துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, மார்கழி 2010.........
"துணை ராணுவக்குழுக்களான கருணா குழு மற்றும் ஈ பி டி பி ஆகியவை புலிகளுக்கெதிரான யுத்தத்தில் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன. புலிகளுக்கு ஆதரவானவர்களைக் கடத்துதல், அரச ராணுவத்திற்குச் சார்பாக சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபடுதல், அரச ராணுவத்தினர் மீதான மனிதவுரிமை மீறல்களை அரசாங்கம் தம்மீது சுமத்துவதை ஏதுவாக்குதல் ஆகிய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் இவர்களைப் பாவித்து வருகிறது".
"இந்த இரு துணை ராணுவக் குழுக்களுக்கும் தமக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்று மறுத்துவரும் அரசும் ராணுவமும் தமது மனிதவுரிமை மீறல்களை தாம் மெருகூட்டியிருப்பதாகவும், கைதுசெய்தல் மற்றும் தடுத்துவைத்தல் தொடர்பான செயன்முறைகளை மேம்படுத்தும் பயிற்சிகளையும் தாம் ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறது. மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்கென்று தனிமனித விசாரணைக் கமிஷன் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறது".
"ஆனால், சர்வதேசத்தில் இலங்கை அரசின் மேம்படுத்தல் நடவடிக்கைகள் திருப்தியளித்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தமிழ்ப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது, சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பது, சிறுவர்களைக் கடத்துவது ஆகிய மனிதவுரிமை மீறல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன".
"மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கருணா மற்றும் டக்கிளஸின் துணை ராணுவக்குழுக்களுக்கான பண உதவியினை நிறுத்தியிருக்கிறது. அவர்கள் தமக்குத் தேவையான பணத்தினை கடத்தல்கள் மூலமும், கப்பம் கோருதல் மூலமும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அனுமதியளித்திருக்கிறது. துணை ராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு வெளிப்படையாக இருந்தபோதிலும் கூட, அரசாங்கம் இந்த நிலைமையினை சீர்செய்யும் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட விரும்பவில்லையென்பது தெரிகிறது".
"எமது தூதரகத்தில் பணியாற்றுகின்ற பல ஊழியர்கள் அரசாங்கத்தின் இந்த புதிய நண்பர்களுடனான நெருங்கிய நட்புத் தொடர்பாக அதிர்ச்சியும், தமது பாதுகாப்பு பற்றிய அச்சமும் கொண்டிருக்கின்றனர்".
அமெரிக்க பிரஜையான கோத்தாபய பற்றி இச்செய்தி கூறும்போது, " கோத்தாபய கருணாவுக்கும் டக்ளசுக்கு தமிழ் வர்த்தகர்களிடமிருந்து தேவையானளவு பணத்தினைக் கப்பமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கியிருக்கிறார். வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் தற்போது அதிகரித்துவரும் தமிழ் வர்த்தகர்களின் கடத்தல்கள், கப்பம் கோருதல்கள் மற்றும் படுகொலைகளின் பின்னால் கருணாவும் டக்கிளஸும், அவர்களின் பின்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் ஆசீரும் இருப்பது தெளிவாகிறது. கருணாவும் டக்கிளஸும் தமிழர்களாக இருந்தும்கூட அவர்களால் பணத்திற்காகக் கடத்தப்படுகின்ற, கொல்லப்படுகின்ற வர்த்தகர்கள் அனைவருமே தமிழர்கள் தான்" என்றும் கூறப்பட்டிருக்கிறது.