துரோகத்தின் நாட்காட்டி: நாள் 13, ஆடி 2011
மட்டக்களப்பில் வர்த்தகர்களிடமிருந்து பணம் பறிக்கும் துணைராணுவக் குழுவும் இலங்கை ராணுவமும்
கிழக்கு மாகாண முதலமைச்சரும், அரச ராணுவத்தால் இயக்கப்படும் கொலைக்குழுவின் தலைவனுமாகிய பிள்ளையானின் சகாக்களும், ராணுவமும் மட்டக்களப்பு நகரின் தெற்குப்பகுதியான படுவான்கரையிலிருந்து நகருக்கு வரும் வர்த்தகர்களிடம் கப்பமாகப் பணம் பறிப்பில் ஈடுபட்டுவருவதாக வர்த்தகர்கள் முறையிட்டுள்ளனர். அத்துடன் படுவான்கரையிலிருந்து மட்டக்களப்பு நகரிற்கு வர்த்தகர்களால் கொண்டுவரப்படும் பல உற்பத்திப்பொருட்களை துணைராணுவக்குழுவும் இலங்கை ராணுவமும் பறித்துச் செல்வதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
படுவான்கரையினைச் சேர்ந்த வர்த்தகர்கள் தினமும் பழங்கள், கருவாடு மற்றும் மீன், மரக்கறிகள், விறகு போன்ற பொருட்களை மட்டக்களப்பு நகருக்குக் கொண்டுவருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் பொருட்கள் வழியெங்கும் இருக்கும் சோதனைச் சாவடிகளான, பட்டிருப்புப் பாலம், மண்முனைத்துறை, அம்பிலாந்துறை , செங்கலடிக் கறுத்தப் பாலம், கிரான் பாலம், சந்திவெளி களப்பு ஊடாக காவத்த முனை ஆகிய இடங்களில் விசேட அதிரடிப் படையினராலும் பிள்ளையான் துணை ராணுவக் குழுவினராலும் வழிமறிக்கப்பட்டு பெருமளவு உற்பத்திப் பொருட்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, மட்டக்களப்பின் கரையோரங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் சமூகங்களிடமிருந்து அப்பகுதியெங்கும் நிலகொண்டிருக்கும் ராணுவம் மீன்களைப் பறித்துச் செல்வதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தக்காரர்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் தாம் அகழ்ந்துவரும் மண்ணை பாரவூர்திகளில் நகரூடாக எடுத்துச் செல்லும் போது வீதியில் நிற்கும் பொலீஸார் வாகனத்தை மறித்தும் கப்பம் கேட்பதாகவும், மறுக்கும் பட்சத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டதற்காகத் தண்டப் பணம் செலுத்தும்படி நிர்ப்பந்திப்பதாகவும் கூறுகின்றனர்.
இதேபோல் சீமேந்துக் கற்களை உற்பத்தி செய்து டிராக்டர்களில் எடுத்துச் செல்பவர்கள் மற்றும் சாதாரண வாகனங்களில் பயணிப்பவர்கள் என்று பலரும் பொலீசாரினாலும், துணைராணுவக் குழுவினராலும் மறிக்கப்பட்டு கப்பம் அறவிடப்படுவதாகவும், மறுப்போர் மீது நீதிமன்ற வழக்குகள் பதியப்படும் என்று மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் அரச அனுமதியுடன், வருடந்தோறும் சரியான வரிகட்டி தாம் நடத்தும் வியாபாரத்திற்கு "பாதுகாப்புப் பணம்" என்கிற போர்வையில் பெருமளவு பண கிழக்குமாகாண முதலமைச்சரும் கொலைக்குழுத் தலைவனுமாகிய பிள்ளையானுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் , தமது வியாபாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக பிள்ளையான் கோரும் "பாதுகாப்புப் பணம்" கொடுக்கப்பட்டுவருவதாகவும் கூறும் இவர்கள், பிள்ளையான் தம்மை மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனது அலுவலகத்தில் இதுபற்றிக் கலந்துரையாட அழைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தனியார் வியாபார நிலையங்களும் பிள்ளையானுக்கு பாதுகாப்புப் பணமாக பெருமளவு பணத்தினை செலுத்தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமது உயிருக்கும் சொத்துக்களுக்கும் பிள்ளையானின் சகாக்களாலும், ராணுவத்தாலும் ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சத்தில் பெரும்பாலானோர் அவர்கள் கோரும் பணத்தினைச் செலுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.