்களுடன் தொடர்பில்லாமல் இருந்த அம்பாறைப்  போராளியின் வாழ்வு மிக இரகசியமாக இருக்கும். இவர்கள் எழுதினால்  நிறையக் கேள்விகள் வரும். விமர்சனங்களை எதிர்கொள்ள மின்ஞி உள்ள சிலரும் தயாரில்லை என நினைக்கிறேன்.  

 

Edited by தப்பிலி

எமது சந்ததிக்கு எங்கள் கதைகளை நாங்கள் உள்வாங்கிய அதே பரபரப்புடன் காவிச்செல்வதற்கு எங்களிடம் ஏதேனும் நூல்கள் உள்ளனவா? //////

 

துரதிஸ்ரவசமாக எங்கள் போராட்ட காலத்துக் கதைகள் எல்லாம் இன்று சத்தங்களாக மட்டும் தான் இருக்கின்றன. எங்களிற்குத் தான் அந்தச் சத்தங்கள் அர்த்தமுடையவை. எங்கள் ஞாபகங்களை எங்களோடு பயணித்திராதவர்கள் முன் போட்டால், அவை சத்தங்களாக மட்டும் தான் அவர்களிற்குக் கேட்கும். ///

 

இந்த இரண்டு கருத்துக்கள் முரணாக இருக்கின்றன . எல்லோருமே நேரடிப் பங்காளிகளாக இருந்துதான் கதை கேட்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை . மேலும் வரலாற்றை அந்த வரலாற்றுடன் சம்பந்தப்பட்டஒருவர் எழுதும் பொழுது அதனால் கிடைக்கின்ற இலவசப் பட்டங்களும் எழுதுபவர்களின் மனதில் ஒருவிதமான சலிப்பை ஏற்படுத்தியிருப்பதும் கவனத்தில் எடுக்கவேண்டிய விடையமாகும் :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்!  நீங்கள்   "மேஜர் கிண்ணி" (கஸ்ரோ) எடுத்தால் கீழே வைக்காமல் படித்து விட வேண்டுமளவு எழுத்து நடையும், வீர சாகசமும் அபாரமாய் இருக்கும்.

 

மற்றது  "போர் உலா "  கப்டன் மலரவன் எழுதிய பயணக் குறிப்பு , அதுவும் நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்
அனைவரிற்கும் நன்றி. கதைகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.
 
கோமகன், 
நீங்கள் மேற்கோள் காட்டியவற்றில் உள்ள முரண் எனக்குப் புரியவில்லை. புத்தக அலுமாரி சம்பவத்தை உதாரணமாகக் காட்டியிருந்தேன். எனது புத்தக அலுமாரியில் எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்திய புத்தகம் தான் இருக்கும். ஆனால் அதே புத்தகதம் ஒற்றைகளின் தொகுப்பாக வேறொருவரால் பார்க்கப்பட்டிருந்தது. அதுபோல் எங்கள் கதைகள் எங்களிற்கு அதிர்வு தருவன தான். ஆனால் அந்த அதிர்வு ற்றான்சென்டிவ்வாக இருப்பதற்குச் சற்று முயற்சி; தேவைப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம். 
 
சாகசக் கதைகளின் வாசிப்பு குழந்தைப் பருவத்தினது. சாகசங்கள் நிறைந்த எங்கள் வரலாற்றில் இருந்து மேற்கின் சிறுவரிற்கும் சாகச உணர்வு கிடைக்கும் வகை எங்களால் எழுதமுடியாதிருப்பதற்கான காரணம் நாங்கள் மிகவும் இறுக்கமானவர்களாக ஆகிப்போனோம். பிரச்சாரப் பாணியில் சிந்திக்கவேண்டிய கட்டாயம் இருந்ததாலும், இன்னல்கள் தொடர்வதாலும் விடயங்களை எழிதாக எடுத்துக்கொள்வது எங்களிற்கு மிகவும் சிரமானதாக உள்ளது. உணர்ச்சிவசப்பட்ட மனநிலை ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த மனநிலையில் சாகசக்கதை எழுதமுடியாது.
 
ஜஸ்ரின் மற்றும் சுவி குறிப்பிட்டதைப் போல, மலரவனின் போருலா மிக அற்புதமான நூல் தான். தொண்ணூறுகளின் இறுதியில் அதை வாசித்திருந்தேன் மீண்டும் வாசிக்க விரும்பம் (ஆனால் யாரோ என் புத்தகத்தை இரவல் வாங்கியவர்கள் திருப்பித்தரவில்லை...பெருமூச்சு). ஆனால் அது ஒரு காத்திரமான சமூக நூல். இருபது வயதுகளின் ஆரம்பத்தினர்க்கான நூல் அது. இந்தக் கட்டத்தைச் சாகசக் கதைகளுடாகத் தான் அடைய முடியும். எனது அபிப்பிராயத்தில், வினைத்திறன் மிக்க சாகசக் கதை எழுதுவது சமூக விமர்சனத்தைக் காட்டிலும் கடினமானது. இறுகிய மனிதர்களிற்கு அது சாத்தியப்படாது.
 
