பிரபாகரனின் மரணம் தொடர்பாக இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு
சந்திரப்பிரேமவினால் எழுதப்பட்ட "கோட்டாவின் போர்" எனும் இறுதியுத்தகால சம்பவங்களின் தொகுப்பினை இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான முக்கிய காரணம் இப்புத்தகம் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபயவினதும், அவரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இலங்கை ராணுவத்தினதும் முழுமையான ஆசீர்வாதம் இப்புத்தகத்தினை எழுதவும், வெளியிடவும் கிடைத்தது என்பது. பிரபாகரனின் மரணம் தொடர்பாக இப்புத்தகம் வெளியிட்ட நிகழ்வினை , இப்புத்தகம் தொடர்பான எனது முந்தைய விமர்சனத்தில் சேர்த்துக்கொள்ள முயலவில்லை. ஆகவே அப்புத்தகத்தின் 488 ஆம் 489 ஆம் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் பிரபாகரனின் மரணம் தொடர்பான செய்தியிலிருந்து இதனை ஆரம்பிக்கிறேன்.
"மே 18 அன்று பிற்பகல் 59 ஆவது டிவிஷன் படையினர் புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் பாணு ஆகியோரின் தலைமையில் முன்னேறிவந்த புலிகளின் அணியொன்றினை எதிர்கொண்டு , அவர்கள் அனைவரையும் கொன்றனர். மறுநாள் அதிகாலை, நந்திக்கடல்ப் பகுதியில் அமைந்திருந்த 800 மீட்டர்கள் நீளமும், 20 மீட்டர்கள் அகலமும் கொண்ட சதுப்பு நிலப் பற்றைக்காடுகளுக்குள் தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கென்று 4 ஆவது விஜயபாகு ரெஜிமென்ட்டினதும், 8 ஆவது சிறப்புப் படைகள் அணியினதும் வீரர்கள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டது. ராணுவ அணி உள்நுழைந்தவுடன் தமது அணிகளைவிட்டு சிதறி தனித்தனியாக இயங்கிவந்த புலிகளுக்கும் ராணுவ அணிக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் ஆரம்பமானது. கேணல் ரவிப்பிரியவின் கருத்துப்படி சுமார் 30 புலிகள் வரை அப்பற்றைக் காட்டுகளுக்குள் ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதன்பின்னர் மேலும் இரு கொமாண்டோ அணிகளை பற்றைக்காட்டினுள் இறக்கிய ரவிபிரிய மூன்று புலிகளை உயிருடன் கைதுசெய்தார். அவர்களின் கூற்றுப்படி பிரபாகரனும் இன்னும் 30 புலிகளும் அப்பற்றைக்காடுகளுக்குள் ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பற்றைக்காட்டினை நோக்கிக் கடுமையான தாக்குதலை அங்கிருந்த படையினர் நடத்தினர். எதிர்த்தாக்குதல்கள் முற்றாக நிற்கும்வரை படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதன்பின்னர் இப்பற்றைக்காடுகளுக்குள் தேடுதலினை ஆரம்பித்த படையினரின் தளபதி பிரபாகரனின் உடலைக் கண்டுபிடித்தார்" .
"பிரபாகரனின் உடல் இன்னமும் சற்று வெப்பமாகவே இருந்தது அவர் அப்போதுதான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அன்று காலை பிரபாகரன் சவரம் செய்யாததனால், அவரின் முகத்தில் வெண்ணிறமான முடிகள் மெதுவாக முளைக்க ஆரம்பித்திருந்தது தெரிந்தது. 4 ஆவது விஜயபாகு அணியின் வீரர்கள் பிரபாகரனின் உடலைத் தோள்களில் சுமந்துவந்து தமது உயர் அதிகாரிகளின் முன்னால் அடையாளப்படுத்தலுக்காக வைத்தனர். உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாதிகளின் தலைவனின் உடலை பிரிகேடியர்கள் ஜகத் டயஸ், சவேந்திர சில்வா, சகி கல்லகே மற்றும் கமால் குணரட்ன ஆகியோர் பார்வையிட்டனர். பிரபாகரனின் உடலை பார்வையிட நூற்றுக்கணக்கான படையினர் ஆர்வம் மிகுதியால் , ஒருவர் மீது ஒருவர் ஏறி முண்டியடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அன்று பிற்பகல் புலிகளின் முன்னாள்ப்பேச்சாளர் தயா மாஸ்ட்டர் மற்றும் கருணா அம்மான் ஆகியோர் கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் அங்குவந்து இறந்தது பிரபாகரன் தான் என்பதை உறுதிப்படுத்தினர்".
சரி, சந்திரப்பிரேமவினால் இங்கே தரப்பட்ட இத்தகவல்களை நாம் ஆராயலாம். முதலாவது பந்தியின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள விடயங்களின்படி,
1. பிரபாகரனின் நெற்றியில் பட்ட துப்பாக்கிக் குண்டினாலேயே அவர் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிப்பதற்கான கண்ணால் கண்ட சாட்சியங்கள் இராணுவத்திடம் இல்லை.
2. பெயர் குறிப்பிட விரும்பாத குறிபார்த்துச் சுடும் வீரர் கூட தான் பிரபாகரனைக் குறிவைத்தே தாக்கியதாகக் கூறமுடியவில்லை.
3. ஆக, முதலாவது பந்தியின் சாராம்சம் என்னவெனில் பிரபாகரனின் உயிரற்ற உடல் ராணுவ அணித்தளபதியினால் கண்டெடுக்கப்பட்டது என்பதுதான்.
4. கொழும்பின் சில சிங்கள ஆங்கில ஊடகங்கள் பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தபோதும்கூட, சந்திரப்பிரேம இதுபற்றி தனது புத்தகத்தில் மூச்சுக் கூட விடவில்லை. ஆக, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியவர்கள் கருணாவும் தயா மாஸ்ட்டரும் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவரும் புலிகளால் வெளியேற்ரப்பட்டவர்கள் என்பதும், தமது பிழைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ராணுவம் தமக்குச் சொல்லிக்கொடுத்த "இது பிரபாகரன் தான்" எனும் கிளிப்பிள்ளைப் பாடத்தினை தவறாமல் ஒப்பிவிப்பார்கள் என்கிற சிந்தனையில்லாமலேயே இவர்களை மேற்கோள் காட்டி சந்திரப்பிரேம இதுதொடர்பாக உறுதிப்படுத்தியதுதான்.