திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள்.
fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர்.
ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது.
ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது.
திட்டமிட்ட யூத ஒதுக்கல்
முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன
(இது முழுமையான பட்டியல் அல்ல!):
1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன.
2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர்.
3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன.
4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர்.
5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன.
யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல்
முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர்.
இறுதித் தீர்வு - “Final Solution”
1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன.
1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர்.
இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை.
“மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை.
ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்!
சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை!
- வெற்றிக் கதை தொடரும்-
-ஜஸ்ரின்