இருபதுகளில் சமூகம் மற்றும் லட்சியம் சார்ந்து வினைத்திறனுடன் பேசக்கூடியவர்கள் நம்மவர்களிற்குள் உருவாகவேண்டுமாயின், அதற்கு முன்னதாகவே, அவர்களது குழந்தைப் பருவத்தில் சாத்தியங்கள் அவர்களது கற்பனையில் விதைக்கப்பட்டிருக்க வேண்டும். கற்பனை என்ற விடயம் சார்ந்து எமது சமூகம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. கற்பனை பற்றிக் குழந்தை நேரம் செலவழிப்பதை விடுத்து குமோனிற்கு செல்லவேண்டும் என்பதே நம்மவர் பெறுமதியாக இருக்கிறது. எனது தாழ்மையான அபிப்பிராயத்தில், நடுத்தரவர்க்கத்தினராக அலுவலக உத்தியோகம் பார்ப்பவர்களிற்கும் சாதனையாளர்களிற்குமிடையேயான வித்தியாசம் கற்பனையில் தான் இருக்கிறது. ஒரு குழந்தையினைக் கூட்டிக்கொண்டு டிஸ்னிவேர்ல்ட் சென்று குழந்தையோடு குழந்தையாகப் பார்க்கும் எவரிற்கும் இலகுவில் இதை அடையாளப்படுத்த முடியும்.
 
எங்கள் இனம் என்று ஒன்று வெற்றிபெற்ற இனமாக மாறவும் தொடரவும் வேண்டுமென்றால், முதலில் எங்களவர்கள் எங்களவர்களாக இருக்கவேண்டும். The Boy in the Striped Pajamas கதையினையும் படத்தினையும் எங்கள் குழந்தைகள் புரிந்து விரும்பிப் படிக்கிறார்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு மேலால் யூத இனத்தின் நிலைசார்ந்து ஒரு அனுதாபத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் துரதிஸ்ரவசமாக, மேற்படி நாவல் மற்றும் படம் பற்றி அறிந்த எத்தனையோ தமிழ்க்குழந்தைகளிற்கு ஈழத்ததமிழரின் கதை தெரியாது. காரணம், தமிழ் வகுப்பில் பாடமாக்கிய ஆசிரியர் எழுதிக்கொடுத்த பேச்சோ, வினோதஉடைபோட்டிகளோ அந்தத் தெளிவைக் கொடுக்காது. 
 
எங்கள் வரலாற்றை முழதாக ஒரு புராணக் கதைபோல எழுதிவிடும் ஆழுமை எங்களிற்குள் இல்லாது இருக்கலாம். ஆனால், எங்களைப் பற்றிய The Boy in the Striped Pajamas போன்ற ஒரு கதையினை எங்களால் எழுதமுடியாதா என்ன?
 
அதுபோன்று ராமாயணத்தில் மலையினைத் தூக்கிப் பறந்த குரங்கு, கதைக்கும் கழுகு என்று விடயங்கள் இருந்தும், அவற்றை ராமன் என்ற ஒரு பாத்திரத்தினோடு தொடர்பு படுத்தி, அந்தப் பாத்திரத்தைப் பெருமைப் படுத்தி, இன்று வட இந்தியாவில் இராமன் கற்பனை என்றால் சண்டைக்கு வரும் மனிதர்களை அவர்கள் உருவாக்கியுள்ளார்களே. ஏங்களிற்குக் கண்மூடித்தனமான சந்தததி வேண்டாம் என்றாலும், நிஜ ஆழுமைகளோடு கற்பனைக் கதாபாத்திரங்களைக் கலந்து நிச்சயமாக எங்களால் சாககச் கதைகள் எழுதமுடியும் என்பது எனது நம்பிக்கை. முழு வரலாறும் ஒரு கதைக்குள் வராது போயினும், துண்டுக்கதைகளை ஒவ்வொருவரும் எழுத வேண்டும். தப்பிலி குறிப்பிட்டுள்ள சில பிரச்சினைகள் இத்தகைய சாகசத் கதைக்குச் சிறந்த தளமாக அமையும் என்று தோன்றுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவதில் பல உண்மைகள் இருக்கின்றன. The Boy in the Striped Pajamas வை நான் இரண்டு தடவை பார்த்தபின்னும் அதுவும் இந்த வயதில் இன்னும் பார்க்கவேண்டும் என்னும் ஒரு அவாவவுடன் அதன் தாக்கம் அப்பப்ப நினைவுகளில் வந்து மனதை எதுவோ செய்வதைத் தடுக்க முடியவில்லை. அதிலும் பார்க்கவே அருமையாகக் கதை சொல்லுபவர் எம்மினத்தில் இல்லாமலும் இல்லை. ஆனாலும் நான் நினைக்கிறேன் யாரும் எம் இளஞ்சமூகத்தை எண்ணிப் பார்க்கவுமில்லை. ஒரு சமூகத்தில் இளம்வயதில் பதியப்படுவது மாற்ற முடியாதாதாக மனப்பதிவை ஏற்படுத்தும் என்ற அறிவும் தூர நோக்கும் எம் சமூகத்திடம் இல்லை என்பதும் ஒரு காரணம் தான். ஏன் இன்னுமொருவன் இத்தனை நுட்பமாக ஒரு விடயத்தை ஆராய்ந்து எழுதும் நீங்களே ஏன் இப்படியான கதைகளை எழுத முன்வரக்கூடாது??????

  • தொடங்கியவர்

கட்டுரை எழுதுவது இறுக்கமான மனிதர்கறிக்குச் சாத்தியமானது. அது அடியேனிற்கும் சரிவரும். ஆனால் கதைக்கு அது சரிப்படாது. சும்மாவே கதை எழுதத் தெரியாதவனைச் சாகசக் கதை எழுதச் சொன்னால் எங்கே போது. சும்மா ஒரு மூட் செற்றப்பிற்கு ஒன்றை எழுதியுள்ளேன். யாழ் களத்தின் கதைசொல்லி ஜாம்பாவான்கள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.